கடைசி முடிவு நல்லதாக இருப்பதற்கான அடையாளங்கள்:
கலிமாவைக் கூறிய நிலையில் மரணித்தல்.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யாருடைய கடைசி வார்த்தை ‘لا إله إلا الله வணக்கத்துக்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை’ என்பதாக இருக்குமோ அவர் சுவனம் நுளைவார்.’ (ஹாகிம்)
- நபி (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்கள் மரணிக்கும் தருனத்தில் ‘என் பெரியத் தந்தையே لا إله إلا الله என்று கூறுங்கள் உங்களுக்காக அல்லாஹ்விடம் பேசுகின்றேன்.’ என்று கூறினார்கள். (புஹாரி)
யுத்தக் களத்தில் ஷஹீதாக மரணித்தல்.
- யுத்தக் களத்தில் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்களாக எண்ணாதீர்கள், மாறாக அவர்கள் அல்லாஹ்விடத்தில் உணவளிக்கப்படும் நிலையிலும், அல்லாஹ் அவர்களுக்கு செய்த சிறப்புகளைவைத்து சந்தோசப்படும் நிலையிலும் உயிரோடு இருக்கின்றனர். (அல் குர் ஆன் 3:169)
- நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களிடம் ‘உங்களில் ஷஹீதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?’ என்று கேட்க, அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்பட்டவரே ஷஹீத்’ என்று கூறினார்கள், அப்போது நபியவர்கள், ‘அப்படியென்றால் என் உம்மத்தில் ஷஹீத்கள் குறைந்துவிடுவார்கள்.’ என்று கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்? என்று நபித்தோழர்கள் கேட்க, ‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீதாவார்,’அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவர் ஷஹீதாவார்,யார் பிலேக் நோயினால் மரணித்தாரோ அவர் ஷஹீதாவார், வயிற்றுப் போக்கில் மரணித்தவரும், நீரில் மூழ்கி மரணித்தவரும் ஷஹீதாவார்.’ என்று கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்)நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பிலேக் நோய் என்பது அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தண்டனையாக அனுப்புகின்றான், அதை மூஃமீன்களுக்கு ரஹ்மத்தாகவும் ஆக்கிவிடுகின்றான். எனவே ஒரு அடியானுக்கு பிலேக் நோய் ஏற்பட்டு, அவன் அல்லாஹ் நாடியதுதான் நடக்கும் என்று நினைத்தவனாக, தனது ஊரில் பொறுமையாக இருந்தால் அவனுக்கு ஷஹீதுடைய கூலி கிடைக்கும்.’ (புஹாரி, அஹ்மத்)
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஷஹீதுகள் ஐந்து பேராவார்கள்; பிலேக் நோயினால் பாதிகப்பட்டவன், வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டவன், இடிபாடுகளுக்குள் சிக்குண்டவன், அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்தவன்.’ (புஹாரி , முஸ்லிம்)
சொத்துக்களைப் பாதுகாக்க போராடுவது,
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தன் சொத்துக்களைப் பாதுகாக்கச் சென்று கொல்லப்படுகின்றாரோ அவர் ஷஹீதாவார்.’ (புஹாரி, முஸ்லிம்)
- நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் எனது சொத்தை சூரையாட வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க, நபியவர்கள்: அவனுக்கு நீ கொடுக்காதே’ என்றார்கள், அதற்கு அந்த மனிதர், அவன் என்னோடு சண்டைக்கு வந்தால் என்ன செய்வது எனக் கேட்க, நீயும் அவனோடு எதிர் யுத்தம் செய், என்று நபியவர்கள் கூற, அவன் என்னை கொன்றுவிட்டால் என்ன நிலை என்று திருப்பிக் கேட்க, ‘அப்படி நடந்தால் நீ ஷஹீதாவாய்’ என்று கூரினார்கள் நபியவர்கள்….(முஸ்லிம்)
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் தன் சொத்தின் காரணமாகவும், குடும்பத்திற்காகவும், மார்கத்துக்காகவும், உயிருக்காகவும் கொல்லப்படுகின்றாரோ அவர் ஷஹீதாவார்.’ (அபூ தாவுத், திர்மிதி)
நெற்றியில் வியர்வை உள்ள நிலையில் மரணித்தல்
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மூஃமினின் மரணம் நெற்றியில் வியர்வை இருப்பது கொண்டு ஏற்படும்.’ (அஹ்மத், திர்மிதி, நசாஇ)
- குறிப்பு: இந்த ஹதீஸ் பல வழிகளில் வருவதன் மூலம் ஸஹீஹ் என்ற தரத்தை அடைவதாக ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
- வெள்ளிக்கிழமை மரணித்தால் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாக் கப்படுவார் என அஹ்மதில் வரும் ஹதீஸ் எல்லா வழிகளிலும் பலவீனமானது.