ஒரு ஜனாசாவை மக்கள் புகழுதல்
மக்களின் நாவுகளிலிருந்து தூய்மையுடன் வெளிப்படும் நல்ல வார்த்தைகளை வைத்து ஒரு ஜனாசா அல்லாஹ்விடத்தில் அந்தஸ்தை அடைகின்றது, இதில் கவனிக்கவேண்டிய விடயம் அல்லாஹ் உள்ளத்தையே பார்க்கின்றான். உள்ளத்தில் ஒன்றை வைத்து, வெளிப்பகட்டுக்காக புகழ்வது வெறும் முஹஸ்துதியாகவே கணிக்கப்படும். அடுத்து ஒரு மனிதன் உலகில் வாழும் ஒவ்வொரு வினாடியும் மரணத்தை எதிர்பார்த்து மக்கள் அபிமானியாக வாழவும் வேண்டும், அப்போதே கடைசி முடிவு நல்லதாகவும் அமையப் போகின்றது.
- அனஸ் (றழி) கூறினார்கள்: நபிகளாருக்குப் பக்கத்தால் ஒரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது, அதை மக்கள் புகழ்ந்து, அவர் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நேசிப்பவராக இருந்தார் என்று கூறினர், நபிகளார் ‘கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது’ என்று கூறினார்கள், மேலும் நபிகளாருக்குப் பக்கத்தால் ஒரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது, அதை மக்கள் இகழ்ந்து, அவர் அல்லாஹ்வின் மார்க்க விடயத்தில் கெட்டவராக இருந்தார் என்று கூறினர், நபிகளார் ‘கடமையாகிவிட்டது கடமையாகிவிட்டது, கடமையாகிவிட்டது’ என்று கூரினார்கள், அப்போது உமர் (றழி) அவர்கள் விளக்கம் கேட்டபோது, நபியவர்கள்: ‘நீங்கள் புகழ்ந்த அந்த மனிதருக்கு சுவனம் கடமையாகிவிட்டது, நீங்கள் இகழ்ந்த மனிதருக்கு நரகம் கடமையாகி விட்டது, நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள், நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள், நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள்.’ என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எந்த முஸ்லிமுக்காவது நான்கு பேர் நல்லதைக் கூறினால், அல்லாஹ் அவனை சுவனத்தில் நுளைவிப்பான்.’ அப்போது நபித்தோழர்கள் ‘மூன்று பேரின் சாட்சியைப் பற்றியும், இரண்டு பேரின் சாட்சியைப் பற்றியும் கேட்டனர்,’ நபிகளார் அவர்களது சாட்சியும் தான் என்றார்கள். பிறகு ஒருவரின் விடயத்தில் தோழர்கள் கேட்கவில்லை. (புஹாரி)
- குறிப்பு: இந்த ஹதீஸ்களில் மக்கள் தானகவே புகழ்ந்தார்கள் என்பது தெளிவாக விளங்குகின்றது, நபிகளார் கருத்துக் கேட்கவில்லை என்பதையும் விழங்கி நடக்கவேண்டும்.
சூரிய சந்திர கிரகணங்களின் போது மரணிப்பது அல்லாஹ்வின் ஏற்பாடே தவிர அதில் எந்த சிறப்பும் இல்லை.
- முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (ம்ரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள். (புஹாரி: 1043)
மரணித்தவரகளை புகழும் போது சுவனவாதி என்றோ, குறைகூறும் போது நரகவாதி என்று இகழவோ கூடாது. பொதுவாகவே ஒரு மனிதரை குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கக்கூடாது.
- நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார். வந்த) முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), ‘ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?’ என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.” (புஹாரி: 1243)