بسم الله الرحمن الرحيم
வீடியோவைப் பார்வையிட இங்கே தட்டவும்! PART-1, PART-2
PDF வடிவில் பார்வையிட CILICK செய்யவும்!
இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துவது ஏன்?
“நிகாஹ்” எனும் திருமணம்
“நிகாஹ்” என்பது திருமணத்தை குறிக்கிறது. இது ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தமாகும், இது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைக்கிறது. நிகாஹின் நோக்கம் அன்பையும் கருணையையும் அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தை உருவாக்குவது, மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை அடைவதாகும்.
நிகாஹ் செய்தல் இரு தரப்பின் சம்மதத்தையும், பெண்ணின் பொறுப்பாளி (வலி), மஹ்ர் (மணக்கொடை), மற்றும் சாட்சிகளின் பங்களிப்பையும் கொண்டிருக்க வேண்டும். இதனையே அல்லாஹ் உறுதியான உடன்படிக்கை என்றும், நபியவர்கள் அல்லாஹ்வின் பொறுப்பிற்குற்பட்டது என்றும் கூறினார்கள்.
وَ كَيْفَ تَاْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰى بَعْضُكُمْ اِلٰى بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّيْثَاقًا غَلِيْظًا
அதை (கொடுத்த மஹரை) நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம். உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதியை பெற்று உங்களில் ஒருவர் மற்றொருவருடன் (சேர்ந்து) கலந்து விட்டீர்களே! (4:21)
நபி ஸல் அவர்கள் பிரியாவிடை ஹஜ்ஜின் போது ஆற்றிய உரையின் தொடரில் பின்வருமாறு கூறினார்கள்: “பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்) பிடித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள்.’ (முஸ்லிம்: 2334)
எனவே இந்த திருமணத்தின் மூலமே குடும்பம் தொடர்கின்றது. இங்கிருந்து தோற்றம் பெரும் குடும்பத்தைப் பற்றி பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம். அந்த அடிப்படையில் இஸ்லாம் திருமணத்தின் மூலம் மனிதனிடம் எதிர்பார்க்கும் சில நல்ல எதிர்ப்பார்ப்புக்களை தொடர்ந்து நோக்குவோம்.
ஆன்மீகம் பாதுகாக்கப்படல், அல்லாஹ், அவன் தூதரின் பெறுமதி உணர்த்தப்படல்!
எங்களுக்கான துணையை ஏற்படுத்துபவன் அல்லாஹ் என்ற அடிப்படையில் அவனைப் புரிந்து கட்டுப்படல்.
وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّ جَعَلَ لَـكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ بَنِيْنَ وَحَفَدَةً وَّرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِؕ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَتِ اللّٰهِ هُمْ يَكْفُرُوْنَۙ
உங்களிலிருந்தே உங்கள் மனைவிகளை அல்லாஹ் படைக்கிறான். உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும், பேரன் பேத்திகளையும் படைக்கின்றான். உங்களுக்கு நல்ல உணவுகளை வழங்குகிறான். மேலும், (இப்படியிருக்க) அவர்கள் (தாங்களாகக் கற்பனை செய்து கொண்ட) பொய்யானவற்றை நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரிக்கின்றனரா? (16:72)
وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ
நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டு பண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)
திருமணத்தை வெறுப்பவன் நபிகளாரின் சமுகத்தில் இடம்பிடிக்க முடியாது என்ற அடிப்படையில் நபிகளாரை புரிந்து பின்பற்றல்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீட்டுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்…….. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்….. மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.(புகாரி: 5063, முஸ்லிம்:2714)
மனித இனத்தின் பாதுகாப்பு!
மனித சமூகத்தை ஆதம் என்ற மனிதன் மூலம் ஆரம்பித்த அல்லாஹ், அடுத்து அவருக்கான ஜோடியை படைத்தான் எனும் போது, அந்த மனித குளம் விருத்தி அடைவதன் முக்கியத்துவத்தையே அது உணர்த்துகின்றது. எனவே முறையான குடும்ப வாழ்க்கை அதனை கட்டிக்காக்கும்.
يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً ۚ
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து படைத்தான். அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை பரப்பினான்…… (4:1)
மேலும் திருமணத்தின் தேவையையும், மனித பரவலாக்கத்தின் பெறுமதியையும் உணர்ந்த இஸ்லாம் துரவரத்தையும், வரவேற்கவில்லை, ஆண்மை நீக்கத்தையும் அனுமதிக்கவில்லை.
ஸஃத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்கள் துறவம் மேற்கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். (புகாரி: 5073, முஸ்லிம்:2715 )
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் எங்கள் துணைவியர் இருக்கவில்லை. எனவே நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், ‘(ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா?’ என்று கேட்டோம். அவ்வாறு செய்யவேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்: இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 05:87) (புகாரி: 5075,முஸ்லிம்:2720)
குடும்பக் கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டல்!
திருமணம் இல்லையென்றால் மனித சமூகம் கட்டுக்கோப்பாக வாழமுடியாமல் போய், பெற்றோர்கள், பிள்ளைகள் என்ற உறவுகள் இல்லாமல் போய் மனித சமூகமே சீரழிந்து போகும். விபச்சாரத்தில் மூழ்கி வாழும் மனிதர்களின் நிலையும், அதன் மூலம் கிடைக்கும் குழந்தைகளும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அதனால்தான் கணவன் மனைவிக்கிடையில் மனநிம்மதியையும், அன்பு பாசத்தையும் திருமணத்தின் மூலம் ஏற்படுத்துவதாக அல்லாஹ் கூறுகின்றான்.
وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً
நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுனான்…. (30:21)
நபியவர்களும் பயணங்களில் சிரமப்படும் மனிதனுக்கு நிம்மதியைத் தேடி உடனே வீட்டுக்குவருமாறும், நல்ல மனைவியிடமே நிம்மதி இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்.’ (புகாரி: 1804, முஸ்லிம்:3892)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே. (முஸ்லிம்: 2911)
அதனால்தான் விருப்பமின்றி ஒருவரையொருவர் திருமணம் முடிக்கக்கூடாது, அப்படி முடித்தாலும் அது செல்லுபடியாகாது என்று இஸ்லாம் வழிகாட்டுகின்றது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப்போவதாகத் தெரிவித்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், நீர் சென்று அவளைப் பார்த்துக்கொள்ளும்! ஏனெனில், அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உண்டு” என்று சொன்னார்கள்.(முஸ்லிம்: 2783)
அப்துர் ரஹ்மான்(ரலி), முஜம்மிஃ (ரலி) அவர்கள் இருவரும் கூறினார்கள். கிதாம் என்பவரின் புதல்வியான கன்ஸாவை அவரின் தந்தை அவருக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்து வைத்த போது) நபி(ஸல்) அவர்கள் அத்திருமணத்தை ரத்துச் செய்தார்கள்’ (ஸஹீஹுல் புகாரி: 5138,6969)
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கன்னி கழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது. கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது’ என்று கூறினார்கள். மக்கள், ‘எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘அவள் மெளனமாயிருப்பதே (அதற்கு அடையாளமாகும்)’ என்றார்கள். (புகாரி: 6970,)
மேலும் திருமணம் முடிக்கும் இளைஞனுக்கு கன்னிப்பெண்ணை முடிக்குமாறும், பெண்ணைப் பார்த்து, திருப்தியுடன் மணம்முடிக்குமாறும் இஸ்லாம் வழிகாட்டுகின்றது.
ஜாபிர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன்….. மதீனாவை நாங்கள் நெருங்கியதும் நான் வீட்டை நோக்கிப் புறப்படலானேன். ‘எங்கே போகிறீர்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ‘(கணவனை இழந்த) ஒரு கைம்பெண்ணை நான் மணந்திருக்கிறேன்!’ என்று சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘நீர் ஒரு கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? நீர் அவளுடன் விளையாடிக் களித்திட, அவள் உம்முடன் விளையாடி(க் களித்தி)டலாமே! என்று கேட்டார்கள். (புகாரி: 2309, முஸ்லிம்:2907)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்கப்போவதாகத் தெரிவித்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், நீர் சென்று அவளைப் பார்த்துக்கொள்ளும்! ஏனெனில், அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உண்டு” என்று சொன்னார்கள்.(முஸ்லிம்: 2783)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒட்டகங்களில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக்குல பெண்களாவர். அவர்கள் குழந்தைகளின் மீது அதிக பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள். (புகாரி: 5082, முஸ்லிம்: 4948)
ஒழுக்கமுள்ள மனித குளம் உருவாக்கப்படல்!
மனித சமூகத்திற்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட நபிகளாருக்கே அல்லாஹ் திருமண ஜோடிகளை அமைத்தான் என்றால் அதுவே மனித சமூகத்தின் ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். திருமணமுறை மங்கிப்போன சமூகங்களில் அதன் பாதிப்பைப் பார்க்கலாம்.
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَ جَعَلْنَا لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّيَّةً ؕ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّاْتِىَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ لِكُلِّ اَجَلٍ كِتَابٌ
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் தூதர்கள் பலரை அனுப்பி இருக்கிறோம். (உம்மைப் போலவே) அவர்களுக்கும் மனைவிகளையும், சந்ததிகளையும் கொடுத்திருந்தோம். (13:38)
திருமணமே மனித குளத்தின் ஒழுக்கத்தைப் பாதுகாக்கும் என்பதனால், இளைஞர்களுக்கு நபியவர்கள் அதனை வழிகாட்டினார்கள். திருமணத் தேவையுள்ள இளைஞர்கள் அதிலிருந்து தடுக்கப்படுவதால் இளைஞர்கள் சீரழிந்து போவதைப் பார்க்கலாம்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணம்முடிக்கட்டும்! ஏனெனில் அது பார்வையை தாழ்த்தும், கற்பையும் பாதுகாக்கும். இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்” என்று தெரிவித்தார்கள். (புகாரி: 5065,1905,முஸ்லிம்:2712)
திருமண வாழ்க்கை எப்படி ஒரு மனிதனை ஒழுக்கமாக வாழ வைக்கின்றது, பாதையில் ஒரு பெண்ணைக் கண்டவன், ஆசைப்பட்டால் தன் வீட்டுக்கு வந்து ஆசையை பூர்த்தி செய்துகொள்ளலாம். திருமணம் செய்யாதவனின் நிலையென்ன, இந்த நிலையிலேயே மனிதன் தவறுசெய்யும் நிலைக்கு ஆளாகின்றான்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைக் கண்டார்கள், உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, “ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனதில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 2718)
திருமணமுறை இல்லையென்றால் விபசாரம் தலைதூக்கும், ஓரினச்சேர்க்கை அதிகரிக்கும், இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் முடித்து வைக்காவிட்டால் முறையற்ற உறவுகள், காதலித்தல் போன்றவை அதிகரிக்கும். இவற்றை இஸ்லாமும், நாகரிகமான மனித சமூகமும் வெறுக்கின்றன.
وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً ؕ وَسَآءَ سَبِيْلًا
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம்.ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. (17:32)
اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۚ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ
விபசாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடிகள் அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றுவதில், அவ்விருவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவருக்கும் (தண்டனையாக) வேதனை கொடுக்கும் சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு தொகையினர் அதன் சமீபமாக இருக்கவும். (24:2)
اَتَاْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعٰلَمِيْنَۙ وَ تَذَرُوْنَ مَا خَلَقَ لَـكُمْ رَبُّكُمْ مِّنْ اَزْوَاجِكُمْؕ بَلْ اَنْـتُمْ قَوْمٌ عٰدُوْنَ
நீங்கள் (உங்கள் காம இச்சையைத் தணித்துக் கொள்ள) உலகத்தார்களில் ஆண்களிடமே செல்கிறீர்கள்.65 உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்த உங்கள் மனைவிகளை நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்களே! நீங்கள் (அல்லாஹ்வின் இயற்கை முறையை) மீறிவிட்ட மக்கள் ஆவீர்கள்” என்று கூறினார். (26:165,166)
فَلَمَّا جَآءَ اَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّنْ سِجِّيْلٍۙ مَّنْضُوْدٍۙ
நம் கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை தலைக்கீழாக கவிழ்த்து விட்டோம். (அதற்கு முன்னர்) அவர்கள் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம். (11:82)
ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார் என்றால் பொறுப்பாளரிடம் கேற்கலாமே அல்லாமல், திருட்டுத்தனமாக தொடர்பு வைப்பதோ, பொறுப்பாளரின் அனுமதியின்றி திருமணம் முடிப்பதோ, ஓடிச் செல்வதோ செய்யக்கூடாத காரியமாகும். விரும்பினால் முடித்துத் தருவார், இல்லையென்றால் தவிர்ந்து கொள்வார்.
فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ
(அந்நியருடன் பேசும் சமயத்தில்) நளினமாகப் பேசாதீர்கள். ஏனென்றால் (பாவ) நோய் இருக்கும் உள்ளத்தையுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும்… (33:32)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: நிச்சியமாக அல்லாஹ் ஆதமின் மகன் மீது விபசாரத்தின் ஒரு பங்கை எழுதியுள்ளான், அதனை அவன் சந்தேகமின்றி அடைவான், எனவே கண்ணின் விபசாரம் பார்ப்பதாகும், காதின் விபசாரம் கேட்பதாகும், நாவின் விபசாரம் பேசுவதாகும், கையின் விபசாரம் தொடுவதாகும், காலின் விபசாரம் நடப்பதாகும், உள்ளம் ஆசைகொள்கிறது, அபம் மெய்ப்பிக்கிறது, அல்லது பொய்ப்பிக்கிறது. ( புகாரி:6243, முஸ்லிம்: 5165)
குறிப்பு: உலகம் சோதனைக்களம் என்பதனால் மனிதனை சோதிப்பதற்காக இப்படி ஒரு ஏற்பாட்டை அல்லாஹ் வைத்துள்ளான், அதேநேரம் மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதனையும் வழிகாட்டியுள்ளான், மனிதன் நல்ல வழிகாட்டலை புரிந்து நடக்கவேண்டும் என்பதையே அல்லாஹ் விரும்புகின்றான்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ஒரு ஆண் ஒரு பெண்ணுடன், மணம்முடிக்க தடுக்கப்பட்ட (மஹ்ரமான) ஒரு ஆண் இருத்தாலன்றி தனித்திருக்க வேண்டாம். (புகாரி:5233, முஸ்லிம்:2611)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: மார்க்க விடயத்திலும், பண்பாட்டிலும் நீங்கள் திருப்திகொள்கின்ற ஒருவர் உங்களிடம் பெண் கேட்டுவந்தால், அவருக்கு முடித்துக்கொடுங்கள், இல்லையென்றால் பூமியில் குழப்பமும், பெரும் தீங்கும் ஏற்படும். (திர்மிதி:1084,1085 அறிவிப்பாளர் தொடரில் விமர்சனம் உள்ள, பலவீனமான செய்தியாகும்)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: பொறுப்பாளர் இன்றி திருமணம் செல்லுபடியாகாது. (திர்மிதி:1101, அபூதாவூத்: 2085)
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّؕ … وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ….
(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள்……(அவ்வாறே) இணை வைத்து வணங்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும்வரை அவர்களுக்கு (நம்பிக்கையாளர்களான பெண்களை) நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள்…. (2:221)
குறிப்பு: இங்கு ஆண்களை, முடிக்காதீர்கள் என்று விழிக்கும் அல்குர்ஆன் பெண்கள் விடயத்தில் முடித்திக்கொடுக்காதீர்கள் ஏன்று விளிக்கிறது. இதுவும் ஒரு பெண் தானாக முடித்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு சான்றாகும்.
ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பினால் பொறுப்பாளரிடத்தில் எடுத்துரைக்கலாம், ஒரு பெண்ணும் அப்படி செய்யலாம்.
ஸஹ்ல் இப்னு ஸஃத்(ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை அன்பளிப்புச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(இனி) எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை’ என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் ‘இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்’ என்று கூறினார்…. (புகாரி: 5029)
ஸாபித் அல் புனானி(ரஹ்) கூறினார்கள்: நான் அனஸ்(ரலி) அருகில் இருந்தேன். அன்னாருடன் அவர்களின் புதல்வியார் ஒருவரும் இருந்தார். (அப்போது) அனஸ்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு கோரியடிப ஒரு பெண் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (மணந்துகொள்ள) நான் தங்களுக்கு அவசியமா?’ எனக் கேட்டார்” என்று கூறினார்கள். அப்போது அனஸ்(ரலி) அவர்களின் புதல்வி, ‘என்ன வெட்கங்கெட்டத் தனம்! என்ன அசிங்கம்! என்ன அசிங்கம்!” என்று கூறினார். அனஸ்(ரலி), ‘அந்தப் பெண்மணி உன்னைவிடச் சிறந்தவர்; அந்தப் பெண் நபியவர்களை (மணந்து கொள்ள) ஆசைப்பட்டார். எனவே, தன்னை மணந்து கொள்ளுமாறு கோரினார்” என்று கூறினார்கள். (புகாரி: 5120)
قَالَتْ اِحْدٰٮہُمَا يٰۤاَبَتِ اسْتَاْجِرْهُ اِنَّ خَيْرَ مَنِ اسْتَـاْجَرْتَ الْقَوِىُّ الْاَمِيْنُ
(அப்போது) அவ்விருவரில் ஒருத்தி “என் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கூலிக்கு வைத்துக் கொண்டவர்களில் நிச்சயமாக (இவர்) மிகச்சிறந்த பலமிக்கவர், நம்பிக்கைக்குரியவர் ஆவார்” என்று கூறினாள். (28:26)
قَالَ اِنِّىْۤ اُرِيْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَى ابْنَتَىَّ هٰتَيْنِ عَلٰٓى اَنْ تَاْجُرَنِىْ ثَمٰنِىَ حِجَجٍۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَۚ وَمَاۤ اُرِيْدُ اَنْ اَشُقَّ عَلَيْكَؕ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِيْنَ
அ(தற்க)வர் (மூஸாவிடம்) “நீர் எனக்கு எட்டு வருடங்கள் (ஆடு மேய்த்து) வேலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனையின்மீது என்னுடைய இவ்விரு குமாரத்திகளில் ஒருத்தியை நான் உமக்குத் திருமணம் செய்து கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன், நீர் (அதைப்) பத்துவருடங்ககளாகப் பூர்த்தி செய்தால் (அது உம்விருப்பப்படி) உம்மிடத்திலிருந்தாகும், நான் உமக்கு சிரமத்தை உண்டாக்க நாடவில்லை, அல்லாஹ் நாடினால், நீர் என்னை நல்லவர்களில் உள்ள (ஒரு)வராகவே காண்பீர்” என்று கூறினார். (28:27)
குர்துபீ இமாமவர்கள் அவர்களது தப்ஸீரில் பின்வருமாறு கூறினார்கள்:
“நான் உங்களுக்கு மணம் முடித்துவைக்க விரும்புகிறேன்” (28:27) என்ற வசனம். இதில் தந்தை தன் மகளை ஒரு நல்லவருக்கு மணந்துக் கொடுக்க விரும்புவது பற்றி கூறப்பட்டுள்ளது; இது ஓர் நேர்த்தியான வழிமுறையாகும், ஷுஐப் நபியவர்கள் தன் மகளை முடித்துவைப்பதாக மூஸா நபியிடம் கூறினார்கள். உமர் ரலி அவர்கள் தனது மகளான ஹப்ஸாவை அபூபக்ர் ரலி மற்றும் உஸ்மான் ரலி ஆகியோருக்கு மணமுடித்துக் கொடுக்க முன்வந்தார்கள். மேலும், சில பெண்கள் தாங்களே நபி (ஸல்) அவர்களுக்கு மணம் முடிக்க முன்வந்தனர். எனவே, தந்தை தனது மகளை அல்லது பெண் தன்னைத்தானே ஒரு நல்லவருக்குத் திருமணம் செய்ய அனுமதி கேற்பது அனுமதிக்கப்பட்டதே. இது ஸலப் எனும் முன்னோர்கள் வழிமுறையாகும். “ஹப்ஸா விதவை ஆனபோது, உமர் ரலி உஸ்மான் ரலி அவர்களிடம் சென்று ‘நீங்கள் விரும்பினால், நான் உங்களுக்கு ஹப்ஸா பின் உமரை மணமுடித்து தருகின்றேன்’ இந்த ஹதீஸை புகாரி (4005) அவர்கள் பதிவுசெய்துள்ளார்கள். (தப்ஸீர் குர்துபீ)
உலகம் முறையாக இயங்குதல்!
மனிதன் தன் மனைவி மக்களுக்காக உழைக்கிறான், வாழ்வாதாரத்தைத் தேடுகின்றான், பிள்ளை குட்டிகளின் சந்தோசத்திற்காகவே உலகில் பல முயற்சிகளை செய்கின்றான். அப்படியானால் இந்த உலகத்தின் முன்னேற்றம் ஒரு சீரண குடும்ப உருவாக்காத்திற்கு பின்னால் இருக்கின்றது என்பதை புரியலாம்.
அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள் ஆண்கள் பெண்களை நிறுவகிக்க தகுதி பெற்றிருப்பதே அவன் செலவளிக்கின்றான் என்பதனால் தான். அப்படியானால் அவன் உழைப்பதற்கு வழிகளை உருவாக்க வேண்டும், அது உலகை முன்னேற்றுமல்லவா!
இன்னும் பல சந்தர்ப்பங்களில் குடும்பத்திற்காக செலவிடுவதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது என்றால், இதற்காக உழைக்கும் மனிதனால் உலகம் முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை, இதுவே உலகில் நடந்துகொண்டுமிருக்கின்றது.
اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ ؕ
(ஆண்கள், பெண்களாகிய) அவர்களில் சிலரைக்காண சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலும்,ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்களாவர்,….. (4:34)
وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً ؕ فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ
நீங்கள் பெண்களுக்கு அவர்களுடைய ‘‘மஹரை’ (திருமணக் கொடை) கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் (தங்கள்) மனமாற உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கலாம். (4:4)
اَسْكِنُوْهُنَّ مِنْ حَيْثُ سَكَنْـتُمْ مِّنْ وُّجْدِكُمْ …. وَاِنْ كُنَّ اُولَاتِ حَمْلٍ فَاَنْفِقُوا عَلَيْهِنَّ حَتّٰى يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ فَاِنْ اَرْضَعْنَ لَـكُمْ فَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ ۚ …
உங்கள் வசதி வாய்ப்புக்கேற்ப நீங்கள் எந்த இடத்தில் வசிக்கின்றீர்களோ அந்த இடத்திலேயே அவர்களை (இத்தா) காலத்தில் வசிக்கச் செய்யுங்கள்.… அவர்கள் கர்ப்பமான பெண்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்குச் செலவுக்குக் கொடுத்து வாருங்கள், பின்னர் உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அதற்குரிய கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்… (65:6)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மேலுள்ள (கொடுக்கும்) கை கீழுள்ள (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.’ (புகாரி: 1427,1428, முஸ்லிம்:1873,1874)
மரணத்தின் பின் உயர்த்தியடைதல்!
உலகில் சந்தோஷத்திற்காக திருமணம் முடித்தாலும் அதன் மூலம் மறுமையிலும் பல நலவுகள் கிடைக்கின்றன. அந்த நலவுகள் திருமணத்தின் மூலமே கிடைக்கும் எனும் போது அதன் பெறுமதியை உணரலாம்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: அதிகம் அன்பு காட்டும், பிள்ளை பெற்றெடுக்கும் பெண்களை மணம்முடியுங்கள், ஏனெனில் மறுமையில் ஏனைய சமூகங்களைவிட நான் அதிக எண்ணிக்கையுடையவகனாக இருப்பேன். (அபூதாவூத்:2050, இப்னுஹிப்பான்:4028, ஹஸன் தரத்தில் உள்ளது)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் மூன்று விடயங்கள் (மூலம் நன்மை கிடைப்பதை) தவிர்த்து,அவனது செயல் நின்றுவிடும்; 1.நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் நல்ல குழந்தை. (முஸ்லிம்: 3358)
அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், ‘இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்’ என்று கூறினார்கள்’ (புகாரி: 101)
ஆயிஷா(ரலி) ரலி அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் பிள்ளைகளில் ஒன்றின் மூலம் யார் சோதிக்கப்பட்டு, அவளுக்கு நல்லது செய்வாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்’ என்றார்கள். (புகாரி: 5995, முஸ்லிம்:5125)
எனவே நாமும் இந்த வழிகாட்டல்களை காட்டித்தந்த இஸ்லாத்தின் பெறுமதியை விளங்கி, எமது வாழ்க்கையில் இஸ்லாத்தை எல்லா கோணத்திலும் பின்பற்றி வாழ்ந்து உண்மை முஸ்லிமாக மரணிக்க முயற்சிப்போம்! அல்லாஹ் அதற்கு துணைபுரிவாக!
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ