سُورَةِ الْقَدْرِ

ஸூரதுல் கத்ர்

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!

பெயர்: ஸூரதுல் கத்ர் (கண்ணியம்)

இறங்கிய காலப் பகுதி: மக்கீ

வசனங்கள்: 5

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ

اِنَّاۤ     நிச்சயமாக நாம்,     اَنْزَلْنٰهُ    அதை நாம் இறக்கினோம்,    فِىْ لَيْلَةِ     இரவில்,       الْقَدْرِ     கண்ணியம்\ பெறுமதி

நிச்சயமாக நாம் (நம் வேதமாகிய) இதனை கண்ணியமிக்க  இரவில் இறக்கி வைத்தோம்.  (97:1)

இந்த வசனத்தில் அதனை இறக்கி வைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான், அதனை என்பதைக் கொண்டு இறைவேதம் அல்குர்ஆன் என்பதே நாடப்படுகின்றது. அது இறக்கப்பட்ட இரவு அருள்பாலிக்கப்பட்டது, அல்லாஹ் கூறுகிறான்:

حٰمٓ , وَالْكِتٰبِ الْمُبِيْنِ , اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏   ‌

ஹாமீம்.1, தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!2, நிச்சயமாக நாம், இதனைப் பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம், (44:1-3)

அந்த இரவு இருக்கும் மாதம் ரமலான் மாதமே, அல்லாஹ் கூறுகின்றான்.

شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ

ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும். நேர்வழியின் தெளிவுகளாகவும் (சத்திய அசத்தியத்தைப்) பிரித்துக் காட்டக் கூடியதாகவும் உள்ள இந்தக் குர்ஆன் இறக்கியருளப்பட்டது.  (2:185)

அந்த இரவில் அல்குர்ஆன் இறக்கப்பட்டது என்றால்; இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறும் போது : ‘அல்லாஹ் அல்குர்ஆனை முழுவதுமாக ஒரே தடவையில் லவ்ஹுல் மஹ்பூழில் இருந்து அடிவானத்தில் இருக்கும் பைதுல் இஸ்ஸா என்ற இடத்துக்கு இறக்கி, பிறகு நிகழ்வுகளுக்கு ஏற்ப இருபத்து மூன்று ஆண்டுகள் நபிகளாருக்கு இறக்கினான்’ என்று .கூறினார்கள்.

அடுத்து அல்குர்ஆன் இறக்கப்பட்டதனாலே அந்த இரவு கண்ணியப் படுத்தப்படுகின்றது என்பதும் ஒரு விடயமாகும்.

وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِؕ‏

  مَاۤ   எது\என்ன,     كَ     உனக்கு,     اَدْرٰٮ  அவன் அறிவித்தான்,     مَا     ஒன்று\என்ன\எது,     لَيْلَةُ الْقَدْرِؕ‏     கண்ணியமான இரவு

(நபியே! அந்த) கண்ணியமிக்க இரவு என்னவென்பது பற்றி உமக்கு அறிவித்தது எது?  (97:2)

பொதுவாகவே ஒன்றின் பெறுமதியை, அல்லது அவசியத்தை உணர்த்துவதற்காக இப்படி கேள்வி கேட்டு பதில் அளிக்கும் ஒரு முறையை அல்லாஹ் பேணி வருகின்றான், அந்த அடிப்படையில் கத்ருடைய இரவு ஒரு முஃமினின் வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பதை கேள்வியாக கேட்கின்றான் அல்லாஹ்.

لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕ‏

خَيْرٌ     மிகவும் சிறந்தது,        مِّنْ    விடவும்,     اَلْفِ    ஆயிரம்,    شَهْرٍؕ‏     மாதம்

கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிகச் சிறந்ததாகும்.  (97:3)

அல்குர்ஆன் இறக்கப்பட்ட அந்த இரவுக்குள்ள முக்கிய சிறப்பு, அந்த ஒரு இரவை ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவாக அல்லாஹ் ஆக்கியுள்ளான், அதில் நின்று வணங்கினால் ஆயிரம் மாதங்கள் வணங்கிய பாக்கியம் கிடைப்பதுடன் அல்லாஹ்வின் மன்னிப்பும் கிடைக்கும்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: யார் கத்ருடைய இரவில் இறை நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தவனாகவும் நின்று வணங்குகின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும். (புகாரி: 1901, முஸ்லிம்)

இந்த வசனத்திற்கு கீழால் பின்வருமாறு ஒரு செய்தி பதியப்பட்டுள்ளது,

யூஸுப் பின் ஸஃத் என்பவர் கூறினார்: ஹஸன் ரலி அவர்கள் முஆவியா ரலி அவர்களுக்கு ஆட்சி செய்வதற்கான உறுதிமொழி வழங்கிய போது ஒருவர் எழுந்து, ‘முஃமின்களின் முகத்தை கருக செய்துவிட்டீர்’ என்று கூறவே, ஹஸன் ரலி அவர்கள் :’என்னை கண்டிக்கவேண்டாம், ஏனெனில் நபியவர்கள், உமைய்யா வம்சத்தினர் அவர்களது மிம்பரில் இருப்பது காட்டப்பட்டார்கள், அது நபியவர்களை கவலையுற செய்தது, அப்போது, ‘இன்னா அஃதைனா கல்கவ்ஸர்’ ஸூரா இறங்கியது, மேலும், ‘இன்னா அன்ஸல்னாஹு’ என்ற ஸூரா இறங்கியது, முஹம்மதே உங்களுக்கு பின்னார் உமைய்யாக்கள் ஆயிரம் மாதங்கள் அதனை ஆள்வார்கள்.’ என்று கூறியதாக வந்துள்ளது. காஸிம் எனும் அறிவிப்பாளர், ‘நாங்கள் கணக்கெடுத்து பார்த்தோம், அது சரியாக ஆயிரம் மாதங்கள் இருந்தது, ஒரு நாள் அதிகரிக்கவுமில்லை, குறையவுமில்லை’என்று கூறினார்.  (திர்மிதி: 3350) திர்மிதி இமாமவர்கள் கூறும் போது, ‘யூஸுப் பின் ஸஃத்’ என்பவர், அறியப்படாத ஒரு நபர், அவர் வழியாகவே இது வந்துள்ளது’ என்று கூறினார்கள். திர்மிதி இமாமின் கூற்றில் ஒரு சந்தேகம் இருக்கிறது, ஏனெனில் அவரைத் தொட்டு பலர் அறிவிப்பு செய்துள்ளார்கள்; என்று இப்னு கஸீர் ரஹ் அவர்கள் கூறினார்கள். மேலும்; ‘இதே அறிவிப்பு ‘ஈஸப்னு மாஸின்’ வழியாகவும் வந்துள்ளது, இது இந்த செய்தி குழம்பியது (முள்தரிப்) என்பதை காட்டுகின்றது. அல்லாஹு அஃலம், பிறகு இந்த செய்தியானது மிகவும் நிராகரிக்கப்பட்டது, இமாம் அல்ஹாபிழ் அபுல் ஹஜ்ஜாஜுல் மிஸ்ஸீ அவர்கள் ‘நிராகரிக்கப்பட்டது’ என்று கூறினார்கள்’ என்று கூறினார்கள். 

அல்காஸிம் என்பவரின் காலம் பற்றிய தகவல் பற்றி இமாம் இப்னு கஸீர் ரஹ் அவர்கள்; ‘அது சரியானதன்று, ஹிஜ்ரி 40ல் ஆட்சியை ஆரம்பித்த உமைய்யாக்களிடமிருந்து மொத்தமாக அப்பாஸியர்கள் ஆடசியைக் கைப்பற்றியது 132 டாம் ஆண்டிலாகும், எனவே மொத்தமாக 92 வருடங்கள் ஆண்டிருக்கின்றனர், எனவே அது ஆயிரம் மாதங்கள் என்பதைவிடவும் அதிகமாகும்,

ஏனெனில் ஆயிரம் மாதங்கள் என்பது, 83 ஆண்டுகளும் 4 மாதங்களுமாகும், அல்காஸிம் அவர்கள் உமைய்யாக்களின் காலத்திலிருந்து அப்துல்லாஹ் பின் ஸுபைர் ரலி அவர்களது மக்கா காலத்தை விட்டிருக்கின்றார் போலும், அதனடிப்படையில் அவர் கூறிய கணக்கு நெருக்கமாக இருக்கின்றது. அல்லாஹு அஃலம்.

அடுத்து இந்த செய்தி பலவீனமானது என்பதை அறிவிக்கும் விடயம்தான்; ‘இந்த செய்தி உமைய்யாக்களை இழிவுபடுத்த கொண்டுவரப்பட்டிருப்பதாகும், கத்ரை சிறப்பிக்க அது கொண்டுவரப்பட்டிருந்தால் இந்த அமைப்பில் வந்திருக்காது, ஏனெனில் கத்ருடைய இரவை அவர்களது நாட்களை விட சிறப்பிப்பதானது  அவர்களது நாட்களை இழிவு படுத்துவதற்கு ஆதாரமாகாது, ஏனெனில் கத்ருடைய இரவு மிகவும் சிறப்பானதாகும், இந்த ஸூராவோ அந்த இரவை சிறப்பிக்க வந்ததே, எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் இழிவான உமைய்யாக்களின் நாட்களைவிடவும் அதனை சிறப்பிப்பது எப்படி அந்த இரவுக்கு சிறப்பாக இருக்கும்,

அடுத்து இந்த ஸூரா மக்காவில் இறங்கியிருக்கும் நிலையில் ஆயிரம் மாதங்கள் என்பதைக் கொண்டு எப்படி உமைய்யாக்களின் நாட்கள் என்று விளங்கலாம், அதன் சொற்களோ கருத்தோ அதனை அறிவிக்கவே இல்லை, அடுத்து மிம்பர் மேடை ஹிஜ்ரத்திற்கு பிறகு, மதீனாவில்தான் அமைக்கப்பட்டது, இவை அனைத்தும் அந்த செய்தி பலவீனம், நிராகரிக்கப்பட்டது என்பதை அறிவிக்கின்றது, அல்லாஹு அஃலம். (இப்னு கஸீர்)

அடுத்து; இஸ்ரவேல் சமூகத்தில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் வணங்கியதாகவும், அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிந்ததாகவும், அவர் விடயத்தில் இந்த வசனம் இறங்கியதாகவும் சில செய்திகள் பதியப்பட்டுள்ளன. அவைகள் முர்ஸல் வகையை சேர்ந்த பலவீனமானவையாகும்.

تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ‌ۚ مِّنْ كُلِّ اَمْرٍ 

تَنَزَّلُ    அவள் இறங்குகிறாள்\வாள் அது இறங்குகின்றது,     الْمَلٰٓٮِٕكَةُ     வானவர்கள்,    الرُّوْحُ     உயிர் (ஜிப்ரீல் எனும் வானவர்)     فِيْهَا     அதில்,     اِذْنِ     அனுமதி,    رَبِّهِمْ‌ۚ    அவர்களின் இறைவன்,    مِّنْ    உடன்\இருந்து,    كُلِّ    எல்லா\ அனைத்து,    اَمْرٍ     கட்டளை\ஏவல்

அதில் வானவர்களும், (ஜிப்ரீலாகிய பரிசுத்த) ஆவியும் தங்கள் இரட்சகனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) ஒவ்வொரு காரியத்தின் நிமித்தம் இறங்குகின்றனர்.  (97:4)

இந்த வசனத்தின் மூலம் அந்த இரவின் இன்னுமொரு சிறப்பு எடுத்துரைக்கப்படுகின்றது, அதுதான் அதிகமான வானவர்கள் அந்த இரவில் இறங்குவதும், குறிப்பாக அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு பொறுப்பான ஜிப்ரீல் எனும் வானவர் இறங்குவதுமாகும். இதில் ஜிப்ரீல் எனும் வானவரின் சிறப்பும் விளங்குகின்றது, அவரே ரூஹ் என்பதைக் கொண்டு நாடப்படுகின்றார்.

وَاِنَّهٗ لَـتَنْزِيْلُ رَبِّ الْعٰلَمِيْنَؕ , ‏نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِيْنُۙ , عَلٰى قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِيْنَۙ , بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِيْنٍؕ

மேலும், (நபியே!) நிச்சயமாக (குர்ஆனாகிய) இது அகிலத்தாரின் இரட்சகனால் இறக்கிவைக்கப்பட்டதாகும். 192, அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களில் (ஒருவராக) நீர் ஆவதற்காக உமது இதயத்தின் மீது ரூஹூல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதனை தெளிவான அரபிமொழியைக் கொண்டு இறங்கினார்.  (26:192,193,194,195)

அடுத்து ‘மின் குல்லி அம்ர், கருமங்கள் அனைத்துடனும் இறங்குகின்றனர்’ என்பதன் அருத்தம்; கதாத போன்ற இன்னும் சிலர்,அன்றைய இரவில்தான் கருமங்கள் தீர்ப்பளிக்கப்பட்டு, ஆயுல்களும்,வாழ்வாதாரங்களும் தீர்மானிக்கப்படுகின்றன’ என்று கூறினர். அல்லாஹ் கூறுகின்றான்:

اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏

நிச்சயமாக நாம், இதனைப் பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம், நிச்சயமாக நாம் (இவ்வேதத்தின் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியோராய் இருந்து கொண்டிருக்கிறோம்.3,

فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍۙ‏

அந்த இரவில் உறுதிசெய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் (பிரித்துத்) தெளிவு செய்யப்படுகிறது.4,

اَمْرًا مِّنْ عِنْدِنَا‌ؕ اِنَّا كُنَّا مُرْسِلِيْنَ‌ۚ‏

நம்மிடமிருந்துள்ள கட்டளையாக (அது நடந்தேறும்) …. (44:5)

இது ஒரு வகையில் பொருத்தமாக விளங்குகின்றது. லவ்ஹுல் மஹ்பூலில் இருந்த குர்ஆனை கீழ் வானின் பைதுல் இஸ்ஸாவுக்கு இறக்கி, தேவைக்கு ஏற்ப நபிகளாருக்கு இறக்கியது போன்று, லவ்ஹுல் மஹ்பூலில் இருக்கும் அல்லாஹ்வினால் முடிவு செய்யப்பட முடிவுகளை வருடாவருடம் உலகிற்கு ஏற்றாற்போல் இறக்கி வைக்கின்றான் எனும் போது பொருத்தமாக விளங்குகின்றது. (அல்லாஹு அஃலம்)

அதே நேரம் முஜாஹித் அவர்கள் கூறும் போது, ‘மின் குல்லி அம்ரின் ஸலாம்’ அந்த இரவு ஈடேற்றம் தரும் இரவாக இருக்கும், அதில் தீங்குகள் செய்ய ஷைதான் சக்தி பெறமாட்டான்’ என்று கூறினார்கள்.

இந்த கருத்தைப் பொறுத்தவரை; முழு ரமழான் மதத்திற்குமே ஷைத்தானிடமிருந்து விஷேட பாதுகாப்பு  இருக்கிறது எனும் போது முதல் கருத்து பொருத்தமாக தென்படுகின்றது (அல்லாஹு அஃலம்)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவனக் கதவுகள் திறக்கப்பட்டு, நரக வாயில்கள் மூடப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன.  (புகாரி:1899, முஸ்லிம்)

سَلٰمٌ هِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ

سَلٰمٌ    ஈடேற்றம்\சாந்தி,       هِىَ     அது,     حَتّٰى     வரை,      مَطْلَعِ     உதயம்,     الْفَجْرِ‏     அதிகாலை

(அது) சாந்தியான இரவாகும், அவ்விரவானது அதிகாலை உதயமாகும் வரையிலாகும்.  (97:5)

இந்த வசனத்தை கதாதா, இப்னு  ஸைத்  போன்றவர்கள் முழுவதுமாக ஏற்று, ‘அந்த இரவு முழுவதும் நலவாக இருக்கும், காலை வரை எந்த கெடுதியும் ஏற்படாது’ என்று கூறினர்.

அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா போன்றோர், ;மின் குல்லி அம்ரின் ஸலாம்’ என்று பிரித்து நோக்கினர்.

இப்னு அப்பாஸ் ரலி, ஷஃபீ போன்றவர்கள்; ‘மின் குல்லி அம்ரின் ஸலாமுன் ஹிய ஹத்தா மத்லஇல் பஜ்ர்’ என்று நோக்கினர். (இப்னு கஸீர்)

லைலத்துல் கத்ர் பற்றிய சில அடிப்படைகளும், அதில் உள்ள கருத்துக்களும்;

லைலத்துல் கத்ர் நபிகளாரின் சமூகத்திற்கு மட்டும் உரித்தானதா? அல்லது முன்னைய சமூகங்களுக்கும் இருந்ததா?

இந்த விடயத்தில் இரண்டு கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன;

இமாம் மாலிக் ரஹ் அவர்கள், அவர்களுக்கு கிடைத்த தகவல் என்று கூறினார்கள்: நபி ஸல் அவர்களுக்கு, அவர்களுக்கு முன்னைய சமூகத்தின் வயதெல்லை காட்டப்பட்டது, அதனுடன் பார்க்கும் போது தனது சமுதாயத்தின் வாழும் காலம் குறைந்து, அவர்கள் நீண்ட காலம் செய்த நல்லறங்களை அடைய முடியாது என்ற நிலையில் அல்லாஹ் தன் சமுதாயத்திற்கு ஆயிரம் மதங்களைவிட சிறந்த இரவான கத்ருடைய இரவை கொடுத்தான். 

(முஅத்தா மாலிக், இந்த செய்தியை பொறுத்தவரை இமாம் மாலிக் அவர்கள் தனக்கு இப்படி ஒரு செய்தி நம்பிக்கையானவர் வழியாக கிடைத்தது. என்றே பதிவு செய்துள்ளார்கள், எனவே இது முர்ஸல் என்ற பலவீனம் என்ற வகையையே சேரும், ஆனாலும் சில அறிஞர்கள் அது இப்னு உமர் வழியாக நாபிஃ அவர்கள் வழியாக பதியப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் ஆனாலும் கிடைக்கவில்லை, இப்னு அப்தில் பர் அவர்கள், ‘இந்த செய்தி முஅத்தாவைத் தவிர்த்து வேறு எதிலும் நபிகளார் வரை அறிவிப்பாளர் தொடருடனோ, முர்ஸலாகவோ வரவில்லை’ என்று கூறினார்கள்.(ஜாமிஉல் உஸூல் அடிக்குறிப்பு) அல்லாஹு அஃலம்)

மாலிக் இமாம் அவர்களின் கூற்றுப்படி, அந்த இரவு இந்த சமுதாயத்தின் சிறப்பம்சமாகும். இந்த கருத்தையே ‘அல் உத்தா’ என்ற நூலின் அறிஞரான ஷாபி மத்ஹபின் அறிஞரான ஆசிரியர் இந்த கருத்தில் அறிஞர்கள் ஒன்று பட்டுள்ளார்கள் என்று பதிவுசெய்துள்ளார்கள். இமாம் கத்தாபி அவர்களும் ‘இதில் ஏகோபித்த கருத்து இஜ்மாஃ இருக்கின்றது’ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)

மேலும் கூறினார்கள்: ‘ஆதாரத்தின் அடிப்படையில் அது எங்களுக்கு போன்றே முன்னைய சமூகங்களுக்கும் இருந்ததாகும்’.

அபூதர் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்களிடம் லைலத்துல் கத்ர் பற்றி ‘அது நபிமார்கள் காலத்தில் இருந்து, அவர்கள் மரணித்தவுடன் உயர்த்தப்படுமா? அல்லது மறுமை நாள் வரை இருக்குமா?’ என்று கேட்டபோது, ‘அது மறுமைநாள் வரை இருக்கும்’ என்று கூறினார்கள். (அஹ்மத்:21499)

இந்த செய்தியும் சிலர் ஆதாரப்பூர்வமானது என்று கூறியிருந்தாலும் பலவீனமானதாகும், ஏனெனில் இதன் அறிவிப்பாளராக இருக்கும் மர்சத் பின் அப்தில்லாஹ் என்பவர் யார் என்று அறியப்படாத ‘மஜ்ஹூல்’ ஆவார்.[அஷ்ஷைக் அல்பானி]

எனவே இரண்டு கருத்துக்கும் வைக்கப்படும் ஆதாரம் பலவீனமானதே. எனவே பெரும்பான்மை அறிஞர்கள் கூறுவது போன்று அது இந்த சமுதாயத்தின் சிறப்பம்சம் என்பதுவே குர்ஆனுக்கு நெருக்கமானதாக விளங்குகின்றது அல்லாஹு அஃலம்

அல்குர்ஆன் கூறும் அந்த இரவின் சிறப்புகள்:

  • அல்குர்ஆன் அடிவானுக்கு இறக்கப்பட்டது.
  • அந்த இரவு ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்தது.
  • இரவில் வானவர்களும், குறிப்பாக ரூஹ் எனும் ஜிப்ரீல் அலை அவர்களும் இறங்குவது.
  • அந்த இரவில் ஒரு வருடத்திற்கான அல்லாஹ்வின் முடிவுகள் பகிர்ந்தளிக்கப்படுவது.
  • அந்த இரவு தீங்குகளில் இருந்து தூரமாக்கப்பட்டதும், மனிதனுக்கு அமைதி தரக்கூடியதுமாகும்.

கத்ருடைய இரவு இன்னதுதான் என்பது மறைக்கப்பட்டது.

உபாதா பின் ஸாமித் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் ஒருநாள் ‘கத்ருடைய இரவு இன்னதுதான்’ என்று எங்களுக்கு அறிவிப்பதற்காக வெளியேறி வந்தார்கள், அப்போது முஸ்லிம்களில் இருவர் சண்டைபிடித்துக் கொண்டிருந்தனர், அப்போது நபியவர்கள்: ”கத்ருடைய இரவு இன்னதுதான் என்று அறிவிப்பதற்காக நான் வெளியேறி வந்தேன்,, அப்போது இன்னின்ன இருவர் சண்டைபிடித்துக் கொண்டிருந்தனர், அந்த அறிவு உயர்த்தப்பட்டது, அதில் உங்களுக்கு நலவு இருக்கக்கூடும், எனவே நீங்கள் அதனை ஏழிலும், ஒன்பதிலும், ஐந்திலும் தேடுங்கள்.’ என்று கூறினார்கள்:  (புகாரி:49, 6049,2023)

எனவே அல்லாஹ்வினால் மறைக்கப்பட்டு, அதில் நலவும் இருக்கிறது என்று நபிகளாரால் கூறப்பட்ட ஒன்றில் நாமாக ஒரு இரவை குறிப்பாக்குவது நல்லதல்லஎன்ற பாடத்தை படித்துக்கொள்ள வேண்டும்.

அந்த இரவை எப்படி அடைவது?,

என்றால் நபியவர்கள் காட்டியது போன்று கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் தேடவேண்டும்.

அபூ ஸஈத் ரலி அவர்கள், நபி ஸல் அவர்கள் ரமலான் மாதத்தின் இருபதாவது நாளின் காலையில் கூறினார்கள்: எனக்கு கத்ருடைய இரவு குறிப்பிட்டுக் காட்டப்பட்டு, மறக்கடிக்கப்பட்டது, எனவே நீங்கள் அதனை ரமளானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் தேடுங்கள், நான் என்னை நீரிலும், மண்ணிலும் ஸுஜூத்  நிலையில் கண்டேன்.’ அபூ ஸஈத் ரலி கூறினார்கள்; ‘நபியவர்கள், நீரிலும், மண்ணிலும் ஸுஜூத் செய்வதை நான் பார்த்தேன்.  (புகாரி:813,2016, முஸ்லிம்)

இன்னும் ஏராளமான ஹதீஸ்களை இதே கருத்தில் (ஒரு இரவை குறிப்பாக்காமல் தேடுவது) பார்க்கலாம்.

உபாதா பின் ஸாமித் ரலி; (புகாரி: 49,2023)

அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் நபியவர்கள் கூறியதாக கூறினார்கள்: உங்களில் சிலருக்கு கத்ருடைய இரவு முதல் ஏழு நாட்களில் காண்பிக்கப்பட்டதாகவும், சிலருக்கு கடைசி ஏழு நாட்களில் காண்பிக்கப்பட்டதாகவும் (கூறுகின்றனர்), நீங்கள் கடைசி பத்திலே தேடுங்கள்.  (புகாரி:6991,முஸ்லிம், புகாரியின் அறிவிப்பில் கடைசி பத்தில் காண்பிக்கப்பட்டது என்று வந்துள்ளது.)

அபூ ஹுரைரா ரலி அவர்கள், நபியவர்கள் கூறியதாக கூறினார்கள்: எனக்கு கத்ருடைய இரவு கனவில் காட்டப்பட்டது, பிறகு எனது மனைவிகளில் ஒருவர் என்னை எழுப்பிவிட்டார், எனவே அது மறக்கடிக்கப்பட்டது, நீங்கள் கடைசிப் பத்தில் தேடுங்கள்.  (முஸ்லிம்)

ரலி அவர்கள், நபியவர்கள் கூறியதாக கூறினார்கள்: நீங்கள் கத்ருடைய இரவை ரமளானின் கடைசிப் பத்தில் ஓற்றையில் தேடுங்கள்.  (புகாரி:2017,2020, முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் அறிவிப்பு: (புகாரி:2021,2022)

அபூ ஹுரைரா ரலி அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபியவர்களிடம் கத்ருடைய இரவு பற்றி நினைவூட்டினோம், அப்போது நபியவர்கள்: ‘ஒரு தட்டின் அரைவாசி போன்ற நிலையில் சந்திரன் உதிப்பது உங்களில் யாருக்கு நினைவிருக்கிறது? என்று கேட்டார்கள். (முஸ்லிம்) முஹம்மத் புஆத் அப்துல் பாகி அவர்கள் கூறும் போது: ‘கத்ருடைய இரவு அந்த மாதத்தின் கடைசியில்தான் இருக்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகின்றது, ஏனெனில் மாதத்தின் கடைசியில் தான் சந்திரன் அப்படி உதிக்கும்.’ 

உபையிப்னு கஃப் ரலி அவர்களின் அறிவிப்பு (முஸ்லிம்)

அடையாளங்களை வைத்து இரவை கணித்தல்.

ஸிர்ருப்னு ஹுபைஷ் அவர்கள் உபையிப்னு கஃப் ரலி அவர்களிடம் சென்று, ‘உங்களது சகோதரர் இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள், ‘யார் வருடம் முழுக்கு நின்று வணங்குகின்றாரோ அவர் கத்ருடைய இரவை அடைவார்’ என்று கூறுகின்றார்களே. என்று கூறியபோது, உபை அவர்கள் ‘மக்கள் அதில் மாத்திரம் சாயாமல் இருக்க அப்படி கூறியுள்ளார்கள், மாறாக அவர் அது ரமலானில் கடைசி பத்தில் இருபத்து ஏழில் இருக்கிறது என்பதை அறிவார் என்று கூறிவிட்டு, சத்தியமிட்டு ‘அது இருபத்து ஏழாவது இரவுதான்’ என்று கூறினார்கள். அதனை எப்படி கூறுகின்றீர் என்று கேட்கவே, ‘அடையாளம், அத்தாட்ச்சியைக் கொண்டு, நபியவர்கள், ‘அன்று சூரியன் கதிர்வீச்சு இல்லாமல் உதிக்கும்’ என்று கூறினார்கள்’ என்று கூறினார். (முஸ்லிம்)

இந்த செய்தியை வைத்து சிலர் இருபத்து ஏழாம் இரவுதான் கத்ருடைய இரவு என்று குறிப்பிட்டு கூறுகின்றனர், முதல் விடயம் இது அந்த நபித்தோழரின் ஒரு முடிவு, அடுத்து அவர் அதனை அடையாளங்களை வைத்தே எடுத்துள்ளார், நபியவர்கள் மழை நீரில் ஸுஜூத் செய்வதை கண்டதாக கூற, அபூ ஸஈத் அவர்கள் இருபத்து ஒன்றில் கண்டதாகவும், அப்துல்லாஹ் பின் உனைஸ் அவர்கள் இருபத்து மூன்றில் கண்டதாகவும் கூறும் போது எப்படி உபையிப்னு கஃப் ரலி அவர்களது கூற்றை மட்டும் எடுப்பது என்பதை சிந்தித்தால் புரிந்து கொள்ளலாம். (அல்லாஹு அஃலம்)

அப்துல்லாஹ் பின் உனைஸ் அவர்களின் அறிவிப்பு, ‘நான் அன்று காலையில் நீரிலும், மண்ணிலும் ஸுஜூத் செய்வதை கண்டேன், இருபத்து மூன்றாவது இரவில் மழை பொழிந்தது, நபியவர்களது நெற்றியிலும் மூக்கிலும் நீரினதும் மண்ணினதும் அடையாளத்தை கண்டேன். (முஸ்லிம்)

அடுத்து நபித்தோழர்கள் இதில் பல கருத்துக்களையும் கூறியுள்ளார்கள் (இப்னு கஸீர்) எனும் போது நபியவர்களின் கூற்றுக்கு நெருக்கமானதை எடுப்பதே எம் மீதுள்ள கடமை.

அதன் அடையாளங்கள்:

  • இரவு அமைதியாக இருத்தல்.
  • இரவில் மழை பொழிதல்.
  • காலையில் சூரியன் கதிர்வீச்சின்றி உதித்தல்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: கத்ருடைய இரவின் அடையாளங்கள்; சந்திரனைப் போன்று  தெளிவான வெளிச்சத்துடன் சூரியன் உதிக்கும், சூடுமில்லாமல், குளிருமில்லாமல் இயல்பான அமைதியாக இருக்கும், காலைவரை நட்சத்திரம் எறியப்படமாட்டாது, பொளர்ணமி இரவில் சந்திரன் இருப்பது போன்று காத்திர்வீச்சு இல்லாமல் உதிக்கும். ஷைத்தான் அதனுடன் வெளியாக மாட்டான்.  (அஹ்மத்: 22765)

இது பலவீனமான செய்தியாகும், இதன் அறிவிப்பாளர் ‘பகிய்யா‘ என்பர் முதல்லிஸ் (இருட்டடிப்பு செய்பவர்), அத்தோடு அறிவிப்பை தெளிவாக சொல்லவுமில்லை, அடுத்து காலித் பின் மஃதான் என்பவர் உபாதா அவர்களிடமிருந்து அறிவிப்பவர், அவரிடம் எதனையும் கேட்காதவர். எனவே இது மிக பலவீனமாகும். (இப்னு கஸீர் இமாமவர்கள், இது ஹசன் தரத்திலான அறிவிப்பாளர் தொடராக இருந்தாலும், ஹதீஸ் தொடரில் அபூர்வம் இருக்கின்றது, சில சொற்களில் நிராகரிப்பும் இருக்கின்றது’ என்று கூறியுள்ளார்கள்.

நபி ஸல் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறும் செய்தி; ‘கத்ருடைய இரவில் சூடும் இல்லாத, குளிரும் இல்லாத நடு நிலையான காலநிலை கொண்ட இரவாகவும், காலையில் சூரியன் சிவப்பு நிறமாக பார்ப்பதற்கு இலகுவானதாக இருக்கும் ‘ என்று அபூ தாவூதுத் தயாலிஸி அவர்கள் பதிவு செய்துளார்கள். அதன் அறிவிப்பாளரான ‘ஸம்ஆ , ஸலமதுப்னு வஹ்ராம்’ இருவரும் பலவீனமானவர்கள்.

அதனை அடைவதற்கான வழிகள்;

முன்னைய நபிமொழிகளில் வந்திருப்பது போன்று ஒற்றைப்படை இரவுகளை வணக்கங்கள் மூலம் உயிர்ப்பித்தல்.

கடைசிப் பத்தில் மஸ்ஜிதில் தரித்து (இஃதிகாப்) இருத்தல்.

நபி ஸல் அவர்கள் கத்ரை அடைந்துகொள்ளும் நோக்கில் முதல் பத்திலும், பிறகு நடுப்பத்திலும், பிறகு கடைசி பத்திலும் மஸ்ஜிதில் தரித்திருந்தார்கள். (புகாரி:813,216,முஸ்லிம்)

ஆஇஷா ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள்,மரணிக்கும் வரை ரமழானின் கடைசி பத்தில் இஃதிகாப் இருப்பவர்களாக இருந்தார்கள், பிறகு அவர்களது மனைவிமார்கள் இருந்தனர். (புகாரி: 2026, முஸ்லிம்)

நபியவர்கள் ரமலான் இஃதிகாப் தவறினால் ஷவ்வால் மாதத்தில் இஃதிகாப் இருப்பார்கள். (புகாரி: 2033,2034 முஸ்லிம்)

நபியவர்கள் அதனை அடைந்த விதம்:

ஆஇஷா ரலி அவர்கள் கூறினார்கள்: கடைசி பத்து வந்துவிட்டால் நபியவர்கள் தனது வேட்டியை இறுக கட்டிக்கொள்வார்கள், அந்த இரவை உயிர்ப்பிப்பார்கள், தனது குடும்பத்தவரை எழுப்பிவிடுவார்கள். (புகாரி:2024, முஸ்லிம்)

ஆஇஷா ரலி அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் ரமழானின் கடைசி பத்தில் ஏனைய காலங்களில் முயற்சிக்காத அளவு முயற்சிப்பார்கள்.  (முஸ்லிம்)

அதில் செய்யவேண்டிய வணக்கங்கள் என்ன?

முதல் விடயம்; நபியவர்கள் அதற்கென்று தனி வணக்கங்களை காட்டித் தரவில்லை, பொதுவாக எதுவெல்லாம் வணக்கங்களோ அதனை விரும்பிய அடிப்படையில் ஒருவன் செய்யலாம். சுருக்கம் இரவை உயிர்ப்பித்தல்.

அடுத்து; நபிகளார் காட்டித்தராத விதத்தில் (அது ஒரு புதிய செயலாகவோ (ஸலாதுர் ரகாஇப் போன்று, தவ்பா மஜ்லிஸ் போன்று) , அல்லது விதத்திலோ (தராவீஹ், கியாமுல்லைல் பதினொன்று, வித்ர் வேறு, தஹஜ்ஜுத் வேறு என்று தொழுவது போன்று), அல்லது எண்ணிக்கையிலோ (ஆயிரம் திக்ருகள் ஸலவாத் போன்று), அல்லது நேரத்திலோ இந்த நேரத்தில் இந்த அமல் என்று குறிப்பாக்குவது) செய்வதை தவிர்த்தல்.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: இந்த மார்க்கத்தில் இல்லாததை யாராவது புதிதாக உருவாக்கினால் அது ஏற்கப்படமாட்டாது. (புகாரி:2697, முஸ்லிம்)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: யாராவது எங்களது வழிகாட்டல் ஏவல் இல்லாத ஒரு காரியத்தை அமலை செய்தால் அது நிராகரிக்கப்படும். (முஸ்லிம்)

நபி ஸல் அவர்கள் தனது உரையின் போது ‘அம்மா பஃத் என்று கூறிவிட்டு, பேச்சில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடைமுறையில் சிறந்தது முஹம்மத் ஸல் அவர்களின் நடைமுறை, கருமங்களில் மிக மோசமானது அதில் புதிதாக உருவாக்கப்பட்டவை, நூதனம் (பித்அத்) ஒவ்வொன்றும் வழிகேடே.’ என்று கூறுவார்கள். (முஸ்லிம், புகாரியில் 7277, இப்னு மஸ்ஊத் ரலி அவர்களின் கூற்றாக பதியப்பட்டுள்ளது.

எனவே புதுமைகளை உருவாக்காமல் அவரவர்களின் சக்திக்கு ஏற்ப அந்த இரவுகளில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடலாம். குர்ஆன் ஓதுதல், திக்ருகள் செய்தல், ஸலவாத் சொல்லுதல், நின்று வணங்குதல், துஆ செய்தல், இஸ்திஃபார் செய்தல், தர்மம் செய்தல் இப்படி எந்த அமலும் செய்யலாம். (அல்லாஹு அஃலம்)

குறிப்பிட்டு ஏதும் துஆக்கள் இருக்கின்றனவா?

ஆஇஷா ரலி அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! கத்ருடைய இரவுக்கு நான் நேர்பட்டால் என்ன பிரார்த்திப்பது?’ என்று கேட்கவே, நபியவர்கள் ‘ “اللَّهُمَّ، إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ، فَاعْفُ عَنِّي” அல்லாஹும்ம இன்னக அபுவ்வுன் துஹிப்புல் அப்வ பஃபு அன்னீ  என்று கூறுமாறு கூறினார்கள். (அல்லாஹ்வே! நீ மன்னிப்பை விரும்புபவன், என்னை மன்னிப்பாயாக! (அஹ்மத்:25384,25495)

உபய்யுப்னு கஃப் ரலி அவர்கள் ‘யாராவது கத்ருடைய இரவில் ‘லாஇலாஹ அல்லாஹ்’ என்று மூன்று தடவைகள் கூறினால்,  ஒன்றினால் பாவம் மன்னிக்கப்பட்டு, அடுத்ததால் நரகிலிருந்து விடுதலை கிடைத்து, மற்றதால் சுவனம் நுழைவிக்கப்படுவார்.’ என்று கூறியதாக வந்துள்ளது அதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமாகும்.

லைலதுல் கத்ர் விஷயத்தில் தவறான கருத்து;

லைலதுல் கத்ர் என்பது ரமலான் மாதத்திற்கு சொந்தமானதே, அதுவே பரக்கத் செய்யப்பட்ட இரவு, இது அல்குர்ஆனினதும், ஸுன்னாவினதும் தெளிவான சான்றாகும்.

حٰمٓ , وَالْكِتٰبِ الْمُبِيْنِ , اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏

ஹாமீம்.1, தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!2, நிச்சயமாக நாம், இதனைப் பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம், (44:1-3)

அந்த இரவு இருக்கும் மாதம் ரமலான் மாதமே, அல்லாஹ் கூறுகின்றான்.

شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ

ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும். நேர்வழியின் தெளிவுகளாகவும் (சத்திய அசத்தியத்தைப்) பிரித்துக் காட்டக் கூடியதாகவும் உள்ள இந்தக் குர்ஆன் இறக்கியருளப்பட்டது.  (2:185)

ஆஇஷா ரலி அவர்கள், நபியவர்கள் கூறியதாக கூறினார்கள்: நீங்கள் கத்ருடைய இரவை ரமளானின் கடைசி பத்தில் ஓற்றையில் தேடுங்கள்.  (புகாரி:2017,2020, முஸ்லிம்)

இதற்கு மாற்றமாக சிலர் ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் கதரைக் கண்டதாக கூறும் செய்திகள் தவறானதாகும்.

ஸூரதுல் கத்ர் விளக்கம் முடிவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *