سُورَةُ الْفَلَق
ஸூரதுல் பலக்
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!
பெயர்: ஸூரதுல் பலக் (அதிகாலை)
இறங்கிய காலப்பகுதி : மக்கீ
வசனங்கள்: 5
குல் அஊது பிறப்பில் பலக், {قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ , قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய, பாதுகாப்பு தேடுவதற்காக ஓதப்படும் இரண்டு ஸூராக்கள் பற்றிய சிறப்புகளும், குறிப்புகளும்:
ஸிர்ருப்னு ஹுபைஷ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் உபை இப்னு கஃப்(ரலி) அவர்களிடம் ‘அபூ முன்திரே! தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத்(ரலி) இப்படி இப்படி சொல்கிறாரே?’ என்று கூறி, ‘முஅவ்விததைன்’ (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114 வது அத்தியாயங்கள்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “இது குறித்து நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், என்னிடம் ‘கூறுக! என்று சொல்லப்பட்டது, நானும் கூறினேன்’ என்று கூறினார்கள்.” என்று கூறிவிட்டு, ‘எனவே, நாங்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்’ என்று கூறினார்கள். (புகாரி: 4976, 4977 ஆஸிம் பின் பஹ்தலா, அப்ததுப்னு அபீ லுபாபா வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.)
ஸிர்ருப்னு ஹுபைஷ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் உபை இப்னு கஃப்(ரலி) அவர்களிடம் ‘நிச்சயமாக இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் ‘முஅவ்விததைன்’ (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114 வது அத்தியாயங்களை) தனது முஸ்ஹபில் (குர்ஆன் பிரதியில்) எழுதுவதில்லையே’ என்று கேட்டேன். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரவர்கள் என்னிடம் ‘நிச்சயமாக ஜிப்ரீல் அவர்கள் நபியவர்களிடம் {قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ,قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} என்று ஓதுமாறு கூற, நானும் ஓதினேன்.’ என்று அறிவித்தார்கள். ‘எனவே, நாங்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்’ என்று கூறினார்கள். (அஹ்மத்: 21186, ஆஸிம் பின் பஹ்தலா,அப்ததுப்னு அபீ லுபாபா வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்தா வழியாக நம்பகமான அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷுஐபுல் அர்னாவுத்)
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலி அவர்கள், ‘முஅவ்விததைன்’ (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114 வது அத்தியாயங்களை) அல்குர்ஆன் பிரதியிலிருந்து அழித்துவிட்டு, ‘அவ்விரண்டும் குர்ஆனில் உள்ளதல்ல’ என்று கூறுவார்கள். (அஹ்மத்: 21188)
நபி ஸல் அவர்கள் அவ்விரண்டைக் கொண்டும் ஹஸன் ஹுஸைன் ரலி ஆகியோருக்கு பாதுகாப்புத் தேடி ஓதுபவர்களாக கண்டார்கள், அவர்களின் தொழுகை எதிலும் அவ்விரண்டையும் ஓதியத்தைக் கேட்கவில்லை, எனவே அவ்விரண்டும் பாதுகாப்புத்தேடும் துஆக்கள் என்று கருதினார்கள், அதில் உறுதியாகவும் இருந்தார்கள், ஏனைய நபித்தோழர்கள் அவ்விரண்டும் அல்குர்ஆனில் உள்ளவை என்பதை உறுதிகொண்டு, அவ்விரண்டையும் அதனோடு சேர்த்தார்கள். (அஹ்மத்: 21189 இந்த தகவல் ஸுப்யான் பின் உயைனா அவர்களது கூற்றாக பதியப்பட்டுள்ளது. நம்பகமான அறிவிப்பாளர் தொடர், ஷுஐபுல் அர்னாவுத்)
அல்கமா ரஹ் கூறினார்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலி அவர்கள், ‘நபியவர்கள் அவ்விரண்டைக்கொண்டும் பாதுகாப்புத் தேடுமாறே ஏவப்பட்டார்கள், என்று கூறி குர்ஆனிலிருந்து நீக்குவார்கள்.’ (முஸ்னதுல் பஸ்ஸார்:1585)
பஸ்ஸார் இமாமவர்கள் கூறினார்கள்: ‘இப்னு மஸ்ஊத் ரலி அவர்களின் இந்த கூற்றை வேறு எந்த நபித்தோழரும் ஏற்கவில்லை, நபி ஸல் அவர்கள் அவ்விரண்டையும் தொழுகையில் ஓதினார்கள் என்பது ஆதாரப்பூர்வமாக பதியப்பட்டுள்ளது, அது அல்குர்ஆன் பிரதியிலும் எழுதப்பட்டுள்ளது.’ என்று கூறினார்கள்.
இந்த கூற்றுக்களை பதிவு செய்த இப்னு கஸீர் இமாமவர்கள் ‘இந்த கருத்து குர்ராக்கள் (குர்ஆன் ஓதும் முறையை அறிவித்தவர்கள்) புகஹாக்கள் (சட்டக்கலை அறிஞர்கள்) மத்தியிலும் பிரபல்யமானதாகும்.’ என்று கூறிவிட்டு, இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடமிருந்து அதனை (குர்ஆனில் உள்ளதாக) செவிமடுத்திருக்க மாட்டார்கள், அவர்களிடம் அது குர்ஆன் என்று உறுதியாகவில்லைபோலும், பிறகு அவர்கள் அந்த கருத்திலிருந்து மீண்டு, ஒட்டுமொத்த நபித்தோழர்களின் கூற்றுக்கு மீண்டிருக்கலாம், ஏனெனில் நபித்தோழர்கள், அவ்விரண்டையும் பிரதான குர்ஆன் பிரதிகளில் பதிந்தார்கள், அதனையே உலகம் முழுக்கவும் சென்றடையச் செய்தார்கள், அல்லாஹ்வுக்கே புகழும், அருளும் சொந்தமானது.’ என்று கூறி, அவை குர்ஆனில் உள்ளவை என்பதற்கான ஆதாரங்களை தொடர்ந்து பதிந்தார்கள். (இப்னுகஸீர்)
இமாம் இப்னு கஸீர் அவர்கள் இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் அந்த கருத்திலிருந்து மீண்டுவந்தார்கள் என்பதற்கு எந்த சான்றையும் முன்வைக்கவில்லை, அதேநேரம் புகாரி ஹதீஸ் புத்தகத்திற்கு அடிக்குறிப்பு எழுதிய ‘இமாம் முஸ்தபா அல்புகா’ அவர்கள், ‘நாங்கள் அல்லாஹ்வின் தூதர் கூறியதுபோன்றே கூறுவோம்.’ என்ற கூற்றுக்கு அடிக்குறிப்பு எழுதும் போது, ‘இப்னு மஸ்ஊத் ரலி அவர்களிடம் அது குர்ஆனில் உள்ளது என்பது உறுதியாக தரிப்பிடவில்லை, பிறகு உடன்பாடு ஏற்பட்டது‘ என்று கூறியுள்ளார்கள். (புகாரி அடிக்குறிப்பு)
எனக்கு விளங்கியது; ‘உபய்யுப்னு கஃப் ரலி அவர்கள், ‘நாங்கள்’ என்று பன்மையாக கூறியதிலிருந்து இப்படி புரிய வாய்ப்புள்ளது.’ (அல்லாஹு அஃலம்)
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உமக்குத் தெரியாதா? இன்றிரவு (எனக்கு) சில வசனங்கள் அருளப்பெற்றுள்ளன. அவையொத்த வசனங்கள் முன்னெப்போதும் காணப்பட்டதில்லை. அவை: குல் அஊது பிரப்பில் பலக், குல் அஊது பிரப்பின்னாஸ்” (113, 114ஆகிய) அத்தியாயங்களாகும். (முஸ்லிம்: 1482)
ஆஇஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோருபவைகளை (மூன்று அத்தியாயங்களை) ஓதி, தம் மீது (கையில் ஊதி) ஊதி, தம் கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு அத்தியாயங்களை நான் அவர்களின் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி(ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன். (புகாரி: 4439,4440, முஸ்லிம்)
ஆஇஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் பலக்’, ‘குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதி, பிறகு தம் இரண்டு கைகளால் தம் உடலில் (அவை எட்டும் அளவிற்கு) இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (புகாரி: 5017,6319)
உக்பதுப்னு ஆமிர் ரலி அவர்கள் கூறினார்கள்: நான் நபி ஸல் அவர்களுடன் மலைக் கணவாய்களுக்கிடையில் பயணித்துக் கொண்டிருந்தேன், அப்போது நபியவர்கள், ‘உக்பாவே (ஒட்டகத்தில்) ஏறமாட்டீரா என்றார்கள், நான் நபிகளாருடன் ஏறாமல் கண்ணியப்படுத்த நினைத்தேன், பிறகு மீண்டும் ஏறமாட்டீரா என்றார்கள், நான் அது பாவமாகிவிடுமோ என்று பயந்தேன், அல்லாஹ்வின் தூதர் இறங்கினார்கள், நான் கொஞ்சம் ஏறினேன், பிறகு நபியவர்கள் ஏறினார்கள். பிறகு, ; ‘உக்பாவே! மக்கள் ஓதும் ஸூராக்களிலேயே மிகவும் சிறந்த இரண்டு ஸூராக்களை உங்களுக்கு கற்றுத் தரட்டுமா என்று கேற்க,’ நானும் கற்றுத்தாருங்கள் என்றேன், அப்போது ‘{قُلْ أَعُو ذُ بِرَبِّ الْفَلَقِ , َقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} ஸூராக்களை ஓதிக்காட்டினார்கள், பிறகு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது, நபியவர்கள் முந்திச்சென்று தொழுவித்து, அவ்விரண்டு ஸூராக்களையும் ஓதினார்கள், பிறகு என்னிடம், ; ‘உக்பாவே எப்படி இருந்தது?, அவ்விரண்டையும் தூங்கும் போதும், எழுந்திருக்கும் போதும் ஓதுங்கள்!’ என்று கூறினார்கள். (அஹ்மது:17296)
இந்த ஹதீஸ் ‘அல்காஸிம் அபீ அப்திர் ரஹ்மான்‘ வழியாகவே பல ஹதீஸ் நூல்களிலும் பதியப்பட்டுள்ளது, அவர், ‘அபூர்வமான செய்திகளை அதிகம் அறிவிப்பவர், முன்கர்‘ என்று விமர்சிக்கப்பட்டவராவார், எனவே இது பலவீனமானதாகும். ஷுஐப் அல்அர்ணாவூத் அவர்கள் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.
உக்பதுப்னு ஆமிர் ரலி கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் முஅவ்விஸாத்களை ஓதிவருமாறு எனக்கு ஏவினார்கள். (அஹ்மத்: 17417)
இது ‘அபூ மர்ஹூம், (லையினுல் ஹதீஸ் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டவர்) வழியாகவும், ‘யஸீதுப்னு அப்தில் அஸீஸுர் ருஅய்னீ‘ (மஸ்தூர்) வழியாகவும், ‘ஹுனைன் பின் அபீ ஹக்கீம்‘ (ஸதூக் எனும் தரத்தில் உள்ளவர்) வழியாகவும் (அஹ்மத்:17792) பதியப்பட்டுள்ளது. ஹஸன், ஸஹீஹ் என்று ஷுஐப் அல்அர்ணாவூத், அல்பானி ஆகியோர் கூறினார்கள்.
உக்பதுப்னு ஆமிர் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ‘{قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ , قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} போன்ற ஒன்றைக் கொண்டு யாரும் கேட்கவுமில்லை, அவை போன்ற ஒன்றைக்கொண்டு பாதுகாப்பு தேடவுமில்லை. (நஸாஇ: 5438 ஹஸன்)
அபூ ஸஈத் அல்குத்ரீ ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் மனித, ஜின்களின் கண்ணூரிலிருந்து பாதுகாப்பு தேடுபவர்களாக இருந்தார்கள், பாதுகாப்பு தேடும் இரண்டு ஸூராக்கள் இறங்கியபோது அவ்விரண்டையும் எடுத்துக்கொண்டு, ஏனையவற்றை விட்டுவிட்டார்கள். (நஸாஈ:5494, திர்மிதீ:2058, இப்னு மாஜா:3511)
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறும்போது; ‘பலக், நாஸ் ஆகிய ஸூராக்களுக்கு முன்னர் ஸூரா இக்லாஸ் கூறப்பப்பட்டிருப்பதன் பொருத்தப்பாடு புகழப்படவேண்டியதே. ஏன்! ஸூரா இக்லாஸில் அல்லாஹ் அவன் ஒருவன், தனித்துவமானவன் படைப்புகள் தேவைகளுக்காக நாடி செல்லும், படைப்புகளிடம் தேவைகாணாத ஒரே இறைவன் என்று கூறிவிட்டு, இந்த இரண்டு ஸூராக்களிலும் அடியார்கள் பாதுகாப்பு தேடவும், ஒதுங்கவும் வழிகாட்டுதல் வந்திருக்கிறது, அவனே அல்லாஹ், அவன் மாத்திரமே அவர்களை பாதுகாப்பான், அவன் பக்கமே அவர்கள் ஒதுங்கவேண்டும். என்ற வழிகாட்டலை தந்துள்ளான். (அல்வாஉல் பயான்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ
قُلْ கூறு/சொல், اَعُوْذُ நான் பாதுகாப்புத் தேடுகிறேன்/வேன், بِ கொண்டு/மூலம், رَبِّ இறைவன், الْفَلَقِ அதிகாலை
(நபியே! நீர் கூறுவீராக! வைகறையின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். (113:1)
பலக் என்றால் ‘சுப்ஹ் காலைப்பொழுது’ என்று இப்னு அப்பாஸ், ஜாபிர், முஜாஹித், ஸஈத் பின் ஜுபைர், கதாதா, முஹம்மத் பின் கஃப் அல்குறழீ, அல்ஹஸன், இப்னு ஸைத் போன்றவர்கள் கூறினர்.
முஹம்மத் பின் கஃப் அல்குறழீ, இப்னு ஸைத், இப்னு ஜரீர் போன்றவர்கள், அது ஸூரதுல் அன்ஆமின் 96 வது வசனம் போன்றதாகும். என்று கூறினர் (இப்னு கஸீர்)
فَالِقُ الْاِصْبَاحِۚ
அவனே அதிகாலை நேரத்தை வெடிக்கச் செய்கிறவன், (6:96)
இப்னு அப்பாஸ் ரலி கூற்றாக அலீ பின் அபீ தல்ஹா அவர்கள், ‘அல்பலக்‘ என்றால் ‘படைப்பு‘ என்று பதிவு செய்தார்கள். அதுபோன்றே ளஹ்ஹாக் அவர்களும்; ‘அல்லாஹ் தனது தூதருக்கு அனைத்து படைப்புகளிடமிருந்தும் பாதுகாப்பு தேடுமாறு கூறியுள்ளான்.’ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)
கஃபுல் அஹ்பார் அவர்கள், ‘அல்பலக்’ என்றால் நரகில் உள்ள ஒரு வீடு, அது திறக்கப்பட்டால் அதன் சூட்டின் கடுமையால் நரகவாசிகள் அனைவரும் கத்துவர்.’ என்று கூறினார்கள். அதனை பதிவு செய்த இப்னு அபீஹாதிம் அவர்கள், ‘ஸைத் பின் அலீ அவர்கள் தங்கள் முன்னோர்களைத் தொட்டு ‘அல்பலக்’ என்றால் நரகில் உள்ள ஒரு ஆழமான குழி, அதன் மீது ஒரு மூடி இருக்கும், அது நீக்கப்பட்டால் அதிலிருந்து நெருப்பு வெளியேறும், அதன் காரணமாக நரகமே சத்தமிடும்’ என்று கூறினார்கள்.’ என்று பதிந்துள்ளார். (அதன் அறிவிப்பில் ஒரு மனிதர் கூறினார் என்று வந்துள்ளது) இவ்வாறே அம்ருப்னு அபஸா, ஸுத்தீ, போன்றவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றி ஒரு நபிமொழியும் அறிவிக்கப்பட்டுள்ளது, அது முன்கரான நிராகரிக்கப்பட்டதாகும். இப்னு ஜரீர் இமாமவர்கள் அறிவிப்பாளர் தெடர்கொண்டு, ‘அல்பலக் என்றால் நரகிலுள்ள மூடப்பட்டுள்ள ஒரு குழியாகும்’ என்று நபிகளாரிடமிருந்து அபூ ஹுரைரா ரலி அறிவித்ததாக பதிவுசெய்துள்ளார்கள். அதன் அறிவிப்பாளர் தொடர் ‘கரீபான அபூர்வமான’ நபிகளார் கூற்றாக சொல்லமுடியாத செய்தியாகும். மேலும் ‘அல்பலக்’ என்பது நரகின் பெயர்களில் ஒன்று என்று அபூ அப்திர் ரஹ்மானுல் ஹுபுலீ கூறினார்கள். (இப்னு கஸீர்)
இப்னு ஜரீர் இமாமவர்கள், ‘முதல் கருத்தே சரியானது, அது விடியற்காலை என்பதாகும், அதுவே சரியானது, அதுவே புகாரி இமாமவர்கள் தனது தொகுப்பில் (முஜாஹித் அவர்கள் கூறினார்கள் என்று) தேர்வு செய்ததாகும். (இப்னு கஸீர்)
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் இந்த கருத்துக்களுடன் ;
“அபூ ஹய்யான் அவர்களும் வேறு சிலரும்; ‘அல்பலக்‘ என்றால் ‘பிளக்கப்பட்டது‘ என்று அர்த்தமாகும்.’ என்று கூறினார்கள். எனவே அது காலைப்பொழுதிலிருந்து இரவு பிளந்துவிடுவதாகும்‘ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ‘வித்து, விதை’ என்றும் கூறப்பட்டுள்ளது.
சில விரிவுரையாளர்கள்; ‘அல்லாஹ் வேறு ஒன்றிலிருந்து எதையெல்லாம் பிளந்து எடுக்கிறானோ அவை அனைத்தையும் குறிக்கும்’ ‘காலைப் பொழுதை பிரித்துவிடும் இரவு போன்று, வித்து, விதையை வெளிப்படுத்தும் பயிர் போன்று, பயிர்களை வெளிப்படுத்தும் பூமி போன்று, நீரை வெளிப்படுத்தும் மலைகள் போன்று, குழந்தைகளை வெளிப்படுத்தும் கற்பறைகள் போன்று, மழையை வெளிப்படுத்தும் மேகம் போன்று,’ என்று கூறினர். ‘அல்லாஹ் குறிப்பாக்காமல் பொதுவாக கூறியுள்ளான், அதுபோன்றே பொதுவாக நோக்கப்படும் என்று இப்னு ஜரீர் இமாம் கூறினார்கள்.’ அது நரகில் உள்ள ஒரு குழியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.” என்று பதிவு செய்துவிட்டு,
“நரகில் உள்ள ஒரு குழி என்ற கருத்தைத் தவிர உள்ள ஏனைய கருத்துக்கள் ஒன்றுபட்ட கருத்தைத் தரும் முரண்பட்ட பாவனையாகும். அவை அனைத்தும் இடம்பாடானவையே, இப்னு ஜரீர் இமாமவர்கள் பொதுவாக நோக்கப்படும் என்கிறார்கள். அல்பலக் என்றால் நரகில் உள்ள ஒரு குழி என்பதற்கு எந்த ஆதாரமும் தரிப்படவில்லை, அதில் ஏனைய கருத்துக்களில் காண்பதுபோன்ற, அக்கருத்தை பலப்படுத்தும் அல்லாஹ்வின் வல்லமையைக் காட்டும் எந்த அத்தாட்சியும் இல்லை.
அடுத்து குர்ஆன் சான்றுபகர்வது முதலாவது கருத்தாகும், காலைப்பொழுது, வித்து, விதை என்பதற்கு ஆதாரம் வந்துள்ளது. அல்லாஹ் கூறுகின்றான்:
اِنَّ اللّٰهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوٰىؕ يُخْرِجُ الْحَىَّ مِنَ الْمَيِّتِ وَمُخْرِجُ الْمَيِّتِ مِنَ الْحَىِّ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ فَاَنّٰى تُؤْفَكُوْنَ فَالِقُ الْاِصْبَاحِۚ وَ جَعَلَ الَّيْلَ سَكَنًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ؕ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ
நிச்சயமாக அல்லாஹ்தான் வித்துக்களையும் விதைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கின்றவன், இறந்ததிலிருந்து உயிருள்ளதை அவன் வெளிப்படுத்துகின்றான், உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் அவனே வெளிப்படுத்துகின்றவன், (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் (உங்கள்) அல்லாஹ், ஆகவே, நீங்கள் (அவனுக்கு வணக்க வழிபாடுகளைச் செய்வதிலிருந்து) எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள். (95) அவனே அதிகாலை நேர(வெளிச்ச)த்தை (இரவின் இருள்களிலிருந்து) வெடிக்கச் செய்கிறவன், அவனே (படைப்பினங்கள் அனைத்தும் களைப்பாறுவதற்காக) இரவை அமைதியானதாகவும் காலக்கணக்கிற்காகச் சூரியனையும் சந்திரனையும் ஆக்கினான், இவை யாவும் (யாவரையும்) மிகைத்தோனாகிய மிக்க அறிந்தோனாகியவனின் ஏற்பாடாகும். (6:95,96)
அவை அனைத்தும் அல்லாஹ்வின் ஆற்றலுக்கு சான்றுபகரும் அத்தாட்சிகளாகும். ஆஇஷா ரலி அவர்களின் நபிகளாருக்கு இறை செய்தி வர ஆரம்பித்த நிகழ்வு பற்றிய கூற்றில் ‘நபி ஸல் அவர்கள் எந்த கணவைக் கண்டாலும் அது விடியற்காலை (பலகிஸ் ஸுப்ஹ்) வருவதைப் போன்று வந்துவிடும்’ (புகாரி:3) என்று வந்துள்ளது.
அடுத்து அல்பலக் என்றால் காலைப்பொழுது என்பது அரபுகளின் பேச்சில் அறியப்பட்டதாகும்.” என்று கூறி, விடியற்காலை என்ற கருத்தை சரிகாணுகிறார்கள். (அல்வாஉல் பயான்)
مِنْ شَرِّ مَا خَلَقَۙ
مِنْ இருந்து/விட்டும்/நின்றும், شَرِّ தீங்கு/கெடுதி, مَا ஒன்று/எதை/என்ன, خَلَقَ படைத்தான்
அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும், (113:2)
அல்லாஹ் படைத்திருக்கும் அனைத்து படைப்பினங்களின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுதல். ஸாபிதுல் புனானி, ஹஸனுல் பஸரீ இமாமவர்கள், ‘இப்லீஸ் ஷைதானும், நரகமும் அல்லாஹ் படைத்ததில் உள்ளவர்களே’ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)
وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ
غَاسِقٍ இரவு, اِذَا போது/ ஆல் உருபு/ நிபந்தனையிடுதல், وَقَبَ படர்ந்துவிட்டது
இரவு பரவிவிடும்போது, (ஏற்படும்) இருளின் தீங்கைவிட்டும் (113:3)
காஸிக் என்றால் சூரியன் மறையும் போது ஏற்படும் இரவு என்று இப்னு அப்பாஸ், முஹம்மதுப்னு கஃபுல் குரலீ, முஜாஹித், கதாதா, ளஹ்ஹாக் போன்றவர்கள் கூறினார்கள்.
காஸிக் என்றால் நட்சத்திரன் என்ற கருத்து அபூ ஹுறைரா ரலி அவர்களைத் தொட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னு ஜரீர் இமாமவர்கள் அபூ ஹுரைரா வழியாக நபிகளார் கூறியதாக ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார்கள், நபிகளாரின் கூற்று என்பது பலவீனமானது என இப்னு கஸீர் இமாமவர்கள் கூறினார்கள்.
இன்னும் சிலர் காஸிக் என்றால் சந்திரன் என்று கூறினார்கள். என்று பதிந்த இப்னு கஸீர் இமாமவர்கள் அந்த கூற்றைக் கூறியவர்கள், அவர்களின் ஆதாரமாக அஹ்மதில் பதியப்பட்டுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாக கொண்டுவந்தார்கள்.
ஆஇஷா ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் சந்திரனைப் பார்த்தார்கள், பிறகு, ‘ஆஇஷாவே இதன் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவாயாக, ஏனெனில் அதுவே அல்காஸிகு இதா வகப் ஆகும்’ என்று கூறினார்கள். (திர்மிதீ:3366, அஹ்மத்:25802)
தொடர்ந்து கூறும் போது; ‘காஸிக் என்றால் இரவு என்று கூறியவர்கள், ‘சந்திரன் என்று கூறுவது எங்களது கருத்துக்கு முரணாகாது, ஏனெனில் சந்திரன் இரவின் அத்தாட்சியாகும், அதற்கு இரவிலே தவிர சக்தியில்லை, அதுபோன்றே நட்சத்திரமும் இரவிலே அல்லாமல் பிரகாசிக்காது, எனவே நாங்கள் இரவு என்று சொல்வதன் பக்கமே அது மீண்டுவருகிறது’ என்று கூறினர். அல்லாஹு அஃலம்.’ என்று பதிந்தார்கள்.(இப்னு கஸீர்)
இதன் (திர்மிதீ:3366, அஹ்மத்:25802) அறிவிப்பாளரான ‘அல்ஹாரிஸ் பின் அப்திர் ரஹ்மான்’ என்பவர் ‘ஸதூக்’ என்ற தரத்தில் உள்ளவராவார், அவரிடமிருந்து ‘இப்னு அபீ திஃப்’ என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார்கள், அலிய்யுப்னுல் மதீனீ அவர்கள் அவரை மஜ்ஹூல் என்று விமர்சித்துள்ளார். இதே செய்தி ‘முன்ஸிர் பின் அபில் முன்ஸிர் வழியாகவும் அறிவிக்கபப்ட்டுள்ளது, அவரும் ‘மஜ்ஹூல்‘ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். இதனை அல்பானீ, ஷுஅய்புல் அர்ணாவூத் போன்றவர்கள் ஹஸன், ஸஹீஹ் என்று கூறியுள்ளனர்.
இந்த மூன்று கருத்துக்களையும் பதிவு செய்த இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள்: ‘இரவு என்ற கூற்றுக்கு ஆதாரமாக 17:78 வது வசனத்தை குறிப்பிட்டார்கள்.
اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ
(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் தொழுகையை நிறைவேற்றுவீராக! (17:78)
மேலும் காஸிக் என்றால் மாதக் கடைசியில் வரும் சந்திரன் என்று (முன்னால் பதியப்பட்ட) திர்மிதீ ஹதீஸை வைத்து கூறப்பட்டுள்ளது, இந்த கூற்றை கூறியோர்; ‘இந்த வசனத்திற்கு பிறகு சூனியம் கூறப்பட்டிருப்பது பொருத்தப்பாட்டை ஏற்படுத்துகிறது, ஏனெனில் மாதக் கடைசியிலே அதிகம் சூனியம் செய்கின்றனர்.’ என்று கூறினர்.
இந்த கருத்துக்களில் முதல் கருத்தே சரியானது, அதற்கே குர்ஆன் சான்று பகர்கிறது, இரண்டாவது கருத்து அதனை துயர்ந்து வரும், ஏனெனில் சந்திரன் என்பது அது வெளிப்படுவதும், மறைவதும் இரவுடன் சம்பந்தப்பட்டதே. அது இரவின் சில பகுதியில் ஏற்படுவதே, இரவையில்தான் ஷைதான்களும், மனிதர்களிலும், மிருகங்களிலும் உள்ள குழப்பக்காரர்களும் பரவுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர பாதுகாப்பவன் இல்லை.
நபிமொழியிலும் ‘விளக்குகளை இரவையில் அணையுங்கள், ஏனெனில் குழப்பம் விளைவிப்பவை (எலி) இரவையில் வீட்டில் இருப்பவர்களை வீட்டுடன் எரித்துவிடும்’ (புகாரி:3316, முஸ்லிம்) என்று வந்திருக்கிறது.’ என்று பதிந்துள்ளார்கள். (அல்வாஉல் பயான்)
இரவு வந்துவிட்டால் பேண வேண்டிய சில நபிவழி வழிகாட்டல்கள்:
- இருள் கடுமையாகும் வரை சிறுவர்களை வீட்டுக்குள் வைத்துக்கொள்ளல்.
- வீட்டின் கதவுகளை மூடிவிடல்.
- தூங்க முன்னர் பாத்திரங்களை மூடி விடுதல், ஒரு குச்சியையாவது குறுக்கே வைத்தல்.
- தூங்க முன்னர் விளக்குகளை நெருப்பை அணைத்தல்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைதான்கள் அப்போதுதான் பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை விட்டு விடுங்கள். மேலும், அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உன் கதவை மூடி விடு. (உறங்கச் செல்கையில்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உன்னுடைய விளக்கை அணைத்து விடு. அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உன்னுடைய பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (புகாரி: 3280,33045623, முஸ்லிம்:4099)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல்) தடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி பறித்துச் சென்று விடும். மேலும், தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும். (புகாரி: 3316, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன் மறைந்துவிட்டால் இரவின் இருள் விலகும்வரை உங்கள் கால்நடைகளையும் குழந்தைகளையும் வெளியே விடாதீர்கள். ஏனெனில், ஷைத்தான்கள் சூரியன் மறைந்துவிட்டால் இரவின் (ஆரம்பநேர) இருள் விலகும்வரை கிளம்பிச் செல்கின்றனர். (முஸ்லிம்: 4101)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடிவையுங்கள். ஏனெனில், ஆண்டின் ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது. மூடியில்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடிவைக்காத தண்ணீர் பையையும் கடந்து செல்லும் அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை. (முஸ்லிம்: 4102)
وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ
النَّفّٰثٰتِ ஊதுகிற பல பெண்கள்/ சூனியக்காரிகள், فِى லே/ல், الْعُقَدِ முடிச்சுகள்
மேலும், முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கைவிட்டும், (113:4)
‘உறுதியாக ஊதக்கூடியவர்கள்’ என்றால் சூனியக்காரர்களே நாடப்படுகின்றனர், வசனத்தின் வெளிப்படைக்கு அமைவாக ஊதுவது பெண்களாக இருந்தாலும், அல்லது கூட்டங்கள் என்ற கருத்தில் அல்லது கெட்ட ஆத்மாக்கள் என்ற வகையில் ஆண்களாக இருந்தாலும் சரியே, இரண்டு சாராரையும் சேர்த்துக்கொள்ளும். மேலும், அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் ‘இது நபி ஸல் அவர்களுக்கு சூனியம் வைத்தபோது லபீதுப்னுல் அஃஸம் விடயத்தில் இறங்கியது என்று ஒன்றுபட்டு கூறியுள்ளனர், பிறகு ஜிப்ரீல் அலை அவர்கள் நபியவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தார்கள். (அல்வாஉல் பயான்)
சூனியக்காரர்கள் என்ற கருத்தை முஜாஹித், இக்ரிமா, ஹஸன், கதாதா, ளஹ்ஹாக் போன்றவர்கள் அறிவித்தனர், முஜாஹித் அவர்கள், ‘அவர்கள் மந்திரீகம் செய்து முடிச்சுகளில் ஊதும் போது’ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)
இமாம் தாவூஸ் ரஹ் கூறினார்கள்: பாம்புக் கடிக்கும், பைத்தியக்காரர்களுக்கும் மந்திரிப்பதை விடவும், ஷிர்க்கிற்கு மிக நெருக்கமான ஒன்று இல்லை. (இப்னு கஸீர்)
وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ
حَاسِدٍ பொறாமைக்காரன், حَسَدَ பொறாமைப்பட்டான்
பொறாமைக்காரன், பொறாமை கொள்ளும்போது (ஏற்படும்) தீங்கைவிட்டும் (நான் பாதுகாவல் தேடுகிறேன்). (113:5)
இது, பாதுகாப்பு தேடும் பிரார்த்தனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸூரா என்பதனால் அதனை சேர்த்து நோக்கினால் பொருத்தமாக இருக்கும்.
(நபியே! ‘வைகறையின் இரட்சகனிடம், (1) அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும், (2) இரவு பரவிவிடும்போது (ஏற்படும்) இருளின் தீங்கைவிட்டும், (3) முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கைவிட்டும், (4) பொறாமைக்காரன், பொறாமை கொள்ளும்போது (ஏற்படும்) தீங்கைவிட்டும் (5) நான் பாதுகாவல் தேடுகிறேன்’ என்று நீங்கள் பிரார்த்தித்து கூறுவீராக! (113:1-5)
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறும்போது; ‘பொறாமையை சூனியத்துடன் இங்கே சேர்த்திருப்பது இவ்விரண்டுக்கும் இடையில் தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டுகின்றது. சூனியக்காரன் மூலம் ஏற்படுவதும், பொறாமைக்காரன் மூலம் ஏற்படுவதும் மறைமுகமான ஒரு தாக்கமே, பொதுவாக தீங்கை விளைவிப்பதில் கூட்டுசேர்ந்துள்ளன, மொத்தத்தில் இரண்டாலும் மறைமுகமாக தீங்கு ஏற்படுகிறது. எனவே அவ்விரண்டும் தடுக்கப்பட்டுள்ளன.’ என்று கூறினார்கள். (அல்வாஉல் பயான்)
தொடர்ந்து பொறாமை பற்றிய ஒரு தெளிவையும் வழங்கியுள்ளார்கள்:
பெறாமை என்றால்; அடுத்தவர்களிடம் காணப்படும் ஒரு அருள் நீங்கவேண்டும் என்று ஆசைப்படுவது, அல்லது அடுத்தவர்களுக்கு நல்லது நடக்கக்கூடாது என்று ஆசைப்படுவது.
மேலும் கூறினார்கள்: இங்கு பொறாமை பொதுவாக கூறப்பட்டுள்ளது, பொறாமைப்பட்டது எதன் மீது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. அதேநேரம் மற்றவர்களிடம் இருக்கும் அருள் நீங்கவேண்டும் என்று ஆசைப்படுவதுதான் பொறாமை என்பதும் தெளிவு.
பொதுவாக முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நபி ஸல் அவர்கள் மீதும் பொறாமை வைத்ததற்கான மிகப் பெரிய அருளை அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகின்றது. அதுதான் இஸ்லாம் என்ற அருளும், இறைக்கட்டலை வஹீ என்ற அருளும்,யுத்தகளத்தில் வெற்றிகொள்ளப்பட்ட சொத்து கனீமத் என்ற அருளுமாகும்.
வேதக்காரர்கள் இஸ்லாம் கிடைத்ததற்காக முஸ்லிம்கள் மீது பொறாமை கொண்டனர். அல்லாஹ் கூறுகின்றான்:
وَدَّ کَثِيْرٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يَرُدُّوْنَكُمْ مِّنْۢ بَعْدِ اِيْمَانِكُمْ كُفَّارًا ۖۚ حَسَدًا مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْ مِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَـقُّ ۚ
வேதத்தையுடையோரில் அநேகர், உண்மை அவர்களுக்கு இன்னதெனத் தெளிவாகத் தெரிந்த பின்னும் அவர்களுக்கு உங்கள் மீதுள்ள பொறாமையின் காரணமாக நீங்கள் ஈமான் கொண்ட பிறகும் உங்களை நிராகரிப்போராக திருப்பிவிட வேண்டுமென்று ஆசை வைக்கிறார்கள், (2:109)
(உண்மையில் யூத, கிறிஸ்தவர்கள் சத்தியத்தை விளங்கி, அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதற்காகவே இன்று வரை எதிர்க்கின்றனர்.)
இணைவைப்பாளர்கள் நபிகளாருக்கு இறைச்செய்தி வஹீ இறங்கியத்தைப் பார்த்து பொறாமைப்பட்டனர்.
اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۚ
அல்லது மனிதர்களுக்கு அல்லாஹ் தன் பேரருளால் கொடுத்தவற்றின் காரணமாக அவர்கள் மீது அவர்கள் பொறாமைப்படுகிறார்களா? (4:54)
இங்கு மனிதர்கள் என்று பொதுவாக கூறப்பட்டிருந்தாலும் குறிப்பாக நபியவர்களே நாடப்பட்டுள்ளார்கள். (அல்லாஹ் அவர்களுக்கென்று கொடுத்த அருள், வஹீ இறைச்செய்தியாகும்)
எதிர்பார்த்திருக்கும் அருளுக்காக பொறாமைப்படுவது பற்றி அல்லாஹ் கூறும் போது கூறுகின்றான்:
سَيَـقُوْلُ الْمُخَلَّفُوْنَ اِذَا انْطَلَقْتُمْ اِلٰى مَغَانِمَ لِتَاْخُذُوْهَا ذَرُوْنَا نَـتَّبِعْكُمْ ۚ يُرِيْدُوْنَ اَنْ يُّبَدِّلُوْا كَلٰمَ اللّٰهِ ؕ قُلْ لَّنْ تَتَّبِعُوْنَا كَذٰلِكُمْ قَالَ اللّٰهُ مِنْ قَبْلُ ۚ فَسَيَقُوْلُوْنَ بَلْ تَحْسُدُوْنَـنَا ؕ بَلْ كَانُوْا لَا يَفْقَهُوْنَ اِلَّا قَلِيْلًا
(நபியே!) பின்தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களின் பால், அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்வதற்காக நீங்கள் செல்லும்போது, “எங்களை விடுங்கள், நாங்களும் உங்களைப் பின்பற்றி வருகிறோம்” என்று கூறுவார்கள், இவர்கள், அல்லாஹ்வுடைய வாக்குறுதியை மாற்றி விடவே நாடுகின்றார்கள், (ஆகவே, அவர்களிடம்,) “நீங்கள் எங்களைப் பின்பற்றி வர வேண்டாம், (இதற்கு) முன்னர் இவ்வாறே அல்லாஹ் கூறிவிட்டான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அதற்கு) அவர்கள், “இல்லை, நீங்கள் தான் நம்மீது பொறாமை கொண்டுள்ளீர்கள்” என்று கூறுவார்கள், அன்று! அவர்கள் சொற்பமாகவே அன்றி விளங்கிக் கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். (48:15)
எனவே பொறாமை என்பது கிடைத்த ஒரு அருளுக்கும் ஏற்படலாம், எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு நலவுக்கு எதிராகவும் இருக்கலாம். (அல்வாஉல் பயான்)
குறிப்பு:
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறினார்கள்: பொறாமை இருப்பதுபோன்றே கண்ணேறும் இருக்கின்றது. இவ்விரண்டுக்கும் இடையில் வித்தியாசம் இருந்தாலும் அவ்விரண்டையும் பிரித்து நோக்கியவர்களை நான் காணவில்லை.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: கண்ணேறு உண்மையானதே. (புகாரி:5740,அபூஹுரைரா 5944, இப்னு மஸ்ஊத், முஸ்லிம்; இப்னு அப்பாஸ்) இன்னும் பல நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணேறு உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் ஒன்று வெல்ல முடியுமானால், கண்ணேறு அதை வென்றிருக்கும். (கண்ணேறுக்குக் காரணமான) உங்களிடம் குளித்துக் கொள்ளுமாறு கோரப்பட்டால் குளித்துக் கொள்ளு (கொடு)ங்கள். (முஸ்லிம்: 4405)
பொறாமை, கண்ணேறு தாக்கம் செலுத்திடுவதில் ஒன்றாக இருந்தாலும் அடைந்து கொள்ளும் சாதனத்திலும் விதத்திலும் வித்தியாசமாகும்.
பொறாமைக்காரன், சிலவேளை தான் காணாத ஒன்றிற்காகவும் பொறாமைப்படுவான். கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும், ஒரு அருள் கிடைப்பதற்கு முன்னரும் பொறாமைகொள்வான். அதன் தளம் உள்ளம் எறிவதும், அருள்பாளிக்கப்பட்டவனை விட அதிகம் அருள் அவனுக்கு கிடைக்க வேண்டும் என்பதுமே, மேலும் அடுத்தவனை விட்டு அந்த அருள் நீங்குவதை ஆசைவைப்பதும், அல்லது அடுத்தவனுக்கு கிடைக்காமல் இருக்கவேண்டும் என்பதுமாகும். அதுவே உள்ளத்தின் உச்சகட்ட தேவையாகும்.
கண்ணேறு வைப்பவன் கண்டதற்கும், இருப்பதற்குமே அன்றி கண்படமாட்டான். அதன் தளம் கண்ணால் பார்வையை செலுத்துவதாகும். சிலவேளை தன் பிள்ளை, சொத்து போன்ற தான் தீங்கு ஏற்படுவதை வெறுக்கும் ஒன்றுக்கும் கண்பட்டுவிடும்.
சில வேலை கண்ணேறுக்கும் ஹஸத் பொறாமை என்பது பாவிக்கப்படும், சிலவேளைகளில் ஹஸத் பொறாமை என்று சொல்லப்பட்டு ‘கிப்தா‘ போட்டிமனப்பான்மை கொல்வது “ஒருவரிடம் இருப்பது நீங்கவேண்டும் என்று ஆசைப்படாமல், அவருக்கு இருப்பது போன்று தனக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைகொள்வது” நாடப்படும். அதற்கு சான்றாக பின்வரும் நபிமொழியை குறிப்பிடலாம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை (போட்டிமனப்பாண்மை) கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுத் தந்தான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் ஓதிவருகிறார். இதைக் கேள்விப்பட்டு அவரின் அண்டைவீட்டுக்காரர், ‘இன்னாருக்குக வழங்கப்பட்டது போல் எனக்கும் வழங்கப்பட்டிருந்தால் நானும் அவர் செயல்படுவது (ஓதுவது) போல் செயல்பட்டிருப்பேனே (ஓதியிருப்பேனே)!’ என்று கூறுகிறார். இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதனை நேர் வழியில் செலவிட்டு வருகிறார். (இதைக் காணும்) ஒருவர், ‘இன்னாருக்கு வழங்கப்பட்டது போல் எனக்கும் (செல்வம்) வழங்கப்பட்டிருக்குமானால் அவர் (தர்மம்) செய்தது போல் நானும் செய்திருப்பேனே’ என்று கூறுகிறார். (புகாரி: 5026,73, முஸ்லிம்)
குர்துபீ இமாமவர்கள் கூறினார்கள்: ‘இறைவிசுவாசி போட்டிபோடுவான், நயவஞ்சகன் பொறாமைகொள்வான்.’ என்று நபிகளாரைத் தொட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.’என்று கூறினார்கள். (இது நபிகளாரின் கூற்று என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை, அது புழைல் பின் இயாள் அவர்களது கூற்றாகவே பதியப்பட்டுள்ளது என இமாம் இராகீ அவர்கள் இஹ்யாஃ குறிப்பில் பதிந்துள்ளார்கள்) மேலும், ‘பொறாமை என்பது வானத்திலும், பூமியிலும் அல்லாஹ்வுக்கு மாறுசெய்யப்பட்ட பாவத்தில் முதன்மையானதாகும், ஆதம் நபிக்கு எதிராக இப்லீஸ் பொறாமைப்பட்டான், காபீல் ஹாபீலுக்கு எதிராக பொறாமைப்பட்டான். (குர்துபீ)
மேலும் ஷன்கீதி ரஹ் எச்சரிக்கையாக கூறினார்கள்: முதல் பாவமாக நிகழ்ந்தது பொறாமையாகும், அதன் தீங்கு இன்னும் பல பாவத்தை கொண்டுவந்தது. என்றால், இப்லீஸ் எங்கள் தந்தையான ஆதம் அவர்கள் மீது அவர்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்து, வானவர்களுக்கு ஸுஜுது செய்யுமாறு கட்டளையிட்டு அருள் புரிந்தபோது பொறாமை பட்டான், அது அவனை பெருமைப்படவைத்தது, பெருமை அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு ஆதமுக்கு ஸுஜுது செய்து வழிபடுவதை தடுத்தது, அதன் காரணமாக அவன் விரட்டப்பட்டான். அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவோம். (அல்வாஉல் பயான்)
இமாம் குர்துபீ கூறினார்கள்: ‘பொறாமைக்காரன் அவனது செயலால் அல்லது சொல்லால் அதனை வெளிப்படுத்தும் வரை தீங்குசெய்யமாட்டான.’ என்றால், பொறாமை அவனை பொறாமைகொள்ளப்பட்டவனுக்கு தீங்கிழைக்க செய்யும், அவனது குறைகளை தேடுவான், தவறுகளை பின்தொடர்வான். பொறாமைக்காரன் வெறுப்புக்குள்ளாவான், கோபத்துக்குள்ளாவான், விரட்டப்படுவான், சபிக்கப்பட்டவனாவான். { قُلْ لِلْحَسُودِ إِذَا تَنَفَّسَ طَعْنَةً .. يَا ظَالِمًا وَكَأَنَّهُ مَظْلُومُ } “பொறாமைக்காரன் ஒரு தடவை பெருமூச்சுவிட்டால், ‘பாதிக்கப்பட்டவன் போன்றிருக்கும் அநியாயக்காரனே’ என்று நீ அவனுக்கு கூறு” என்று கூறியவர் அழகாகவே சொல்லிவிட்டார். (குர்துபீ)
பொறாமை கொள்வதற்கான காரணிகள்:
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறினார்கள்:
“”ஆதம் நபி அவர்களின் நிகழ்வை உற்றுநோக்கினால்; பொறாமை ஏற்படுவதற்கான இரண்டு அடிப்படை காரணிகள் தெளிவாகின்றன.
ஒன்று; எவர் மீது பொறாமை கொள்ளப்பட்டதோ அந்த மனிதன் இழிவாக நோக்கப்பட்டால்.
இரண்டு; பொறாமைக்காரன் தன்னை வைத்து தற்பெருமைக் கொள்ளல். அது ஷைதான் கூறிய ‘நான் அவரைவிட சிறந்தவன் (7:12)’ என்ற வார்த்தை மூலம் புரியலாம், பிறகு அவனது சிறப்புக்கான காரணத்தையும் ‘என்னை நெருப்பிலிருந்து படைத்தாய், அவரை மண்ணிலிருந்து படைத்தாய் (7:12)’ என்று கூறினான். எனவே பொறாமை ஏற்படுவதற்கான அனைத்து காரணிகளும் இந்த இரண்டுடனே சேரும்.
அவற்றுள் அடங்குபவை ; தன் மதிப்பை அடைவது என்று கூறியுள்ளனர், பொறாமை உள்ளவன் தன் இடத்திற்கு இன்னொருவன் வருவதை விரும்ப மாட்டான்.
தற்பெருமையையும் கூறியுள்ளனர், எவரையும் தன்னைவிட முதன்மையானவனாக காணமாட்டார்.
தன்னை விட்டும் தேவையறுபவராக ஒருவரை கருதும் நிலையில் அவரிடத்தில் உள்ள தனக்கான நோக்கங்கள் தவறிவிடுவதை பயப்படுதல்.
எந்தத் துறையாக இருந்தாலும், எந்தக் கலையாக இருந்தாலும் தன்னைவிட ஒருவர் முந்துவதை விரும்பாதவரிடமுள்ள தலைமைத்துவ ஆசை.
இவற்றை கஸ்ஸாலி அவர்களிடமிருந்து ராஸீ அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கிருந்து புரியமுடிந்தது, ‘தற்பெருமை உள்ள யாராக இருந்தாலும் அவர் மற்றோரை புறக்கணித்து, அவர்களுக்கு அல்லாஹ் செய்த சிறிய அருள்களுக்காகவும் பொறாமை கொள்ளாமல் இருக்கமாட்டார்.’ என்பதே. அதிலிருந்து அல்லாஹ் எம்மை காப்பானாக! (அல்வா உல் பயான்)
இன்னுமொரு குறிப்பு:
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் இன்னுமொரு குறிப்பையும் பதிந்தார்கள்: அல்லாஹ்வுக்கு எதிராக நடந்த முதல் பாவம், ஆதம் அலை அவர்களுக்கு அல்லாஹ் புரிந்த அருள்களுக்கு எதிராக இப்லீஸ் பொறாமைகொண்டது என்றால், இணைவைப்பாளர்களுக்கு, நபிகளாருக்கு இறைச்செய்தி என்ற அருள்கிடைத்ததற்காக பொறாமை வந்தது என்றால், முஸ்லிம்களுக்கு இஸ்லாம் என்ற அருள் கிடைத்ததற்காக யூதர்கள் பொறாமை கொண்டார்கள் என்றால், இந்த ஸூரா அல்குர்ஆனில் கடைசியாக வந்தவற்றில் உள்ளது என்றால்;
அது ‘முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் உயர்ந்த அருளான இஸ்லாத்தின் மகத்துவத்தையும், அவர்கள் மீது அதன்காரணமாக பொறாமையும் கடுமையாக இருக்கிறது என்பதையும் நினைவூட்டி, பின்னால் வரும் ஸூராவில் கடைசியில் வருவதுபோன்று மனித இன, ஜின் இன விரோதிகள் இஸ்லாமிய மார்க்கத்தில் செய்யும் சூழ்ச்சியின் விடயத்தில் முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்குர்ஆனின் கடைசிப் பகுதியில் வந்திருக்கிறது’ போன்றுள்ளது. (அல்வாஉல் பயான்)
பொறாமை கொள்ளும் உள்ளத்திற்கான நிவாரணம்:
அறிஞர்கள் அதற்கான நிவாரணங்களை கூறியுள்ளனர். என்றால்; பொறாமை யாரிடம் இருக்கிறதோ அவர், தனது உள்ளத்தில் பொறாமையால் ஏற்படும் வருத்தத்தையும், அதனால் ஏற்படும் கவலையையும் போக்கி அமைதி அடைய அவற்றைக் கொண்டு மருத்துவம் செய்வார். அது சுருக்கமாக இரண்டு விடயங்களில் உள்ளடங்கும். அறிவைத் தேடுவதும், பிறகு அமல் செய்து செயற்படுத்துவதுமாகும்.
அறிவைத் தேடுதல் என்றால்; பொறாமை கொள்ளப்படுகின்ற அந்த மனிதனிடம் இருக்கும் அருளானது, அது அல்லாஹ் அவனுக்கு ஏற்கனவே விதித்த விதியின் படியும், கட்டாயமான தீர்வின்படியும் கொடுத்த கொடையாகும், அதற்கெதிராக அவனுடன் பொறாமைப்படுவது அதில் எதனையும் மாற்றாது என்பதை உறுதியாக அறிவதும், மேலும், அல்லாஹ்வின் முடிவையும், தன் அடியானுக்கு கொடுத்த பங்கையும் பொருந்திக் கொள்ளாமையின் காரணமாக பொறாமைகொள்வதன் தீங்கு பொறாமைக்காரனுக்கு அவனது மார்க்க விடயத்தில் மீண்டுவரும் என்பதையும் அவன் அறிவதாகும். ஏனெனில் அவன் பொறாமை கொள்வதனால் அல்லாஹ்வின் வசனத்திற்கு எதிராக அவன் நிற்கிறான். அல்லாஹ் கூறுகிறான்:
اَهُمْ يَقْسِمُوْنَ رَحْمَتَ رَبِّكَ ؕ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُمْ مَّعِيْشَتَهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّيَـتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِيًّا ؕ وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ
(நபியே!) உமதிரட்சகனின் அருளை அவர்களா பங்கிடுகிறார்கள்? இவ்வுலக வாழ்வில் அவர்களுடைய வாழ்க்கை(த் தேவை)யை அவர்களுக்கிடையில் நாமே பங்கிட்டிருக்கிறோம், அவர்களில் சிலர் சிலரை பணியாளர்களாக வைத்துக்கொள்வதற்காக, அவர்களில் சிலரை (மற்ற) சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தியுமிருக்கிறோம், உமதிரட்சகனின் அருளோ, அவர்கள் சேகரித்து வைத்திருப்பதைவிட மிக்க மேலானதாகும். (43:32)
உலக விடயத்திலும் அவனுக்கு தீங்கு ஏற்படும், ஏனெனில் பொறாமை கொள்ளும் போது அது உள்ளத்தில் நோயையும் கவலைகளையும், தடுமாற்றத்தையும் உண்டாக்கும், அவனிடமிருந்து மக்கள் விலகி செல்வர், அவனை வெறுப்பர், இதற்கெல்லாம் பின்னால் மறுமையில் தண்டனையும் கிடைக்கும் என்பதையும் அறிவதாகும்.
அமல் செய்து செயற்படுத்தல் என்றால், பொறாமையை தூண்டுகிற காரணிகளுக்கு எதிராக தன் உள்ளத்தால் போராடுவதாகும். எனவே அருள்பாளிக்கப்பட்ட ஒருவரை காணும்போது கண் அவரை கேவலமாக கருதினால் அவரை மதித்து, அவருக்கு பணிபுரிய முயற்சிக்கட்டும். அவனுக்கு எதிராக தன்னிடமுள்ளது பெரிதாக தென்பட்டு தற்பெருமை ஏற்பட்டால் தன் உள்ளத்தை, தாழ்வின் பக்கமும், தன்னிடமுள்ள இயலாமைகளை வெளிப்படுத்துவதன் பக்கமும், அல்லாஹ்வின் பக்கம் தேவையுள்ளவன் என்பதன் பக்கமும் திருப்பட்டும்.
அவனது உள்ளம் மற்றவர்களின் அருள்கள் நீங்கவேண்டும் என்று ஆசைகொண்டால் அதுபோன்று தனக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதன் பக்கம் திருப்பிக்கொள்ளட்டும். அல்லாஹ்வின் கொடை சிறந்ததாகும்.
பொறாமை அடுத்தவனுக்கு தீங்கிழைப்பதன் பக்கம் அழைத்தால் அவனுக்கு நல்லது செய்வதன் பக்கம் முயற்சிக்கட்டும். இவ்வாறே பொறாமையின் கொடூரத்திலிருந்து ஈடேற்றம் அடைவான், அதன் தீங்கிலிருந்து மற்றவர்களும் ஈடேற்றம் அடைவர். (அல்வாஉல் பயான்)
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ
விசுவாசிகளே! ஒரு ஆண் சமூகத்தார் மற்றொரு ஆண் சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம், (பரிகாசம் செய்யப்பட்ட) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களை விட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம், (49:11)
இந்த வசனத்தின் மூலம் ஒருவரின் உள்ளத்தில் அடுத்தவர்கள் கேவலமாக தென்படும்போது, என்றால் தன்னை தகுதியானவராக கருதுவது நீங்க, ‘கேவலமாக பார்க்கப்படுபவர் அல்லாஹ்விடம் சிறந்தவராக இருக்கலாமே’ என்று சிந்தித்துப்பார்த்தால் அடுத்தவர்களை கேவலமாக கருதுவது உள்ளத்தை விட்டு அகன்றுவிடும், அப்போது தன்னை மேலானவராக பார்ப்பதும் இல்லாதொழிந்து, பொறாமைக்கு இட்டுச்செல்லும் வழியை அடைக்கலாம்.
அதேபோன்று பொறாமை பற்றிய தடைகள், எச்சரிக்கைகள் பற்றிய குர்ஆன் ஸுன்னாவின் போதனைகளை நடைமுறைப்படுத்த முயற்சிக்கட்டும்.
பொறாமை பற்றிய குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும்:
اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ قَالَ يٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلٰٓى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَـكَ كَيْدًا ؕ اِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ
யூஸுப் தன் தந்தையிடம் “என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களையும் சூரியனையும், சந்திரனையும் நிச்சயமாக நான் (கனவில்) கண்டேன், எனக்குச் சிரம் பணிபவையாக அவற்றை நான் கண்டேன்” என்று கூறிய சமயத்தில், (4) “என் அருமை மகனே! நீர் கண்ட கனவை உம் சகோதரர்களிடம் சொல்லிக்காட்ட வேண்டாம், (அவ்வாறு செய்தால்) அவர்கள் உமக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். (ஏனெனில்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்கமான விரோதியாக இருக்கிறான்” என்று (யஃகூப் நபியாகிய) அவர் கூறினார். (12:4,5)
இங்கு யூஸுப் நபிக்குள்ள சிறப்பை விளங்கி அவர்கள் சூழ்ச்சி செய்வார்கள் என்றால் பொறாமையே இந்த சூழ்ச்சியை செய்யத் தூண்டுகிறது என்பதை புரியலாம்.
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ
இன்னும் உங்களில் சிலரைக்காண சிலரை, அல்லாஹ் மேன்மையாக்கி இருப்பதைப் பற்றி நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள், (4:32)
இங்கு அடுத்தவர்களின் சொத்தில் எல்லைமீறி ஆசைகொள்வது தடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது பொறாமையை உண்டாகும். அதே நேரம் அவர் போன்று எனக்கும் பொருளாதாரம் கிடைக்கவேண்டும், நானும் நல்லவற்றில் ஈடுபடவேண்டும் என்று ஆசைகொள்வது தடுக்கப்பட்டதல்ல, அதற்கே கிப்தா என்று சொல்லப்படும். அதனால்தான் அல்லாஹ்விடம் கேட்குமாறு வசன இறுதியில் வழிகாட்டுகிறான் அல்லாஹ்.
وَسْئَـلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ
..மேலும், அல்லாஹ்விடத்தில் அவனின் பேரருளைக் கேளுங்கள். (4:32)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) செயலன்று. (முஸ்லிம்: 5001)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தப்பெண்ணம் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், தப்பெண்ணம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். (புகாரி: 6064)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை கண்டால், உடனே தம்மைவிடக் கீழனாவரை அவர் பார்க்கட்டும். (புகாரி: 6490, முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களைவிட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும். (முஸ்லிம்: 5671)
இந்த நபி மொழி தம்மை விடவும் கீழிருப்பவரை பார்க்க சொல்கிறது, அப்போது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பக்குவமும் வரும்,மேலுள்ளவரைப் பார்த்து பொறாமை அதிகரிக்காமல் இருக்கவும் காரணமாக இருக்கும்.
وَالَّذِيْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
மேலும், அவர்களுக்குப் பின் வந்தார்களே அத்தகையவர்கள் “எங்கள் இரட்சகனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! விசுவாசங்கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை எற்படுத்தாதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடைவன் என்று (பிரார்த்தனை செய்தும்) கூறுவார்கள். (59:10)
அடுத்தவர்களுக்கு பிரார்த்திப்பதும், நல்லது நடக்கவேண்டும் என்று ஆசைவைப்பதும் நம்மை பொறாமையிலிருந்து காப்பாற்றும் ஒன்றாகும். எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளத்தை விரோத, குரோதங்களிலிருந்து சுத்தப்படுத்திக்கொள்வது பொறாமையை விட்டும் எம்மை பாதுகாக்கும்.
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ
விசுவாசிகளே! ஒரு ஆண் சமூகத்தார் மற்றொரு ஆண் சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம், (பரிகாசம் செய்யப்பட்ட) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களை விட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம், (49:11)
இந்த வசனத்தின் மூலம் ஒருவரின் உள்ளத்தில் அடுத்தவர்கள் கேவலமாக தென்படும்போது, என்றால் தன்னை தகுதியானவராக கருதுவது நீங்க, ‘கேவலமாக பார்க்கப்படுபவர் அல்லாஹ்விடம் சிறந்தவராக இருக்கலாமே’ என்று சிந்தித்துப்பார்த்தால் அடுத்தவர்களை கேவலமாக கருதுவது உள்ளத்தை விட்டு அகன்றுவிடும், அப்போது தன்னை மேலானவராக பார்ப்பதும் இல்லாதொழிந்து, பொறாமைக்கு இட்டுச்செல்லும் வழியை அடைக்கலாம்.
நபிகளாரும், அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட நிகழ்வும்:
இந்த ஸூராவின் விளக்கத்தில் நபிகளாருக்கு சூனியம் வைக்கப்பட்டபோது, அதனை செய்த லபீத் பின் அஃஸமுக்கு எதிராகவே இந்த ஸூரா இறங்கியதாக விரிவுரையாளர்கள் ஒன்றுபட்டு கூறியுள்ளனர் என்று பார்த்தோம். ஆனாலும் இஸ்லாமிய உம்மத்தில் ((முஃதஸிலாக்களும் அவர்களது சிந்தனைத் தாக்கத்தால் ஹதீஸ்களை மறுக்கும் சிந்தனைப் போக்கு கொண்ட)) சிலர் நபியவர்களுக்கு சூனியம் வைத்த நிகழ்வு குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கின்றனர். அது பற்றிய சில குறிப்புகளை நோக்குவதும் அவசியமாகும்.
இத்தோடு ஸூரா பலக் விளக்கம் முற்றுப்பெறுகிறது.
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ