அகீதா- 14 மந்திரித்தல், ஓதிப்பார்த்தல்

மந்திரித்தல், ஓதிப்பார்த்தல்

வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click

இந்த விடையத்தைப் பொறுத்தவரை  நபி (ஸல்) அவர்கள் தடுத்திருந்தாலும், சில இடங்களில் ஷிர்க் என்று கூறியிருந்தாலும் வேறு சில இடங்களில் ஷிர்க்கான வார்த்தைகள் கலக்கமல் ஓதிப் பார்க்க அனுமதி அளித்துள்ளார்கள்.

எனவே ஷிர்க்கான வார்த்தைகள் இருக்கின்றதா? இல்லையா? என்பதை அறிந்தே ஓதிப்பார்க்கவேண்டும். அா்த்தம் விளங்காத வார்த்தைகளால் மந்திரிப்பதும், மாற்று மதத்தவர்களிடம் போய் மந்திரிப்பதும் நபிகளார் எச்சரித்த ஷிர்க்கில் சேர்த்துவிடலாம்.

  • அபூ மாலிக் அல்அஷ்ஜஈ என்ற தோழர் கூறுகின்றார்; நாங்கள் மடமைக் காலத்தில் மந்திரிப்பவர்களாக இருந்தோம். எனவே நபிகளாரிடம் அல்லாஹ்வின் தூதரே இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? என்று நாம் கேட்டோம். அதற்கு நபியவர்கள், உங்களது மந்திரீக முறையை எனக்கு காட்டுங்கள். ஷிர்க் இல்லாதவரை மந்திரிப்பது பரவாயில்லை. என்று கூறினார்கள்.  (முஸ்லிம்)

மேலும் நபி (ஸல்) அவர்கள் ஓதிப்பார்ப்பதற்கென ஒரு சில சூறாக்களையும், துஆக்களையும் காட்டித் தந்தார்கள். அவைகளை வைத்து ஓதிப்பார்ப்பதே எமக்குப் போதுமானது. காரணம் அவர்களே எமக்கு முன்மாதிரி.

  • ஆயிஷா(றழி) அறிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் கையில் ஊதி, தம் கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்களின் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி(ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன். (புஹாரி:4439)
  • அபூ ஸயீத் அல்குத்ரீ(றழி) கூறினார்கள்: நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தபோது, (ஓய்வெடுப்பதற்காக) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஓர் இளம் பெண் வந்து ‘எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. எங்கள் ஆட்கள் வெளியே சென்றுள்ளார்கள். அவருக்கு ஓதிப்பார்ப்பவர் உங்களில் எவரேனும் உண்டா?’ என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒருவர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்தது கூட இல்லை. அவர் சென்று ஓதிப்பார்த்தார். உடனே, அந்தத் தலைவர் குணமடைந்துவிட்டார். எனவே, எங்களுக்கு முப்பது ஆடுகள் (அன்பளிப்பாக) வழங்குமாறு அவர்களின் தலைவர் உத்தரவிட்டதுடன் எங்களுக்குப் பாலும் கொடுத்தனுப்பினார். (ஓதிப்பார்க்கச் சென்ற) அந்த மனிதர் திரும்பி வந்தபோது, அவரிடம் ‘உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?’ அல்லது ‘ஏற்கனவே, நீர் ஓதிப்பார்பவராக இருந்தீரா?’ என்று கேட்டோம். அவர், ‘இல்லை; குர்ஆனின் அன்னை’ என்றழைக்கப்படும் (‘அல்ஃபாத்திஹா’) அத்தியாயத்தைத் தான் ஒதிப்பார்த்தேன்’  என்று கூறினார். (இந்த முப்பது ஆடுகளையும்) நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘செல்லும் வரையில்’ அல்லது ‘சென்று (விளக்கம்) கேட்கும் வரையில்’ ஒன்றும் செய்துவிடாதீர்கள்’ என்று (எங்களுக்கிடையே) பேசிக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்து சேர்ந்தபோது, இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கூறினோம். ‘இது (‘அல் ஃபாத்திஹா’) ஓதிப்பார்த்து நிவாரணம் பெறத்தக்கது என்று அவருக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டு அதில் ஒரு பங்கை எனக்கும் தாருங்கள்! என்று கூறினார்கள்.  (புஹாரி:5007, முஸ்லிம்)
  • ஆயிஷா(றழி) கூறினார்கள்:  நபி(ஸல்) அவர்கள் நோயாளிக்காக, ‘பிஸ்மில்லாஹி துர்பது அர்ளினா பிரீகதி பஃளினா யுஷ்பா சகீமுனா பிஇத்னி ரப்பினா’ என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வின் பெயரால்… எங்களில் சிலரின் உமிழ் நீரோடு எம்முடைய இந்த பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின்பேரில் எங்களில் நோயுற்று இருப்பவரைக் குணப்படுத்தும்.) (புஹாரி:5745, முஸ்லிம்)
  • ஆயிஷா(றழி) கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஒருவருக்காகப் பாதுகாப்புக் கோரித் தம் வலக் கையால் அவரை தடவிக் கொடுத்து, ‘அத்ஹிபில் பஃஸ், ரப்பன்னாஸ்! வஷ்பி அன்த்தஷ் ஷாபி, லா ஷிபாஅ இல்லா ஷிபாஉக – ஷிபாஅன் லா யுகாதிரு சகமன்’ என்று கூறுவார்கள். (பொருள்: மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குவாயாக! குணப்படுத்துவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை. நோய் சிறிதும் இல்லாதவாறு குணப்படுத்திடுவாயாக.)   (புஹாரி:5750, முஸ்லிம்)
  • இப்னு அப்பாஸ்(றழி) அறிவித்தார்கள்:  நபி(ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால், ‘கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்” என்று கூறுவார்கள். (தம் அந்த வழக்கப்படியே) நபி(ஸல்) அவர்கள் கிராமவாசியிடம், ‘கவலை வேண்டாம். இறைவன் நாடினால் உங்களைத் தூய்மைப்படுத்தும்” என்று கூறினார்கள். (இதைக் கேடட்) அந்தக் கிராமவாசி, ‘நான் தூய்மை பெற்று விடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கிற சூடாகிக் கொதிக்கிற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்” என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் ஆம். (அப்படித்தான் நடக்கும்.)” என்று கூறினார்கள்.  (புஹாரி: 3616)

மேலும் நோவுகள் ஏற்பட்டால் அந்த இடத்தில் கையை வைத்தவாறு பின் வரும் துஆவை ஓதுவதும் நபிகளார் காட்டித் தந்த மந்திரீக (ஓதிப் பார்க்கும்) முறைகளுல் ஒன்றாகும்.

  • உஸ்மான் பின் அபில் ஆஸ் என்ற நபித் தோழர் நபிகளாரிடம் வந்த, அவர் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து உடம்பில் இருக்கும் ஒரு வருத்தத்தை முறையிட்டார். அதற்கு நபியவர்கள் :உனது உடம்பில் நோவு உள்ள இடத்தில் கை வைத்து, بِاسْمِ اللَّهِ என்று மூன்று விடுத்தம் கூறிவிட்டு, ‘أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ‘ என்று ஏழு விடுத்தங்கள் சொல். என்று கூறினார்கள். (முஸ்லிம்)

மேலும் நபி (ஸல்) அவர்கள் ஹஸன் ஹுஸைன் (றழி) ஆகியோருக்கு பாதுகாப்புக்காக ஓதுபவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

  • இப்னு அப்பாஸ்(றழி) அறிவித்தார்கள்:  நபி(ஸல்) அவர்கள், ஹஸன்(றழி) மற்றும் ஹுஸைன்(றழி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். ‘அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் – என்று கூறுவார்கள். (புஹாரி: 3371)

أعوذ بكلمات الله التامة، من كل شيطان وهامة، ومن كل عين لامة

  • திர்மிதியின் அறிவிப்பில்

أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

என்று வந்துள்ளது.

  • ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் மந்திரிப்பதை தடுத்தார்கள், அம்ர் பின் ஹஸ்ம் கிளையர்கள் நபிகளாரிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே எங்களிடம் நட்டுவக்காலி கடிக்காக மந்திரிக்கும் முறை இருக்கின்றது. நீங்களோ அதை தடுத்திருக்கின்றீர்கள். என்று கூறி மந்திரிக்கும் வார்த்தைகளை நபிகளாருக்கு எடுத்துக் காட்டினர். அப்போது நபிகளார்; நான் தவராக காணவில்லை. உங்களில் யாரும் தன் சகோதரனுக்கு பயன் அளிக்க முடிந்தால் (உதவிபுறிந்து) பயனளிக்கட்டும். என்று கூறினார்கள்.  (முஸ்லிம்)

நபிகளாரின் இந்த செயல்களைப் பார்க்கும் போது மந்திரீகம் என்பது அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகவே இருந்திருக்கின்றது என்பது தெளிவாகின்றது.

மேலும் நபிகளார் ஓதுவதற்குத்தான் சிறப்பு கூறினார்களே அல்லாமல் கட்டித் தொங்கப் போடுவதற்கோ, எழுதி கரைத்துக் குடிப்பதற்கோ அல்ல என்பதும் தெளிவாக விளங்குகின்றது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில் சிறப்புகள் அடங்கிய ஓதல்கள் மூலம் ஓடாத ஷைத்தானகள் தொங்கவிட்டால் ஓடுமாம்.

எனவே எவற்றை எல்லாம் நபிகளார் ஷிர்க் என்றும் அதற்கு வழிவகுக்கும் என்றும் அடையாளப் படுத்தினார்களோ அவைகள் அனைத்திலிருந்தும் நாம் விழகி நடந்து நம் ஈமானைக் காப்பாற்றிக்கொள்ள முயள்வோம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *