سُورَةُ النَّاس
ஸூரதுன் நாஸ்
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!
பெயர் : ஸூரதுன் நாஸ்(மனிதர்கள்)
இறங்கிய காலப்பகுதி : மக்கீ
வசனங்கள்: 6
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ مَلِكِ النَّاسِۙ اِلٰهِ النَّاسِۙ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَـنَّاسِ الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
قُلْ கூறு/சொல், اَعُوْذُ நான் பாதுகாப்புத் தேடுகிறேன்/வேன், بِ கொண்டு/மூலம், رَبِّ இறைவன், النَّاسِ மக்கள், مَلِكِ அரசன், اِلٰهِ வணக்கத்திற்குரியவன், مِنْ விட்டும்/நின்றும்/இருந்து, شَرِّ தீங்கு/கெடுதி, الْوَسْوَاسِ சந்தேகத்தை உண்டாக்குபவன்/ ஊசலாட செய்பவன், الْخَـنَّاسِ மறைந்திருப்பவன், الَّذِىْ எத்தகையவன்/ஒருவன்/ இதனை தெளிப்படுத்த ஒரு வசனம் அவசியம், يُوَسْوِسُ வீண் எண்ணத்தை ஊசலாட செய்கிறான்/வான், فِىْ லே/ல், صُدُوْرِ உள்ளங்கள், الْجِنَّةِ ஜின்கள், وَ இன்னும்/மேலும்,
இது ஒரு பிரார்த்தனையை குறிக்கும் ஸூரா என்பதனால் முழு ஸூராவின் அர்த்தமும் ஒரே பார்வையில்:
(நபியே!) ‘மனிதர்களின் அரசனான, வணக்கத்திற்குரியவனான, இரட்சகனிடம் நான், மனிதர்களின் இதயங்களில் மறைந்திருந்து வீண் சந்தேகங்களைக் கிளப்பிவிடுகிற, மனிதர்களிலும், ஜின்களிலும் இருக்கின்ற (அல்வஸ்வாஸான ஷைதானின்) தீங்கைவிட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.’ என்று நீர் கூறி (பாதுகாப்புத் தேடு)வீராக!! (114:1-6)
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ
(நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். (114:1)
مَلِكِ النَّاسِۙ
மனிதர்களின் அரசனான. (இரட்சகன்) (114:2)
اِلٰهِ النَّاسِۙ
மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) நாயனான. (இரட்சகன்) (114:3)
இந்த ஸூராவின் ஆரம்ப வசனங்கள் மூன்றும் அல்லாஹ்வின் மூன்று பரிபூரணமான பண்புகளை ஒன்று சேர்த்திருக்கின்றன, ” {رَبِّ النَّاسِ} மனிதர்களை படைத்து பரிபாலிக்கும், {مَلِكِ النَّاسِ} ஆட்சி அதிகாரங்களுக்கு சொந்தக்காரனான அல்லாஹ் அவனே {إِلَهِ النَّاسِ} மனிதர்களின் வணக்கங்ககளுக்கு தகுதியான ஒரே வணக்கத்திற்குரியவன் (இலாஹ்) ஆக இருக்கின்றான் என்பதே அவை.” அதனையே ஸூரா இக்லாஸும் சுட்டிக்காட்டியது. (இப்னு கஸீர்-சுருக்கம், அல்வாஉல் பயான்)
இந்த கூற்றைக் கூறிய இப்னு கஸீர் இமாமவர்கள், இந்த அதிகாரமுள்ள அல்லாஹ்விடம் மனிதனை குழப்பும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறு கட்டளையிடுகிறான், ஏனெனில் ஷைதான் மனித உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான். என்று கூறி, அதற்கு ஆதாரமாக பின்வரும் நபிமொழியை பதிவுசெய்தார்கள்.
நபிகளாரின் கழுதையில் பின்னால் பயணித்த ஒருவர் கூறினார் என்று அபூதமீமா ரஹ் அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் பயணித்த கழுதை இடறியபோது, நான் ‘ஷைதான் நாசமாகட்டும்’ என்று கூறினேன். அப்போது நபியவர்கள்; ‘நீங்கள் ஷைதான் நாசமாகட்டும்’ என்று கூறவேண்டாம், ஏனெனில் நீங்கள் அப்படி கூறினால் அவன் பெருமைப்பட்டு, ‘எனது சக்தியைக் கொண்டு நானே அவரை வீழ்த்தினேன்’ என்று கூறுகிறான், நீங்கள் ‘பிஸ்மில்லாஹ்’ என்று கூறினால் கொசு போன்று ஆகிவிடும் அளவுக்கு சிறுமைப்படுகிறான். (அஹ்மத்: 20591,அபூதாவூத்:4982)
இப்னு கஸீர் இமாமவர்கள் கூறும்போது, ‘இந்த நபிமொழியில் நிச்சியமாக உள்ளம் அல்லாஹ்வை நினைவூட்டும் போது ஷைதான் சிறுமைப்பட்டு, தோல்வியடைகிறான், அல்லாஹ்வை நினைவூட்டவில்லையென்றால் பெருமையடைந்து, வெற்றிகொள்கிறான்.’ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)
ஹதீஸ் விமர்சனம்:
இதன் அறிவிப்பாளர் தொடர், ‘அபூதமீம்மா’ வழியாக, ஆஸிமுல் அஹ்வல் அறிவிப்பாக, ‘நபிகளாரின் வாகனத்தில் பின்னே பயணித்தவர் கூறினார்’ (அஹ்மத்: 20591) என்றும், அபூதமீமா வழியாக, காலிதுல் ஹத்தாஃ அறிவிப்பாக அபூமலீஹ் அறிவிப்பாக”நபிகளாரின் வாகனத்தில் பின்னே பயணித்தவர் கூறினார்’ (அபூதாவூத்:4952) என்றும், அபூதமீமா வழியாக, ஆஸிம் அல்லது ஷுஃபாவின் அறிவிப்பாக ஒருவர் ”நபிகளாரின் வாகனத்தில் பின்னே பயணித்தவர் கூறினார்’ (அஹ்மத்: 20592) என்றும் பலவாறாக அறிவிக்கப்பட்டுள்ளது. இமாம் ஹாகிம் அவர்கள் (முஸ்தத்ரக் ஹாகிமில் 7792 வது செய்தியாக) இதனை பதிந்து விட்டு, ‘பெயர் குறிப்பிடப்படாத அவரை சிலர் அபூமலீஹின் தந்தை ‘உஸாமா பின் மாலிக்’ என்று குறிப்பிட்டுள்ளனர் என்று கூறி ஆதரப்பூர்வமானது என்று கூற, தஹபீ இமாமவர்களும் அதனை சரிகண்டுள்ளார்கள். (ஹாகிம், ஹதீஸ் குறிப்பு) எனேவ இந்த ஹதீஸின் சில அறிவிப்பாளர் தொடரில் ஒரு மனிதர் என்று வந்திருப்பது ‘அபூமலீஹ்’ என்று வேறு அறிவிப்பாளர் தொடரில் வந்திருப்பதும், அறிவிப்பாளர்களில் யாரும் கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டவராக இல்லை என்ற அடிப்படையிலும் இதனை ஆதாரப்பூர்வமானது என்று கூறலாம். (அல்லாஹு அஃலாம்) இமாம் அல்பானீ, ஷுஐபுல் அர்ணாவூத் போன்ற அறிஞர்களும் ஸஹீஹ் என்றே கூறியுள்ளனர்.
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: ‘இதுவே சத்தியமும், பகுத்தறிவின் வெளிப்பாடுமாகும். ஏனெனில்; ‘அதிகாரத்தின் வெளிப்பாடு அடிமைத்தனத்தை கட்டாயமாக்கும், அடிமைத்தனம் என்பது வணக்கம் செலுத்துவதை (கட்டுப்படுவதை) யும் அதில் ஓர்மைப்படுத்துவதையும் கட்டாயப்படுத்தும். ஏனெனில்; ஒருவருக்கு சொந்தமான அடிமை அவனது பொறுப்பாளனுக்கு செவிசாய்த்து, கட்டுப்படுவதென்பது சொந்தமாக்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே கடமையாகிவிடும், அந்த பொறுப்பாளனும் அவனைப்போன்ற ஒரு அடிமையாக இருந்தாலும் சரியே. அப்படியிருக்க அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அடியான் தன் இரட்சகனுக்கு வணங்கத் தகுதியானவனுக்கு எப்படி இருக்கவேண்டும்?, தனித்துவமான, படைப்பினங்களின் தேவைக்காக நாடப்படுகின்ற, ஒரே இறைவனான அந்த அரசனுக்கு எப்படி கட்டுப்படவேண்டும்??'(அல்வாஉல் பயான்)
மேலும் இந்த மூன்று பண்புகளும் “{الرَبِّ} படைத்து பரிபாலிப்பவன், {المَلِكِ } ஆட்சி அதிகாரங்களுக்கு சொந்தக்காரன், {الإِلَهِ} வணக்கத்திற்கு தகுதியானவன் (இலாஹ்)” அல்குர்ஆனின் துவக்க ஸூரா பாதிஹாவின் துவக்கத்திலும் இடம்பெற்றுள்ளன, {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ } அகிலத்தாரை படைத்து பரிபாலிக்கும் ரப்பான, அன்பு, கருணை மிக்க, மறுமை நாளின் அதிபதியான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் சொந்தமானது. (1:1-3)
ஸூரா பகராவின் துவக்கத்திலும், மனித சமூகத்தை அழைத்து தன்னை மட்டும் வணங்குமாறு இடும் முதல் கட்டளையிலும் அவனுக்கு வணக்கம் செலுத்துவதை கட்டாயப்படுத்தும் காரணிகளை தெளிவுபடுத்துவதனுடன் சேர்த்தது இடம்பெற்றுள்ளன. ஏனெனில் அவனே அவர்களின் இரட்சகன் ரப்பாவான். (மனிதர்களே என்று அலைக்கும் முதல் இடத்தில்) அல்லாஹ்:
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ [2 \ 21]
‘மனித சமூகமே! உங்கள் ரப்பை வணங்குங்கள்’ (2:21)
என்று கூறிவிட்டு, அவனுக்கு மட்டும் வணக்கத்தை கட்டாயமாக்கும் காரணத்தை:
الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ
அவனே உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்தான்’ (2:21)
என்று கூறி தெளிவுபடுத்திவிட்டு, தொடர்ந்து அவனது அதிகாரங்களை தெளிவுபடுத்துகிறான:
الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ
அவனே உங்களுக்கு பூமியை விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் ஆக்கி, வானிலிருந்து நீரை இறக்கி, அதன் மூலம் உங்களுக்கு உணவாக கனிவஸ்துக்களையும் வெளிப்படுத்தினான். (2:22)
அவை அனைத்தும் அல்லாஹ்வின் அதிகாரங்களை வெளிப்படுத்தி, வணக்கத்தை தனக்கு தகுதியாக்கிக் கொள்ளும் அடையாளங்களாகும். பிறகு அவன் மட்டுமே அதற்கு தகுதியானவன் என்பதை தெளிவுபடுத்தி அல்லாஹ் கூறுகின்றான்:
فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ [2 \ 22]
எனவே நீங்கள் அறிந்திருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு நிகரானவைகளை ஏற்படுத்தாதீர்கள். (2:22)
என்றால்; படைப்பதிலும், ஆகாரம் அளிப்பதிலும், கூறப்பட்ட அனைத்திலும் அவனுக்கு நிகர் இல்லை என்பது போன்று, இதன் உண்மை தன்மையை அறிந்துகொண்டு வணக்கம் செலுத்துவதில் அவனுக்கு நிகர் ஏற்படுத்த வேண்டாம். என்பதாகும். மேலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனுக்கு நிகரானவைகளை மறுப்பதே, (அல்லாஹ்வை) ஏற்று (நிகரானவைகளை) நிராகரித்தல் என்ற அடிப்படையில் ‘லாஇலாஹ இல்லல்லாஹ், வணக்குத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என்பதன் அர்த்தமாகும். (அல்வாஉல் பயான்)
مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَـنَّاسِ
மறைந்திருந்து வீண் சந்தேகங்களைக் கிளப்பக் கூடியவ(னான ஷைதா)னின் தீங்கைவிட்டும் (நான் பாதுகாவல் தேடுகிறேன்) (114:4)
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் {الْوَسْوَاسِ الْخَنَّاسِ} என்பதை தெளிவுபடுத்தும் போது, ‘அந்த இரண்டு சொற்களும், ‘அதிகம் ஊசலாட்டத்தை ஏற்படுத்துபவன், அதிகம் மறைந்திருப்பவன்‘ என்று அர்த்தம் என்று கூறிவிட்டு, ‘அல்வஸ்வாஸ்‘ என்றால் ‘மக்களை வழிகெடுக்க அதிகம் சந்தேகத்தை ஏற்படுத்துபவன்‘ என்றும், ‘அல்கன்னாஸ்’ என்றால் ‘மக்களை வழிகெடுப்பதிலிருந்து அதிகம் பின்வாங்குபவன்‘ என்று அர்த்தம் என்று கூறினார்கள். ‘அடியான் அல்லாஹ்வை மறந்திருக்கும் போது சந்தேகத்தை உண்டாக்குவான், அல்லாஹ்வை நினைவூட்டும்போது மறைந்துவிடுவான்‘ இது பின்வரும் வசனத்தை போன்றதாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَنْ يَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَيِّضْ لَهٗ شَيْطٰنًا فَهُوَ لَهٗ قَرِيْنٌ
எவர் அர்ரஹ்மானுடைய நல்லுபதேசத்தைப் புறக்கணித்து விடுகின்றாரோ, அவருக்கு நாம், ஒரு ஷைத்தானைச் சாட்டிவிடுவோம், அவன் அவருக்கு இணை பிரியாத தோழனாகி விடுகிறான். (43:36) (அல்வாஉல் பயன்)
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: ‘ஆதமுடைய மகனின் உள்ளத்தின் மீது ஷைதான் இடம்பிடித்துள்ளான், அவன் மறந்து, பாராமுகமாக இருக்கும்போது சந்தேகத்தை உண்டாக்குகிறான், அல்லாஹ்வை நினைவூட்டினால் மறைந்துவிடுகிறான்.’ இவ்வாறே முஜாஹித், கதாதா போன்றவர்களும் கூறினர். அல்முஃதமர் பின் ஸுலைமான் அவர்கள் தந்தையை தொட்டு கூறினார்கள்: ‘ஷைதான் அல்லது சந்தேகத்தை ஏற்படுத்துபவன் ஆதமின் மகன் கவலைப்படும் போதும், சந்தோசப்படும்போதும் அவனது உள்ளத்தில் ஊதுகிறான், அல்லாஹ்வை நினைவூட்டினால் மறைந்துகொள்கிறான்.‘ இப்னு அப்பாஸ் ரலி அவர்களைத் தொட்டு அவ்பீ அவர்கள், ‘அல்வஸ்வாஸ் என்றால்; அவன் ஷைதானே, கட்டளையிடுவான், அவனுக்கு கட்டுப்பட்டால் மறைந்துவிடுவான்.‘ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)
الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ
அவன் எத்தகையவனென்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களைக் கிளப்பிவிடுகிறான். (114:5)
{الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ} மனித உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்துவான் என்றால், ‘வெளிப்படையில் விளங்குவதுபோன்று இது மனிதனுக்கு மட்டும் குறிப்பானதா, அல்லது இதில் ஜின்னையும் சேர்த்துக்கொள்ளுமா?’ என்றால், அதில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன. ஜின்களும் மனிதர்கள் என்ற சொல்லில் ‘மிகைப்படுத்தல்‘ என்ற விதிப்படி நுழைவார்கள். (ஜின்கள் அதில் நுழைய மாட்டார்கள் என்பது ஒரு கருத்து) இப்னு ஜரீர் இமாமவர்கள் : ‘அவர்களது விடயத்தில் “ரிஜாலும் மினல் ஜின்னி” ஜின்னில் உள்ள மனிதர்கள்‘ என்று (குர்ஆனில்) பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்கள் விடயத்தில் மனிதர்கள் என்று பயன்படுத்துவது புதுமையல்ல.’ என்று கூறினார்கள். (இந்த வாதப்படி ‘மனிதர்களின் ஜின்களின் உள்ளங்களில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தும்’ என்று அர்த்தமாகும்)
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
(இத்தகையோர்) ஜின்களில் மற்றும் மனிதர்களில் இருக்கின்றனர். (114:6)
{مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ} ‘மனிதர்கள், ஜின்களில் உள்ள’ என்றால் முன்னால் உள்ள வசனத்தின் ‘மனித உள்ளத்தில்’ என்பதற்கு விளக்கமாக கூறப்பட்டதா? இந்த கூற்று, (முன்னைய வசனத்திற்கு சொல்லப்பட்ட கூறுக்களில் “மனிதர்கள் என்பதில் ஜின்களும் அடங்குவர்” என்ற) இரண்டாவது கூற்றை பலப்படுத்தும். (இதன் படி ‘மனிதர்களின் ஜின்களின் உள்ளங்களில் என்று அர்த்தம்) மேலும் {مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ} என்பது ‘அல்லதீ எத்தகையவன்” என்பதற்கு விளக்கமாகும் என்றும் சொல்லப்பட்டது. என்றால் (மனிதர்கள், ஜீன்களில் உள்ள ஷைதான்கள் ஊசலாட்டத்தை ஏற்படுத்துகின்றனர்) என்று அர்த்தம். இது ஸூரா அன்ஆம் 112 வது வசனம் போன்றதாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيٰطِيْنَ الْاِنْسِ وَالْجِنِّ يُوْحِىْ بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُوْرًا
மேலும், இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும், ஜின்களிலும் உள்ள ஷைதான்களை விரோதியாக நாம் ஆக்கியிருந்தோம், அவர்களில் சிலர் சிலருக்கு அலங்காரமான (பொய்க்) கூற்றுக்களை ஏமாற்றுவதற்காக இரகசியமாக அறிவிக்கின்றனர், (6:112) (இப்னு கஸீர்)
இந்த ஸூராவின் மூலம் ஷைதானின் ஊசலாட்டம், குறிப்பாக அவன் உள்ளத்தில் விதைக்கும் வீண் சந்தேகங்கள், குழப்பங்களில் இருந்து பாதுகாப்பு தேடும் வழிமுறையை அல்லாஹ் கற்றுத்தருகிறான் என்றால், உள்ளத்தில் ஏற்படும் வீண் சந்தேகங்கள், ஊசலாட்டங்களிலிருந்து ஒரு முஃமின் தற்காப்பு எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான் என்பதை புரியலையலாம்.
ஷைதானின் ஊசலாட்டமும், பாதுகாப்பிற்கான வழிகளும்:
மண உறுதி ஷைதானை விரட்டும்;
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறினார்கள்: ‘ஷைதானின் ஊசலாட்டம் என்பது சந்தேகத்தை தோற்றுவித்தல், மனக்குழப்பத்தை ஏற்படுத்தல் என்பதாக இருந்தால், இஸ்லாமிய சட்டம் ஒரு முஃமினுக்கு உறுதியானதையும், தடுமாற்றம் இல்லாததையுமே எடுக்கச்செல்லும். அல்லாஹ் கூறுகின்றான்:
فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ
நீர் முடிவு செய்து உறுதியெடுத்தால், அல்லாஹ்வின் மீது நீர் நம்பிக்கை வைப்பீராக! (3:159)
மேலும் சில நபிமார்களை அவர்களிடமிருந்த உறுதிப்பாட்டை வைத்து அல்லாஹ் புகழ்ந்து, அவர்களை பின்பற்றுமாறும் ஏவுகிறான். அல்லாஹ் கூறுகின்றான்:
فَاصْبِرْ كَمَا صَبَرَ اُولُوا الْعَزْمِ مِنَ الرُّسُلِ
(நபியே!) தூதர்களிலுள்ள உறுதிமிக்கவர்கள், பொறுத்துக் கொண்டிருந்த பிரகாரமே, நீரும் பொறுமையாக இருப்பீராக! (46:35.)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: உனக்கு சந்தேகம் தருவதை சந்தேகம் தராதவற்றின் பக்கம் விட்டுவிடு. (திர்மிதீ:2518, நம்பகமான அறிவிப்பாளர் தொடர்)
மேலும் சட்டக்கலை விதிகளில் ஒன்றாக ‘«الْيَقِينُ لَا يُرْفَعُ بِشَكٍّ» ‘உறுதியானது சந்தேகத்தைக் கொண்டு நீங்காது‘ என்பதும் இருக்கிறது.
அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரலி அவர்கள் கூறினார்கள்: ‘தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படும் ஒரு மனிதர் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிடப்பட்டதற்கு, ‘நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும் வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம்‘ என்று அவர்கள் கூறினார்கள்’ (புகாரி: 137,177,2056,முஸ்லிம், அபூஹுரைரா ரலி வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.)
எனவே கட்டாய சட்டங்கள் (பர்ள்,ஸுன்னத்,வாஜிப் போன்ற அஹ்காமுத் தகாலீப்) அனைத்தும் உறுதியின் அடிப்படையிலேயே எடுக்கப்படவேண்டும்,
நம்பிக்கை (அகீதா) சார்ந்தவைகளும் உறுதியை அடிப்படையாகக் கொண்டதே. வணக்கவழிபாடுகளிலும் நிய்யத் அவசியமாகும், நிய்யத் வைப்பதில் உறுதி கொள்ளுதல் என்பது நிபந்தனையாகும்.
அதேபோன்றுதான் அனைத்துவிதமான கொடுக்கல், வாங்கல் ஒப்பந்தங்களும் உறுதியின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்படவேண்டும்,
இவை அனைத்தின் மூலமும் பெறப்பட்ட உறுதித் தன்மையென்பது, சந்தேகத்தையும், தடுமாற்றத்தையும் போக்கிவிடக்கூடியதாகும். ஒரு முஃமினின் உள்ளத்தில் சந்தேகத்திற்கும், ஷைதானிய ஊசலாட்டத்திற்கும் இடமே இருக்காது. நிச்சியமாகவே உமர் ரலி அவர்கள் வரும் வழியை விட்டே ஷைதான் விரண்டோடுவான். (அல்வாஉல் பயான்)
எனவே இந்த வரிகள் மூலம் ஒரு முஃமின் ஷைதானின் ஊசலாட்டம், வீண் சந்தேகம் போன்ற வஸ்வாஸ் நோயிலிருந்து விடுபட அவன் அனைத்து விடயங்களிலும் உறுதியயையும், ஆதாரத்தை சார்ந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உறுதியானதை எடுப்பதற்கு நபிகளாரின் சில வழிகாட்டல்கள்:
‘அல்வஸ்வாஸ்‘ மூலம் இறைநம்பிக்கையை குழப்பும் ஷைதான்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் (அவர் மனதிற்குள்) ஷைதான் வந்து, ‘இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?’ என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், ‘உன் இறைவனைப் படைத்தவர் யார்?’ என்று கேட்கிறான். இந்தக் கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும். (புகாரி: 3276,முஸ்லிம், முஸ்லிமின் அறிவிப்பில்: ‘ஆமன்து பில்லாஹ்’ என்று செல்லுமாறு வந்துள்ளது)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில விஷயங்கள் எழுகின்றன. அவற்றை பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் காரியமாகக் கருதுகிறோம் (இது பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?)” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அதுதான் தெளிவான இறைநம்பிக்கையாகும்” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 209)
இந்த நபிமொழியை சிந்தித்தால் உறுதியான ஈமானை புரிந்து கொள்ளலாம். ஷைதான் உள்ளத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறான், நபித்தோழர்களோ அதனை தவறு என்று கண்டுகொண்டு அதனை வாயால் பேசுவதை தவறு என்று கருதுகின்றனர். அந்த அளவு அவர்களது இறை நம்பிக்கை பலமாக இருந்தது. அப்படி பலமான நம்பிக்கை உள்ளவர்களை ஷைதானால் ஒன்றும் செய்துவிட முடியாது. அல்லாஹ் கூறுகின்றான்:
مَنْ كَفَرَ بِاللّٰهِ مِنْۢ بَعْدِ اِيْمَانِهٖۤ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَٮِٕنٌّۢ بِالْاِيْمَانِ
எவர், தாம் விசுவாசங்கொண்ட பின்னர் அல்லாஹ்வை நிராகரித்து விடுகிறாரோ, (அவரின்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டு, ஆயினும்), எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி பெற்றிருக்க (நிராகரிக்குமாறு) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ அவரைத் தவிர, (அவர்மீது குற்றமில்லை.) (16:106)
இப்பாதத்களில் ‘அல்வஸ்வாஸ்‘ சந்தேகத்தை ஏற்படுத்தி அதனை பால்படுத்த முயற்சிக்கும் ஷைதான்;
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைதான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி ‘இதை இதையெல்லாம் நினைத்துப்பார்‘ எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று (சந்தேகம் ஏற்பட்டால்) தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்’ (புகாரி: 608,1231, 1232, முஸ்லிம்)
உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் எனது தொழுகைக்கும் எனது ஓதலுக்குமிடையே ஷைதான் தடையாய் நின்று எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன்தான் “خَنْزَبٌ கன்ஸப்” எனப்படும் ஷைதான் ஆவான். அவனை நீங்கள் உணர்ந்தால் அவனிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் கோரி, உங்கள் இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் செய்தபோது, என்னிடமிருந்து அவனை அல்லாஹ் அப்புறப்படுத்திவிட்டான்.(முஸ்லிம்: 4431)
வுழு முறிவது (காற்று பிரிவது போன்ற) உணர்வு ஏற்பட்டால் சத்தம் கேட்காமல், நாற்றம் வீசாமல் வுழு முறிந்ததாக முடிவு எடுக்கக் கூடாது, ((புகாரி: 137,177,2056,முஸ்லிம். முன்னால் பதியப்பட்டுள்ளது)) சிறுநீர் சொட்டுக்கள் வடிவது போன்று இருந்தால் ஆடையை பார்த்து உறுதிப்படுத்தி முடிவு எடுக்கவேண்டும், சந்தேகத்திற்கு ஆளாகி ஷைதானுக்கு அடிமைப்பட்டுவிடக்கூடாது. நஜீஸ் அசுத்தம் பட்டது போன்று ஊசலாட்டம் ஏற்பட்டால் நுகர்ந்து பார்த்து உறுதிப்படுத்த வேண்டும், சந்தேகத்தை வைத்து எம்மை நாமே குழப்பிக்கொள்ளக் கூடாது, இதுவே ஷைதான் எம்மை வழிகெடுக்கும் இடமாகும்.
அடுத்தவர்களை தப்பெண்ணம் கொள்ள வைக்கும் ஷைதான்;
அலீயுப்னுல் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸபிய்யா அவர்களிடம், ‘அவசரப்படாதே!’ நானும் உன்னோடு வருகிறேன்’ என்றார்கள். அவர்களின் அறை உஸாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அவர்களுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி(ஸல) அவர்களைச் சந்தித்து, அவர்களை பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ‘இங்கே வாருங்கள், இவர் (என் மனைவி) ஸபிய்யாவே ஆவார்!’ எனக் கூறினார்கள். அவ்விருவரும் ‘ஸுப்ஹானல்லாஹ், இறைத்தூதர் அவர்களே!’ என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக ஷைதான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சினேன்’ என்று தெளிவுபடுத்தினார்கள். (புகாரி: 2038, 2039,3281, முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்லீஸ், தனது சிம்மாசனத்தை நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றவனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைதான்களில் ஒருவன் வந்து “நான் இன்னின்னவாறு செய்தேன்” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், “நீ எதையும் செய்யவில்லை” என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் விட்டுவைக்கவில்லை” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச்செய்து, “நீதான் சரி(யான ஆள்)” என்று (பாராட்டிக்) கூறுவான். (முஸ்லிம்: 5419)
இதற்கான தீர்வு உறுதியாக விசாரித்து முடிவெடுப்பதும், உள்ளத்தை சுத்தப்படுத்துவதுமே.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ
விசுவாசிகளே! (பாஸிக் எனும்) தீயவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டுவந்தால் (அதை உடனே அங்கீகரித்து) அறியாமையால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தார்க்கு நீங்கள் தீங்கிழைத்துவிடாதிருப்பதற்காக தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள், பின்னர் நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே கைசேதப்படக்கூடியவர்களாக ஆகிவிடுவீர்கள். (49:6)
وَالَّذِيْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
மேலும், அவர்களுக்குப் பின் வந்தார்களே அத்தகையவர்கள் “எங்கள் இரட்சகனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! விசுவாசங்கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை எற்படுத்தாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடைவன் என்று (பிரார்த்தனை செய்தும்) கூறுவார்கள். (59:10)
பொதுவாக ஷைதானிடமிருந்து பாதுகாப்புபெற “لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ” என்பதை கூறிக்கொள்வோம்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ” என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமாகும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைதானிடமிருந்து அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமாக ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர. (புகாரி: 3293,முஸ்லிம்)
எனவே சந்தேகத்திற்கு இடம்கொடுக்காமல் உள்ளத்தில் உறுதி கொள்வதன் மூலமும், உள்ளத்தை சுத்தப்படுத்துவதன் மூலமும், ஊசலாட்டங்களை போக்க நபிகளார் காட்டித்தந்த நடைமுறைகளை கடைபிடிப்பதன் மூலமும், இந்த ஸூராக்களை அதிகம் ஓதுவதன் மூலமும், அல்லாஹ்வை அதிகம் நினைவூட்டுவதன் மூலமும், அல்குர்ஆனை ஓதுவதன் மூலமும், காலை, மாலைக்கென்று குறிப்பிட்டு வந்திருக்கும் அவ்ராதுகளை ஓதுவதன் மூலமும் ஷைதானிடமிருந்து பாதுகாப்புபெற முயல்வோம், அல்லாஹ் நம் அனைவரையும் ஷைதானின் சூழ்ச்சிகளில் இருந்து காப்பானாக!
இத்தோடு ஸூரா நாஸின் விளக்கம் முற்றுப்பெறுகிறது.
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ