அல்குர்ஆனில் மாற்றப்பட்ட வசனம் உள்ளதா!

ஐந்து தடவைகள் பாலூட்டுவது பற்றிய ஹதீஸ் ஓர் பார்வை

“ஐந்து தடவைகள் பாலூட்டுவது, பத்து தடவைகள் பாலூட்டினால் மஹ்ரமியத் உண்டாக்கும் என்ற சட்டத்தை மாற்றியது” என்ற ஹதீசுக்கான விளக்கம்!

صحيح مسلم

عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: ” كَانَ فِيمَا أُنْزِلَ مِنَ الْقُرْآنِ: عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ، ثُمَّ نُسِخْنَ، بِخَمْسٍ مَعْلُومَاتٍ، فَتُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُنَّ فِيمَا يُقْرَأُ مِنَ الْقُرْآنِ ”

ஆயிஷா றழி அவர்கள் கூறினார்கள்: “குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் குடித்தால் மஹ்ரமியத் உண்டாகும்” என்று அல்குர்ஆனில் இருந்து, பின்பு “குறிப்பிட்ட ஐந்து தடவைகள் மஹ்ரமியத்தை உண்டாக்கும்” என்பதைக் கொண்டு மாற்றப்பட்டது, அவைகள் அல்குர்ஆனில் ஓதப்படும் நிலையிலேயே நபிகளார் மரணித்தார்கள்.” (முஸ்லிம்:3670,3671)
இந்த செய்தி நம்பகமான மிகப் பலமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டு பதியப்பட்ட ஒரு செய்தியாகும்.
ஆனாலும் வரலாற்றில் மிகச் சிலரால் இந்த ஹதீஸ் மறுக்கப்பட்டது. காரணம்; இந்த செய்தி அல்குர்ஆனில் குறைவு இருக்கின்றது என்ற சந்தேகத்தை உருவாக்கிவிடும் என்பதாகும், ஏனெனில் நபிகளார் மரணிக்கும் போது அல்குர்ஆனில் இருந்த வசனம் தற்போது இல்லை, அதனை அல்குர்ஆனில் இருந்து நீக்கியது யார் என்பதே!
முதல் விடயம் இது இன்று நேற்று எழுதப்பட்ட ஒரு செய்தியல்ல , மாறாக, சிறந்த நூற்றாண்டு என்று நபிகளாரால் சிறப்பித்துக் கூறப்பட்ட காலத்தில் நம்பகமானவர்கள் வழியால் பதியப்பட்டதே. அன்றிலிருந்து ஆயிரம் வருடங்களை கடந்து வந்திருக்கும் நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த ஹதீஸ் எப்படி கைய்யாளப்பட்டுள்ளது என்று பார்ப்போமாக இருந்தால் ஒரு நல்ல முடிவுக்கு வரமுடியும்.
அடுத்து இந்த இடைப்பட்ட காலத்தில் குர்ஆன் ஹதீஸை பாதுகாப்பதற்காக பல ஆயிரக்கணக்கான அறிஞ்சர்கள் பாடுபட்டு, தன் முழு வாழ்க்கையையும் செலவளித்துள்ளார்கள். ஒரு வகையில் இஸ்லாத்தை பாதுகாக்க அவர்களை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான் என்று கூறலாம், எனவே இன்றைக்கு நாம் எடுக்கும் முடிவு அந்த எல்லா அறிஞ்சர்களையும் “அவர்கள் இஸ்லாத்தை பால் படுத்திவிட்டார்கள்” என்ற நிலைக்கு இட்டுச் செல்லாமல், அல்லது “அவர்கள் இஸ்லாத்தை அறியாதவர்கள்” போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லாமல், ஒரு முடிவுக்கு வருவதே ஆரோக்கியமானது.
எனவே நம்பகமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்ட, பல ஆயிரக்கணக்கான அறிஞ்சர்களின் பார்வையைக் கடந்து வந்த இந்த ஹதீசை எப்படி நாம் புரிவது!!
இந்த ஹதீஸ் பலவீனமானது என்று ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவிடலாமா என்றால், ஒரு தகவலை ஏற்பதற்கும், மறுப்பதற்கும் ஒரு வழியை அல்லாஹ் காட்டியுள்ளான், அல்லாஹ் கூறுகின்றான்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ

முஃமின்களே! பாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)
எனவே இந்த அடிப்படையில் அந்த ஹதீசை அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களே, அவர்கள் நம்பகமானவர்களாக இருக்க அந்த செய்தியை மறுப்பது என்பது அறிவிப்பாளர்களுள் சந்தேகத்தை ஏற்படுத்தலாம். எனவே அதனை ஏற்றுக் கொள்வதே ஹதீஸ்களை ஏற்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் விதியின் அடிப்படையில் மிகப் பொருத்தமானது.
அப்படியானால் இந்த ஹதீஸ் குர்ஆனில் குறைவு இருப்பது போன்று ஒரு சந்தேகத்தை தோற்றுவிக்கின்றதே என்றால், அதற்குத்தான் அன்றைய காலம் தொட்டு சஹீஹான செய்திகளுக்கு இடையில் முரண்பாடுகள் தென்படும் பொது அதனை கையாள்வதற்கு பலவழிகளை முன்வைத்துள்ளனர் குர்ஆன் சுன்னாவை பாதுகாப்பதட்காக பாடுபட்ட அறிஞ்சர்கள். அந்த வகையில் நாசிக் (சட்டத்தை மாற்றக்கூடியது), மன்ஸுக் (மாற்றப்பட்ட சட்டம்) என்ற அடிப்படை விடையம் மிகவும் முக்கியமானதாகும். இந்த அடிப்படையானது குர்ஆன் சுன்னாவை அடிப்படையாகக் கொண்ட (அஹ்லுஸ் சுன்னா, வல்ஜமாஆவாகிய) அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
எமக்கு எந்த சஹீஹான ஹதீஸ்கள் முரண்படுவது போன்றோ, குர்ஆனின் தனித்துவத்திற்கு பங்கம் விளைவிப்பது போன்றோ தென்பட்டால், இந்த அடிப்படையை மேற்கொள்வதே ஆரோக்கியமானது!
எனவே இந்த சஹீஹான செய்தியை முறையாக விளங்க என்ன வழி!!!
1- நாசிக், மன்ஸுக் என்பது பல வகை உள்ளது, அவற்றுள் “சொல் மாற்றப்பட்டு, சட்டம் மாத்திரம் எஞ்சியிருத்தல் என்பது” ஒரு வகையாகும். இந்த ஹதீசும் அந்த வகையை சார்ந்ததாகும். எனவே “பத்து தடவைகள் பால் குடிப்பது, மஹ்ரமியத்தை உண்டாக்கும்” என்ற வசனமானது, சொல்லும் மாற்றப்பட்டு, சட்டமும் “ஐந்து தடவைகள் உண்டாக்கும்” என்று மாற்றப்பட்டதாகும். இப்படி முடிவெடுப்பதற்கு குர்ஆனில் ஆதாரம் இல்லை என்பது அடிப்படையற்ற வாதமாகும், ஏனெனில் சஹீஹான ஹதீஸ்களும் வஹியாகும். எனவே இப்படி அனுகினால் குர்ஆனிலும் குறை வரப்போவதில்லை, அந்த ஹதீஸிலும் எந்த குறையும் ஏற்படப் போவதில்லை.
2- “அவைகள் குர்ஆனில் ஓதப்படும் நிலையில் நபிகளார் மரணித்தார்கள்” என்ற ஆயிஷா நாயகியின் கூற்று, நபிகளாரின் மரணத்திற்குப் பின் அந்த வசனம் அகற்றப்பட்டது என்பதற்கு ஆதாரமாகாது, மாறாக அதன் அருத்தம் “அந்த வசனம் நபிகளாரின் பிற்பட்ட காலத்தில் மாற்றப்பட்டதனால், அதனை அறியாத பலர் ஓதிக் கொண்டிருந்தனர்” என்பதே. இல்லையென்றால் “நாம் அதனை ஓதிக்கொண்டிருந்தோம், அதை மறைத்துவிட்டார்கள்” என்று ஆயிஷா றழி அவர்கள் கூறியிருப்பார்கள். எனவே மாற்றப்பட்ட செய்தி தெரிய வந்ததும் விட்டுவிட்டனர். ஏனெனில் குர்ஆனை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்ட சைத் பின் ஸாபித் (றழி) அவர்கள் உறுதிப்படுத்திய பின்னரே குர்ஆனில் சேர்த்தார்கள்.
அவர்களே கூறினார்கள்: ………..(பிறகு) அபூ பக்ர்(றழி) (என்னிடம்) ‘(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக ‘வஹீ’ (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்’ என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(றழி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்’ என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனதையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) எனவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை போரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) ‘அத்தவ்பா’ எனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூ குஸைமா அல் அன்சாரி(றழி) அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (திருக்குர்ஆன் 09:128, 129) ………..
3- அடுத்து இன்று இந்த ஹதீசை பலவீனப்படுத்தி அல்குர்ஆனை சிலர் பாதுகாக்க நினைக்கின்றனர், ஆனால் இந்த செய்தியையும் அந்த அறிஞ்சர்கள் பதிந்து வைத்தது, அல்குர்ஆனின் நம்பகத்தன்மையை இன்னும் பலப்படுத்துகின்றது, இல்லையென்றால் இன்றைய மக்களை விடவும் அல்குர்ஆனை பாதுகாக்கத் துடித்தவர்கள் அன்றைய மக்கள், இதனை மறைத்து முஸ்லிமில் பதியாமல் விட்டிருக்கலாம். அவர்கள் அப்படி செய்யவில்லை, காரணமே அல்குர்ஆனின் நம்பகத் தன்மையை பலப்படுத்தத்தான். இது எது போன்று என்றால் நபியவர்கள் “தன்னை கண்டித்து வந்த செய்திகளையும்” மக்களுக்கு மறைக்காமல் சொன்னது போன்றதே.

عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ: لَوْ كَتَمَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا مِمَّا أُوحِيَ إِلَيْهِ مِنْ كِتَابِ اللَّهِ، لِكَتَمَ: {وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ}

ஆயிஷா றழி அவர்கள் கூறினார்கள்: நபிகளார் வஹியிலிருந்து ஏதாவது ஒன்றை மறைப்பதாக இருந்தால் “அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; (33:37) என்ற வசனத்தை மறைத்திருப்பார்கள். (தபரீ: சஹீஹ்)
எனவே நபிகளார் தன்னை அல்லாஹ் விமர்சித்த செய்தியையும் மறைக்காமல் மக்களுக்கு எடுத்து சொன்னது எப்படி நபிகளாரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமோ, அதேபோன்றுதான் அல்குர்ஆனிலிருந்து மாற்றப்பட்ட வசனங்களையும் நபித்தோழர்கள் கூற, அறிஞ்சர்கள் பாதுகாத்து வைத்திருப்பது அல்குர்ஆனின் நம்பகத்தன்மையை பலப்படுத்துகின்றது.
4- அடுத்து இப்படி சொல் அளவில் மாற்றப்பட்ட பல குர்ஆன் வசனங்கள் சஹீஹான ஹதீஸ்களில் இருக்கின்றன. எனவே இந்த ஹதீசை மறுத்து குர்ஆனை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை, இந்த ஹதீசை வைத்திக் கொண்டே குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதை நிறுவலாம்.
அதனை அல்லாஹ் எங்களுக்கு கற்றுத்தருகின்றான். அல்லாஹ் சொல்கிறான்:

مَا نَنسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنسِهَا نَأْتِ بِخَيْرٍ مِّنْهَا أَوْ مِثْلِهَا ۗ أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா? (2:106)

மேலும் பின்வரும் வசனத்தைப் பார்க்கும் பொது, குர் ஆனில் மாற்றப்பட்ட வசனத்தை மறுக்கும் கூட்டத்தைப் பார்த்தே சொல்லப்பட்டுள்ளது போன்று சிந்திக்கத்தூண்டுகின்றது, ஏனெனில் நாம் இந்த ஹதீஸை ஏற்றுக்கொண்டால் நம்மை இட்டுக்கட்டியவர்களாகவே பார்க்கின்றனர். அல்லாஹ்வே போதுமானவன்.
அல்லாஹ் கூறுகிறான்:

وَإِذَا بَدَّلْنَا آيَةً مَّكَانَ آيَةٍ ۙ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوا إِنَّمَا أَنتَ مُفْتَرٍ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். (16:101)

மேலும் இதற்கு சான்றாக இன்னும் சில ஹதீஸ் ஆதாரங்களைப் பார்க்கலாம்.

صحيح مسلم (3/ 1317)
عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ، يَقُولُ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَهُوَ جَالِسٌ عَلَى مِنْبَرِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللهَ قَدْ بَعَثَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحَقِّ، وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ، فَكَانَ مِمَّا أُنْزِلَ عَلَيْهِ آيَةُ الرَّجْمِ، قَرَأْنَاهَا وَوَعَيْنَاهَا وَعَقَلْنَاهَا، فَرَجَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَجَمْنَا بَعْدَهُ، فَأَخْشَى إِنْ طَالَ بِالنَّاسِ زَمَانٌ أَنْ يَقُولَ قَائِلٌ: مَا نَجِدُ الرَّجْمَ فِي كِتَابِ اللهِ فَيَضِلُّوا بِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللهُ، وَإِنَّ الرَّجْمَ فِي كِتَابِ اللهِ حَقٌّ عَلَى مَنْ زَنَى إِذَا أَحْصَنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ، إِذَا قَامَتِ الْبَيِّنَةُ، أَوْ كَانَ الْحَبَلُ، أَوِ الِاعْتِرَافُ “،

இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: உமர் (றழி) அவர்கள் மிம்பரின் மீது அமர்ந்தவர்களாக: அல்லாஹ் முஹம்மத் நபியை சத்தியத்தைக் கொடுத்து அனுப்பினான், அவர்களுக்கு வேதத்தையும் இறக்கினான், அப்படி இறக்கப்பட்டதில் “ரஜ்முடைய வசனமும் ” ஒன்றாகும், அதனை நாங்கள் ஓதி, மனனமிட்டு, விளங்கியும் வைத்தோம். நபிகளார் (விபச்சாரிக்கு) கல்லெறிந்தார்கள், நாமும் எறிந்தோம். காலம் போகும் போது “அல்குர்ஆனில் கல்லெறிவதைப் பற்றி நாம் காணவில்லை” என்று கூறி, அல்லாஹ் இறக்கிய சட்டத்தை மறுத்து வழிகெட்டு விடுவார்களோ என்று நான் பயப்படுகின்றேன்…… (முஸ்லிம்)
இதுவும் இந்த வகை நாசிக் மன்சூகிற்கு ஆதாரமாகும். சொல் மாற்றப்பட்டது என்பதற்கு ஆதாரமே நபித் தோழர்கள் அதனை குர்ஆனில் பதியாததுதான். குர்ஆனை பாதுகாப்பதற்காக ஆலோசனை வழங்கியவரே உமர் (றழி) எனும் போது, அவர்கள் மறைத்தார்களா!! அல்லது அல்குர்ஆனிலிருந்து மாற்றப்பட்டதை விட்டுவிட்டார்களா!!! முறையாக சிந்தித்தால் சீர்பெரலாம்!!!
மேலும் பின்வரும் ஹதீஸும் வசனம் மார்ரப்படதற்கு சிறந்த உதாரணமாகும்.
அனஸ்(றழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி(ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தவர் சிலருடன் எழுபது பேர் (கொண்ட வேத அறிஞர்களான அன்சாரி)களை பனூ ஆமிர் குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்கள் (அங்கு) சென்றபோது என் தாய்மாமன் (தம்முடன் வந்த தோழர்களிடம்), ‘உங்களுக்கு முன்னால் நான் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரைக் குறித்து நான் எடுத்துரைத்திட (அவர்கள் என்னை அனுமதித்து) எனக்குப் பாதுகாப்பளித்தால் நான் எடுத்துரைக்கிறேன்; இல்லையென்றால் நீங்கள் என் (பின்னால் என்) அருகிலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு சற்று முன்னால் சென்றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தார்கள்; அவரை எதுவும் செய்யவில்லை. நபி(ஸல்) அவர்களைப் பற்றி அவர் அவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது தங்களில் ஒருவரைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய் மாமனை (ஈட்டியால்) குத்தி அவரைக் கொன்றுவிட்டான். (உயிர் பிரியும் வேளையில்) அவர், ‘அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார். பிறகு, அவரின் எஞ்சிய தோழர்களின் மீதும் பாய்ந்து அவர்களையும் கொன்றுவிட்டார்கள்; மலையின் மீதேறிக் கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர.
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம்(ரஹ்), ‘கால் ஊனமுற்ற அந்த மனிதருடன் மற்றொருவரும் (தப்பித்துக் கொண்டார்)’ என்று (அறிவிக்கப்பட்டதாக) கருதுகிறேன்” என்று கூறுகிறார்.
ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு, ‘நீங்கள் அனுப்பிய போதகர்கள் தங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டனர். அவர்களைக் குறித்து அவன் திருப்தியடைந்தான். அவர்களும் (தான் பெற்ற நற்பலனைக் குறித்து திருப்தி) கொள்ளும்படிச் செய்தான்’ என்று அறிவித்தார்கள். நாங்கள் (அப்போது அருளப்பட்ட),

أَنْ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا، وَأَرْضَانَا

‘ ‘நாங்கள் எங்கள் இறைவனைச் சென்றடைந்து விட்டோம். எங்களைக் குறித்து அவன் திருப்தியடைந்துவிட்டான். அவனைக் குறித்து நாங்கள் திருப்தியடைந்தோம். தன்(வெகு மதியி)னைக் குறித்து எங்களைத் திருப்தியடையும்படி அவன் செய்தான்’ என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்” என்னும் இறை வசனத்தை ஓதிக் கொண்டிருந்தோம். அது பின்னாளில் (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூ சுலைம் குலத்தாரைச் சேர்ந்த) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான், பனூ உஸைய்யா ஆகிய கிளையினருக்குக் கேடு நேர, நாற்பது நாள்கள் காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தனை செய்தார்கள். (புஹாரி: 2801,,,,)
எனவே நபிகளார் காலத்து நடைமுறையில் இருந்ததையே நபித்தோழர்கள் பதிவு செய்கிறார்கள், இப்படி மன்சூகில் ஒரு சாதம் இருக்கிறது என்று ஆதாரம் காட்டி தெளிவுபடுத்திய பிறகும், “ஆதாரம் இருக்கிறதா” என்று கேட்பது சிறுபிள்ளைத் தனமாகும். அல்லாஹ் போதுமானவன்!
5- அடுத்து குர்ஆன் என்பது அல்லாஹ்வின் கட்டளையால் பாதுகாக்கப்பட்டது, எனவே இந்த செய்தியை வைத்து அல்குர்ஆனில் குறை காணுவோர், அந்த வசனத்தை சரியாக புரியாதவர்களே. அல்லாஹ் கூறுகின்றான்:

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)
அல்லாஹ் அல்குர்ஆனை பாதுகாத்ததன் வெளிப்பாடே ஆயிஷா (றழி) அவர்களின் ஹதீஸ்.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.
இதற்கு அப்பாலும் “புகாரி, முஸ்லிம்” மனிதர்கள் தானே என்று கூறி, அவர்கள் அறிவிப்பாளர் தொடரை வைத்து, சரியாக செய்த பணியில் குறை காணுவார்களாக இருந்தால் அதற்குத் தீர்வு கொடுக்கவே மறுமை இருக்கின்றது. அல்லாஹ் போதுமானவன்!!!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *