بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அபூலஹபும், நரகில் பானம் புகட்டப்படுவதும்:
PDF வடிவில் பார்வையிட இங்கே தட்டவும்!
ஸூரா லஹபின் அடிப்படையில் அபூலஹப் ஒரு நரகவாதி என்று உறுதியான பிறகும் இன்றைய முஸ்லிம்களில் சிலர், “அபூ லஹபுக்கு நரகில் விரல்களுக்கிடையால் பானம் புகட்டப்படுவதாக ஹதீஸில் வந்திருக்கிறது, அதற்கு காரணம், அபூ லஹப் ஸுவைபா அவர்களை, நபியவர்கள் பிறந்த செய்தி கேள்விப்படடதற்காக விடுதலை செய்து பாலூட்ட வைத்தார், எனவே நபிகளாரின் பிறப்பை கொண்டாடினால் மறுமையில் நல்ல பலன் கிடைக்கும்.’ என்று கூறுகின்றனர். இதன் நிலைப்பாடு என்ன? என்றால்
இதில் ஒரு சில அறிஞர்கள் இந்த செய்தியை ஆதாரம் காட்டி நரகில் காபிர்களுக்கு தண்டனை குறைக்கப்படலாம் என்று பேசியுள்ளனர், அதற்கு இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் இந்த செய்தி பலவீனம் என்று எடுத்துக்காட்டி மறுப்பளித்துள்ளார்கள். அதேநேரம் அபூதாலிப் அவர்களுக்கு குறைந்த தண்டனை வழங்கப்படும் என்று வரும் நபிமொழியை ஆதாரம் காட்டி அதனை சரிக்கண்டு பேசியுள்ளார்கள்,
ஆனால் அந்த அறிஞர்கள் யாரும் இதனை ஆதாரம் காட்டி நபிகளாருக்கு பிறந்த தினம் மீலாத் விழா கொண்டாடலாம் என்று வாதம் வைக்கவுமில்லை, அது அவர்களது வழிமுறையாக இருக்கவுமில்லை.
முதலில் அந்த நபிமொழியை அறிவிப்பாளர் தொடரோடு நோக்குவோம்;
உம்மு ஹபீபா பின்த் அபீ ஸுப்யான்(ரலி) அவர்கள் அறிவித்ததாக, ஸைனப் பின்து அபீ ஸலமா அவர்கள் கூற, அவர்கள் தனக்கு அறிவித்ததாக உர்வதுப்னு ஸுபைர் அறிவிக்க, அவர் தனக்கு அறிவித்ததாக ஸுஹ்ரீ இமாம் அவர்களைத் தொட்டு ஷுஐப் அவர்கள் அறிவிக்க, அவர் தனக்கு அறிவித்ததாக அல்ஹகம் பின் நாபிஃ அவர்கள் கூற, அவர் தனக்கு அறிவித்ததாக புகாரி இமாம் பதிவு செய்தார்கள்:
“நான் (என் கணவர்) நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அபூ ஸுப்யானின் மகளை தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!” என்று கூறினேன். அதற்கவர்கள், ‘இதை நீயே விரும்புகிறாயா?’ என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், ‘ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றேன்.அதற்கு அவர்கள், ‘எனக்கு அது அனுமதிக்கப்பட்டதன்று’ என்றார்கள். நான் ‘தாங்கள் அபூ ஸலமாவின் புதல்வியை மணக்க விரும்புவதாக எங்களுக்குச் சொல்லப்பட்டதே!” என்று கேட்டேன். ‘உம்முஸலமாவிற்கு (முதல் கணவர் மூலம்) பிறந்த மகளையா?’ என நபியவர்கள் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அவள் என்னுடைய மடியில் வளர்ப்பு மகளாக இருந்திருக்காவிட்டாலும் கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்) அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூ ஸலமாவுக்கும் ஸுபைவா பாலூட்டினார். எனவே, என்னிடம் உங்கள் பெண் மக்களையோ, உங்கள் சகோதரிகளையோ பரிந்துரைக்க வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் உர்வா(ரஹ்) கூறினார்: “ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூ லஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூ லஹப் இறந்தபோது அவரின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூ லஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூ லஹபிடம், ‘(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?’ என்று அவர் கேட்டார். உங்களைவிட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது” என்று கூறினார். (புகாரி: 5101)
இந்த செய்தியைப் பொறுத்தவரை இது புகாரியில் வந்திருந்தாலும், புகாரி இமாமவர்கள் அறிவிப்பாளர் தொடர்கொண்டு அறிவித்த செய்தி மட்டுமே நேரடியாக ஸஹீஹ் என்று நோக்கப்படும், இது ஹதீஸ்கலை பற்றிய சாதாரண அறிவுள்ளவர்களுக்கும் தெரியும். அந்த அடிப்படையில், பால்குடி உறவு சகோதரரின் பிள்ளையை திருமணம் முடிக்கக் கூடாது என்ற அந்த விடயமே அறிவிப்பாளர் தொடர் சேர்ந்து வந்திருக்கும் செய்தியாகும்.
அபூ லஹப் பற்றிய செய்தி அறிவிப்பாளர் தொடரின் உயர் பகுதியிலிருந்து மூன்றாவது அறிவிப்பாளரான “உர்வதுப்னு ஸுபைர்” அவர்கள் “அபூ லஹபின் குடுப்பத்தில் ஒருவர் கூறியதாக கூற, உர்வா அவர்களுக்கு பின்னுள்ள மூன்று அறிவிப்பாளர்கள் தொடர்பின்றியே இமாம் புகாரி அவர்கள் பதிந்துள்ளார்.”
முதலில் இது நபியவர்கள் கூறிய செய்தியோ, நபித்தோழர்கள் கூறிய செய்தியோ அல்ல, மாறாக ‘அபூலஹபின் குடும்பத்தில் ஒருவர்‘ என்ற அறியப்படாத மஜ்ஹூலான ஒருவர், அதுவும் கனவில் கண்டதாக கூறப்பட்ட செய்தி, என்ற அடிப்படையில் இது அடிப்படையற்ற செய்தியாகும். ஏனெனில் நல்லவர்களின் கனவுக்கே நபியவர்கள் நன்மாராயம் என்கிறார்கள். இங்கு கனவு கண்டவர் யார் என்று தெரியாத நபராவர். எனவே அதனை நம்பமுடியாது. மேலும் அந்த நபர் அப்பாஸ் ரலி என்ற ஒரு கருத்து இருந்தாலும் அதுவும் ஆதாரப்பூர்வமாக பதியப்படவில்லை.
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நற்செய்தி கூறுகின்றவை (‘முபஷ்ஷிராத்’) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை’ என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் ‘நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?’ என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் ‘நல்ல கனவு’ என்று விடையளித்தார்கள். (புகாரி: 6990)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகும். (புகாரி: 6986, முஸ்லிமின் அறிவிப்பில்: மனிதர்களே! நபித்துவத்தின் நற்செய்திகளில் ஒரு முஸ்லிம் காணுகின்ற, அல்லது அவனுக்கு காட்டப்படுகின்ற நல்ல காணவைத் தவிர வேறேதும் மிஞ்சவில்லை’ என்று வந்துள்ளது.)
அடுத்து, இந்த செய்தி பல அறிவிப்பாளர்கள் விடப்பட்ட தொடர்பு அறுந்துபோன முன்கதிஆன ஒரு செய்தியாகும்.
இமாம் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறும்போது; ‘இது முர்ஸலான (தாபிஈயின் கூற்று) ஒரு செய்தியாகும், அதனை அறிவித்தவர் உர்வா அவர்களே, அவர் அவருக்கு சொன்னவரை சொல்லவில்லை. (முர்ஸல் முன்கதிஃ வகையை சாரும்) மேலும் அதனை சரியான அறிவிப்பாளர் தொடர் என்று வைத்துக்கொண்டாலும், அதில் கனவில் கண்டதாகவே வந்துள்ளது, அதில் எந்த ஆதாரமும் எடுக்கமுடியாது. கனவில் கண்டவர் அந்த நேரத்தில் இஸ்லாத்தை ஏற்காதவராக இருக்கலாம். எனவே அதனை ஆதாரம் கொள்ளமுடியாது.” என்று கூறினார்கள். (பத்ஹுல் பாரி)
அடுத்து இது அறிவிப்பாளர் தொடரில் பலவீனம் இருப்பதோடு அல்குர்ஆனின் வெளிப்படையான கூற்றுக்கு மாற்றமாக இருக்கின்றது. அதாவது; அபூலஹப் நாசமடைந்து விட்டான் என்று உறுதியாக குர்ஆன் கூறிய பிறகு இந்த பலவீனமான செய்தி, அபூலஹபுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்ததாக கூறுகின்றது. மேலும் குறிப்பிட்டு இரண்டு கைகளும் சபிக்கப்பட்டிருக்க, அதன் விரல்களுக்கிடையால் பானம் புகட்டப்படுகிறது என்றால் அது முரண்பாட்டை இன்னும் வலுப்படுத்துகின்றது.
அடுத்து இந்த விடயத்தை ஏற்க முடியாது என்பதற்கு அறிவுப்பூர்வமான ஒரு கருத்தாக “அபூலஹப் ஸுவைபா அவர்களை உரிமை விட்டது தன் சகோதரனுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை சொன்னதற்காகவே, ஏனெனில் பெண்பிள்ளை பிறப்பதை அந்த சமூகம் குறையாக கண்டது, இரண்டாவது ஆண் பிள்ளை பிறந்ததற்காக சந்தோசப்பட்ட அபூலஹப் அவர் நபி என்று கூறும்போது எதிர்த்தான் என்றால், ஆண் பிள்ளை சந்தோசத்தை எடுப்பதா? அல்லது நபித்துவ புறக்கணிப்பை முற்படுத்துவதா?
சுருக்கம்: அவன் இரண்டு விதத்தில் இறை அதிகாரத்தை மறுத்துள்ளான் என்பதே, ஒன்று பெண்பிள்ளை பிறப்பை வெறுத்ததன் அடையாளமே ஆண் பிள்ளை பிறப்பின் சந்தோச வெளிப்பாடு, அடுத்து நபித்துவத்தை எதிர்த்தது. எனவே அபூலஹபின் விவகாரம் ஏற்கத்தக்கதல்ல.
அடுத்து ஸுவைபா எப்போது உரிமை விடப்பட்டார்கள் என்பதிலும் கருத்துவேற்றுமை காணப்படுகின்றது. (பத்ஹுல் பாரி)
அடுத்து இந்த நிகழ்வை முன்வைத்து பிறந்ததினம் ‘மீலாதுன் நபி’ கொண்டாடுதல் என்பது நூற்றுக்கு ஆயிரம் வீதம் பிழையானதாகும். ஏன்? இஸ்லாத்தில் நபிகளாரையே பின்பற்றவேண்டும், இது போன்ற காபிர்களையல்ல.
அடுத்து பிறப்பிலிருந்து நாற்பது வருடங்கள் ஒரு மனிதராக அந்த சமூகத்தில் வாழ்ந்த நபியவர்கள், பிறகு பதின்மூன்று வருடங்கள் மக்காவில், ஆட்சி அதிகாரத்துடன் மதீனாவில் பத்து வருடங்கள் வாழ்ந்தும், அவர்கள் தனக்காக கொண்டாடாத போது நாம் எப்படி கொண்டாடலாம்?.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை எல்லைமீறி புகழ்ந்தது போன்று என்னை எல்லை மீறி புகழவேண்டாம். நான் அல்லாஹ்வின் தூதரும், அவன் அடிமையும் என்று கூறுங்கள்.(புகாரி: 3445)
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் புகுந்தால் நீங்களும் புகுவீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?’ என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘வேறெவரை?’ என்று பதிலளித்தார்கள். (புகாரி: 3456)
எனவே நபிகளாரின், நபித்தோழர்களின் கலாசாரத்தில் இல்லாத பிறந்ததின கொண்டாட்டத்தை ஒரு இறைமறுப்பாளனின், அதிலும் குறித்து சபிக்கப்பட்டவனின் வழிமுறையிலிருந்து, அதிலும் அடிப்படையற்ற மிக பலவீனமான செய்திலிருந்து பின்பற்ற நினைப்பது ஒரு முஸ்லிமுக்கு நல்லதல்ல. (அல்லாஹு அஃலம்)
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ