سُورَة الْكَافِرُونَ
ஸூரதுல் காபிரூன்
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!
பெயர் : ஸூரதுல் காபிரூன்(காபிர்கள்)
இறங்கிய காலப்பகுதி : மக்கீ
வசனங்கள்: 6
சிறப்பு :
அபூ ஹுரைரா ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் சுப்ஹுடைய முந்திய சுன்னாத்தான இரண்டு ரக்அத்களில் குல்யாஅய்யுஹல் காபிரூன், குல் ஹுவல்லாஹு அஹத் ஆகிய ஸூராக்களை ஓதினார்கள். (முஸ்லிம்: 1316)
அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் சுப்ஹுடைய முந்திய சுன்னாத்தான இரண்டு ரக்அத்களிலும், மக்ரிபுடைய பிந்திய இரண்டு ரக்அத்களிலும் குல்யாஅய்யுஹல் காபிரூன், குல் ஹுவல்லாஹு அஹத் ஆகிய ஸூராக்களை ஓதினார்கள். பத்து சொச்சம், அல்லது இருபது சொச்சம் தடவைகள் கவனித்திருக்கிறேன். (அஹ்மத் :4763,5215,5742)
அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் ரலி அவர்களைத் தொட்டும் ஆஸிம் பின் பஹ்தாலா அவர்கள் வழியாக இதே செய்தி பதியப்பட்டுள்ளது. ஆஸிம் அவர்கள் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். (இப்னு மாஜா: 1166)
அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் வித்ர் தொழுகையில் ஸூரா அஃலா, குல்யாஅய்யுஹல் காபிரூன், குல் ஹுவல்லாஹு அஹத் ஆகிய ஸூராக்களை ஓதினார்கள். ஸலாம் கொடுத்ததும் ‘ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ்’ என்று மூன்று தடவைகள் சத்தமாக சொல்வார்கள். (அஹ்மத் :15354,15355)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் தவாபின் இரண்டு ரக்அத்களில் குல்யாஅய்யுஹல் காபிரூன், குல் ஹுவல்லாஹு அஹத் ஆகிய ஸூராக்களை ஓதினார்கள். (முஸ்லிம்: 2334)
அனஸ் ரலி அவர்கள் நபிகளார் கூறியதாக கூறினார்கள்: குல்யாஅய்யுஹல் காபிரூன், இதா ஸுல்ஸிலத், இதா ஜாஅ நஸ்ருல்லாஹ் ஆகிய ஸூராக்கள் (ஒவ்வொன்றும்) அல்குர்ஆனில் நான்கில் ஒன்றாகும். (அஹ்மத் : 12488, பைஹகீ: 2285,2300,)
ஹதீஸ் விமர்சனம்:
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ‘ஸலமதுப்னு வர்தான்‘ என்பவர் ‘முன்கருல் ஹதீஸ், அனஸ் அவர்களைத் தொட்டு நம்பகமானவர்கள் அறிவிக்காத பல நிராகரிக்கப்பட்ட செய்திகளை அறிவித்துள்ளார்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார், எனவே அவர் பலவீனமானவராவார்.
மேலும் அனஸ் ரலி வழியாக ‘இதா ஸுல்ஸிலத் குர்ஆனில் அரைவாசி, குல்யாஅய்யுஹல் காபிரூன் நான்கில் ஒன்று’ என்று (திர்மிதி : 2893,பைஹகீ :2286) பதியப்பட்டுள்ளது, இதில் ‘அல்ஹஸனுப்புனு ஸல்ம்‘ என்ற ‘மஜ்ஹூல்’ யார் என்று அறியப்படாதவர் இடம்பெற்றுள்ளார், என்று பைஹகீ இமாமே குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் இப்னு அப்பாஸ் ரலி வழியாக (திர்மிதி :2894, பைஹகீ: 2284) பதியப்பட்டுள்ளது. இதில் ‘யமானுப்னுல் முகீரா‘ என்பவர் இடம்பெற்றுள்ளார், இவர் ‘முன்கருல் ஹதீஸ், அதாஃ அவர்களைத்தொட்டு அடிப்படை அற்ற செய்திகளை அறிவிப்பவர்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் பலவீனமானவராவார்.
நவ்பலுல் அஷ்ஜஈ ரலி அவர்கள் கூறினார்கள்: நான் நபி ஸல் அவர்களிடம் சென்று, நான் நித்திரைகொள்ள முன்னர் சொல்வதற்கு ஏதாவது சொல்லித்தாருங்கள்’ என்றேன், அதற்கு நபியவர்கள், ‘நீ தூங்க முன் குல்யாஅய்யுஹல் காபிரூனை கடைசியாக ஓதிவிட்டு தூங்கு, அது இணைவைப்பிலிருந்து பாதுகாக்கக் கூடியது.’ என்று கூறினார்கள். (அஹ்மத்: 24009/49)
ஹதீஸ் விமர்சனம்:
இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘அபூ இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஹைர் அவர்கள், பலமான அறிவிப்பாளராக இருந்தாலும், அபூ இஸ்ஹாக் அவர்களின் பிற்பட்டகாலத்திலேயே, (இக்திலாத்திற்கு) பிறகே செவிமடுத்துள்ளார். எனவே இப்படி அறிவிப்பு வந்தால் அது பலவீனமாகும். (தஹ்தீபுல் கமால்)
இதே அறிவிப்பு, அபூ இஸ்ஹாக் அவர்களைத் தொட்டு, இஸ்ராஈல் என்பவர் வழியாகவும் அஹ்மதில் :23807 என்ற இலக்கத்தில் பதியப்பட்டுள்ளது. அவரும் பலமான அறிவிப்பாளராக இருந்தாலும் “அபூ இஸ்ஹாக் விடயத்தில் பிற்பட்டகாலத்திலேயே, (இக்திலாத்திற்கு) பிறகே செவிமடுத்துள்ளார்”. என்று விமர்சனம் உள்ளது.எனவே இப்படி அறிவிப்பு வந்தால் அது பலவீனமாகும்.
அடுத்து இதே செய்தியை அபூ இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவித்த ‘ஸுப்யானுஸ் ஸவ்ரீ அவர்கள்’ பர்வா பின் நவ்பல் அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவிக்கும் ‘முர்ஸலாக’ அறிவித்துள்ளார்கள். இதுவும் அஹ்மதில் (24009/51,52) பதியப்பட்டுள்ளது.
அதேபோன்று அபூ இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவித்த ‘ஷுஃபா அவர்கள்’ பர்வா பின் நவ்பல் அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவிக்கும் ‘முர்ஸலாக‘ அறிவித்துள்ளார்கள். இது திர்மிதீ: 3403) ல் ஒரு மஜ்ஹூல் வழியாக பதியப்பட்டுள்ளது.
அதேபோன்று அபூ இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவித்த ‘ஷரீகுன் நகஈ அவர்கள்’ பர்வா பின் நவ்பல் வழியாக அல்ஹாரிஸ் பின் ஜபலா ரலி அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவிக்கும் செய்தியாக (அஹ்மத்: 24009/5,4) அறிவித்துள்ளார்கள். சில இடங்களில் ஜபலதுப்னுல் ஹாரிஸா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்னு கஸீர்) (இப்படி பல முரண்பாடுகளோடு அறிவிக்கப்பட்ட “முள்தரிப்பான”) ஒரு செய்தியாகும். (சில அறிஞர்கள் ஹஸன் என்றும் கூறியுள்ளார்கள்.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلْ يٰۤاَيُّهَا الْكٰفِرُوْنَۙ
قُلْ நீ கூறு/சொல், يٰۤاَيُّهَا அலிப் லாம் சேர்ந்த ஒரு சொல்லை அழைப்பதற்காக பாவிக்கப்படும், الْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள்
நிராகரிப்போரே! என்று நீர் அழைத்து, கூறுவீராக! (109:1)
இந்த ஸூரா, மக்கா இணைவைப்பாளர்களின் (இணைவைப்பு எனும்) செயலிலிருந்து விடுவித்து, அல்லாஹ்வை தூய்மையாக வணங்குவதை வலியுறுத்தக்கூடியதாகும். இங்கு காபிர்களே இறைமறுப்பாளர்களே என்று அழைக்கப்பட்டிருப்பது மக்கா முஷ்ரிக்களுக்கு குறிப்பாக இருந்தாலும், இது பூமியில் வாழும் அனைத்து இறைமறுப்பாளர்களையும் சேர்த்துக்கொள்ளும். (இப்னு கஸீர்)
குர்துபீ இமாமவர்கள் கூறும்போது; ‘அலிப் லாம் சேர்ந்த்திருப்பது காபிர்கள் என்ற இனைத்தை குறிக்கும் என்றிருந்தாலும், அல்லாஹ்வின் முடிவின்படி யாரெல்லாம் இறைமறுப்பிலே மரணிப்பார்கள் என்று முடிவாகி இருக்கிறதோ அவர்களே நாடப்படுவார்கள், எனவே இது பொதுவாக அழைக்கப்பட்டும் சொல்லைக்கொண்டு குறிப்பாக நாடப்படும் இடமாகும், ஏனெனில் நபியவர்களால் அழைக்கப்பட்ட பலபேர் பிறகு முஸ்லிமாகி அல்லாஹ்வை வணங்கினார்கள். அவர்களில் இறைநிராகரிப்பில் மரணித்தவர்களும் இருக்கின்றனர், அவர்களே இதன் மூலம் நாடப்படுபவர்கள்.’ என்று கூறினார்கள். இதுபோன்று மாவர்தீ அவர்களும் கூறினார்கள்.’ (குர்துபீ)
நபி ஸல் அவர்கள் மக்கா வாசிகளை அவர்களது இடத்திலே இருந்துகொண்டு ‘காபிர்களே இறைமறுப்பாளர்களே’ என்று அழைக்கிறார்கள் என்றால், இந்த அழைப்பு முறை அவர்களை கோபமூட்டும் என்பதும் நபிகளாருக்கு தெரியும், ஆனாலும் அவர்களால் எந்த தீங்கும் செய்யமுடியாத அளவு நபியவர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள் என்பதும் உண்மையானதே. (இந்த ஆழமான அருத்தம் இருப்பதாக குர்துபீ இமாமவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.) (குர்துபீ)
ரூஹுல் பயான் என்ற புத்தகத்தின் இமாம் அபுல் பிதா (1127 மர) அவர்கள் கூறும் போது: ‘இப்படி நபிகளார் அவர்களது இடத்திலிருந்த நிலையில் அழைத்து கூறியிருப்பது, அவர்களால் நபிகளாருக்கு எந்த தீங்கும் செய்யமுடியாது என்பதை உறுதிப்படுத்தும் ‘நுபூவத்தின் தூதுத்துவத்தின்’ அடையாளமாகும்.’ என்று கூறினார்கள். (ரூஹுல் பயான்)
لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَۙ
لَاۤ اَعْبُدُ நான் வணங்க மாட்டேன், مَا ஒன்றை/எவற்றை/என்ன, تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குகிறீர்கள்/வீர்கள்,
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். (109:2)
وَلَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ۚ
وَ இன்னும்/மேலும், لَا இல்லை/பெயர் சொல்லால் உருவான ஒரு வசனத்தை எதிர்மறையாக்கவும் பாவிக்கப்படும், اَنْـتُمْ நீங்கள், عٰبِدُوْنَ வணங்குபவர்கள், اَعْبُدُ நான் வணங்குகிறேன்/வேன்,
மேலும், நான் வணங்குகிற (ஒரு)வனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். (109:3)
وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ
وَلَاۤ اَنَا இன்னும் நான் இல்லை, عَابِدٌ வணங்குபவன், عَبَدْتُّمْ நீங்கள் வணங்கினீர்கள்
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனுமல்லன். (109:4)
وَ لَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ؕ
وَ لَاۤ اَنْـتُمْ இன்னும் நீங்கள் இல்லை, عٰبِدُوْنَ வணங்குபவர்கள்
மேலும் நான் வணங்குபவனை நீங்களும் வணங்குபவர்களல்லர். (109:5)
மேலும், ‘மக்கா இணைவைப்பாளர்கள் அறியாமையின் காரணமாக நபியவர்களை, அவர்களது சிலைகளை ஒரு வருடத்திற்கு வணங்குமாறும், தாம் அல்லாஹ்வை ஒரு வருடத்திற்கு வணங்குவதாகவும் கூறி அழைத்ததாகவும், அப்போது அல்லாஹ் நபியவர்களுக்கு அவர்களது இணைவைப்பிலிருந்து மொத்தமாக ஒதுங்குமாறு கட்டளையிட்டு இந்த ஸூராவை இறக்கினான். எனவே நபியவர்கள்; ‘நீங்கள் வணங்குவதை நான் வணங்கமாட்டேன், நான் வணங்குவதை நீங்கள் வணங்குபவர்களாகவுமில்லை.’ என்று கூறினார்கள்’ என்ற ஒரு கருத்தும் கூறப்பட்டுள்ளது. (இப்னு கஸீர், அல்வாஉல் பயான்)
புகாரி இமாமவர்கள் கூறும்போது ; “”வேறு சிலர் கூறினர்: {لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ} என்றால் ‘நீங்கள் வணங்குவதை நான் இப்போதும் வணங்கமாட்டேன், எனது வாழ்நாளில் மீதமுள்ள காலத்திலும் உங்களுக்கு நான் பதிலளிக்கமாட்டேன்’ என்பதாகும். {وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ} என்றால் ‘அவர்களே அல்லாஹ், ஸூரா மாஇதா: 64 வது வசனத்தில் குறிப்பிடும் காபிர்களாவர்’ அல்லாஹ் கூறுகின்றான்:
وَلَيَزِيْدَنَّ كَثِيْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ طُغْيَانًا وَّكُفْرًا
இன்னும், உம் இரட்சகனால் உமக்கு இறக்கிவைக்கப்பட்டது அவர்களில் அதிகமாவருக்கு அட்டூழியத்தையும், நிராகரித்தலையுமே நிச்சயமாக அதிகப்படுத்துகிறது, (5:64)
என்பதாகும்”” என்று கூறினார்கள். (புகாரி: ஸூரா காபிரூன் விளக்க குறிப்பு)
இந்த வசனங்கள் திரும்ப திரும்ப சொல்லப்பட்டிருப்பதற்கு இமாம் இப்னு தைமிய்யா ரஹ் அவர்கள் கூறியதாக இப்னு கஸீர் இமாமவர்கள் பின்வருமாறு பதிந்தார்கள்; “”நீங்கள் வணங்குவதை நான் வணங்கமாட்டேன்’ என்பது செயலை மறுப்பதாகும், ஏனெனில் அது வினைச்சொல் வசனமாகும், ‘நீங்கள் வணங்கியதை நான் வணங்குபவனல்லன்’ என்பது அதனை ஏற்றுக்கொள்வதை மொத்தமாக மறுப்பதாகும், ஏனெனில் பெயர் சொல்லால் வரும் வசனம் மிக உறுதியானதாக, அது அந்த செயலையே நிராகரித்தது போன்றதாகும். அதன் அருத்தம் நடப்பதை மறுப்பதும், மார்க்க அடிப்படையில் சாத்தியம் என்பதை மறுப்பதுமாகும்.”” இப்னு கஸீர் இமாமவர்கள் ‘இது அழகானதோர் விளக்கம்’ என்கிறார்கள். அல்லாஹு அஃலம்.
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் இந்த வசனங்களை விளக்கும் போது பின்வருமாறு கூறினார்கள்: இந்த வசனங்களில் ஒரே விடயம் மீட்டி சொல்லப்பட்டிருப்பது, ஸூரா ரஹ்மானில் “فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ஆகவே, (மனு, ஜின்வர்க்கத்தினராகிய) நீங்கள் இருவரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்? (55:13,16,18,,,,,” என்ற வசனம் போன்றும், ஸூரா தாரியாதின் “وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான். (77:15,19,24,,,,) என்ற வசனம் போன்றும் ‘அதனை உறுதிப்படுத்துவதற்காகதான்’ என்ற ஒரு கருத்து சொல்லப்பட்டுள்ளது. இப்படி மீட்டுவது அரபிக் கவிதைகளில் அதிகம் உள்ளதே.
அடுத்து, அது மீட்டப்படவில்லை, மாறாக ஒரு வசனத்தொடர் இறந்த காலத்தையும், மற்றது எதிர்காலத்தையும் குறிக்கிறது என்ற ஒரு கருத்தும் கூறப்பட்டுள்ளது. இன்னும் சில கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில் இந்த ஸூரா பின்னால் வரும் வசனத்தைப் போன்று ‘நபியவர்கள் அவர்களது சிலைகளை வணங்கப்போவதுமில்லை, அவர்களோ அல்லாஹ்வை வணங்கப்போவதுமில்லை’ என்பதை குறித்துக்காட்டுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
وَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ لِّىْ عَمَلِىْ وَلَـكُمْ عَمَلُكُمْۚ اَنْـتُمْ بَرِيْٓـــٴُـوْنَ مِمَّاۤ اَعْمَلُ وَاَنَا بَرِىْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ
இன்னும், (நபியே) உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால், (நீர் அவர்களிடம்), “என் செயல் (அதன் பலன்) எனக்குரியது, (அவ்வாறே) உங்கள் செயல் (அதன் பலன்) உங்களுக்குரியது, நான் செய்வதிலிருந்து நீங்கள் நீங்கியவர்கள்; நீங்கள் செய்வதிலிருந்து நானும் நீங்கியவன்” என்று கூறுவீராக! (10:41)
இந்த வசனம் மூலம் நபியவர்கள் அவர்களின் கடவுள்களை வணங்காதது போன்று அவர்களும் அல்லாஹ்வை வணங்கமாட்டார்கள் என்று பொதுவாக மறுக்கப்பட்டிருக்கும் போது, பிற்பட்டகாலங்களில் நபியவர்கள் வணங்கிய அல்லாஹ்வை அவர்களில் பலர் ஏற்று வணங்கினார்களே என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டால், அதற்கு இரண்டு விதங்களில் பதிலளிக்கலாம்;
ஒன்றில்; சுருக்கமாக அது இறைமறுப்பாளர்கள் என்ற இனத்துக்கு சொல்லப்பட்டதாகும், அவர்கள் பிறகு இஸ்லாத்தை ஏற்றாலும் அவர்கள் காபிர்களாக இருக்கும் நிலையில் விழிக்கப்பட்டதாகும்.
அல்லது அது பொதுவாக சொல்லப்பட்டதில் குறிப்பாக்கப்பட்டதாகும், எனவே இந்த எச்சரிக்கை ‘வணங்கமாட்டார்கள் என்பது’ யார் விடையத்தில் நரகவாதிகள் என்ற அல்லாஹ்வின் கட்டளை விதியானதோ அவர்களை குறிப்பதாகும்.
இந்த இரண்டு வசன நடைகளுக்கு இடையிலும் ஒரு வித்தியாசம் இருக்கின்றது; நபிகளார் ஒரு வசனத்தில் ‘வணங்கமாட்டேன்’ என்று காலத்தைக் குறிக்கும் வினைச்சொல் வசனத்தாலும், இரண்டாவது வசனத்தில் ‘நான் வணங்குபவனல்லன்’ என்று பெயர்ச்சொல்லினாலான வசனத்தாலும் குறிப்பிடும் போது, மக்கா இணைவைப்பாளர்கள் பற்றிய இரண்டு வசனங்களும் ‘நீங்கள் வணங்குபவர்களல்லர்’ என்று பெயர் சொல் வசனங்களாகவே கூறியுள்ளான் என்பது, நபிகளாரின் விடயத்தில் இப்போதும் அது நடக்காது, பிறகும் அது நடக்காது என்பதை காட்டுவதோடு, இணைவைப்பாளர்கள் விடயத்தில் இப்போது நடக்காது என்பதே மறுக்கப்பட்டுள்ளது, பிறகு நடக்கலாம் என்பது மறுக்கப்படவில்லை.’ என்ற ஒரு கருத்தை இமாம் ஸமக்ஷரீ அவர்கள் கூறியதாக, இப்னு ஹய்யான் அவர்கள் கூறிவிட்டு, இந்த விளக்கம் பெரும்பாலும் சாத்தியமானது, உறுதியானது அல்ல என்று கூறினார்கள். இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள்: ‘பெரும்பாண்மையான அடிப்படையில் நாட முடியும் என்றால் அதுவே போதுமானது, அதுவே உண்மையாக நடக்கிறது, ஏனெனில் அவர்களில் பலர் இஸ்லாத்தை ஏற்று நபியவர்களின் இறைவனான அல்லாஹ்வை வணங்கினர்.’ என்று கூறினார்கள் (அல்வாஉல் பயான்)
لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ
لَـكُمْ உங்களுக்கு, دِيْنُكُمْ உங்கள் கூலி/ உங்கள் மார்க்கம், وَلِىَ இன்னும் எனக்கு, دِيْنِ என் கூலி\என் மார்க்கம்
உங்களுக்கு உங்களது மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம். (109:6)
புகாரி இமாமவர்கள் கூறினார்கள்: ‘{لَكُمْ دِينُكُمْ} உங்களது மார்க்கம் உங்களுக்கு என்றால், இறைநிராகரிப்பு என்பதாகும், {وَلِيَ دِينِ} எனது மார்க்கம் எனக்கு என்றால் இஸ்லாம் என்பதாகும், இங்கு {دِينِي} தீனி என்று யாவோடு சொல்லப்படவில்லை, ஏனெனில் அந்த ஸூராவின் வசனங்கள் நூன் உடனே முடிந்துள்ளன, எனவே யா என்ற எழுத்து விழுத்தாட்டப்பட்டுள்ளது. அது ஸூரா கஹ்ப்: 24 வது {يَهْدِينِ} என்ற வசனம், ஸூரதுஷ் ஷுஅராஃ :80 வது {يَشْفِينِ} என்ற வசனம் போன்றதாகும். (புகாரி; ஸூரா காபிரூன் விளக்க குறிப்பு)
இந்த வசனத்தில் ‘{دِينِ} தீன்’ என்றே எழுதப்பட்டுள்ளது, ஓதுவதும் அப்படித்தான், அதேநேரம் சிலர் ‘{دِينِي} தீனீ’ என்று யாவை வைத்தும் ஓதியள்ளனர். இது அல்குர்ஆனின் எழுத்து முறையாகும் அதனை அப்படி பேணுவதும் அவசியமே. (குர்துபீ)
இந்த வசனம் பின்வரும் வசனங்களைப் போன்றதே.
لِّىْ عَمَلِىْ وَلَـكُمْ عَمَلُكُمْ
“என் செயல் எனக்குரியது, உங்கள் செயல் உங்களுக்குரியது, (10:41)
لَنَاۤ اَعْمَالُنَا وَلَـكُمْ اَعْمَالُـكُمْ
“எங்களுடைய செயல்கள் எங்களுக்கும், உங்களுடைய செயல்கள் உங்களுக்கும் (உரியன) (28:55)
இதன் அருத்தம் அவர்களது போக்கை சரிகாணுவதல்ல, மாறாக பின்வரும் வசனத்தைப் போன்று கண்டிப்பதற்கும், எச்சரிப்பதற்குமாகும். அல்லாஹ் கூறுகின்றன:
فَمَنْ شَآءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْيَكْفُرْ ۙاِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًا
(நபியே!) நீர் கூறுவீராக! “ ஆகவே, எவர் விரும்புகிறாரோ அவர் விசுவாசிக்கட்டும், எவர் விரும்புகிறாரோ அவர் நிராகரித்து விடட்டும், “(ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தை தயார்ப்படுத்தி உள்ளோம்; (18:29)
இந்த ஸூராவிலே ‘இறைமறுப்பாளர்களே’ என்று அழைத்திருக்கும் விதம், அவர்களது மதங்கள் இறை நிராகரிப்புக்குரியது என்பதற்கு போதுமானதாகும், மேலும் நபியவர்கள்; ‘நீங்கள் வணங்குவதை நான் வணங்கமாட்டேன் என்று கூறிவிட்டார்கள், ஏனெனில் அது பிழையான, இறைமறுப்பாளர்களின் வணக்கமாகும். அப்படி இருந்தும் அதிலேயே நீங்கள் இருந்தால் உங்களது மார்க்கம் உங்களுக்கிருக்கட்டும், எனது மார்க்கம் எனக்கிருக்கிறது. என்பது அர்த்தமாகும். (அல்வாஉல் பயான்)
இப்னு கஸீர் இமாமவர்கள் கூறினார்கள்: ‘உங்களது மார்க்கம் உங்களுக்கு, எனது மார்க்கம் எனக்கு’ என்ற வசனத்தை வைத்து இமாம் ஷாபிஈ ரஹ் அவர்களும், வேறு சிலரும், ‘இறைநிராகரிப்பு அனைத்துமே ஒரே மதம்தான், யூதர்கள் கிறிஸ்தவர்களையும் கிறிஸ்தவர்கள் யூதர்களையும் அனந்தர்ம் பெறுவார்கள், இஸ்லாத்தைத் தவிர உள்ள அனைத்து மதங்களுமே பிழை என்பதில் ஒன்றைப் போன்றதே.’ என்று கூறினார்கள்.’ அதேநேரம், அஹ்மத் இமாமவர்களும் அவரை சார்ந்தவர்களும் ‘யூதர்கள் கிறிஸ்தவர்களையும் இவர்கள் அவர்களையும் அனந்தர்ம் பெறுவார்கள்’ என்ற கருத்தை மறுத்தனர். அதற்கு ஆதாரமாக ‘இரண்டு மார்க்கங்களை சார்ந்தவர்கள் எதனையும் அனந்தரம் பெறமாட்டார்கள்’ (இப்னு மாஜா: 2224 ஹஸன்) என்ற ஹதீஸை கொண்டுவந்தார்கள். (இப்னு கஸீர்)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் :ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளரை அனந்தரம் பெறமாட்டார்.ஒரு இறைமறுப்பாளர் முஸ்லிமை அனந்தரம் பெறமாட்டார். (புகாரி: 6764, முஸ்லிம்)
உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் மக்காவில் எங்கு தங்குவீர்கள்? அங்குள்ள உங்கள் வீட்டிலா?’ என நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘(அபூ தாலிபின் மகன்) அகீல், தம் தங்கும் விடுதிகள் அல்லது வீடுகள் எவற்றையாவதுவிட்டுச் சென்றுள்ளாரா என்ன?’ எனக் கேட்டார்கள். அபூ தாலிபின் சொத்துக்களுக்கு அகீலும், தாலிபும் வாரிசானார்கள். ஜஅஃபர்(ரலி), அலீ(ரலி) ஆகிய இருவரும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துக்கு அவர்களால்) வாரிசாக முடியவில்லை. (அபூ தாலிப் இறந்த போது) அகீலும், தாலிபும் இறைமறுப்பாளர்களாக இருந்தனர். ‘இறைநம்பிக்கையாளர், இறைமறுப்பாளரின் சொத்திற்கு வாரிசாக மாட்டார்’ என உமர்(ரலி) கூறினார்கள். ‘நிச்சயமாக, இறைநம்பிக்கை கொண்டு, மார்க்ககத்துக்காக நாடு துறந்து, தம் செல்வங்களையும், உயிர்களையும் இறைவழியில் தியாகம் செய்தவர்களும், இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியவர்களும் ஒருவருக்கொருவர் உரிமையுடையவர்களாவார்கள்’ என்ற (திருக்குர்ஆன் 08:72) இறைவசனத்தை (மார்க்க அறிஞர்களான) முன்னோர்கள் (நம்பிக்கையாளர்களே நம்பிக்கையாளர்களுக்கு வாரிசாவார்கள் என்கிற) தம் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டி வந்தார்கள்’ என இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி: 1588, முஸ்லிம்)
இந்த நபி மொழிகள் முஸ்லிமுக்கும் இறைமறுப்பாளருக்கும் அனந்தர உரிமை இல்லை என்பதை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
நான் புரிந்துகொண்டது:
“””இந்த வசனங்கள் சம்பந்தமாக அறிஞர்கள் கூறிய கருத்துகளை பார்க்கும் போது பொதுவான ஒரு முடிவுக்கு வரலாம்;
ஒன்று, குர்ஆனை விளங்க அறிஞர்களான அவர்கள் ஆழமாக சிந்திக்க எடுத்த முயற்சி தெளிவாக விளங்குகிறது. அல்லாஹ் அனைவருக்கும் அருள்புரிய வேண்டும்.
அடுத்து, {يٰۤاَيُّهَا الْكٰفِرُوْنَۙ } காபிர்களே இறைமறுப்பாளர்களே என்று அழைத்திருப்பது அவர்களை கண்டிப்பதே நோக்கம் என்பதுடன், அவர்களது செயலும் நபிகளாரின் செயலும் எடுத்துரைக்கப்பட்ட முறை வித்தியாசமானது என்பதை புரியலாம்.
நபியவர்கள் கூறிய இரண்டு வசனங்களில் முதலாவது வசனம் ; { لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَۙ} இதனை, ‘நீங்கள் இப்போது வணகுகிற, பிறகு வணங்கப்போகிற ஒன்றையும் இப்போதும் எப்போதும் வணங்க மாட்டேன்’ என்ற அருத்தத்தோடு, இரண்டாவது வசனம்,: { وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْۙ } நீங்கள் வணங்கியதை வணங்குபவனாக நான் இல்லை’ என்று இறந்த காலத்தில் வணங்கப்பட்ட கடவுள்களையும் நான் வணங்கவுமில்லை, இப்போது நீங்கள் வணங்கும் பிறகு வணங்கப்போகும் கடவுள்களையும் வணங்கப்போவதுமில்லை என்று முக்காலத்தையும் சேர்த்து மறுத்துள்ளதோடு, கடவுள்கள் புதிதுபுதிதாக உருவாகலாம் என்பதையும் எடுத்துரைக்கிறது, இதுவே இணைவைப்பின் அகோரம்.
அதேநேரம் காபிர்களைப் பற்றி கூறும்போது இரண்டு வசனங்களிலும், ‘{ وَ لَاۤ اَنْـتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ } நான் வணங்குவதை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை என்று கூறுவதன் மூலம், முக்காலத்திலும் நபியவர்கள் வணங்கியது அல்லாஹ் என்ற ஒருவனே என்பதை நிரூபிப்பதோடு, காபிர்களின் விடயத்தில் எக்காலத்திலும் வணக்க முறையிலும், வணங்கப்படுவதிலும் மாற்றம் வரலாம் என்ற கருத்திலேயே வசனம் பாவிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் அவர்கள் புதுப்புது கடவுள்களை உருவாக்கலாம், அதுவே இன்றைய உண்மை நிகழ்வு என்பதோடு, அவர்கள் அல்லாஹ்வையும் கடவுளாக ஏற்று முஃமின்களாகவும் மாறலாம் என்ற இடம்பாடுள்ள வசனமே பாவிக்கப்பட்டுள்ளது. இது இறைவேதம் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும். எனவே முஃமின்களாக மாறியவர்கள் போக, காபிர்களே என்ற விழிப்பு கியாமத் வரை அல்லாஹ்வைத் தவிர உள்ள எந்த கடவுள்களை வணங்கினாலும் அவர்களை விளித்து பேசும் என்பது தெளிவாகிறது. அதனைத் தான் {لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ} உங்களது மார்க்கம் உங்களுக்கு, எனது மார்க்கம் எனக்கு என்ற வசனம் மூலம், நபியவர்களின் மார்க்கம் ஒன்றே என்பதோடு, காபிர்கள் எத்துணை கடவுள்களை வணங்கினாலும், எத்துணை மதங்களை பின்பற்றினாலும் அல்லாஹ்வை மறுப்பதில் அவர்கள் அனைவரும் ஒரு மதம், ஒரு கொள்கை எனபதும் தெளிவாகிறது. அதனையே இன்றைய உலகில் நாம் பார்க்கிறோம். எல்லா மதத்தவர்களும் அவர்களது பலவிதமான கொள்கைகளோடு, அல்லாஹ்வை மட்டும் வணங்கும் முஸ்லிம்களையும், அதனை போதிக்கும் இஸ்லாத்தையும் எதிர்ப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம். இந்த ஸூரா ஒன்றே அல்குர்ஆன் இறைவேதம் என்பதை நிரூபிக்க போதுமானது.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: «يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا» “”பசியுள்ளவை (மிருகங்கள்) அதன் உணவுத் தட்டை நோக்கி ஒன்றுசேர்வது போன்று உங்களுக்கு எதிராக அனைத்து சமுதாயங்களும் ஒன்றுசேர்ந்து வரும் காலம் வரும். (அபூதாவூத்:4297 ஹஸன்)”” நபிகளாரின் கூற்று உண்மையாகும் காலத்தை இன்று பார்க்கிறோம் என்றால், அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அடிப்படையாகக் கொண்ட, குர்ஆனை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் எப்படி உண்மையாகிறது. அல்ஹம்து லில்லாஹ்! (அல்லாஹ்வே அறிந்தவன்.)
அல்ஹம்து லில்லாஹ் இத்தோடு ஸூரா காபிரூன் விளக்கம் முற்றுப்பெறுகிறது.
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ