அகீதா – 16 தவாபும், துஆவும்

தவாப்:

PDF வடிவத்தில் பார்வையிட CLICK  செய்யவும்!

தவாப் என்பது கஃபதுல்லாஹ்வை ஏழு தடவைகள் வலம் வருவதைக் குறிக்கும். தவாப் என்ற வணக்கம் அந்த இடத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும். அதுவும் ஒரு வணக்கம் என்ற அடிப்படையில் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும்.

 • பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாபும்” செய்ய வேண்டும்.(30) இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும். (22:29,30)

ஆனால் இன்று தவாப் என்பது கப்ருகளுக்கு சூழாகவும், நல்லடியார்கள் என்போரோடு சம்பந்தப்பட்ட இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது. அது சுத்தமான ஷிர்க்காகும். நபித் தோழர்கள் ஷிர்க்கின் விடையத்தில் எந்த அளவு பயந்துள்ளார்கள் ௭ன்பதை பாருங்கள்.

 • உர்வா என்ற தோழர் அறிவித்தார்கள்: நான் ஆயிஷா(றழி) அவர்களிடம் ‘நிச்சயமாக ஸபா மர்வா (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. எனவே, (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ராச் செய்பவர்கள் அவ்விரண்டையும் வலம் வருவது குற்றமில்லை” என்ற (திருக்குர்ஆன் 02:158) இறைவசனப்படி, அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஸபா மர்வாவுக்கிடையே வலம் வராவிட்டாலும் குற்றமில்லை என்பது பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா(றழி), ‘என்னுடைய சகோதரியின் மகனே! நீர் சொன்னது தவறு. அந்த வசனத்தில் அவ்விரண்டையும் வலம் வராமலிருப்பது குற்றமில்லை என்றிருந்தாலே நீர் கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்ஸாரிகளின் விஷயத்தில் இறங்கியதாகும். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் அவர்கள் வணங்கி வந்த முஷல்லல் என்னும் குன்றிலுள்ள மனாத் என்னும் சிலைக்காக இஹ்ராம் அணியும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். எனவே, இப்போது (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸபா, மர்வாவை வலம் வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாத்தை அவர்கள் ஏற்றதும் நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி, இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஸபா – மர்வாவை வலம் வருவதைப் பாவமாகக் கருதுகிறோம்? எனக் கேட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ், ‘நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை” என்ற (திருக்குர்ஆன் 02:158) வசனத்தை அருளினான். மேலும் நபி(ஸல்) அவர்கள் அவ்விரண்டுக்குமிடையே வலம் வருவதைச் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். எனவே, அவ்விரண்டிற்குமிடையே வலம் வருவதை விடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை’ எனக் கூறினார்கள். (புஹாரி: 1643)

எனவே இன்றைக்கு கப்ருகளை சுற்றி வலம் வருவதன் மூலம் ஷிர்க்கில் ஈடுபடும் முஸ்லிம்கள் ஈமானை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

 துஆ பிரார்த்தனை:

இதுவும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செலுத்தவேண்டிய வணக்கமாகும். இதிலும் நிறைய முஸ்லிம்கள் அல்லாஹ் அல்லாத பெரியார்களை, நல்லடியார்களை அல்லாஹ்வோடு சேர்த்துக் கொள்கின்றனர். இது தெளிவான ஷிர்க்காகும்.

 • (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:5)
 • (ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் – வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (7:55)
 • நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்.(195) அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்:
 • “நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் – (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்” என்று.(196) “நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்.(197) அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள். (7:194- 197)
 • அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்).(57) (அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது. (17:56,57)
 • நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ்(றழி) அவர்களுக்கு அறிவுரை செய்யும் போது: நீ கேட்பதானால் அல்லாஹ்விடம் கேள், உதவி தேடுவதாக இருந்தாலும் அவனிடமே உதவி தேடு. என்று கூறினார்கள்.  (திர்மிதீ)
 • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: துஆ என்பது வணக்கமே. (அபூதாவுத், திர்மிதீ)

மேலும் அல்லாஹ் அநியாயத்தை தனக்கு ஹராமாக்கிக் கொண்டதாகவும், மனிதர்களுக்கும் ஹராமாக்கி இருப்பதாகவும் கூறிவிட்டு, அவனிடம் பிரார்த்தனை செய்யுமாறே வேண்டுகின்றான். ஏன் அநியாயத்தை தடுத்துவிட்டு பிரார்த்தனையை அல்லாஹ் கூற வேண்டும்? பிரார்த்தனை என்பது தான் அல்லாஹ்வுக்கு அடிமை என்பதை சரியாகவே காட்டும். அதில் தான் நிறைய பேர் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து அநியாயம் செய்தனர்.

 • அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஹதீஸுல் குதுஸி): அல்லாஹ் கூறுகிறான்: எனது அடியார்களே, அநியாயம் இழைப்பதை நான் என்மீது தடுத்துள்ளேன். உங்களிடையேயும் தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்கின்றேன். எனவே ஒருவருக்கொருவர் அநியாயம் இழைக்காதீர்கள். எனது அடியார்கள் நீங்கள் அனைவரும் வழிதவறி இருந்தீர்கள். நான் நேர்வழிப் படுத்தியவர்களைத் தவிர. எனவே என்னிடம் நேர்வழியை கேளுங்கள். நான் நேர்வழி காட்டுகின்றேன். எனது அடியார்கள் நீங்கள் அனைவரும் பசித்தவர்களாக இருந்தீர்கள். நான் உணவளித்தவரைத் தவிர. எனவே என்னிடம் உணவைக் கேளுங்கள். நான் உணவளிக்கின்றேன். எனது அடியார்கள் நீங்கள் அனைவரும் நிர்வாணிகளாக இருந்தீர்கள். நான் ஆடை அளித்தவர்களைத் தவிர. எனவே என்னிடம் ஆடையைக் கேளுங்கள். நான் ஆடை அணிவிக்கின்றேன். எனது அடியார்கள் நீங்கள் அனைவரும் இரவு பகலாக பாவம் செய்பவர்களாக இருக்கின்றீர்கள். நானோ உங்கள் பாவங்களை மண்ணிப்பவனாக இருக்கின்றேன். எனவே என்னிடம் பாவ மண்ணிப்புத்தேடுங்கள். நான் உங்களை மண்ணிக்கின்றேன். எனது அடியார்களே நீங்கள் எனக்கு கெடுதி செய்யும் அளவுக்கு கெடுதியை அடையவும் மாட்டீர்கள். நலவு செய்யும் அளவுக்கு நலவை அடியவும் மாட்டீர்கள். எனது அடியார்களே உங்களில் முதலாமவரும், கடைசியாக இருப்பவரும் முழு மனித சமூகமும் ஜின்களும் இறையச்சம் உள்ள ஒரு உள்ளத்தை கொண்டவர்களாக இருந்தால் அது எனது ஆதிகாரத்திலே எந்த ஒன்றையும் அதிகரிக்கமாட்டாது. மேலும் ஒரு கெட்டவன் உள்ளத்தைப் போன்றிருந்தாலும் எனது ஆட்சியில் எந்த ஒன்றையும் குறைக்கமாட்டாது. எனது அடியார்களே உங்களில் முதலாமவரும், கடைசியாக இருப்பவரும் முழு மனித சமூகமும் ஜின்களும் ஒரே இடத்தில் நின்று என்னிடம் கேட்டு, ஒவ்வொருவருக்கும் அவரவர் கேட்டதை கொடுத்தாலும், என்னிடத்தில் இருப்பதில் எதனையும் குறைக்காது. கடலில் நுளைக்கப்பட்ட ஊசி முனை நீர் சொட்டைத் தவிர. எனது அடியார்களே, உங்களது வணக்கங்களை உங்களுக்காகவே சேர்த்து வைத்திருக்கின்றேன். பின்பு உங்களுக்கு பூரணமாக வழங்குவேன். யார் நல்லதாக காணுகின்றாரோ அவர் அல்லாஹ்வை புகழட்டும். யார் அதுவல்லாததாக (கெட்டதாக) கணுகின்றாரோ அவர் தன்னைத்தானே பழித்துகொள்ளட்டும். (முஸ்லிம்)

மேலும் இப்படி அல்லாஹ் அல்லாத கப்ரில் அடக்கப்பட்ட பெரியார்களையும், நல்லடியார்களையும் அழைத்து பிரார்த்திப்பது ஷிர்க் அலாஹ்வுக்கு இணை கற்பிப்பது என்று கூறும் போது, நாம் அவர்களை அல்லாஹ் என்று கூறவில்லையே. மாறாக அவர்கள் எங்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கி, எங்கள் கோறிக்கையை பெற்றுத்தருபவர்கள் என்றுதானே கூறுகின்றோம் என்று கூறி அந்த ஷிர்க்கை சரிபடுத்துகின்றனர். உண்மையில் இவர்களது இதே கூற்றைத் தான் மக்கவில் இருந்த முஷ்ரிக்குகளும் கூறினர். அல்லாஹ் அவர்களை முஷ்ரிக்குகள் என கண்டித்தான்.

 • அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்கம் (வழிபாடு, துஆ) அல்லாஹ்வுக்கே உறியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், (மக்கா முஷ்ரிக்குகள்) “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை”(என்கின்றனர்).(39:3)
 • அவர்கள் (முஷ்ரிக்குகள்) அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! “அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?” (என்று)(44) “பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!(45) மேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் இருதயங்கள் சுருங்கி விடுகின்றன; மேலும் அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள். (39:43-45)

பாருங்கள், “அல்லாஹ்வை மட்டும் அழையுங்கள்” எனும்போது வெறுப்பு வருகின்றது. ஏனைய கடவுள்களைக் கூறும்போது சந்தோசம் வருகின்றதாம். முஷ்ரிக்குகளுக்கு, இன்றைக்கு கப்ராளிகளிடம் பிரார்த்திப்பவர்களது நிலையும் அதுவே என்றால் அதில் சந்தேகம் இல்லை. அல்லாஹ்வே எம் சமூகத்தை இணைவைப்பிலிருந்து காப்பாற்றவேண்டும்.

மேலும் நாங்கள் பாவம் செய்தவர்கள். அல்லாஹ்வை நேரடியாக நெறுங்க தகுதியற்றவர்கள். எனவே “நல்லடியார்கள் மூலம் நெருங்குகின்றோம்” என்று கூறுகின்றனர். இதுவும் அல்லாஹ்வைப் பற்றி சரியாக தெரியாததன் காரணமாகவே இப்படி கூறுகின்றனர். இது முற்றும் முழுதாக தவறாகும். அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.

 • என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.54. ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்படமாட்டீர்கள்.   (39:53,54)
 • நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள் (ஹதீஸுல் குதுஸி): நான் எனது அடியான் என்னை நினைக்கும் இடத்தில் இருக்கின்றேன். அவன் என்னை ஞாபகப்படுத்தும் போதெல்லாம் அவனுடன் இருக்கின்றேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஒரு மனிதன் பாவ மண்ணிப்புதேடும் போது, பாலை வனத்தில் தன் பொருட்களை தொலைத்தவன் அதனை பெற்றுக் கொண்டால் சந்தோசப்படுவதைவிடவும் அல்லாஹ் சந்தோசப்படுகின்றான். மேலும் யார் என்னளவில் ஒரு சான் நெறுங்குகின்றாரோ அவரளவில் நான் ஒரு முலம் நெறுங்குவேன். யார் என்னளவில் ஒரு முலம் நெருங்குகின்றாரோ அவரளவில் நான் ஒரு அடி நெறுங்குவேன். அவன் என்னளவில் நடந்து வந்தால் நான் அவனளவில் ஓடி வருவேன்.  (முஸ்லிம்)

பாருங்கள் ஒரு பாவி தௌபா செய்யும் போது அல்லாஹ் சந்தோசப்படுகின்றான் எனும் போது, அந்த மனிதனோடு அல்லாஹ் நெறுங்கும் விதத்தைப் பார்க்கும்போது ஏன் நாம் வேறொருவர் மூலம் நெறுங்கி, அல்லாஹ்வை விட்டும் தூரமாக வேண்டும். இதை ஒரு முஸ்லிம் சரியாக விளங்கினால் நல்லடியார்களை நாடிச் சென்று அல்லாஹ்வுக்கு துரோகம், அநியாயம் இழைப்பானா?

எனவே எந்த காரணத்தைக் கூறி நல்லடியார்களை நெறுங்கினாலும் அது வெளிப்படையான இனைவைப்பாகவே அமையும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *