سُورَةُ النِّسَاءِ
ஸூரதுன் நிஸா
(வசனங்கள் 15-23)
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!
وَالّٰتِىْ يَاْتِيْنَ الْفَاحِشَةَ مِنْ نِّسَآٮِٕكُمْ فَاسْتَشْهِدُوْا عَلَيْهِنَّ اَرْبَعَةً مِّنْكُمْ ۚ فَاِنْ شَهِدُوْا فَاَمْسِكُوْهُنَّ فِى الْبُيُوْتِ حَتّٰى يَتَوَفّٰٮهُنَّ الْمَوْتُ اَوْ يَجْعَلَ اللّٰهُ لَهُنَّ سَبِيْلًا
உங்கள் பெண்களில் எவளேனும் விபச்சாரம் செய்து விட்டால் அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள். அவர்கள் சாட்சியம் கூறினால் மரணம் அவளுடைய காரியத்தை முடித்துவிடும் வரையில் அல்லது அல்லாஹ் அவளுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரையில் அவளை வீட்டினுள் தடுத்து வைக்கவும். (4:15)
பதினைந்தாவது வசனம் தரும் படிப்பினைகள்;
وَالّٰتِىْ يَاْتِيْنَ الْفَاحِشَةَ مِنْ نِّسَآٮِٕكُمْ فَاسْتَشْهِدُوْا عَلَيْهِنَّ اَرْبَعَةً مِّنْكُمْ
உங்கள் பெண்களில் எவளேனும் விபச்சாரம் செய்து விட்டால் அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள்.
ஒரு பெண்மணி விபச்சாரம் செய்துவிட்டால் நான்கு சாட்சிகள் கொண்டு நிரூபிக்கப்படவேண்டும்,
فَاِنْ شَهِدُوْا فَاَمْسِكُوْهُنَّ فِى الْبُيُوْتِ حَتّٰى يَتَوَفّٰٮهُنَّ الْمَوْتُ اَوْ يَجْعَلَ اللّٰهُ لَهُنَّ سَبِيْلًا
அவர்கள் சாட்சியம் கூறினால் மரணம் அவளுடைய காரியத்தை முடித்துவிடும் வரையில் அல்லது அல்லாஹ் அவளுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரையில் அவளை வீட்டினுள் தடுத்து வைக்கவும்.
அப்படி நிரூபிக்கப்பட்டால் அவளுக்கான தண்டனை அவள் மரணிக்கும் வரை, அல்லது அவளுக்கான வேறு ஒரு வழியை சட்டத்தை அல்லாஹ் ஆக்கும் வரை அவள் வீட்டிற்குள்ளேயே தடுத்துவைக்கப்பட வேண்டும், வெளியேற்றப்படக்கூடாது.
இந்த சட்டம் ஆரம்பத்தில் இருந்து மாற்றப்பட்ட சட்டமாகும்,
இந்த வசனத்தின் கடைசிப்பகுதி (சபீலா ஒரு வழி என்ற வார்த்தை) அதனையே எடுத்துரைக்கின்றது. அல்லாஹ் விபச்சாரம் செய்தவருக்குரிய தண்டனையை குறித்து சட்டத்தை இறக்கியுள்ளான்.
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: ஸூரதுன் நூர் இறங்கும் வரை விபச்சாரம் செய்தோருக்கான சட்டம் இவ்வாறே இருந்தது. பிறகு அந்த சட்டம் (நூறு) கசையடி, அல்லது கல்லடித்தல் என்பதைக் கொண்டு மாற்றபட்டது. (இப்னு கஸீர்)
இதே கருத்து (இந்த சட்டம் மாற்றப்பட்டது, மன்ஸூக்) இக்ரிமா, ஸஈத் பின் ஜுபைர், ஹஸனுல் பஸரி, அதாஉல் குராஸானி, கதாதா, ளஹ்ஹாக் போன்றவர்கள் வழியாகவும் பதியப்பட்டுள்ளது. இது ஏகோபித்துக் கூறப்பட்ட ஒன்றாகும். (இப்னு கஸீர்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (விபச்சாரத்திற்குரிய தண்டனையை) என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள், என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள், நிச்சியமாக அல்லாஹ் அவர்களுக்கான வழியை ஆக்கிவிட்டான், திருமணம் முடிக்காத ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு கசையடியும், ஒரு வருடகாலம் நாடுகடத்தலும், திருமணம் முடித்த ஆணும் பெண்ணும் ஈடுபடடால் நூறு கசையடியும், கல்லெறிந்து கொள்வதுமாகும். (முஸ்லிம்:3489) இதே அறிவிப்பு சில வார்த்தை வித்தியாசங்களுடன் பதியப்பட்டுள்ளது.
திருமணம் முடிக்காத ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு கசையடியும், ஒரு வருடகாலம் நாடுகடத்தலும், திருமணம் முடித்த ஆணும் பெண்ணும் ஈடுபடடால் நூறு கசையடியும், கல்லெறிந்து கொள்வதும், வயோதிபர்கள் ஈடுபடடால் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள் என்று இப்னு மர்தவைஹி அவர்கள் வழியாக பதியப்பட்டுள்ளது, அதன் அறிவிப்பாளர் தொடரில் ‘அம்ர் பின் அப்தில் கப்பாருல் பகீமி’ என்பவர் இடம் பெற்றுள்ளார், அவர் ‘மத்ரூக்குல் ஹதீஸ், முன்கருல் ஹதீஸ், ஹதீஸ் புனைபவர்‘ போன்ற வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டுள்ளார். (மீஸானுல் இஃதிதால்)
ஸூரதுன் நிஸா இறங்கிய பின்னர் பெண்களை தடுத்துவைத்தல் என்ற சட்டமில்லை’ என்று நபிகளாரின் கூற்றாக தப்ரானியில் ஒரு செய்தி பதியப்பட்டுள்ளது, அதன் அறிவிப்பாளர் தொடரில் வரும். ‘இப்னு லஹீஆ, அவரது சகோதரர் ஈஸா’ பலவீனமானவர்களாவர்.
இந்த நபிமொழிகளை வைத்தே அஹ்மத் இமாமவர்கள் ‘திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்தால் கசையடியும், கல்லெறிதலும் அவசியம்‘ என்று கூறினார்கள், ஏனைய அறிஞர்கள் ‘கல்லெறிந்தால் மட்டும் போதுமானது, ஏனெனில் நபியவர்கள், மாஇஸ், காமிதிய்யா, இரண்டு யூதர்களுக்கு கசையடி நிறைவேற்றவில்லை, எனவே அது அவசியமில்லை, அது மாற்றப்பட்டது‘ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்) அல்லாஹு அஃலம்!
وَالَّذٰنِ يَاْتِيٰنِهَا مِنْكُمْ فَاٰذُوْهُمَا ۚ فَاِنْ تَابَا وَاَصْلَحَا فَاَعْرِضُوْا عَنْهُمَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ تَوَّابًا رَّحِيْمًا
உங்களில் இருவர், அ(ம்மானக்கேடான)தைச் செய்துவிட்டால், அவ்விருவரையும். துன்புறுத்துங்கள், அவ்விருவரும் பச்சாதாபப்பட்டு, (அதிலிருந்து விலகி) இருவரும் ஒழுங்காக நடந்து கொண்டால் அவர்களை விட்டுவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான். (4:16)
பதினாறாவது வசனம் தரும் படிப்பினைகள்;
وَالَّذٰنِ يَاْتِيٰنِهَا مِنْكُمْ فَاٰذُوْهُمَا
உங்களில் இருவர், அ(ம்மானக்கேடான)தைச் செய்துவிட்டால், அவ்விருவரையும். துன்புறுத்துங்கள்
இப்னு அப்பாஸ் ரலி, ஸஈத் பின் ஜுபைர் போன்றவர்கள் கூறினார்கள்: ஏசுவது, பலிப்பது, செருப்பால் அடிப்பது கொண்டு நோவினை செய்யுங்கள், அதுவே கசையடி, கல்லெறிதல் என்ற சட்டம் கொண்டு மாற்றப்படும் வரை சட்டமாக இருந்தது.
இக்ரிமா, அதாஃ, ஹஸனுல் பஸரீ, அப்துல்லாஹ் பின் கஸீர் போன்றவர்கள் கூறினர்; இந்த வசனம் விபச்சாரம் செய்த ஆண் பெண் விடயத்தில் இறங்கியதாகும், இமாம் ஸுத்தீ அவர்கள் கூறினார்கள்; இது திருமணம் முடிக்காத இளைஞர்கள் விடயத்தில் இறங்கியது.
இமாம் முஜாஹித் அவர்கள் கூறினாரக்ள்; இது இரண்டு ஆண்கள் ஒன்று சேர்வதில் இறங்கியது. அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை, அவர் ஓரினைச் சேர்க்கையை நாடுவது போன்று இருக்கின்றது. (இப்னு கஸீர்) அல்லாஹு அஃலம்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: லூத் நபியின் கூட்டத்தார் செய்த செயலை (ஓரினச்சேர்க்கை)செய்பவரை நீங்கள் கண்டால், இருவரையும் கொலைசெய்யுங்கள். (அபூதாவூத்:4462, திர்மிதி:1456, இப்னுமாஜா:2561)
ஹதீஸ் விமர்சனம்:
அஹ்மதின் அறிவிப்பில் ‘இப்ராஹீம் பின் இஸ்மாஈல் பின் அபீ ஹபீபதில் அன்ஸாரி ‘ என்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் ‘முன்கருல் ஹதீஸ், மத்ரூக், அறிவிப்பாளர் தொடர்களை மாற்றுபவர்‘ என்று விமர்சிக்கப்பட்டவர். மேலும் அவரின் ஆசான்; ‘தாவூத் பின் ஹுஸைன்‘ என்பவர் ‘இக்ரிமாவைத் தொட்டும் அறிவிப்பதில் நம்பிக்கையற்றவர்‘ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். இது இக்ரிமாவின் அறிவிப்பாகும்.
மேலும் ‘அம்ர் பின் அபீ அம்ர் மவ்லா முத்தலிப்‘ என்பவர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ‘ஸதூக்‘ என்ற நிலையில் இருந்தாலும் இந்த ஹதீஸ் விடயத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளார். ‘இக்ரிமாவைத்தொட்டு முன்கரான செய்திகளை அறிவிப்பு செய்பவர், அவர் எந்த அறிவிப்பிலும் இக்ரிமாவிடமிருந்து செவிமடுத்ததாக கூறவில்லை‘ என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார். தல்கீஸுல் ஹபீரில் அல்ஹாபிழ் அவர்கள், நஸாஈ அவர்களும் நிராகரித்துள்ளதாக பதிவுசெய்துள்ளார்.
அபூதாவூத் 4462, இப்னுமாஜா 2561, திர்மிதி 1456 தாரகுத்னீ போன்றோரும் ‘கொலைசெய்யப்படவேண்டும்’ என்று இவர் வழியாகவே பதிந்துள்ளார்கள்.
‘கொலை செய்யுங்கள்’ என்று மவ்கூபாக, இப்னு அப்பாஸ் ரலியின் கூற்றாக அஹ்மத்; 2733 ல் பதியப்பட்டுள்ளது, அதில் ‘அப்பாத் பின் மன்ஸூர்‘ என்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் நினைவாற்றல் குறைந்தவராகவும், ‘முதல்லிஸ்; பலவீனமானவரை விட்டுவிட்டு நம்பகமானவரிடமிருந்து அறிவிப்பவர்‘ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். பைஹகீ ஸுனனுல் குப்ரா 17020 வில் நபிகளாரின் கூற்றாகவும் அப்பாத் வழியாக பதியப்பட்டுள்ளது.
‘லூத் நபியின் கூட்டத்தார் செய்த செயலை செய்வோர் சபிக்கப்பட்டவர்கள்‘ இந்த அறிவிப்பு அஹ்மத் :1875, ‘அம்ர் பின் அபீ அம்ர் மவ்லா முத்தலிப்‘ வழியாக ‘முஹம்மத் பின் இஸ்ஹாக்‘ வழியாக அறிவிக்கப்பட்டு, அவர் செவிமடுத்தாக அஹ்மதின் 2914 ல் பதியப்பட்டது.
‘லூத் நபியின் கூட்டத்தார் செய்த செயலை செய்வோருக்கு கல்லடியுங்கள்‘ என்று அபூஹுரைரா வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னுமாஜா 2562,ஹாகிம்: 8048, திர்மிதீ இமாமவர்கள் 1456 வது இலக்க ஹதீஸுக்கு கீழ் கூறும்போது; ‘இதன் அறிவிப்பாளர் தொடரில் விமர்சனம் இருக்கின்றது, இதன் அறிவிப்பாளரான ‘ஆஸிம் பின் உமர்’ நினைவாற்றல் குறைந்தவர் என்று விமர்சிக்கப்பட்டவர் என்று கூறினார்கள். ‘மத்ரூக்‘ என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார். தஹபீ இமாமவர்கள் ஹாகிமின் குறிப்பில் இதனை அறிவித்த மற்றொரு அறிவிப்பாளரான’அப்துர் ரஹ்மான்’ என்பவரை ‘சாகித்‘ என்று விமர்சித்துள்ளார், தல்கீஸுல் ஹபீரில் அல்ஹாபிழ் அவர்களும் இது ஆதாரபூர்வமானதன்று என்று கூறியுள்ளார்கள்.
எனவே இது பற்றிய செய்திகள் அறிவிப்பாளர் தொடரிலும், கருத்து அடிப்படையிலும் பல விதமாக அறிவிக்கப்பட்டிருப்பதோடு, விமர்சனங்களுக்குற்பட்டதாகவே இருக்கின்றன. அதேநேரம் அல்பானி இமாம் போன்றவர்கள் ‘ஸஹீஹ், ஹஸன்’ என்று தீர்ப்புமளித்துள்ளார்கள். (அல்லாஹு அஃலம்)
فَاِنْ تَابَا وَاَصْلَحَا فَاَعْرِضُوْا عَنْهُمَا
அவ்விருவரும் பச்சாதாபப்பட்டு, (அதிலிருந்து விலகி) இருவரும் ஒழுங்காக நடந்து கொண்டால் அவர்களை விட்டுவிடுங்கள்.
விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் அதிலிருந்து விடுபட்டு, தவ்பா செய்து, நல்லநிலையில் இருந்தால் அவ்விருவரையும் மோசமான வார்த்தைகளால் நோவினை செய்யக்கூடாது என்று இந்த வசனம் கூறுகின்றது, ஏனெனில் தவ்பா செய்தவர் பாவமற்றவராகவே கருதப்படுவார்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒரு அடிமை விபச்சாரம் செய்துவிட்டால், அவளுக்கு தண்டனையை நிறைவேறட்டும், பிறகு அவள் செய்த தவறை சொல்லிக்காட்டி குறைகூறாமல் இருக்கட்டும். (புகாரி:2234, முஸ்லிம்)
எனவே ஒருவர் ஒரு தவறை செய்துவிட்டு திருந்திவிட்டால் ஏற்கனவே செய்த தவறை வைத்து அவரை குறை சொல்வதோ, அவரது சந்ததிகளை குறை சொல்வதோ ஒரு முஃமினுக்கு நல்லதல்ல.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபிகளாரிடம் மதுபானம் குடித்த ஒருவர் கொண்டுவரப்பட்டு, அவருக்கு அடியுங்கள் என்று நபியவர்கள் கூறவே, எங்களில் சிலர் கையால் அடிக்க, சிலர் செருப்பாலும், சிலர் ஆடையாலும் அடித்தனர், அவர் திரும்பி செல்லும் போது சிலர், ‘அல்லாஹ் உம்மை கேவலப்படுத்தட்டும்’ என்று கூறவே, நபியவர்கள்; ‘நீங்கள் இப்படி சொல்ல வேண்டாம், அவருக்கு எதிராக ஷைதானுக்கு உதவவேண்டாம்’ என்று கூறினார்கள். (புகாரி:6777)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ஒரு முஃமின் குறை சொல்லித் திரிபவனாக இருக்கமாட்டான். (திர்மிதி:1977)
அடுத்து அல்லாஹ் இந்த வசனத்தை முடிக்கும் விதம்,
اِنَّ اللّٰهَ كَانَ تَوَّابًا رَّحِيْمًا
நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்
அல்லாஹ்வே அடியான் செய்த தவறுகளை மன்னித்து, அன்புகாட்டும் போது ஏன் மனிதனாகிய நாம் ஒரு மனிதனை மன்னிக்கக்கூடாது, இதை உணர்த்துவதே இந்த வசன முடிவு.
اِنَّمَا التَّوْبَةُ عَلَى اللّٰهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ فَاُولٰٓٮِٕكَ يَتُوْبُ اللّٰهُ عَلَيْهِمْؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا
எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து, பின்னர் வருத்தப்பட்டு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) நீங்கி விடுகின்றார்களோ அத்தகையவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (4:17)
பதினேழாவது வசனம் தரும் படிப்பினைகள்;
اِنَّمَا التَّوْبَةُ عَلَى اللّٰهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ
எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்கின்றார்களோ அத்தகையவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும்
பாவம் செய்பவன் பாவம் என்று தெரியாமலோ, அல்லது உணராமலோ செய்துவிட்டால் அவன் எந்த நிலையில் தவ்பா செய்தாலும் அல்லாஹ் ஏற்கின்றான் என்பதே அடிப்படை, அவன் மரணத்திற்கு முன்னர் கேட்டுவிட்டால் போதுமானது அல்லாஹ் மன்னித்துவிடுவான்.
இமாம் முஜாஹித் அவர்களும் இன்னும் சிலரும் கூறினர்; “தவறுதலாகவோ, வேண்டுமென்றோ தவறு செய்யும் ஒவ்வொருவரும், அதிலிருந்து ஒதுங்கும் வரை மடையனே.” “தவறுசெய்யும் ஒவ்வொரு மனிதனும் மடையனாகவே இருக்கின்றான்.” என்று நபித்தோழர்கள் கூறுவார்கள் என்று இப்னு ஜரீர் ரஹ் அவர்கள் பதிந்துள்ளார். இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: “மடமையின் காரணமாகவே மனிதன் தவறு செய்கின்றான்”. (இப்னு கஸீர்)
ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ
பின்னர் வருத்தப்பட்டு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) நீங்கிவிடுவார்கள்
அடுத்து சமீபத்தில் மன்னிப்பு தேடுவார்கள் என்பதும் முக்கியமானது, பாவம் செய்தவன் உடனடியாக மன்னிப்பு தேடவேண்டும் என்பது ஈமானின் வெளிப்பாடு, ஆனால் அல்லாஹ் ஒரு மனிதனை எதுவரையில் மன்னிக்கின்றான், என்றால் உயிரைக் கைப்பற்றும் மலக்கை சந்திக்கும் வரை மன்னிக்கின்றான் என்பதே.
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: “(சமீபத்தில் என்பது) ஒரு மனிதனுக்கும் அவன் மலக்குல் மவ்த்தை சந்திக்கும் வரைக்கும் இடைப்பட்டதாகும்”. இமாம் ழஹ்ஹாக் அவர்கள் கூறினார்கள்: “மரணத்திற்கு முன்னர் உள்ளதே சமீபம் என்பது”. ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்கள் கூறினார்கள்: “சமீபம் என்பது உயிர் தொண்டைக்குழியை அடையும் வரையில் உள்ளதாகும்”. (இப்னு கஸீர்)
இப்னு உமர் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: அடியானின் பாவமன்னிப்பை அவன் உயிர் தொண்டைக் குழியை அடையும் வரை அல்லாஹ் ஏற்கின்றான். (அஹ்மத், திர்மிதி;3537 , இப்னு மாஜா:4253 )
எனவே ஒரு மனிதன் தனது மரணத்திற்கு முன்னர், உயிர் தொண்டைக்குழியை அடைவதற்கு முன்னர் பாவமன்னிப்பு தேடுவானாக இருந்தால் அவனது பாவமீழ்ச்சி ஏற்கப்படும் என்பதே இந்த வசனத்தின் வழிகாட்டல்.
وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا
அல்லாஹ் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்
இந்த வசன முடிவும் அல்லாஹ்வின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது, சிலரது பாவமன்னிப்பு ஏற்கப்படலாம், சிலரது ஏற்கப்படாமல் இருக்கலாம், அல்லாஹ்வே உண்மையாக மன்னிப்பு தேடுவோரையும், போலியாக மன்னிப்பு தேடுவோரையும் அறிந்தவன், அதில் யாருடைய மன்னிப்பை ஏற்கவேண்டும், யாருடையதை ஏற்கக்கூடாது என்பதிலும் நுணுக்கமானவனாக இருக்கின்றான் என்பது அல்லாஹ்வின் ஆற்றல், அவன் யாருக்கும் அணுவளவும் அநியாயமிழைக்கவும் மாட்டான், அவனில் யாருக்கும் குறைகாணாவும் முடியாது. அல்லாஹ் கூறுகிறான்:
اِنَّ اللّٰهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ
நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்வதில்லை….. (4:40)
لَا يُسْـٴَــلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْـٴَـــلُوْنَ
அவன் செய்பவைகளைப் பற்றி (ஏன் செய்தாய், எதற்காகச் செய்தாய் என்று) எவருமே அவனைக் கேட்க முடியாது. (அவ்வளவு சர்வ சுதந்திரமும், வல்லமையும் உள்ளவன்.) எனினும், அவனோ அனைவரையும் (அவரவர்களுடைய செயலைப் பற்றிக்) கேட்கக் கூடியவன். (21:23)
அல்லாஹ் கூறியதாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்; ‘எனது அடியார்களே! அநியாயம் செய்வதை எனக்கு நான் ஹராமாக்கியு (தடை செய்து) ள்ளேன், எனவே நீங்களும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யவேண்டாம்….. (முஸ்லிம்)
அடுத்து, ஒருவன் மரணத்தறுவாய் வரை தவறிழைத்துவிட்டு, மரணத்தின் விளிம்பில், உயிர் தொண்டைக்குழியை அடைந்த நிலையில் மன்னிப்பு கேட்டால் என்ன நிலை என்பது பற்றியே அடுத்த வசனத்தில் அல்லாஹ் எடுத்துரைக்கின்றான்.
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ ۚ حَتّٰۤى اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّىْ تُبْتُ الْـــٰٔنَ وَلَا الَّذِيْنَ يَمُوْتُوْنَ وَهُمْ كُفَّارٌ ؕ اُولٰٓٮِٕكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَ لِيْمًا
எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் சமீபித்தபோது “இதோ நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்” என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கும், எவர்கள் (நம்பிக்கை கொள்ளாது நிராகரித்து விட்டு) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகின்றார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையவர் களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (4:18)
பதினெட்டாவது வசனம் தரும் படிப்பினைகள்:
حَتّٰۤى اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّىْ تُبْتُ الْـــٰٔنَ
அவர்களுக்கு மரணம் சமீபித்தபோது “இதோ நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்” என்று கூறுகின்றார்களோ அவர்களுக்கும்
உண்மையில் மரணத்தருவாயில் இருக்கும் மனிதன் ‘அவன் நல்லவனா கெட்டவனா என்பதையும், சுவர்க்கவாதியா நரகவாதியா என்பதையும் கண்டுகொள்கின்றான், அதனால் அவனது அந்த நேர புலம்பல்கள் எடுக்கப்படுவதில்லை. இந்த விடயத்தை அல்லாஹ் பல இடங்களில் குறிப்பிட்டுக் கூறியுள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
فَلَمَّا رَاَوْا بَاْسَنَا قَالُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَحْدَهٗ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهٖ مُشْرِكِيْنَ. فَلَمْ يَكُ يَنْفَعُهُمْ اِيْمَانُهُمْ لَمَّا رَاَوْا بَاْسَنَا ؕ سُنَّتَ اللّٰهِ الَّتِىْ قَدْ خَلَتْ فِىْ عِبَادِهٖۚ وَخَسِرَ هُنَالِكَ الْكٰفِرُوْنَ
பிறகு நம்முடைய வேதனையைக் கண்ட சமயத்தில், அவர்கள் “அல்லாஹ்வை அவன் தனித்தவன் என நாங்கள் விசுவாசிக்கின்றோம். நாங்கள் இணைவைக்கக்கூடியவர்களாக இருந்தவற்றை நாங்கள் நிராகரித்தும் விட்டோம்” எனக் கூறினார்கள்.(84), ஆகவே, நம்முடைய வேதனையை அவர்கள் கண்டபோது, அவர்களின் விசுவாசம் அவர்களுக்குப் பயனளிப்பதாக இருக்கவில்லை, …… (40:85)
هَلْ يَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ تَاْتِيَهُمُ الْمَلٰۤٮِٕكَةُ اَوْ يَاْتِىَ رَبُّكَ اَوْ يَاْتِىَ بَعْضُ اٰيٰتِ رَبِّكَ ؕ يَوْمَ يَاْتِىْ بَعْضُ اٰيٰتِ رَبِّكَ لَا يَنْفَعُ نَفْسًا اِيْمَانُهَا لَمْ تَكُنْ اٰمَنَتْ مِنْ قَبْلُ اَوْ كَسَبَتْ فِىْۤ اِيْمَانِهَا خَيْرًا ؕ قُلِ انْتَظِرُوْۤا اِنَّا مُنْتَظِرُوْنَ
மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இரட்சகன் வருவதையோ, அல்லது உம்முடைய இரட்சகனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ தவிர (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம் இரட்சகனின் சில அத்தாட்சிகள் வரும் அந்நாளில் அதற்கு முன்னர் விசுவாசங்கொள்ளாதிருந்து அல்லது (விசுவாசங்கொண்டிருந்தும்) அதன் ஈமானில் எந்த ஒரு நன்மையையும் சம்பாதிக்காதிருந்த எந்த ஆத்மாவிற்கும் அது (அந்நாளில்) கொள்ளும் விசுவாசம் யாதொரு பலனையும் அளிக்காது, ஆகவே, (அவர்களிடம், “அப்பெரிய அத்தாட்சிகளை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நிச்சயமாக நாம் எதிர்பார்த்திருப்பவர்களாவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (6:158)
இதற்கு பிரவ்னின் நிகழ்வு சிறந்த உதாரணமாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَآءِيْلَ الْبَحْرَ فَاَتْبـَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْيًا وَّعَدْوًا ؕ حَتّٰۤى اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِىْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِيْلَ وَ اَنَا مِنَ الْمُسْلِمِيْنَ.91آٰلْــٰٔنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِيْنَ
இஸ்ராயீலின் மக்களை கடலைக் கடக்குமாறு நாம் செய்தோம், அப்போது பிர்அவ்னும், அவனுடைய படையினரும் (அளவு கடந்த) அநியாயமும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள்; முடிவாக (பிர்அவ்னாகிய) அவனை மூழ்குதல் வந்தடைந்தபோது. “இஸ்ராயீலின் மக்கள் யாரை விசுவாசங்கொண்டுள்ளார்களோ, அத்தகையவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயனில்லை என நான் விசுவாசம் கொண்டு விட்டேன்; இன்னும், நான் அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தோரில் (முஸ்லிம்களில் ஒருவனாக) இருக்கிறேன்” என்றும் கூறினான்.(90) (அதற்கு நாம் அவனிடம்) “இப்பொழுதா? (நீ விசுவாசங்கொள்கிறாய்? சற்று) முன்னர் நீ திட்டமாக மாறு செய்து கொண்டிருந்தாய், குழப்பவாதிகளில் ஒருவனாகவும் இருந்தாய்” (10:90,91)
وَلَا الَّذِيْنَ يَمُوْتُوْنَ وَهُمْ كُفَّار
எவர்கள் (நம்பிக்கை கொள்ளாது நிராகரித்து விட்டு) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகின்றார்களோ
அடுத்து இணைவைப்பிலும், குப்ரிலும் மரணிப்போருக்கு மொத்தமாகவே மன்னிப்பில்லை என்று இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்:
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰى بِهٖ ؕ اُولٰٓٮِٕكَ لَـهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ وَّمَا لَـهُمْ مِّــنْ نّٰصِــرِيْنَ
நிச்சயமாக, நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்தவர்களாகவே இறந்தும் விடுகின்றனரே, அத்தகையோர்-பொன்னால் இப்பூமி நிறைய உள்ளதை-அதனை(த்தன் குற்றம் மன்னிக்கப்படுவதற்கு) ஈடாக அவர் கொடுத்த போதிலும், (அது) அவர்களில் எவரிடமிருந்தும் அங்கீகரிக்கப்படவேமாட்டாது. அத்தகையோருக்கே துன்புறுத்தும் வேதனையுமுண்டு. அவர்களுக்கு உதவிசெய்வோரும் எவரும் இல்லை. (3:91)
அதனால் தான் அவர்களுக்காக மன்னிப்பும் தேடக்கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான்:
مَا كَانَ لِلنَّبِىِّ وَالَّذِيْنَ اٰمَنُوْاۤ اَنْ يَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِيْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِىْ قُرْبٰى مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِيْمِ
நபிக்கோ,-விசுவாசிகளுக்கோ இணைவைத்துக் கொண்டிருப்போருக்காக–அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய பந்துக்களாக இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்று இவர்களுக்கு தெளிவானதன் பின்னர் – மன்னிப்புக் கோருவது ஆகுமானதல்ல. (9:113)
وَمَا كَانَ اسْتِغْفَارُ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ اِلَّا عَنْ مَّوْعِدَةٍ وَّعَدَهَاۤ اِيَّاهُ ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهٗۤ اَنَّهٗ عَدُوٌّ لِّلّٰهِ تَبَرَّاَ مِنْهُ ؕ اِنَّ اِبْرٰهِيْمَ لَاَوَّاهٌ حَلِيْمٌ
மேலும், (நபி) இப்ராஹீம் தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியது ஒரு வாக்குறுதியே தவிர வேறில்லை, அதை அவருக்கு அவர் வாக்களித்திருந்தார், பின்னர் நிச்சயமாக (அவருடைய தந்தையாகிய) அவர் அல்லாஹ்வுக்கு விரோதி எனத் தெளிவாகிவிட்ட பொழுது அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார்,… (9:114)
وَنَادٰى نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِىْ مِنْ اَهْلِىْ وَاِنَّ وَعْدَكَ الْحَـقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِيْنَ . قَالَ يٰـنُوْحُ اِنَّهٗ لَـيْسَ مِنْ اَهْلِكَ ۚاِنَّهٗ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ۖ فَلَا تَسْـــٴَـــلْنِ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ ؕ اِنِّىْۤ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِيْنَ. قَالَ رَبِّ اِنِّىْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْــٴَــلَكَ مَا لَـيْسَ لِىْ بِهٖ عِلْمٌؕ وَاِلَّا تَغْفِرْ لِىْ وَتَرْحَمْنِىْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِيْنَ
மேலும், நூஹ் தன் இரட்சகனை அழைத்தார், அப்பொழுது அவர், “என் இரட்சகனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்திலுள்ளவன், நிச்சயமாக (நீ என் குடும்பத்தினரைக் காப்பாற்றுவதாக வாக்களித்த) உன்னுடைய வாக்குறுதியும் உண்மையானது, மேலும், தீர்ப்பளிப்போரில் நீ மிக மேலாகத் தீர்ப்பளிப்பவன்” என்று கூறினார். (45), (அதற்கு) “நூஹே! நிச்சயமாக அவன் உம் குடும்பத்தினரில் உள்ளவனல்லன், நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லா செயலுடையவன், ஆதலால், எதில் உமக்கு (உறுதியான) அறிவு இல்லையோ அதைப்பற்றி நீர் என்னிடம் கேட்க வேண்டாம், அறியாதோரில் உள்ளவராக நீர் ஆவதை விட்டும் நிச்சயமாக நான் உமக்கு நல்லுபதேசம் செய்கிறேன்” என்று கூறினான். (46), அ(தற்க)வர், “என் இரட்சகனே! (எதில் எனக்கு உறுதியான) அறிவு இல்லையோ அது பற்றி (இனி) உன்னிடம் கேட்பதை விட்டும், உன்னைக் கொண்டே நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன், மேலும், நீ என்னை மன்னித்து, எனக்கு நீ கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நான் நஷ்டமடைந்தோரில் ஆகிவிடுவேன்” என்று கூறினார். (11:45,46,47)
மரணத்தைப் போன்றே மறுமையின் அடையாளமான ‘சூரியன் மேற்கில் உதிப்பதும்‘ மன்னிப்பின் வாயிலை அடைத்துவிடும்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ‘யார் சூரியன் மேற்கில் உதிப்பதற்கு முன்னர் பாவமன்னிப்பு தேடுகின்றாரோ அவரை அல்லாஹ் மன்னிப்பான்.’ (முஸ்லிம்)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: சூரியன் மேற்கில் உதிக்கும் வரையில் தவ்பா தடைபடாது. (அபூதாவூத்:2479)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ‘சூரியன் மேற்கில் உதிக்கும் வரையில் கியாமத்நாள் நிகழாது, அப்படி அதனை மனிதர்கள் கண்டுவிட்டால் அந்த நிலையில் இருப்போர் நம்பிக்கை கொள்வார்கள், ஆனால் அதுதான் ‘ஏற்கனவே ஈமான் கொள்ளாத ஆத்மாவின் ஈமான் பயனளிக்காது’ என்ற அல் குர்ஆனின் 158 வது வசனத்தின் நேரமாகும்.’ (புஹாரி: 4635,4636, முஸ்லிம்)
اُولٰٓٮِٕكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَ لِيْمًا
இத்தகையவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்
அடுத்து அல்லாஹ்வின் மன்னிப்பை இழந்தவர்களுக்கு மறுமையில் தண்டனை நிச்சியம் என்பதை இந்த வசனத்தின் இறுதிப்பகுதி தொட்டுக்காட்டுகின்றது. அல்லாஹ் நம்மை காப்பானாக.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَحِلُّ لَـكُمْ اَنْ تَرِثُوا النِّسَآءَ كَرْهًا ؕ وَلَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَاۤ اٰتَيْتُمُوْهُنَّ اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ ۚ فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْــٴًـــا وَّيَجْعَلَ اللّٰهُ فِيْهِ خَيْرًا كَثِيْرًا
விசுவாசங்கொண்டோரே! பெண்களை (இறந்தவருடைய சொத்தாக மதித்து அவர்களைப்) பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல, இன்னும், பகிரங்கமாக யாதொரு மானக்கேடான காரியத்தை அவர்கள் செய்தாலன்றி (உங்கள்) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை (எடுத்துக்)கொண்டு போவதற்காக அவர்களை நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள், மேலும், அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள், அவர்களை நீங்கள் வெறுத்துவிடுவீர்களானால் – நீங்கள் ஒன்றை வெறுக்கக்கூடும், (அவ்வாறு வெறுக்கக்கூடிய) அதில் அல்லாஹ் அதிக நலவுகளை ஆக்கக்கூடும். (4:19)
பத்தொன்பதாவது வசனம் தரும் படிப்பினைகள்;
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَحِلُّ لَـكُمْ اَنْ تَرِثُوا النِّسَآءَ كَرْهًا
விசுவாசங்கொண்டோரே! பெண்களை (இறந்தவருடைய சொத்தாக மதித்து அவர்களைப்) பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல
ஜாஹிலிய்ய கால நடைமுறையிலிருந்த, கணவனை இழந்த பெண்களுக்கு நடந்த ஒரு கொடுமையை இந்த வசனம் தடுத்து, பெண்களின் உரிமையை காக்கின்றது.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘(அறியாமைக் காலத்தில்) ஒருவர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுகளே அவரின் மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களாக இருந்துவந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணமுடித்துக்கொள்ளவும் செய்தார்கள். விரும்பினால் (வேறெவருக்காவது) அவளை மணமுடித்துக் கொடுத்துவிடுவார்கள். விரும்பினால் மணமுடித்துக் கொடுக்காது அப்படியே விட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க) மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரை விட (இறந்த கணவனின் வாரிசுகளான) அவர்கள் தாம் அவளின் மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள். அப்போதுதான் இது தொடர்பாக ‘இறை நம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று. மேலும், அவர்கள் வெளிப்படையான இழிசெயல் எதையும் செய்தாலன்றி, அவர்களுக்கு நீங்கள் வழங்கிய (மஹ்ர் போன்ற)வற்றில் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்தாதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:19 வது) வசனம் அருளப்பட்டது. ( புகாரி: 4579,6948)
மேலும் அபூதாவூத் போன்ற ஹதீஸ் புத்தகங்களில் இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் கூற்றாக பதியப்பட்டுள்ளது.’ஜாஹிலிய்ய காலத்தில் ஒரு பெண்ணின் கனவன் மரணித்துவிட்டால் அந்த பெண்ணை அவனது குடும்பத்தார் அனந்தரமாக எடுத்துக்கொள்வர், அவள் மரணிக்கும்வரை, அல்லது அவள் பெற்ற திருமண நன்கொடையை அவருக்கு கொடுக்கும்வரை தடுத்துவைத்துக் கொள்வார், அதனைத் தடுத்தே அல்லாஹ் இந்த சட்டத்தை இறக்கினான். (அபூதாவூத்:2090,இப்னு அபீ ஹாதிம்)
முஜாஹித் போன்ற விரிவுரையாளர்கள் கூறினர்: ‘ஒரு ஆண் மரணித்துவிட்டால் அவரது மகனே அவரது மனைவிக்கு மிக தகுதியானவராக கருதப்பட்டார், அவர் அவளது மகனாக இல்லாத போது விரும்பினால் திருமணம் முடிப்பார், அல்லது அவர் விரும்பிய அவரது சகோதரன், அல்லது சகோதரனின் மகனுக்கு திருமணம் முடித்துவைப்பார். (இப்னு கஸீர்)
وَلَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَاۤ اٰتَيْتُمُوْهُنَّ
இன்னும் (உங்கள்) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை (எடுத்துக்)கொண்டு போவதற்காக அவர்களை நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள்,
அடுத்து இந்த வசனம் மூலம் இன்னொரு அநியாயமும் தடுக்கப்படுகின்றது, அதாவது தன் மனைவிக்கு அவளது திருமண நன்கொடையாக கொடுத்ததை முழுவதையோ, அல்லது அதில் ஒரு பகுதியையோ, அல்லது அவளது ஒரு உரிமையையோ பலவந்தமாக, அல்லது நிர்ப்பந்தித்து எடுப்பது. இதையும் அல்லாஹ் தடுத்துள்ளான்.
இப்னு அப்பாஸ் ரலி வழியாக அலிய்யுப்னு அபீ தல்ஹா அவர்கள் கூறினார்கள்: ஒரு ஆண் தனது மனைவியோடு வாழ விரும்பாத நிலையில், அவளுக்கு கொடுத்த திருமணக் கொடையை அபகரித்துக்கொள்ளும் நோக்கில் நிர்ப்பந்திப்பது. (அதுவே இந்த வசனத்தில் தடுக்கப்பட்டுள்ளது). இந்த கருத்தையே ளஹ்ஹாக், கதாதா, போன்ற இன்னும் பலரும் கூறியுள்ளார்கள். (இப்னு கஸீர்)
اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ
பகிரங்கமாக யாதொரு மானக்கேடான காரியத்தை அவர்கள் செய்தாலன்றி
அடுத்து அந்தப் பெண் விபச்சாரம் என்ற குற்றத்தில் ஈடுபட்டுவிட்டாலே கணவனுக்கு மணக்கொடையை திருப்பி எடுக்கலாம், அதனை மீட்டெடுக்க நிர்ப்பந்திக்கலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளான்.
இந்த சட்டம் ஸூரதுல் பகராவில் சொல்லப்பட்டது போன்றதாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
وَلَا يَحِلُّ لَـکُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّآ اٰتَيْتُمُوْهُنَّ شَيْئًا اِلَّاۤ اَنْ يَّخَافَآ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِؕ فَاِنْ خِفْتُمْ اَ لَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِۙ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيْمَا افْتَدَتْ بِهٖ
இன்னும், நீங்கள் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. அல்லாஹ், ஏற்படுத்திய வரம்புகளை நிலைநிறுத்த முடியாதென்று அவர்கள் இருவரும் பயந்தாலே தவிர, ஆகவே அவர்கள் இருவரும் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை நிலைநிறுத்த மாட்டார்கள் என (தீர்ப்பு) வழங்குவோராகிய நீங்கள் பயந்தால் அவன் எதை ஈடாகக் கொடுக்கின்றானோ அதில் அவ்விருவர் மீதும் குற்றமில்லை. (2:229)
இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள (தெளிவான மானக் கேடான காரியம்) என்றால் ‘அது விபச்சாரம்தான்’ என்று இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ், ஸஈதுப்னுல் முஸய்யப், ஹஸனுல் பஸரீ போன்ற இன்னும் ஏராளமான விரிவுரையாளர்களும் கூறியுள்ளனர். மேலும், அதனைக் கொண்டு ‘கட்டுப்படாமை, மாறுசெய்தல்’ என்பதும் அடங்கும் என்று இப்னு அப்பாஸ் ,இக்ரிமா, ளஹ்ஹாக் போன்றோர் கூறியுள்ளனர், இமாம் இப்னு ஜரீர் அவர்கள் அது ‘விபச்சாரம்,கட்டுப்படாமை, மாறுசெய்தல், கீழ்த்தரமான பேச்சு, அது அல்லாத அனைத்தையும் சேர்த்துக்குக் கொள்ளும்’ என்று கூறியுள்ளார்கள். என்றால் இவைபோன்ற காரணங்களுக்காக ஒருவன் தன் மனைவியை மணக்கொடையை திரும்ப பெற்றுக்கொள்ளும் நோக்கில் நிர்ப்பந்திக்கலாம். என்று இப்னு கஸீர் இமாமவர்கள் கூறிவிட்டு, இது சிறந்த கருத்து என்று கூறுகின்றார்கள், (இப்னு கஸீர்)
அப்துர் ரஹ்மான் பின் ஸைத் அவர்கள் கூறினார்கள்: (அல் அள்ல் மனைவியை தடுத்துக் கொள்ளல்) என்பது மக்காவில் குறைஷிகளிடம் காணப்பட்டது, அதாவது; ஒரு ஆண் நல்லதோர் பொண்ணை திருமணம் முடிக்க, அவள் அவருடன் இணங்கி நடக்காத போது, அவரது அனுமதியின்றி மறுமணம் செய்ய முடியாது என்ற நிபந்தனையுடன் அவளைப் பிரிவார், அதற்காக சாட்சிகளை நிறுத்தி அவளுக்கு எதிராக எழுதிக்கொள்வார், அந்தப் பெண்ணை யாராவது மறுமணம் பேசிவந்த நிலையில், அவள் அவனுக்கு உள்ளதை கொடுத்து திருப்தி அடையவைத்தால் திருமணத்திற்கு அனுமதி கொடுப்பான், இல்லையென்றால் அவளை தடுத்துக்கொள்வான், இதுவே அந்த வசனமாகும். (இப்னு கஸீர்)
وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ
மேலும், அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள்,
அடுத்து மனைவியர்களோடு நல்லமுறையில் நடக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். பொதுவாகவே பெண்கள் நல்லமுறையில் நடக்கவேண்டும் என்பதைப் போன்றே ஆண்களும் நல்லமுறையில் நடக்கவேண்டும் என்பது இஸ்லாமிய வழிகாட்டல். அல்லாஹ் கூறுகின்றான்:
وَلَهُنَّ مِثْلُ الَّذِىْ عَلَيْهِنَّ بِالْمَعْرُوْفِ
…மனைவியரான அவர்களின் மீதுள்ள கடமைகள் போன்று அவர்களுக்கு முறைப்படி உரிமைகளும் உண்டு…. (2:228)
திருமண வாழ்வுக்கு நபிகளாரின் சில வழிகாட்டல்கள்:
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் சிறந்தவர், உங்களில் தன் குடும்பத்திடம் சிறந்தவர்களே, நானோ எனது குடும்பத்திற்கு சிறந்தவனாக இருக்கின்றேன். (அஹ்மத்:7402,திர்மிதி:3895)
ஹதீஸ் விமர்சனம்:
இந்த நபிமொழி ஆயிஷா ரலி வழியாக ‘ ‘உங்களில் சிறந்தவர் தன் குடும்பத்தவரிடம் சிறந்தவரே, நான் எனது குடும்பத்தவரிடம் சிறந்தவனே’ என்று திர்மிதீ: 3895, இப்னு ஹிப்பான்:4177) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ‘முஹம்மத் பின் யூஸுப் என்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் நம்பகமானவராக இருந்தாலும், ஸுப்யானுஸ் ஸவ்ரி அவர்களிடமிருந்து அறிவித்ததில் தவறிவிட்டிருக்கிறார்’என்று விமர்சிக்கப்பட்டிருப்பதோடு, இது அவர் மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது, அதனால் ஹில்யதுல் அவ்லியாவில் இமாவார்கள் ‘இந்த அறிவிப்பில் ஸுப்யானைத் தொட்டு அறிவிப்பது அவர் தனிமைப்பட்டுள்ளார்’ என்று குறித்துக் காட்டியுள்ளார்கள். மேலும் ஹிஷாம் அவர்களிடமிருந்து ‘முஹம்மத் பின் அப்திர் ரஹ்மானுத் துபாவீ’ என்பவர் வழியாக ‘தஹதீபுல் ஆசாரில்:(678) பதியப்பட்டுள்ளது, அவரும் ‘முன்கருள் ஹதீஸ், சில சந்தர்ப்பங்களில் தவறுவிடுவார்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். மேலும் ‘ஸாலிஹ் பின் மூஸத்தல்ஹீ’ என்பவர் ஹிஷாம் வழியாக அறிவித்துள்ளார், தாரீகு அஸ்பிஹான். அவர் ‘மத்ரூக், வாஹின்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். அடுத்து ஹிஷாம் அவர்களைத் தொட்டு அறிவிக்கும் பலமானவர்கள் யாரும் இந்த பகுதியை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (இப்னு ஹிப்பான்:3018,3019, அபூதாவூத்:4899, முஸ்னதுத் தயாலீஸீ:1549) அதேநேரம் அல்பானி இமாவார்களும் ஏனையோரும் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.
அபூஹுரைரா வழியாக திர்மிதி 1162,இப்னு ஹிப்பான்:4176, அஹ்மத்:7402 பதியப்பட்டுள்ளது, இது ‘முஹம்மத் பின் அம்ர் என்பவர் வழியாகவே பதியப்பட்டுள்ளது, இவர் ‘ஸதூகுன் லஹு அவ்ஹாமுன், என்றும், அபூ ஸலமாவைத் தொட்டு பிரட்டி பிரட்டி அறிவிப்பவர், மக்கள் அவரது செய்தியை தவிர்த்துள்ளனர்,த்வறுவிடுபவர்’ போன்ற வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.(தஹ்தீபுல் கமால்) முஃஜமுல்அவ்ஸதில் (4420) ஹுஸைன் என்பவர் வழியாக வந்துள்ளது அவரைத் தொட்டு அப்பாதுப்னுல் அவ்வாம் அறிவிக்க, அவ்விருவரிடமிருந்து அப்துர் ரஹீம் பின் முஹம்மதிஸ் ஸுகூநீ என்பவர் மட்டுமே அறிவித்துள்ளதாக இமாமவர்கள் பதிந்துள்ளார்கள். அறிஞர் அல்பானி அவர்கள் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.
இப்னு அப்பாஸ் ரலி வழியாக ‘உங்களில் சிறந்தவர் தன் குடும்பத்தவரிடம் சிறந்தவரே, நான் எனது குடும்பத்தவரிடம் சிறந்தவனே’ என்று (இப்னு மாஜா:1977, ஹாகிம்:7327, இப்னு ஹிப்பான்:4186) பதியப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர், உமாரதுப்னு ஸவ்பான், மஜ்ஹூலுல் ஹால், மஸ்தூர்’ என்று விமர்சிக்கப்பட்டிருப்பதோடு, அவரிடமிருந்து அறிவிக்கும் ஜஃபர் பின் யஹ்யா பின் ஸவ்பான்’ என்பவரும் ‘மஜ்ஹூல், மஸ்தூர்’ என்று விமர்சிக்கப்பட்டவரே. அறிஞர் அல்பானி அவர்கள் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: அபிசீனியர்கள் தம் ஈடடிகளால் விளையாட்டிக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் என்னை மறைத்தபடி இருக்க, நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக திரும்பிச் செல்லும்வரை நான் பார்த்துக்கொண்டேயிருந்தேன். வயது குறைந்த இளம்பெண் எவ்வளவு நேரம் கேளிக்கைகளைக் கேட்டுக் கொண்டு இருப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். (புகாரி: 5190، முஸ்லிம்)
அஸ்வத் அவர்கள் கூறினார்கள்: : நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் என்ன செய்வார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்குத் தம் குடும்பத்தினருக்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள்; தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காக வெளியே செல்வார்கள்’ என ஆயிஷா(ரலி) கூறினார்கள். (புகாரி:676,5363)
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரயாணம் செய்ய நாடினால் தம்மனைவிமார்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். எவரது பெயர் வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்படுவார்கள். தம் மனைவிமார்களில் ஒவ்வொருவருக்கும் தம் பகலையும் இரவையும் பங்கு வைத்து வந்தார்கள். ஆனால், சவ்தா பின்து ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தம் பங்குக்குரிய நாளை, நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டிருந்தார்கள். அதன் வாயிலாக, அல்லாஹ்வின் தூதருடைய திருப்தியை அடைவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள். (புகாரி: 2593,2688,)
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (ஒரு முறை) என்னுடைய பெயரும் ஹப்ஸாவின் பெயரும் வந்தது. இரவு நேரப் பயணத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே வருவார்கள். (ஒரு நாள்) ஹப்ஸா (என்னிடம்), ‘இந்த இரவு நீங்கள் என்னுடைய ஒட்டகத்தில் பயணம் செய்து பாருங்கள்; நான் உங்களின் ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்” என்றுகூறினார்கள். நான், ‘சரி” என்று கூறினேன். எனவே, (நாங்களிருவரும் ஒருவர் மற்றவரின் ஒட்டகத்தில்) ஏறிப் பயணிக்கலானோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். (அதில் நானிருப்பதாக நினைத்தார்கள். ஆனால்,) அதில் ஹப்ஸா இருந்தார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் ‘சலாம்’ (முகமன்) கூறினார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்கள் ஓர் இடத்தில் இறங்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களை நான் தேடினேன். அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் என்னுடைய இரண்டு கால்களையும் ‘இத்கிர்’ புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, ‘இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என் மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்” என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்துகொள்ளத்தான் முடிந்ததே தவிர,) நபி(ஸல்) அவர்களை (ஹப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால்ஒன்றும் சொல்ல முடியவில்லை. (புகாரி: 5211,முஸ்லிம்)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் , ‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது, ‘முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், ‘இப்ராஹீம்(அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று கூறினார்கள். நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதுன்று)” என்று கூறினேன். (புகாரி: 5228, முஸ்லிம்)
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் கூறினார்கள்: (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் வேறு ஒருவர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை கொடுத்தனுப்பினார்கள். (அப்போது) நபி(ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்தத் துணைவியார் அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), ‘உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்” என்று கூறினார்கள். பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக் காரரிடமிருந்து மற்றொரு தட்டைக் கொண்டுவரச் செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டைக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள்.(புகாரி: 5225)
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, நானும் ஹப்ஸாவும் எங்களுக்குள் ‘நபி(ஸல்) அவர்கள் நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்’ என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். எங்களில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் தேன் அருந்தினேன். இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்’ என்று கூறினார்கள். எனவே, ‘நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?’ என்று தொடங்கி ‘நீங்கள் இருவரும் – இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)’ என முடியும் (திருக்குர்ஆன் 66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான். (இந்த 66:4 வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) ‘நீங்கள் இருவரும்’ என்பது ஆயிஷா(ரலி) அவர்களையும், ஹப்ஸா(ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (திருக்குர்ஆன் 66:3 வது வசனத்தில்) ‘நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்’ என்பது ‘இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக இனி நான் அதனை அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)’ என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டதையே குறிக்கிறது. (புகாரி: 5267, முஸ்லிம்)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வைப்பார்கள்.(முஸ்லிம்: 505)
ஆயிஷா ரலி அவர்கள் கூறினார்கள்: நான் நபிகளாரோடு ஒரு பயணத்தில் இருந்தபோது, நபிகளாரோடு ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டு, அதில் நான் வெற்றிபெற்றேன், பிறகு ஒரு சந்தர்ப்பதில் நான் கொழுத்திருந்த நிலையில் அவர்களோடு போட்டியட்டேன் நபிகளார் வெற்றிபெற்றார்கள், பிறகு “இது அந்த வெற்றிக்கு ஈடானது” என்று கூறினார்கள். (அஹ்மத்:26277,அபூதாவுத்:1979)
فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْــٴًـــا وَّيَجْعَلَ اللّٰهُ فِيْهِ خَيْرًا كَثِيْرًا
அவர்களை நீங்கள் வெறுத்துவிடுவீர்களானால் – நீங்கள் ஒன்றை வெறுக்கக்கூடும், (அவ்வாறு வெறுக்கக்கூடிய) அதில் அல்லாஹ் அதிக நலவுகளை ஆக்கக்கூடும்
அடுத்து, ஒரு மனிதன் குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் சில தவறுகளைக் கண்டு அதற்காக அந்த மனைவியை வெறுக்கலாம், ஆனாலும் அவளோடு பொறுமையாக வாழலாம், அப்படி வாழ்வதில் அல்லாஹ் சில நலவுகளை ஏற்படுத்தலாம். எனவே குடும்ப வாழ்வில் பொறுமை அவசியம், அதேபோன்று அல்லாஹ்விடம் நல்ல முடிவுகளைக் கேட்பதும், மனைவியின் மாற்றத்திற்காக அல்லாஹ்வை வேண்டுவதும் மிக அவசியமாகும். ஏனெனில் அவனே அனைத்தையும் அறிந்தவனும், மனிதனுக்கு நலவு நாடுபவனாகவும் இருக்கின்றான்.
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: (அதிக நலவுகள் என்பது) மனைவிக்கு ஆண் இறக்கம் காட்டுவதும், அதன் மூலம் பிள்ளையை பெற்றெடுப்பதும், அந்த குழந்தை மூலம் அதிக நலவுகள் கிடைப்பதுமாகும். (இப்னு கஸீர்)
உண்மையில் குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளை பெற்றெடுப்பது முரண்பாடுகளை நீக்கி, பிள்ளைகளுக்காகவாவது சந்தோஷமாக வாழ்கின்ற நிலை ஏற்படுவதை தாரளமாக பார்க்கலாம்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ஒரு முஃமின் ஒரு முஃமினான பெண்ணை (அவளிடம் இருக்கும் விரும்பாத செயலுக்காக) வெறுக்க வேண்டாம், அவளிடம் ஒரு பன்பை வெறுத்தால் வேறொன்றை விரும்புவான். (முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்களின் விஷயத்தில் அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.(புகாரி: 3331, முஸ்லிம்)
உண்மையில் குடும்ப வாழ்க்கையில் ஒரு தவரைக் கண்டவுடன் அவசரமாக முடிவெடுக்கும் நிலை வரக்கூடாது, அது குடும்பக் கட்டமைப்புக்கு நல்லதல்ல, மாறாக ஒவ்வொருவரிடமும் நல்ல பண்புகளோடு மனித இயல்புகளுக்கு அமைய சில ஒத்துப்போகாத மோசமான பண்புகள் இருக்கலாம், குறைகளை மாத்திரம் பார்க்காமல், பேசாமல், நிறைகளைப் பார்க்கின்ற பழக்கம் வரவேண்டும், அதுவே குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் பல நலவுகளை கொண்டுவரும், இதுவே அல்லாஹ்வின் வழிகாட்டல்.
அடுத்து, எவ்வளவு விட்டுக்கொடுத்தாலும், சமாளித்தாலும் வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் இல்லையென்றால், பிரிந்துசெல்வதுதான் தீர்வு என்றால் இஸ்லாம் காட்டிய வரம்புகளை பேணி பிரிந்துசெல்வதற்கும் இஸ்லாத்தில் அனுமதியிருக்கின்றது. அப்படி ஒரு பிரிவு ஏற்பட்டால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே அடுத்த வசனம் சொல்லித்தரும் பாடம்.
وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْئًا ؕ اَ تَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا
மேலும் ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவள்) இடத்தில் மற்றொரு மனைவியை மாற்றி (மணந்து)க்கொள்ள நீங்கள் நாடினால் (நீக்கிவிட விரும்பும்) அவர்களில் ஒருத்திக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலைக் கொடுத்திருந்தபோதிலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள், அபாண்டமாகவும், பகிரங்கப் பாவமாகவும் அதை நீங்கள் எடுக்கிறீர்களா? (4:20)
இந்த வசனம் தரும் படிப்பினைகள்:
وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْئًا
மேலும் ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவள்) இடத்தில் மற்றொரு மனைவியை மாற்றி (மணந்து)க்கொள்ள நீங்கள் நாடினால் (நீக்கிவிட விரும்பும்) அவர்களில் ஒருத்திக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலைக் கொடுத்திருந்தபோதிலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்
மணக் கொடையாக கொடுத்ததை கணவன் புரத்தால் தலாக் நிகழும் போது திருப்பி எடுக்கக்கூடாது. அது எவ்வளவு பெறுமதியானதாக இருந்தாலும் சரியே. அப்படி எடுப்பது பெரும் பாவமாகும்.
அடுத்து பெண்களுக்கு கொடுக்கும் திருமணக் கொடை எவ்வளவு பெறுமதிவாய்ந்ததாகவும் இருக்கலாம். அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித்தராத நிலையில் அதில் யாருக்கும் அளவு தீர்மானிக்க முடியாது. அது மணமகளின் விருப்பத்திற்கும், மணமகனின் வசதிக்கும் ஏற்ப தீர்மானிக்கப்படவேண்டும்.
உமர் ரலி அவர்கள் மஹரில் கட்டுப்பாடு விதித்தார்களா?
அபுல் அஜ்பாஃ அவர்கள் கூறினார்கள்: உமர் ரலி அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள், அப்போது; ‘அறிந்து கொள்ளுங்கள் பெண்களின் கொடையில் அதிகப்படுத்தி எல்லைமீறாதீர்கள், ஏனெனில் அது உலகில் மதிப்பானதாகவும், அல்லாஹ்விடம் இறையச்சத்திற்குரியதாகவும் இருந்தால் உங்களில் மிகத் தகுதியானவர்களாக நபியவர்கள் இருந்திருப்பார்கள். அவர்களோ தனது மனைவிக்கோ, அல்லது பெண் பிள்ளைகளுக்கோ பன்னிரண்டு ஊகியாக்களுக்கு அதிகமாக கொடுக்கவில்லை. (அஹ்மத்:285, திர்மிதி:1114, அபூதாவூத்:2106) அறிவிப்பாளர் தொடர் பலமானது)
திர்மிதியின் அறிவிப்பின் தொடரில்; ”அறிஞர்களிடம் ஊகிய்யா என்பது, 40 திர்ஹமாகும், 12 ஊகிய்யா என்பது 480 திர்ஹமாகும்”.
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியருக்குக்) கொடுத்த மணக்கொடை (மஹ்ர்) எவ்வளவு?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்கு வழங்கிய மணக்கொடை, பன்னிரண்டு ஊக்கியாவும் ஒரு நஷ்ஷுமாகும்” என்று கூறிவிட்டு, “நஷ்ஷு என்றால் என்னவென்று தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். அவர்கள், “அரை ஊக்கியாவாகும்; (ஆகமொத்தம்) அது ஐநூறு திர்ஹங்கள் ஆகும். இதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்கு வழங்கிய மணக்கொடையாகும்” என்று சொன்னார்கள்.(முஸ்லிம்: 2787)
அபூ யஃலாவின் அறிவிப்பில்; மனிதர்களே! பெண்களின் மணக்கொடையில் ஏன் இவ்வளவு அதிகப்படுத்துகின்றீர்கள், நபிகளாரும், அவர்களது தோழர்களுக்கும் மத்தியில் நானூறு திர்ஹங்களுக்கும் அதற்கு குறைவாகவுமே இருந்தது. அதிகப்படுத்துவதில் நலவு இருந்திருந்தால் அவர்களே அதில் முந்தியிருப்பார்கள், அதை விட அதிகப்படுத்தியதாக நான் அறிய மாட்டேன், என்று கூறிவிட்டு, மிம்பரில் இருந்து இறங்கியதும், குறைஷிகளில் ஒரு பெண் குறுக்கிட்டு, ‘முஃமின்களின் அமீரே! மக்கள் பெண்களின் மணக்கொடையில் நானூறு திர்கத்தைவிட அதிகப்படுத்துவதை தடுத்தீர்கள் தானே?’ என்று கேற்க, ஆம் என்று அவர்கள் கூற, ‘அல்லாஹ் அல்குர்ஆனில் இறக்கியதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று கேட்க, அது எது என்று உமர் ரலி அவர்கள் கேட்க, ‘அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களில் ஒருத்திக்கு நீங்கள் ஒரு (பொற்) குவியலைக் கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்,… 4:20’ இப்படி அருத்தம் கொண்ட 4:20 வசனத்தை ஓதிக்காட்டவே, ‘இறைவா மன்னித்துவிடு, எல்லா மனிதர்களும் உமரைவிட அறிவாளிகள்’ என்று கூறிவிட்டு, மீண்டும் மிம்பரில் ஏறி, ‘பெண்களின் மணக்கொடையில் அதிகரிப்பதை நான் தடுத்தேன், ஆனால் விரும்பியவர் தன் பொருளாதாரத்தில் இருந்து விரும்பியதைக் கொடுக்கட்டும்,’ என்று கூறினார்கள். அபூ யஃலா இமாமவர்கள் கூறினார்கள்; ‘விரும்பியர் செய்யட்டும்’ என்று கூறியதாக நான் நினைக்கின்றேன். (இதன் அறிவிப்பாளர் தொடர் பலமானது என்று இப்னு கஸீர் இமாமவர்கள் கூறியிருந்தாலும், அறிஞர் அல்பானி அவர்கள்: ‘இது பலவீனம் என்பதை தெளிவுபடுத்தி, அது ஸுனன்களில் வந்திருக்கும் செய்திகளுக்கு முரணானது‘ என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.) (இர்வாஉல் கலீல்) அல்லாஹு அஃலம்.
மேலும் இப்னுல் முன்ஸிர் அவர்கள் பதிவு செய்துள்ள ‘உமர் ரலி அவர்கள் ‘நீங்கள் மணக்கொடையில் அதிகரிப்பு செய்யாதீர்கள் என்று கூற, ஒரு பெண்மணி ‘உமரே உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாது, அல்லாஹ் அதற்கு அனுமதியளித்துள்ளான், என்று கூற, உமர் ரலி அவர்கள்; ‘ஒரு பெண் உமரோடு வாதாடி வெற்றிபெற்றார்’ என்று வரும் செய்தியும் பலவீனமானது, அதில் அபூ அப்திர் ரஹ்மான் என்பவர் உமரவர்களிடம் ஏதும் செவிமடுத்ததில்லை, எனவே முன்கதிஃ, மேலும் அதில் வரும் கைஸுப்னு ரபீஃ என்பவர் மனன சக்தி குறைந்தவர் என்று விமர்சிக்கப்பட்டவர்’ என்று இமாம் அல்பானி அவர்கள் கூறியுள்ளார்கள். (இர்வாஉல் கலீல்)
மேலும் ‘ஒரு பெண் சரிக்கு நேர்பட்டார், உமர் தவறிழைத்துவிட்டார்’ என்று ஒரு அறிவிப்பில் வருகின்றது, அது முன்கதிஆன செய்தி என இப்னு கஸீர் இமாமவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
وَ كَيْفَ تَاْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰى بَعْضُكُمْ اِلٰى بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّيْثَاقًا غَلِيْظًا
மேலும், உங்களில் சிலர் மற்ற சிலருடன் திட்டமாக (சேர்ந்து) கலந்து விட்டீர்கள், உங்களிடமிருந்து உறுதியான வாக்குறுதியை (அப்பெண்களாகிய) அவர்கள் எடுத்தும் இருக்கிறார்கள், (இந்நிலையில்) அதனை நீங்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வீர்கள்? (4:21)
இந்த வசனம் தரும் படிப்பினைகள்:
இந்த வசனத்தில் கொடுத்த மணக்கொடையை திருப்பி எடுக்கக்கூடாது என்று கூறுவதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளான். அதுதான், ‘கணவன் மனைவியை அடைவது, மனைவி கணவனை அடைவது.’ என்பதாகும்.’ இப்னு அப்பாஸ் ரலி, முஜாஹித், சுத்தீ இன்னும் பலரும், இதனைக் கொண்டு ‘உடலுறவு கொள்வதே நாடப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளனர். (இப்னு கஸீர்)
இதனை உறுதிப்படுத்த பின்வரும் புகாரியின் அறிவிப்பை நோக்கலாம்.
ஸஈத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்: நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சாப அழைப்புப் (லிஆன்) செய்துகொள்ளும் தம்பதியரைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: சாப அழைப்புப் (லிஆன்) செய்துகொண்ட தம்பதியரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர். (இனி) அவளின் மீது (கணவராகிய) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என்று கூறினார்கள். உடனே அவர், ‘இறைத்தூதர் அவர்களே! (நான் இவளுக்கு மஹ்ராக அளித்த) என்னுடைய பொருள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உமக்கு (அந்தப்) பொருள் கிடைக்காது. நீர் அவள் விஷயத்தில் உண்மையாளராய் இருந்தால், அவளுடைய கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். அவளின் மீது நீர் பொய் சொல்லியிருந்தால் அப்பொருள் உம்மைவிட்டு வெகு தூரத்தில் உள்ளது’ என்று கூறினார்கள். (புகாரி: 5312, முஸ்லிம்)
எனவே மஹர் எனும் மணக்கொடை என்பது பெண்களிடம் உள்ள கற்புக்காகவே கொடுக்கப்படுகின்றது.
அடுத்து மஹர் எனும் மணக்கொடை மீட்டெடுக்க முடியாதது என்பதற்கு அல்லாஹ் சொல்லித்தரும் இன்னொரு காரணி ‘அந்தப் பெண்கள் ஆண்களிடம் உறுதியான ஒரு உடன்படிக்கை செய்துள்ளார்கள்‘ என்பதுமாகும்.
இந்த வசனத்தில் ‘உறுதியான உடன்படிக்கை, மீஸாகன் கலீலா’ என்பது திருமண ஒப்பந்தத்தைக் குறிக்கும் என இப்னு அப்பாஸ் ரலி, முஜாஹித், சையத் பின் ஜுபைர் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர்.
இமாம் ரபீஃ பின் அனஸ் அவர்கள் கூறினார்கள்: ‘மீஸாகன் கலீலா’ என்பது ‘நீங்கள் அவர்களை அல்லாஹ்வின் பொறுப்பைக் கொண்டே கரம்பிடித்தீர்கள், அவர்களது கற்பை அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டே அனுமதியாக்கிக் கொண்டீர்கள்’ என்ற கூற்றாகும், ‘அல்லாஹ்வின் வார்த்தை என்பது அதுவே திருமண ஒப்பந்தத்தில் சொல்லப்படும் ஷஹாதத் ஆகும். (இப்னு கஸீர்)
நபி ஸல் அவர்கள் ஹஜ்ஜதுல் வதாவில் ஆற்றிய உரையில் பின்வருமாறு கூறினார்கள்: .. பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்) பிடித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள். அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால், நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் விரிப்பில் (அதாவது உங்களது வீட்டில்) அவர்கள் அனுமதிக்காமல் இருப்பதாகும். அவ்வாறு அவர்கள் அனுமதித்தால் காயம் ஏற்படாதவகையில் அவர்களை நீங்கள் அடிக்கலாம். உங்களிடம் அவர்களுக்குள்ள உரிமை யாதெனில்,முறையான உணவும் உடையும் அவர்களுக்கு நீங்கள் அளிப்பதாகும்.. (முஸ்லிம்: 2334)
குறிப்பு: ஒரு ஆண், மஹர் குறிப்பிடப்பட்ட நிலையில் திருமண ஒப்பந்தம் நடந்த பின்னர் தனித்திருப்பதற்கு முன்னரோ, அல்லது இல்லறத்தில் ஈடுபட முன்னரோ தலாக் சொன்னால் குறிப்பிட்ட மஹ்ரில் அரைவாசியே கணவனுக்கு சொந்தமாகும், அரைவாசி மனைவிக்குரியதே. அதேநேரம் மனைவியோ பொறுப்புதாரியோ விரும்பினால் எதனையும் எடுக்காமல் விட்டுக்கொடுக்கலாம். இல்லறத்தில் ஈடுபட்டாலோ, அல்லது தனித்திருந்தாலோ மஹர் முழுவதும் மனைவிக்கே சொந்தமாகும்.
அதேநேரம் மஹர் குறிப்பிடப்படவில்லையெனில் மனைவிக்கு ‘முத்அத்’ எனப்படும் கணவனின் வசதிக்கு உற்பட்ட செலவுத் தொகை, அல்லது ஆடை மட்டுமே உரித்தாகும். (அல்லாஹு அஃலம்)
அல்லாஹ் கூறுகின்றான்:
وَاِنْ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيْضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ اِلَّاۤ اَنْ يَّعْفُوْنَ اَوْ يَعْفُوَا الَّذِىْ بِيَدِهٖ عُقْدَةُ النِّكَاحِ ؕ وَاَنْ تَعْفُوْٓا اَقْرَبُ لِلتَّقْوٰىؕ وَ لَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ
மேலும், (திருமணம் செய்த பெண்களான) அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் அவர்களுடைய ‘மஹரை’ நீங்கள் குறிப்பிட்டு நிர்ணயம் செய்திருக்க நீங்கள் அவர்களை விவரகரத்து செய்து விட்டால், (அப்பெண்ணாகிய) அவர்கள் (விட்டுக் கொடுத்து) மன்னித்து விட்டாலோ, அல்லது யாருடைய கையில் திருமண பந்தமிருக்கின்றதோ, அவர் (விட்டுக்கொடுத்து) மன்னித்துவிட்டாலோ அன்றி, நீங்கள் நிர்ணயம் செய்ததில் பாதி (அப்பெண்களுக்கு) உண்டு. மேலும், நீங்கள் மன்னித்து விடுவது (விட்டுக் கொடுப்பது) பயபக்திக்கு மிக நெருங்கியதாகும். ஆகவே, உங்களுக்கிடையில் (உபகாரம் செய்து கொள்வதில்) தயாள குணத்துடன் நடப்பதை மறந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்க்கக்கூடியவன். (2:237)
لَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ طَلَّقْتُمُ النِّسَآءَ مَا لَمْ تَمَسُّوْهُنَّ اَوْ تَفْرِضُوْا لَهُنَّ فَرِيْضَةً ۖۚ وَّمَتِّعُوْهُنَّ ۚ عَلَى الْمُوْسِعِ قَدَرُهٗ وَ عَلَى الْمُقْتِرِ قَدَرُهٗ ۚ مَتَاعًا ۢ بِالْمَعْرُوْفِۚ حَقًّا عَلَى الْمُحْسِنِيْنَ
(திருமணம் செய்த) பெண்களை நீங்கள் தீண்டாமலும், அல்லது (திருமணத்தின்போது) அவர்களின் மஹரை நிர்ணயம் செய்யாமலும் (அவர்களை) நீங்கள் விவாகரத்துச் செய்துவிட்டால், உங்கள்மீது (அது) குற்றமில்லை. இன்னும், அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடையச் செய்யுங்கள். வசதியுள்ளவர்களின்மீது அவருக்குரிய அளவும், வசதியற்றவர்மீது அவருக்குரிய அளவும், நியாயமான முறையில் அப்பெண்களுக்குக் கொடுத்துப் பயனடையச் செய்ய வேண்டும். இது (நல்லோர்) மீது கடமையாகும். (2:236)
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنٰتِ ثُمَّ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ فَمَا لَـكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّوْنَهَا ۚ فَمَتِّعُوْهُنَّ وَسَرِّحُوْهُنَّ سَرَاحًا جَمِيْلًا
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் விசுவாசங்கொண்ட பெண்களைத் திருமணம் செய்து, பிறகு அவர்களை நீங்கள் தீண்டுவதற்கு முன் தலாக் கூறி விட்டால், (மற்ற விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்காக) நீங்கள் எதைக் கணக்கிடுவீர்களோ அத்தகைய எந்த “இத்தா”வும் அவர்களின் மீது (நிர்ணயிக்க) உங்களுக்கு (உரிமை) இல்லை. எனவே, நீங்கள் அவர்களுக்கு ஏதும் (பொருள்) கொடுத்து அழகான முறையில் (விவாக பந்தத்திலிருந்து) அவர்களை விடுவித்தும் விடுங்கள். (33:49)
இப்படி தலாக் சொல்லப்பட்டவர்களுக்கு ஒரு உதவித்தொகை கொடுப்பது என்பது ‘தலாக்’ என்ற சோதனைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஒரு நலவாக அமைந்து விடும், இப்படி சோதனைக்குள்ளான அவர்களை ஒரு தொகை கொடுப்பதன் மூலம் மகிழ்விப்பது ஒரு நல்ல குணமாகவே இருக்கின்றது. (அல்லாஹு அஃலம்)
وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَآؤُكُمْ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدْ سَلَفَ ؕ اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًا ؕ وَسَآءَ سَبِيْلًا
நிச்சயமாக, முன்னர் (அறியாமைக்காலத்தில்) நடந்துவிட்டதைத் தவிர உங்கள் தந்தைகள் மணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும், நீங்கள் மணம் செய்து கொள்ளாதீர்கள், நிச்சயமாக இது மானக்கேடானதாகவும் (அல்லாஹ்வின்) கோபத்திற்குரியதாகவும் இருக்கிறது, இன்னும் வழியால் அதுமிகக் கெட்டதுமாகும். (4:22)
இந்த வசனம் தரும் படிப்பினைகள்:
وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَآؤُكُمْ مِّنَ النِّسَآءِ
உங்கள் தந்தைகள் மணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும், நீங்கள் மணம் செய்து கொள்ளாதீர்கள்
தந்தையின் மனைவியை மகனுக்கு திருமணம் முடிக்க முடியாது, அப்படி செய்வது ஹராம் தடுக்கப்பட்டதாகும். இது தந்தை மார்களுக்கு கண்ணியமும், மதிப்புமாகும்.
இது திருமண ஒப்பந்தம் மூலமே அமுலாகிவிடும். இது அறிஞர்களுக்கிடையில் கருத்துவேற்றுமை இல்லாத இஜ்மாவான ஒரு விடயமாகும்.
அடுத்து, ஒரு தந்தை திருமணத்தின் மூலமோ, அல்லது அடிமை என்ற அடிப்படையிலோ, அல்லது சந்தேகத்தின் அடிப்படையிலோ ஒரு பெண்ணோடு இல்லறத்தில் ஈடுபட்டால் அந்தப் பெண் மகனுக்கு ஹராமாகி விடுவார் என்பதில் அறிஞர்கள் ஒன்றுபட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர், அதேநேரம் உடலுறவில் ஈடுபடாமல் சேர்ந்திருந்தால், அல்லது பார்க்கக்கூடாத இடத்தை பார்த்துவிட்டால் என்ன சட்டம் என்பதில் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர், அதில் அஹ்மத் இமாமவர்கள் அதுவும் ஹராம் தடுக்கப்பட்டது ஏன்று கூறியுள்ளார்கள். (இப்னு கஸீர்)
اِلَّا مَا قَدْ سَلَفَ
முன்னர் (அறியாமைக்காலத்தில்) நடந்துவிட்டதைத் தவிர
தந்தையின் மனைவியை திருமணம் முடிக்கும் ஒரு கலாச்சாரம் ஜாஹிலிய்யா காலத்தில் இருந்திருக்கிறது என்பதும் தெளிவாகின்றது, இந்த கருத்தை இப்னு அப்பாஸ் ரலி, கதாதா, அதாஃ போன்ற அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அதனால் தான் (முந்தி நடந்ததைத் தவிர) என்று அல்லாஹ் விதிவிலக்கு செய்திருக்கின்றான்.
பொதுவாகவே ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் செய்ததை வைத்து அல்லாஹ் குற்றம் பிடிப்பதில்லை, அத்தோடு இஸ்லாத்தை ஏற்றுவிட்டால் அவர் செய்துவந்த தவறை திருத்தி இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அம்ரிப்னுல் ஆஸ் ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் போது நபி ஸல் அவர்கள்: ‘அம்ரே! இஸ்லாம் என்பது அதற்கு முன் செய்த பாவங்களை போக்கும் என்பது உமக்குத் தெரியாதா?’ என்று கேட்டார்கள். (அஹ்மத்: 17827)
اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًا ؕ وَسَآءَ سَبِيْلًا
நிச்சயமாக இது மானக்கேடானதாகவும் கோபத்திற்குரியதாகவும் இருக்கிறது, இன்னும் வழியால் அதுமிகக் கெட்டதுமாகும்.
அடுத்து இப்படி செய்வது அல்லாஹ்வின் வெறுப்பை பெற்றுத்தரும் ஒரு இழிசெயல் என்பதை இந்த வசனத்தின் முடிவு எடுத்துரைக்கின்றது. பொதுவாகவே மானக்கேடான செயல்களை செய்வதிலிருந்து ஒரு முஃமின் தன்னை காத்துக்கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.
அல்லாஹ் கூறுகின்றான்:
وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ۚ
.. மேலும், மானக்கேடான காரியங்களை – அதில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானவற்றையும் (செய்ய) நீங்கள் நெருங்காதீர்கள்,… (6:151)
وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً ؕ وَسَآءَ سَبِيْلًا
(விசுவாசங்கொண்டோரே! நீங்கள் விபச்சாரத்தையும் நெருங்காதீர்கள், நிச்சயமாக அது, மானக்கேடானதாக இருக்கிறது, இன்னும், அது (மனித குலத்திற்கு பெரும்கேடு விளைவிக்கும்) வழியால் மிகக் கெட்டது. (17:32)
அடுத்து ஒரு முஃமின் பாவங்களைக் கண்டாலே விரண்டோடுவான் என்பதே நபிகளாரின் வழிகாட்டல். அல்லாஹ்வும் நெருங்க வேண்டாம் என்றே வழிகாட்டுகின்றான்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: நிச்சியமாக ஒரு முஃமின், தன் மீது விழுந்துவிடும் என்று பயப்படும் மலையடிவாரத்தில் அமர்ந்திருப்பது போன்றே (பயங்கரமானதாக) பாவத்தைப் பார்ப்பான், மேலும் ஒரு பாவி, தனது மூக்கிற்கு அருகில் பறந்து செல்லும் கொசுவைப் போன்றே (சாதாரணமானதாக) பாவத்தை பார்ப்பான். (புகாரி:6308)
மேலும் நபி ஸல் அவர்கள் ஈமானின் இனிமை பெற்றவனுக்கு மூன்று பண்புகளை கூறினார்கள், அதில் மூன்றாவதாக; ‘அவன் இறைமறுப்பில் மீண்டும் ஈடுபடுவதை நெருப்பில் எறியப்படுவதை வெறுப்பது போன்று வெறுப்பான்.’ என்று கூறினார்கள். (புகாரி:16, 6941, முஸ்லிம்)
حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۙ
உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்விகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், சகோதரனுடைய புதல்விகளும், சகோதரியுடைய புதல்விகளும், உங்களுக்குப் பாலூட்டிய உங்கள் தாய்மார்களும், உங்கள் பால்குடிச் சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும், உங்கள்மீது விலக்கப்பட்டுள்ளது, இன்னும் நீங்கள் உடலுறவு கொண்டு விட்டீர்களே, அத்தகைய உங்கள் மனைவியரிலிருந்து (முந்தைய கணவன் மூலம் பிறந்து) உங்கள் மடிகளில் வளர்ந்துவரும் பெண்மக்களையும் (நீங்கள் திருமணம் செய்வது விலக்கப்பட்டிருக்கிறது). ஆனால், (நீங்கள் மணம் செய்து,) அவர்களுடன் உடலுறவு கொள்ளவில்லையானால், (அவளை விலக்கிவிட்டு அவளுடைய மகளை மணம்செய்து கொள்வதில்,) உங்கள்மீது குற்றமில்லை, இன்னும், உங்களுடைய முதுகந்தண்டுகளிலிருந்து உண்டான உங்கள் புதல்வர்களின் மனைவியர்களையும் (நீங்கள் மணம் செய்துகொள்வது விலக்கப்பட்டிருக்கிறது.) இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்த்துக்கொள்வதும் (விலக்கப்பட்டிருக்கிறது). இதற்கு முன்னர் நடந்துவிட்டவைகளைத் தவிர, (அவற்றை) நிச்சயமாக அல்லாஹ், மிக்க மன்னிப்பவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான். (4:23)
இந்த வசனம் தரும் படிப்பினைகள்:
இந்த வசனம் மூலம் திருமணம் முடிப்பதற்கு தடுக்கப்பட்ட, ஒரு ஆண் சாதாரண உறவு வைக்க முடிந்த மஹ்ரமான உறவுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.
حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ
உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்விகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், சகோதரனுடைய புதல்விகளும், சகோதரியுடைய புதல்விகளும்,
அதில் முதன்மையானது இரத்த உறவுகள் என்ற அடிப்படையில் பிறப்பின் மூலம் வரக்கூடிய உறவுகள்.
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: பிறப்பின் மூலம் ஏழு பேர் மஹ்ரமாவார்கள், திருமணம் மூலம் ஏழு பேர் மஹ்ரமாவார்கள். பிறகு அந்த வசனத்தில் ‘வபனாதுல் உக்தி’ வரை ஓதி விட்டு இதுவே பிறப்பின் மூலமானது என்று கூறினார்கள்.
அவர்கள் ‘தாய்மார்கள், பெண்பிள்ளைகள், உடன் பிறந்த சகோதரிகள், தாயின் சகோதரிகள், தந்தையின் சகோதரிகள், சகோதரனின் பெண்பிள்ளைகள், சகோதரியின் பெண் பிள்ளைகள்‘.
இந்த வசனத்தில் வரும் ‘வபனாதிகும், உங்கள் பெண் பிள்ளைகள்’ என்ற சொல்லிலிருந்து ‘விபச்சாரத்தின் மூலம் பிறந்த பெண் பிள்ளையும் காரணமாக இருந்தவருக்கு ஹராமாகும்’ என்று பெரும்பான்மை அறிஞர்கள் ஆதாரம் பிடித்தனர்,
இது அபூ ஹனீபா, மாலிக், அஹ்மதுப்னு ஹம்பல் போன்ற அறிஞர்களின் நிலைப்பாடாகும், இதில் இமாம் ஷாபிஈ அவர்கள் அந்த பிள்ளை மஹ்ரமாக மாட்டாள் என்று கூறினார்கள். ஏனெனில் அவள் சட்டப்பூர்வமான பிள்ளையில்லை, எப்படி அனந்தரம் பெரும் சட்ட வசனத்தில் அவள் இடம்பெறமாட்டாளோ, எனவே அவளுக்கு ஏகோபித்த கருத்தின் அடிப்படையில் எப்படி அனந்தர சொத்து கிடைக்காதோ அதேபோன்று இந்த வசனத்திலும் அவள் நுழைய மாட்டாள் என்று கூறினார்கள். (இப்னு கஸீர்) அல்லாஹு அஃலம்.
இதனை ஆய்வுக்குற்படுத்திய அநேகமான அறிஞர்கள் விபச்சாரம் செய்தவனுக்கு அதன் மூலம் பிறந்த குழந்தையை திருமணம் முடிக்க முடியாது என்ற கருத்தையே சரியானது என்று கூறுகின்றனர். அதுவே பொருத்தமானதும் கூட. அல்லாஹு அஃலம்.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) மஜ்மூஉல் பதாவா :(32/134), இப்னு குதாமா (ரஹ்) அல்முக்னீ :(7/485)
وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ
உங்களுக்குப் பாலூட்டிய உங்கள் தாய்மார்களும், உங்கள் பால்குடிச் சகோதரிகளும்,
அடுத்து எப்படி பெற்ற தாய் மஹ்ரமோ அதேபோன்று பாலூட்டிய தாயும் மஹ்ரமாவாள்,
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: பாலூட்டுதல் என்பது பிறப்பின் மூலம் மஹ்ரமாக்குவதை மஹ்ரமாக்கும். (புஹாரி:3105,5099) முஸ்லிமின் (1444, 1445, 1447)அறிவிப்பில்: ‘பிறப்பின் காரணமாக மஹ்ரமாகும் ஒவ்வொன்றும் பாலூட்டுவதன் மூலமும் மஹ்ரமாகும்.
பால் குடி உறவும் அதில் உள்ள கருத்து வேற்றுமையும்;
இமாம் மாலிக் அவர்கள் பொதுவாகவே குடித்துவிட்டால் உறவு ஏற்பட்டுவிடும் என்று கூறினார்கள். இக்கருத்து இப்னு உமர் ரலி அவர்களைத் தொட்டு பதியப்பட்டுள்ளது. இதனையே ஸஈதுப்னுல் முஸய்யப், உர்வதுப்னுஸ் ஸுபைர், ஸுஹ்ரீ போன்றோர் கருத்தாக கொண்டிருந்தனர்.
இன்னும் சில அறிஞர்கள் ‘மூன்று தடவைகளுக்கு குறைவாக பால் குடித்திருந்தால் அது மஹ்ரமாக்காது‘ என்று கூறினார், அதற்கு ஆதாரமாக பின்வரும் நபி மொழியை கூறினார்கள்.
நபி ஸல் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரலி அவர்கள் கூறினார்கள்: ஒரு தடவை, இரண்டு தடவைகள் உறிஞ்சிக் குடிப்பது மஹ்ரமாக்காது. (முஸ்லிம்:1450)
நபி ஸல் அவர்கள் கூறியதாக உம்முல் பள்ல் ரலி அவர்கள் கூறினார்கள்: ஒரு தடவை, இரண்டு தடவைகள் பாலூட்டுவது மஹ்ரமாக்காது. (முஸ்லிம்:1451)
இந்த கருத்தையே இமாம்களான அஹ்மத், இஸ்ஹாக் பின் ராஹவைஹி, அபூ உபைத், அபூ ஸவ்ர் போன்றவர்கள் கூறினார், இது அலி ரலி, ஆஇஷா ரலி, இப்னுஸ் ஸுபைர், ஸுலைமான் பின் யாசர், ஸஈத் பின் ஜுபைர் போன்றவர்களைத் தொட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில அறிஞர்கள் ‘ஐந்து தடவைகளுக்கு குறைவாக குடிப்பதால் மஹ்ரம் என்ற உறவு ஏற்படாது‘ என்று கூறினர்.
ஆஇஷா ரலி அவர்கள் கூறினார்கள்: ‘அறியப்பட்ட பத்து தடவைகள் பாலூட்டுவது மஹ்ரமாக்கும்‘ என்று அல்லாஹ் இறக்கிய வசனம் குர்ஆனில் இருந்தது. பிறகு ‘அறியப்பட்ட ஐந்து தடவைகள் என்பதைக் கொண்டு அது மாற்றப்பட்டது. அந்த வசனங்கள் அல்குர்ஆனில் ஓதப்படும் நிலையிலேயே நபியவர்கள் மரணித்தார்கள். (முஸ்லிம்:1452)
நபி ஸல் அவர்கள் ஸஹ்லா பின்த் ஸுஹைல் ரலி அவர்களுக்கு, ஹுஸைபா அவர்களின் அடிமைக்கு ஐந்து தடவைகள் பாலூட்டுமாறு ஏவினார்கள், ஆஇஷா ரலி அவர்கள், அவர்களிடம் நுழைய விரும்புவோருக்கு ஐந்து தடவைகள் பாலூட்டுமாறு கட்டளையிடுவார்கள். (புகாரி:5088, முஸ்லிம்:1453)
இந்த கருத்தையே இமாம் ஷாபிஈ அவர்களும் அவர்களது தோழர்களும் கூறினார்கள். இந்தக் கருத்தே ஆதாரத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. அல்லாஹு அஃலம்
அடுத்து பெரும்பாண்மை அறிஞர்களின் கூற்றுப்படி, ‘பால்குடி உறவு ஏற்பட, இரண்டு வயதுக்கு முன்னர் சிறுபராயத்தில் பாலூட்டல் வேண்டும்‘. (இப்னு கஸீர்)
وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ
உங்கள் மனைவியரின் தாய்மார்களும், உங்கள்மீது விலக்கப்பட்டுள்ளது, இன்னும் நீங்கள் உடலுறவு கொண்டு விட்டீர்களே, அத்தகைய உங்கள் மனைவியரிலிருந்து (முந்தைய கணவன் மூலம் பிறந்து) உங்கள் மடிகளில் வளர்ந்துவரும் பெண்மக்களையும் (நீங்கள் திருமணம் செய்வது விலக்கப்பட்டிருக்கிறது). ஆனால், (நீங்கள் மணம் செய்து,) அவர்களுடன் உடலுறவு கொள்ளவில்லையானால், (அவளை விலக்கிவிட்டு அவளுடைய மகளை மணம்செய்து கொள்வதில்,) உங்கள்மீது குற்றமில்லை,
அடுத்து, மனைவியின் தாய் திருமண ஒப்பந்தத்தின் மூலமே மஹ்ரமாகிவிடுகின்றாள். இல்லறத்தில் ஈடுபட்டாலோ ஈடுபடாவிட்டாலோ மஹ்ரமாகிவிடுவாள்.
மனைவியின் (வேறு ஒரு ஆண் மூலம் கிடைத்த) பிள்ளையை பொறுத்தவரை அந்த பெண்ணோடு இல்லறத்தில் ஈடுபடும் வரை மறுமணம் செய்த கணவனுக்கு மஹ்ரமாக மாட்டாள். எனவே இல்லறத்தில் ஈடுபட முன்னர் மனைவியான அந்த தாயை விவாகரத்து (தலாக்) செய்துவிட்டால், மறுமணம் செய்த கணவனுக்கு அந்த பிள்ளையை திருமணம் செய்யலாம்.
மனைவியின் தாயையும் மனைவியின் பிள்ளையைப் போன்று என்று சிலர் கருதி, மனைவியோடு இல்லறத்தில் ஈடுபட்டால்தான் தாய் மஹ்ரமாவாள், இல்லையென்றால் இல்லறத்திற்கு முன்னர் தலாக் சொல்லிவிட்டு தாயை மணக்கலாம் என்று கூறுகின்றனர்.
அலி ரலி அவர்களிடம் ஒரு மனிதன், ஒரு பெண்ணை இல்லறத்தில் ஈடுபட முன்னர் விவாகரத்து செய்தால், அவளது தாயை மணக்கலாமா? என்று கேட்கவே, அவள் மனைவியின் பிள்ளையின் இடத்தில் உள்ளவளாவாள் என்று கூறினார்கள். (இப்னு ஜரீர்)
ஸைத் பின் ஸாபித் ரலி அவர்கள் ‘ஒரு மனிதன் தன் மனைவியை இல்லறத்திற்கு முன்னர் தலாக் சொன்னால் அவளது தாயை மணப்பது பரவாயில்லை’ என்று கூறினார்கள். (இப்னு ஜரீர்)
இதே போன்ற ஒரு நிகழ்வு இப்னு அப்பாஸ் ரலி அவர்களிடம் கேட்கப்பட, அவர்கள் அனுமதி கொடுத்தார்கள், இப்னு உமர் ரலி அவர்கள் தடுத்தார்கள் என்றும், முஆவியா ரலி அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் ‘வேறு பெண்கள் அதிகம் இருக்கின்றார்களே, நான் அல்லாஹ் அனுமதித்ததை தடுக்கவும் மாட்டேன், தடுத்ததை அனுமதிக்கவும் மாட்டேன்’ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)
இதே கருத்து அப்துல்லாஹிப்னு ஸுபைர் ரலி அவர்களைத் தொட்டும் (மஜ்ஹூல் இருக்கும் அறிவிப்பு), முஜாஹித் அவர்களை தொட்டும் பதியப்பட்டுள்ளது, இந்த கருத்தை ஷாபியாக்களில் சிலரும் கூறுகின்றனர்.
அதேநேரம், அநேகமான அறிஞர்கள் இந்த கருத்துக்கு மாற்றமாக ‘மனைவியின் மகளுக்கே இல்லறத்தில் ஈடுபடுவது நிபந்தனை, மனைவியின் தாய் திருமண ஒப்பந்தத்தைக் கொண்டே மஹ்ரமாகிவிடுவாள்‘ என்று கூறுகின்றனர். இந்த கருத்து இப்னு அப்பாஸ் ரலி வழியாகவும் பதியப்பட்டுள்ளது. மேலும் இப்னு மஸ்ஊத், இம்ரான் பின் ஹுஸைன், மஸ்ரூக், தாவூஸ், இக்ரிமா, அதாஃ, ஹஸனுல் பஸரீ, மக்ஹூல், இப்னு ஸீரீன், கதாதா, ஸுஹ்ரீ போன்ற அறிஞர்கள் கருத்தாகவும் பதியப்பட்டுள்ளது, இதுவே நான்கு இமாம்களினதும், ஏழு புகஹாக்களினதும், புதிய, பழைய சட்டக்கலை அறிஞர்களில் பெரும்பான்மையானவர்களின் கருத்துமாகும். இதனையே இப்னு ஜரீர் இமாமவர்களும் ஆதரித்துள்ளார்கள். இதற்கு ஆதாரமாக நபியவர்களைத் தொட்டு ஒரு செய்தியும் பதியப்பட்டுள்ளது அறிவிப்பாளர் தொடர் விமர்சனத்திற்குரியது என்றும் .கூறியுள்ளார்கள். (இப்னு கஸீர்)
وَرَبَائِبُكُمُ اللاتِي فِي حُجُورِكُمْ
[உங்கள் மடிகளில் வளர்ந்துவரும் பெண்மக்களையும்]
மனைவியின் பிள்ளைகள் என்பதே நாடப்படுகின்றது, அவர்கள் கணவனின் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மஹ்ரமிய்யத் உண்டாகும் என்பதே அறிஞர்களில் அதிகமானவர்கள் கருத்து, இது பெரும்பாலும் அவர்கள் கணவனின் பொறுப்பில் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் வந்த சட்டமாகவும், மாறாக எதிர்மறையாக விளங்கமுடியாது என்று அவர்கள் கூறினர். இது சூரதுன் நூரின் 33 வது வசனம் போன்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
وَلَا تُكْرِهُوْا فَتَيٰتِكُمْ عَلَى الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّـتَبْتَغُوْا عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا ؕ وَمَنْ يُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْۢ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِيْمٌ
இன்னும், உங்கள் அடிமைப் பெண்களை – பத்தினித்தனத்தை அவர்கள் நாடுவார்களானால் இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஓர் அற்பப் பொருளை நீங்கள் அடைவதற்காக, விபச்சாரத்திற்கு (அதைச் செய்யுமாறு) நிர்ப்பந்திக்காதீர்கள்,…(24:33)
ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) கூறினார்கள்: (அன்னை) உம்மு ஹபீபா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘அபூ ஸலமாவின் மகள் ‘துர்ரா’வைத் தாங்கள் மணக்கப் போவதாக செய்தியறிந்தோம். (இது உண்மையா?)” என்று கேட்டார்கள் அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(என் துணைவியார்) உம்முஸலமா இருக்கவா (அவர் மகளை நான் மணப்பேன்?’ என்று கேட்டுவிட்டு, ‘உம்மு ஸலமாவை நான் மணந்திருக்காவிட்டாலும் (அவரின் மகள்) துர்ரா எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டவளல்லள். ஏனெனில், அவளுடைய தந்தை (அபூ ஸலமா) என் பால்குடி சகோதரராவார்” என்று கூறினார்கள். (புகாரி: 5123)
உம்மு ஹபீபா பின்த் அபீ சுஃப்யான்(ரலி) கூறினார் : நான் (என் கணவர்) நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அபூ சுஃப்யானின் மகளை தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!” என்று கூறினேன். அதற்கவர்கள், ‘இதை நீ விரும்புகிறாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்! தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றேன். அதற்கு அவர்கள், ‘எனக்கு அது அனுமதிக்கப்பட்டதன்று” என்றார்கள். நான் ‘தாங்கள் அபூ ஸலமாவின் புதல்வியை மணக்க விரும்புவதாக எங்களுக்குச் சொல்லப்பட்டதே!” என்று கேட்டேன். ‘உம்முஸலமாவிற்கு பிறந்த மகளையா?’ என நபியவர்கள் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அவள் என்னுடைய மடியில் வளர்ப்பு மகளாக (ரபீபத்தாக) இருந்து வருகிறாள்‘. .. என்று கூறினார்கள். (புகாரி: 5101, முஸ்லிம்)
ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார் (அன்னை) உம்மு ஹபீபா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘அபூ ஸலமாவின் மகள் ‘துர்ரா’வைத் தாங்கள் மணக்கப் போவதாக செய்தியறிந்தோம். (இது உண்மையா?)” என்று கேட்டார்கள் அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(என் துணைவியார்) உம்முஸலமா இருக்கவா (அவர் மகளை நான் மணப்பேன்?’ என்று கேட்டுவிட்டு, ‘உம்மு ஸலமாவை நான் மணந்திருக்காவிட்டாலும் (அவரின் மகள்) துர்ரா எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டவளல்லள். ஏனெனில், அவளுடைய தந்தை (அபூ ஸலமா) என் பால்குடி சகோதரராவார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி: 5123)
எனவே நபியவர்களும் மனைவியின் பிள்ளை மஹ்ரமாவதை திருமணத்தைக் கொண்டு மாத்திரமே சம்பந்தப்படுத்தியுள்ளார்கள். இதுவே நான்கு இமாம்களினதும், ஏழு சட்டங்களை மேதைகளினதும், முன்னோர், பின்னோர்களான அதிக அறிஞர்களினதும் நிலைப்பாடாகும்.
மனைவியின் பிள்ளை கணவனின் பொறுப்பில் இல்லையென்றால் மஹ்ரமிய்யத் சட்டம் உருவாகாது என்ற ஒரு கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. இது அலி ரலி அவர்களின் கருத்தாகவும், தாவூத் அல்லாஹிரீ, அவரது தோழர்களின் கருத்தாகவும், மாலிக் இமாமின் ஒரு கருத்தாகவும் பதியப்பட்டுள்ளதுடன் அதனையே இப்னு ஹஸ்ம் அவர்களும் தேர்வு செய்துள்ளார்கள். இப்னு கஸீர் இமாமவர்கள் இந்த கருத்தை பதிந்துவிட்டு, இமாம் தஹபீ அவர்கள் இந்த விடயத்தை இப்னு தைமிய்யா இமாமவர்களிடம் எடுத்துக்காட்டியதாகவும், அதனை அவர்கள் தெளிவில்லாத ஒரு மஸ்அலாவாக கண்டு, அதில் மௌனம் காத்தார்கள் என்று கூறினார்கள். (அல்லாஹு அஃலம்)
وَحَلائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلابِكُمْ
உங்களுடைய முதுகந்தண்டுகளிலிருந்து உண்டான உங்கள் புதல்வர்களின் மனைவியர்களையும் (நீங்கள் மணம் செய்துகொள்வது விலக்கப்பட்டிருக்கிறது.)
சொந்த மகனின் மனைவியும் (மருமகள்) மஹ்ரமாவால், ஆனால் வளர்ப்பு பிள்ளையின் மனைவி மஹ்ரமாக மாட்டாள் என்பதும் தெளிவான ஒரு விடயமாகும். அது ஜாஹிலிய்யா காலத்தில் இருந்த ஒரு நடைமுறையாக இருந்தாலும் இஸ்லாம் அதனை மாற்றியமைத்தது. நபிகளாரின் வளர்ப்பு மகனான ஸைத் அவர்களின் மனைவியே ஸைனப் ரலி அவர்கள், ஸைத் அவர்கள் விவாகரத்து கொடுக்கவே, அல்லாஹ் நபிகளாருக்கு மணமுடித்துவைத்தான்.
وَاِذْ تَقُوْلُ لِلَّذِىْۤ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِ وَاَنْعَمْتَ عَلَيْهِ اَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللّٰهَ وَتُخْفِىْ فِىْ نَفْسِكَ مَا اللّٰهُ مُبْدِيْهِ وَتَخْشَى النَّاسَ ۚ وَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشٰٮهُ ؕ فَلَمَّا قَضٰى زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنٰكَهَا لِكَىْ لَا يَكُوْنَ عَلَى الْمُؤْمِنِيْنَ حَرَجٌ فِىْۤ اَزْوَاجِ اَدْعِيَآٮِٕهِمْ اِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا
அல்லாஹ் எவருக்கு (நேர் வழி காட்டுவதன் மூலம்) அருள் புரிந்து, நீரும் எவருக்கு (அடிமைத்தனத்திலிருந்து உரிமை விடுவதன் மூலம்) உபகாரம் செய்தீரோ அவரிடத்தில் “(ஜைனபு ஆகிய) உம்முடைய மனைவியை (விவாக பந்தத்திலிருந்து நீக்காது) உம்மிடமே (மனைவியாக) நிறுத்திக் கொள்ளும், இன்னும் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளும்” என்று நீர் கூறிய சமயத்தில்_(நடந்த இச்சம்பவத்தை நினைவு கூர்வீராக) அல்லாஹ் வெளியாக்க இருந்ததை நீர் உம் மனதில் மறைந்திருந்தீர். மேலும், மனிதர்களுக்கு நீர் பயப்படுகிறீர், இன்னும் அல்லாஹ்_அவன்தான் நீர் பயப்படுவதற்கு மிக உரியவன் (மனிதர்களல்ல). ஜைது (என்பவர்) ஜைனபைத் திருமணம் செய்து தாம்பத்திய வாழ்க்கை எனும் தன்) தேவையை அவளிடமிருந்து நிறைவேற்றிவிட்டபோது, நாம் அவளை உமக்குத் திருமணம் செய்து வைத்தோம், ஏனென்றால், விசுவாசிகளால் வளர்க்கப் பட்டவர்கள் தங்கள் தேவையை (அப்பெண்களான) அவர்களிடம் பூர்த்தி செய்துகொண்டு (அவர்களைத் தலாக்குக் கூறி)விட்டால், (அவர்களை வளர்த்த) விசுவாசிகள், (அவ்வாறு தலாக் கூறப்பட்ட) அப்பெண்களை திருமணம் செய்து கொள்வதில் யாதொரு குற்றமிருக்கக்கூடாது என்பதற்காக (உமக்கு, உமது வளர்ப்பு மகனால் விவாகரத்துச் செய்யப்பட்ட ஜைனபை திருமணம் செய்துவைத்தோம்.) மேலும், அல்லாஹ்வுடைய கட்டளை (இவ்வாறு) நடைபெற்றுத்தீர வேண்டியதாக இருந்தது. (33:37)
وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الأخْتَيْنِ إِلا مَا قَدْ سَلَفَ
இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்த்துக்கொள்வதும் (விலக்கப்பட்டிருக்கிறது). இதற்கு முன்னர் நடந்துவிட்டவைகளைத் தவிர,
அடுத்து இரண்டு சகோதரிகளை ஒரே நேரத்தில் மனைவியாக வைத்திருப்பது தடுக்கப்பட்டதாகும், இஸ்லாத்திற்கு முன்னர் ஒருவர் செய்திருந்தால் அது மன்னிக்கப்படும்.
இது நபித் தோழர்கள், தாபிஈன்கள், இமாம்கள் அனைவரும் ஒன்றுபட்டு கூறிய ஒன்றாகும். எனவே யாராவது ஒருவர் இஸ்லாத்தை ஏற்கும்போது இரண்டு சகோதரிகளை திருமணம் முடித்திருந்தால் இருவரில் ஒருவரை தலாக் விவாகரத்து செய்யவேண்டும்.
ளஹ்ஹாக் பின் பைரூஸ் அத் தைலமீ கூறினார்கள் அவர்களது தந்தை வழியாக; ‘அவர்கள் இரண்டு சகோதரிகளை மணமுடித்த நிலையில் இஸ்லாத்தை ஏற்றதாகவும், நபியவர்கள் அவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்யுமாறும் கூறினார்கள். (அஹ்மத்:, திர்மிதி:1229, அபூதாவூத்:2243, அறிவிப்பாளர்கள் சிலரில் சாதாரண விமர்சனங்கள் இருக்கும் ஹஸன் தரத்தில் உள்ள செய்தி)
அடுத்து, எப்படி இரண்டு சகோதரிகளை ஒரேநேரத்தில் மனைவியாக வைத்திருக்க முடியாதோ அதேபோன்று, ஒரு பெண்ணையும் அவளது தாயின் சகோதரி (சாச்சி) யையும், தந்தையின் சகோதரி (மாமி) யையும் ஒரே நேரத்தில் மனைவியாக வைத்திருக்க முடியாது. இது நபிகளாரின் கூற்றால் தடுக்கப்பட்டதாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒரு சேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (புகாரி: 5109, முஸ்லிம்)
(அறிவிப்பாளர் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்:) இதை வைத்து, ஒரு பெண்ணுடைய தாயின் சகோதரியைப் போன்றே, அவளுடைய தந்தையின் தாயுடைய சகோதரியையும் நாங்கள் கருதுகிறோம். (புகாரி: 5110, முஸ்லிம்)
إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا
திருமணத்தோடும், பெண்களோடும் சார்ந்த சில சட்டங்களைக் கற்றுத்தந்த அல்லாஹ், அவற்றை பேணிநடப்பதையே விரும்புகின்றான், அதற்கு மாறுசெய்வதை கடுமையாக வெறுக்கின்றான், ஆனாலும் மனிதன் என்ற அடிப்படையில் தவறு விடும்போது அதனை மன்னிக்கும் பண்பு கொண்ட கருணை மிக்கவன் என்ற பண்புகளைக் கூறி இந்த வசனத்தை முடிக்கின்றான். (அல்லாஹு அஃலம்)
ஸூரதுன் நிஸாவின் முதல் கட்ட விளக்கம் நிறைவு, அல்ஹம்து லில்லாஹ்.