سُورَةُ النَّصْر 

ஸூரதுன் நஸ்ர்

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!

பெயர் : ஸூரதுன் நஸ்ர் (உதவி)

இறங்கிய காலப்பகுதி :  மதனீ

வசனங்கள் : 3

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறினார்கள்: “இந்த வசனத்தில் ‘உதவி {النَّصْرِ }, வெற்றி {الْفَتْحِ}’ என்ற இரண்டு சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன, அவை ஒன்று ஒன்றோடு பின்னிப்பிணைந்ததாகும். அதேநேரம் வெற்றி பொதுவாக வந்திருப்பதோடு, உதவி அல்லாஹ்வோடு சேர்ந்து ‘அல்லாஹ்வின் உதவி’ என்று வந்துள்ளது. முதல் விடயம்; இந்த ஸூரா மக்கா வெற்றிக்கு பிறகு இறங்கியது என்பதில் அறிஞர்கள் ஒன்றுபட்டுள்ளனர், அதேநேரம், இந்த மக்கா வெற்றிக்கு முன்னர் பலவெற்றிகள் ஈட்டப்பட்டுள்ளன என்பது அறியப்பட்ட உண்மை. அவற்றில் உள்ளதே, கைபர் வெற்றி,ஹுதைபிய்யா ஒப்பந்தம், அதனை அல்லாஹ் வெற்றி என்றே கூறியுள்ளான்.

فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِيْبًا‏

ஆகவே, நீங்கள் அறியாதிருந்ததை (முன்னதாகவே அல்லாஹ்) அறிந்திருந்தான், பின்னர், இதுவன்றி சமீபத்தில் ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கினான். (48:27)

உதவி எனும்போது; யுத்த களங்களில் கிடைக்கும், அது ஆதாரங்கள் அதிகாரங்களைக் கொண்டும் கிடைக்கும், அஹ்ஸாப் யுத்தத்தில் நடந்ததுபோன்று விரோதிகளை தடுப்பது கொண்டும் கிடைக்கும். அல்லாஹ் கூறுகின்றான் :

وَرَدَّ اللّٰهُ الَّذِيْنَ كَفَرُوْا بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوْا خَيْرًا‌ ؕ وَكَفَى اللّٰهُ الْمُؤْمِنِيْنَ الْقِتَالَ‌ ؕ وَكَانَ اللّٰهُ قَوِيًّا عَزِيْزًا ۚ‏

மேலும், நிராகரித்து விட்டார்களே அத்தகையோரை_அவர்களுடைய கடுங்கோபத்தில் அல்லாஹ் திருப்பி விட்டான், (இந்த யுத்தத்தில்) அவர்கள் யாதொரு நன்மையை(யும்) அடையவில்லை, (அகழ்) யுத்தத்தில் விசுவாசிகளுக்கு (வெற்றியளிக்க) அல்லாஹ் போதுமானவனாக இருந்தான், மேலும், அல்லாஹ் (யாவரையும் விட) மிக்க பலமிக்கவனாக (யாவரையும்) மிகைத்தவனாக இருக்கின்றான். (33:25)

யூதர்கள் விடயத்திலும் உதவி இப்படியே இருந்தது, அல்லாஹ் கூறுகின்றான்:

وَاَنْزَلَ الَّذِيْنَ ظَاهَرُوْهُمْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ صَيَاصِيْهِمْ وَقَذَفَ فِىْ قُلُوْبِهِمُ الرُّعْبَ فَرِيْقًا تَقْتُلُوْنَ وَتَاْسِرُوْنَ فَرِيْقًا ۚ‏  26 وَاَوْرَثَكُمْ اَرْضَهُمْ وَدِيَارَهُمْ وَ اَمْوَالَهُمْ وَاَرْضًا لَّمْ تَطَــــٴُـوْهَا‌ ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرًا‏

இன்னும் வேதக்காரர்களிலிருந்து, அ(ப்பகை)வர்களுக்கு உதவி செய்தார்களே அவர்களை, அவர்களுடைய கோட்டையிலிருந்து (அல்லாஹ்) இறக்கிவிட்டான், அவர்களுடைய இதயங்களில் கடும் பயத்தையும் போட்டு விட்டான், (ஆகவே) ஒரு சாராரை நீங்கள் கொன்று விட்டீர்கள், (மற்றும்) ஒரு சாராரை நீங்கள் சிறைபிடித்தும் கொண்டீர்கள். (26), இன்னும், (அல்லாஹ்வாகிய) அவன் அவர்களுடைய பூமி, மற்றும் அவர்களுடைய வீடுகள் மற்றும் அவர்களுடைய செல்வங்கள் இன்னும் (இதுவரையில்) நீங்கள் மிதித்திராத (அவர்களுடைய மற்ற) பூமி ஆகியவற்றிற்கு உங்களை வாரிசாக்கினான், மேலும் அல்லாஹ், ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கிறான். (33:26,27)

எனவே உதவுதல் என்பது அல்லாஹ்விடமிருந்தது வருவதாகும். அல்லாஹ் கூறுகிறான்:

وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِۙ‏

இன்னும் மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோனாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி (உங்களுக்கு) இல்லை.  (3:126)

முஸ்லிம்கள் அதனை அறிந்தே வைத்துள்ளனர். அல்லாஹ் கூறுகிறான்:

مَسَّتْهُمُ الْبَاْسَآءُ وَالضَّرَّآءُ وَزُلْزِلُوْا حَتّٰى يَقُوْلَ الرَّسُوْلُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ مَتٰى نَصْرُ اللّٰهِؕ

அவர்களை வறுமையும் பிணியும் பீடித்தன. தூதரும் அவருடன் விசுவாசங்கொண்டவர்களும் அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வந்து சேரும்) என்று கூறும் அளவுக்கு அவர்கள் (இன்னல்கள் பலவற்றால்) அலைக்கழிக்கப்பட்டு விட்டார்கள், .. (2:214)

அந்த முஸ்லிம்கள் இப்படி உதவியை எதிர்பார்த்து கேட்டார்கள், அல்லாஹ்வின் பதில் பின்வருமாறு வந்தது;

اَلَاۤ اِنَّ نَصْرَ اللّٰهِ قَرِيْبٌ‏

“தெரிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக மிகச் சமீபத்திலிருக்கிறது” (என்று கூறப்பட்டது). (2:214.)

قَالَ لَا تَخَافَآ‌ اِنَّنِىْ مَعَكُمَاۤ اَسْمَعُ وَاَرٰى‏

“நீங்கள் இருவரும் பயப்பட வேண்டாம், நிச்சயமாக நான் உங்களிருவருடன் (யாவையும்) கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருப்பேன் என (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்”.  (20:46)

இது உதவுவதன் மூலமும், உறுதிப்படுத்துவதன் மூலமும் அல்லாஹ் உடனிருப்பதாகும்.

இமாம் ஷன்கீதி ரஹ் கூறினார்கள்: இந்த வசனம் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவார்கள் என்று கூறுவதிலிருந்து, யமன் உற்பட மக்கள் எல்லா திசைகளிலிருந்தும் இஸ்லாத்தை நோக்கி வந்தார்கள் என்ற இந்த நிகழ்வு, நபிகளாரின் அழைப்புப் பணி பூர்த்தியாவதையும், தூதுத்துவம் வெற்றிபெறுவதையும் அறிவிக்கின்றது. அதற்கு சான்றாக அந்த ஆண்டு நபிகளார் நிறைவேற்றிய ஹஜ்ஜின்போது இறங்கிய 5:3 வது வசனம் இருக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ ؕ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ‌ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏‏

.. இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன், ..  (5:3)

அடுத்து வெற்றி என்றால் மக்கா வெற்றிக்கு முன்னாலும் பல வெற்றிகள் கிடைக்கப்பெற்றது போன்று, அதற்கு பிறகும் பல வெற்றிகள் கிடக்கும் என்ற வாக்குறுதியும் இருக்கின்றது. நபியவர்கள் அகல் யுத்தத்திற்காக குழிகளை தோண்டிக்கொண்டிருக்கும் போது, ஒரு பாறாங்கல்லை உடைக்கும்போது எடுத்துறைத்தார்கள். (புகாரி: 4101,(கல்லு வெளிப்பட்டது மட்டும்), நஸாஇ: 3176 விரிவாக பதியப்பட்டுள்ளது.) இது பற்றிய அறிவிப்புக்கள் அனைத்தும் விமர்சனங்ககளுக்கு உற்பட்டவையே, ஒன்று ஒன்றை பலப்படுத்தும் என்ற அடிப்படையில் ஹஸன் தரத்தில் நோக்கலாம். அதேநேரம் முஅத்தா மாலிக்கின் அறிவிப்பில் (3309) யமன், ஷாம், இராக் வெற்றிகொள்ளப்படுவது நம்பகமான அறிவிப்பாளர் தொடர் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. யமன் தவிர்ந்த இந்த வெற்றிகள் அனைத்தும் நபிகளாரின் மரணத்திற்கு பின்னரே பெறப்பப்பட்டன. (அல்வாஉல் பயான்)

மக்கா வெற்றி ஹிஜ்ரி எட்டிலும், கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்வு ஹிஜ்ரி ஒன்பதிலும், யமன் கூட்டத்தினர் வந்தனர், நபியவர்கள் மக்கா வெற்றிக்கு பின்னர் யமனுக்கு பொறுப்பாளிகளை அனுப்பிவைத்தார்கள், அலி ரலி அவர்கள் ஹிஜ்ரி பத்தில் ஹஜ் காலப்பகுதியில் யமனிலிருந்து வந்தார்கள், எனவே நபிகளாரின் வாழ்நாளிலேயே மக்கா வெற்றிக்கு பிறகு யமன் வெற்றிகொள்ளப்பட்டுள்ளது. எனவே வெற்றி என்பதைக்கொண்டு மக்கா வெற்றி மட்டும் நாடப்படவில்லை. அதற்கு ஆதாரமாக பின்வரும் வசனத்தை குறிப்பிடலாம்.

وَاَذِّنْ فِى النَّاسِ بِالْحَجِّ يَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰى كُلِّ ضَامِرٍ يَّاْتِيْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيْقٍ ۙ‏

“ஹஜ்ஜுக்காக நீர் மனிதர்களை அழைப்பீராக!” அவர்கள் நடந்தவர்களாக உம்மிடம் வருவார்கள், இன்னும், இளைத்த (களைப்புற்ற) ஒட்டகங்களின் மீது (வருவார்கள்.) அவை தூரமான ஒவ்வொரு வழியிலிருந்தும் வரும்.  (22:27)

மக்கள் தூர இடங்களிலிருந்து வருவார்கள் என்பது இஸ்லாத்தை ஏற்பார்கள் என்பதை குறிக்கிறது, அடுத்து முஸ்லிம்கள் தூர இடங்களிலிருந்து வருவார்கள் என்பது தெரிகிறது, அதுவே (வெற்றி என்பதைக் கொண்டு மக்கா வெற்றி மட்டும் நாடப்படவில்லை) என்பதற்கு சான்று பகரும் இடமாகும்.  (அல்வாஉல் பயான், அல்லாஹு அஃலம்)

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ‏

(நபியே!) உமதிரட்சகன் உம்மைக் கைவிடவில்லை, (உம்மை) அவன் வெறுக்கவுமில்லை.  (93:3)

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌..  اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ‏

உம்முடைய இரட்சகனின் (சங்கையான) பெயரைக்கொண்டு நீர் ஓதுவீராக! அவன் எத்தகையவனென்றால் (படைப்பினங்கள் அனைத்தையும்) படைத்தான்.(1) நீர் ஓதுவீராக! மேலும், உமதிரட்சகன் மிக்க சங்கையானவன். (96:3)

ஏனெனில் அல்லாஹ்வின் அதிகார பன்பை எடுத்துரைப்பது, அவன் செய்யும் அருளை உணர்த்துவதாகும்.  (அல்வாஉல் பயான்)

இவ்வாறே ஸஃத் பின் அபீவக்காஸ் ரலி அவர்கள், மாதாஇணை வெற்றிகொண்டபோது செய்தார்கள். அவர்களுள் சிலர், ‘எட்டு ரக்அத்களையும் ஒரு ஸலாத்தோடு தொழுவார்கள்’ என்று கூறினர், ஆனால் சரியானது, ‘இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுக்க வேண்டும்’ என்பதே. அபூதாவூதில் (1290. அதன் அறிவிப்பில் அய்யால் பின் அப்தில்லாஹ் என்ற “முன்கர்” என்று விமர்சிக்கப்பட்ட அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார்.) ‘நபி ஸல் அவர்கள் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட அன்று ஒவ்வொரு இரண்டு ரக்அத்களிலும் ஸலாம் கொடுத்தார்கள்’ என்று பதியப்பட்டுள்ளது. (இப்னு கஸீர்)

அதேநேரம்; இப்னு அப்பாஸ், இப்னு உமர் ரலி ஆகியோர் ‘இந்த ஸூரா நபியவர்கள் தங்களது மரணம் நெருங்கிவிட்டது என்பதை முன்னறிவித்ததாகும்’ என்று கூறிய விளக்கமானது; “”நீர் அறிந்துகொள்வீராக!, நீர் மக்காவை  வெற்றிகொண்டு, மக்களும் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்துவிட்டால், உலகில் உங்களுடனான எங்களுக்கான தேவை முடிந்துவிட்டது, எனவே எங்கள் பக்கம் வருவதற்கு நீங்கள் தயாராகுங்கள், மறுமை உலகைவிட உங்களுக்கு சிறந்ததாகும், அங்கு உங்களுக்கு அவன் அன்பளிப்புகளை கொடுப்பான் அதனை பொருந்திக்கொள்வீர்கள். எனவேதான் அல்லாஹ் ‘உங்களது இறைவனை துதித்து, அவனிடம் பாவமன்னிப்பு தேடுங்கள், அவன் மிகவும் மன்னிப்பவனாக இருக்கிறான்.’ என்று கூறுகின்றான்.”” என்பதாகும். அதற்கு ஆதாரமாக புகாரி (4968) இலக்க நபிமொழியை கொண்டுவந்தார்கள்.(இப்னு கஸீர்)

அடுத்து இந்த வசனங்களில் வெற்றி என்று நாடப்படுவது மக்கா வெற்றிதான் என்று ஒரே கருத்தாக கூறப்பட்டுள்ளது, ஏனெனில் அரேபிய குலத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்காக மக்கா வெற்றிகொள்ளப்படுவதையே எதிர்பார்த்திருந்தார்கள். அவர்கள், ‘அவர் தனது சமூகத்தை வெற்றிகொண்டால் அவர் இறைத்தூதர் தான்’ என்று கூறினார்கள், அல்லாஹ் வெற்றியைக் கொடுத்தபோது கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்தார்கள், இரண்டு வருடங்கள் முடிவடைவதற்குள் அரேபிய தீபகற்பம் முழுக்கவும் ஈமானால் பரிபூரணமானது. எந்த அரேபிய கோத்திரமாக இருந்தாலும் இஸ்லாத்தையே அது வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

இமாம் ஷன்கீதி ரஹ் கூறினார்கள்:  ‘ وَاسْتَغْفِرْهُ’ என்பதற்கு சிலர், ‘பாவமன்னிப்பு என்பது பாவத்திற்கே, இங்கு எந்த பாவத்திற்கு மன்னிப்பு தேடுவது?’ என்று கேட்கின்றனர். நபிமார்கள் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என்ற கருத்து 94:2 வது வசனமான ‘உங்களை விட்டும் உங்களது பாவத்தை நாம் வைத்துவிட்டோம்’ என்ற வசனத்திற்க்கு விளக்கத்தில் நோக்கினோம்.

فَتَلَقّٰٓى اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَيْهِ‌

(பின்னர்) ஆதம், சில வாக்கியங்களைத் தன் இரட்சகனிடமிருந்து பெற்றுக் கொண்டார்; அதனால் (அல்லாஹ்) அவரின் பாவமீட்சியை அங்கீகரித்தான்; (2:37)

அந்த தவ்பாவை கட்டாயமாக்கியது என்னவென்பது அறியப்பட்டதே, பிறகு நூஹ் நபியவர்களை எடுத்தால், அவர்கள்:

رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ ‏

“என் இரட்சகனே! எனக்கும், என்னுடைய பெற்றோருக்கும், விசுவாசம் கொண்டவராக என்னுடைய வீட்டில் நுழைந்தவருக்கும் விசுவாசங்கொண்ட ஆண்களுக்கும், விசுவாசங்கொண்ட பெண்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! (71:28)

என்று பிரார்த்தித்தாக இடம்பெற்றுள்ளது, இப்ராஹீம் நபியவர்கள் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏

‘எங்கள் இரட்சகனே “ஹஜ்ஜுக்குரிய எங்களுடைய கிரியை செய்யவேண்டிய இடங்களையும் எங்களுக்குக் காண்பிப்பாயாக (எங்கள் பிழைகளை மன்னித்து) எங்களின் தவ்பாவையும் அங்கிகரித்துகொள்வாயாக! நிச்சயமாக நீயே தவ்பாக்களை மிக்க ஏற்பவன், மிகக் கிருபையுடையவன்!” (2:128)

என்று பாவமன்னிப்பு தேடியதாக வந்துள்ளது. இதனை வைத்து சில அறிஞர்கள்: “பாவமன்னிப்பு தேடுதல் என்பதே அல்லாஹ்வை துதிப்பது போன்ற ஒரு வணக்கமாகும், எனவே அதற்கு பாவம் இருந்தால்தான் மன்னிப்பு தேடவேண்டும் என்ற கடமையில்லை” என்று கூறினர். ஒரு சிலர், நபிமார்கள் தம் சமூகத்திற்கு பாவமன்னிப்பு தேடுவதை கற்றுக்கொடுக்கவே இப்படி செய்தனர்‘ என்று கூறினர், இன்னும் சிலர், அதன் மூலம் நபியவர்களின் அந்தஸ்த்தை உயர்த்தவே இப்படி வழிகாட்டினான் என்று கூறினர்.

எனவே பாவமன்னிப்பு தேடுதல், அல்லாஹ்வின் பக்கம் மீளுதல் என்பதே நன்மைகளை அதிகப்படுத்துவதற்கான வழியாகும்.  (அல்வாஉல் பயான்)

அறிஞர் ஸமக்ஷரீ கூறும் போது: அல்லாஹ்வை துதித்து, பாவமன்னிப்பு தேடுமாறு கட்டளையிடப்பட்டதானது, பாவத்தை விட்டு ஒதுங்கி, வழிபாடுகளில் ஈடுபடுவதற்குமிடையில் ஒன்று சேர்ப்பதன் மூலம் மார்க்க விடயத்தை நிலைநாட்டுவதற்கான கட்டளையை பூரணப்படுத்துவதாகும். நபியவர்கள் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டிருந்தும் அப்படி கட்டளையிடப்பட்டிருப்பது தனது சமுதாயத்திற்கு காட்டும் கனிவாகும், ஏனெனில் பாவமன்னிப்பு தேடுவதென்பது பணிவின் அடையாளம் என்பதோடு, உளக்கட்டுப்பாடாகும்,எனவே அதுவே ஒரு வணக்கமாகும். (அல்கஷ்ஷாப்)

அறிஞர்களது இந்த கூற்றுக்களை நோக்கும் போது; இஸ்திஃபார் பாவமன்னிப்புத்தேடுதல் தனித்துவமான ஒரு வணக்கம், இறைவனுக்கான அடிமைத்துவ வெளிப்பாடு, இறைக்கட்டுப்பாடு, மனிதன் பாவம் செய்யும் இயல்புகொண்டவன் என்ற சிந்தனை கட்டிக்காக்கப்படல் போன்ற பல நலவுகள் இருப்பதை பார்க்கலாம். இந்த பயன்பாட்டை புரிந்தால் ”ஏன் நபியவர்கள் பாவமன்னிப்புத் தேடவேண்டும்” என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்.

இஸ்திஃபார் அடிமைத்துவத்தின் அடையாளம்:

அல்லாஹ் மனிதர்களை நோக்கி தன்னைத் தானே சுத்தப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளான், எனவே ஒருவன் பாவமன்னிப்பு தேடுவதே, தான் மனிதன் என்பதற்கும், தன்னைத் தானே சுத்தப்படுத்தாமல் இருப்பதற்கும் அடையாளமாகும், இதனால் தான் நபிமார்கள், குறிப்பாக நபி ஸல் அவர்கள் ஒவ்வொரு நாளும் நூறு தடவைகள் பாவமன்னிப்பு தேடியுள்ளார்கள். சுவன வாசிகளின் அடையாளமாக இது கூறப்பட்டுள்ளது என்றால் ஏன் அவர்கள் பாவமன்னிப்பு தேடவேண்டும் என்று சிந்தித்தால் அதனை புரிந்து கொள்ளலாம். அல்லாஹ் கூறுகின்றான்:

இறைக் கட்டுப்பாட்டின் அடையாளம்:

ஒரு முஸ்லிம் கழிவறையிலிருந்து வெளியேறினால் அவன் குப்ராணக்‘ (இறைவா மன்னிப்பாயாக) என்று கூறவேண்டும், தொழுகை முடிந்தால் அஸ்தஃபிருல்லாஹ்‘ (அல்லாஹ்விடம் நான் மன்னிப்பு தேடுகிறேன்) என்று மூன்று தடவைகள் கூறவேண்டும். என்கிறது இஸ்லாம். ஏன் எதற்காக என்ற கேள்விகளுக்கு அப்பால், இஸ்லாம் சொல்கிறது நான் கட்டுப்படுவேன் என்பதே அடிப்படை, எனவேதான் வெற்றிவாகை சூடுகின்ற மனிதன் பெருமையடிப்பதே அடிப்படை, ஆனால் இஸ்லாம் நபியவர்களுக்கு ‘பாவமன்னிப்பு தேடுவீராக’ என்று கூறி, கட்டுப்பாட்டை வலியுறுத்தியுள்ளது.

உலக நலவுகளை தாங்கிவரும் அடிப்படை:

பாவமன்னிப்பு தேடுவது வெறுமனே செய்த பாவங்களை எடுத்துக் கூறுவதல்ல, ‘அஸ்தஃபிருல்லாஹ்’ என்றால், செய்த பாவத்தை குறித்து சொல்லாமல், பொதுப்படையாக மன்னிப்பு தேடுவதே, இதில் பொதுப்படையான, மனிதன் உணராமல் செய்கிற பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது ஒரு பக்கம், இன்னொரு விதத்தில் பல உலக நலவுகளைக் கொண்டுவரும் என்பதும் அடிப்படை. அல்லாஹ் கூறுகின்றான்:

எனவே இஸ்திஃபார் பாவமன்னிப்பு தேடுவதற்கு இத்துணை காரணிகள் இருக்கும் போது ‘எந்த பாவத்திற்காக நபியவர்கள் பாவமன்னிப்பு தேட வேண்டும்’ என்பதை விடவும், ‘ஏன் பாவமன்னிப்பு தேடாமல் இருக்க வேண்டும்’ என்று கேட்பதே பொருத்தமாக இருக்கும். (அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்)

ஸூரா நஸ்ரின் விளக்கம் முற்றுப் பெறுகிறது.

وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *