بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
நபிகளாரும், அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட நிகழ்வும்:
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!
ஸூரா அல்பலகின்(113) விளக்கத்தில் நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டபோது, அதனை செய்த லபீத் பின் அஃஸமுக்கு எதிராகவே இந்த ஸூரா இறங்கியதாக விரிவுரையாளர்கள் ஒன்றுபட்டு கூறியுள்ளனர் என்று பார்த்தோம். ஆனாலும் இஸ்லாமிய உம்மத்தில் ((முஃதஸிலாக்களும் அவர்களது சிந்தனைத் தாக்கத்தால் ஹதீஸ்களை மறுக்கும் சிந்தனைப் போக்கு கொண்ட)) சிலர் நபியவர்களுக்கு சூனியம் வைத்த நிகழ்வு குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கின்றனர். அது பற்றிய சில குறிப்புகளை நோக்குவோம்.
சூனியம் வைக்கப்பட்டதாக பதியப்பட்டுள்ள நபிமொழி:
சூனியம் வைக்கப்பட்டதாக பதியப்பட்டுள்ள நபிமொழி, அறிவிப்புக்களில் அதிகமான வார்த்தைகளுடன் வந்திருப்பதை, கனமான எழுத்தில் (( )) என்ற அடையாளத்துடன் ஒரே பார்வையில் நோக்குவோம்:
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. ((இப்படி இப்படி தங்கியருந்தார்கள்.(புகாரி:6063)) ((ஆறு மாதங்கள் இருந்தார்கள். அஹ்மத்:24347)) எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. (புகாரி: 3175) ((அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள். (புகாரி:5765,6063)) இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; ‘என் நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயா? என்னிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றவரிடம், ‘இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?’ என்று கேட்டார். மற்றவர், ‘இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்தார். அதற்கு அவர், ‘இவருக்கு சூனியம் வைத்தது யார்?’ என்று கேட்க, அவர்கள், ‘லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)’ என்று பதிலளித்தார். ‘(அவன் சூனியம் வைத்தது) எதில்?’ என்று அவர் கேட்க அதற்கு, ‘சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்’ என்று பதிலளித்தார். அதற்கு அவர், ‘அது எங்கே இருக்கிறது’ என்று கேட்க, ‘பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள ‘தர்வான்’ எனும் கிணற்றில்’ என்று பதிலளித்தார்கள்.
பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; ((அலியே எடுத்து வாரும். அல்முஃஜமுல் அவ்ஸத்:5926)) பிறகு திரும்பி வந்தபோது என்னிடம், ‘அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன, ((அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது (புகாரி:5763,6063,6391)) என்று கூறினார்கள். நான், ‘அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இல்லை.((புகாரி:5766)) ((அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது‘ என்றும் கூறினார்கள். நான், ‘தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்து காட்டக் கூடாது?’ எனக் கேட்டேன்.(புகாரி:5765 )) (( நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட, அது வெளியே எடுக்கப்பட்டது. நான், ‘இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறை)தனைப் பிரித்துப் பார்க்கவில்லையா?’(புகாரி:6063)) ((இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள்’எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்துவிட்டான். (புகாரி:6391)) ((உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே? அதைத் தாங்கள் (வெளியில் எடுத்துக்காட்டி) எரித்திருக்கக் கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இல்லை; அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். (முஸ்லிம்:4406)) ((அல்லாஹ்வின் தூதரே நான் அதனை வெளியில் எடுக்கவா? முஸ்னது இஸ்ஹாக்:737)) ((நான் எரிக்கவா. அஹ்மத்:24348)) என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்’ என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது. ((குல் அஊது சூரா இறங்கியது. ஷர்ஹு உஸூலி இஃதிகாதி அஹ்லிஸ்ஸுன்னா:2272 நம்பகமான அறிவிப்பு)) (ஸஹீஹுல் புகாரி: 3268, முஸ்லிம்,அஹ்மத்)
அஹ்மதின் (24347) அறிவிப்பில்: ஆறு மாதங்கள் இந்த நிலையில் இருந்ததாக பதியப்பட்டுள்ளது, அது ‘மஃமர்’ அவரகள் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது, அவர் நம்பகமான அறிவிப்பாளாராக இருந்தாலும், ஹிஷாம் அவர்களைத் தொட்டு அறிவிப்பதில் ஒரு விடயம் இருக்கிறது என்று இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே பலருக்கும் மாற்றமாக வந்த செய்தியே ஆறு மாதங்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். எனவே பல நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக இப்படி விமர்சனம் உள்ள ஒருவர் மேலதிகமாக அறிவித்தால் அதனை ஆதாரமாக கொள்ளமுடியாது என்பது ஹதீஸ்களை விதியாகும். அத்தோடு அதனை ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக்கொண்டாலும் அது குர்ஆனின் பாதுகாப்பில் எந்த பாதிப்பையும் செலுத்தமாட்டாது என்பதை பின்னால் பார்க்கலாம்.
அடுத்து, நபியவர்களே சென்று எடுத்ததாக வரும் நம்பகமான அறிவிப்புகளுக்கு இடையில், ((‘அலியே எடுத்து வாரும்!’ என்று அல்முஃஜமுல் அவ்ஸதில்:5926)) வரும் செய்தியானது, ‘முரஜ்ஜா பின் ரஜாஃ‘ என்பவர் வழியாக அறிவிக்கப்பட்டதாகும். அவர் ஸதூகுன் சிலவேலை தவறுவிடுபவர், பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டவராவார். எனவே நம்பகமானவர்களுக்கு முரணாக அறிவிக்கும்போது அதனை எடுக்கமுடியாது.
அடுத்து,
ஸைத் பின் அர்கம் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்களுக்கு யூதர்களில் ஒருவன் சூனியம் செய்தான், சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள், ஜிப்ரீல் அலை அவர்கள் வந்து, ‘யூதர்களில் ஒருவன் உங்களுக்கு சூனியம் வைத்து, சில முடிச்சுகளிட்டு, இந்த கிணற்றில் வைத்துள்ளான்’ என்று கூறினார்கள். நபியவர்கள் ஆளனுப்பி ((அலியை அனுப்பி (அஹ்மத்)), அவர்கள் அதனை வெளியில் எடுத்து, கொண்டுவந்தார்கள் ((அதனை அவிழ்த்தார்கள (அஹ்மத்)), அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கட்டுகள் அவிழ்க்கப்பட்டது போன்று எழுந்து நின்றார்கள், அதனை அந்த யூதனுக்கு சொல்லவுமில்லை, அவனது முகத்துக்காலும் காட்டவில்லை. (நஸாஇ: 4080, அஹ்மத் :19267)
இந்த அறிவிப்பு ‘அஃமஷ்’ வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது, அவர் ‘முதல்லிஸ். பலவீனமானவர்களை விட்டுவிட்டு இருட்டடிப்பு செய்து அறிவிப்பவர்‘ என்று விமர்சிக்கப்பட்டவர், அவர் இதனை உறுதியான ‘கற்றுத்தந்தார்’ என்பது போன்ற வார்த்தையால் அறிவிக்காமல், அவரைத் தொட்டு என்ற வாசகம் கொண்டே அறிவித்துள்ளார். எனவே இந்த தொடரில்தான் ‘அலி ரலி அவர்கள் குல் ஸூரா இரண்டையும் ஓதியதாகவும், ஓதும்போது முடிச்சுகள் அவிழ்ந்ததாகவும் வந்திருக்கிறது‘ அனைத்தும் பலவீனமானதாகும்.
அறிவிக்கப்பட்ட வார்த்தை வித்தியாசங்களை வைத்து ஹதீஸை மறுத்தல்:
எனவே இந்த செய்திகளை நிதானமாக சிந்திக்கும் போது நிதானமான, நடுநிலையான ஒரு முடிவுக்கு வரலாம். முரண்பாட்டைக் காட்டும் வார்த்தைகளான, ‘ஆறு மாதங்கள், சில நாட்கள், அதனை பிரித்தார்க்ள, முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன, அலியை அனுப்பினார்கள், போன்ற செய்திகள் ஒன்றில் பலவீனமான அறிவிப்புக்கள், அல்லது நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு முரணானவைகள்’ என்பதை புரியலாம்.
அடுத்து, அதனை எடுத்தார்கள், எடுக்கவில்லை என்ற செய்தியைப் பொறுத்தவரை நிதானமாக சிந்தித்தல் அதில் முரண்பாடுகள் இல்லை, மேலதிக தகவல்கள் இருக்கின்றான என்பதை புரியலாம். அது தான்: “நபியவர்கள் எடுக்கவில்லை என்று மறுத்தது, ‘ஈத்தம் பாலை உறைக்குள் இருந்ததை’ என்று புரிந்து, எடுத்தார்கள் என்பதை, ‘கிணற்றுக்குள் இருந்து எடுத்தார்கள்‘ என்று புரிந்து கொண்டால்” அனைத்து அறிவிப்புக்களையும் சேர்த்து ஏற்றுக்கொள்ளலாம்.
எனவே ‘இந்த பாலைப் பை எடுக்கப்பட்டு, அது திறந்து பார்க்கப்படாமல், எரிக்கப்படாமல், வீசப்பட்டது‘ என்று உடன்பாட்டுடன் புரிந்து கொள்ளலாம். அதனை கனமான எழுத்தில் (( )) இந்த அடையாலங்குள் பதிந்திருக்கும் வாசகங்களோடு சேர்த்து வாசித்து விளங்க முயற்சித்தால் புரியலாம். ஒரு நபி மொழி முரண்படுவது போன்று தென்பட்டால் ஏனைய நபி மொழிகளுடன் சேர்த்து விளங்க முடிந்த நிலையில் அப்படி புரிவதே குர்ஆன் ஸுன்னாவை நேசித்த அறிஞர்களின் வழிமுறையாக இருந்துள்ளது. (அல்லாஹு அஃலாம்)
இந்த நபி மொழியில் இடம்பெற்றிருக்கும் சில வார்த்தை வித்தியாசங்களை எடுத்துக்காட்டி, முஃதஸிலாக்கள் வழியில் ஹதீஸை மறுக்க நினைப்போர், உண்மையில் நபிமொழிகளையும் அதை சார்ந்தோரையும் நேசிப்பவர்களாக இருந்தால், “நேர்வழிப்பெற்ற அறிஞர்கள் இந்த ஹதீஸை, எப்படி ஒன்றை ஒன்றுடன் சேர்த்து விளங்கினார்கள் என்பதை மனத்தூய்மையுடன், பத்ஹுல் பாரியை ஒருதடவை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்” என்பதை அவர்களுக்கு அறிவுரையாக சொல்லவிரும்புகிறேன். (அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.)
குர்ஆனையும், ஹதீஸையும் ஒரே கோணத்தில் புரிய முயற்சித்தல்:
சூனிய ஹதீஸில் வார்த்தை வித்தியாசங்கள் வந்திருப்பது போன்று, மூஸா நபியின் நிகழ்வு வந்திருக்கும் பிரதான இரண்டு இடங்களிலும் வார்த்தை வித்தியாசமும், அதிகபடியான விளக்கமும் இருக்கிறது.
قَالُوْا يٰمُوْسٰٓى اِمَّاۤ اَنْ تُلْقِىَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ اَوَّلَ مَنْ اَلْقٰى , قَالَ بَلْ اَلْقُوْاۚ فَاِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ اِلَيْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰى فَاَوْجَسَ فِىْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰى وَاَ لْقِ مَا فِىْ يَمِيْنِكَ تَلْقَفْ مَا صَنَعُوْا ؕاِنَّمَا صَنَعُوْا كَيْدُ سٰحِرٍ ؕ وَلَا يُفْلِحُ السّٰحِرُ حَيْثُ اَتٰى فَاُلْقِىَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰى
பின்னர், (சூனியம் செய்ய வந்த) அவர்கள், (மூஸாவிடம்) “மூஸாவே! ஒன்று நீர் போடுகிறீரா? அல்லது போடுபவரில் முதலாவதாக நாங்கள் இருக்கவா?” என்று கேட்க, (65) ” நீங்களே (முதலில்) போடுங்கள்” என்று மூஸா நபி கூற, (அவர்கள் கயிறுகளையும்,தடியையும் போட) அந்நேரத்தில் நிச்சயமாகவே அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும், அவர்களின் சூனியத்தின் காரணமாக, (பாம்புகளாக) விரைந்து ஓடுவதுபோல் (மூஸா நபி) இவருக்கு பிரமையூட்டப்பட்டது.(66) எனவே, மூஸா நபி தன் மனதில் பயத்தை உணர்ந்தார். (67) (அது சமயம் அவரிடம்,) “நீர் பயப்படாதீர், நிச்சயமாக நீர் தான் (இந்த சூனியக்காரர்களை மிகைத்து) மிக மேலோங்கியவர்” என்று நாம் கூறி,(68) “உமது வலக்கையில் இருப்பதை நீர் போடுவீராக, அவர்கள் செய்தவற்றை அது விழுங்கிவிடும், அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரரின் சூழ்ச்சியே ஆகும், சூனியக்காரன் எங்கு வந்தபோதிலும் வெற்றி பெறமாட்டான்? “ (என்று கூறினோம்).(69)(மூஸா மேலோங்கிய பொழுது) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக (ஸஜ்தாவில்) வீழ்த்தப்பட்டு, நாங்கள் ஹாரூன், மூஸா ஆகிய இவ்விருவருடைய இரட்சகனை(க் கொண்டு) விசுவாசித்து விட்டோம்”, என்று கூறினார்கள். (20:65-70)
قَالُوْا يٰمُوْسٰٓى اِمَّاۤ اَنْ تُلْقِىَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ نَحْنُ الْمُلْقِيْنَ قَالَ اَلْقُوْا ۚ فَلَمَّاۤ اَلْقَوْا سَحَرُوْۤا اَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَآءُوْ بِسِحْرٍ عَظِيْمٍ وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنْ اَلْقِ عَصَاكَ ۚ فَاِذَا هِىَ تَلْقَفُ مَا يَاْفِكُوْنَ فَوَقَعَ الْحَـقُّ وَبَطَلَ مَا كَانُوْا يَعْمَلُوْنَۚ فَغُلِبُوْا هُنَالِكَ وَانْقَلَبُوْا صٰغِرِيْنَۚ وَ اُلْقِىَ السَّحَرَةُ سٰجِدِيْنَ ۙ قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِيْنَ
(பின்னர் அச்சூனியக்காரர்கள்) “மூஸாவே (முதலில்) நீர் போடுகிறீரா? அல்லது (முதலில்) போடுபவர்களாக நாங்கள் இருக்கட்டுமா?” என்று கேட்டனர். (116)(அதற்கு) மூஸா “நீங்கள் (முதலில்) போடுங்கள்” என்று கூறினார்; அவ்வாறு அவர்கள் போட்டபோது அதனால் மனிதர்களுடைய கண்களுக்கு சூனியம் செய்தனர், அவர்களை பயமுறுத்தும்படி செய்துவிட்டனர், இன்னும் மகத்தான சூனியத்தை அவர்கள் கொண்டு வந்து விட்டனர்.(117)(அது சமயம்) நாம், “மூஸாவுக்கு நீர் உம்முடைய கைத்தடியை போடும்)” என்றும் வஹீ அறிவித்தோம், (அவ்வாறு அவர் போடவே,) உடனே அது அவர்கள் செய்தவற்றை விழுங்கிவிட்டது. (118) ஆகவே, உண்மை வெளிப்பட்டு விட்டது, அவர்கள் செய்து கொண்டிருந்தவை (யாவும்) வீணாகியும் விட்டது. (119) ஆகவே, (கர்வங்கொண்டிருந்த) அவர்கள் அங்கேயே வெற்றி கொள்ளப்பட்டனர், அவர்கள் சிறுமையடைந்தவர்களாகவும் திரும்பினார்கள். (120) அன்றியும், அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக (கீழே) வீழ்த்தப்பட்டனர்.(121) “அகிலத்தாரின் இரட்சகனை நாங்கள் ஈமான்(விசுவாசம்) கொண்டுவிட்டோம்” என்று கூறினார்கள். (7:116-122)
வித்தியாசங்கள்:
- கயிறுகளும், தடிகளும், அவர்களின் சூனியத்தின் காரணமாக, விரைந்து ஓடுவதுபோல் தோன்றியது. (20:66) எதை போட்டார்கள் என்பதும், விரைந்து ஓடுவது போன்று தோன்றியது என்பதும் (7:116-121) ல் இல்லை.
- மூஸா நபி பயத்தை உணர்ந்தார். (20:67), அது 7:116-121 ல் இல்லை
- கண்ணுக்கு சூனியம் வைத்தார்கள், பயமுறுத்தினார்கள் 7:116-121 ல் வருகிறது, 20: 66 தொடரில் இல்லை.
- அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரரின் சூழ்ச்சியே ஆகும் 20:69, மகத்தான சூனியத்தை அவர்கள் கொண்டு வந்து விட்டனர். 7:116
- உண்மை வெளிப்பட்டு விட்டது, அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாகியும் விட்டது.7:118, சூனியக்காரன் எங்கு வந்தபோதிலும் வெற்றி பெறமாட்டான் 20:69
- நாங்கள் ஹாரூன், மூஸா ஆகிய இவ்விருவருடைய இரட்சகனை விசுவாசித்து விட்டோம்”, 20:70, “அகிலத்தாரின் இரட்சகனை நாங்கள் ஈமான் கொண்டுவிட்டோம்” 7:121
எனவே குர்ஆனில் வரும் இந்த வித்தியாசங்களை ஒன்றோடு ஒன்று முரண்பட்டவையாக நாம் நோக்கவும் மாட்டோம், அவை முரண்பாடுகளும் இல்லை, மேலாதிக விளக்கங்களே. அதேபோன்று ஹதீஸில் வரும் வார்த்தைகளை ஏன் நிதானமாக வாசித்து புரியமுடியாது.
அடுத்து, இந்த நிகழ்வு குர்ஆனுக்கு முரண்படுமா? என்றால் இல்லை, அது குர்ஆனை பலப்படுத்தும் என்பதே முறையான சிந்தனையுடன் படிக்கும் போது விளங்கும் ஒன்றாகும்.
வாதங்களும், விளக்கங்களும்:
- நபிகளாருக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது என்றால், அதுவும் ஆறு மாதங்கள் நீடித்தது என்றால் வஹியில் இறைச்செய்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பது ஒரு வாதமாகும்.
உண்மையில் குர்ஆனின் சிறப்புத் தன்மையை அறிந்தவர் ஒருபோதும் இந்த வாதத்தை ஏற்கமாட்டார். ஏனெனில் அல்குர்ஆன் பாதுகாக்கப்படும் என்பதுதான் அதன் முஃஜிசாவே. (மனிதனை அதுபோன்ற ஒன்றை கொண்டுவருவத்திலிருந்து இயலாமலாக்கியதே).
நபியவர்கள் மரணித்தார்கள், குர்ஆனின் நூற்றி பதினான்கு ஸூராக்களையும் புத்தகமா கொடுக்கவில்லை என்பதும், நபியவர்கள் மனிதர்களைப்போன்று மறந்தார்கள் என்பதும், குர்ஆன் வசனத்தையே மறந்தார்கள் என்பதும், பலவீனமுள்ள, மனித தன்மைக் கொண்ட நபிகளார், அவர்கள் தொகுத்துக் கொடுக்காமல் மரணித்தார்கள், அனால் குர்ஆன் அழியவில்லை என்பதும் குர்ஆன் இறை வேதம் என்பதை பலப்படுத்துவதுபோன்று, நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதை பூதாகரமாக்கி குர்ஆன் விமர்சிக்கப்படவில்லை என்பதும், நபிகளாருக்கு என்ன நடந்தாலும் இறைவேதம் பாதுகாக்கப்படும் என்பதும் அல்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு சான்றாகும்.
ஆஇஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள், பள்ளிவாசலில் குர்ஆன் ஓதும் (அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) ஒருவரை செவிமடுத்தபோது, ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தியாயத்திலிருந்து மறந்து விட்டிருந்த இன்னின்ன வசனங்களை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்’ என்று கூறினார்கள். (புகாரி: 2655, முஸ்லிம்)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலி அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை தொழுதார்கள், தொழுகையை முடித்து ஸலாம் கூறியதும் ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?’ என்று கேட்கப்பட்டது. ‘அது என்ன (மாற்றம்)?’ என்று நபி(ஸல்) கேட்டதும், ‘நீங்கள் இப்படியல்லவா (ஐந்தாக) தொழுதீர்கள்’ என அங்கிருந்தவர்கள் கூறினார்கள். (நீட்டியிருந்த) தங்களின் கால்களை நபி(ஸல்) மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கூறினார்கள். அதன் பின்னர் அவர்கள் எங்களை முன்னோக்கித் திரும்பியமர்ந்து, ‘தொழுகையில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்படுமானால் அதை உங்களுக்குத் தெரிவித்து விடுவேன். என்றாலும் நானும் உங்களைப் போன்ற மனிதன்தான். நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்து விடுவேன். நான் மறந்துவிட்டால் எனக்கு ஞாபகப்படுத்துங்கள். உங்களில் ஒருவர் தங்களின் தொழுகையில் சந்தேகித்தால் உறுதியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் தொழுகையைப் பூர்த்தி செய்து ஸலாம் சொல்லிய பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்’ என்று கூறினார்கள்’ (புகாரி: 401,முஸ்லிம்)
- சூனியக்காரன் எப்படி வந்தாலும் வெற்றிபெற மாட்டான் என்று குர்ஆன் கூறியிருக்க அது எப்படி நபிகளாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு வாதமாகும்.
வெற்றி பெறமுடியாது என்பதே அவன் ஏதோ ஒன்றை செய்வான், ஆனால் தோல்வி அடைவான் என்பதைக் காட்டுகின்றது. தோல்வி அடைவான் என்பதை வைத்து ஒன்றும் செய்யமுடியாது என்று முடிவெடுப்பது குர்ஆனுக்கே முரன்பட்ட வாதமாகும். அதனை அந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களைப் பார்க்கும் போது அறியலாம்.
قَالُوْا يٰمُوْسٰٓى اِمَّاۤ اَنْ تُلْقِىَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ اَوَّلَ مَنْ اَلْقٰى , قَالَ بَلْ اَلْقُوْاۚ فَاِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ اِلَيْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰى فَاَوْجَسَ فِىْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰى وَاَ لْقِ مَا فِىْ يَمِيْنِكَ تَلْقَفْ مَا صَنَعُوْا ؕاِنَّمَا صَنَعُوْا كَيْدُ سٰحِرٍ ؕ وَلَا يُفْلِحُ السّٰحِرُ حَيْثُ اَتٰى فَاُلْقِىَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰى
பின்னர், (சூனியம் செய்ய வந்த) அவர்கள், (மூஸாவிடம்) “மூஸாவே! ஒன்று நீர் போடுகிறீரா? அல்லது போடுபவரில் முதலாவதாக நாங்கள் இருக்கவா?” என்று கேட்க, (65) ” நீங்களே (முதலில்) போடுங்கள்” என்று மூஸா நபி கூற, (அவர்கள் கயிறுகளையும்,தடியையும் போட) அந்நேரத்தில் நிச்சயமாகவே அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும், அவர்களின் சூனியத்தின் காரணமாக, (பாம்புகளாக) விரைந்து ஓடுவதுபோல் (மூஸா நபி) இவருக்கு பிரமையூட்டப்பட்டது.(66) எனவே, மூஸா நபி தன் மனதில் பயத்தை உணர்ந்தார். (67) (அது சமயம் அவரிடம்,) “நீர் பயப்படாதீர், நிச்சயமாக நீர் தான் (இந்த சூனியக்காரர்களை மிகைத்து) மிக மேலோங்கியவர்” என்று நாம் கூறி,(68) “உமது வலக்கையில் இருப்பதை நீர் போடுவீராக, அவர்கள் செய்தவற்றை அது விழுங்கிவிடும், அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரரின் சூழ்ச்சியே ஆகும், சூனியக்காரன் எங்கு வந்தபோதிலும் வெற்றி பெறமாட்டான்? “ (என்று கூறினோம்).(69)(மூஸா மேலோங்கிய பொழுது) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக (ஸஜ்தாவில்) வீழ்த்தப்பட்டு, நாங்கள் ஹாரூன், மூஸா ஆகிய இவ்விருவருடைய இரட்சகனை(க் கொண்டு) விசுவாசித்து விட்டோம்”, என்று கூறினார்கள். (20:65-70)
ஹதீஸிலும் குர்ஆன் வசனத்திலும் வரும் அரபு வாசகங்களை கவனியுங்கள் புரியும்:
يُخَيَّلُ اِلَيْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰى فَاَوْجَسَ فِىْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى
يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ صَنَعَ شَيْئًا وَلَمْ يَصْنَعْهُ
- மூஸா நபி பயப்படும் அளவுக்கு கம்பும் தடியும் விரைந்து செல்வது போன்று பிரமையூட்டப்பட்டது, செய்யாத ஒன்றை செய்வது போன்று பிரமையூட்டப்பட்டது முஹம்மது நபிக்கு.
- மூஸா நபிக்கு சூனியம் வைத்தது அவரது விரோதிகள், முஹம்மது நபிக்கு சூனியம் வைத்தது அவரது எதிரி சமூகம் யூதர்கள்.
- தாக்கம்; மூஸா நபியின் கண்ணுக்கு நடக்காதது நடந்ததுபோன்று காட்சியளித்தது,உள்ளத்தில் பயத்தை உணர்ந்தார்கள், முஹம்மது நபிக்கு உள்ளத்தில் நடக்காதது நடந்தது போன்று இருந்தது.
- மூஸா நபியின் அற்புதம் கண்ணோடு சம்பந்தப்பட்டது, அது மாறியது, முஹம்மது நபியின் அற்புதம் உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது அது மாறியது.
இரண்டிலும் தோல்வி சூனியக்காரர்களுக்கு, வெற்றி நபிமாருக்கு.
வித்தியாசம் என்ன, மூஸா நபி நிகழ்வு குர்ஆனில், முஹம்மது நபி நிகழ்வு ஹதீஸில். குர்ஆனில் வந்தால் ஏற்பதும் ஹதீஸில் வந்தால் மறுப்பதுமா முஸ்லிமின் வழிமுறை??.
யூதன் ஏன் விமர்சிக்கவில்லை??, அவன் அவனது வேத அடிப்படையில் முஹம்மது நபிக்கு நடந்தது சாத்தியம் என்று நம்பியதனால், ஆனால் முஸ்லிம்களில் சிலர் அவர்களது வேதத்தின் அடிப்படையில் நோக்காததன் காரணமாக ஹதீஸை மறுக்கும் நிலை ஏற்பட்டது அல்லாஹ் நம்மை காப்பானாக!
அடுத்து, நபியவர்கள் அதன் மூலம் மரணித்திருந்தாலோ, அல்லது இறைச்செய்திக்கு எதிராக பேசியிருந்தாலோ அப்படி வாதம் வைக்கலாம். மாற்றமாக மரணிக்கவுமில்லை, அல்லாஹ் கொடுத்த முடிவையும், மலக்குமார் வந்த நிகழ்வையும் அழகாக எடுத்து சொல்லி, சூனியம் வைக்கப்பட்டதையும் கண்டு, அதனை எடுத்து, சமூகத்திற்கு தீங்கும் நடக்காதவாறு வழியும் காட்டிக்கொடுத்தார்கள் என்றால், தீங்குசெய்ய நினைத்த யூதர்களுக்கு தோல்வியே கிடைத்து. மட்டுமல்லாமல், சூனியத்தை எப்படி கையாளவேண்டும் என்ற மார்க்க சட்டமும் கிடைத்து, சூனியத்தை வைத்து பயமுறுத்திய யூத சமூகத்திற்கே கேவலமாக அமைந்தது. அதனை அந்த நபிமொழி மூலம் தெளிவாக புரிந்துகொள்ளலாம். (அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்)
- நபிக்கு தீங்குசெய்ய முடியாது என்று குர்ஆன் கூற, சூனியம் பற்றிய ஹதீஸ் தீங்கு செய்ததாக கூறுகிறதே என்பதும் ஒரு வாதமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ ؕ وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسٰلَـتَهٗ ؕ وَاللّٰهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ
தூதரே! உம் இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்டதை எத்திவைத்துவிடுவீராக! நீர் செய்யாவிடில், அவனுடைய தூதை (முற்றிலும்) நீர் எத்திவைக்கவில்லை, மனிதர்களிலிருந்து அல்லாஹ்வே உம்மைக்காப்பாற்றிக் கொள்வான், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)
இந்த வசனத்தை முழுமையாக, நிதானமாக சிந்தித்தால் இது என்ன சொல்கிறது என்பதை புரியலாம்.
அதாவது; நபியவர்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தை எத்திவைத்தல் என்ற பணியை தடுக்கும் அளவுக்கு நபிகளாருக்கு யாராலும் எந்த தீங்கும் செய்ய முடியாத அளவு பாதுகாப்பான் என்பதே. வேதத்தை எத்திவைப்பதற்கு பாதமாகும் எந்த தீங்கையும் விரோதிகளால் செய்ய முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டே, சூனியம் செய்யப்பட நிகழ்வைக் கூறும் இந்த ஹதீஸ்தான். சூனியம் செய்யப்பட நிலையில் தான் நிதானமாக நடந்த நிகழ்வை நபியவர்கள் எடுத்துரைக்க, ஆஇஷா நாயகி எடுத்துரைத்தார்கள். நபிமொழியை வாசித்தால் அதனை புரியலாம்.
அடுத்து இதுவல்லாத நபிகளாரின் தூதுப் பணிக்கு பாதிப்பு ஏற்படாத பல தீங்குகள் நபிகளாருக்கு நடந்திருக்கின்றன, நபியவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்பதே அடிப்படை. தீங்கே வராது என்பதல்ல.
அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘அவளைக் கொன்று விடுவோமா?’ என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். (புகாரி: 2617)
ஆஇஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, ‘ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது’ என்று கூறினார்கள். (புகாரி: 4428)
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யூதப் பெண் ஒருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை (அன்பளிப்பாக)க் கொண்டுவந்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். பிறகு அவள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அவளிடம் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தர்கள். அப்போது அவள், “நான் உங்களைக் கொல்ல விரும்பினேன்” என்றாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதற்காக, அல்லது எனக்கெதிராக அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்க வில்லை” என்று கூறினார்கள். மக்கள், “அவளை நாங்கள் கொன்றுவிடலாமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்நாக்குச் சதையில் அ(தன் அடையாளத்)தை நான் தொடர்ந்து பார்த்துவந்தேன். (முஸ்லிம்: 4408)
ஆஇஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, ‘என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு பொருத்தமான மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே’ என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘யாரது?’ என்று கேட்டார்கள். வந்தவர், ‘நானே ஸஃத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்’ என்று கூறினார். பிறகு நபி(ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள். (புகாரி: 2885,7231 முஸ்லிம்)
இந்த ஹதீஸ்களை நோக்கும்போது ‘அல்லாஹ் பாதுகாப்பான்’ என்று குர்ஆன் என்ன கூறவருகிறது என்பதை நன்றாக புரியலாம். சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏற்படலாம், அதனால் பாதுகாப்புக்கென்று ஒருவரை எதிர்பார்க்கிறார்கள், அதேநேரம் யூதப் பெண்ணைப் பார்த்து, ‘நீ என்னை கொள்வதற்கு சாட்டப்படவில்லை’ என்றும் கூறியுள்ளார்கள், என்பதோடு, அவளது விஷத்தின் தாக்கமும் நபிகளாருக்கு இருந்துள்ளது. என்றால் நபிகளாரை அவர்களது பணியிலிருந்து தூரமாக்கும் அளவுக்கு தீங்கு செய்யும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பதை புரியலாம்.
- நபியவர்களை ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்று சொல்பவன் அநியாயக்காரன் என்று குர்ஆன் கூறுகிறது, இந்த ஹதீஸோ நபியவர்களை ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்கிறது, இது முரண்பாடல்லவா என்ற வாதமும் ஒன்றாகும்.
وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا
இந்த அநியாயக்காரர்கள் ‘சூனியம் செய்யப்பட்ட மனிதரையே அன்றி நீங்கள் பின்பற்றவில்லை’ என்று கூறுகிறார்கள். (25:8)
உண்மையில் இந்த வசனத்தையும் இதுபோன்ற வசனமான (17:47) யும் கருத்தை வாசித்தாலே புரியலாம், புகாரியில் வரும் ஹதீஸ் இந்த கோணத்தில் வரவில்லை என்பதை. ஏன்! இங்கு இணைவைப்பாளர்கள் நபிகளாரை ‘சூனியம் வைக்கப்பட்டவர்’ என்று கூறி, அவர்களைப் பின்பற்றும் தோழர்களை வழிகெடுக்க முயற்சித்தனர், ஆனால் புகாரியில் வரும் சூனிய ஹதீஸ் நபிகளாருக்கு சூனியம் வைக்க முற்பட்ட யூதர்கள் தோல்வியடைந்து, நபிகளாரின் தூதுத்துவம் பலமடைந்தது என்று சொல்கிறது. எவ்வளவு தெளிவானது. எனவே ‘நீங்கள் பின்பற்றுவது சூனியம் வைக்கப்பட்ட ஒருவரைத்தான்’ என்பதற்கும், ‘நாங்கள் சூனியத்தின் தீங்கிலிருந்து பாதுகாக்கப்பட்ட நபியை பின்பற்றுகிறோம்’ என்பதற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம். இதை புரிந்தவன் ஹதீஸை மறுக்கமுற்படமாட்டான்.
அடுத்து அந்த வசனத்தின் முன்னாலும் பின்னாலும் வந்திருப்பதை உற்றுநோக்கினால் இன்னும் தெளிவாக அதனை புரியலாம். அதாவது; இணைவைப்பாளர்கள் பலவிடயங்களை கூறினார்கள், அதில் ‘அவர் சாப்பிடுகிறார், சந்தைகளில் நடமாடுகிறார், இன்னும் சில’ அவை அனைத்துக்கும் சேர்த்தே நபிகளாருக்கு எதிராக சொல்லப்பட்ட ‘உதாரணங்கள்’ என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே நபிகளாரை ‘உண்ணுபவர், சந்தையில் நடமாடுபவர்’ என்று நாம் சொன்னால் குற்றவாளியாகுவோமா என்றால் இல்லை என்போம், அதனால் தான் நபியவர்களை ‘ஒரு மனிதர்’ என்று கூறுகிறோம். அதே போன்று ‘சூனியம் செய்யப்பட்டவர்’ என்று ஏன் சொல்லப்பட்டது என்பதை சிந்தித்தால் தெளிவாக புரிந்துகொள்ளலாம். விரோதிகள் நபிகளாரை ‘வானவரல்லவே, அவரும் எங்களைப் போன்று சாதாரண மனிதன் என்று கூறி’ மக்களை நபிகளாரைவிட்டு தூரமாக்க முயன்றனர், முஸ்லிம்கள் நாங்கள் ‘அவர் மனிதர் தான், அவரும் சாப்பிடுகிறார், குடிக்கிறார், அவருக்கு இறைசக்தி இல்லை’ என்று கூறி முறையாக நபியவர்களை ஈமான்கொள்ள வைக்கிறோம். அல்லாஹ் கூறுகின்றான்:
وَقَالُوْا مَالِ هٰذَا الرَّسُوْلِ يَاْكُلُ الطَّعَامَ وَيَمْشِىْ فِى الْاَسْوَاقِ ؕ لَوْلَاۤ اُنْزِلَ اِلَيْهِ مَلَكٌ فَيَكُوْنَ مَعَهٗ نَذِيْرًا ۙ اَوْ يُلْقٰٓى اِلَيْهِ كَنْزٌ اَوْ تَكُوْنُ لَهٗ جَنَّةٌ يَّاْكُلُ مِنْهَا ؕ وَقَالَ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا اُنْظُرْ كَيْفَ ضَرَبُوْا لَـكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا يَسْتَطِيْعُوْنَ سَبِيْلاً
மேலும் அவர்கள், “இந்தத் தூதருக்கென்ன? அவர் உணவு உண்ணுகிறார், கடைவீதிகளில் நடக்கிறார், (அல்லாஹ்வுடைய தூதராக அவர் இருந்தால்,) அவர்பால் ஒரு மலக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அப்பொழுது அவர் இவருடனிருந்து அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்பவராக இருப்பார்.(7) அல்லது அவர்பால் ஒரு புதையல் போடப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவர் அதிலிருந்து புசித்துக் கொள்வாரே அத்தகைய ஒரு சோலை அவருக்கு உண்டாகி இருக்க வேண்டாமா? (என்றும் கூறுகிறார்கள்.) அன்றியும் இந்த அநியாயக்காரர்கள், ‘சூனியம் செய்யப்பட்ட மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை’ என்று (விசுவாசிகளிடம்) கூறுகிறார்கள்.(8) உம்மைப்பற்றி அவர்கள் எப்படி உதாரணங்களைக் கூறுகின்றார்கள் என்பதை (நபியே கவனித்து) ப் பார்ப்பீராக! இவர்கள் வழிகெட்டுப் போனார்கள், ஆதலால் நேர்வழிக்கு (வர) அவர்கள் சக்திபெற மாட்டார்கள். (25:7-9)
قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ
(நபியே!) நீர் கூறுவீராக, “நிச்சயமாக, நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், நிச்சயமாக உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீமூலம் அறிவிக்கப்படுகிறது, (18:110)
அடுத்து, மூஸா நபியைப் பார்த்து அநியாயக்காரன் பிர்அவ்ன் ‘மஸ்ஹூரா, சூனியம் வைக்கப்பட்டவர்’ என்று கூறியதாக அல்குர்ஆன் கூறுகிறது. அதுநேரம் நாமும் அல்குர்ஆனை வைத்து ‘மூஸா நபி சூனியத்தைக் கண்டு பயந்தார்கள்‘ ‘அவர்களது கண்ணுக்கு சூனியம் வைக்கப்பட்டது‘ என்று கூறுகிறோமே. அப்படியானால் நாமும் அந்த வசனத்தை மறுப்பதா? அல்லது பிர்அவ்ன் சொன்ன நோக்கம் வேறு, நாம் சொல்லும் நோக்கம் வேறு என்று புரிந்து இரண்டு வசனங்களையும் ஏற்பதா?
فَقَالَ لَهٗ فِرْعَوْنُ اِنِّىْ لَاَظُنُّكَ يٰمُوْسٰى مَسْحُوْرًا
அப்போது பிர்அவ்ன் அவரிடம், “மூஸாவே! நிச்சயமாக நீர் சூனியம் செய்யப்பட்டவரென நான் உம்மை எண்ணுகிறேன்” என்று கூறினான். (17:101)
فَاَوْجَسَ فِىْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰى
ஆகவே, மூஸா தன் மனதில் பயத்தை உணர்ந்தார்.(67) “நீர் பயப்படாதீர், நிச்சயமாக நீர் தான் (இந்த சூனியக்காரர்களை மிகைத்து) மிக மேலோங்கியவர்” என்று நாம் கூறினோம். (20:67)
سَحَرُوْۤا اَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ
அதனால் மனிதர்களுடைய கண்களுக்கு சூனியம் செய்தனர், அவர்களைத் திடுக்கிடும்படியும் செய்துவிட்டனர், (7:116)
எனவே இந்த வசனங்களை புரிவது போன்று, அந்த ஹதீஸை அந்த வசனத்தோடு சேர்த்து நோக்கினால் அழகாக புரிந்து இரண்டையும் ஏற்கலாம்.
அடுத்து முக்கிய விடயம் என்னவென்றால், நபிகளாரை நோக்கி வைக்கப்பட்ட பல அடைமொழிகளை மருத்துரைத்த அல்லாஹ் ‘மஸ்ஹூரா, சூனியம் செய்யப்பட்டவர்’ என்பதை நேரடியாக மறுக்கவில்லை.
فَذَكِّرْ فَمَاۤ اَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَّلَا مَجْنُوْنٍؕ اَمْ يَقُوْلُوْنَ شَاعِرٌ نَّتَـرَبَّصُ بِهٖ رَيْبَ الْمَنُوْنِ
ஆகவே, (நபியே! அவர்களுக்கு நினைவுபடுத்துவீராக! உமது இரட்சகனின் அருளால் நீர் குறிகாரரல்லர், பைத்திக்காரருமல்லர்.(29) அல்லது ஒரு கவிஞர் தாம், என்று அவர்கள் கூறுகின்றனரா? (52:29,30)
وَمَا عَلَّمْنٰهُ الشِّعْرَ وَمَا يَنْۢبَغِىْ لَهٗؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ وَّقُرْاٰنٌ مُّبِيْنٌۙ
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதையைக் கற்றுக் கொடுக்கவுமில்லை, அது அவருக்கு அவசியமானதுமல்ல, (36:69)
مَاۤ اَنْتَ بِـنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍۚ
(நபியே)! உமதிரட்சகனின் அருளால் நீர் பைத்தியக்காரரல்லர். (68:2)
اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰٮهُؕ قُلْ اِنِ افْتَـرَيْتُهٗ فَلَا تَمْلِكُوْنَ لِىْ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ
அல்லது, இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார் என்று அவர்கள் கூறுகின்றனரா? நீர் கூறுவீராக: “இதனை நான் இட்டுகட்டியிருந்தால் அல்லாஹ்விடமிருந்து (உள்ள தண்டனையில்) எதையும் (தடுத்து என்னைக்காப்பாற்றிட) நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள், (46:8)
எனவே அல்குர்ஆனில் ‘அவர் சூனியம் செய்யப்பட்டவரல்ல’ என்று நேரடியாக வந்து ஹதீஸில் இப்படி வந்திருந்தாள் கூட முரண் என்பதில் நியாயமிருக்கலாம். அப்படி எந்த முகாந்திரமும் இல்லாத போது தன் விளக்கங்களுக்கு முரண் என்பதற்காக ஹதீஸை மறுப்பது எந்தளவு நியாயமோ!!. அல்லாஹ் போதுமானவன்.
சூனியம் இருக்கிறது, அல்லாஹ் நாடினால் தாக்கமும் ஏற்படும் என்பதை நிரூபிக்கும் சான்றுகள்;
وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ وَمَآ اُنْزِلَ عَلَى الْمَلَـکَيْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَؕ وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْؕ فَيَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا يُفَرِّقُوْنَ بِهٖ بَيْنَ الْمَرْءِ وَ زَوْجِهٖؕ وَمَا هُمْ بِضَآرِّيْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِؕ وَيَتَعَلَّمُوْنَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْؕ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰٮهُ مَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍؕ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْؕ لَوْ کَانُوْا يَعْلَمُوْنَ
எனினும் ஷைத்தான்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சூனியத்தையும் பாபிலோன் நகரினில் ஹாருத், மாருத் என்னும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்ததாகக் கூறி பலவற்றையும் மனிதர்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்தார்கள். மேலும், அவ்விருவரும் “நாங்கள் சோதனையாக இருக்கிறோம், ஆதலால் இதைக் கற்று நீ காபிராகி விட வேண்டாம்” என்று கூறும்வரை, அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை, ஆகவே, கணவனுக்கும், மனைவிக்குமிடையில் எதைக்கொண்டு பிரிப்பார்களோ, அதை அவ்விருவரிடமிருந்து கற்றுக் கொள்வார்கள்; மேலும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அதைக்கொண்டு அவர்கள் ஒருவருக்குமே தீங்கிழைக்கக் கூடியவர்களாக இல்லை. அன்றியும், அவர்களுக்கு இடரளிப்பதும், அவர்களுக்கு பயனளிக்காததுமானதை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். இன்னும், அ(ச்சூனியத்)தை எவர் விலைக்கு வாங்கிக் கொண்டாரோ அவருக்கு மறுமையில் எந்த பாக்கியமுமில்லை என்பதைத் திட்டமாக அவர்கள் அறிந்திருக்கின்றனர். மேலும், அவர்கள் அறிந்து கொள்ளக்கூடியவர்களானால் எதற்குப்பகரமாக தங்களையே அவர்கள் விற்று விட்டார்களோ அது மிகக் கெட்டது. (2:102)
இந்த வசனத்தை நோக்கினால்; ஷைதான்கள் சூனியத்தை கற்றுக்கொடுத்தார்கள், அவர்களும் காபிர்களாகினர், கற்றவரும் காபிராவார் என்ற எச்சரிக்கை, அல்லாஹ்வின் அனுமதியின்றி தீங்குசெய்யமுடியாது, அதனை கற்றுக்கொண்டவர்களுக்கு மறுமைப் பாக்கியம் இல்லை. இதனையெல்லாம் இல்லாத ஒன்றுக்கு எச்சரிக்கையாக அல்லாஹ் ஒரு போதும் சொல்லமாட்டான். எனவே சூனியம் இருக்கிறது என்று நம்புவதோடு அதிலிருந்து ஒதுங்கி வாழவேண்டும். விபச்சாரம் இருக்கிறது அதைவிட்டு ஒதுங்க வேண்டும் என்பது போல.
فَقَذَفْنٰهَا فَكَذٰلِكَ اَلْقَى السَّامِرِىُّ ۙ فَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ
ஆகவே, அலங்கார (ஆபரண)ங்களை நாங்கள் (நெருப்பில்) எறிந்தோம், அவ்வாறே சாமிரீயும் (தன்னிடமிருந்தவற்றை) எறிந்தான்.(87) “பின்னர், அவன் அவர்களுக்காக ஒரு உடல் கட்டமைப்புள்ள காளைக்கன்றை வெளியாக்கினான், அதற்கு சப்தமுமிருந்தது, (20:87)
சாமிரியின் இந்த செயலால் மக்கள் சோதிக்கப்பட்டதை, அல்லாஹ் சோதித்ததாக குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் என்றால், அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் சூனியம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் அடிப்படை. மனிதர்களது நம்பிக்கையை சோதிக்க அல்லாஹ் வைத்திருப்பவற்றில் சூனியமும் ஒன்றே! அல்லாஹ் கூறுகின்றான்:
قَالَ فَاِنَّا قَدْ فَتَـنَّا قَوْمَكَ مِنْۢ بَعْدِكَ وَاَضَلَّهُمُ السَّامِرِىُّ
அதற்கு, “நீர் வந்த பின்னர் நிச்சயமாக நாம் உம்முடைய சமூகத்தாரை ஒரு சோதனைக்குள்ளாக்கினோம், சாமிரீ என்பவன் அவர்களை வழி கெடுத்துவிட்டான்” என்று கூறினான். (20:85)
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்’ என்று கூறிய நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், ..’ என்று கூறினார்கள். (புகாரி: 2766,5764,6857, முஸ்லிம்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தினந்தோறும் காலையில் ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.(புகாரி: 5445,5768,முஸ்லிம்)
சூனியத்தை ஏற்பதில் நபித்தோழர்கள்:
உமர் ரலி அவர்கள் ‘சூனியக்காரர்களை கொள்ளுமாறு ஏவினார்கள், மூன்றுபேர் கொலைசெய்யப்பட்டார்கள். (அஹ்மத்:1657, அபூதாவூத்:3043, நம்பகமான அறிவிப்பாளர் தொடர்)
ஸூரதுல் பகராவின் நூற்றி இரண்டாவது வசனத்திற்கு விளக்கம் கூறிய இப்னு அப்பாஸ் ரலி அவர்கள்: ஷைதான்கள் ஸுலைமான் நபி சோதிக்கப்பட்ட காலகட்டத்தில் சூனியத்தையும், குப்ரையும் எழுதிக்கொடுத்தார்கள்.’ என்று கூறினார்கள். (நஸாஇ அல்குப்ரா:10926, தப்ஸீருத் தபரீ:1645, தப்ஸீர் இப்னி அபீஹாதிம்:989, 984, நம்பகமான அறிவிப்பாளர் தொடர்)
ஆஇஷா ரலி அவர்கள் தனக்கு சூனியம் செய்த அடிமையை கொடுமை புரியும் ஒரு நாட்டுப்புற அரபிக்கு விற்பனை செய்துவிட்டு, அந்த பணத்தைக் கொண்டு ஒரு அடிமையை வாங்கி உரிமைவிட்டார்கள். (முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்: 18749, 16667, நம்பகமான அறிவிப்பாளர் தொடர்)
ஹப்ஸா ரலி அவர்கள் தனக்கு சூனியம் செய்ததாக ஏற்றுக்கொண்ட ஒரு அடிமைப் பெண்ணை கொலை செய்யுமாறு கட்டளையிட்டார்கள். (முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்:18747, முஸன்னப் இப்னி அபீ ஷைபா: 27912, தப்ரானி முஃஜமுல் கபீர்:303, நம்பகமான அறிவிப்பாளர் தொடர்)
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அவர்கள் கூறினாரகள்: .. .. எனவே, முஸ்லிம்கள் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில், அவர்களிடம், ‘யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்துவிட்டார்கள். எனவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது’ எனக் கூறப்பட்டு வந்தது. (ஸஹீஹுல் புகாரி: 5469)
புகாரியில் வரும் இந்த பகுதியை அறிவிக்கும் ‘இஸ்ஹாக் பின் நஸ்ர்’ அவர்கள் இப்னு ஹஜர் இமாமிடத்தில் ‘ஸதூக்’ எனும் தரத்தில் உள்ளவராவார். அவரைத்தொட்டு அறிவித்திருப்பது புகாரி இமாம் மாத்திரமே, அவரது ஆசான்களாக ஆறு நபர்கள் மாத்திரமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். (அல்லாஹு அஃலம்))
எனவே குர்ஆன், சுன்னாவின் மூலம் தரிபட்ட ஒன்றை நபித்தோழர்கள் புரிந்துகொண்ட விதத்தில் நாமும் புரிந்தால் நேர்வழி பெறலாம். அதற்கு மாறாக இஸ்லாமிய வரலாற்றறில் முஃதஸிலாக்களையும், அவர்களை போன்று தன் சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்களையும் பின்பற்றி முடிவுகள் எடுக்க ஆரம்பித்தால் வழிகெட்டு போக வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் புரிந்து செயற்படுவோம் அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக!!!
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ