படைத்தவன் அல்லாஹ்வை நம்புவது எப்படி?

A- அல்லாஹ்வை எப்படி நம்பவேண்டும் என்பதை அறிந்தே ஒரு முஸ்லிம் அதனை ஏற்கவேண்டும். ஏனெனில் முறைதவறி நம்பினால் அது எம்மை வழிகேட்டில் கொண்டுபோய் சேர்த்துவிடும். அல்லாஹ்வே அதனை அல்குர்ஆனில் தெளிவு படுத்துகின்றான்.

 • மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கின்ற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. (12:106)
 • வணக்கத்துக்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்பதனை நீர் அறிந்துகொண்டு, உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக. அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தளத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (47:19)

மக்கா முஷ்ரிக்குகள் அல்லாஹ்வை ஏற்றிருந்தும், அவனுக்கு செய்யவேண்டிய கடமைகளை அறியாததன் காரணமாக பல கடவுள்களை ஏற்படுத்தி அவனை நெருங்க முயற்சித்தனர். இதனையே இன்றும் சில முஸ்லிம்கள் கப்ரடிகளிலும் வேறு வழிகளிலும் செய்கின்றனர். இதைத்தான் அல்லாஹ் அவனுக்கு இணை கற்பித்ததாக குறிப்பிடுகின்றான்.

 • அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான். (39:3)
 • இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின்பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது. (53:23)
 • அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன; (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?  (10:68)

B- படைப்பாளன் (அல்லாஹ்) ஒருவன் இருக்கின்றான் என்பதனை இரண்டு அடிப்படைகளை வைத்து அறிந்து கொள்ளலாம்.

1-   இவ்வுலகில் இருக்கும் படைப்பினங்களை வைத்து, அதனைப் பற்றி சிந்தித்து படைப்பாளனை புறிந்துகொள்ளலாம். ஏன் கண் எதிரே தென்படும் எந்தப் பொருளும் தானாக வந்ததல்ல. அவற்றைப் பார்க்கும்போதே அதை தயாரித்தவனை கண்டுகொள்கின்றோம். கடலில் கப்பல் பயணிக்கின்றது என்றால் அது தானாக உருவாகி கடலில் பயணிக்கவில்லை. வானில் விமானம் பறக்கின்றது என்றால் அதுவும் தானக உருவாகி தானாக பறக்கவில்லை. அதைவிட நாம் அணிகின்ற ஆடைகள் கூட தானாக வரவில்லையே. அவற்றின் உருவாக்கங்களுக்குப் பின்னால் எதனையோ நபர்களின் முயற்சி இருக்கின்றது என்றால், மனித சக்திகளுக்கு அப்பால்பட்ட இவ்வுலகமும் அதில் உள்ள வானம், புமி, கடல், மலைகள் போன்ற இன்னோரன்ன படைப்புகள் தானக வந்ததா? இப்படி சிந்திக்கும் ஆற்றல்கொண்ட யாரும் கூறுவார்களா!!?

ஒவ்வொரு உற்பத்திகளுக்கு பின்னாலும் உற்பத்தியாளனை கண்டுகொள்கின்ற நாம் ஏன் மனித சக்திகளுக்கு அப்பால்பட்ட படைப்புகளை பார்க்கும்போது படைப்பாளனை கண்டுகொள்ளகூடாது. எனவே படைத்தவனை அறிய சிறந்த வழி படைப்பினத்தைப் பற்றி சிந்திப்பதே. அதனால் தான் மனித கோடிகளுள் (நாத்திகர் என்ற) சிலரைத் தவிர அனைவரும் ஏதோ ஒரு கடவுளை ஏற்றிருக்கின்றனர்.

 • (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?59. அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?…63. (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?64. அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?65. நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் – அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்….68. அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா? 69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? 70. நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? 71. நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? 72. அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? 73. நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம். (56:58-73)
 •  (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று 18. மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டி ருக்கிறது? என்றும், 19. இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும், 20. இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)  (88:17-20)
 •  “நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் – “ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான். 25. இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான். 26. நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது. 27. உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான். (79:24-27)
 • உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. 21.உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா? 22. அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன. 23. ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக்கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும். (51:20-23)

2-  முஸ்லிம்களின் கரத்திலிருக்கும் இறைவேதம் அல்குர்ஆனை வைத்தும் படைத்தவன் அல்லாஹ்வை புரிந்துகொள்ளமுடியும்.

 • அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.  (4:82)
 • மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? 25. நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான். (47:24-25)

அல்குர்ஆன் சொல்லித்தரும் விஞ்சான உண்மைகள் அது இறைவேதம் என்பதனை நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. மனித சமூகத்துக்கு பொறுத்தமான அதன் சட்டங்களும், அது இறக்கப்பட்டு ஆயிரத்து நானூறு வருடங்களை தாண்டியும் இன்னும் அதில் முரண்படுகளைக் காட்ட முடியவில்லை என்பதும் அது இறைவேதம் தான் என்பதனை இன்னும் உறுதிபடுத்துகின்றது.

மேலும் அல்குர்ஆன் அன்றிலிருந்து இன்றுவரை வந்த மனிதர்களுக்கு சவால் விட்டிருக்கின்றது, ஆனாலும் அறிவியலின் உச்சத்தை அடைந்துவிட்டோம் என்று கூறும் மனிதனால் அதனை முறியடிக்க முடியவில்லை. இப்படி பல வழிகளில் அல்குர்ஆன் இறைவேதம் என்பதை நிரூபிக்கமுடியும்.

 •  “இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும். (17:88)
 • அல்லது “இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்கள்? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் – நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (11:13)
 • இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.  (2:23)
 • இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று. (10:38)

எனவே இந்த அல்குர்ஆனை வைத்து படைத்தவன், அல்லாஹ் என்பதனை எம்மால் உறுதி படுத்திக் கொள்ளமுடியும்.

மேலும் அந்த அல்லாஹ்வைப் பற்றி அறிவதே முதற் கடமை என்பதனால், அவனை எப்படி நம்பவேண்டும் என அவனின் வேதம் அல்குர்ஆனும் அதற்கு விளக்கமாக இருக்கும் அவனது தூதரின் வழிமுறையும் சொல்லித் தறுகின்றதோ அப்படி நம்ப நாம் முயற்சிப்போம். அல்லஹ்வே அதில் எமக்கு தெளிவைத் தறுவானாக!!.

C-  அல்லாஹ்வைப் பற்றி படிப்பதன் அவசியம்:

ஒருவன் சரியான முறையில் அல்லாஹ்வைப் பற்றிய அகீதாவை கொள்கையை படிப்பதன் மூலமே தவரான சிந்தனைகள் கொள்கைக்ள் ஷிர்க்கை ஏற்படுத்தும் அம்சங்கள் வழிகேட்டை ஏற்படுத்தும் விடையங்கள் போன்றவற்றிலிருந்து தவிர்ந்து வாழலாம்.

 • வணக்கத்துக்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்பதனை நீர் அறிந்துகொண்டு, உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக. (47: 19)

அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபிமார்கள் அனைவரும் மக்களை அழைத்ததும் அந்த அல்லாஹ்வை ஓர்மை படுத்துவதன் பக்கமே, இதனையே தௌஹீத் (ஓர்மைப் படுத்துதல்) என்ற செல் குறிக்கின்றது.

 • மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். (16:36)

நபி (ஸல்) அவர்கள் முஆத்(ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பும் போது எதன் பக்கம் மக்களை அழைக்கவேண்டும் என்பதனை சுட்டிக்காட்டினார்௧ள். அவற்றுள் முதன்மையானது அல்லாஹ்வைப் பற்றியதே.

 • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஆதே நீ செல்வது வேதம் கொடுக்கப்பட்ட ஒரு கூட்டத்திடத்திலாகும். எனவே நீ அவர்களை முதலாவது அழைக்கவேண்டியது அல்லாஹ்வை வணங்குவதன் பக்கமாகும். அவர்கள் அல்லாஹ்வை அறிந்துகொள்வார்களானால், அல்லாஹ் ஒரு நளைக்கு ஐந்து நேரத் தொழுகையை அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்பதனை அறிவியுங்கள். அதனையும் அவர்கள் செய்தால் அவர்களது சொத்துக்களுக்கான ஸகாத்தையும் (வசதி உள்ளவர்களிடமிருந்து எடுத்து ஏலைகளுக்கு வழங்குவதை) அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்பதனையும் அறிவியுங்கள். அதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிடமிருந்து அதனை அறவிடுங்கள். அவர்களது சொத்தில் பெறுமதியானதை தவிர்ந்து கொள்ளுங்கள்.’  (புஹாரி, முஸ்லிம்)
 • யூதர்கள் என்பவர்கள் அல்லாஹ்வை ஏற்றிருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய கடமைகளை சரியாக செய்யவில்லை. அதனால்தான் முதல் அம்சமாக அல்லாஹ்வைப்பற்றி சொல்லிக்கொடுக்கச் சொன்னார்கள். இதிலிருந்து அல்லாஹ்வைப் பற்றி அறிவதன் அவசியத்தை உணரலாம்.

நபியவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்த பதின்மூன்று வருடங்களும் அல்லாஹ்வைப் பற்றியும் அவனுக்கு செய்யவேண்டிய கடமைகள் பற்றியதுமான அகீதாகவைப் பற்றியே போதி்த்தார்கள். அந்த அடிப்படையில் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, சிலை வணக்கதை ஒழிப்பதையும் வலியுறுத்தினார்கள்.

 • மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம் 22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (2:21)
 • அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்; “இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!” என்றும் காபிர்கள் கூறினர்.5. “இவர் (எல்லா) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).6. “(இவரை விட்டும் விலகிச்) செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது” என்று அவர்களின் தலைவர்கள் (கூறிச்) சென்றனர். (38:4-6)
 • அப்துல்லாஹ்ப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது’ என்று கூறினார்கள். நான், ‘நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்’ என்று சொல்லிவிட்டு, ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது’ என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்க, அவர்கள், ‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது’ என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
 • நபி (ஸல்) அவர்கள் முஆத்(ரழி) அவர்களிடம்; ‘முஆதே! அடியார்கள் அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய கடமையும், அல்லாஹ் அடியார்களுக்கு செய்யவேண்டிய கடமையும் என்னவென்று தெரியுமா?’ எனக் கேற்க, அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என அவர்கள் கூற, நபியவர்கள்: ‘அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டியது; அவனை அவர்கள் வணங்குவதோடு, அவனுக்கு எதையும் இணையாக்காமல் இருப்பதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செயவேண்டியது; அவனுக்கு எதையும் இணையாக்காத அடியார்களை தண்டிக்காமலிருப்பதாகும்.’ என்று கூறினார்கள்.  (புஹரி, முஸ்லிம்)

மேலும் நபியவர்கள் மூலமே அவர்களின் அழைப்புப் பணியைப்பற்றி அல்லாஹ் தெளிவு படுத்துவதோடு, கட்டளையுமிடுகின்றான்.

 •  (நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின்பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.”  (12:108.)
 •  (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.  (16:125)

அல்லாஹ்வைப் பற்றி படிக்க விரும்பும் ஒரு முஸ்லிம் தௌஹீத் எனும் ஓரிறைக் கொள்கை பற்றியே முதலாவது கற்கவேண்டு என்ற அடிப்படையில் தௌஹீத் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.

 

 

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *