سُورَةُ الْمَسَد
ஸூரதுல் லஹப்
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!
பெயர்: ஸூரதுல் மஸத், லஹப் (ஜுவாலை)
இறங்கிய காலப்பகுதி : மக்கீ
வசனங்கள்: 5
ஸபபுன் னுஸூல் (இறங்கிய காரணம்) :
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத்தாக்கு நோக்கிக் கிளம்பிச் சென்று (அங்குள்ள ‘ஸபா’ எனும்) அந்த மலை மீதேறி, ‘யா ஸபாஹா! என்று கூவியழைத்தார்கள். உடனே, அவர்களிடம் குறைஷியர்கள் குழுமினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களிடம் ‘காலையிலோ மாலையிலோ உங்களை நோக்கிப் பகைவர்கள் (தாக்க) வருகிறார்கள்’ என்று தகவல் சொன்னால் என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?,!’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியானால், கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என உங்களை எச்சரிக்கை செய்கிறேன்’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூ லஹப், ‘உனக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகத்தான் எங்களை ஒன்று திரட்டினாயா?’ என்று கேட்டான். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், ‘அபூ லஹபின் இரண்டு கரங்கள் அழியட்டும்’ என்று தொடங்கும் (111 வது) அத்தியாயத்தை அருளினான். (புகாரி: 4972, 1394, முஸ்லிம்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَبَّتْ يَدَاۤ اَبِىْ لَهَبٍ وَّتَبَّؕ
تَبَّتْ அது/அவள் அழிந்தது/தாள், يَدَاۤن இரு கரங்கள், و இன்னும்/மேலும், تَبَّ அவன் அழிந்தான்,
அபூலஹபின் இரு கைகள் நாசமடைக! அவனும் நாசமந்தான்! (111:1)
அபூலஹப் நபி ஸல் அவர்களின் பெரிய தந்தைகளுள் ஒருவராவார், அவனது பெயர் அப்துல் உஸ்ஸா பின் அப்தில் முத்தலிப் ஆகும், அவனது புனைப் பெயர் அபூ உத்பா என்பதாகும், அவன் அபூ லஹப் என்று அழைக்கப்பட்டது அவனது முகக் கவர்ச்சியின் காரணத்தாலாகும். நபியவர்களுக்கு அதிக நோவினை செய்யக்கூடியவனாகவும், விரோதிக்கக்கூடியவனாகவும், கேவலப்படுத்தக்கூடியவனாகவும் இருந்தான். நபிகளாரின் முதல் பிரச்சாரத்தின் போதே எதிர்த்ததனால் இந்த ஸூரா இறக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டான்.
பக்ருதீனுர் ராஸீ அவர்கள் கூறும் போது; {التَّبَابٍ} என்றால் ‘அழிந்துபோகுதல்’ என்று கூறினார்கள், அதற்கு நிகரான வசனமே அல்லாஹ் கூறும் வசனம்:
وَمَا كَيْدُ فِرْعَوْنَ اِلَّا فِىْ تَبَابٍ
பிர்அவ்னுடைய சூழ்ச்சி அழிவிலேயே தவிர இல்லை. (40:37)
ஏனெனில் அபூலஹப் தன்னைத்தானே தனது மோசமான கொள்கையாலும், செயலாலும் அழித்துக்கொண்டான். அல்லாஹ் கூறுகின்றான்:
فَمَاۤ اَغْنَتْ عَنْهُمْ اٰلِهَتُهُمُ الَّتِىْ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مِنْ شَىْءٍ لَّمَّا جَآءَ اَمْرُ رَبِّكَؕ وَمَا زَادُوْهُمْ غَيْرَ تَتْبِيْبٍ
எனவே, உமதிரட்சகனின் கட்டளை (அவர்களை அழித்துவிட) வந்த சமயத்தில், அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்து (வணங்கி)க் கொண்டிருந்த அவர்களின் வணக்கத்திற்குறியவர்கள் அவர்களுக்கு எவ்விதப் பயனளிக்கவில்லை, அன்றியும், நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தவில்லை. (11:101) (அல்வாஉல் பயான்)
எனவே குர்ஆனின் ஆதாரத்தைக்கொண்டே அழிவு, நஷ்டமடைதல் தான் நாடப்பட்டுள்ளது என்றால், ‘இரு கைகளும் அழியட்டும் என்று வந்துள்ளதன் அருத்தம் என்ன?’ என்றால், அதற்கு பதில்: ‘அது ஒரு பகுதியைக் கூறி, முழுவதையும் நாடும் இலக்கிய விடயமாகும், அது அல்லாஹ் கூறும்:
كَلَّا لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ ۙ لَنَسْفَعًۢا بِالنَّاصِيَةِۙ نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
அவ்வாறல்ல! இத்தீய செயலிலிருந்து அவன் விலகிக் கொள்ளாவிடில், நிச்சயமாக தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து நாம் இழுப்போம். (96:15)
என்ற வசனத்தைப் போன்றதாகும், ஏனெனில் பொய்யுரைத்தது அந்த முன்னெற்றி ரோமத்திற்குரிய மனிதனே.
அடுத்து இது போன்ற இலக்கிய பாவனைக்கு பாவிக்கப்படும் பகுதிக்கு கருத்தளவில் அதிக தொடர்பு இருக்கவேண்டும். பொய் சொல்லுதல் என்பது முகத்தை கருகச்செய்து, முன்நெற்றி ரோமத்தை இழிவடைய செய்யும், மாற்றமாக உண்மையுரைப்பது முகத்தை வெண்மையாக்கி, முன்நெற்றி ரோமத்தை கண்ணியப்படுத்தும், எனவே கையை விடவும் பொய் முன்நெற்றி ரோமத்துடன் அதிக சம்பந்தப்படுமென்பதால் அங்கு பொய்யை முன்நெற்றி ரோமத்தோடு அல்லாஹ் சேர்த்தான், அதேநேரம், அழிவு, நஷ்டம் என்று வரும்போது அது பெரும்பாலும் உடலுறுப்புக்களோடு சம்மந்தப்படும், அதிலும் கை அதிகம் தொடர்புடையதாக இருக்கும், எனவே அழிவு கையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கையயைக் கொண்டு நாடப்படுவது அபூ லஹப் என்ற மனிதனே என்பது பின்னால் கூறப்பட்டுள்ள {وَتَبَّ அவன் அழிந்துவிட்டான்} என்ற ஆண்பால் வாசகத்தின் மூலம் உறுதியாகிறது.
{تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ) என்பதற்கு நாசமாகட்டும் என்று பிரார்த்தனை அருத்தம் என்றாலும், அல்லது நாசமாகிவிட்டான் என்ற தகவல் தரும் அருத்தம் கொடுத்தாலும் சரியே, அது இரண்டுக்கும் இடம்பாடான சொல்லே. ஆனாலும் பின்னால் வரும் {وَتَبَّ} என்பது ‘அவன் அழிந்து நாசமாகிவிட்டான்’ என்ற தகவல் தரும் வசன நடையாகும். எனவே முதல் வசனம் ‘அழிந்து நாசமாகட்டும்’ என்ற பிரார்த்தனை அறுத்தத்திற்கே பொருத்தமாகும். பிறகு இரண்டாவதாக அந்த பிரார்த்தனையை உண்மைப்படுத்துவதற்காக வந்துள்ளது. இது அல்லாஹ் கூறிய:
قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗؕ
(காபிரான) மனிதன் சபிக்கப்படுவானாக! (நன்றி கெட்டு) அவனை நிராகரிக்கிறவனாக இருக்கச் செய்தது எது? (80:17)
என்ற வசனம் போன்றதாகும். இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் {وَقَدْ تَبَّ} (‘நிச்சயமாக அது அழிந்துவிட்டது’ என்று (தகவல் அருத்தம் தரும் விதத்தில் ஓதியதாக) ஒரு கிறாஅத் வந்துள்ளது. (அல்வாஉல் பயான்)
مَاۤ اَغْنٰى عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَؕ
مَاۤ اَغْنٰى பலனளிக்கவில்லை, عَنْ விட்டும்/தொட்டும்/பற்றி, هُ அவனை/அவனது, مَالُه அவனுடைய செல்வம், مَا எது/ஒன்று/என்ன, كَسَبَ அவன் சம்பாதித்தான்
அவனுடைய செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயனளிக்கவில்லை. (111:2)
{وَمَا كَسَبَ} வமா கஸப் என்றால் அவன் உழைத்தது என்று அருத்தம், அதனைக் கொண்டு அபூலஹபின் பிள்ளை நாடப்பட்டுள்ளது என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள். அதுபோன்ற கருத்தே ஆஇஷா ரலி, முஜாஹித், அதாஃ, இப்னு ஸீரீன் போன்றவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்னு கஸீர்)
இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள், “நபி ஸல் அவர்கள் தன் சமூகத்தை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தபோது அபூலஹப்; ‘எனது சகோதரனின் மகன் சொல்வது உண்மையாக இருந்தால், நான் மறுமையில் எனது சொத்தையும் பிள்ளையையும் தண்டனைக்கு பகரமாக கொடுப்பேன்’ என்று கூறியபோது {مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ} என்ற வசனம் இறங்கியது.” என்று கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்னு கஸீர்)
இந்த வசனத்திற்கு இரண்டு விதத்தில் அருத்தம் சொல்லலாம், “அவனது சொத்தும், அவன் உழைத்ததும் அவனுக்கு பயனளித்ததா?” இது கேள்வி கேட்கும் தோரணையில் மறுப்பதாகும், அல்லது “அவனது சொத்தும், அவன் உழைத்ததும் அவனுக்கு பயனளிக்கவில்லை” என்று நிராகரித்து, அவனது பணம் அவனுக்கு உதவவில்லை என்று குறித்து சொல்லலாம். {وَمَا كَسَبَ} அவன் உழைத்தது என்பதற்கு, ‘அவனது சொத்தில் அனந்தரமாக சேர்ந்த சொத்து‘ என்றும், அல்லது ‘அவனுக்கு இந்த அழிவைக் கொண்டுவந்த (நபிகளாரை எதிர்த்த) அந்த செயல்‘ என்றும் கூறப்பட்டுள்ளது. என்றால்; (அவனது சொத்தும், அவன் நபிகளாருக்கு எதிராக செயற்பட்டதும் அவனுக்கு பயனளிக்க வில்லை’ அல்லது ‘அவனது அனந்தரமாக கிடைத்த சொத்தும், உழைத்த சொத்தும் அவனுக்கு பயனளிக்கவில்லை’ என்பது அருத்தம். இந்த வசனம் அல்லாஹ் கூறும்:
وَمَا يُغْنِىْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰىؕ
மேலும், அவன் (நரகத்தில்) வீழ்ந்து விட்டால், அவனுடைய செல்வம் அவனுக்கு பயனளிக்காது. (92:11)
என்ற வசனத்திற்கு நிகரானதாகும். (அல்வாஉல் பயான்)
இதே போன்று “மறுமையில் பாவிகளுக்கு சொத்துசெல்வம் பயனளிக்காது” என்று அருத்தம் தரும் வசனங்கள் ஏராளம், அவற்றுள் சில; அல்லாஹ் கூறுகின்றான்:
الَّذِىْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ ۙ يَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ كَلَّا لَيُنْۢبَذَنَّ فِى الْحُطَمَةِؗۖ
இத்தகையவன் பொருளைச் சேகரித்து அதனை எண்ணி வைத்துக்கொண்டு, நிச்சயமாக, தன் பொருள் தன்னை (என்றென்னும் உலகில்) நிலைத்திருக்கச் செய்யுமென்று எண்ணுகிறான். அவ்வாறன்று! (அல்லாஹ்வின் மீது சத்தியமாக) ஹூதமாவில் அவன் எறியப்படுவான். (104:2-4)
قَدْ قَالَهَا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَمَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ
இவர்களுக்கு முன்னிருந்தோரும் இதனைத் திட்டமாகக் கூறிக் கொண்டிருந்தார்கள், பின்னர், அவர்கள் சம்பாதித்தது அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (39:50)
يٰلَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ ۚ مَاۤ اَغْنٰى عَنِّىْ مَالِيَهْۚ هَلَكَ عَنِّىْ سُلْطٰنِيَهْۚ
“அதுவே முடிவாக இருந்திருக்க வேண்டுமே!” “என்னுடைய செல்வம் எனக்கு பயனளிக்கவில்லையே!” “என்னுடைய அதிகாரமும் என்னைவிட்டு அழிந்துவிட்டதே!” (என்று புலம்புவான்) (69:27)
قَالُوْا مَاۤ اَغْنٰى عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ
“உங்களின் கூட்டமும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும், உங்களை விட்டும் எதையும் பயனளிக்கவில்லையே” எனக் கூறுவார்கள். (7:48)
وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَۙ
மேலும், “(மனிதர்கள்) எழுப்பப்படும், செல்வமும், பிள்ளைகளும் பயனளிக்காத நாளில் நீ என்னை இழிவு படுத்தாதிருப்பாயாக!”
(26:87,88)
وَمَاۤ اَمْوَالُـكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ بِالَّتِىْ تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفٰٓى
உங்களுடைய செல்வங்களோ, மக்களோ உங்களை நம்மிடத்தில் சமீபமாக நெருக்கிவைப்பவர்கள் அல்லர். (34:37)
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْئًا
நிச்சயமாக நிராகரிக்கின்றார்களே அத்தகையோர் அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய பிள்ளைகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து யாதொன்றையும் அவர்களைவிட்டும் ஒரு போதும் தேவையறச் செய்து விடாது. (3:10,116)
فَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْــٴًـــا
எனவே, அவர்களுக்கு இழிவுடைய வேதனையுண்டு. (16) அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய மக்களும், அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து யாதொன்றையும், அவர்களை விட்டுத் தடுத்துவிடவே மாட்டாது, (58:16,17)
سَيَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍ
سَيَصْلٰى பிறகு நுழைவான், نَارًا நெருப்பு, ذَاتَ உடையது (ஒரு பெயர் சொல்லோடு சேர்ந்து வரும், لَهَبٍ ஜுவாலை
மறுமையில் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவன் பிரவேசிப்பான். (111:3)
{ذَاتَ لَهَبٍ} தாத லஹப் என்றால் நெருப்பின் அனல், ஜுவாலை, கடுமையாக கரித்துவிடக்கூடியது என்று அருத்தம்.
وَّامْرَاَ تُهٗ ؕ حَمَّالَةَ الْحَطَبِۚ
وَّامْرَاَ تُه இன்னும் அவனுடைய மனைவி, حَمَّالَةَ மிகவும் சுமப்பவள், الْحَطَبِ விறகு
விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியும்-அந்நரகில் நுழைவாள்). (111:4)
புகாரி இமாவார்கள் கூறும் போது; {حَمَّالَةُ الحَطَبِ} விறகு சுமப்பவள் என்றால் கோள் சொல்லி திரிபவள் என்று அருத்தம், கழுத்தில் கயிறு இருக்கும் என்றால் ‘விறகு சுமப்பதற்காக கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு, அது மறுமையில் நெருப்பாலான சங்கிலியாக இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. (புகாரி: ஸூரா மஸத் விளக்க குறிப்பு)
{حَمَّالَةَ الْحَطَبِ} என்றால் ‘கோள் சொல்லி திரிபவள்’ என்று முஜாஹித், இக்ரிமா, கதாதா போன்றவர்கள் கூறினார்கள், அதனையே இப்னு ஜரீர் இமாமவர்கள் வரவேற்றார்கள், இப்னு அப்பாஸ் ரலி, ளஹ்ஹாக், இப்னு ஸைத் போன்றவர்கள்; ‘நபியவர்களின் வழியில் முற்களை வீசிவிடுபவளாக இருந்தால்’ என்று கூறினர். ஸஈதுப்னுல் முஸய்யப் அவர்கள்; ‘அவளிடம் உயர்ரக மாலை ஒன்று இருந்தது, அதனை விற்று முஹம்மதுக்கு எதிராக பாவிப்பேன் என்று கூறினாள், எனவே அதற்கு பகரமாக அல்லாஹ் நரக நெருப்பால் ஒரு மாலையை அவள் கழுத்தில் போடுவான்.’ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)
அவனின் மனைவி குறைஷி பெண்களின் தலைவிகளில் ஒருத்தியாக இருந்தாள், அவளது பெயர் அர்வா பின்த் ஹர்ப் பின் உமையா என்பதாகும், அவளது புனைப் பெயர் உம்மு ஜெமீல், அவள் அபூ ஸுப்யான் அவர்களின் சகோதரியாவாள். இஸ்லாத்தை, நபியவர்களை எதிர்ப்பதில் தன் கணவனுக்கு துணையாக இருந்தவள், அதன் காரணமாக நரகிலும் அவனுக்கு துணையாக இருப்பாள், அதன் காரணமாகவே விறகு சுமப்பவள், கழுத்தில் முறுக்கேறிய கயிறு இருக்கும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளாள், என்றால் விரகை சுமந்து தன் கணவன் மீது போடுவாள், அவனது தண்டனை அதிகரிப்பதற்காக, அவள் அதற்கு தயாராகவே இருப்பாள். (இப்னு கஸீர்)
فِىْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ
فِىْ லே/ல், جِيْدِهَا அவளுடைய கழுத்து, حَبْلٌ கயிறு, مِّنْ நின்றும்/இருந்து, مَّسَدٍ ஈச்சம் பாளை
அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு தான் (இருக்கும், அதனால் அவளும் அழிவாள்). (111:5)
அஸ்மாஃ பின்த் அபீபக்ர் ரலி அவர்கள் கூறினார்கள்: {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ} என்ற அத்தியாயம் இறங்கியபோது ஒரு கண் குருடியான உம்மு ஜெமீல் பின்த் ஹர்ப் ‘{مُذَممًا أبَينَا ودينَه قَلَينا وَأمْرَه عَصَينا} கீழ்த்தரமானவனை மறுத்தோம், அவனது மார்க்கத்தை வெறுத்தோம், அவனது கட்டளைக்கு மாறுசெய்தோம்’ என்று சத்தத்தை உயர்த்தியவளாக, கையில் ஒரு கல்லையும் வைத்துக்கொண்டு வந்தால், நபி ஸல் அவர்களுடன் அபூ பக்ர் ரலி அவர்கள் வீற்றிருக்க, அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்தார்கள், அவளைக் கண்ட அபூ பக்ர் ரலி அவர்கள்; ‘அல்லாஹ்வின் தூதரே அவள் வருகிறாள், அவள் உங்களை கண்டுவிடுவதை நான் பயப்படுகிறேன்.’ என்று கூற, நபியவர்கள்: ‘அவள் என்னை காணமாட்டாள்,’ என்று கூறி, நபியவர்கள் எந்த வசனம் கொண்டு பாதுகாப்பு பெற்றார்களோ அந்த வசனமான ” وَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَّسْتُوْرًا ” மேலும், (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கும், மறுமையை நம்பிக்கை கொள்ளாதோருக்குமிடையில் மறைக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு திரையை நாம் ஆக்கி விடுகிறோம். (17:45) என்ற வசனத்தை’ அல்லாஹ் கூறியதுபோன்று ஓதிக்காட்டினார்கள். அங்கு வந்த அவள் அபூ பக்ர் ரலி அவர்களுக்கு பக்கத்தில் நின்றாள், நபியவர்களை காணவில்லை, அவள், ‘அபூ பக்ரே உமது தோழர் என்னை வசைபாடியுள்ளாரே?’ என்று கூற, அபூ பக்ர் அவர்கள்; இல்லை, இந்த ஆலயத்தின் இறைவன் மீது சத்தியமாக அவர் உன்னை வசைபாடவில்லை.’ என்று கூற, அவள், ‘குறைஷிகளுக்கு நானே அவர்களது தலைவனின் மகள் என்பது தெரியும்’ என்று கூறியவளாக திரும்பிப்போய்விட்டால். அறிவிப்பாளர் வலீத் அவர்கள் கூறினார்கள்: உம்மு ஜெமீல் கஃபாவை வளம் வரும்போது அவளது போர்வையில் தடுக்கி விழுந்தால், அபோது அவள்; ‘கேவலப்பட்டவன் நாசமாகட்டும்.’ என்று கூற, அப்துல் முத்தலிபின் மகள் உம்மு ஹகீம் அவர்கள்: ‘{ إِنِّي لَحَصَانٌ فَمَا أُكَلَّمُ، وَثَقَافٌ فَمَا أُعَلَّمُ، فَكِلْتَانَا مِنْ بَنِي الْعَمِّ قُرَيْشٍ بَعْدُ أَعْلَمُ} நிச்சயமாக நான் பேணுதலானவள், எனக்கு பதிலளிக்கப்படமாட்டாது, கற்றுக்கொடுக்கப்பட தேவையற்ற அறிவாளி, நாங்கள் இருவரும் சாச்சா பெரியப்பா பிள்ளைகள், குறைஷிகளுக்கு தெரியும் தலைவர் யாரென்று’ என்று கூறி மறுப்பு கொடுத்தார்கள். (முஸ்னதுல் ஹுமைதி: 325, முஸ்தத்ரகுல் ஹாகிம்: 3376, நம்பகமான அறிவிப்பாளர் தொடர், தஹபீ இமாம் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள். ‘முஹம்மத் பின் முஸ்லிம் பின் தத்ருஸ்’ என்பவர் பற்றி சிலர் ‘பலவீனமானவர்’ என்று கூறியுள்ளனர். (தஹ்தீபுல் கமால்)
முஸ்னதுல் பஸ்ஸாரில் : (15) அபூ பக்ர் ரலி அவர்கள்: ‘கஃபாவின் இறைவன் மீது சத்தியமாக, அவர் கவிதை படிக்கவுமில்லை, அவர் மொழியவும் மாட்டார்.’ என்று கூற, அவள்: ‘நீங்கள் உண்மை சொல்பவரே’ என்று கூறிவிட்டு திரும்பி சென்றபோது, அபூ பக்ர் ரலி அவர்கள்; ‘நபியே உங்களை அவள் காணவில்லை.’ என்று கூற, நபியவர்கள்; ‘அவள் திரும்பிச்செல்லும் வரை ஒரு வானவர் என்னை மறைத்துக்கொண்டே இருந்தார்.’ என்று கூறியதாக பதியப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரிலும் சிலவிமர்சனங்கள் இருக்கின்றன. (அல்லாஹு அஃலம்)
ஒரு சில அறிஞர்கள் {فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ} என்ற வசனத்திற்கு, ‘அவளது கழுத்தில் நெருப்பாலான ஒரு கயிறு இருக்கும், இதன் மூலம் அவள் நரக விளிம்புக்கு தூக்கப்பட்டு, அதன் ஆழத்திற்கு வீசப்பட்டுக்கொண்டே இருப்பாள்.’ என்று கூறினர். (இப்னு கஸீர்)
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் இரண்டு முக்கிய குறிப்புக்களை இந்த ஸூராவுக்கு கீழால் குறிப்பிட்டார்கள்;
ஒன்று; நபி ஸல் அவர்கள் தனது சமூகத்தாருடன் மென்மையாகவும், இறக்கத்துடனுமே நடந்துகொண்டார்கள், அப்படியிருக்க இந்த துஅவை தன் பெரிய தந்தைக்கு எதிராக எப்படி கேட்க முடிந்தது? என்றால்; ‘அதற்கு பதிலாக:
“நபியவர்கள் அவர்களோடு மென்மை காட்டியது அவர்கள் இஸ்லாத்தை ஏற்பார்கள் என்று ஆதரவு வைத்தபோதுதான், அதிலிருந்து நம்பிக்கை இழந்தபோதே இந்த துஆவை கேட்கவேண்டி ஏற்பட்டது. இது இப்ராஹீம் நபியவர்கள் தன் தந்தையோடு நடந்துகொண்டதை போன்றதாகும்.
ஆரம்ப கட்டம் மென்மையாக நடந்தார்கள், அல்லாஹ் கூறுகின்றான்:
اِذْ قَالَ لِاَبِيْهِ يٰۤـاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَ لَا يُغْنِىْ عَنْكَ شَيْــٴًـــا يٰۤـاَبَتِ اِنِّىْ قَدْ جَآءَنِىْ مِنَ الْعِلْمِ مَا لَمْ يَاْتِكَ فَاتَّبِعْنِىْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِيًّا يٰۤـاَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطٰنَ ؕ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِيًّا
அவர் தன் தந்தையிடம், “என் அருமை தந்தையே! செவியேற்காத, பார்க்காத உம்மைவிட்டும் எதையும் தடுக்காததை நீர் ஏன் வணங்குகிறீர்? (42), என் அருமை தந்தையே! நிச்சயமாக, அறிவிலிருந்து உமக்கு வந்திராதது திட்டமாக என்னிடம் வந்திருக்கிறது , ஆகவே நீர் என்னைப் பின்பற்றுவீராக! நான் உமக்கு நேர்வழியைக் காட்டுவேன் (43), “என் அருமை தந்தையே! ஷைத்தானை நீர் வணங்காதீர், நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு மாறு செய்பவனாக இருக்கிறான் (என்று கூறியதை நினைவு கூறுவீராக! (19:42-44)
அவர் நேர்வழி பெறுவதில் நம்பிக்கை இழந்தபோது கடுமையாக நடந்து கொண்டார்கள், அல்லாஹ் கூறுகின்றான்:
فَلَمَّا تَبَيَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ
பின்னர் நிச்சயமாக (அவருடைய தந்தையாகிய) அவர் அல்லாஹ்வுக்கு விரோதி எனத் தெளிவாகிவிட்ட பொழுது அதில் (மன்னிப்பு தேடுவதில்) இருந்து அவர் விலகிக் கொண்டார், (9:114)””
என்று கூறலாம்.
இரண்டாவது; “”கைகள் நாசமாகட்டும், அவன் நாசமாகிவிட்டான்’ என்று ஏன் இரண்டு தடவைகள் வந்துள்ளன? ஒரு தடவையே பொதுமல்லவா?”” என்று கேட்டால் அதற்கு பதிலாக:
”அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்! முதல் வசனம் நாசமாகட்டும் என்ற அடிப்படையில், பிராத்தனை படி நடக்கலாம், அல்லது அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்காமல் இருக்கலாம் என்ற இரண்டு அருத்தங்களுக்கு பொருத்தமாக இருப்பதால், அல்லது கேவலப்படுத்துவதே நோக்கம் என்று புரியலாம் என்றிருப்பதால், {وَتَبَّ} அவன் நாசமாகிவிட்டான் என்று சந்தேகத்திற்கு இடமின்றி அது நடக்கும் என்ற கருத்தை உறுதிப்படுத்த மீண்டு வந்துள்ளது. நிச்சயமாக அவன் அல்லாஹ்வின் “நரகவாதி” என்ற வார்த்தை விதிக்கப்பட்ட ஒருவனாவான். அதுவே வரலாற்றில் நடந்ததும். அல்லாஹு அஃலம்! அல்லாஹ் கூறுகின்றான்:
وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَّعَدْلاً ؕ لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖ ۚ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
மேலும், (நபியே!) உமதிரட்சகனின் வார்த்தைகள் உண்மையாலும் நீதத்தாலும் பூர்த்தியாகிவிட்டன, அவனுடைய வாக்குகளை மாற்றுவோர் எவருமில்லை. (6:115)
كَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِيْنَ فَسَقُوْۤا اَنَّهُمْ لَا يُؤْمِنُوْنَ
“இவ்வாறே பாவம் செய்பவர்கள் மீது நிச்சயமாக அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்” என்ற உமதிரட்சகனின் வாக்கு உண்மையாகிவிட்டது. (10:33)””
என்று கூறலாம். (அல்வாஉல் பயான்)
وَ لَوْ شِئْنَا لَاٰتَيْنَا كُلَّ نَفْسٍ هُدٰٮهَا وَلٰـكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّىْ لَاَمْلَئَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ
மேலும், நாம் நாடியிருந்தால், (இவர்களில் உள்ள) ஒவ்வோர் ஆத்மாவிற்கும், அதற்குரிய நேர் வழியை நாம் கொடுத்திருப்போம், எனினும் ஜின்களாலும், மனிதர் (களில் உள்ள குற்றவாளி)கள் யாவராலும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து வாக்கு (முன்னரே) ஏற்பட்டுவிட்டது. (32:13)
சில அறிஞர்கள் கூறினார்கள்: ‘இந்த ஸூரா நபிகளாரின் தூதுத்துவத்திற்கு தெளிவான சான்றாகும், ஒரு அற்புதமுமாகும், ஏனெனில் இது இறங்கிய நாளிலிருந்து அவர்கள் இருவரையும் கெட்டவர்கள், ஈமானை இழந்தவர்கள் என்று அது கூறுகின்றது, அவர்கள் இருவருக்கும் இஸ்லாத்தை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, உள்ரங்கமாகவோ, வெளிப்படையாகவோ அது கிடைக்கவில்லையென்றால் அது வெளிப்படையான ஆதாரமாகும். (இப்னு கஸீர்)
ஏனெனில் இந்த ஸூரா இறங்கிய பிறகு அவ்விருவரும் சுமார் பதினான்கு வருடங்களுக்கு மேல் வாழ்ந்தார்கள், விரோதிகளாகவே இருந்தார்கள், இஸ்லாத்திற்கு எதிரான முதல் யுத்தம் பத்ர் யுத்தத்தை மக்காவில் இருந்துகொண்டு வழிநடாத்தினார்கள். அவர்கள் நினைத்திருந்தால் இஸ்லாத்தை, இந்த குர்ஆனை பொய்ப்பித்துக் காட்டுவதற்காகவாவது நடித்திருக்கலாம் அல்லாவா, ஏன்? அவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் இந்த ஸூராவை அழித்திருக்க வேண்டுமல்லவா?!, ஏன் அது முடியாமல் போனது, அதை இறக்கிவைத்த அல்லாஹ் முக்காலங்களை பற்றிய அனைத்தையும் அறிந்தவனல்லவா! அல்லாஹ் கூறுகின்றான்:
اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا
இந்தக்குர்ஆனை அவர்கள் ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து உள்ளதாக இது இருந்தால் இதில் அநேக முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)
الٓرٰ كِتٰبٌ اُحْكِمَتْ اٰيٰـتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِيْمٍ خَبِيْرٍۙ
அலிஃப் லாம் றா. (இது அல்லாஹ்வின்) வேதம், இதன் வசனங்கள் உறுதியாக்கப்பட்டு, அதன்பின்னர் அவை தீர்க்கமான அறிவுடையவன், நன்கறிந்தவனிடமிருந்து தெளிவு செய்யப்பட்டுள்ளன. (11:1)
وَاِنَّكَ لَـتُلَـقَّى الْقُرْاٰنَ مِنْ لَّدُنْ حَكِيْمٍ عَلِيْمٍ
(நபியே!) நிச்சயமாக தீர்க்கமான அறிவுடைய (யாவையும்) நன்கறிந்தவனிடமிருந்து நீர் இந்தக் குர் ஆனைக் கொடுக்கப்படுகிறீர். (27:6)
அபூலஹபும், நரகில் பானம் புகட்டப்படுவதும்:
இந்த ஸூராவின் விளக்கத்தில் அபூ லஹபுக்கு நரகில் பானம் புகட்டப்படுவது சம்பந்தமாக ஒரு விளக்கத்தை அளித்தால் நன்றாக இருக்கும் என்ற அடிப்படையில் பின்வரும் விடயத்தை நோக்க ஆசைப்படுகிறேன்! (*)
ஸூரா மஸத் விளக்கம் முடிவுற்றது.
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ