ஜனாசாவும் அதனோடு சார்ந்த சட்டங்களும்-9

அதனை கபனிடுதல்

கபனை பொருத்தவரை அதன் செலவை மரணித்தவர் செலவில் செய்வதே நன்று. மற்றவர்கள் உதவியோடும் செய்து கொள்ளலாம்

 • இப்ராஹீம் அறிவித்தார். நோன்பாளியாக இருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் (நோன்பை நிறைவு செய்வதற்காக) உணவு கொண்டு வரப்பட்டது. அப்போது அவர், ‘என்னை விடச் சிறந்தவரான முஸ்அப் இப்னு உமைர்(ரலி) கொல்லப்பட்டபோது அவரின் உடல் ஒரு சால்வையால் கஃபனிடப்பட்டது. அப்போது அவரின் தலைமறைக்கப்பட்டால் அவரின் கால்கள் வெளியில் தெரிந்தன. கால்கள் மறைக்கப்பட்டால் தலை வெளியில் தெரிந்தது, மேலும், ஹம்ஸா(ரலி) அவர்களும் கொல்லப்பட்டபோது அவரும் என்னைவிடச் சிறந்தவர் தாம் (அவரின் நிலையும் அவ்வாறே இருந்தது) பிறகுதான் உலக வசதி வாய்ப்புக்கள் எங்களுக்கு விசாலமாக்கப்பட்டன. அல்லது உலகத்திலுள்ள அனைத்தும் எங்களுக்குக் கொடுக்கப்பட்டன. எனவே, எங்களின் நன்மைகளெல்லாம் (முற்கூட்டியே) உலகிலேயே கொடுக்கப்பட்டு விடுமோ என நான் அஞ்சுகிறேன்’ எனக் கூறிவிட்டு உணவைத் தவிர்த்துவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள்.     (புஹாரி : 1275)
 • கப்பாப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வுக்காகவே ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான கூலி அல்லாஹ்விடமுள்ளது. எங்களில் சிலர் தம் கூலியை (இவ்வுலகத்தில்) உண்ணாமல் இறந்துள்ளனர். அவர்களில் முஸ்அப் இப்னு உமைர்(ரலி) ஒருவர். எங்களில் வேறு சிலர் (இவ்வுலகில்) பூத்துக் குலுங்கிச் செழித்து அனுபவித்ததும் உண்டு. இப்னு உமைர்(ரலி) உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவரின் உடலைக் கஃபன் செய்வதற்கு ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதன் மூலம் அவரின் தலையை மறைத்தால் கால்கள் வெளியில் தெரிந்தன: கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது அவரின் தலையைத் துனியால் மறைத்துவிட்டு அவரின் கால்களை இத்கிர் என்ற புல்லைப் போட்டு மறைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவர்களின் காலத்தில் முன்கூட்டியே கஃபன் துணியைத் தயாராக வைத்தவரை நபி(ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.   (புஹாரி : 1276)

கபனிடும் போது முழு உடலையும் மறைக்கும் அளவுக்கு பரிபூரணமாக செய்தல்.

 • நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் பிரசங்கம் செய்தார்கள். (அப்போது) தனது தோழர்களில் ஒரு மனிதர் இறப்பெய்தி, பற்றாத கபன் அவருக்கு இடப்பட்டு இரவில் அடக்கமும் செய்விக்கப்பட்டு விட்டார் என்ற (விஷயத்தை) கூறிவிட்டு (இரவில் ஒரு மனிதர் இறப்பெய்திவிட்டால்) அவருக்கு தொழுகை நடத்தப்படும் வரை (இரவிலேயே) அடக்கப்படுவதைக் கண்டித்தார்கள். அவ்வாறு செய்ய (எந்த) மனிதராவது நிர்பந்திக்கப்பட்டாலே தவிர.  ‘உங்களில் ஒருவர் தன் சகோதரருக்கு கபனிட்டால் அவரது கபனை (பற்றாக் குறையாக இடாது, நிறைவாக) அழகாக இடவும்‘ எனவும் கூறினார்கள். (முஸ்லிம்: 469)  அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரளி)

ஒரு துனியினால் கபனிடுதல்.

 • முஸ்அப் இப்னு உமைர்(ரலி) உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவரின் உடலைக் கஃபன் செய்வதற்கு ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதன் மூலம் அவரின் தலையை மறைத்தால் கால்கள் வெளியில் தெரிந்தன: கால்களை மறைத்தால் தலை வெளியில்  தெரிந்தது. அப்போது அவரின் தலையைத் துணியால் மறைத்துவிட்டு அவரின் கால்களை இத்கிர் என்ற புல்லைப் போட்டு மறைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (புஹாரி : 1276)

இரு துனிகளால் கபனிடுதல்.

 • ஹஜ்ஜின்போது அரபாவில் ஒட்டகத்தில் இருந்த ஒருவர் விழுந்து, அவரை அது மிரித்துவிட்டது, (அவர் மரணித்து விட்டார்) நபியவர்கள் கூரினார்கள்: ‘அவரை நீராலும், இலந்தை இலையைக் கொண்டும் குளிப்பாட்டி, அவரது இரு ஆடைகளிலும் அவரை கபனிடுங்கள், அவருக்கு நறுமணம் பூசவோ, தலை முகத்தை மூடவோ வேண்டாம், ஏனெனில் அவர் தல்பியா கூறிய நிலையிலேயே எழுப்பப்படுவார்.’ என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

மூன்று துனிகளால் கபனிடுதல்.

 • மிகத்தூய்மையான வெள்ளை நிறமுள்ள மூன்று  துனிகளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கபனிப்பட்டார்கள். அதில் தலைப்பாகையோ சட்டையோ இல்லை. (ஆயினும்) கீழாடை மேலாடை இரண்டும் ஒரே துனியில் அமைந்த ஒன்றை அதில் அவர்களை கபனிப்படுவதற்காக வாங்கப்பட்டது, ஜனங்களுக்கு ஒரு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. அவர்களை கபனிடுவதற்காக வாங்கப்பட்ட கீழாடை மேலாடை இரண்டும் ஒரே துனியில் உள்ள (அதில்) நபி (ஸல்) அவர்களைக் கஃபனிடுவது கைவிடப்பட்டு மிகத்தூய்மையான வெள்ளை நிறமுள்ள மூன்று துனிகளில் அவர்களுக்கு கபனிடப்பட்டது. ஆகவே ஒரே துனியில் கீழாடை, மேலாடை உள்ள அதை அப்துல்லாஹ் பின் அபூபக்கர் (ரளி) அவர்கள் எடுத்துக் கொண்டு, என்னை அதில் கபனிடப்படும் வரை மிக உறுதியாக அதை நான் தேக்கிவைப்பேன் என்றார். அதன்பிறகு, அல்லாஹ் தனது நபிக்கு பொருத்தப் பட்டிருந்தால் அவர்களை அதில் கபனிடச்செய்திருப்பான் அவ்வாறில்லை என்கின் றபோது அதை எனக்கு கபனிடப்பட்டு கொள்ள நான் விரும்பவில்லை எனக்கூறி அதை விற்று அதன் கிரயத்தை தர்மம் செய்துவிட்டார்கள்.  அறிவிப்பவர் : ஆயிஷா (ரளி) (புஹாரி, முஸ்லிம்: 468)
 • ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்கள் மூன்று வெண்ணிறப் பகுதி ஆடைகளால் கஃபனிடப்பட்டார்கள்: அவற்றில் சட்டையோ, தலைப்பாகையோ இருக்கவில்லை. (புஹாரி: 1271, முஸ்லிம்)

 

உடுத்த ஆடைகளாலும் கபனிடலாம்.

 • இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நயவஞ்சகர்களின்தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும்” என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, ‘(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்” என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும், நபி(ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து, ‘நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘(ஜனாஸாத் தொழுவது, தொழமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது’ எனக் கூறிவிட்டு, ‘நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை” என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே ‘அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்” என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.
  (புஹாரி: 1269)
 • ஜாபிர்(ரலி) அறிவித்தார். இப்னு உபை கப்ரில் வைக்கப்பட்ட பின் அங்கு வந்த நபி(ஸல்) அவனுடைய உடலை வெளியிலெடுக்க செய்து அவன் உடலில் தம் எச்சிலை உமிழ்ந்துவிட்டுத் தம் சட்டையை அவனுக்கு அணிவித்தார்கள். (புஹாரி:  1270)

தனக்கான கபனை உயிர் வாழும் போதே தயார் செய்து வைக்கவும் முடியும்.

 • கப்பாப்(ரலி)அறிவித்தார்………அவர்களின் காலத்தில் முன்கூட்டியே கஃபன் துணி யைத் தயாராக வைத்தவரை நபி(ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.   (புஹாரி : 1276)
 • அபூ பக்ர் (றழி) அவர்கள் நபியவர்களுக்காக கபனிட வந்த ஆடையை எடுத்து வைக்க ஆசைபட்டதைப் போன்று.  (முஸ்லிம்: 468)
 • அபூ ஹாஸிம் அறிவித்தார். ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் புர்தா — குஞ்சங்கட்டப்பட்ட ஒரு சால்வையைக் கொண்டு வந்தார் என்று ஸஹ்ல்(ரலி) கூறிவிட்டு –“புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டபோது (அங்கிருந்தோர்) ‘ஆம்! புர்தா என்பது சால்வைதானே! என்றனர். ஸஹ்ல் ‘ஆம்’ எனக் கூறிவிட்டு மேலும், அப்பெண்மணி ‘நான் என்னுடைய கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதனை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டு வந்தேன்” என்றதும் அது தேவையாயிருந்ததால் நபி(ஸல்) அவர்கள் அதைப் பெற்றார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து எங்களிடம் வந்தபோது ஒருவர் ‘இது எவ்வளவு அழகாக இருக்கிறது! எனக்கு இதை நீங்கள் அணிவித்து விடுங்கள்” என்று கேட்டார். உடனே அங்கிருந்தோர்  ‘நீர் செய்வது முறையன்று; நபி(ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் அதை அணிந்திருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டு விட்டீரே’ எனக் கூறினார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்து கொள்வதற்ககாகக் கேட்கவில்லை: அது எனக்கு கஃபனாக ஆகி விடவேண்டும் என்றே கேட்டேன்” என்றார். ‘பின்பு அது அவருக்குக் கஃபனாகவே ஆகிவிட்டது” என்று ஸஹ்ல் கூறினார். .   (புஹாரி : 1277)
 • கபனிடும் போது கவணிக்கவேண்டிய இன்னும் சில விடயங்கள்.

வெண்மை நிறத்தை முதன்மை படுத்தல்,

 • நபியவர்கள் வென்நிற ஆடையினால் கபனிடப்பட்டார்கள்.
 • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களது ஆடைகளில் வெள்ளை நிறமானதை அணிந்துக்கொள்ளுங்கள், ஏனெனில் அதுவே ஆடைகளில் சிறந்ததாகும், மேலும் அதன் மூலமே கபனிடுங்கள்.’ (அபூ தாவுத், திர்மிதி)

நறுமணங்களைப் பூசிவிடுதல்.

 • ஹஜ்ஜின்போது அரபாவில் ஒட்டகத்தில் இருந்த ஒருவர் விழுந்து, அவரை அது மிரித்துவிட்டது, (அவர் மரணித்து விட்டார்) நபியவர்கள் கூரினார்கள்: ‘அவரை நீராலும், இலந்தை இலையைக் கொண்டும் குளிப்பாட்டி, அவரது இரு ஆடைகளிலும் அவரை கபனிடுங்கள், அவருக்கு நறுமணம் பூசவோ, தலை முகத்தை மூடவோ வேண்டாம், ஏனெனில் அவர் தல்பியா கூறிய நிலையிலேயே எழுப்பப்படுவார்.’ என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

மூன்று துனிகளைவிட அதிகப்படுத்தாதிருத்தல், ஏனெனில் நபியவர்கள் அதிகப்படுத்தவில்லை.

ஐந்து துனியால் கபனிடுவதும், அதில் தலைப்பாகை வெட்டுவது, மேலாடை கீழாடை என வேறுவேறாக வெட்டி எடுப்பதும், அதை தைத்துத்தான் அணிவிக்கவேண்டும் என்பதற்கெல்லாம் ஸஹீஹான ஹதீஸ்கள் வரவில்லை, எனவே நபிவழியைப் பின்பற்றியே எமது கபனையும் ஆக்கிக்கொள்ளவேண்டும்.

கபன் விடயத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கு உள்ள சட்டமேதான், ஏனெனில் வித்தியாசப்படுத்த ஸஹீஹான ஹதீஸ்கள் வரவில்லை. பெண்கள் விடயத்தில் அபூதாவுதில் வரும் ஒரு ஹதீஸ் பலவீனமானதே.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *