التوحيد الألوهية
அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செலுத்தப்படும் வணக்கங்களுள் மிகப் பிறதானமாக நேர்ச்சை இருக்கின்றது.
நேர்ச்சை
வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click
நேர்ச்சை என்றால்; தன்மீது கடமையாக இல்லாத ஒன்றை கடமையாக்கிக்கொள்வதாகும். உதாரணமாக ‘எனது நோய் குணமாகினால் அல்லாஹ்வுக்காக இரண்டு மாடுகள் அறுத்துப் பலியிடுவேன்’ என்று அல்லாஹ்வுக்காக நேர்ச்சை வைப்பது போன்று.
(எனது குறிப்பிட்ட தேவை நிறைவேறினால் இந்தப் பெரியாரின் கந்தூரிக்கு ஒரு ஆடு கொடுப்பேன் என்று பெரியார்களுக்கு வைப்பது போல.)
அந்த நேர்ச்சையை பொதுவாக வைக்கவும் முடியும்.
(உதாரணமாக; ‘அல்லாஹ்வுக்காக ஒரு ஆடு கொடுப்பது என் மீது கடமை, அந்த நல்லடியாரின் கந்தூரிக்கு ஒரு மாடு கொடுப்பது கடமை என்று நேர்வது போன்று.)
அது ஒரு வணக்கம் என்பதனால் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செலுத்தப்படவேண்டும்.
- இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறினார்கள். (3:35)
- “ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலினால் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும். (19:26)
- இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம். (புஹாரி: 6696)
இன்று பெரியார்களுக்கும், நல்லடியார்களுக்கும், கப்ரில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களுக்கும் என்று ஆடு, மாடு, கோழி என்று நேர்ச்சைகள் வைக்கப்படுகின்றன. சில இடங்களில் எண்ணை போன்றவைகளும் நேர்ந்து கப்ரடியில் ஊற்றப்படுகின்றன. இவை அனைத்தும் நம்மை ஷிர்க்கில் சேர்த்துவிடும்.
நேர்ச்சை வைப்பதை இஸ்லாம் வரவேற்கவில்லை. ஆனால் அல்லாஹ்வுக்காக நேர்ந்திவிட்டால் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். நேர்ந்தவர் மரணித்தால் கூட அவருக்காக அவரின் பொறுப்பாளர் நிறைவேற்ற முடியும்.
- இப்னு உமர்(றழி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், ‘நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)’ என்றார்கள். (புஹாரி:6608, முஸ்லிம்)
- இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அல்லாஹ் கூறினான்:) நேர்த்திக் கடனானது, நான் விதியில் எழுதியிராத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, விதிதான் அவனை (நேர்த்திக்கடன் பக்கம்) கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வத்தை) வெளிக்கொணர்வதென நான் (முன்பே) விதியில் எழுதிவிட்டேன். (புஹாரி: 6609, முஸ்லிம்)
- நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காபூராக (கற்பூராக) இருக்கும்,6. (காபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.7. அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். (76:5- 7)
- இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம். (புஹாரி: 6696)
- இப்னு உமர்(றழி) அறிவித்தார்கள்: மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் உமர்(றழி) நேர்ச்சை செய்திருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ‘உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்” என்றார்கள். (புஹாரி:2043)
- இப்னு அப்பாஸ்(றழி) அறிவித்தார்கள்: (உக்பா இப்னு ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘(இறைத்தூதர் அவர்களே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார்’ என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய்?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (நானே நிறைவேற்றுவேன்)’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்’ என்றார்கள். (புஹாரி: 6699)
- அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(றழி) அறிவித்தார்கள்: ஸஃத் இப்னு உபாதா அல் அன்சாரி(றழி) அவர்கள், நேர்ந்துகொண்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக்கடன் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவர் தம் தாயாருக்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றிடுமாறு தீர்ப்பளித்தார்கள். அதுவே பின்னர் வழிமுறையாக ஆகிவிட்டது. (புஹாரி: 6698)
மேலும் நல்லடியார்களின் பெயர்களில் கப்ருகளுக்கு நேர்ச்சை வைப்பதும், அவர்களை ஞாபகப்படுத்தி கொடுக்கப்படும் கந்தூரி வைபவங்களுக்கு நேர்ச்சை வைப்பதும், அவற்றிற்காக அறுத்துப் பலியிடுவதும் கூடாது என்று கூறும் போது, நாம் அல்லாஹ்வின் பெயர் கூறித்தானே அறுக்கின்றோம் என்று கூறி அதனை சரி படுத்துகின்றனர். பாருங்கள் நபியவர்கள் சிலைகள் உள்ள இடங்களிலும், மாற்றுமத விழாக்கள் கொண்டாடப்படும் இடங்களிலும் பிஸ்மில்லாஹ் சொல்லி அறுப்பதும் கூடாது என்று தடுக்கின்றார்கள்.
- ஸாபித் பின் ளஹ்ஹாக் அவர்கள் கூறினார்கள்: நபிகளாரின் காலத்தில் ஒரு மனிதர் புவான என்ற இடத்தில் ஒரு ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ந்தார், அவர் நபிகளாரிடம் வந்து, அதை கூறியபோது, நபியவர்கள்: அவ்விடத்தில் ஜாஹிலீயாக் கால சிலைகள் ஏதும் இருக்கின்றனவா என்று கேட்க, இல்லை என்றார், மேலும் நபியவர்கள்: அங்கு ஜஹிலீயாக் கால விழாக்கள் ஏதும் கொண்டாடப்படுகின்றனவா என்று கேட்க, இல்லை என்றார், அப்போது நபியவர்கள்: உனது நேர்ச்சையை நிறைவேற்று, ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் நிறைவேற்றுதல் இல்லை, ஆதமுடைய மகன் சொந்தப்படுத்திக் கொள்ளாததிலும் நிறைவேற்றுதல் இல்லை. என்று கூறினார்கள். (அஹ்மத், அபூதாவுத்)
குறிப்பு: ஒரு நபித் தோழர் அல்லாஹ்வின் பெயர் சொல்லித்தானே அறுப்பார், அப்படியிருந்தும் சிலைகள் உள்ள இடத்திலும், மாற்றுமத விழாக்கள் கொண்டாடப்படும் இடங்களிலும் அறுப்பதை தடுக்கும் முகமாகவே அந்த கேள்விகளை கேட்கின்றார்கள். பிஸ்மில்லாஹ் என்று கூறினால் மட்டும் போதாது, உள்ளத்தில் எண்ணம் சரியாக இருக்கவேண்டும். அல்லாஹ்வுக்காக என்றிருந்தால் ஏன் ஒரு பெரியாரை ஞாபகப்படுத்தும் நாளிலே கொடுக்க வேண்டும் எப்போதும் கொடுக்கலாமே?. எனவே அப்படி செய்யும் ஒவ்வொருவரும் அல்லாஹ்வை பயந்து எந்த நோக்கத்திற்காக கொடுக்கின்றோம் என்பதை சிந்தித்து, அதிலிருந்து விடுபட முயழவேண்டும். இல்லையென்றால் ஷிர்க்கில் மரணிக்கவேண்டிவரும். அல்லஹ் காப்பானாக.
மேலும் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் எத்தனையோ நபிமார்கள் மரணித்தார்கள், அவர்கள் யாரையும் ஞாபகப்படுத்தி இப்படி கந்தூரி மஜ்லிஸ்கள் வைக்கவில்லையே, அப்படியென்றால் நபிகளாரைவிட நாம் முன்னோரை மதிக்கின்றோமா, அல்லது நபிகளாரை மிஞ்சிப் போய் அவர்களை அவமதிக்கின்றோமா? சிந்தித்தால் பலன் கிடைக்கும்.
இஸ்லாம் அனுமதி அளித்ததை தடை செய்யும் விதத்தில் நேர்ச்சை வைக்க முடியாது, அது நேர்ச்சையாக செல்லுபடியாகாது, அப்படி வைத்திருந்தால் அதனை முறிக்கவேண்டும்.
- அனஸ்(றழி) அறிவித்தார்கள்: ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘(கஃபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!” என்று மக்கள் கூறினார்கள், நபி(ஸல்) அவர்கள் ‘இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது!” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறும் உத்தரவிட்டார்கள். (புஹாரி:1865, முஸ்லிம்)
- உக்பா இப்னு ஆமிர்(றழி) அறிவித்தார்கள்: என் சகோதரி கஃபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர், இதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புப் பெறும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர் (சிறிது தூரம்) நடந்துவிட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும்” என்றார்கள். (புஹாரி: 1866, முஸ்லிம்)
- இப்னு அப்பாஸ்(றழி) அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழத்திக் கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், ‘(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்துகொண்டுள்ளார்’ என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்’ என்றார்கள். (புஹாரி: 6704)
அல்லாஹ்வுக்காக நேர்ச்சை வைத்துவிட்டு அதனை நிறைவேற்ற முடியாமல் போனால் அதற்காக பரிகாரம் (கப்பாரா) செலுத்தவேண்டும். இதற்கான கப்பாரா சத்தியத்தை முறித்தால் கொடுக்கப்படும் கப்பாராவேதான்.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்ச்சைக்கான பரிகாரம் சத்தியத்திட்கான பரிகாரமே. (முஸ்லிம்)
- உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிறாவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை – உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான். (5:89)
அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நேர்ச்சை வைத்திருந்தால் அதனை நிறைவேற்றாமல் இருப்பதே அதற்கான தௌபாவாகும்.
இந்த நேர்ச்சையின் அடிப்படையிலேயே கப்ருகளுக்கு பக்கத்திலும், நல்லடியார்கள் பேரிலும் மிறுகங்கள் அறுத்துப் பலியிடப்படுகின்றன. ஏற்கனவே கூறப்பட்டது போன்று அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டாலும் நோக்கத்தைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும். இப்படி கப்ருகளுக்குப் பக்கத்தில் அறுக்கப்படுவதற்கும் தடைகள் வந்திருக்கின்றன.
- (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.2. எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.3. நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். (108:1- 3)
- அலி (றழி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து நபியவர்கள் உங்களுக்கு ஏதும் ரகசியம் செல்லித் தந்தார்களா? என்று கேட்க, கோபப்பட்ட அலி (றழி) அவர்கள், மக்களுக்கு மறைக்கும் அளவுக்கு எதையும் நபிகளார் ரகசியமாக எனக்கு சொல்லித் தரவில்லை, ஆனாலும் எனக்கு நான்கு விடையங்களை சொல்லித் தந்தார்கள் என்று கூறி பின்வருமாறு கூறினார்கள்: தனது பெற்றோரை சபிப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான், அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிட்டவனை அல்லாஹ் சபிக்கின்றான், (மார்க்கத்தில்) பிதிதாக உறுவாக்கியனுக்கு இடம் அளித்தவனையும் அல்லாஹ் சபிக்கின்றான், பூமியின் அடையாளங்களை (மாகிமை) மாற்றுபவனையும் அல்லாஹ் சபிக்கின்றான். (முஸ்லிம்)
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாத்தில் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுவது இல்லை. அப்துர் ரஸ்ஸாக் என்ற அறிவிப்பாளர் கூறினார்: அன்றைய மக்கள் கப்ருகளுக்கு பக்கத்தில் மாட்டையும் ஆட்டையும் அறுத்து பலியிடுபவர்களாக இருந்தார்கள். (அபூதாவுத்)
எனவே இந்த நேர்ச்சை சார்ந்த விடையங்களை நன்றாக விழங்கி ஷிர்க்கான காரியங்களை செய்துவிடாமல் நம்மை காத்துக் கொள்வோம்.
மேலும் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுக்கக்கூடாது என்று கூறும் போது, நாம் பிள்ளைகளுக்காக அகீகா கொடுக்கின்றோம் அல்லவா, அது போன்றுதான் கந்தூரிகளுக்கும் கப்ருகளுக்கும் கொடுப்பதும் என்று கூறி அதனை சரிபடுத்த முயற்சிக்கின்றனர். உண்மையில் அகீகா என்பது ஒரு வணக்கம், அதனை நாம் அல்லாஹ்வுக்காகவே செய்து, அவனையே நெறுங்குகின்றோம். அதேபோன்று பெரியார்களை, நபிமார்களை ஞாபகப்படுத்தி அல்லாஹ்வை நெறுங்கும் ஒரு முறையை நபிகளார் காட்டித் தந்திருந்தால் அப்போது இந்த வாதம் சரிவரும், மாறாக நபிகளாருக்கு முன்னர் எதனையோ நபிமார்கள், நல்லவர்கள் மரணித்தும் இப்படி நல்லவர்களுக்காக கொடுத்து நெறுங்கும் முறையை காட்டித்தரவில்லை. எனவே நல்லடியார்களுக்காக கொடுப்பதாகவே அது அமைந்து ஷிர்க்கில் சேர்த்துவிடும்.