سورَة الْمَاعُونُ
ஸூரதுல் மாஊன்
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!
பெயர் : ஸூரதுல் மாஊன் (அற்ப உதவிப் பொருள்)
இறங்கிய காலப்பகுதி: மக்கீ
வசனங்கள்: 7
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَرَءَيْتَ الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِؕ
اَ ஆ உருபு/ கேள்வி கேட்பதற்கு பாவிக்கப்படும் ஒரு எழுத்து, رَءَيْتَ நீ கண்டாய்/ பார்த்தாய்/கருத்தினாய், الَّذِىْ ஒருவன், எத்தகையவன் (இதனை தெளிவுபடுத்த ஒரு வசனம் அவசியம்), يُكَذِّبُ பொய்ப்பிப்பான்/க்கிறான், بِ கொண்டு/மூலம், الدِّيْنِ மார்க்கம்/மறுமைக்கும் சொல்லப்படும்,
நியாயத்தீர்ப்பு நாளை பொய்யாக்குவோனை நீர் பார்த்தீரா? (107:2)
இந்த வசனத்தில் அல்லாஹ் கேள்வி கேட்கும் தோரணையில் கண்டிக்கவும், உணர்த்தவுமே செய்கிறான்.
‘الدِّيْنِ அத்தீன்’ என்பதைக் கொண்டு மறுமையும், அதில் கொடுக்கப்படும் கூலியுமே நாடப்படுகின்றது, ஏனெனில் மக்கத்து இணைவைப்பாளர்கள் மரணத்தின் பின்னரான மறுமை வாழ்க்கையையே மறுத்தனர். அதனால் அவர்கள் பல நலவுகளை தவறவிட்டதோடு, பல கெடுதிகளையும் செய்தனர். அதற்கு உதாரணமாகவே இரண்டு விடயங்களை பின்னால் கூறுகின்றான்.
فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ , وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ
فَ இன்னும்/எனவே/ஆகவே, ذٰلِكَ அது/அவன், يَدُعُّ விரட்டுகிறான்/வான், الْيَتِيْمَ அநாதை, وَ இன்னும், لَا يَحُضُّ தூண்ட மாட்டான், عَلٰى மீது/மேலே, طَعَامِ உணவு, الْمِسْكِيْنِ ஏழை
ஆகவே அத்தகையோனே அநாதைகளை விரட்டுகிறான்.(2), அவன் ஏழைக்கு உணவளிக்கத் தூண்டமாட்டான். (107:3)
மறுமை வாழ்க்கையை மறுத்தவன், மறந்தவன் பல நலவுகளை இழப்பது போன்று, அந்த நம்பிக்கையுள்ளவன் நல்லவற்றை செய்வதில் போட்டிபோடுவான் என்பதும் அல்குர்ஆன் கற்றுத்தரும் விடயமாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا
மேலும், ஏழைக்கும், அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் அவர்கள் (நல்லவர்கள்) உணவளிப்பார்கள். (76:8)
இப்படி கூறிய அல்லாஹ் அதற்கான காரணத்தை பின்வருமாறு கூறுகின்றான்:
اِنَّمَا نُطْعِمُكُمْ لِـوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا , اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا يَوْمًا عَبُوْسًا قَمْطَرِيْرًا
அவர்கள், : “உங்களுக்காக நாம் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்தை நாடியேதான்; உங்களிடமிருந்து நாம் யாதொரு பிரதிபலனையோ, நன்றி செலுத்துவதையோ நாடவில்லை”, (9) “மிக்க கடுகடுக்கக்கூடிய நெருக்கடியான ஒரு நாளை நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகனிடமிருந்து பயப்படுகின்றோம்” (என்றும் கூறிக்கொண்டிருந்தனர்.) (76:9,10)
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் இந்த வசனத்திற்கு கீழால், ‘மறுமையைப் பொய்ப்பிப்பவனுக்கு ஏன் இந்த இரண்டு விடயங்கள் மட்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன?’ என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டால், ‘அந்த இரண்டும் உதாரணங்கள் மட்டுமே, ஒன்று; மோசமான செயலை செய்ததற்கும், இரண்டாவது, (நல்லதை விடும்) கீழ்த்தரமான தவிர்ப்புக்குமாகும்.’ என்பதே பதிலாகும். மேலும் ‘அனைத்துக்கும் முன்னர் அவ்விரண்டும் இஸ்லாமிய விடயங்கள் இல்லையென்று வைத்துக்கொண்டாலும், மனிதநேயமான காரியங்களாகும்.’ என்று தெளிவு படுத்தியுள்ளார்கள். (அல்வாஉல் பயான்)
அனாதைகளை விரட்டுவது பாவமாகும், அவர்களை அரவணைப்பது மிகவும் சிறந்த நல்லமலாகும்.
அனாதைகளை விரட்டுதல் எனும்போது அவர்களுக்கு எதிராக செய்யப்படும் அனைத்தும் அந்த குற்றத்தில் ஆக்கிவிடும். அவர்களை கேவலப்படுத்துவது, அவர்களது சொத்துக்களை சூறையாடுவது, அழிப்பது போன்ற அனைத்தும் அடங்கும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْؕ
ஆகவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்! (93:9)
كَلَّا بَلْ لَّا تُكْرِمُوْنَ الْيَتِيْمَۙ
(காரியம்) அவ்வாறன்று! எனினும்,(மோசமான குணம் கொண்ட) நீங்கள் அநாதையை கண்ணியப்படுத்துவதில்லை. (89:17)
وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ
மேலும், (விசுவாசங்கொண்டோரே! அநாதையின் செல்வத்திற்கு – அவர் தன் பருவ வயதை எய்தும் வரையில் எது அழகிய முறையோ அதைத் தவிர – (வேறு வழியில் அதை அனுபவிக்க) நீங்கள் நெருங்காதீர்கள்,.. (17:34), (6:152)
وَاٰ تُوا الْيَتٰمٰٓى اَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيْثَ بِالطَّيِّبِ وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَهُمْ اِلٰٓى اَمْوَالِكُمْؕ اِنَّهٗ كَانَ حُوْبًا كَبِيْرًا
மேலும், நீங்கள் அநாதைகளுக்கு அவர்களுடைய பொருட்களை (அவர்கள் பிராயமடைந்த பின், குறைவின்றி அவர்களுக்கு)க் கொடுத்து விடுங்கள், (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் விடாதீர்கள், அவர்களுடைய பொருட்களையும் உங்களுடைய பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டும் விடாதீர்கள், நிச்சயமாக அது பெரும்பாவமாக இருக்கிறது. (4:2)
وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِى الْيَتٰمٰى فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ
அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்கள் விஷயத்தில் நீதம் செய்யமுடியாது என நீங்கள் அஞ்சினால் (மற்றப்) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளுங்கள்,.. (4:3)
உர்வதுப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் ஆஇஷா(ரலி) அவர்களிடம், ‘அநாதை(ப் பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்துகொள்ளுங்கள்’ (4:03) எனும் இறைவசனத்தைக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள். என் சகோதரி மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் செல்வத்தில் கூட்டாக இருக்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளுடைய மஹ்ர் விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் மற்றவர்கள் அவளுக்குக் கொடுப்பது போன்ற மஹ்ரை அவளுக்குக் கொடுக்காமல் – அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் எனும் நிலையிலிருப்பவள் ஆவாள். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செய்யாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை மணந்துகொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக) தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற பெண்களில் அவர்களுக்கு விருப்பமான பெண்களை மணந்துகொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. (புகாரி: 2494, முஸ்லிம்)
وَابْتَلُوا الْيَتٰمٰى حَتّٰىۤ اِذَا بَلَغُوا النِّكَاحَ ۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْۤا اِلَيْهِمْ اَمْوَالَهُمْۚ وَلَا تَاْكُلُوْهَاۤ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ يَّكْبَرُوْا ؕ
இன்னும், அநாதை(ச் சிறுவர்)களை அவர்கள் திருமண வயதையடையும் வரை (தொழில் முதலியவற்றில் ஈடுபடுத்தி, பழக்கிக், கல்வியும் கற்பித்துச்) சோதித்து வாருங்கள், (தங்கள் சொத்தை நிர்வகிக்கக் கூடிய) பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள், அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் பொருட்களையும் பெற்றுக் கொண்டு) விடுவார்கள் என்று (எண்ணி), அவர்களுடைய பொருட்களை அவசர அவசரமாகவும் அளவு கடந்தும் நீங்கள் தின்றுவிடாதீர்கள்,.. (4:6)
اِنَّ الَّذِيْنَ يَاْكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا ؕ وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا
நிச்சயமாக அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுகின்றார்களே அத்தகையோர், அவர்கள் தங்கள் வயிறுகளில் சாப்பிடுவதெல்லாம் நெருப்பைதான், இன்னும், அவர்கள் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பினுள் நுழைவார்கள்.. (4:10)
وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الْيَتٰمٰىؕ قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَيْرٌ ؕ وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْؕ
மேலும் அநாதைகளைப் பற்றி ‘நபியே!’ அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: அவர்களுக்குரிய சீர்திருத்தத்தைச் செய்தல் மிக்க நலமாகும்; மேலும் நீங்கள் அவர்களுடன் கலந்திருந்தால், அப்போது (அவர்கள்) உங்களுடைய சகோதரர்களாவர்;.. (2:220)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: மனிதனை அழித்துவிடும் ஏழு பாவங்களை தவிர்ந்துகொள்ளுங்கள்: .. அநாதையின் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுவது.. (அவற்றில் ஒன்றாகும்) (புகாரி: 2766,6857, முஸ்லிம்)
தனது ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் சிறு இடைவெளியுடன் சேர்த்துக்காட்டிய நபி ஸல் அவர்கள், ‘நானும் அநாதையை பொறுப்பேற்பவரும் சுவனத்தில் இப்படி இருப்போம்’. என்று கூறினார்கள். (புகாரி:5304,6005, முஸ்லிம்)
ஏழைகளுக்கும், வசதியற்றவர்களுக்கும் உணவளிப்பது இஸ்லாத்தில் சிறந்ததே!
நரகவாசிகளின், இறைமறுப்பாளர்களின் அடையாளமாக ‘உணவளிப்பதை தூண்டமாட்டார்கள்’ என்று பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. (69:34) (74:44)
اَوْ اِطْعٰمٌ فِىْ يَوْمٍ ذِىْ مَسْغَبَةٍ ۙ يَّتِيْمًا ذَا مَقْرَبَةٍ اَوْ مِسْكِيْنًا ذَا مَتْرَبَةٍ
அல்லது பசியுடைய நாளில் நெருங்கிய உறவுடைய ஒரு அநாதைக்கு, அல்லது (வறுமையால்) மண்ணில் உழலும் ஏழைக்கு உணவளித்தல் (நரகிலிருந்து காக்கும்). (90:14-16)
நபி ஸல் அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று கேட்கப்பட்ட போது, ‘நீ உணவளிப்பதும், அறிமுகமானவர், அறிமுகமில்லாதவர் அனைவருக்கும் ஸலாம் சொல்வதுமாகும்.’ என்று கூறினார்கள். (புகாரி:12, 28, முஸ்லிம்)
எனவே நல்லவர்களின் அடையாளமான இந்த நல்ல பண்புகள் இல்லாமல் செல்வதற்கு மறுமை நம்பிக்கை இல்லாமலிருப்பதும், குறைந்து போவதுமே காரணமாகும்.
فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ
فَ ஆகவே/எனவே, وَيْلٌ கேடு/ நரக ஓடை, لِّ க்கு/அளவில், المُصَلِّيْنَ
தொழுகையாளிகள்எனவே, தொழுகையாளிகளுக்கு கேடுதான். (107:4)
الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ
الَّذِيْنَ எவர்கள்/இத்தகையவர்கள்/சிலர் (தெளிவுபடுத்த ஒரு வசனம் அவசியம்), هُمْ அவர்கள், عَنْ விட்டும்/பற்றி, صَلَاتِ தொழுகை/பிரார்த்தனை, سَاهُوْنَ மறந்தவர்கள்/பொடுபோக்கு செய்பவர்கள்
அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையை விட்டும் பராமுகமாக இருப்போர். (107:5)
இந்த வசனம் மூலம் எச்சரிக்கப்படும் தொழுகையாளிகள் யார் என்று அறிஞர்கள் இரண்டு கருத்தை கூறியுள்ளார்கள்; பெரும்பாண்மையானவர்கள், ‘அவர்கள் பொடுபோக்கு செய்பவர்கள், பேணித் தொழாதவர்கள்‘ என்று கூறினார், சிலர் ‘தொழுகையில் இறையச்சம், இறை சிந்தனை இல்லாதவர்கள்‘ என்று கூறினார். இந்த இரண்டு கருத்துக்களையும் பதிந்த ஷன்கீதி இமாமவர்கள் முதல் கருத்தே ஏற்றமானது என்று கூறினார்கள். (அல்வாஉல் பயான்)
இப்னு அப்பாஸ் ரலி, அதாஃ ரஹ் ஆகியோர்; ‘தொழுகைக்குள் கவனக்குறைவாக இருப்போர் என்று கூறாமல் தொழுகை விடயத்தில் பொடுபோக்கு செய்வோர்’ என்று கூறிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், ஏனெனில் தொழுகையில் மறப்பதிலிருந்து யாருமே தப்பவில்லை, நபியவர்கள் கூட ஒரு நாள் ளுஹரை இரண்டோடு முடிக்க, துல்யாதைன் ரலி அவர்களே நினைவூட்டினார்கள். (அல்வாஉல் பயான்)
இதன் காரணமாகவே “தங்கள் தொழுகையில் பொடுபோக்கு செய்வோர்” யார் என்பதில் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
சிலர் ‘அவர்கள் குறிப்பிட்ட சில நபர்கள்‘ என்றும், சிலர் ‘அவர்கள் நேரம் தாழ்த்தி தொழும் ஒவ்வொருவரும், அல்லது ஜமாஅத்தோடு மஸ்ஜித்களில் தொழாதவர்கள்.’ என்றும், சிலர், ‘நயவஞ்சகர்கள்‘ என்றும் கூறினார்.
அதேநேரம் அடுத்த வசனங்களில் அவர்களது பண்புகள் ‘அவர்கள் காட்டுவதற்காக தொழுவார்கள், அற்ப உதவி பொருட்களை தடுத்துக்கொள்வார்கள்‘ என்று தெளிவாக வந்துள்ளது, எனவே தொழுகையில் அடுத்தவர்களுக்கு காட்டுவதென்பது அவர்கள் நயவஞ்சகர்களாகவோ, வேறு யாராகவும் இருக்கலாம்.
பிறருக்கு காட்டுதல் (முகஸ்துதி) என்பது ஒரு விதத்தில் பொதுவானதாகவும், நயவஞ்சகத்தனம் என்பது ஒரு விதத்தில் பொதுவானதாகவும் இருக்கலாம், என்றால்; ஒருவன் மறுமையையும், கூலியையும், ஈமானின் அடிப்படைகளையும் நம்பிய நிலையில் ஒரு செயலை செய்யும்போது பிறருக்கு காட்டும் நோக்கில் செய்யலாம், வேறொரு செயலை செய்யம்போது முகஸ்துதி இல்லாமல் முழுமையான மனத்தூய்மையோடு செய்யலாம். ஆனால் முனாபிக் எனும் நயவஞ்சகன் எப்போதுமே அவனது வெளித்தோற்றம் உள்ரங்கத்திற்கு மாற்றமானதே, தொழுகையில் மட்டுமல்ல. அதேநேரம், பிறருக்கு காட்டுவதற்காக தொழுதல் என்பது நயவஞ்சகனின் அடையாளமாக குர்அனிலே வந்திருக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ ۚ وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلًا
நிச்சயமாக (வேஷதாரிகளான) முனாபிக்குகள் அல்லாஹ்வை வஞ்சிக்க கருதுகின்றனர், இன்னும், அவனோ அவர்களை வஞ்சிக்க்ககூடியவனாக இருக்கின்றான், இன்னும், அவர்கள் தொழுகைக்காகத் தயாரானால் சோம்பேறிகளாகவே நிற்கிறார்கள், மனிதர்களுக்குக் காண்பிக்கின்றார்கள், இன்னும், அவர்கள் வெகு சொற்பமாகத் தவிர அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை. (4:142)
அதே போன்று அற்ப உதவிப்பொருட்களை கொடுக்காமல் தடுப்பதும் தொழுகையாளிகள் அல்லாதவர்களின் பண்பு என்று அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது.
اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا وَاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًا اِلَّا الْمُصَلِّيْنَۙ
நிச்சயமாக தொழுகையாளிகளைத் தவிர உள்ள மனிதன் (பேராசை கொண்ட) மிக்க பதட்டக்காரனாக, (19) அவனை ஒரு தீமை தொட்டுவிட்டால் (திடுக்கிட்டுப்) பதறுகிறவனாகவும், (20) அவனை யாதொரு நன்மை தொட்டுவிட்டால் அதனை (பிறருக்கு வழங்காது) தடுத்துக் கொள்கிறவனாகவும் படைக்கப்பட்டுள்ளான். (70:19- 22) (அல்வாஉல் பயான்)
இந்த வசனத்திற்கு விளக்கம் கூறிய இமாம் இப்னு கஸீர் இமாமவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: இப்னு அப்பாஸ் ரலி அவர்களும் மற்றவர்களும், ‘உள்ளத்தளவில் இல்லாமல் வெளித்தோற்றத்தில் தொழுவதுபோன்று காட்டும் நயவஞ்சகர்களே நாடப்படுகின்றனர், அதனால் தான் ‘லில்முஸல்லீன், தொழுகையாளிகளுக்கு’ என்று கூறியுள்ளான். தொழுகையாளிகள் என்றால்; அவர்கள் தொழுகையாளிகள் தான், பிறகு அதில் பாராமுகமாக இருந்தார்கள், ஒன்றில் இப்னு அப்பாஸ் ரலி கூறியதுபோன்று முழுவதுமாக விட்டுவிடல், அல்லது மஸ்ரரூக், அபுல் ளுஹா போன்றவர்கள் கூறியதுபோன்று இஸ்லாம் குறிப்பிட்ட நேரத்தை விட்டும் மொத்தமாக பிற்படுத்தல், அல்லது, வளமையாகவே ஆரம்ப நேரத்தைவிட்டும் பிற்படுத்துவது, அல்லது இஸ்லாம் காட்டித்தந்த முறையில் தொழாமல் நிபந்தனைகள், கடமைகளை நிறைவேற்றாமை, அல்லது உள்ளச்சமின்றி, அதன் உணர்வின்றி தொழுதல். இவை அனைத்தையும் அந்த எச்சரிக்கை சேர்த்துக்கொள்ளும். ஆனாலும், இவற்றில் ஒரு விடயத்தை தன்னிடம் வைத்திருப்பவர் இந்த வசனத்தின் எச்சிரிக்கையின் ஒரு பங்கை ஏற்கிறார், அனைத்தையும் தன்னிடம் கொண்டிருந்தால் அவர் இந்த வசன எச்சரிக்கைக்குள் பூரணமாக நுழைந்துவிடுவார். அவர் செயல் அடிப்படையிலான நயவஞ்சகத்தனத்தை பூரணப்படுத்திக்கொள்வார்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: அதுவே நயவஞ்சகனின் தொழுகை, அதுவே நயவஞ்சகனின் தொழுகை, அதுவே நயவஞ்சகனின் தொழுகை, சூரியன் மறைவதை எதிர்பார்த்திருந்து, அது ஷைத்தானின் கொம்புகளுக்கிடையில் வந்த பிறகு எழுந்து நின்று, நான்கு ரக்அத்களை வேகமாக தொழுகின்றான், அல்லாஹ்வை சிறிதளவே அன்றி நினைவூட்டுவதில்லை. (முஸ்லிம்: 1097, அபூதாவூத்: 413)
இது நடுத் தொழுகை என்று சிறப்பித்துக்கூறப்பட்ட அஸ்ர் தொழுகையின் கடைசி நேரமாகும், அது தொழுவதற்கு வெறுப்பான நேரமாகும், அந்த நேரத்தில் காக்காய் கொத்துவது போன்று இறை அச்சமோ, அமைதியோ இல்லாமல் வேகமாக தொழுவது, அல்லாஹ்வை கொஞ்சமாகவே அன்றி நினைவூட்டுவதுமில்லை, இப்படி செய்வதற்கு காரணமாக இருந்தது அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்க்காமல், மக்களுக்கு காட்டுவதற்காக தொழுதமையே. எனவே அவர் மொத்தமாக தொழாதவரே. (இப்னு கஸீர்)
தொழுகையை விடுவதும், அதில் பொடுபோக்கு செய்வதும் எச்சரிக்கப்பட்டதே!
மொத்தமாக விடுவது இறைமறுப்புக்கு இட்டுச்செல்லும், நரகில் வீழ்த்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது;
فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ
இவர்களுக்குப் பின்னர் ஒரு சந்ததியினர் தோன்றினர், அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே, அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் (நரகைச்) சந்திப்பார்கள். (19:59)
فِىْ جَنّٰتٍ يَتَسَآءَلُوْنَۙ عَنِ الْمُجْرِمِيْنَۙ مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ
சுவனங்களில் (இருப்பவர்கள்) தங்களுக்குள் (நரகிலுள்ள) குற்றவாளிகளைப்பற்றி, “உங்களை ஸகர் எனும் நரகத்தில் புகுத்தியது எது?” என்று கேட்பார்கள். அ(தற்க)வர்கள், “தொழக்கூடியவர்களில் (உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை” என்று கூறுவார்கள். (74:40-43)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதனுக்கு இடையிலும் ஷிர்க் (எனும் இணைகற்பித்தல்) குப்ர் (எனும் இறைமறுப்புக்கு) இடையிலும் உள்ள வித்தியாசமே தொழுகையை விடுவதாகும். (முஸ்லிம்:134)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: எங்களுக்கும் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும் இடையில் உள்ள உடன்படிக்கை தொழுகையாகும், யார் அதனை விட்டுவிடுகிறானோ அவன் நிசியமாகவே இறைமறுப்பாளனாகிவிட்டான். (திர்மிதி: 2621, நஸாஇ: 463)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: (நரகில் நுழைவிக்கப்பட்டுவோர் நுழைவிக்கப்பட்ட பின்னர்) அல்லாஹ் அவனது கருணையின் காரணமாக அல்லாஹ்வை மட்டும் நம்பியோரை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு ஏவுவான், அவர்களை வானவர்கள் ஸுஜூதின் அடையாளத்தை வைத்தே அறிந்துகொண்டு வெளியேற்றுவார்கள்.. (புகாரி: 806, முஸ்லிம்)
எனவே மொத்தமாக தொழுகையை விட்டவர்கள் மறுமை நிலை இப்படியிருக்கும்.
அடுத்து, விட்டுவிட்டு தொழுவோரும் எச்சரிக்கப்பட்டவர்களே!
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: இஷா ஸுப்ஹு தொழுகைகளை விடவும் நயவஞ்சகர்களுக்கு பாரமான எந்த தொழுகையுமில்லை. (புகாரி:657, முஸ்லிம்)
பாரமாக இருப்பதே நயவஞ்சகத்தின் அடையாளம் என்றால் விடுவது எவ்வளவு மோசமானது?
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகின்றானோ அவனது நற்செயல் வீணாகிவிடும். (புகாரி: 594, 553)
கந்தக் அகழ் போரின்போது யூதர்களின் செயலால் நபிகளாராருக்கு அஸ்ர் தொழுகை நேரம் தவறிவிடுகின்றது, அபோது நபி ஸல் அவர்கள்: ‘அவர்கள் எங்களை சூரியன் மறையும் வரை பரக்காக்கி வைத்தமைக்காக அவர்களது கப்ருகளை, வீடுகளை அல்லாஹ் நெருப்பால் நிரப்பட்டும்.’ என்று கூறினார்கள். (புகாரி:4533, 6396, முஸ்லிம்)
நாம் முஸ்லிம்கள் எங்களது எத்தனை தொழுகைகளை எமது (படம், நாடகம், வீண் விளையாட்டு, இன்னுமுள்ள பராக்குகள்) செயல்கள் பாழாக்கிவிட்டன. எமது நிலை எப்படியிருக்குமோ என்றே சிந்திக்கவேண்டும்.
ஜமாஅத்தை வேண்டுமென்று புறக்கணிப்பதும் எச்சரிக்கப்பட்டதே!
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யார் நாளை (மறுமை நாளில்) முஸ்லிமாக அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் இடங்களில் (பள்ளிவாசல்களில்) இந்தத் தொழுகைகளைப் பேணிவரட்டும். ஏனெனில், அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிகளைக் காட்டியுள்ளான். (கூட்டுத்) தொழுகைகள் நேரிய வழிகளில் உள்ளவையாகும். கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் தமது வீட்டிலேயே தொழுதுகொள்ளும் இன்ன மனிதரைப் போன்று நீங்களும் உங்கள் வீடுகளிலேயே தொழுதுவருவீர்களானால் நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளைக் கைவிட்டவர் ஆவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டால் நிச்சயம் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள். யார் “அங்கத் தூய்மை” (வுளூ) செய்து அதைச் செம்மையாகவும் செய்து, பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்; அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான். நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகம் அறியப்பட்ட நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. (எங்களில் நோயாளியான) ஒரு மனிதர் இரு மனிதருக்கிடையே தொங்கியவாறு அழைத்துவரப்பட்டு (கூட்டுத்) தொழுகையில் நிறுத்தப்பட்டதுண்டு. (முஸ்லிம்: 1159)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களில் சிலரைச் சில தொழுகைகளில் காணாமல் தேடினார்கள். அப்போது அவர்கள் “நான் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்துவிட்டு, விறகுக் கட்டைகளைக் கொண்டுவரச் சொல்லி, (கூட்டுத்) தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று அவர்களை வீட்டோடு தீயிட்டுக் கொளுத்திவிட வேண்டும் என்று எண்ணியதுண்டு. அவர்களில் ஒருவர் சதையுள்ள ஓர் எலும்பு கிடைக்கும் எனத் தெரிந்தால்கூட அவர் அதில் (இஷாத் தொழுகையில்) கட்டாயம் கலந்துகொள்வார்” என்று கூறினார்கள். (புகாரி: 644,657, முஸ்லிம்: 1153)
الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ
يُرَآءُوْنَ பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்/வார்கள்.
அத்தகையோர் (மற்றவர்களுக்குக்) காண்பிக்(கவே தொழு)கிறார்கள். (107:6)
இந்த வசனத்தின் அடிப்படையில் தொழுகையாளி நரகம் நுழைவதற்கு ஒருகாரணி பிறருக்கு காட்டுவதற்காக தொழுவதாகும்.
பிறருக்கு காட்டும் முகஸ்துதி ஒரு பெரும் பாவமே!
தொழுதும் நரகில் நுழையும் மிக மோசமான நிலையை இந்த முகஸ்துதி ஏற்படுத்தும் என்றால் இது எவ்வளவு மோசமான குணம் என்பதை புரிந்து கொள்ளலாம், இதுவும் நயவஞ்சகர்களின் இயல்புக் குணமாக இருந்துள்ளது, முஸ்லிம்களுக்குள் ஷைத்தான் ஏற்படுத்திவிடுகின்றான், அதன் மூலம் நன்மைகளை அளிப்பதற்காக.
அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: இணைவைப்பைவிட்டும் நான் தோழமைகளில் தேவையற்றவன், யாராவது என்னுடன் வேறொருவரை கூட்டுசேர்த்து ஒரு செயலை செய்தால், அவனையும் அவன் கூட்டுசேர்த்ததையும் நான் விட்டுவிடுவேன்.’ (முஸ்லிம்: 5708)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: யார் ஒரு செயலை (அமலை அடுத்தவர்கள் புகழ்வதற்காக) கேற்க செய்கிறாரோ அவரை அல்லாஹ் (கேவலப்படுத்தி) கேற்க செய்வான், யார் அடுத்தவர்களுக்கு காட்டுவதற்காக (ஒரு நற்காரியத்தை) செய்கிறாரோ அவரையும் அல்லாஹ் (கேவலப்படுத்தி) காட்டுவான். (புகாரி: 6499, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் (நரகவாதி என்று) தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்த (ஷஹீத்) ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப்பட்டு, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார். இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். மாறாக, “மாவீரன்” என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார். அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். “அறிஞர்” என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; “காரிஃ” என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார். அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் “இவர் ஒரு கொடைவள்ளல்” என பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது.” என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார். (முஸ்லிம்: 3865)
அடியார்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை; ‘அவனுக்கு நிகர் சேர்க்காமல், அவனை மட்டும் வணங்க வேண்டும்’ என்பதே. அல்லாஹ் கூறுகின்றான்:
فَمَنْ كَانَ يَرْجُوْالِقَآءَ رَبِّهٖ فَلْيَـعْمَلْ عَمَلًا صَالِحًـاوَّلَايُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا
ஆகவே, எவர் தன் இரட்சகனைச் சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ, அவர் நற்கருமங்களைச் செய்யவும், தன் இரட்சகனின் வணக்கத்தில், அவர் எவரையும் இணையாக்க வேண்டாம். (18:110)
அடுத்து பிறருக்கு காட்டுவதற்காக செய்தவர்களை போன்று இருக்க வேண்டாம் எனவும் கூறுகின்றான்.
وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ
பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியவர்களைப் போன்று நீங்கள் இருக்க வேண்டாம், (8:47)
ஒருவன் அல்லாஹ்விற்காக ஒரு நல்லகாரியத்தை செய்ய, மக்கள் அவனது செயலைப் புகழ்கிறார்கள் என்றால், அந்த மனிதன் புகழை எதிர்பார்க்காதவரையில் குற்றம் பிடிக்கப்பட்டமாட்டான்.
அபூ தர் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்களிடம்; ‘ஒரு மனிதன் நற்செயல் ஒன்றை செய்கிறான், அதற்காக மக்கள் அவனை புகழ்கின்றனர்? அதனை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்’ என்று கேட்கப்பட்டபோது, நபியவர்கள்; ‘அது ஒரு முஃமினுக்கு உலகில் வரும் நற்செய்தியாகும்’ என்று கூறினார்கள். (முஸ்லிம்: 5144)
وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ
وَيَمْنَعُوْنَ இன்னும் தடுக்கிறார்கள்/ப்பார்கள், الْمَاعُوْنَ அற்ப உதவிப் பொருள்
மேலும், (அன்றாடம் உபயோகமாகும்) அற்பமான பொருளை (மற்றவர்களுக்குக் கொடுப்பதைவிட்டும்) தடுக்கிறார்கள். (107:7)
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமாக பின்வருமாறு கூறினார்கள்:
மாஊன் என்றால், சிலர் இருப்பதில் கொஞ்சம் என்ற அடிப்படையில் ‘ஸகாத்’ என்றனர், மாஊன் என்பதும் கொஞ்சம்தான். குறைஷிகளின் மொழியில் மாஊன் என்றால் ‘செல்வம்’ என்பதாகும், இன்னும் சிலர்; அது வேலைக்கு பயன்படும் ‘வாலி,கோடாரி,ஊசி,சட்டி போன்றவற்றைக் குறிக்கும்’ என்றனர்.
தொழுகையில் பொடுபோக்கு செய்வது ‘வாலி, கோடாரி போன்ற வேலை முடிந்தால் திரும்ப ஒப்படைக்கப்படும் அற்ப உதவிப் பொருள்களையே கொடுக்கவிடாமல் தடுக்கும் என்றால், தர்மம், ஸகாத் போன்றவற்றை தடுப்பது என்பது சாதாரணத்திலும் சாதாரணமாகும்.
இங்கிருந்து புரிந்துகொள்ள முடிந்தது; ‘நயவஞ்சகன் என்பவன் தன் செல்வத்திலிருந்து கடமையான ஸகாத்தோ, தேவையுள்ளவனுக்கு தர்மமோ செய்வதொருபக்கம், மற்றவர்களுக்கு அழகிய கடனும் கொடுக்கமாட்டான்.’ என்பதே, அதனால்தான் அவர்களுக்கு மத்தியில் வட்டி அதிக அளவில் பரவியிருக்கின்றது. (அல்வாஉல் பயான்)
அற்ப பொருட்களை உதவிக்கு கொடுப்பதும், இரவல் கொடுப்பதும்.
இந்த செயற்பாடுகள் நல்லது என்பதனாலேயே தொழுதும், இந்த பண்பு இல்லாதவர் நரகைக் கொண்டு எச்சரிக்கப்பட்டுள்ளார்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: யார் ஒரு அடியானின் உலக கஷ்டத்தைப் போக்குகின்றானோ அவனது மறுமை கஷ்டத்தை அல்லாஹ் போக்குகின்றான், ஒரு அடியான் தன் சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவிசெய்கிறான். (முஸ்லிம்: 5231)
ஆஇஷா ரலி அவர்கள் கூறினார்கள்; ‘அவர்கள் அஸ்மா ரலி அவர்களிடமிருந்து ஒரு மாலையை இரவலாக பெற்றார்களாம்.’ (புகாரி:336,3773, முஸ்லிம்)
நபி ஸல் அவர்களிடம் ஒட்டகத்திற்கு செய்யவேண்டிய கடமைகள் பற்றி கேட்கப்பட்டபோது,; ‘அது நீர் பருகும் இடத்தில் பால் கறபதும் (அதில் ஏழைகளுக்கு கொடுப்பதே நாடப்பட்டுள்ளது) அதன் வாலியை (யாரும் கேட்டால்) இரவலாக கொடுப்பதும், அதனை இலவசமாக பட்டிக்கு இடுவதும், அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்ய கொடுப்பதும்.’ என்று கூறினார்கள். (முஸ்லிம்: 1806,1807)
நபி ஸல் அவர்கள், பெருநாள் தினத்தில் பெண்களும் திடலுக்கு வரவேண்டும் என்று கூறியபோது, ஆடையில்லாத பெண்கள் என்ன செய்வார்கள்? என்று கேட்கப்பட்டபோது, ‘அவளுக்கு அவளது சகோதரி ஒரு ஆடையை அணிவிக்கட்டும்’. என்று கூறினார்கள். (புகாரி:324, 351, முஸ்லிம்)
நவவி இமாமவர்கள் ‘தனக்கு தேவைப்படாத ஆடையை இரவலாக கொடுப்பார்’ என்று கூறினார்கள்.
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் முக்கிய ஒரு குறிப்பை சுட்டிக்காட்டினார்கள் :
இந்த ஸூராவில் ‘தொழக்கூடியவர்களுக்கு கேடுதான்‘ என்ற வசனத்திற்கும், ஸூரதுல் முஃமினூன்:9 வது வசனம் ‘அவர்கள் தங்களது தொழுகையை பேணிப்பாதுகாப்பார்கள்‘ என்ற வசனத்திற்கும் இடையில் முக்கிய விடயம் ஒன்று இருக்கின்றது; முதலாவது, நயவஞ்சகனின் தன்மை, தொழுகையில் பொடுபோக்கு, இரண்டாவது, முஃமினின் தன்மை தொழுகையில் கவனம் செலுத்துவது. என்றால் முஃமின் எனும் நல்லவர்களுக்கும், நயவஞ்சகன் எனும் கெட்டவர்களுக்கும் இடையிலுள்ள அளவுகோல் தொழுகை என்பதே என்பதாகும்.
இஸ்லாத்தின் பார்வையில் தொழுகை என்பது தனிமனித, சமூக வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும், அது சொல்லிமுடிக்க முடியாதது.
தொழுகையில் பொடுபோக்கு செய்யும்போது சில தாக்கங்கள் ஏற்படும், அது செயலில் பாசாங்கு, முகஸ்துதி ஏற்படுவது, இரண்டு குணம் கொண்டு பழகுவது, அற்பபொருள்களை உதவிக்கு கொடுப்பதை தவிர்ப்பதில் சமூகத்தில் சேராது பிரிந்திருப்பது, தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கு உதவிக்கரம் நீட்டாமல் இருப்பது போன்ற தாக்கங்கள் ஏற்படுவது முக்கியமானது. .
தொழுகை என்பது ஈருலகிலும் நலவுகளை கொண்டுவரும், குர்ஆன் அதனை தெளிவுபடுத்துகின்றது.
உலகில் ஏற்படும் மாற்றம் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
وَاَقِمِ الصَّلٰوةَ ؕ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِؕ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ
தொழுகையையும் நிறைவேற்றுவீராக, நிச்சயமாக தொழுகை, மானக்கேடான செயலிலிருந்தும், பாவத்திலிருந்தும் தடுக்கும். (29:45)
மானக்கேடானவற்றில் உள்ளதுதான்: அநாதையை விரட்டுவது, ஏழைகளுக்கு உணவளிக்காமலிருப்பது. அவை முதல் தரத்திலுள்ளதாகும். கீழ்த்தரமான பாவம் ஒவ்வொன்றும் அதில் உள்ளதே. தொழுகை என்பது, அல்லாஹ் ‘தொழுகையைக்கொண்டும், பொறுமையைக் கொண்டும் உதவிதேடுங்கள்’ என்று சொல்வதை போன்று அனைத்து கீழ்த்தரமான செயலிலிருந்தும் பாதுகாக்கும்,
மேலும் மறுமையில் அது ஒளியாக இருக்கும், அல்லாஹ் கூறுகின்றான்:
يَوْمَ تَرَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ يَسْعٰى نُوْرُهُمْ بَيْنَ اَيْدِيْهِمْ وَبِاَيْمَانِهِمْ
(நபியே!) விசுவாசங்கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீர் காணும் (அந்) நாளில், அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறங்களிலும் விரைந்து சென்றுகொண்டிருக்கும், (57:12)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: எனது சமுதாயம் மறுமை நாளில் வுழுவின் காரணமாக முகம் வெண்மையாகவும் கை கால்கள் பளபளப்பானவர்களாகவும் வருவார்கள். (புகாரி:136, முஸ்லிம்)
(அல்வாஉல் பயான்)
இதன் மூலம் இமாமவர்கள் தொழுகையாளிகள் தொழுகையால் அடையும் நலவையும், தொழுகையில் பொடுபோக்கு செய்யும் நயவஞ்சகர்களிடம் குடிகொள்ளும் தீய குணங்களையும் சுட்டிக்காட்டுகின்றார்கள். எனவே நாம் தொழுகையாளிகள் என்றால் எந்த நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதை சிந்தித்தால் தொழுகையை சீர்திருத்தி நல்லவர்களாக வாழலாம்.
எனவே ஸூரா மாஊனில் படித்த பாடங்களை எமது வாழ்விலும் கடைபிடித்து நடக்க முயல்வோம்.
இத்தோடு ஸூரா மாஊன் விளக்கம் முடிவுற்றது.
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ