பிக்ஹு -27; ஸுஜூதுத் திலாவத்- குர்ஆனில் வரும் சஜ்தாக்கள்.

ஸுஜூதுத் திலாவத்- குர்ஆனில் வரும் சஜ்தாக்கள்.

அல்குர்ஆனில் சுஜூத் செய்வது பற்றி வரும் வசனங்களை ஓதும் போது சுஜூத் செய்வது குர்ஆனும், ஹதீஸும் கற்றுத்தரும் ஒரு அம்சமாகும்.

  قُلْ آمِنُوا بِهِ أَوْ لَا تُؤْمِنُوا ۚ إِنَّ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ مِن قَبْلِهِ إِذَا يُتْلَىٰ عَلَيْهِمْ يَخِرُّونَ لِلْأَذْقَانِ سُجَّدًا

(நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.

   وَيَقُولُونَ سُبْحَانَ رَبِّنَا إِن كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُولًا

அன்றியும், “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

   وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا

இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும்.  17:107,108,109)

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا السُّورَةَ، فِيهَا السَّجْدَةُ فَيَسْجُدُ وَنَسْجُدُ، حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَوْضِعَ جَبْهَتِهِ»  صحيح البخاري

இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:  நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா உள்ள அத்தியாயத்தை எங்களுக்கு ஓதிக் காட்டும்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம்.  (புஹாரி: 1075, முஸ்லிம்)

சஜ்தாவை குறித்து நிற்கும் வசனங்கள் எத்தனை என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமை இருந்தே வருகின்றது. சிலர் பத்து இடங்கள் என்றும், சிலர் பதின் ஐந்து, பதின் நான்கு என்றும், சிலர் நான்கு என்றும் கூறுகின்றனர்.

சுருக்கமாக சொல்வதானால் அந்த விடயத்தில்,  நபியவர்களுடைய பொதுக் கட்டளை சஜ்தாவை வலியுறுத்தி நிற்கும் வசனம் என்பதாக இருப்பதனால் எந்தெந்த வசனங்கள் அப்படி வருமோ அவைகளில் சஜ்தா செய்யலாம். அல்லாஹு அஃலம்!

நபிகளார் சஜ்தா செய்த வசனங்கள் நான்கு;

 عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ سُورَةَ النَّجْمِ، فَسَجَدَ بِهَا فَمَا بَقِيَ أَحَدٌ مِنَ القَوْمِ إِلَّا سَجَدَ، فَأَخَذَ رَجُلٌ مِنَ القَوْمِ كَفًّا مِنْ حَصًى – أَوْ تُرَابٍ – فَرَفَعَهُ إِلَى وَجْهِهِ، وَقَالَ: يَكْفِينِي هَذَا “، قَالَ عَبْدُ اللَّهِ: فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا     صحيح البخاري

இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் கூறினார்கள்:  நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். அக்கூட்டத்தில் (ஒருவரைத் தவிர) அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்து, தம் நெற்றிக்குக் கொண்டு சென்று ‘இவ்வாறு செய்வது எனக்குப் போதும்’ என்று கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகக் கொல்லப்பட்டதை பார்த்தேன்.  (புஹாரி: 1070, 3853, முஸ்லிம்)

عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَرَأَ: إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، فَسَجَدَ بِهَا، فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ أَلَمْ أَرَكَ تَسْجُدُ؟ قَالَ: «لَوْ لَمْ أَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ لَمْ أَسْجُدْ»  فَلاَ أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ  صحيح البخاري

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்; நபிகளார் ‘இதஸ் சமாஉன் ஷக்கத்’ சூராவில் சஜ்தா செய்ததை நான் கண்டிருக்காவிட்டால் சஜ்தா செய்திருக்கக் மாட்டேன். நபிகளாரை மறுமையில் சந்திக்கும் வரை (மரணிக்கும் வரை) சுஜூத் செய்வேன். (புஹாரி:766,1074, முஸ்லிம்)

 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «سَجَدْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ»  صحيح مسلم

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்; நாங்கள் நபிகளாரோடு இதஸ் சமாஉன் ஷக்கத், இகர்ஃ சூராக்களில் சுஜூது செய்தோம்.  (முஸ்லிம்)

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: ص لَيْسَ مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَقَدْ «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِيهَا»  صحيح البخاري

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: சாத் சூராவின் சஜ்தா வலியுறுத்தப் பட்டவைகளுள் உள்ளதல்ல. ஆனாலும், நபிகளார் அதில் சுஜூத் செய்வதை நான் பார்த்திருக்கின்றேன்.  (புஹாரி: 1069)

عَنْ مُجَاهِدٍ، قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: أَنَسْجُدُ فِي ص؟ فَقَرَأَ: {وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ} – حَتَّى أَتَى – {فَبِهُدَاهُمُ اقْتَدِهْ}. فَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: نَبِيُّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّنْ أُمِرَ أَنْ يَقْتَدِيَ بِهِمْ ”  صحيح البخاري

முஜாஹித் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம், சூரா சாத் சஜ்தா பற்றி கேட்டபோது, உங்கள் நபியவர்கள் பின்பற்றப்பட வேண்டியவர்களுள் உள்ளவரே. என்று கூறினார்கள். அவர்கள் அதில் சஜ்தா செய்பவர்களாகவும் இருந்தார்கள்.  (புஹாரி: 3421, 4806)

 عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقْرَأَهُ خَمْسَ عَشْرَةَ سَجْدَةً فِي الْقُرْآنِ مِنْهَا ثَلَاثٌ فِي الْمُفَصَّلِ وَفِي الْحَجِّ سَجْدَتَيْنِ» سنن ابن ماجه 

நபி (ஸல்) அவர்கள் அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்களுக்கு அல்குர்ஆனிலிருந்து பதினைந்து சஜ்தாக்களை ஓதிக்காட்டினார்கள், அவற்றுள் மூன்று இகரஃ, இன்ஷிகாக்,நஜ்ம் சூராக்களிலும், இரண்டு சூரா ஹஜ்ஜிலும் இருக்கின்றன.  (அபூதாவுத்: 1401, இப்னுமாஜா:1057)

இந்த செய்தி மிகவும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளராக வரும் ‘நாபிஃ பின் யஸீத்‘ என்பவர் யார் என்று அறியப்படாத மஜ்ஹூல்‘ ஆவார்.

நபிகளாரைத் தொட்டு வேறு எந்த சஹீஹான செய்திகளும் சஜ்தா சூராக்கள் எண்ணிக்கை விடயத்தில் வரவில்லை.

உமர் (ரழி) அவர்கள் சூரத்துன் நஹ்லில் சஜ்தா செய்தார்கள்.

عَنْ رَبِيعَةَ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَرَأَ يَوْمَ الجُمُعَةِ عَلَى المِنْبَرِ بِسُورَةِ النَّحْلِ حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ نَزَلَ، فَسَجَدَ وَسَجَدَ النَّاسُ حَتَّى إِذَا كَانَتِ الجُمُعَةُ القَابِلَةُ قَرَأَ بِهَا، حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ، قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّا نَمُرُّ بِالسُّجُودِ، فَمَنْ سَجَدَ، فَقَدْ أَصَابَ وَمَنْ لَمْ يَسْجُدْ، فَلاَ إِثْمَ عَلَيْهِ وَلَمْ يَسْجُدْ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ»  صحيح البخاري 

ரபீஆ இப்னு அப்தில்லாஹ் அவர்கள் கூறினார்கள்: உமர்(ரழி) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் மிம்பரில் நின்று நஹ்ல் அத்தியாயத்தை ஓதினார்கள். (அதிலுள்ள) ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் இறங்கி ஸஜ்தாச் செய்தார்கள். மக்களும் ஸஜ்தாச் செய்தனர். அடுத்த ஜும்ஆ வந்தபோது அதே அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஸஜ்தா வசனத்தை அடைந்ததும், அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.  (மக்களை நோக்கி) ‘மனிதர்களே! நாம் ஸஜ்தா வசனத்தை ஓதுகிறோம். ஸஜ்தாச் செய்கிறவர் (சுன்னாவை) செய்தவராவார்.யார் சஜ்தா செய்யவில்லையோ அவரின் மீது எந்தக் குற்றமுமில்லை’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 1077)

பொதுவாக சஜ்தா வசனம் பற்றி நபித் தோழர்களைத் தொட்டு வந்தவைகள்.

 عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ عَلِيٍّ قَالَ: «عَزَائِمُ السُّجُودِ سُجُودُ الْقُرْآنِ، الم تَنْزِيلُ، وحم تَنْزِيلُ، وَالنَّجْمُ، اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ» مصنف ابن أبي شيبة 

அலி (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி) ஆகியோர் கூறினார்கள்: அல்குர்ஆனில் சுஜூத்களை வலியுருத்தக்கூடியவைகளுள்; அளிப் லாம் மீம் தன்சீல், ஹாமீம் தன்சீல், வன்னஜ்மி, இகரஃ ஆகிய சூராக்கள் அடங்கும்.  (இப்னு அபீ ஷைபா:4349)

இது பலவீனமானதாகும். இதில் இடம்பெறும் ‘அலீ பின் ஸைத்‘ என்பவர் ‘மிகவும் மரதியுள்ளவர்’ சரியான செய்திகளையும் பிறட்டி அறிவிப்பவர்இவரது செய்தி மிகவும் பலவீனமானது.

அடுத்து இதே கருத்தில் அலி (ரழி) அவர்கள் கூற்றாக ‘அப்துர் ரஸ்ஸாக், ஹாகிம்’ போன்ற இன்னும் பல கிதாப்களில் பதியப்பட்டுள்ளது.

அதன் அறிவிப்புத் தொடர் ஒன்றில், ‘ஆசிம்‘ வழியாக பதியப்பட்டுள்ளது. அவர் ‘அதிகம் தவறு விடுபவர், மனன சக்தி மிகவும் குறைந்தவர்‘ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.

அல்லது ‘அல்ஹாரிஸ்‘ என்பவர் வழியாக பதியப்பட்டுள்ளது. அவர் ‘பொய்யர்‘ என்று சொல்லப்படும் அளவுக்கு விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே அலி (ரழி) அவர்களின் செய்தி மிகவும் பலவீனமானதாகும்.

 عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ , قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ ثَعْلَبَةَ , قَالَ: رَأَيْتُ عُمَرَ «سَجَدَ فِي الْحَجِّ سَجْدَتَيْنِ». , قُلْتُ: فِي الصُّبْحِ؟ , قَالَ: فِي الصُّبْحِ  سنن الدارقطني

உமர் (ரழி) அவர்கள் சூரா ஹஜ்ஜில் இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். (தாரகுத்னீ:1522)

இன்னும் பல அறிவிப்புகள் உமர் (ரழி) அவர்களைத் தொட்டு வந்திருக்கின்றது. பெரும் பாலும் விமர்சிக்கப்பட்ட அறிப்பாளர் தொடரே இருக்கின்றது.

குர் ஆனில் வரும் சஜ்தா வசனங்களில் சஜ்தா செய்வது கட்டாயமில்லை, விரும்பினால் சஜ்தா செய்யலாம், விரும்பினால் செய்யாமலிருக்கலாம்.

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: «قَرَأْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّجْمِ فَلَمْ يَسْجُدْ فِيهَا» صحيح البخاري  

ஸைத் இப்னு ஸாபித்(ரழி) அவர்கள் கூறினார்கள்:  நான் நபி(ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.  (புஹாரி: 1073, முஸ்லிம்)

عَنْ رَبِيعَةَ بْنِ عَبْدِ اللَّهِ  عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَرَأَ يَوْمَ الجُمُعَةِ عَلَى المِنْبَرِ بِسُورَةِ النَّحْلِ حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ نَزَلَ، فَسَجَدَ وَسَجَدَ النَّاسُ حَتَّى إِذَا كَانَتِ الجُمُعَةُ القَابِلَةُ قَرَأَ بِهَا، حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ، قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّا نَمُرُّ بِالسُّجُودِ، فَمَنْ سَجَدَ، فَقَدْ أَصَابَ وَمَنْ لَمْ يَسْجُدْ، فَلاَ إِثْمَ عَلَيْهِ وَلَمْ يَسْجُدْ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ» وَزَادَ نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضِ السُّجُودَ إِلَّا أَنْ نَشَاءَ» صحيح البخاري  

ரபீஆ இப்னு அப்தில்லாஹ் அவர்கள் கூறினார்கள்:  உமர்(ரலி) ஒரு வெள்ளிக்கிழமை மிம்பரில் நின்று நஹ்ல் அத்தியாயத்தை ஓதினார்கள். (அதிலுள்ள) ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் இறங்கி ஸஜ்தாச் செய்தார்கள். மக்களும் ஸஜ்தாச் செய்தனர். அடுத்த ஜும்ஆ வந்தபோது அதே அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் (மக்களை நோக்கி) ‘மனிதர்களே! நாம் ஸஜ்தா வசனத்தை ஓதியிருக்கிறோம். ஸஜ்தாச் செய்கிறவர் நல்லதைச் செய்தவராவார். அவரின் மீது எந்தக் குற்றமுமில்லை’ என்று கூறினார்கள். மேலும் அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.

நாமாக விரும்பிச் செய்தால் தவிர ஸஜ்தாவை அல்லாஹ் நம்மீது கடமையாக்கவில்லை என்று இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள். என நாபிஃ அவர்கள் குறிப்பிட்டார்கள்.  (புஹாரி:1077)

சஜ்தாவை வலியுறுத்தும் எந்த வசனத்திலும் விரும்பினால் சஜ்தா செய்யலாம். அதனைக் கொண்டு ஷைத்தான் கோபமடைகின்றான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي، يَقُولُ: يَا وَيْلَهُ – وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ: يَا وَيْلِي – أُمِرَ ابْنُ آدَمَ بِالسُّجُودِ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ، وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ ”  صحيح مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகன் சஜ்தா (வசனத்தை) ஓதி, சஜ்தா செய்தால், ஷைத்தான் ஒதுங்கிச் சென்று அழுதவனாக; ‘எனக்கு ஏற்பட்ட அழிவே! ஆதமின் மகன் சுஜூத் செய்யுமாறு ஏவப்பட்டான் அவன் சுஜூத் செய்து, சுவனத்தை அடைந்தான், எனக்கும் சுஜுதைக் கொண்டு ஏவப்பட்டது, நானோ மறுத்தேன், எனக்கு நரகம் கிடைத்தது.’ என்று புலம்புவானாம்.  (முஸ்லிம்)

குர்ஆனில் வரும் சஜ்தாவுக்காக வுழு செய்வதோ, கிப்லாவை முன்னோக்குவதோ கட்டாயமில்லை. முடியுமானால் வுழு செய்து, கிப்லாவை முன்னோக்கலாம்.

நபிகளார் வுழுவையும் கிப்லாவையும் வலியுறுத்தியதாக ஆதாரங்கள் வரவில்லை. அடுத்து மக்கா முஷ்ரிக்குகளும் சஜ்தா செய்தனர், சுத்தம் அவசியம் என்றால் (க ஃ பாவை தவாப் செய்வதைத் தடுத்தது போன்று) சுஜூத் செய்வதைத் தடுத்திருக்க வேண்டும்.

அடுத்து நபித்தோழர் தம் தலையை வைப்பதற்குக் கூட இடம் இருக்கவில்லை என்றார்கள். அப்படியானால் அமர்ந்திருந்த அதே நிலையில் சுஜூத் செய்திருக்கின்றார்கள் என்பது தெளிவு.

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ السَّجْدَةَ وَنَحْنُ عِنْدَهُ، فَيَسْجُدُ وَنَسْجُدُ مَعَهُ، فَنَزْدَحِمُ حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا لِجَبْهَتِهِ مَوْضِعًا يَسْجُدُ عَلَيْهِ» صحيح البخاري 

இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறினார்கள்:  நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் இருக்கும்போது ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டுவார்கள். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நெருக்கியடித்துக் கொண்டு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம். (புஹாரி: 1076,1079, முஸ்லிம்)

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ بِالنَّجْمِ، وَسَجَدَ مَعَهُ المُسْلِمُونَ وَالمُشْرِكُونَ وَالجِنُّ وَالإِنْسُ»  صحيح البخاري

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள்:  நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பவர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் ஸஜ்தாச் செய்தனர்.  (புஹாரி: 1071)

தொழுகைக்குள்ளும் விரும்பினால் சஜ்தா செய்யலாம்.

عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ العَتَمَةَ، فَقَرَأَ: إِذَا السَّمَاءُ انْشَقَّتْ فَسَجَدَ، فَقُلْتُ: مَا هَذِهِ؟ قَالَ: «سَجَدْتُ بِهَا خَلْفَ أَبِي القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلاَ أَزَالُ أَسْجُدُ فِيهَا حَتَّى أَلْقَاهُ» صحيح البخاري 

அபூ ராபிஃ அவர்கள் கூறினார்கள்:  நான் அபூ ஹுரைரா(ரழி) அவர்களுடன் இஷாத் தொழுதேன். அவர்கள் இதஸ்ஸமாஉன் ஷக்கத் என்ற அத்தியாயத்தை ஓதி, ஸஜ்தாச் செய்தார்கள். இது என்ன? என்று கேட்டேன். அதற்கு, ‘நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் இந்த வசனத்திற்காக நான் ஸஜ்தாச் செய்துள்ளேன். நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வரை நான் செய்து கொண்டே இருப்பேன்’ என்று அபூ ஹுரைரா(ரழி) விடையளித்தார்கள்.  (புஹாரி: 1078, முஸ்லிம்)

தொழுகையின் சஜ்தாவில் ஓதுவதை இதிலும் ஓதலாம். அத்தோடு பிவருமாறும் ஓதலாம்.

عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي سُجُودِ القُرْآنِ بِاللَّيْلِ: سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ.  سنن الترمذي 

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இரவையில் குர்ஆனின் சஜ்தாவில் ‘சஜ்த வஜ்ஹிய லில்லதீ கலகஹூ,வஷக்க சம்அஹூ, வபசரஹூ, பிஹவ்லிஹீ, வகுவ்வதிஹீ.’ என்று ஓதுவார்கள். (திர்மிதீ:580)

***சுஜூதுல் குர்ஆன் என்பதைவைத்து பல அறிஞர்களும் சொல்வது இந்த துஆ அதில் ஓதப்படும் என்றே. ஆனால் அதனை வைத்து ‘இரவுத் தொழுகையின் சுஜூதில் ஓதப்படுவது என்று பொதுவாக விளங்கவும் முடியும். ஏனெனில் குர்ஆன் என்பதைக் கொண்டு தொழுகையை நாட முடியும்.

أَقِمِ الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَىٰ غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ ۖ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا

(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் பஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக);(அரபியில் பஜ்ருடைய குர்ஆனில் என்று வந்துள்ளது) நிச்சயமாக பஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.  (17:78)

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَأَيْتُ فِي هَذِهِ اللَّيْلَةِ فِيمَا يَرَى النَّائِمُ كَأَنِّي أُصَلِّي خَلْفَ شَجَرَةٍ، فَرَأَيْتُ كَأَنِّي قَرَأْتُ سَجْدَةً فَرَأَيْتُ الشَّجَرَةَ كَأَنَّهَا تَسْجُدُ لِسُجُودِي، فَسَمِعْتُهَا وَهِيَ سَاجِدَةٌ وَهِيَ تَقُولُ: اللَّهُمَّ اكْتُبْ لِي عِنْدَكَ بِهَا أَجْرًا، وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا، وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا، وَاقْبَلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَ مِنْ عَبْدِكَ دَاوُدَ،  صحيح ابن حبان   

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நேற்றிரவு நான் ஒரு மரத்திற்கு பின்னால் தொழுவதையும், அதில் ஒரு சஜ்தாவை ஓதி, நான் சுஜூத் செய்யும் பொது அந்த மரமும் என்னைத் தொடர்ந்து சுஜூத் செய்வதாகவும் கனவில் கண்டேன். அந்த மரம் சுஜூதில் ‘அல்லாஹும்மக்துப் லீ இந்தக அஜ்ரா, வஜ்அல்ஹா லீ இந்தக சுக்ரா,வளஃ அன்னீ பிஹா விஸ்ரா, வக்பல்ஹா மின்னி, கமா தகப்பல்த மின் அப்திக தாவுத்.’ என்று சொல்வதைக் கேட்டேன். என்றும் கூறினார்.  (திர்மிதீ:579,  இப்னு ஹிப்பான்: 2768)

இது பலவீனமான ஒரு செய்தியாகும், இதன் அறிவிப்பாளரான ‘ஹசனுப்னு முஹம்மத்‘ என்பவர் யார் என்று அறியப்படாத ‘மஜ்ஹூல்‘ ஆவார். எனவே இது மிகப் பலவீனமாகும்.

அல்குர் ஆனில் சுஜூதை வலியுறுத்தி வரும் வசனங்கள்.

1- அல் அஃராப்: 206                        2- அர்ரஃத்: 15

3- அன்னஹ்ல்: 49                          4- அல் இஸ்ராஃ:107

5- மர்யம்: 58                                     6-7- அல்ஹஜ்: 18,77

8- அல்புர்கான்: 60                          9- அன்னம்ல்: 25

10-அஸ்ஸஜதா :15                       11- சாத்: 24

12- புஸ்ஸிலத்: 37                         13- அன்னஜ்ம்: 63

14- இன்ஷிகாக்: 21                         15-அலக்: 19

குறிப்பு: இந்த பதினைந்து இடங்களும் சஜ்த செய்வதைப் பற்றி பேசும் வாசங்களே அன்றி, இந்த இடங்கள் அனைத்திலும் நபிகளார் சஜ்தா செய்ததற்கு எந்த சஹீஹான ஆதாரங்களும் இல்லை. நான்கு இடங்களுக்கே நபிகளாரிடம் ஆதாரம் உள்ளது. (முன்னால் குறிப்பிட்டது போன்று)

எனவே ஒரு மனிதர் நபிகளார் சுஜூத் செய்த இடங்களோடு போதுமாக்கிக் கொண்டால் அவர் செய்வதும் சரியானதே. அதேநேரம் பொதுவான ஆதாரத்தை முன்வைத்து சஜ்தாவை எடுத்துரைக்கும் வசனங்கள் என்ற அடிப்படையில் எல்லா இடங்களிலும் சுஜூத் செய்வதை பித்அத்  என்று கூற முடியாது.

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *