சூரத்துல் அஃலா விளக்கவுரை

بسم الله الرحمن الرحيم

تفسير سورة لأعلى

சூரத்துல் அஃலா விளக்கவுரை

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!

பெயர்:    அஃலா: (மிக்க மேலானவன்)

இறங்கிய காலப்பகுதி: மக்கீ

வசன எண்ணிக்கை:  வசனங்கள்: 19

இந்த ஸூரா மக்கீ வகையை சார்ந்தது என்பதை பின்வரும் நபிமொழியை வைத்து அடையாளப்படுத்தலாம்.

  • பராஃ  இப்னு ஆஸிப்(ரலி) அவர்கள் கூறினார்கள்; நபித்தோழர்களில் (நாடு துறந்து மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் ‘முஸ்அப் இப்னு உமைர்'(ரலி) அவர்களும், ‘இப்னு உம்மி மக்தூம்'(ரலி) அவர்களும் தாம். அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தந்தார்கள். பிறகு, அம்மார்(ரலி), பிலால்(ரலி), ஸஃத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் இருபது பேர் (கொண்ட குழு) உடன் உமர் இப்னுல் கத்தாப்(ரலி) வந்தார்கள். அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் வருகை புரிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள(து வருகையா)ல், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவிற்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், ‘இதோ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்’ என்று கூறி (மகிழலாயி)னர். நான், ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா’ எனும் (87 வது) அத்தியாயத்தை, அது போன்ற (மற்ற முபஸ்ஸல்) அத்தியாயங்களுடன் ஓதும் வரையில் நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வருகை தரவில்லை.  (புஹாரி: 4941)

அதன்  சிறப்புகள்:

தொழுகையில் சிரமமின்றி தொழுவதற்காக நபியவர்களால் ஓதுவதற்கு காட்டிக்கொடுக்கப்பட்டது,

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)அவர்கள் கூறினார்கள்:ஒருவர் (தண்ணீர் இறைப்பதற்குரிய) இரண்டு கமலைகளை எடுத்துக் கொண்டு இருள் சூழ்ந்த நேரத்தில் வந்தார். முஆத்(ரலி) (இஷாத்) தொழுகை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் தம் கமலைகளை வைத்துவிட்டு முஆத்(ரலி) உடன் தொழுகையில் சேர்ந்தார். முஆத்(ரலி) ‘பகரா’ அல்லது ‘நிஸா’ அத்தியாயத்தை ஓதலானார்கள். உடனே அந்த மனிதர் (தொழுகையை)விட்டுவிட்டுச்) சென்றார்.இது பற்றி முஆத்(ரலி) குறை கூறியது அந்த மனிதருக்குத் தெரியவந்தபோது, நபி(ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றி முறையிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘முஆதே! நீர் குழப்பம் ஏற்படுத்துபவரா?’ என்று மும்முறை கேட்டார்கள். ‘ஸப்பிஹிஸ்மரப்பி’, வஷ்ஷம்ஸி வளுஹாஹா வல்லைலி இதாயக்ஷா’ ஆகிய அத்தியாயங்களை ஓதி நீர் தொழுகை நடத்தக் கூடாதா? நிச்சயமாக உமக்குப் பின்னால் முதியவர்கள், பலவீனர்கள், அலுவலுடையவர்கள் உள்ளனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:705, முஸ்லிம்)

இரு பெருநாட்களிலும், வெள்ளிக்கிழமையிலும் தொழுகையில் ஓதல்,

நுஹ்மான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறினார்களால் : நபி ஸல் அவர்கள் இரு பெருநாட்களிலும் ஜும்ஆவிலும் ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா ஹல் அதாக’  ஆகிய சூராக்களை ஓதுவார்கள், அவ்விரண்டும் ஒரே நாளில் வந்தால் இரண்டு தொழுகைகளிலும் அவ்விரண்டையும் ஓதுவார்கள்.  (முஸ்லிம்)

வித்ர் தொழுகையில் ஓதல்,

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் வித்ர் தொழுகையில் ‘ஸப்பிஹிஸ்ம, குல் யாஅய்யுஹல் காபிரூன், குல் ஹுவல்லாஹு அஹத்’ ஆகிய சூராக்களை ஓதுவார்கள். (அஹ்மத்: 2725, 2726)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ‏

சொல் விளக்கம்: 

سَبِّحِ  துதிப்பீராக,    اسْمَ  பெயர்,    رَبِّكَ   உம் இறைவன்,   الْاَعْلَىۙ‏  மிக உயர்ந்தவன்

(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக. (87:1)

الَّذِىْ خَلَقَ فَسَوّٰى‏

الَّذِىْ خَلَقَ   அவன்தான் படைத்தான்,   فَسَوّٰى   இன்னும் ஒழுங்குபடுத்தினான்

அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.(87:2)

படைத்தவன் அல்லாஹ் படைப்புகளை ஒவ்வொன்றிற்கும் ஏற்றாற்போல் வடிவமைத்துள்ளான். இதனை புரிந்தே அந்த அல்லாஹ்வை துதிக்க வேண்டும்.

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ    நிச்சியமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (95:4)

يٰۤاَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ‏     மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?6,  الَّذِىْ خَلَقَكَ فَسَوّٰٮكَ فَعَدَلَـكَۙ‏ அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.7, فِىْۤ اَىِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَؕ‏ 8. எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.(82:6-8)

 وَالَّذِىْ قَدَّرَ فَهَدٰى‏

وَالَّذِىْ قَدَّرَ   அவன்தான் நிர்ணயம் செய்தான்,   فَهَدٰى   இன்னும் வழிகாட்டினான்

மேலும், அவனே அளவுபட நிர்ணயித்து  நேர்வழி காட்டினான்.(87:3)

ஒவ்வொரு படைப்பினத்துக்குமான விடயங்கள் அனைத்தையும் நிர்ணயித்த அல்லாஹ், எப்படி வாழவேண்டும் என்பதற்கான வழியையும் காட்டிக்கொடுத்தான். மனிதர்களுக்கு நல்ல  வழி, கெட்ட வழி என்ற இரண்டு வழிகள் அவனை சோதிப்பதற்காக காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது, ஏனைய படைப்புகளுக்கு வாழ்வதற்கான வழி காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான்:

قَالَ رَبُّنَا الَّذِىْۤ اَعْطٰـى كُلَّ شَىْءٍ خَلْقَهٗ ثُمَّ هَدٰى    “ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்” என்று கூறினார்.(20:50)

وَهَدَيْنٰهُ النَّجْدَيْنِ‌ۚ‏   அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.(90:10)

قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ‌ۚ فَمَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِىْ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا‌ۚ وَمَاۤ اَنَا عَلَيْكُمْ بِوَكِيْلٍؕ‏   (நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர் தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்.” (10:108. )

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: நிச்சியமாக அல்லாஹ், வானங்கள் பூமியை படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே படைப்புகளுக்கான நிர்ணயங்களை தீர்மானித்துவிட்டான், அவனது ஆசனம் (அர்ஷ்) நீருக்கு மேல் இருந்தது. (முஸ்லிம்)

 وَالَّذِىْۤ اَخْرَجَ الْمَرْعٰى‏

وَالَّذِىْۤ اَخْرَجَ   அவன்தான் வெளியாக்கினான்,   الْمَرْعٰى   பசுமையான புல்(மேயும் இடம்)

அன்றியும் அவனே மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.(87:4)

 فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰىؕ‏

فَجَعَلَهٗ   இன்னும் அதை ஆக்கினான்,   غُثَآءً   சருகாக,   اَحْوٰىؕ‏   கருத்த (காய்ந்த)

பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.(87:5)

இந்த உலகில் உள்ள மனிதன் உற்பட எல்லா உயிரினங்களும் உண்ணுவதற்கும், மேய்வதற்கும் ஏற்றாற்போல் பயிர் நிலங்களையும்  மேயும் தளங்களையும் வெளிப்படுத்தி வாழ்க்கை வசதியை அல்லாஹ்வே ஏற்படுத்திக் கொடுக்கிறான், அவன் நாடுகின்ற நேரம் அவற்றை அளித்து, காய்ந்த சருகுகளாக  ஆக்கிவிடவும் சக்தியுள்ளவன் அல்லாஹ்வே.

எனவே 1-5 வரையான வசனங்கள் மூலம் அல்லாஹ்வை ஏன் துதிக்க வேண்டும், எப்படி துதிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டலை அல்லாஹ் வழங்குகிறான், இந்த உலகில் உள்ள எந்த படைப்பினங்களை ப் பார்த்தாலும், ஆச்சர்யமான காட்சிகளை கண்டாலும் அத்துணை புகழும் படைப்பாளன் அல்லாஹ்வே அதற்கு சொந்தக்காரன் என்பதை புரிந்து, அவனையே ‘ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹ் தூய்மையானவன்’ என்ற வார்த்தை மூலம் துதிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الْاَلْبَابِ‏    நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.    الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏   அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;) (3:190,191)

سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰٓىۙ‏

سَنُقْرِئُكَ   உமக்குக் கற்பிப்போம்,   فَلَا تَنْسٰٓىۙ‏    ஆகவே நீர் மறக்க மாட்டீர்

(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்- (87:6)

இந்த வசனம் மூலம் அல்லாஹ் நபியவர்களை அமைதிப்படுத்துகிறான், ஏனெனில் நபியவர்களுக்கு, மறந்துவிடுவோமோ என்ற அச்சம் இருந்திருக்கலாம். அல்லாஹ் சூரத்துல் கியாமாவில் பின்வருமாறு கூறுகின்றான்:

لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖؕ‏  (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர். اِنَّ عَلَيْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗۚ  ۖ‏ நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ‌ۚ‏ எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். ثُمَّ اِنَّ عَلَيْنَا بَيَانَهٗؕ‏ பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. (75:16-19)

வசனத் தொடர்பு; முந்தைய வசனங்களில் படைப்பினங்களை படைப்பதிலும் பராமரிப்பதிலும் பூர்த்தியான அல்லாஹ், அல்குர்ஆன் ஆகிய வஹியை இறக்கி, அதனை பாதுகாப்பதிலும் பூர்த்தியானவன், ஆற்றல் மிக்கவன் என்பதே. அல்லாஹ் கூறுகின்றான்:

اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏    நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.(15:9)

اِلَّا مَا شَآءَ اللّٰهُ‌ؕ اِنَّهٗ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفٰىؕ‏

اِلَّا  தவிர,    مَا  ஒரு விடயம்   شَآءَ   அவன் நாடினான்,   اللّٰهُ‌ؕ   அல்லாஹ்,   اِنَّهٗ   நிச்சயமாக அவன்,   يَعْلَمُ அறிவான்,   الْجَهْرَ   வெளிப்படையானது, وَمَا     இன்னும் ஒரு விடயம்     يَخْفٰى‏   அது மறையும்

அல்லாஹ் நாடியதை அல்லாமல் – நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான். (87:7)

இந்த வசனம் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துவது;

அதே நேரம் அல்லாஹ் அவனாக விரும்பி ஒன்றை மாற்றவோ, மறக்கடிக்கச் செய்யவோ விரும்பினால் அதற்கும் அவன் தகுதியுடையவனே. நபிகளாராக  ஒரு வேத வசனத்தை அடியோடு மறக்கமாட்டார்கள், அப்படி மனிதன் என்ற அடிப்படையில் மறந்தாலும் அல்லாஹ் உடனே நினைவுபடுத்திவிடுவான்.

مَا نَنْسَخْ مِنْ اٰيَةٍ اَوْ نُنْسِهَا نَاْتِ بِخَيْرٍ مِّنْهَآ اَوْ مِثْلِهَا ‌ؕ اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏    ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?  (2:106)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:……..  என்றாலும் நானும் உங்களைப் போன்ற மனிதன்தான். நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்து விடுவேன். நான் (எதையாவது) மறந்துவிட்டால் எனக்கு ஞாபகப்படுத்துங்கள்.  (புஹாரி:401, முஸ்லிம்)

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஒருவர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதைக் கேட்டு,’ஆயிஷாவே, இது அப்பாதின் குரலா?’ என்று கேட்டார்கள். ‘ஆம்’ என்று நான் பதிலளித்ததும்  ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தியாயத்திலிருந்து மறந்து விட்டிருந்த இன்னின்ன வசனத்தை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்’ என்று கூறினார்கள். (புஹாரி:2655,5037, முஸ்லிம்)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான்மறந்துவிட்டேன் என்று ஒருவர் கூறுவதே அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். உண்மையில், அவர் மறக்கடிக்கப்பட்டுவிட்டார். குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்தி வாருங்கள். ஏனெனில், ஒட்டகங்களை விடவும் வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும். (புஹாரி: 5039,5032,முஸ்லிம்)

அடுத்து இந்த வசனத்தில் அல்லாஹ்வின் அறிவின் விசாலம் எடுத்துக் காட்டப்படுகின்றது,  நபிகளார் ஒன்றை மறப்பார்களா மாட்டார்களா என்ற உள்ளத்தை அறிகின்ற ஆற்றலும் அல்லாஹ்வுக்கு இருக்கின்றது, அவர்கள் வெளிப்படையாக மறைத்தாலோ {அதிலிருந்தும் பாதுகாக்கப்பட்டவர் அவர்கள்} அதனையும் அல்லாஹ் அறிவான் என்பதை எடுத்துக்காட்டி, மனித சமூகத்திற்கு அல்லாஹ் ஓர் எச்சரிக்கை விருக்கின்றான். மனிதன் வெளிப்படையாக தவறு செய்தாலும் மறைமுகமாக செய்தாலும் அல்லாஹ் அதனை அறிவான், மறுமை நாளில் அதனை விசாரிப்பான் என்பதே அந்த எச்சரிக்கை!

وَنُيَسِّرُكَ لِلْيُسْرٰى ‌ۖ‌ۚ‏

وَنُيَسِّرُكَ     நாம் உமக்கு இலகுவாக்குவோம்,        لِلْيُسْرٰى ۖ‌ۚ‏      இலேசானதளவில்

அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.(87:8)

நபிகளாருக்கு அல்லாஹ் இறக்கிவைக்கும் குர்ஆனே மார்க்கத்தை சொல்லிக் கொடுக்கும் என்பதால், அதன் உறுதித் தன்மையை எடுத்துச் சொன்ன அல்லாஹ், அந்த மார்க்கம் அனைவராலும் பின்பற்ற முடிந்த, இலகுவான, தவறுகள் அற்றது என்பதை இந்த வசனம் எடுத்துரைக்கின்றது.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:’நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும்…….. (புஹாரி:39, முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்:’இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்’ (புஹாரி:69, முஸ்லிம்)

فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰىؕ‏

فَذَكِّرْ   ஆகவே, அறிவுரை கூறுவீராக,   اِنْ نَّفَعَتِ   பலனளித்தால்,   الذِّكْرٰىؕ‏   அறிவுரை

ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.(87:9)

இந்த வசனம் மூலம் அல்லாஹ், அவன் இறக்கிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்யுமாறும், அதனை வைத்து வஹியை ஏற்றுக்கொள்ளும் முஃமின்களுக்கு அறிவுரை செய்யுமாறு பணிக்கின்றான். அதே நேரம் பிடிவாதம் பிடித்து, சத்தியத்தை தெரிந்து கொண்டே மறுப்போருக்கு அறிவுரை செய்து பயனில்லை என்பதையும் இந்த வசனம் சுட்டிக்காட்டுகின்றது.

அலி (ரலி) அவர்கள் : ‘மக்களிடம் அவர்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பொய்யர்களென கருதப்படுவதை நீங்கள் விரும்புவீர்களா?’ என்று கூறுவார்களாம். (புஹாரி:127)

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள்: ‘ஒரு சமூகத்தின் புத்தி அடைந்துகொள்ளாத ஒரு செய்தியை அவர்களுக்கு சொல்வது, அவர்களில் சிலரை குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.’ என்று கூறுவார்களாம். (முஸ்லிம்,முன்னுரை)

‘எனவே, மனிதர்களை மூன்று சாராராக நோக்கலாம்; சத்தியத்தை விளங்கி ஏற்றுக்கொள்பவர்கள், சத்தியமா, அசத்தியமா என்ற குழப்பத்தில் இருப்பதோடு, ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்ற சந்தேகத்திற்கு இடமானவர்கள், தெரிந்துகொண்டே பிடிவாதத்திற்கு மறுப்பவர்கள். இவர்களில் மூன்றாவது சாராரைத் தவிர்த்து அடுத்தவர்கள் அறிவுரை செய்யப்பட வேண்டியவர்களே.’ (அல்வாஉல் பயான்)

سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ‏

سَيَذَّكَّرُ  அறிவுரை பெறுவார்,   مَنْ   எவர், ஒருவர், யார்       يَّخْشٰىۙ‏   பயப்படுகிறார்

(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் உபதேசத்தை ஏற்பான். (87:10)

இந்த வசனம் யாருக்கு உடனே அறிவுரை பயனளிக்கும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது, இதில் முஃமிங்களுக்கு தனது ஈமானை நிரூபித்துக்கொள்ள சிறந்ததோர் வழி இருக்கின்றது, அதுதான், ‘குர்ஆன் நபி வழி போதனைகளை கேட்கின்ற போது அதனை ஏற்கும் வீதம் எவ்வளவு, கணக்கெடுக்காமல் மறுக்கும், புறக்கணிக்கும் வீதம் எவ்வளவு? என்று சிந்திப்பதாகும்., இதுவே எமது ஈமான், இறையச்சம் ஆகியவற்றை தீர்மானிக்கும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ‏    மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும். (51:55)

وَيَتَجَنَّبُهَا الْاَشْقَىۙ‏

وَيَتَجَنَّبُهَا   இன்னும் அதைத் தவிர்த்துவிடுவான்,   الْاَشْقَىۙ‏   பெரும் துர்ப்பாக்கியவான்

ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான். (87:11)

இந்த வசனம் மூலம் அறிவுரைகள் யாருக்கு பயனளிக்காது என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது, அவர்களே பாக்கியத்தை இழந்தவர்கள். அதேநேரம் அறிவுரைகளை வேண்டுமென்றே புறக்கணிப்பவர்கள் தங்களது இறையச்சத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

அபூ வாகித் அல்லைஸீ (ரலி) அவர்கள்  கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றுவிட்டார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். நபி (ஸல்) அவர்கள் (கூட்டத்திலிருந்து) முடிந்ததும்,’அந்த மூன்று நபர்கள் பற்றி சொல்லித்தரட்டுமா! அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார், அல்லாஹ்வும் அவரை சேர்த்துக்கொண்டான், அடுத்தவர் வெட்கப்பட்டார், அல்லாஹ்வும் அவர் விடயத்தில் வெட்கப்பட்டான், அடுத்தவர் புறக்கணித்து சென்றார், அல்லாஹ்வும் அவரை புறக்கணித்தான்.’ என்று கூறினார்கள். (புஹாரி:66)

الَّذِىْ يَصْلَى النَّارَ الْكُبْرٰى‌ۚ‏

الَّذِىْ   அவன், ஒருவன்      يَصْلَى   நுழைவான்,    النَّارَ    நெருப்பு,   الْكُبْرٰى‌ۚ‏   மிகவும் பெரியது

அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான். (87:12)

இப்படிப்பட்ட இஸ்லாமிய அறிவுரைகளை புறக்கணிக்கும்  மனிதர்கள் ஒதுங்குமிடம் நரகம் என்பதும் அஞ்சவேண்டிய அம்சமாகும், அதனையே அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான்,

எனவே யார் துர்ப்பாக்கியம் அடைகின்றானோ அவன் நரகம் நுழைவதும் அதில் நிரந்தரமாக இருப்பதும் உறுதியானதே. அல்லாஹ் கூறுகின்றான்:

فَاَمَّا الَّذِيْنَ شَقُوْا فَفِى النَّارِ لَهُمْ فِيْهَا زَفِيْرٌ وَّشَهِيْقٌ ۙ خٰلِدِيْنَ فِيْهَا …….. ‏   துர்பாக்கிய சாலிகள் (நரக) நெருப்பில் இருப்பார்கள். அதில் அவர்களுக்கு பெருங்கூச்சலும், முணக்கமும்(தான்) இருக்கும். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (11:106,107)

ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰىؕ‏

ثُمَّ   பிறகு,   لَا يَمُوْتُ    மரணிக்க மாட்டான்,   فِيْهَا   அதில்,   وَلَا يَحْيٰىؕ‏   இன்னும் வாழமாட்டான்

பின்னர், அதில் அவன் மரணிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.(87:13)

எனவே யார் இஸ்லாமிய அறிவுரைகளை புறக்கணித்து நரகில் நுழைகின்றானோ அவன் அதில் நிரந்தரமாகவே இருக்கப்போகின்றான், அங்கு அவனுக்கு நிம்மதியாக வாழவும் முடியாது, நிம்மதியடையும் பொருட்டு மரணிக்கவும் முடியாது, அந்த அளவு படுமோசமானது அந்த நரகம். அதே நேரம் இறைநம்பிக்கையுடன் மரணித்திருந்தால் ஒரு நாள் அவன் நரகில் இருந்து வெளியேற்றப்பட்டு, சுவனத்தில் நுழைவிக்கப்படுவான் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படை.

அல்லாஹ் கூறுகின்றான்:

وَنَادَوْا يٰمٰلِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ‌ؕ قَالَ اِنَّكُمْ مّٰكِثُوْنَ‏     மேலும், அவர்கள் (நரகத்தில்) “மாலிக் அவர்களே!” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் “நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார். (43:77)

وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَ‌ۚ لَا يُقْضٰى عَلَيْهِمْ فَيَمُوْتُوْا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَا ؕ كَذٰلِكَ نَـجْزِىْ كُلَّ كَفُوْرٍۚ‏    எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது; அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது; அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது; இவ்வாறே மறுப்பாளர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம். (35:36)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகத்திற்கே உரியவர்களான நரகவாசிகள் நரகத்தில் இறக்கவும்மாட்டார்கள்; வாழவும்மாட்டார்கள். ஆனால், “தம் பாவங்களால்” அல்லது “தம் குற்றங்களால்” நரக நெருப்பிற்கு ஆளான மக்களை உடனே இறைவன் இறக்கச் செய்துவிடுவான். அவர்கள் கரிக் கட்டையாக மாறிவிடும் போது (அவர்களுக்காகப்) பரிந்துரை செய்ய அனுமதி வழங்கப்படும். உடனே அவர்கள் தனித் தனிக் கூட்டங்களாகக் கொண்டுவரப்பட்டு, சொர்க்க நதிகளில் பரப்பி வைக்கப்படுவர். பிறகு “சொர்க்கவாசிகளே! அவர்கள்மீது தண்ணீரை ஊற்றுங்கள்” என்று கூறப்படும். (அவ்வாறே ஊற்றப்படும்.) உடனே அவர்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) மாறி விடுவார்கள்.  (முஸ்லிம்)

அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அவர்கள் கூறினார்கள்:  (மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்க வாசிகள் சொர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு ‘ஹயாத்’ என்ற ஆற்றில் போடப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் அந்த ஆற்றில் போடப்பட்டதும் பெரும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போன்று பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா?’ என்று  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:22, முஸ்லிம்)

அடுத்து அல்லாஹ் மறுமையில் வெற்றிபெறுவோரையும், அவர்களது பண்புகளையும் எடுத்துரைக்கிறான்.

قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ‏

قَدْ   திட்டமாக,   اَفْلَحَ   வெற்றி பெற்றார்,   مَنْ   எவர், ஒருவர், யார்     تَزَكّٰىۙ‏  பரிசுத்தமடைந்தார்

தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான். (87:14)

وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰى‌ ؕ‏

وَذَكَرَ   இன்னும் நினைவு கூர்ந்தார்,   اسْمَ   பெயர்,   رَبِّهٖ   தன் இறைவன்,   فَصَلّٰى‌ ؕ‏   இன்னும் தொழுதார்

மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான். (87:15)

இந்த வசனம் யாரெல்லாம் தனது உள்ளத்தை கெட்ட குணங்களில் இருந்து சுத்தப்படுத்திக்கொண்டு, தனது ரப்பாகிய அல்லாஹ்வை நினைவுபடுத்திக்ககொண்டு, தொழுகையையும் பேணி வருகின்றாரோ அவரே மறுமையில் வெற்றி பெறக்கூடியவர் என்பதை உணர்த்துகின்றது.

சில விரிவுரையாளர்கள், ‘தஸக்கா’ என்பதை கட்டாய சதகாவை ஸகாத்தை கொடுத்து வருபவர் என்றும் கூறுகின்றனர்.

எனவே உள்ளத்தை சுத்தப்படுத்தி, அல்லாஹ்வை நினைவுபடுத்திக்ககொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாதும் கொடுத்து வருவதே வெற்றியாளனின் பண்புகள் என்பது தெளிவாகின்றது, ஆனாலும் அதிகமான மனிதர்கள் அல்லாஹ்வை மறந்து, தொழுகையை பால்படுத்தி உலக வாழ்க்கைதான் வாழ்க்கை என்று வாழுகின்றனர், மறுமையையும், அதன் மகிமையையும் மறந்து விடுகின்றனர், இதுவே ஒரு மனிதன் தோல்வி அடைவதற்கு காரணமாகிவிடுகின்றது, இதனையே அல்லாஹ் பின்வரும் வசனங்களில் கோடிட்டு காட்டுகின்றான்.

بَلْ تُؤْثِرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا ۖ‏

بَلْ   மாறாக,   تُؤْثِرُوْنَ    தேர்ந்தெடுக்கிறீர்கள்,   الْحَيٰوةَ    வாழ்வு ,    الدُّنْيَا ۖ‏    உலகம்

எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். (87:16)

 وَالْاٰخِرَةُ خَيْرٌ وَّ اَبْقٰىؕ‏

وَالْاٰخِرَةُ   மறுமை,   خَيْرٌ    மிகச் சிறந்தது,   وَّ اَبْقٰىؕ‏    இன்னும் என்றும் நிலையானது

ஆனால் மறுமை (வாழ்க்கை)யே சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். (87:17)

‘அல் ஹயாதுத் துன்யா’ என்றாலே கீழ்த்தரமான வாழ்க்கை என்று பொருள்படும், இது, உலக வாழ்க்கைக்கு அல்குர்ஆன் பெரும்பாலும் பயன்படுத்தும் வார்த்தையாகும், ஆனால் மறுமை வாழ்க்கை என்பது நிரந்தரமானது, மனிதனுக்கு சிறந்ததும்  கூட. ஆனால் உலகத்தின் நிரந்தரமற்ற, அற்ப இன்பத்தில் மயங்கி மறுமை பாக்கியங்களை இழந்துவிடுகிறான் மனிதன்.

அல்லாஹ் கூறுகின்றான்:

كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۙ‏ எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதை(உலக வாழ்க்கையை)யே பிரியப்படுகிறீர்கள்.20,  وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ؕ‏  ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள். (75:20,21)

مَنْ كَانَ يُرِيْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهٗ فِيْهَا مَا نَشَآءُ لِمَنْ نُّرِيْدُ ثُمَّ جَعَلْنَا لَهٗ جَهَنَّمَ‌ۚ يَصْلٰٮهَا مَذْمُوْمًا مَّدْحُوْرًا‏ எவர்கள் இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்.18, وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤٮِٕكَ كَانَ سَعْيُهُمْ مَّشْكُوْرًا‏  இன்னும் எவர் மறுமையை நாடி, முஃமினாகவும் இருந்து, அதற்காக முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும். (17:19)

اِنَّ هٰذَا لَفِى الصُّحُفِ الْاُوْلٰىۙ‏

اِنَّ   நிச்சயமாக,   هٰذَا   இது,   لَفِى الصُّحُفِ   வேதங்களில்,   الْاُوْلٰىۙ‏   முந்தியது

நிச்சயமாக இது முந்திய வேதங்களிலும்- (87:18)

صُحُفِ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى‏

صُحُفِ   வேதங்கள்,   اِبْرٰهِيْمَ   இப்றாஹீம்,   وَمُوْسٰى   இன்னும் மூஸா

(என்றால்) இப்ராஹீம், மூஸாவினுடைய ஏடுகளிலும்  இருக்கிறது. (87:19)

இந்த இரு வசனங்களும் ஸூரதுன் நஜ்மில் வருவது போன்ற செய்தியாகும்.

اَمْ لَمْ يُنَبَّاْ بِمَا فِىْ صُحُفِ مُوْسٰىۙ‏, அல்லது, மூஸாவின் ஸுஹுஃபில் – வேதத்தில் இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?36  وَاِبْرٰهِيْمَ الَّذِىْ وَفّٰىٓ  ۙ‏,   (அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஏடுகளிலிருந்தும் அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?) (53:36,37……..)

இந்த இரண்டு வசனங்களிலும் நாடப்படுவது என்ன என்று விரிவுரையாளர்கள் பல கருத்துக்களை கூறியுள்ளார்கள்; சிலர் ‘இந்த சூரா முழுவதும் மூஸா இப்ராஹீம் அவர்களது ஏடுகளில் உள்ளது’ என்றும், சிலர் ‘கத் அப்லஹ என்று வரும் வெற்றியாளர்கள் பற்றிய செய்தியே வந்துள்ளது’ என்றும் கூறுகின்றனர்.

இதுவே இந்த சூராவின் முடிவாகும், அல்லாஹு அஃலம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *