அகீதா – 17 வஸீலா தேடுதல்

வஸீலா தேடுதல்:

PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும் !!!

வஸீலா என்றால் ஒன்றை அடைவதற்கான வழி, சாதனம் என்று பொருள். இன்று வஸீலா என்பதை நல்லடியார்களைக் கொண்டு அவர்களின் பொறுட்டால் அல்லாஹ்வை நெறுங்குவது என்ற கறுத்தில் அதிகமான முஸ்லிம்களால் பாவிக்கப்படுகின்றது.

இப்படி அா்த்தம் கொள்வதற்கு குர்ஆனிலோ அல்லது ஹதிஸிலோ சான்றுகள் ஏதும் இருக்கின்றதா? என்று பார்த்தால் தெளிவாக எந்த சான்றுகளும் இல்லை. அல்லாஹ் அல்குர்ஆனில் இரண்டு இடங்களில் வஸீலா என்ற சொல்லை பாவிக்கின்றான். அந்த இரண்டு இடங்களிலும் அல்லாஹ்விடம் நெறுக்கத்தை தேடுவதையே குறிபிடுகின்றான். எனவே அல்லாஹ்வை நெறுங்குவதென்பது வணக்க வழிபாடுகள் மூலமே உருவாகும். எனவே அல்லாஹ்வை நெறுங்க நாம் செய்யும் வணக்கங்களே வஸீலாவக அமையும்.

மேலும் வஸீலா என்பது மறுமையில் நபிகளாருக்கு கிடைக்கும் அந்தஸ்து என்பதையும் ஹதீஸ்களில் பார்க்கமுடியும். இக்கறுத்துக்களுக்கு மாறாக இன்று சிலர் கூறுவதை போன்று ஒரு மனிதனைக் கொண்டு அல்லாஹ்வை நெறுங்குவது என்ற அறுத்தம் அதற்கு இல்லை என்பதையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.

 • முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன்பால் நெருங்குவதற்குரிய (வஸீலாவை) வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போர்புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம். (5:35)
 • (அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை (வஸீலாவை) செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது. (17:57)

எனவே அல்லாஹ்விடம் நெறுங்குவதற்காக செய்யப்படும் வணக்கங்கள்தான் வஸீலா எனப்படும்.

 • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாங்கு சொல்வதைக் கேட்ட பின், ‘பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!’ என்ற துஆவை ஓதுகிறவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்து விடுகிறது’.  (புஹாரி: 614)
 • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் பாங்கு சொல்வதை கேட்டால் முஅத்தின் சொல்வதைப் போன்று பதில் கூறுங்கள். பிறகு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் யார் என் மீது ஒரு விடுத்தம் ஸலவாத் சொல்கின்றாரோ அவர்மீது அல்லாஹ் பத்துவிடுத்தம் அருள் புறிகின்றான், பின்பு அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள், வஸீலா என்பது சுவனத்தில் உள்ள ஒரு அந்தஸ்தாகும், அது அல்லாஹ்வின் அடியார்களில் ஒரு அடியானுக்கே கிடைக்கும், அந்த அடியானாக நான் இருப்பதை ஆசைவைக்கின்றேன். யார் எனக்காக அந்த வஸீலாவைக் கேட்கின்றாரோ அவருக்கு எனது ஷபாஅத் கடமையாகிவிடும்.  (முஸ்லிம்)

அனுமதிக்கப்பட்ட வஸீலா (அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழி) முறைகள்:

நாம் செய்யும் நல்லறங்களை முன்வைத்து பிரார்தித்தல், அல்லாஹ்வை நெருங்குதல். உதாரணமாக, “இறைவா! எனது இந்த அமலைக் கொண்டு இந்த விடையத்தை நிறைவேற்றுவாயாக.” என்பதைப் போன்று.

 • எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; எனவே “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” (3:193)
 • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றனர்.                                                                                                                                                                         அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓரிடை வெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.                                                                                        மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு’ எனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.                                                                                                                  மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை; எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்கு’ எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.” (புஹாரி:2215, முஸ்லிம்)

அல்லாஹ்வி பெயர்கள், பண்புகளை முன்னிறுத்தி வேண்டுதல். உதாரணமாக; யா அல்லாஹ் நீ இறக்கமுள்ளவனாக இருக்கின்றாய், எனவே எனக்கு இறக்கம் காட்டுவாயாக. என்று கேட்பது போன்று.

 • அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள். அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் – அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள். (7:180)
 • ஜாபிர் (றழி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.                                                                                                                                                                                       (அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம்,                                                                                                                                             அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீபிருக்க பிஇல்மிக்க, வஅஸ்தக்திருக்க பிகுத்ரத்திக்க, வஅஸ்அலுக்க மின் பழ்லிக்கல் அழீம். பஇன்னக்க தக்திரு வலா அக்திரு. வதஃலமு வலா அஃலமு வஅன்த்த அல்லாமுல் குயூப். அல்லாஹும்ம இன்குன்த்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன்லீ பீதீனி, வமஆஷீ, வஆகிபதி அம்ரீபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹி பக்துர்ஹு லீ. வஇன் குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ தீனீ, வமஆஷீ, வஆஜிலிஹி பஸ்ரிப்ஹு அன்னீ, வஸ்ரிபினீ அன்ஹு, வக்துர் லியல் கைர ஹைஸுகான, ஸும்ம ரள்ளினீ பிஹி‘                                                                                                                                                                                                    என்று பிரார்த்தித்து, ‘உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்’ என்று கூறினார்கள்.                                              (பொருள்: இறைவா! நீ அறிந்துள்ள படி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளிலிருந்து கோருகிறேன். ஏனெனில், ‘நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கும் ‘என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்’ அல்லது ‘என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்’ நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு ‘என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.) (புஹாரி: 6382)
 • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதனுக்கு கவலையோ, துக்கமோ ஏற்பட்டு, அவன் ‘அல்லாஹ்வே நான் உனது அடிமை, உனது அடிமையின் மகன், எனது முன்னெற்றி ரோமம் உனது கையில் உள்ளது, உனது முடிவே என்னில் நடக்கும், உனது தீர்ப்பு நீதமானதே, உனது அனைத்து பெயரைக் கொண்டு உன்னிடம் கேட்கின்றேன், (நீ உனக்கு வைத்த பெயரோ, அல்லது நீ வேதத்தில் இறக்கிய பெயரோ, அல்லது நீ உனது படைப்பினத்தில் ஒருவருக்கு கற்றுக்கொடுத்த பெயரோ, அல்லது நீ உனது மறைவான அறிவில் தேர்வு செய்துவைத்திருக்கும் பெயரோ) உனது குர்ஆனை எனது உள்ளத்துக்கு வசந்தமாகவும், கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், எனது கவலையை போக்கக்கூடியதாகவும், துக்கத்தை நீக்கக்கூடியதாகவும் ஆக்கிவிடுவாயாக. என்று பிரார்த்தித்தால் அவனது துக்கத்தை போக்கி சந்தோசத்தை ஏற்படுத்துவான்.  (அஹ்மத், இப்னு ஹிப்பான்)

ஒருவரிடம் துஆ கேட்கச் சொல்வதும், அந்த துஆவை வைத்து நாம் பிரார்திப்பதும் ஆகுமானதே. உதாரணமாக ஒருவர் எமக்காக துஆ கேட்டால், யா அல்லாஹ் அவரது துஆவை என் விடையத்தில் ஏற்பாயாக என்பது போன்று.

 • உஸ்மான் பின் ஹுனைf என்ற தோழர் கூறினார்கள்: கண்பார்வை இழந்த ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து ‘எனக்கு நிவாரணம் அளிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தையுங்கள்’ என்று கூறினார், அதற்கு நபியவர்கள் ‘நீ விரும்பினால் நான் துஆ கேட்கின்றேன், நீ விரும்பினால் பொறுமையாக இரு, பொறுமையாக இருப்பது உனக்கு நல்லது.’ என்றார்கள். அதற்கவர் பிரார்த்தியுங்கள். என்றார். அப்போது நபியவர்கள் அவருக்கு அழகாக வுழூ எடுத்து இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு பின்வருமாறு துஆக் கேட்கச் சொன்னார்கள். ‘இறைவா இறக்கத்தின் நபி முஹம்மதாகிய எனது நபியைக் கொண்டு எனது தேவை நிறைவேறுவதற்காக உன்னை நோக்குகின்றேன், இறைவா என்னுடைய விடையத்தில் அவருடைய (நபிகளாரின்) வேண்டுகோளை ஏற்பாயாக, அவரது விடையத்தில் எனது வேண்டுகோளை ஏற்பாயாக.’  (அஹ்மத், திர்மிதீ)

 மேலும் உமர் (றழி) அவர்கள் அப்பாஸ் (றழி) அவர்களை முன்னிறுத்தி கேட்டது போன்றும்.

 • அனஸ்(றழி) அறிவித்தார்கள்: மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் பொழுது உமர்(றழி), அப்பாஸ்(றழி) மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். ‘இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய். (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக!’ என்று உமர்(றழி) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும். (புஹாரி: 1010)

 நபிகளார் காலத்தில் நபிகளாரைக் கொண்டு மழை கேட்டவிதம் பிரார்த்திக்கச் சொல்லியே.

 • அனஸ் இப்னு மாலிக்(றழி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தி பிரார்த்தித்தார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பாத்தேன். அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது.                                                                                                                                                                                                                        (மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்கின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி ‘இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!” என்று கூறினார்கள். மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) ‘கனாத்’ எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை.  (புஹாரி: 933)

குறிப்பிட்ட ஒரு மனிதனையோ, அவரது மதிப்பையோ முன்வைத்து வஸீலா தேடுவதற்கு எந்த தெளிவான சான்றுகளும் இல்லை. மாறாக அது ஷிர்க்கிற்கு இட்டுச் செல்லும் ஒரு காரணியாக அமைந்துவிடும். இன்றைய சமூகத்தில் இந்த நிலையை நிறையவே பார்க்கமுடியும்.

முதல் விடையம் நபிகளாருக்கு முன்னர் எதனையோ நபிமார்கள், நல்லவர்கள் மரணித்தார்கள். அவர்கள் யாருடைய பொறுட்டாலும் அல்லாஹ்வை நெறுங்கும் ஒரு முறையை நபிகளார் காட்டித்தரவில்லை.

ஆனால் இப்படி பொறுட்டால் கேட்பதை அனுமதிப்பவர்கள் முன்னால் கூறப்பட்ட இரண்டு ஹதீஸ்களையும் (கண் பார்வை இழந்தவரின் செய்தி, உமர் (றழி) அவர்களின் செய்தி) ஆதாரமாக காட்டி நபிகளாரின் பொருட்டாலும், நல்லவர்கள் பொருட்டாலும் கேட்பதை அனுமதிக்கின்றனர்.

 • குறிப்பு: அந்த இரண்டு ஹதீஸ்களையும் நன்றாக சிந்தித்து பார்த்தால் இப்படி அனுமதிப்பவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.அவை பின்வருமாறு:
 1. வெறுமனே இன்று கேட்பது போன்று கேட்க முடியும் என்றிருந்தால் ஏன் இரண்டு ஹதீஸிலும் நபிகளாரைத் தேடி வரவேண்டும். இன்றைக்கு கேட்பது போன்று எங்கிருந்தும் கேட்டிருக்கலாமே!
 • எனவே நபிகளாரை தேடி வந்து நபிகளாரிடம் துஆ கேட்குமாறு வேண்டினர் என்பது தெளிவு. இப்பொது எப்படி மரணித்த நபிகளாரை முன்னிறுத்தி கேட்கலாம்.
 1. உமர் (றழி) அவர்கள் ஏன் அப்பாஸ் (றழி) அவர்களைக் கொண்டு கேட்கவேண்டும், நபிகளாரை முன்னிறுத்தி கேட்டிருக்கலாமே,
 • அவர்கள் நபிகளாரிடம் படித்தது உயிர் உள்ளவரிடம் துஆ கேட்கச் சொல்வதையே, அதனால் தான் மரணித்துவிட்ட நபிகளாரின் பொறுட்டால் கேட்காமல், உயிரோடிருந்த அப்பாஸ்(றழி)  மூலம் மலை வேண்டினார்கள். வேண்டப்பட்டதையே உமர் அவர்கள் அல்லாஹ்விடம் முறைப்படு செய்தார்கள்.
 1. கண் பார்வை இழந்தவரின் ஹதீஸில் ‘நீ விறும்பினால் நான் துஆச் செய்கின்றேன்.’ என்று தெளிவாக வந்துள்ளதுடன், அவர், நபியே துஆ கேளுங்கள் என்றும் கூறுகின்றார். நபியைக் கொண்டு கேட்க முடியும் என்றிருந்தால் இப்படியெல்லாம் சொல்லத்தேவையில்லை. எனவே ஒருவரின் துஆவை வைத்தே அல்லாஹ்வை நெறுங்கமுடியும்.
 2. மேலும் நபிகளார் அல்லாஹ்வை நெறுங்கும் முகமாக வுழூ செய்து இரண்டு ரக்அத்கள் தொழுமாறும் ஏவுகின்றார்கள். பொறுட்டால் கேட்டல் கிடைக்கும் என்றால் சும்மா கேட்கச் சொல்லியிருக்கலாமே. மேலும் கண் பார்வை இழந்தவர் துஆ கேட்கும் போது ‘யா அல்லாஹ் என் விடையத்தில் நபிகளாரின் பரிந்த்ரையை ஏட்பாயாக’ என்று கேட்டதன் மூலம் நபிகளார் துஆ கேட்டார்கள். அந்த துஆவையே இவர் விடையத்தில் ஏற்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுகின்றார் என்பது தெளிவாக விளங்குகின்றது.                                                                                       மேலும் நபிகளாரின் விடையத்தில் (துஆவை ஏற்கும் விடையத்தில்) எனது பரிந்துரையை ஏற்பாயாக என்றும் சொல்லுமாறு ஏவுகின்றார்கள் என்றால், நபிகளாரின் பரிந்துரையை ஏட்கச் சொல்லும் எனது பரிந்துரையை ஏற்பாயாக என்பதே.

எனவே குறிப்பிட்ட ஒரு மனிதரைக்கொண்டு அவரது பொறுட்டால் கேட்கலாம் என்றிருந்தால் இத்துனை விடையங்கள் நடந்திருக்கத் தேவையில்லை. மறாக இன்று கேட்பது போன்று (நபிகளாரின், நல்லடியார்களின் பொறுட்டால் நிறைவேற்று) என்று கேளு என்று கற்றுக் கொடுத்திருக்கலாம். எனவே தனி மனிதனின் பொறுட்டால் கேட்பது என்பது ஒருமனிதரை அல்லாஹிவின் அந்தஸ்துக்கு எடுத்துச் செல்லும் ஒரு ஷிர்க்கை ஏற்படுத்தும் ஒரு அம்சமாகும். அல்லாஹ்வே எம் அனைவருக்கும் சத்திய மார்க்கத்தில் சரியான தெளிவைத் தரவேண்டும்.

 • குறிப்பு: இந்த இரண்டு ஹதீஸ்களிலிருந்தும் விளங்கமுடியுமானது, ஒருவரிடத்தில் துஆக் கேட்குமாறு கேட்டுக்கொண்டு, அவர் கேட்கும் துஆவை முன்னிறுத்தி அல்லாஹ்வை நெறுங்க முடியும் என்பதே.

மேலும் ஆதம் (அலை) அவர்கள் தௌபா செய்தபோது முஹம்மதின் பொறுட்டால் மன்னிப்புக் கேட்டதாகவும், முஹம்மதை படைக்கவிட்டால் உம்மை படைத்திருக்கமாட்டோம் என்று அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு கூறியதாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகின்றது. இது நபிகளாரின் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஒரு செய்தியாகும். மாறாக ஆதம் நபி எப்படி அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடினார்கள் என்பதை குர்ஆன் கூறுகின்றது கேளுங்கள்.

 • பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (2:37)
 • அதற்கு அவர்கள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள். (7:23)

எனவே இந்த உண்மைகளை விளங்கி ஷிர்க்கிலிருந்து விடுபட்டு வாழமுயற்சிப்போமாக.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *