سُورَةِ الْإِخْلَاصِ
ஸூரதுல் இக்லாஸ்
PDF வடிவில் பார்வையிட CILICK செய்யவும்!
பெயர் : ஸூரதுல் இக்லாஸ்(தூய்மைப்படுத்தல்)
இறங்கிய காலப்பகுதி : மக்கீ
வசனங்கள்: 4
(ஸபபுன் னுஸூல்) இறங்கியதற்கான காரண நிகழ்வு:
உபை பின் கஃப் ரலி அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்கள் நபிகளாரிடம் முஹம்மதே! உங்கள் இறைவனின் பரம்பரை பற்றி எங்களுக்கு கூறுங்கள் என்று கூறினர், அப்போது அல்லாஹ் இந்த ஸூராவை இறக்கினான். (அஹ்மத்:21219, திர்மிதீ:3346)
இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘அபூ ஸஈதுஸ் ஸாகானி’ ‘அபூ ஜஃபரூர் ராஸீ” ஆகிய பலவீனர்கள் இடம்பெற்றுள்ளனர். இப்னு ஹிப்பான் ரஹ் அவர்கள் ‘ரபீஃ பின் அனஸ்’ அவர்களை ‘நம்பகமானவர்கள்’ தொடரில் கூறிவிட்டு, ‘மக்கள் அவரது செய்திகளில், அபூ ஜஃபர், அவரைத் தொட்டும் அறிவித்தவைகளை தவிர்த்தனர், ஏனெனில் அவரிடமிருந்து அவர் அறிவிப்பவைகளில் அதிக தலம்பல்கள் இருக்கும்.’ என்று கூறினார்கள். ‘அபூ ஜஃபரூர் ராஸீ’ அவர்கள் ‘அதிகம் தவறுவிடுபவர், நினைவாற்றல் குறைந்தவர், நம்பகமானவர்களுக்கு முரண்பட்டு அறிவிப்பது அதிகம்’ போன்ற வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டுள்ளார். அவர் வழியாகவே இந்த செய்தி பதியப்பட்டுள்ளது. ‘அபூ ஸஈதுஸ் ஸாகானி’ அவர் ‘மத்ரூகுல் ஹதீஸ்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். (தஹ்தீபுத் தஹ்தீப், தஹ்தீபுல் கமால்)
ஷுஅபுல் ஈமான் : (10), ஹாகிம்: (3987) போன்ற ஹதீஸ் நூல்களில், ‘ஏனெனில் பிறக்கும் எதுவாக இருந்தாலும் அது மரணிக்கும், மரணிக்கும் எதுவாக இருந்தாலும் அனந்தரம் பெறும், நிச்சயமாக உயர்த்தியான அருள்பொருந்தியவனான அல்லாஹ் மரணிக்கவோ, அனந்தரம் பெறவோ மாட்டான், அவனுக்கு நிகரில்லை, என்றால் அவனுக்கு ஒப்பானதோ, நிகரானதோ இல்லை, அவனைப்போன்று எதுவுமில்லை.’
என்று பதியப்பட்டுள்ளது. இந்த விளக்கம் அபூ ஜஃபர் அவர்களுடையது என்று ஷுஐபுல் அர்னாவுத் இமாமவர்கள் முஸ்னத் அஹ்மதின் ஹதீஸ் விளக்கத்தில் கூறியுள்ளார்கள்.
திர்மிதீ இமாமவர்கள் இந்த செய்தியை அபூஜஃபர் வழியாக அபுல் ஆலியா என்ற தாபிஈ கூறியதாக (3365) பதிவுசெய்துவிட்டு, ‘இப்படி முர்ஸலாக, உபை பின் கஃப் இல்லாமல் அறிவிக்கப்படுவதே மிகவும் சரியானது.’ என்று கூறினார்கள். (திர்மிதீ:3365) முர்ஸலாக அபூ ஜஃபர் வழியாக அறிவிப்பவர்கள் நம்பகமானவர்கள்.
இதே செய்தி ஜாபிர் ரலி வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அபூ யஃலா அல் மவ்ஸிலீ:2044, ஷுஅபுல் ஈமான்:2319,முஃஜமுல் அவ்ஸத்:5687) இதன் அறிவிப்பாளர்களான ‘முஜாலித்’, அவரிடமிருந்து அறிவிக்கும் அவரது மகன், ‘இஸ்மாஈல்‘ ஆகியோர் மிகவும் பலவீனமானவர்களாவர். (தஹ்தீபுத் தஹ்தீப், தஹ்தீபுல் கமால்)
இதே செய்தி இப்னு மஸ்ஊத் ரலி அவர் வழியாக, ஆஸிம் பின் பஹ்தலா என்பவர் வழியாக பதியப்பட்டுள்ளது, (இப்னு கஸீர்) அது அபூ வாஇல் என்ற தாபிஈ ‘இப்னு மஸ்ஊத் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்’ அவர்களின் கூற்றாக முர்ஸலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அறிவிப்பாளர் ‘ஆஸிம்‘ அவர்கள் பலவீனமானவர்களே.
சிறப்பு :
அனஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: அன்ஸாரிகளில் ஒரு மனிதர் இருந்தார், அவர் குபாஃ மஸ்ஜிதில் மக்களுக்கு தொழுவிப்பார், அவர் ஸூரா ஓத ஆரம்பித்தால் ‘குல்ஹுவல்லாஹு அஹத்’ ஸூராவை ஓதிவிட்டே இன்னுமொரு ஸூராவை ஓதுவார், இப்படியே ஒவ்வொரு ரக்அத்திலும் செய்வார், அவரது தோழர்கள் காரணம் கேட்டபோது, அவர் அதனை விரும்புவதாக கூறினார், நபிகளாரிடம் இந்த விடயத்தை கூறியபோது, நபியவர்களும் காரணத்தைக் கேட்டார்கள், அதற்கு அவர், ‘அல்லாஹ்வின் தூதரே அதனை நான் நேசிக்கிறேன்’ என்று கூறினார். அப்போது நபியவர்கள்; அதனை நீ நேசித்தது உம்மை சுவனத்தில் நுழைவித்துவிட்டது‘ என்று கூறினார்கள். (திர்மிதீ:2901புகாரி: குறிப்பு செய்தி முஅல்லக்)
இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘அப்துல் அஸீஸ் அத்தராவர்தீ‘ அவர்கள் இடம்பெற்றுள்ளார், அவர்’ ‘உபைதுல்லாஹ் அவர்களைத் தொட்டு அறிவிக்கும் செய்தி முன்கரானது, என்றும் (இது அவர் வழியாக அறிவிக்கப்பட்டதே) நினைவாற்றல் குறைந்தவர், அதிகம் தவறுவிடுபவர்‘ என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார். மேலும் இதே செய்தி ‘இப்னு அபீ உவைஸ்‘ வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது, (ஸுனனுஸ் ஸகீர் பைஹகீ:972) அவர் மிகவும் பலவீனமானவராவார். மேலும் இதே செய்தி ‘முபாரக் பின் பழாலா‘ என்பவர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ‘முதல்லிஸ்‘ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வை ‘அன், அவரைத் தொட்டும்‘ என்ற வாசகம் கொண்டே அறிவித்துள்ளார். எனவே தொழுகையில் ஓதிய நிகழ்வுடன் வரும் இந்த செய்தி பலவீனமானதாகும். (அல்லாஹு அஃலம்) பல அறிஞர்கள் இதனை ஹஸன், ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.
அதேநேரம், தொழுகை சம்பந்தப் படாமல் பொதுவாக,
அனஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் குல்ஹுவல்லாஹு அஹத் ஸூராவை’ நேசிக்கிறேன் என்று கூற, நபியவர்கள்: ‘அதனை நீ நேசித்தது உம்மை சுவனத்தில் நுழைவித்துவிட்டது’ என்று கூறினார்கள். (தாரிமீ:3478)
முபார்க் பின் பழாலா வழி யாக ‘எனக்கு அறிவித்தார்‘ என்ற நம்பகமான வாசகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது ஸஹீஹான செய்தியாகும். (அல்லாஹு அஃலம்)
ஆஇஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தம் தொழுகையில் தம் தோழர்களுக்காக ஓதுவார், ஓதி முடிக்கும்போது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘எதற்காக இப்படிச் செய்கிறார்’ என்று அவரிடமே கேளுங்கள்’ என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், ‘ஏனெனில், அந்த பேரருளாளனின் பண்புகளை அந்த ஸூரா எடுத்துரைக்கின்றது. நான் அதை ஓதுவதை விரும்புகிறேன்’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவரை நேசிக்கிறான்’ என்று அவருக்குத் தெரிவியுங்கள்’ என்று கூறினார்கள். (புகாரி: 7375, முஸ்லிம்:1481)
அபூ ஸஈத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது குர்ஆன்) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருப்பதை மற்றொரு மனிதர் செவியுற்றார். அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை இவர் குறைத்து மதிப்பிட்டதைப் போன்றிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அது குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு நிகரானதாகும்‘ என்றார்கள். (புகாரி: 6643, 5013)
அபூ ஸஈத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ‘ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?’ என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், ‘எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவையற்றவன்‘ (என்று தொடங்கும் 112 வது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்‘ என்று கூறினார்கள். (புகாரி: 5015, அஹ்மத்:11053)
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?” என்று கேட்டார்கள். “எவ்வாறு குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓத இயலும்?” என்று மக்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “குல் ஹுவல்லாஹு அஹத் (112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பங்கிற்கு ஈடானதாகும்” என்று கூறினார்கள்.(முஸ்லிம்: 1477,1478)
ஆஇஷா ரலி அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் ஊதிவிட்டு, ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் பலக்’, ‘ குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி . பிறகு தம் இரண்டு கைகளால் தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (புகாரி: 5017,6319)
அப்துல்லாஹிப்னு ஹுபைப் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: குல்ஹுவல்லாஹு அஹத், பாதுகாப்பு தேடும் இரண்டு சூறாக்களான (அல் பலக், அன்னாஸ் ஆகிய) ஸூராக்களை காலையிலும், மாலையிலும் மூன்று தடவைகள் ஓதுங்கள், அது ஒவ்வொரு நாளும் இரண்டு தடவைகளுக்கும் போதுமானது. (அபூதாவூத்: 5082, திர்மிதி: 3375)
இது முள்தரிபாலன செய்தியாகவே இருக்கின்றது, இமாம் அல்பானி அவர்கள் ஹஸன் என்று கூறியுள்ளார்கள். இதே செய்தி நஸாயில் (உக்பதுப்னு ஆமிர்) ரலி வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ‘அனைத்துக்கும் போதுமானதாகும்’ என்று வந்துள்ளது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۚ
قُلْ கூறு/சொல், هُوَ அவன், اَحَدٌ ஒருவன்
(நபியே!) நீர் கூறுவீராக அவன் “அல்லாஹ்” ஒருவனே! (112:1)
இக்ரிமா ரஹ் கூறினார்கள்: யூதர்கள் ‘நாங்கள் அல்லாஹ்வின் மகனான உஸைரை வணங்குகிறோம்’ என்றும், கிறிஸ்தவர்கள்; ‘நாங்கள் அல்லாஹ்வின் மகனான ஈஸாவை வணங்கிறோம்’ என்றும், நெருப்பு வணங்கிகளான மஜூஸிகள்; ‘நாங்கள் சூரியனையும் சந்திரனையும் வணங்குகிறோம்’ என்றும், இணைவைப்பாளர்கள்; ‘நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்’ என்றும் கூறிய போது அல்லாஹ், தன் தூதர் மீது ‘{قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} அல்லாஹ் ஒருவன் என்று நபியே நீங்கள் சொல்லுங்கள்’ என்று இறக்கிவைத்தான். (இப்னு கஸீர்)
இந்த வசனம் மூலம், “அல்லாஹ் என்ற இறைவன் அவன் ஒருவனே, அவனது தன்மையிலும், பண்பிலும், பெயர்களிலும் அவன் ஒருவனே, அவனுக்கு ஒப்பானதோ நிகரானதோ, கூட்டுசேரக்கூடியதோ இரண்டாவது என்பதற்கு இடமே இல்லை.” என்பது தெளிவாகிறது. அதனை இந்த ஸூராவின் கடைசி வசனம், ‘{وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ} அவனுக்கு நிகர் ஒன்றும் இல்லை’ என்று தெளிவுபடுத்துகின்றது. மேலும் “{لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ} அவனைப் போன்று எதுவுமில்லை’ என்ற வசனமும் தெளிவுபடுத்துகின்றது. என்றால் அல்குர்ஆன் முழுவதும், நபிகளாரின் தூதுத்துவம் முழுவதும் அனைத்து தூதுத்துவங்களும் இந்த உலகிற்கு வந்தது “தூய்மையான இறைவன் அல்லாஹ் அவன் ஒருவன் தனித்தவன்’ என்பதனை தெளிவுபடுதுவதற்கேதான். இந்த உலகில் உள்ள அனைத்தும் அதற்குத்தான் சான்று பகர்கின்றன. (அல்வாஉல் பயான்)
இதனை வலுப்படுத்தும் சில வசனங்கள்:
وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ
(மனிதர்களே!) மேலும், உங்கள் (வணக்கத்திற்குரிய) நாயன் ஓரே ஒரு நாயன்தான்; அளவற்ற அருளும், நிகரற்ற அன்பும் உடைய அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. (2:163)
وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ
ஒரே ஒரு இரட்சகனையே வணங்க வேணடுமென்றல்லாது (வேறு எதனையும்) அவர்கள் கட்டளையிடப்படவில்லை, அவனையன்றி வணக்கத்திற்குரியவன் (வேறெவரும்) இல்லை, (9:31)
وَّمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ۚ
“அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை” என்றும் (நபியே!) நீர் கூர்வீராக! (38:65)
வேதங்கள் இறக்கப்பட்டதும் இதனை உறுதிப்படுத்தவே!
هٰذَا بَلٰغٌ لِّـلنَّاسِ وَلِيُنْذَرُوْا بِهٖ وَلِيَـعْلَمُوْۤا اَنَّمَا هُوَ اِلٰـهٌ وَّاحِدٌ وَّلِيَذَّكَّرَ اُولُوا الْا َلْبَابِ
இ(வ்வேதமான)து மனிதர்களுக்கு எத்தி வைத்தலாகும், இதனைக்கொண்டு அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், வணக்கத்திற்குரியவன் ஒரே நாயன் (ஆன அல்லாஹ்)தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்காகவும் இன்னும் அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவுமாகும். (14:52)
அல்லாஹ் அவனின் கண்ணியமும் மதிப்பும் தூய்மையானது, அவனது பெயர்கள் தூய்மையாகிவிட்டன, அவனது பண்புகள் ஒப்புவமையை விட்டும் சுத்தமாகிவிட்டன, அவனே தனது பண்புகளிலும் பெயர்களிலும் செயல்களிலும் தனித்தவன், அவன் ஒருவனே. இந்த கருத்தை ஆதார அடிப்படையில் கொண்டுவந்த குர்ஆன் அறிவுபூர்வமாகவும் உறுதிப்படுத்துகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
قُلْ لَّوْ كَانَ مَعَهٗۤ اٰلِهَةٌ كَمَا يَقُوْلُوْنَ اِذًا لَّابْتَغَوْا اِلٰى ذِى الْعَرْشِ سَبِيْلًا سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَقُوْلُوْنَ عُلُوًّا كَبِيْرًا
(ஆகவே, நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! அவர்கள் சொல்லுகின்றதைப்போன்று அவனுடன் வேறு வணக்கத்திற்குரியவர்கள் (தெய்வங்கள்) இருந்தால், அப்போது அர்ஷுடைய (அல்லாஹ்வாகிய அ)வனின் பக்கம் (அவனை மிகைக்க) ஒரு வழியை அவர்கள் தேடி இருப்பார்கள். (42), அவன்,அவர்கள் கூறுவதை விட்டும் மிகப் பரிசுத்தமானவன், மிகப் பெரும் உயர்வாக (அவன்) உயர்ந்து விட்டான். (17:42,43)
لَوْ كَانَ فِيْهِمَاۤ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَـفَسَدَتَاۚ فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُوْنَ
(வானங்கள், பூமி ஆகிய) அவை இரண்டிலும் அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், அவை இரண்டும் சீர்குலைந்து (அழிந்து) போயிருக்கும், ஆகவே, அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகப்பரிசுத்தமானவன். (21:22)
எனவே வானமும் பூமியும் எந்த சீர்குலைவும் இல்லாமல் இருக்கிறது என்றால் கடவுள் பலது இல்லை என்பதே காரணமாகும், இதனை ஆதார அடிப்படையிலும், அறிவுபூர்வமாகவும் ஒரே வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:
مَا اتَّخَذَ اللّٰهُ مِنْ وَّلَدٍ وَّمَا كَانَ مَعَهٗ مِنْ اِلٰهٍ اِذًا لَّذَهَبَ كُلُّ اِلٰهٍۢ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلٰى بَعْضٍؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَۙ
அல்லாஹ் எந்த ஒரு பிள்ளையையும் எடுத்துக் கொள்ளவில்லை; அவனுடன் வேறு வணக்கத்துக்குரியவனும் இல்லை; (அவர்களின் கற்பனையின்படி) அவ்வாறிருப்பின் ஒவொரு நாயனும் தான் படைத்ததைக் கொண்டு சென்றுவிடுவர்; இன்னும் அவர்களில் சிலர் சிலரை (மிகைத்து) உயர்ந்தும் (வெற்றியும்)விடுவர். இந்நிராகரிப்பவர்கள் வர்ணிப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன். (23:91)
(அல்வாஉல் பயான்)
اَللّٰهُ الصَّمَدُ ۚ
الصَّمَدُ தேவையற்றவன்
அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன். (112:2)
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறும்போது, “”அல்லாஹுஸ் ஸமத் என்றால் சிலர், ‘அதனையே அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை‘ என்ற வசனம் தெளிவுபடுத்துகின்றது என்று கூறினர், அதனை இப்னு கஸீர் இமாம் அவர்கள் நல்ல கருத்து என்று கூறினார்கள். இன்னும் சிலர், ‘தலைமைத்துவத்திலும் மதிப்பிலும், அனைத்தைவிடவும் பரிபூரணத்திலும் உயர்ந்தவன்‘ என்று கூறினர், இன்னும் சிலர், ‘படைப்பினங்கள் தங்கள் தேவைகளுக்காக நாடி செல்லப்படுபவன், அவனோ எவர் பக்கமும் தேவையற்றவன்‘ என்று விளக்கினர்.”” என்று பதிவுசெய்துவிட்டு,
“”பின்னுள்ள வசனம் தெளிவுபடுத்துகிறது என்பதை எடுத்துக்கொண்டால் ‘இந்த ஸூரா முழுக்கவும் அல்லாஹ் அவன் தனித்தவன், ஒருவன் என்று கூறும் முதல் வசனத்திற்கு விளக்கம்தான்’ என்பது தெளிவாகும். ஏனெனில் பிறந்தவன் தனித்தவனல்லன், ஏன்?, பிறந்தது பெற்றவரின் ஒரு பகுதியே, பெற்றவரும் ஒருவரல்ல, ஏன்?, அவனின் ஒரு பகுதி பிறந்ததில் இருக்கிறது. அவ்வாறு தான் நிகர் உள்ள ஒவ்வொன்றும். நிகர் உள்ள எதுவும் ஒன்றல்ல, எனவே இந்த ஸூரா முழுக்கவும் அல்லாஹ் தனித்துவமான ஒருவன் என்பதை உறுதிப்படுத்தக்கூடியதாகும்.”” என்று கூறினார்கள்.
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் ஸூரதுல் அன்ஆம் {وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ} என்ற (6:14) வது வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் போது பின்வருமாறு தெளிவு படுத்தினார்கள்:
{وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ} அவன் உணவளிப்பான், அவன் உணவளிக்கப்படமாட்டான். என்றால் அல்லாஹ் அவனே படைப்புகளுக்கு உணவளிப்பவன், அவன் மொத்தமாகவே தேவையற்றவன், அவனுக்கு உணவுத்தேவையில்லை. இதனையே அல்லாஹ் தெளிவுபடுத்தி கூறுகின்றான்:
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ مَاۤ اُرِيْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَاۤ اُرِيْدُ اَنْ يُّطْعِمُوْنِ اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ
மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை.(56), அவர்களிடத்தில் நான் யாதொரு உணவையும் நாடவுமில்லை, அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.(57), “நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் மிக்க உணவளிப்பவன், பலமுடையவன், உறுதியானவன்.” (51:56-58)
எனவே அல்லாஹ்தான் உணவளிக்கிறானே தவிர அவன் படைப்புகளின் பக்கம் எந்த தேவையும் அற்றவனே. இதனை அல்லாஹ்வே தெளிவாக கூறுகிறான்:
يٰۤاَيُّهَا النَّاسُ اَنْتُمُ الْفُقَرَآءُ اِلَى اللّٰهِۚ وَاللّٰهُ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ
மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வின்பால் தேவையுடையவர்கள், அல்லாஹ்_ அவன்தான் தேவையற்றவன், புகழுக்குரியவன். (35:15)
இந்த கருத்தை {اللَّهُ الصَّمَد} என்ற வசனத்திற்கு கூறப்பட்ட விளக்கங்களில் மூன்றாவது கருத்து உறுதிப்படுத்துகின்றது. இந்த கருத்தை இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ், ஸஈதுப்னுல் முஸய்யப், முஜாஹித், அப்துல்லாஹ் பின் புரைதா, இக்ரிமா, ஸஈதுப்னு ஜுபைர், அதாஃ பின் அபீ ரபாஹ், அதிய்யதுல் அவ்பீ, ளஹ்ஹாக், ஸுத்தீ போன்றவர்கள் கூறினார்கள். என்று இப்னு கஸீர், இப்னு ஜரீர் போன்றவர்கள் பதிவுசெய்தனர். (அல்வாஉல் பயான் 6:14 வசன விளக்கம்)
எனவே இந்த விளக்கங்களை வைத்து ‘அல்லாஹ் அவனே தேவைகள், கஷ்டங்களின்போது வேண்டப்படுகின்ற ஒரே தலைவன், அவனோ உண்ணுதல், பருகுதல் போன்ற படைப்பினங்களின் பண்புகளிலிருந்து தூய்மையானவன்.’ என்பதை புரிந்துகொள்ளலாம்.
படைப்பினங்ககளுக்கு உள்ள தேவைகள் இருப்பவன் கடவுளாக இருக்க முடியாது என்பது அல்லாஹ் தெளிவாக கூறும் விடயமாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
مَا الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ اِلَّا رَسُوْلٌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُؕ وَاُمُّهٗ صِدِّيْقَةٌ ؕ كَانَا يَاْكُلٰنِ الطَّعَامَؕ اُنْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْاٰيٰتِ ثُمَّ انْظُرْ اَ نّٰى يُؤْفَكُوْنَ
மர்யமுடைய மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி இல்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் (வந்து) சென்று விட்டனர், அவருடைய தாயும் (கடவுள் அல்ல) அவர் மிக்க உண்மையானவர், இவ்விருவரும் உணவு உட்கொண்டே (வாழ்ந்து) வந்தனர், இதனை பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு நாம் எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! பின்னர், (உண்மையிலிருந்து) இவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் நீர் கவனிப்பீராக. (5:75)
اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُـكُمْ فَادْعُوْهُمْ فَلْيَسْتَجِيْبُوْا لَـكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ اَلَهُمْ اَرْجُلٌ يَّمْشُوْنَ بِهَآ اَمْ لَهُمْ اَيْدٍ يَّبْطِشُوْنَ بِهَآ اَمْ لَهُمْ اَعْيُنٌ يُّبْصِرُوْنَ بِهَآ اَمْ لَهُمْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَا ؕ قُلِ ادْعُوْا شُرَكَآءَكُمْ ثُمَّ كِيْدُوْنِ فَلَا تُنْظِرُوْنِ
நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர, நீங்கள் அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள், உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும். (194), அவர்களுக்கு நடக்கும் கால்கள் உண்டா? அல்லது பிடிக்கும் கைகள் அவர்களுக்கு உண்டா? அல்லது பார்க்கும் கண்கள் அவர்களுக்கு உண்டா? அல்லது கேட்கும் செவிகள் அவர்களுக்கு உண்டா? (அவ்வாறாயின்) “நீங்கள் உங்களுடைய இணையாளர்களை அழையுங்கள், பிறகு சூழ்ச்சி செய்யுங்கள், (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசம் கொடுக்க வேண்டாம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (7:194,195)
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
لَمْ يَلِدْ அவன் பெற்றெடுக்கவில்லை لَمْ يُوْلَدْ பெற்றெடுக்கப்படவில்லை
அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை. (112:3)
சில விரிவுரையாளர்கள், ‘பிறப்பதே முதல், பெற்றெடுப்பது இரண்டாவதே, அப்படியிருக்க, ஏன் பிள்ளை இல்லை என்பது முதலில் கூறப்பட்டது?’ என்று ஒரு கேள்வி வந்தால் அதற்கு பதிலாக, “அவசியமானதே முற்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் அல்லாஹ்வுக்கு பிள்ளை இருப்பதாக யூதர்கள், கிறிஸ்தவர்கள், இணைவைப்பாளர்கள் வாதிட்டனர், ஆனால் எவருமே அல்லாஹ்வுக்கு பெற்றோர்கள் இருப்பதாக வாதிடவில்லை. எனவே அவர்களது வாதாட்டம் மிகப்பெரிய பொய் என்ற அடிப்படையில் அது முற்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான்:
وَّيُنْذِرَ الَّذِيْنَ قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ وَّلَا لِاٰبَآٮِٕهِمْؕ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ اَفْوَاهِهِمْؕ اِنْ يَّقُوْلُوْنَ اِلَّا كَذِبًا
அன்றியும், அல்லாஹ் பிள்ளையை எடுத்துக் கொண்டான் என்று கூறுவோரை அது எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கிவைத்தான்.) அவர்களுக்கோ, அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப்பற்றி அறிவும் இல்லை, இவர்கள் வாயிலிருந்து வெளியாகும் வார்த்தையால் இது பெரிதாகிவிட்டது, பொய்யையன்றி (வேறெதையும்) அவர்கள் கூறவில்லை. (18:5)”
என்று கூறினார்கள். (அல்வாஉல் பயான்)
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
لَمْ يَكُنْ அவன் இல்லை (அதற்கு எழுவாய் பயனிலை கட்டாயம்), لَّه அவனுக்கு, كُفُوًا நிகறானது/ஒப்பானது, اَحَدٌ ஒருவன்
மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை. (112:4)
இந்த வசனம் அல்லாஹ்வுக்கு பெற்றோர்களும் பிள்ளைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. உண்மையில் அல்லாஹ்வுக்கு பெற்றோர் இருப்பதாக நேரடியாக யாரும் கூறவில்லை, ஆனால் பெற்றோர் இருப்பவர் கடவுளாக இருக்க தகுதியில்லை என்பது இந்த வசனம் மூலம் தெளிவாகிறது. ஏனெனில் ஈஸா நபியை கடவுள் என்று போற்றிய கிறிஸ்தவர்களுக்கு இது மறுப்பாகவே அமையப்போகின்றது.
அடுத்து கிறிஸ்தவர்கள் மஸீஹ் ஈஸா நபியையும், யூதர்கள் உஸைரைரையும் அல்லாஹ்வின் பிள்ளைகள் என்றனர், இணைவைப்பாளர்கள் வானவர்களை அல்லாஹ்வின் பெண்பிள்ளைகள் என்றனர் இவர்களுக்கெல்லாம் மறுப்பாகவே இந்த ஸூரா இருக்கின்றது.
படைத்தவன் அல்லாஹ்வுக்கு பெற்றோரை மனித சமூகம் கற்பிக்கவில்லை, அதுவே அறிவுப்பூர்வமானதும் கூட, ஏனெனில் படைத்தவனுக்கு பெற்றோரை தேடினால் பெற்றோரை பெற்றவர்கள் யார் என்று சங்கிலித்தொடராக பெற்றோரையும், படைத்தவனையும் தேடுவதே மனிதனின் பணியாகிவிடும். அதற்கு பதில் காணவே முடியாது. அப்படி யோசிப்பதே மனிதனை வழிகெடுக்கும் ஷைத்தானின் சூழ்ச்சி என்று நபியவர்களும் எச்சரித்தார்கள். அல்லாஹ் அந்த சூழ்ச்சியிலிருந்து நம்மை காப்பானாக.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் ஷைதான் வந்து, ‘அல்லாஹ்வை படைத்தவன் யார்? என்று கேட்டு சந்தேகத்தை ஏற்படுத்தம் அளவுக்கு, இன்னின்னதை படைத்தவன் யார்?’ என்று கேட்பான். அந்த நிலையை அவர் அடைந்தால் அல்லாஹ்விடம் (ஷைதானின் சூழ்ச்சியை விட்டும்)பாதுகாப்பு தேடட்டும், அதிலிருந்து தவிர்ந்துகொள்ளட்டும். (புகாரி: 3276, முஸ்லிம்)
அல்லாஹ் கூறுகின்றான்:
قُلْ اِنْ كَانَ لِلرَّحْمٰنِ وَلَدٌ ۖ فَاَنَا اَوَّلُ الْعٰبِدِيْنَ
“அர்ரஹ்மானுக்கு பிள்ளை இருக்குமானால் (அதனை) வணங்குவோரில் நானே முதன்மையானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (43:81)
இமாம் முஜாஹித் அவர்கள், {وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ} என்ற வசனத்திற்கு விளக்கமாக அல்லாஹ்வுக்கு மனைவியும் இல்லை என்றார்கள், (இப்னு கஸீர்) அது அல்குர்ஆனின் பல வசனங்ககள் மூலம் விளக்கப்பட்ட ஒன்றே. அல்லாஹ் கூறுகின்றான்:
بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ اَنّٰى يَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ ؕ وَخَلَقَ كُلَّ شَىْءٍ ۚ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
முன் மாதிரியின்றியே வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவன், அவனுக்கு மனைவியே இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளையிருக்க முடியும்? இன்னும், ஒவ்வொரு பொருளையும் அவனே படைத்திருக்கின்றான், அன்றியும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். (6:101.
وَقَالُوْا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ؕ لَـقَدْ جِئْتُمْ شَيْــٴًـــا اِدًّا تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَـنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا اَنْ دَعَوْا لِـلرَّحْمٰنِ وَلَدًا وَمَا يَنْۢبَـغِىْ لِلرَّحْمٰنِ اَنْ يَّتَّخِذَ وَلَدًا
இன்னும், (கிறிஸ்தவர்களான) அவர்கள் ரஹ்மான் (தனக்கு) பிள்ளையை எடுத்துக்கொண்டான் எனக் கூறுகின்றனர்.(88), நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள் (என்று நபியே! அவர்களிடம் நீர் கூறுவீராக!)(89), அதனால் வானங்கள் வெடித்துவிடவும், பூமி பிளந்துவிடவும் மலைகள் இடிந்து நொறுங்கி விடவும் பார்க்கின்றன. (90), ரஹ்மானுக்கு பிள்ளை உண்டென்று அவர்கள் அழைத்ததன் காரணமாக (அவை நிகழக்கூடும்).(91), பிள்ளையை எடுத்துக்கொள்வது அர்ரஹ்மானுக்கு அவசியமுமல்ல. (19:88-92)
وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ بَلْ عِبَادٌ مُّكْرَمُوْنَ ۙ
மேலும், அவர்கள், “அர்ரஹ்மான் (தனக்காக) பிள்ளையை எடுத்துக் கொண்டான்” என்று கூறுகின்றனர், அவன் மிகப் பரிசுத்தமானவன். மாறாக, (மலக்குகள் அவனது) கண்ணியமிக்க அடியார்களாவார்கள். (21:26)
وَجَعَلُوْا بَيْنَهٗ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ؕ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَۙ
மேலும் இவர்கள், அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் வம்சா வழி உறவை ஆக்குகின்றனர், ஜின்கள் நிச்சயமாக தாம் (அல்லாஹ்விடம்) கொண்டுவரப்படுபவர்கள் என்று திட்டமாக அறிந்தும் இருகின்றனர். (37:158)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனவேதனைக்குள்ளாகக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவன் அல்லாஹ்வை விட வேறு ‘யாருமில்லை’ மனிதர்கள் அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவனோ அவர்களுக்கு உடல் நலத்தை கொடுத்து, வாழ்வாதாரத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறான். (புகாரி: 6099,7378, முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: என்னை நம்பமறுப்பது ஆதமின் மகனுக்கு தகுதியற்றதாய் இருந்தும் அவன் என்னை நம்ப மறுக்கிறான், என்னை ஏசுவது அவனுக்கு தகுதியற்றதாய் இருந்தும் அவன் என்னை ஏசுகிறான். நான், (மனிதனான) அவனை முதலில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். (உண்மையில், மனிதன் மரித்த பிறகு) அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதைவிட, அவனை ஆரம்பமாகப் படைத்தது சுலபமன்று. (அதையே செய்துவிட்ட எனக்கு மீண்டும் உயிர் கொடுப்பது கடினமல்ல.) ‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக்கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ ஏகன்; (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (புகாரி: 4974,4975)
அறிஞர் ஷன்கீதி அவர்கள் இந்த ஸூராவின் சிறப்பு சம்பந்தமாக கூறும் போது ஒரு குறிப்பைக் கூறினார்கள். அது என்னவெனில்; “
وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ
அவன் (தனக்கென) மகனை எடுத்துக்கொள்ளவுமில்லை, (அவனுடைய) ஆட்சியில் அவனுக்குக் கூட்டுக்காரரும் இல்லை, (25:2)
அல்லாஹ் தனக்கு பிள்ளையை ‘எடுத்துக்கொள்ளவில்லை’ என்பதிலிருந்து ‘பெறவில்லை’ என்பது கட்டாயமாகாது, ஏனெனில் பிள்ளையை எடுத்துக்கொள்ளுதல் என்பது சிலவேளை தத்ததெடுப்பதன் மூலமும் வேறுவிதத்திலும் ஏற்படலாம், ஸூரா யூஸுபில் அல்லாஹ் கூறுவதை போன்று.
وَقَالَ الَّذِى اشْتَرٰٮهُ مِنْ مِّصْرَ لِامْرَاَتِهٖۤ اَكْرِمِىْ مَثْوٰٮهُ عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ اَوْ نَـتَّخِذَهٗ وَلَدًا
எகிப்தில் (யூஸுபை)அவரை வாங்கியவர் தன் மனைவியிடம், “நீ அவர் தங்குமிடத்தை கண்ணியமாக வைத்துக் கொள், அவர் நமக்குப்பயன் தரலாம், அல்லது அவரை நாம் பிள்ளையாக எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார், (12:21)
ஆனால் இந்த ஸூராவில் (பெறவில்லை என்பதை) குறிப்பிட்டு மறுத்தல் இருக்கின்றது. அதனை தெளிவாக புரிவது அவசியம். அதுவே “அல்லாஹ்வை தூய்மையாக்கும் இக்லாஸ் ஸூராவாகும், அதுவே அல்லாஹ்வை அவனது தாத்திலும், பண்புகளிலும், ஓர்மைப்படுத்தி, அனைத்தைவிட்டும் தேவையற்ற ஒருவன் என்பதையும் குறிப்பாக்கி, பெற்றெடுத்தலையும், பிள்ளையையும் மறுத்து, நிகர் இருப்பதையும் நிராகரித்து அவனின் உரிமையை அவனுக்கே குறிப்பாகும், அல்குர்ஆனின் மூன்றில் ஒன்றுக்கு நிகரானது என்ற சிறப்பு பெற்ற ஸூரா இது” என்பதாகும். (அல்வாஉல் பயான்)
இந்த வசனம் மூலம் அல்லாஹ்வின் விடயத்தில் மறுக்கப்பட்ட ஒப்புவமை, பல வசனங்களில் பல வார்த்தைகள் மூலம் மறுக்கப்பட்டுள்ளது.
فَلَا تَضْرِبُوْا لِلّٰهِ الْاَمْثَالَؕ اِنَّ اللّٰهَ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களைக் கூறாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் (சகலவற்றையும்) அறிவான், நீங்களோ அறிய மாட்டீர்கள். (16:74)
فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ
நீங்கள் அறிந்துகொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஆக்காதீர்கள். (2:22)
ثُمَّ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ يَعْدِلُوْنَ
அதன் பின்னரும் நிராகரிப்போர் தங்கள் இரட்சகனுக்கு (அவன் படைத்தவற்றில் சிலவற்றை)ச் சமமாக்குகின்றனர். (6:1)
எனவே இந்த சூராவின் மூலம், நாம் அல்லாஹ்வைப் பற்றி ஆதாரத்தின் அடிப்படையில் தெரிந்ததையே பேசவேண்டும், அல்லாஹ்வின் விடயத்தில் எது தெரியாதோ அதனை பேசாமல் இருப்பதே ஒரு முஃமினுக்கு நல்லது என்பதை அறியலாம். அல்லாஹ் கூறுகின்றான்:
لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ۚ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
அவனைப்போன்று எப்பொருளும் இல்லை, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன். (42:11)
அல்லாஹ் செவிமடுக்கும் {ஸமீஃ} பார்க்கும் {பஸீர்} என்று அவன் கூறி ஏற்கும் நாம், அவனை படைப்புகளுக்கு எந்தவிதத்திலும் ஒப்பாக்கிவிடக்கூடாது.
يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيْطُوْنَ بِهٖ عِلْمًا
அவர்களுக்கு முன்னுள்ளதையும், அவர்களுக்குப் பின்னுள்ளதையும் அவன் நன்கறிவான், அவர்கள் அவனை அறிவினால் சூழ்ந்து (அறிந்து ) கொள்ள மாட்டார்கள். (20:110)
இத்தோடு ஸூரா இக்லாஸின் விளக்கம் முற்றுப்பெறும்.
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ