سُورَةُ قُرَيْشٍ
ஸூரா குறைஷ்
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!
பெயர் : ஸூரா குறைஷ் (குறைஷி கோத்திரம்)
இறங்கிய காலப்பகுதி : மக்கா
வசனங்கள் : 4
சிறப்பு:
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ‘ஏழு விடயங்களைக் கொண்டு அல்லாஹ் குறைஷிகளை சிறப்பித்தான், நான் அவர்களை சார்ந்தவன், அவர்களிலேயே தூதுத்துவமும் இருக்கிறது, கஃபாவும், ஸம்ஸம் கிணறும் அவர்களது பராமரிப்பிலிருந்தது, யானை படையை அழித்து உதவியமை, பத்து வருடங்களாக அல்லாஹ்வை யாரும் வணங்காத நிலையில் அவர்கள் அல்லாஹ்வை வணங்கினார்கள், அவர்களது விடயத்தில் அல்லாஹ் ஒரு அத்தியாயத்தை இறக்கினான்,’ பிறகு ஸூரா குறைஷை ஓதினார்கள். (அல் பைஹகீ; கிலாபிய்யாத், இப்னு கஸீர்)
இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘இப்ராஹீமுப்னு முஹம்மத் பின் ஸாபித் பின் ஷுரைஹ்பீல்‘ என்பர் இடம்பெற்றுள்ளார், அவர் ‘பல முன்கரான செய்திகளை அறிவித்தவர்‘ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார், மேலும், ‘யஃகூப் பின் முஹம்மதுஸ் ஸுஹ்ரீ‘ என்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் ‘அதிகம் தவறு விடுபவர்‘ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே பலவீனமானதாகும். இமாம் தஹபீ அவர்கள் பலவீனப்படுத்தியதோடு, ஹாபிழ் இராகீ, அல்பானி போன்றவர்கள் ஹஸன் என்று கூறியுள்ளனர். (அல்லாஹு அஃலம்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
لِاِيْلٰفِ قُرَيْشٍۙ , اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَآءِ وَالصَّيْفِۚ
لِ க்கு/காக, اِيْلٰفِ விருப்பத்தை ஏற்படுத்தல், قُرَيْشٍۙ குறைஷ் கோத்திரம், همْ அவர்கள், اٖلٰفِ விருப்பமாக்குதல், رِحْلَةَ பயணம், الشِّتَآءِ குளிர், மாரி காலம், وَ இன்னும், الصَّيْفِ கோடைகாலம்
குரைஷியர்களுக்கு விருப்பமுண்டாக்குவதற்காக, (1) மாரிகால, கோடைகால பிரயாணத்தில் அவர்களுக்கு விருப்பமுண்டாக்குவதற்காக (யானைப்படையினரை அழித்து கஃபாவை அல்லாஹ் காப்பாற்றினான்). (106:2)
இந்த ஸூரா முன்னைய ஸூராவிலிருந்து வேறுபடுத்தப்பட்டதாகவே இருக்கின்றது, இரண்டும் ஒரே பொருளுக்கு தொடர்புடையவையாக இருந்தாலும் அவற்றிற்கிடையில் “பிஸ்மில்லாஹ்” எழுதப்பட்டுள்ளது. இதை முஹம்மத் பின் இஸ்ஹாக் மற்றும் அப்துர் ரஹ்மானிப்னு ஸைதிப்னு அஸ்லம் ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர். அவர்களுடைய கூற்றுப்படி, “குரைஷ் இனத்தினரை மெருகுதலூட்டுவதற்காக நாங்கள் மக்காவுக்கு எதிராக வந்த யானைப் பட்டையை அழித்து, சருகுகளாக ஆக்கினோம்” என்பதாகும்.
இன்னுமொரு கருத்தின்படி, இதன் பொருள், “குரைஷ் இனத்தினர் வியாபார நோக்கில் மாரிகாலத்தில் யமனை நோக்கியும், கோடைகாலத்தில் ஷாமை நோக்கியும் பயணிப்பதில் அவர்களுக்கிருந்த மனதிருப்தியை நினைவூட்டுவதாகும், அவர்கள் பயணங்களில் சென்று, திரும்பும் போது தங்களின் நாட்டுக்கு பாதுகாப்பாக திரும்புவார்கள். இது அவர்கள் சங்கையான ஊரான மக்காவின் குடியினராக இருந்த காரணத்தால் கிடைத்த சிறப்பு. அவர்களை அறிந்தவர்கள் அவர்களை மதித்தனர், அவர்களுடன் பயணித்தவர்களும் பாதுகாப்பாக இருந்தனர், அவர்கள் பயணங்களிலும், தங்கள் ஊரில் தங்கியிருந்தாலும் பாதுகாப்பாக இருந்தனர், அல்லாஹ் கூறுகின்றான்:
“اَوَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا حَرَمًا اٰمِنًا وَّيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ
அவர்களைச் சூழ (மக்காவிற்கு வெளியில்) உள்ள மனிதர்கள் எதிரிகளால் இறாய்ஞ்சி(த் தூக்கி)ச் செல்லப்படும் நிலையில் (இந்த மக்காவை) அபயமளிக்கும் புனித இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (29:67)
(இப்னு கஸீர்)
இந்த கருத்தின்படி “அவர்களை விருப்பமூட்டுவதற்காக என்பதன் மூலம் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள வைத்து அவனையே வணங்க வைத்தல்” ஆகும். (அல்வாஉல் பயான்)
இப்னு ஜரீர் இமாம் அவர்கள் கூறும் போது: “லாம்” என்ற எழுத்து ஆச்சரியத்தைக் குறிப்பதற்காக வந்துள்ளது, அதாவது, “குரைஷிகளுக்கு உளதிருப்தி ஏற்படுத்தியதையும் அவர்களுக்கு நாம் செய்த அருளையும் வைத்து ஆச்சரியப்படுங்கள்” என்பது பொருள்’, அது இந்த இரண்டு ஸூராக்களும் தனித்துவமானவை என்று முஸ்லிம்கள் ஒரே கருத்தில் ஒன்றுபட்டிருக்கின்றார்கள்’ என்பதனாலாகும்” என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறும்போது,; ‘இந்த இரண்டு ஸூராக்களையும் ஒரே ரக்அத்தில் உமர் ரலி அவர்கள் ஓதியதை வைத்தும், உபையிப்னு கஃப் ரலி அவர்களிடத்தில் அவ்விரண்டுக்குமிடையில் பிரிக்கப்படவில்லை‘ என்பதை வைத்தும் ஒரே ஸூராவாக பார்த்தவர்கள் ஆதாரம் பிடித்தனர். இமாம் குர்துபீ அவர்கள் இரண்டு கருத்துக்களையும் கூறிவிட்டு, ஒரு கருத்தை முற்படுத்தவில்லை, ஏனெனில் இரண்டுக்குமிடையில் வேறுபாடுகளில்லை. இமாம் ஷன்கீதி அவர்கள் இந்த இரண்டு கருத்துக்களும் பொருத்தமானது என்பதையே சரிகண்டுவிட்டு, ‘அதனால் தான் இப்னு ஜரீர் அவர்களைத் தவிர வேறு யாரும் இரண்டில் ஒன்றை முற்படுத்தவில்லை, இரண்டும் சரி என்பதே பொருத்தமானது’ என்று கூறினார்கள். (அல்வாஉல் பயான்)
فَلْيَـعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَيْتِۙ
فَ எனவே/ஆகவே, لْيَـعْبُدُوْا அவர்கள் வணங்கட்டும் (படர்கை ஏவல் வினை), رَبَّ அதிபதி/இறைவன், هٰذَا இது/இந்த, الْبَيْتِۙ கஃபா ஆலயம்/வீடு
எனவே (கஃபாவாகிய) இவ்வீட்டின் இரட்சகனையே அவர்கள் வணங்குவார்களாக! (106:3)
இந்த வசனத்தில் வீடு என்பதைக் கொண்டு அல்லாஹ்வின் கஃபா எனும் ஆலயமான வீடே நாட்டப்பட்டுள்ளது. ஏனெனில் அதுவே கோடைகால, மாரிகால பயணம் விருப்பமாக்கப்பட்ட குறைஷிகளுக்கு, மக்காவாசிகளுக்கு பழகிப்போன ஆலையம். அல்லாஹ் கூறுகின்றான்:
اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَۚ
(இவ்வுலகில், அல்லாஹ்வை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு வைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்கா (மக்கா)வில் இருப்பது தான். பரக்கத்துச் செய்யப்பட்டதாக (அதில் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக)வும், அகிலத்தார்க்கு நேர்வழியாகவும் இருக்கின்றது. (3:96)
رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ
“எங்களுடைய இரட்சகனே! நிச்சயமாக நான் என்னுடைய சந்ததியை மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக, விவசாயமில்லாத பள்ளத்தாக்கில் குடியேற்றிவிட்டேன், (14:37)
الَّذِىْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ ۙ وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ
الَّذِىْ எவன்/ஒருவன் (தெளிவுபடுத்த ஒரு வசனம் அவசியம்), اَطْعَمَ உணவளித்தான், هُمْ அவர்கள், مِّنْ இருந்து/நின்றும், جُوْعٍ பசி, وَّاٰمَنَهُمْ இன்னும் அவர்களுக்கு அபயமளித்தான், مِّنْ خَوْفٍ பயத்திலிருந்து
அவன் எத்தகையவனென்றால், பசிக்கு அவர்களுக்கு உணவளித்தான், மேலும், அவர்களுக்கு பயத்திலிருந்து அவன் அபயமளித்தான். (106:4)
அந்த பயணத்தின் முலமே பசிக்கு உணவை பெற்றுக்கொள்வதும், சுற்றி வாழ்ந்த மக்களிடம் நன்மதிப்பு கிடைப்பதும் இலகுவானது, இந்த செல்வாக்கை கொடுத்தவன் அல்லாஹ் என்பதனால் நன்றி செலுத்தும் முகமாக அவனை மட்டும் வணங்குவது அவர்களுக்கு ஏவப்பட்டது.
இமாம் இப்னு கஸீர் இமாமவர்கள் கூறும்போது, மக்காவாசிகளுக்கு கட்டளையிட்டது போன்றே நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் என்று பின்வரும் வசனத்தை ஆதாரம் பிடித்து கூறினார்கள். அல்லாஹ் கூறினான்:
اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ رَبَّ هٰذِهِ الْبَلْدَةِ الَّذِىْ حَرَّمَهَا وَلَهٗ كُلُّ شَىْءٍ وَّاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِيْنَۙ
“நான் கட்டளையிடப்பட்டதெல்லாம் (மக்காவாகிய) இந்த ஊரின் இரட்சகனை நான் வணங்குவதைத்தான்; அவன் எத்தகையவனென்றால், இதை அவன் புனிதமாக்கிவைத்துள்ளான்; ஒவ்வொரு பொருளும் அவனுக்கே உரியது! இன்னும், அவனுக்கே முற்றிலும் கீழ்படிந்தவர்களில் உள்ளவனாக (முஸ்லிமாக) இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று நபியே! நீர் கூறுவீராக!) (27:91)
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் சில குறிப்புகளை முன்வைத்தார்கள்;
‘அவர்களுக்கு உணவளித்து, பயத்திலிருந்து அபயமளித்த கஃபாவின் இரட்சகனை வணங்கட்டும்’ என்ற வசனம் மூலம், காரணத்தையும், அதனை ஏற்படுத்தியவனையும் இணைப்பது போன்று ஒரு அருளையும் அதனை விதித்தவனையும் இந்த வசனம் சேர்த்துள்ளது. எனவே அதன் மூலம் அல்லாஹ்வை மட்டும் வணங்கவேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது, அது குறைஷிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து அடியார்களுக்குமுள்ள கட்டளையாகும்.
முதலாவது; இது அல்குர்ஆனின் முதல் சூராவின் அழைப்பாகும்; அல்லாஹ் கூறுகின்றான்:
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ
அனைத்து புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது. (2:1)
இது அல்லாஹ்வே புகழுக்கு தகுதியானவன், ஏனெனில் அவனே அகிலத்தவர்கள் அனைவரையும் படைத்து பரிபாலிப்பவன் என்று கூறியது போன்றாகும்.
இரண்டாவது: இரண்டாவது அத்தியாயம் (2:21,22) வது வசனங்களை போன்றதாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
يٰۤاَيُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ
“மனிதர்களே! உங்களுடைய இரட்சகனை நீங்கள் வணங்குங்கள்; “
இதனை கட்டாயப்படுத்தும் காரணி;
الَّذِىْ خَلَقَكُمْ وَالَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ
அவநீ உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோர்களையும் படைத்தான்; (அதனால்) நீங்கள் பயபக்தியுடையோராகலாம்.(2:21)
அதன் பிறகு அவன் செய்த அருள்களை எடுத்துக்காட்டுகிறான். அல்லாஹ் கூறுகின்றான்;
الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْۚ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ
அவனே, உங்களுக்கு பூமியை விரிப்பாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, வானத்திலிருந்து (அவனே) மழையைப் பொழிவித்து, அதனைக்கொண்டு கனி வகைகளிருந்து உங்களுக்கு உணவை வெளிப்படுத்தினான். (2:22)
இது போன்றது தான் பின்வரும் வசனமும்; அல்லாஹ் கூறுகின்றான்:
اِنَّاۤ اَعْطَيْنٰكَ الْكَوْثَرَؕ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
(நபியே!) நிச்சயமாக நாம் கவ்ஸரை உமக்குக் கொடுத்திருக்கின்றோம். (1) ஆகவே, நீர் உமதிரட்சகனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக. (108:1,2)
இதனைத்தான் அல்லாஹ், நன்றி செலுத்தல் என்பது நிஃமத்துக்களை அதிகப்படுத்தும் என்று கூறுகின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:
لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ
நீங்கள் நன்றி செலுத்தினால் நிச்சயமாக உங்களுக்கு அதிகப்படுத்துவேன், (14:7)
நன்றி மறுத்தால், அதன் விபரீதம் கடுமையானது என்றும் அல்லாஹ் எச்சரிக்கிறான்:
وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَٮِٕنَّةً يَّاْتِيْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُـوْعِ وَالْخَـوْفِ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ
மேலும், அல்லாஹ் ஓர் ஊரை உதாரணமாகக் கூறுகிறான், அது அச்சமற்றதாக அமைதியானதாக இருந்தது, அதற்குரிய உணவு (வகைகள்) ஒவ்வொரு திசையிலிருந்தும் அதற்கு தாராளமாக வந்து கொண்டுமிருந்தது, அல்லாஹ்வுடைய அருட்கொடைகளுக்கு (நன்றி செலுத்தாமல்) அ(வ்வூரான)து மாறு செய்தது, ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அல்லாஹ் பசி பயம் என்னும் ஆடையை அதற்கு (அணிவித்து அவ்வூரார்களை)ச் சுவைக்கச் செய்தான். (16:112)
எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தல் என்பதும், நன்றி மறந்து வாழும் விடயத்தில் எச்சரிக்கையாக இருத்தல் என்பதும் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும்.
அடுத்து ஒரு குறிப்பு:
பசிக்கு உணவளித்தல், பயத்துக்கு அபயமளித்தல் என்ற இரண்டும் ஒன்றாக கிடைப்பதும் பெரும் அருளாகும். ஏனெனில் இந்த இரண்டில் ஒன்றை இழந்தாலும் மனிதன் நிம்மதியை இழந்து விடுவான். ஏனெனில் பட்டினியுடன் வாழமுடியாது, பயமிருந்தால் பாதுகாப்பில்லை, இந்த இரண்டும் சேர்ந்து கிடைப்பதே அருளை பூர்த்தியாகும்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: தனது குடும்பத்தோடு பாதுகாப்பாக இருப்பதும், உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதும், அன்றைய வாழ்க்கை செலவும் (உணவும்) யாருக்கு கிடைத்துவிடுமா அவருக்கு இந்த உலகமே கிடைத்தது போன்றாகும். (திர்மிதீ:2346, இப்னுமாஜா: 4141)
இதனை அல்பானி இமாமவர்கள் ஹசன் தரத்தில் உள்ளது என்று கூறியுள்ளார்கள். ஆனாலும் இதில் ‘ஸலமதுப்னு உபைதுல்லாஹ்‘ என்பவர் இடம்பெற்றுள்ளார், ‘அவர் மஜ்ஹூல்‘ என்று விமர்சிக்கப்பட்டவராவார். (துரர்)
இதே நபி மொழி இப்னு உமர் ரலி வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது, அது பலவீனமாகும், அதில் ‘அலிய்யுப்னு ஆபிஸ்‘ எனும், ‘பலவீனமானவர்‘ என்று விமர்சிக்கப்பட்டுள்ளவர் இடம்பெற்றுள்ளார். மேலும் அபூ ஹுரைரா ரலி வழியாகவும் பலவீனமான வழியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அபுத்தர்தாஃ ரலி வழியாக (இப்னு ஹிப்பான்: 671) அறிவிக்கப்பட்டுள்து, இமாம் தஹபீ அவர்கள், அதில் வரும் ‘ஹானிஃ என்பவரது நிலை எனக்குத் தெரியாது’ என்று கூறியுள்ளார்கள். ஷுஐபுல் அர்னாவுத் அவர்களும் ‘மிகவும் பலவீனமானது’ அப்துல்லாஹிப்னு ஹானிஃ பல பொய்யான செய்திகளை அறிவித்துள்ளார்‘ என்று கூறியுள்ளார்கள். (அல்லாஹு அஃலம்)
மேலும் ஒரு குறிப்பை கூறினார்கள்:
“இந்த ஸூரா நபிமார்களின் துஆ ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது என்பதற்கு ஒரு ஆதாரமாகும். ஏனெனில் இப்ராஹீம் நபியவர்கள், மக்கா வாசிகளுக்கு “அவர்கள் பக்கம் ஒதுங்கும் ஒரு சாராரை மனிதர்களிலிருந்து நீ ஆக்கிவிடுவாயாக, அவர்களுக்கு பழவஸ்துக்களை உணவாகவும் அளிப்பாயாக‘ என்றும், ‘இறைவா அவர்களில் இருந்தே அவர்களுக்கு ஒரு தூதரை அனுப்புவாயாக‘ என்றும் பிரார்த்தித்தார்கள், அல்லாஹ் அவர்களுக்கு பசியிலிருந்து உணவும் அளித்தான், நபியையும் அனுப்பினான்.” (அல்வாஉல் பயான்)
இந்த ஸூராவில் இருந்து நாம் படித்த பாடங்களை எம் வாழ்வில் எடுத்து நடக்க முயல்வோம்! இத்தோடு ஸூரா குரைஷின் விளக்கம் முடிவுற்றது.
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ