ஜனாசாவை சுமப்பதும், அதை பின்தொடர்ந்து செல்வதும்.
இது ஒரு முஸ்லிம் தன் சகோதரனுக்கு செய்யவேண்டிய கடமைகளுல் ஒன்றாகும்.
- இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும். . (புஹாரி : 1240) அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
துயர்ந்து செல்வது என்பது இரண்டு விதத்தில் அமையும், வீட்டிலிருந்து தொழுவிக்கும் வரை மட்டும் பின்தொடர்வது, அல்லது தொழுகையிலும் கலந்துகொண்டு, அடக்கும் வரை இருப்பது, இரண்டாவது கட்டமே சிறப்புக்குறியது.
- நாபிஃ அறிவித்தார்: ஜனாசாவைப் பின்தொடர்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு என அபூ ஹுரைரா(ரலி) கூறினார் என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டதும் ‘அபூ ஹுரைரா(ரலி) மிகைப்படுத்துகிறார்’ என்றார்.
ஆயிஷா(ரலி) அபூ ஹுரைரா(ரலி)வின் கூற்றை உண்மைப்படுத்தியதுடன், ‘நானும் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன்’ என்றும் கூறினார். இதைக்கேட்ட இப்னு உமர்(ரலி) ‘அப்படியாயின் நாம் அதிகமான கீராத்களைப் பாழ்படுத்தி விட்டோமே’ என்றார். . (புஹாரி : 1323,1324) - அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இரண்டு கீராத்கள் என்றால் என்ன?’ என வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள். . (புஹாரி : 1325)
ஜனாசாவை பின்தொடரும்போது நபி வழிக்கு முரனான, நபிகளார் காட்டித்தராத காரியங்களை செய்யக்கூடாது, சத்தம்போட்டு திக்ர்செய்வது, நறுமனங்கள் தெளித் தவாரோ, பகல் நேரத்தில் விளக்குகளை ஏந்தியவாரோ செல்லக்கூடாது.
சுமந்து செல்லும் போது விரைவக நடப்பதும் முக்கியமனது.
- இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.” . (புஹாரி : 1315, முஸ்லிம்: 470) .
- இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.” அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். . (புஹாரி : 1314)
ஜனாசாவை பிதொடரும் போது முன்னாலோ பின்னாலோ செல்லலாம்.
- அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்களும், அபூ பக்ர் உமர் (றழி) ஆகியோரும் ஜனாசாவுக்கு முன்னாலும், பின்னாலும் நடப்பவர்களாக இருந்தார்கள்.’ (தஹாவி)
ஜனாசாவை பின்தொடரும்போது தேவை ஏற்படின் வாகனங்களில் ஏறிச் செல்லலாம், திரும்பிவரும்போது தாராலமாகவே வாகனங்களில் ஏறிச் செல்லலாம்.
- இப்னு தஹ்தாஹ் (ரளி) அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜனாஸா) தொழுகை நடத்தினர். (அது முடிந்தபின்) எதுவும் விரிக்கப்படாத நிலையில் ஒரு குதிரை அவர்களுக்காக கொண்டுவரப்பட்டது. ஒரு மனிதர் அக்குதிரையை பிடித்திருக்க அதன்மீது நபி (ஸல்) அவர்கள் ஏறினார்கள். அவர்களை (ஏற்றிக்கொண்டு) அக்குதிரை தன் பாதங்களை நெருக்கமாக வைத்து நடந்தது. நாங்கள் அவர்களுக்குப் பின்னால் தொடர்ந்து விரைந்தோம். கூட்டத்திலிருந்த ஒரு மனிதர், “இப்னு தஹ்தாஹ்விற்காக சுவனத்தில் எத்தனையோ ஈச்சங்குலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன என்றும், அல்லது அதை அவர் உண்ணுவதற்கு தகுந்தார்போல் நெருக்கமாக வைக்கப்பட்டுள்ளது என்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக” கூறினார். (முஸ்லிம்: 485)
ஜனாசாக்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதை பொறுத்தவரை அதில் நபி வழியில் சான்றுகள் இல்லை, ஆனாலும் நபியவர்கள் தோழில் சுமந்து செல்வது என்ற வார்த்தையோடு சேர்த்து கூறியிருக்கின்றார்கள். மேலும் அதுவே மரண சிந்தனையை அதிகப்படுத்தவும் காரணமாக இருக்கும்.
- இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது,…….. . (புஹாரி : 1314)
ஜனாசாக்கள் சுமந்து செல்வதைக் காணுபவர் எழுந்து நிற்பதை பொறுத்தவரை, அது ஆரம்பத்தில் சட்டமாக இருந்து, பிறகு அமர்ந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- ஒரு ஜனாஸா சென்றது (ஒரு ஜனாஸாவை மக்கள் எடுத்துச் சென்றனர்.) அதன் பொருட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எழுந்து) நின்றனர், (அதைப்பார்த்து) நாங்களும் எழுந்து நின்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! அது யூதப்பெண்ணின் ஜனாஸாவாகும் எனக்கூறினோம். (அதற்கவர்கள்) மரணம் என்பது நிச்சயமாக திடுக்க(ம் தரும் செய்தியாகும்)மாகும். ஆகவே ஜனாஸாவை (எடுத்துச் செல்லக்) கண்டால் அதன் நிமித்தம் எழுந்து நில்லுங்கள் எனக் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்: 472) அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரளி)
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (ஜனாஸாவிற்காக) எழுந்திருக்கக்கண்டு நாங்களும் எழுந்தோம். (ஆனால் பின்பு) ஜனாஸாவிற்காக அவர்களும் அமர்ந்தார்கள், நாங்களும் அமர்ந்தோம் என அலி (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி, முஸ்லிம்: 473)
பெண்கள் ஜனாசாகளை பின்தொடர்வது அனுமதிக்கப்பட்டதல்ல.
- உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். ஜனாஸாவை பின்தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்: ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை (புஹாரி: 1278, முஸ்லிம்: 471)