سُورَةُ الْفِيل
ஸூரதுல் பீல்
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!
பெயர்: ஸூரதுல் பீல் (யானை)
இறங்கிய காலப்பகுதி: மக்கீ
வசனங்கள்: 5
சிறப்பு:
இந்த ஸூரா மூலம் மக்கா வாசிகளான குறைஷிகளுக்கு அல்லாஹ் செய்த ஒரு அருளையே நினைவூட்டுகிறான், அது தான் கஃபா எனும் இறை ஆலயத்தை அழிக்க வந்த அப்ரஹாவுடைய யானைப் படையை அழித்து, குறைஷிகளுக்கு உதவிசெய்த அந்த அருள். உண்மையில் இந்த நிகழ்வு நடக்கும்போது நபியவர்கள் பிறந்தே இருக்கவில்லை எனும்போது இதனை நபியவர்கள் எடுத்துரைக்கின்றார்கள் என்றால், அந்த அருளை நினைவூட்டுவதோடு, நபியவர்கள் பிறப்பதற்கு முன் நடந்த நிகழ்வை எடுத்துரைப்பதன் மூலம் தான் இறைச் செய்தியை எடுத்து சொல்பவன் (நபி) என்பதையும் உறுதிப்படுத்துகிறார்கள். இதனையே அல்லாஹ் கேள்விகேற்கும் தோரணையில் தெளிவுபடுத்துகிறான்.
இந்த ஸூரா எடுத்துரைக்கும் அந்த நிகழ்வு சுருக்கமாக!
இது யானை கூட்டத்தையுடையவர்களின் (அஸ்ஹாபுல்பீல்) கதையாகும், சுருக்கமாகவும் எளிய முறையிலும் விளக்கப்பட்டுள்ளது. முன்னதாக அஸ்ஹாபுல்உக்தூத் (கிடங்குவாசிகள்) வரலாற்றில் கூறியதுபோல், ஹிம்யரின் கடைசி அரசரான “தூ நுவாஸ்” அவன் ஒரு இணைவைப்பாளனாக இருந்ததோடு, அவனே, சுமார் இருபது ஆயிரம் வரை இருந்த கிறிஸ்தவர்களான கிடங்குவாசிகளை கொன்றான். அவர்களில் ஒரே ஒருவன் “தவ்ஸ் எனும் தூ ஸஃலபான்” உயிருடன் தப்பி ஓடினான்.
அவன் சிரியாவின் கிறிஸ்தவ மன்னர் கைசர் அவர்களிடம் சென்று உதவி கேட்டான். எனவே கைசர், அவனுக்கு உதவிக்காக அவர்களுக்கு பக்கத்தில் இருந்த எத்தியோப்பியாவின் மன்னர் நஜாஷிக்கு கடிதம் எழுதினார், எனவே நஜாஷி, இரு பிரதான அதிகாரிகளான ‘அரியாத் மற்றும் அபூயக்ஸூம் அப்ரஹா இப்னுஸ்ஸபாஹ்’ ஆகிய இருவரையும் ஒரு பெரிய படையுடன் அனுப்பினார். அவர்கள் யமனை நோக்கிச் சென்று, நகரங்களை ஆக்கிரமித்து, ஹிம்யர் குலத்தின் அரசாட்சியை கைப்பற்றினர். தூநுவாஸ் கடலில் மூழ்கி உயிரிழந்தான், இதனால் எத்தியோப்பியர்கள் யமனின் அரசாட்சியைக் கைப்பற்றி, ஆட்சி அமைத்தனர்,
இந்த நிலையில், யமன் நாட்டின் இரு பிரபல ஆட்சியாளர்கள் ‘அரியாத்தும் அப்ரஹவும்’ அதிகாரத்தில் மோதிக்கொண்டனர். அவர்கள் இருவரும், நாங்களே எதிரெதிரே படைகளை நிறுத்தி போரிடுவது முறையற்றது என்று முடிவுசெய்தனர். அதன் பெயரால், ஒருவரை ஒருவர் நேரடியாக சண்டையிட அழைத்தனர். யார் ஜெயிக்கிறாரோ அவர் அரசராக ஆட்சி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அரியாத்தும் அப்ரஹவும் சண்டையிட்டனர். சண்டையின் போது, அரியாத் தனது வாளால் அப்ரஹ்வின் முகத்தை காயப்படுத்தி, மூக்கையும் வாயையும் வெட்டினான். ஆனால் அப்போது அப்ரஹ்வின் விசுவாசமான அடிமை ‘அதவ்தா’ என்பவன் அரியாத்தை கொன்றான். அப்ரஹா குணமாகிய பிறகு, யமனில் முழுமையான ஆட்சியையும் பொறுப்பேற்று அரசராக நிலைநிறுத்திக் கொண்டான்.
அதனால் நஜாஷி மன்னன் அப்ரஹ்வின் மீது கோபமடைந்து, அவரின் நாட்டை அடக்குவேன் என்றும், அவரின் முன்நெற்றி ரோமத்தை வெட்டுவேன் என்றும் சபதம் செய்தான். இதனை அறிந்த அப்ரஹா பயந்து, நஜாஷியின் கோபத்தை அடக்க முயன்று, நஜாஷிக்கு பல பொருட்களையும் விலைமதிப்பான பரிசுகளையும் அனுப்பி, கூடுதலாக, யமன் நாட்டின் மண்ணை ஒரு மூட்டையில் நிரப்பி, தனது முன்நெற்றி ரோமத்தையும் வெட்டி அதைச் சேர்த்து அனுப்பினான். நஜாஷிக்கு எழுதிய கடிதத்தில், “மன்னரால் இந்த மண்ணை தன் காலால் மிதித்து சத்தியத்திற்கு பரிகாரம் நிறைவேற்றலாம், மேலும் என் தலை முடியும் உங்களிடம் உள்ளது” என்று கூறினான். இதனால் நஜாஷி மகிழ்ந்து, அப்ரஹ்வின் செயலால் திருப்தியடைந்து, அவரை யமனின் ஆட்சியாளராக ஒப்புக்கொண்டான். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அப்ரஹா நஜாஷிக்காக யமனில் ஒரு பெரிய ஆலயம் கட்டுவதாக வாக்குறுதி அளித்தான். பின்னர் அவன் ஸன்ஆவில் உயரமான, அழகாக அலங்கரிக்கப்பட்ட, வியப்பூட்டும் ஆலயத்தை கட்டினான். அதை அரபுகள் “அல்குல்லைஸ்” என்று அழைத்தார்கள், ஏனெனில் அதன் உயரத்தை பார்த்தால் தொப்பி கீழே விழும் அளவிற்கு அது உயரமாக இருந்தது.
மேலும் அப்ரஹதுல்அஷ்ரம், மக்காவில் உள்ள கஃபா ஆலயத்தில் நடைபெறும் ஹஜ் வணக்கத்தை தான் கட்டிய ஆலயத்திற்கு மாற்ற நினைத்து, இதனை அவர் தனது நாட்டில் அறிவித்தான்.
ஆனால், அராபியர்களான அத்னானியர்களும் கஹ்தானியர்களும் இதனை கடுமையாக வெறுத்தனர், குறிப்பாக ஒரு சில குரைஷிகள் இரவோடிரவாக அந்த ஆலயத்துக்குள் சென்று அசுத்தப்படுத்திவிட்டு,அங்கிருந்து தப்பி செல்லும் அளவுக்கு குறைஷி வம்சத்தினர் மிகவும் கோபமடைந்தனர். அந்த ஆலயத்தின் பராமரிப்பாளர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, தங்கள் அரசன் அப்ரஹாவிடம் புகார் கொடுத்த அவர்கள்,: “இதனை குரைஷ் மக்கள், தங்களின் பரிசுத்த கஃபா ஆலயம் மீதான கண்ணியத்திற்காக செய்துள்ளனர், ஏனெனில் நீங்கள் அதற்கு இதனை ஒப்பாக்கியுள்ளீர்கள்” என்று கூறினார். இதனால் மிகவும் கோபமடைந்த அப்ரஹா, “நிச்சயமாக நான் மக்காவிற்கு சென்று கஃபாவை ஒவ்வொரு கல்லாக கழட்டி முற்றிலும் அழிப்பேன்!” என்று சபதம் செய்தான் .
முகாதில் இப்னு ஸுலைமான் அவர்கள் கூறும்போது; ‘குரைஷி இளைஞர்கள் சிலர் அப்ரஹா கட்டிய ஆலயத்திற்குள் சென்று அதில் தீ மூட்டினர். அந்த நாள் மிகவும் காற்றுள்ள நாளாக இருந்ததால், தீ பரவிச் சிதறி ஆலயம் முழுவதும் எரிந்து தரையில் விழுந்தது.’ என்று பதிவு செய்துள்ளார்கள்.
இதனால் அப்ரஹா மிகவும் கோபமடைந்து, பெரிய அளவிலான படையுடன் மக்காவை நோக்கி புறப்பட்டு, யாரும் அவரை தடுத்து நிறுத்த முடியாதபடி சிறந்த ஆயுதங்களையும் வீரர்களையும் உடன் சேர்த்துக்கொண்டு, மன்னர் நஜாஷி அவருக்கு அனுப்பிய “மஹ்மூத்” என்ற மிகப் பெரிய யானையை உடன் சேர்த்துக் கொண்டு வரலானான். சில வரலாற்றாசிரியர்கள் அவருடன் எட்டு யானைகள் இருந்ததாகவும், மற்றவர்கள் பன்னிரண்டு யானைகள் இருந்ததாகவும் கூறுகிறார்கள். அப்ரஹாவின் திட்டம் யானையின் கழுத்தில் சங்கிலிகளை கட்டி, கஃபாவின் சுவறுகளில் அவற்றை கட்டி, இழுக்க செய்வதன் மூலம் விழவைத்து, கஃபாவை முற்றிலும் அழிக்க செய்வதாக இருந்தது.
இந்த செய்தியை அறிந்த அராபியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கஃபாவை பாதுகாக்க கடமைப்பட்டதாக உணர்ந்து, அவனை எதிர்க்க தீர்மானித்தனர். முதலில் யமனின் ஒரு முக்கிய அரசர் மற்றும் தலைவரான “தூநபர்” தனது மக்களில் உடன்பட்ட சில அராபியர்களையும் அழைத்து, அப்ரஹாவை எதிர்த்துப் போராட முடிவெடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு, அவர்கள் தோல்வியடைந்தனர், மேலும் “தூநபர்” கைதியானார், அப்ரஹா அவரையம் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஹிஜாஸ் நோக்கிச் சென்றான். கஸ்அம் என்ற இடத்தில் “நுபைல் இப்னு ஹபீப் அல்-கஸ்அமி” அவர்கள், “ஷஹ்ரான், நாஹிஸ்” ஆகியோருடன் ஒரு கூட்டத்தோடு சேர்ந்து அப்ரஹாவை எதிர்த்தார். ஆனால் அவர்களையும் தோல்வியடையச்செய்து, நுபைலை கைதுசெய்து, கொலைசெய்ய முற்பட்டான், பிறகு மக்காவுக்கு வழிகாட்டியாக தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.
அப்ரஹா தாஇப் நகருக்கு அருகில் சென்றபோது ஸகீப் குலத்தினர், “அல்லாத்” எனும் ஆலயத்தை தாக்குவார்கள் என்று மிகவும் அஞ்சி, தங்களை பாதுகாக்க அப்ரஹாவுடன் சமரசம் செய்து, அவருக்கு வழிகாட்டியாக “அபூ ரிஆல்” என்பவரை அனுப்பினர்.
அப்ரஹா மக்காவுக்கு அருகிலுள்ள “அல்-முகம்ஸ்” என்ற இடத்தில் தரையிறங்கி, மக்கா வாசிகளுக்கு சொந்தமான செம்மறியாடுகளையும், விலங்குகளையும் கொள்ளையடிக்குமாறு தன் படையினருக்கு ஆணையிட்டான். அவற்றில் அப்துல்முத்தலிப் அவர்களுக்கு சொந்தமான 200 ஒட்டகங்களும் அடங்கின. அடுத்து, அப்ரஹா, “ஹுனாததுல் ஹிம்யரி” என்பவரை மக்காவிற்கு அனுப்பி, “மன்னர் உங்கள் மீது போர் செய்ய வரவில்லை, கஃபாவை மட்டுமே அழிக்க வந்துள்ளார், நீங்கள் எதிர்த்து போரிடாமல் ஒதுங்கினால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை.” என்று கூறி, குரைஷிகளின் முக்கியஸ்தரை அழைத்து வரச் சொன்னான். ஹுனாதா மக்காவிற்கு வந்து அப்துல்முத்தலிபை சந்தித்து, அப்ரஹாவின் செய்தியை எடுத்துச் சொன்னான். இதற்கு அப்துல்முத்தலிப்: “எங்களால் அவனை எதிர்த்துப் போர் செய்ய முடியாது. இது இப்ராஹீம் அவர்கள் கட்டிய இறைவனின் பரிசுத்த ஆலயம், இறைவன் தன் இல்லத்தை காப்பாற்றினால் அவன் காப்பாற்றுவான், இல்லை என்றால் எங்களுக்கு அதைத் தடுக்க ஆற்றல் இல்லை.” என்று கூறி, தன்னை அப்ரஹாவிடம் அழைத்து செல்லுமாறு கூற, அவன் அழைத்து சென்றான், அப்ரஹா அப்துல்முத்தலிபைப் பார்த்ததும் அவரின் அழகு, கண்ணியமான தோற்றம் மற்றும் நடத்தை மீது கவரப்பட்டு, தன் ஆசனத்திலிருந்து இறங்கி அவருடன் தரையில் அமர்ந்து, தனது மொழிபெயர்ப்பாளரிடம்: “அவரது விருப்பத்தை தெரிவிக்குமாறு.” கூறியபோது, அப்துல்முத்தலிப் அவர்கள்: “எனது 200 ஒட்டகங்களைத் திருப்பி அனுப்ப வேண்டும்.” என்று பதிலளிக்கவே, அதிர்ச்சியடைந்த அப்ரஹா: “உம்மைப் பார்த்ததும் நான் கவரப்பட்டேன், ஆனால் உம்முடைய கோரிக்கையை கேட்டதும் உம் மதிப்பு குறைந்துவிட்டது, நானோ உம் மத ஆலயத்தை உடைக்க வந்திருக்கிறேன், அதைப் பற்றி நீர் ஒரு வார்த்தையும் பேசாமல், உம் ஒட்டகங்களைப் பற்றி பேசுகிறீரே!” என்று கூற, அப்துல்முத்தலிப் அவர்கள் அமைதியுடன்: “நான் ஒட்டகங்களின் உரிமையாளன்; அந்த ஆலயத்துக்கு அதன் உரிமையாளன் இருக்கிறான், அவன் அதைக் காப்பான்.” என்று பதில் கூறவே, கோபமுற்ற அப்ரஹா: “என்னிடமிருந்து அது காப்பாற்றப்பட மாட்டாது!” என்று கூற, அப்துல்முத்தலிப் அமைதியாக: “அது உனக்கும் இறைவனுக்கும் இடையிலான விஷயம்” என்றார்.
குரைஷ் தலைமையிலான அராபிய தலைவர்கள் சிலர் அப்துல்முத்தலிபுடன் சேர்ந்து அப்ரஹாவிடம் சென்று, ‘அவன் மக்கா மீது தாக்குதல் நடத்தாமல் திரும்பிச் செல்லும் பட்சத்தில் திகாமாவின் (மக்காவின் ஒரு பெயர்) மூன்றிலொரு செல்வத்தை வழங்க முன்மொழிந்தனர்.’ ஆனாலும் அதனை மறுத்த அப்ரஹா, அப்துல்முத்தலிபின் ஒட்டகங்களை மீண்டும் அவருக்கு திருப்பிக்கொடுத்தார். என்று பதியப்பட்டுள்ளது.
பின்னர், மக்காவிற்கு திரும்பி சென்ற அப்துல்முத்தலிப், குரைஷி மக்களை அழைத்து, தங்கள் உயிரைக் காக்கும் முகமாக மக்காவை விட்டு வெளியேறி, அருகிலுள்ள மலைகளில் தஞ்சம் புகுமாறு கட்டளையிட்டார். பின்னர், அவர், சில குரைஷி தலைவர்களுடன் சேர்ந்து கஃபாவின் கதவுப் பிடவையைப் பிடித்துக் கொண்டு, தம் ஆலயத்தைக் காக்குமாறு வேண்டி அல்லாஹ்வை பிரார்த்தித்து:
لَاهُمَّ إِنَّ الْعَبْدَ يَمْـ … نَعُ رَحْلَهُ فَامْنَعْ حِلَالَكْ
لَا يَغْلِبَنَّ صَلِيبُهُمْ … وَمِحَالُهُمْ غَدْوًا مِحَالك
“இறைவா! மனிதன் தன் வீட்டைப் பாதுகாப்பதுபோல்,நீயும் உன் இடத்தைக் காப்பாற்று.
அவர்களது சிலுவையம், சூழ்ச்சியும்,உன் ஆலயத்தை மிகைக்காமலிருக்கட்டும்.”
என்று கூறிவிட்டு, மலைமீது ஏறிக்கொண்டார்.
முகாதில் இப்னு சுலைமான் அவர்கள் கூறும் போது, “அவர்கள் அல்லாஹ்வுக்காக என்று கஃபாவின் அருகில் 100 ஒட்டகங்களை விட்டு விட்டனர், எதிரிகள் அவற்றில் ஏதாவது ஒன்றைக் கொள்ளையடித்தால் இறைவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கையில் அப்படி செய்தனர்.”என்று கூறினார்.
அடுத்த நாள், அப்ரஹா தனது பெரிய யானை “மஹ்மூத்” உட்பட அனைத்து யானைகளையும் தயார்செய்து, தனது படையுடன் மக்காவை நோக்கி செல்லத் திட்டமிட்டான். அப்போது, அப்ரஹாவின் பிடியில் இருந்த “நுபைல் இப்னு ஹபீப்” “மஹ்மூத்” என்ற யானையின் அருகே சென்று, அதன் காதைப் பிடித்து: “அருள்செய் மஹ்மூத்! அமர்ந்து விடு! நீ வந்த வழியே திரும்பிச் சென்றுவிடு, இது அல்லாஹ்வின் சங்கையான ஊராகும்.” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு, அவர் ஓடிச்சென்று மலையில் ஏறிக்கொண்டார்.
அப்ரஹாவின் வீரர்கள் யானையை எழுப்பிவிட முயன்றனர். அவர்கள் யானையை அடித்தும், அதன் தலைக்கு குத்தியும், அதன் தோலுக்குள் கிழித்து வலியுறுத்தியும் முயன்றனர். ஆனால் யானை நகர மறுத்தது. அவர்கள் அதை யமன் நோக்கியும், சிரியா நோக்கியும், கிழக்கு நோக்கியும் திருப்பினர், அது விரைந்து செல்வதற்கு தயாரானது. ஆனால் மக்கா நோக்கித் திருப்பியபோது தரையில் அமர்ந்துவிட்டது, நகர மறுத்தது.
அப்போது அல்லாஹ் கடலிலிருந்து மூன்று கட்களுடன் குருவிகள் போன்ற பறவைகளை அவர்களுக்கு எதிராக அனுப்பினான். அவைகள் அந்த கற்களை எறிய, அந்தக் கற்கள் யாரை தாக்கினவோ அவர்கள் அழிந்துவிட்டனர். அதே நேரத்தில் எல்லோரையும் தாக்கவுமில்லை, அவர்கள் தப்பிக்க முந்தி செல்ல முயன்றார்கள், மேலும் வழியைக் காட்ட நுபைலைத் தேடினர். நுபைலோ மலைச் சிகரத்தில் குரைஷி மற்றும் ஹிஜாஸ் அரபியர்களுடன் சேர்ந்து, யானை பரிவாரத்தின்மீது அல்லாஹ் ஏற்படுத்திய தண்டனையைப் பார்த்து கொண்டிருந்தார். அவர்:
“أينَ المَفَرُّ والإلهُ الطَّالب – والأشرمُ المغلوبُ غَيْرُ الْغَالِبْ”
“அல்லாஹ் அவர்களைப் பின்தொடரும் நிலையில் தப்புவதற்கு எங்கு செல்ல முடியும்?, அஷ்ரம் எனும் அப்ரஹாவோ வெற்றியாளன் அல்ல, தோற்கடிக்கப்பட்டவன் தான்.”
என்று கூறிக்கொண்டிருந்தார்.
வாகிதி அவர்கள் கூறும்போது: ‘அதே நேரத்தில் அப்துல்முத்தலிப் மற்றும் மக்கா தலைவர்களான அல்முத்இமுப்னு அதிய், அம்ரிப்னு ஆஇத், மஸ்ஊது ஸ்ஸகபீ போன்ற சிலரும் ஹிரா மலையில் இருந்து அவற்றைப் பார்த்து கொண்டிருந்தனர். பறவைகள் கூட்டங்கூட்டமாக வருவதைக் கண்டனர். அவற்றின் கால்கள் சிவப்பாகவும், உடல்கள் மஞ்சளாகவும் இருந்தன. ஒவ்வொரு பறவையும் மூன்று கற்களைக் கொண்டு வந்து, அவற்றை அப்ரஹாவின் சேனைகளின் மீது வீசின. அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர்.’ என்று கூறினார்கள்.
அப்ரஹாவின் அழிவு:
அப்ரஹா உடல் உறுப்புகள் ஒன்று ஒன்றாகக் கரைந்து, இறுதியில் தனது நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு இறந்துவிட்டான். மேலும், குரைஷ் மக்கள் அப்ரஹாவின் சேனைகளின் சொத்துக்களைப் போரிலிருந்து கிடைக்கப்பெற்றனர். அப்துல்முத்தலிப் அதிகளவிலான பொன்னைப் பெற்றார்.
இது யானைப் படையெடுப்பு சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறது, இது “ஆமுல் பீல்” என்ற பிரபலமான வருடத்தில் நடந்தது. (இந்த வரலாற்று குறிப்பு இப்னு கஸீரில் பதியப்பட்டுள்ளது.)
இப்னு இஸ்ஹாக் ரஹ் அவர்கள், யஃகூப் இப்னு உத்பா அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதாக கூறினார்கள்: “அரேபிய பூமியிலே (போலியோ, சின்னம்மை) தொற்றுநோய்க் கிருமிகள் முதன்முதலாக அந்த ஆண்டு தோன்றின எனவும், மரங்களின் கசப்பான பழங்கள் கசப்பான கனிகளும் (ஹர்மல், ஹந்தல், உஷர்) முதன்முதலாக அந்த ஆண்டு தோன்றின எனவும் கூறப்பட்டது.” வரலாற்றுக்கு குறிப்பு இப்னு கஸீர்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِيْلِؕ
اَ ஆ உருபு/ கேள்வி கேட்பதற்கு பாவிக்கப்படும், لَمْ تَرَ நீர் பார்க்கவில்லை, كَيْفَ எப்படி/எவ்வாறு, فَعَلَ செய்தான், رَبُّكَ உம் இறைவன், الْفِيْلِ யானை, اَصْحٰبِ தோழர்கள்/உடையவர்கள்
(நபியே! அப்ரஹாவின்) யானைக்காரர்களை உமதிரட்சகன் எவ்வாறு செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (105:1)
اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِىْ تَضْلِيْلٍ
اَلَمْ يَجْعَلْ அவன் ஆக்கவில்லையா, كَيْدَ சூழ்ச்சி, هُمْ அவர்கள், فِىْ லே/ல், تَضْلِيْلٍ வீணாகுத்தல்/பாழாக்குதல்
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிடவில்லையா? (105:2)
وَّاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَۙ تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ
وَّاَرْسَلَ இன்னும் அனுப்பினான், عَلَيْهِمْ அவர்கள் மீது, طَيْرًا பறவைகள், اَبَابِيْلَ கூட்டங்கூட்டமாக, تَرْمِيْ அவள் எறிவாள்/கிறாள், همْ அவர்கள், بِ கொண்டு/மூலம், حِجَارَةٍ கற்கள், مِّنْ நின்றும்/இருந்து, سِجِّيْلٍ சுடப்பட்ட களிமண், فَ ஆகவே/எனவே, جَعَلَ அவன் ஆக்கினான், هُمْ அவர்கள், كَ போன்று/போல், عَصْفٍ வைக்கோல், مَّاْكُوْلٍ திண்ணப்பட்டது
மேலும், அவர்கள் மீது (கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவை எறியும் நிலையில், 3, அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பி, தின்னப்பட்ட வைக்கோல்களைப் போல் அவர்களை அவன் ஆக்கி அழித்துவிட்டான்.. (105:3,4,5)
சில சொற்களுக்கான விளக்கங்கள்:
இப்னு ஹிஷாம் அவர்கள் கூறினார்கள்: “அபாபீல் என்றால் கூட்டங்கள் என்று அருத்தம், அதற்கு அரபுகளிடம் ஒருமை பாவிக்கப்பட்டதில்லை, ஸிஜ்ஜீல் என்றால் உறுதியானது, கடினமானது, என்று பொருள், சில விரிவுரையாளர்கள் இதனை (சன்ஞ், ஜல் என்ற) இரண்டு பாரசீகச் சொற்களை ஒரே சொல்லாக இணைத்ததாகக் கூறுகின்றனர். சன்ஞ் என்பது கல், ஜல் என்பது மண் என்று அர்த்தம். அதாவது, கல்லும் மண்ணும் சேர்ந்த கற்கள் என்று கூறினார். (இப்னு கஸீர்)
அல்அஸ்ப் (العصفُ) என்பது அறுவடை செய்யப்படாத தானியத்தின் இலைகள் என்று கூறினர். அதன் ஒருமை அஸ்பா (عصفة) ஆகும்.” அபூ ஸலமா பின் அப்துர் ரஹ்மான் அவர்கள் கூறும்போது: “தய்ரன் அபாபீல்” என்பது குழுக்களை குறிக்கின்றது.” என்று கூறினார், இப்னு அப்பாஸ் மற்றும் அல் ளஹ்ஹாக் ஆகியோர் கூறும் போது: “அபாபீல்” என்பதன் பொருள், ஒன்றையொன்று பின்தொடரும் குழுக்கள். என்று கூறினார். ஹஸனுல் பஸரி, கதாதா போன்றார்: அதிகமான பறவைகள். என்றும், முஜாஹித்: பல்வேறு புறங்களில் இருந்து வருபவை. என்றும், இப்னு சைத்: எல்லா திசைகளிலிருந்தும் வந்த வித்தியாசமான பறவைகள், என்றும் கூறினார்கள். சில இலக்கண அறிஞர்கள் அபாபீல் என்பதன் ஒருமை “இப்பீல்” என்றும் கூறினார்கள். இப்னு ஜரீர் அவர்கள் கூறினார்கள்: சில அறிஞர்கள் இதனை “ஒருங்கிணைந்த ஒட்டகக் குழுக்களைப் போல” கூட்டம்கூட்டமாக வருபவை என்று விளக்கினர்.
இப்னு அப்பாஸ் கூறினார்கள்: ‘அவைகளுக்கு பறவைகளின் தும்பிக்கைகளைப் போல தும்பிக்கைகளும், நாய்களின் முன்னங் கைகளைப் போல முன்னங் கைகளும் இருந்தன.’ இக்ரிமா அவர்கள் கூறியதாவது: ‘அவை கடல் பகுதியிலிருந்து வந்த பச்சை நிற பறவைகள், வேட்டைப் பிராணிகளின் தலைகளைப் போன்ற தலைகளும் இருந்தன.’ உபைத் பின் உமைர் கூறினார்கள்: ‘அவை கருப்பு நிற கடல் பறவைகள், அவற்றின் கால்களிலும் அலகுகளிலும் கற்கள் இருந்தன.’
இப்னு அப்பாஸ் ரலி கூறினார்கள்: ‘ஸிஜ்ஜீல் என்றால் கற்கள் கலந்த களிமண்’ அது “ஸன்க், கில்” என்ற சொற்களால் இணைந்து வந்தது’. ஸஈத் பின் ஜுபைர் ரஹ் அவர்கள் : அஸ்ப் என்றால் வைக்கோல், கோதுமை தோல் என்றும், மஃகூல் என்றால் மிருகங்களுக்கு வெட்டப்படும் புல்லு என்றும் கூறினார்கள், இவ்வாறே ஹஸனுல் பஸரீ ரஹ் அவர்களும் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள்: “அஸ்ப்” என்பது கோதுமையின் தோலைப்போன்ற தானியத்தின் மீது இருக்கும் தோலைக் குறிக்கிறது.” என்று கூறினார்கள். இப்னு ஸைத் ரஹ் அவர்கள்: “அஸ்ப்” என்பது பயிர்களின் இலைகள் மற்றும் கீரைகள்; அவற்றை மிருகங்கள் சாப்பிட்டு மலமாகும் போது சருகாக மாறுகிறது.’ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் சொற்களுக்கான விளக்கங்களை பின்வருமாறு பதிந்தார்கள்:
ஸிஜ்ஜீல் என்ற சொல்லின் பொருள் குறித்து கருத்து வேறுபாடு இருக்கின்றது,
சிலர்: ஸிஜ்ஜீல் என்பது ஸிஜ்ஜீன் என்பதின் மாற்றம் எனக் கூறுகின்றனர், ஸிஜ்ஜீன் என்பது நெருப்பு ஆகும். இன்னும் சிலர்: “ஸிஜ்ஜீல் என்பது ஸிஜில்லு (பதிவேடு) என்பதிலிருந்து வந்ததாகவும், அது இறைமறுப்பாளர்களின் தண்டனை எழுதப்பட்ட ஏடாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர், ஸிஜ்ஜீன் என்பது அவர்கள் செயல்களின் பதிவுப் புத்தகமாகும். ஸிஜ்ஜீல் என்பது இஸ்ஜால் என்பதிலிருந்து வந்த சொல்லாகும், அது அனுப்புதல் எனும் பொருள் கொண்டது, இதன் அடிப்படையில் ஸிஜ்ஜீல் என்பது அனுப்பப்பட்ட கற்கள் எனக் கொள்ளலாம், ஏனெனில் இறைவன் கூறியுள்ளான்: “அவர்கள் மீது கூட்டஙகூட்டமாக பறவைகளை அனுப்பினான்.” சிலர்: ஸிஜ்ஜீல் என்பது களிமண் மற்றும் கல் என்பதின் சேர்க்கை என்றும், இன்னும் சிலர்: அதற்கான பொருள் கடுமை என்றும் சொல்கிறார்கள்.
இப்படி பல கருத்துக்களை பதிந்த இமாமவர்கள்; ‘இது கடும் பலமான களிமண்ணால் உருவாக்கப்பட்டது.’ என்பதை ஏற்றமான கருத்தாக கூறிவிட்டு, இதற்கு அல்-தாரியாத் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள வசனத்தை ஆதாரமாக காட்டினார்கள்:
قَالُـوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ طِيْنٍۙ مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِيْنَ
அ(தற்க)வர்கள் நிச்சயமாக நாங்கள் குற்றவாளிகளான ஒரு சமூகத்தார் பால், அவர்களின் மீது, வரம்பு மீறியவர்களுக்காக, உமது இரட்சகனிடத்தில் அடையாளமிடப்பட்ட, களிமண்ணால் செய்த (சுட்ட) கற்களை எறிவதற்காக அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறினார்கள். (51:32,33,34)
இதன் அடிப்படையில் ஸிஜ்ஜீல் என்பது களிமண் மூலம் செய்யப்பட்ட கடுமையான கற்கள் என குறிப்பிட்டு கூறினார்கள்.
மேலும், ஹூத் அத்தியாயத்தின்:
فَلَمَّا جَآءَ اَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّنْ سِجِّيْلٍۙ مَّنْضُوْدٍۙ
நம்முடைய கட்டளை வந்ததும், அவர்களுடைய ஊரின் மேல்பகுதியை அதன் கீழ்ப்பகுதியாக (தலை கீழாக) ஆக்கிவிட்டோம், அன்றியும், (அதற்கு முன்னர்) அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையாகப்) பொழியச் செய்தோம். (11:82)
என்ற வசனத்தையும் ஆதாரமாக முன்வைத்தார்கள். சிலர்: இவை கோதுமை மற்றும் பருப்பு அளவில் சிறிய கற்கள் என்றும் கூறுகின்றனர். (அல்வாஉல் பயான்)
மக்காவை விட்டும் யானை தடுக்கப்பட்டதை பற்றிய நபிகளாரின் கூற்று;
நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவின் போது பயணித்துச் சென்று கொண்டிருந்தார்கள். இறுதியில், மக்காவினுள் இறங்கும் வழியாக அமைந்துள்ள சிறிய மலை ஒன்றை அடைந்ததும் அவர்களின் ஒட்டகம் மண்டியிட்டு அமர்ந்தது. மக்கள் (அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) ‘ஹல் ஹல்’ என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. உடனே, மக்கள், ‘கஸ்வா பிடிவாதம் பிடிக்கிறது, ‘கஸ்வா‘ பிடிவாதம் பிடிக்கிறது‘ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. ஆனால், யானையைத் தடுத்த(இறை)வனே அதையும் தடுத்து வைத்திருக்கிறான்‘ என்று கூறினார்கள். (புகாரி:2731)
பனூ லைஸ் கூட்டத்தார் குஸாஆ கூட்டத்தாரில் ஒருவரைக் கொலை செய்ததற்குப் பிரதியாக அவர்களில் ஒருவரை குஸாஆ கூட்டத்தார் மக்கா வெற்றியடைந்த ஆண்டில் கொன்றுவிட்டார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் தம் வாகனத்தில் அமர்ந்தவர்களாக, ‘சந்தேகமின்றி அல்லாஹ் இந்த(ப் புனித) மக்கா மாநகரில் கொலையை அல்லது யானைப் (படையை) தடை செய்துள்ளான். மேலும் மக்காவாசிகளின் மீது அல்லாஹ் தன்னுடைய தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் ஆதிக்கம் செலுத்த வைத்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை; எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை! எனக்கு கூட (அது) பகலின் சிறிது நேரம்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. (புகாரி: 112, முஸ்லிம்)
இமாம் ஷன்கீதி அவர்கள் குறிப்பிட்டுக் காட்டும் சில குறிப்புகள்:
சுடப்பட்ட கற்கள் என்பது தெளிவாக இருந்தும் சிலர் தன் புத்தியை வைத்து மறுக்க முயற்சித்துள்ளனர்.
அதனை மறுத்தவர்களைப் பற்றி, பக்ருத்தீனுர்ராஸி இமாமவர்கள் பின்வருமாறு விவரித்துள்ளார்கள்: “மக்களில் சிலர் இதனை மறுத்தனர். அவர்கள்: ‘பாரத்தில் பருப்பைப் போன்ற கற்களால் தலையை ஊடுருவி கீழே செல்ல முடியும் என்று நாம் நினைத்தால், பெரிய மலைகள் எடை இல்லாமல் வெறும் புல்லுக்கு சமமாக இருக்கும் என்று நம்மால் நம்ப முடியும். எனவே, கண் பார்வைக்கு அப்பாற்பட்டவைகளை நம்பமுடியாது.’ ‘ஏனெனில் அப்படி ஏற்கமுடியுமென்றால், சூரியனும் சந்திரனும் நம் அருகில் இருக்கலாம் என்றால் அப்படி நாம் கருத்தமாட்டோம், மேலும் குருடன் பார்க்கிறான் என்றால் நாம் ஏற்கமாட்டோம், கிழக்கில் இருக்கும் நிலையில் இஸ்பைனின் ஒரு பகுதியை பார்ப்பதாகக் கருதலாம்; இவை அனைத்தும் சாத்தியமற்றதே.’ என்று கூறுகின்றனர்.
பிறகு, இமாமவர்கள்: “நமது கொள்கையின் அடிப்படையில் இதெல்லாம் சாத்தியமே; ஆனால் வழக்கமான நடைமுறையில் இவை நடக்காது.” என்று கூறினார்கள். இது ஹிஜ்ரி 606 ல் மரணித்த பக்ருத்தீனுர்ராஸி அவர்கள் பதிவாகும்.
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறும்போது;
இதனை தூரமாக நோக்குவது பகுத்தறிவின் அடிப்படையில் முடிவெடுத்ததனால் ஏற்பட்டது என்றே தெரிகிறது. ஆனால் இது தவறு, ஏனெனில் இயல்புக்கு மாற்றமாக நடக்கும் விஷயங்கள் எப்போதும் மானுட அறிவின் வரம்புக்கு அப்பாற்பட்டவையே, மனித அறிவின் கற்பனைகள் தன் கண்ணால் காணும் மற்றும் உணரப்படும் அனுபவங்களிலிருந்து பெறப்பட்டவையே. ஆகவே, கண்ணால் காணாத அல்லது தன் அறிவால் அறிந்திராத ஒன்று புத்திக்கு எடுத்து வைக்கப்படடால் புத்தி அதனை தூரமானதாகவே கருதும், அதுவே இன்று நடப்பதும். ஒளி மற்றும் ஒலியை நாடு விட்டு நாடு கடத்தவும்,, தொலைக்காட்சி காட்சிகளைக் கொண்டு செல்லவும், விமானங்கள் பறக்கும் தகவல்களும் முடியும் என்பதைப் பற்றி முந்தைய களங்களில் கூறியிருந்தால், அப்போதைய அறிவால் அதனைப் புரிந்து கொள்ள முடியாது. ஏன் அவை கண்ணால் கண்டவையோ, அறிவால் அடைந்துகொண்டவையோ அல்ல.
எந்த அளவுக்கெனில், மின்சாரத்தின் அலைகள் கடத்தப்படுகின்றன, அதனால் இப்படி இப்படி நடக்கின்றன என்று அதனை கற்றறிந்த ஒருவர் சொல்லவில்லையென்றால் அதனை ஏற்போம் என்று சொல்லமுடியாது. அப்படியிருக்க அல்லாஹ்வின் சக்திக்கு முன்னால் அதனை யாரால் தடுக்கமுடியும்.
அந்த அல்லாஹ் கூறியதுபோல், அந்தப் பெருமலைகள் ஒருநாள் கொட்டப்பட்ட பஞ்சு போன்றாகி, புல்லைக் காட்டிலும் மென்மையானதாக மாறிவிடும். அல்லாஹ் கூறுகின்றான்:
وَّ سُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ؕ
மலைகளும் (இடம்) பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும். (78:20)
எனவே, பகுத்தறிவால் புரிந்துகொள்ள முடியாது என்பதால் அதை மறுப்பது தவறானது என்பது தெளிவாகிறது. (அல்வாஉல் பயான்)
அதே நேரம் பறவைகள் கொண்டு அழிக்கப்பட்ட யானைப்படை வரலாற்றை ஒரு சில நவீன காலத்தில் வாழ்ந்தவர்கள் மாற்று அருத்தம் (தஃவீல்) செய்தனர், அதற்கும் இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் அழகானதொரு மறுப்பை அல்வாஉல் பயானில் தந்துள்ளார்கள்.
இந்த உண்மை அர்த்தத்தை வேறு ஒரு அர்த்தமாக (தஃவீல் செய்து) விளக்குபவர்கள், அடிப்படையில் முதல் அர்த்தத்துடன் தொடர்புடையவர்கள், ஆனால் அவர்கள் மூலத்தை ஏற்று, புத்தி ஏற்கும் விதத்தில் விளக்கமுற்பட்டனர்.
இது முஹம்மது அப்துஹ் மற்றும் அவரது மாணவர் ஸய்யித் ரஷீத் ரிலா போன்றோர் கருத்தாகும், அவர்கள் “சுடப்பட்ட கற்கள்” என்பதை தொற்று நோய்க் கிருமி என்று விளக்கமுற்பட்டனர், இதனால், “طير أبابيل” (தைரன் அபாபீல்) என்பது ஈ, நுளம்பு என்று விளக்க முற்பட்டனர்.
அறிஞர் ஸையித் குதுப் அவர்கள் இவர்களது கூற்றுக்கு ஒரு காரணத்தை பின்வருமாறு; “அவர்கள் இப்படி கூறியதற்காண காரணம் என்னவெனில், அவர்களது காலத்தில் இஸ்லாதிற்கெதிரான சிந்தனைப் போக்குகளும், இஸ்ரேலிய புனையப்பட்ட (இஸ்ராஈலிய்யத்) செய்திகளின் தாக்கங்களும் காணப்பட்டதும், முஸ்லிம் அல்லாதவர்களிடத்தில் இஸ்லாத்தை மாசுபடுத்துவதற்காக பரப்பப்பட்டிருந்த பொய்களுமாகும். இன்னுமொரு புறத்தில் மனித சிந்தனை உருவாக்கத்தால் உருவான நவீன அறிவியளால் ஏற்பட்ட தாக்கம், அல்குர்ஆன் கூறிய அந்த நிகழ்வு நவீன அறிவியல் கருத்துக்கு முரண்படாமல் நிலைநிறுத்தப்பட்ட வேண்டும் என்பதற்காக ஒரு கிருமித் தொற்று என்று உள்ளம் ஏற்கும் விதத்தில் புரிய வைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியாகும்.” என்று கூறினார், இது ஸையிது குதுப் என்ற அறிஞர் கூறிய காரணத்தின் சுருக்கமாகும்.
ஆனாலும்,
அல்குர்ஆனின் ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி கல்லால் அழிப்பது என்பது இவர்களுக்கு மட்டும் நடந்ததல்ல, மாறாக “حجارة من سجيل” (சுடப்பட்ட கற்கள்) பற்றிய குறிப்புகள், லூத் நபியின் சமூகத்தை அழிக்க பயன்படுத்தப்பட்டதாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான், அவர்கள் அளிக்கப்பட்டபோது கிருமித் தொற்று நோயின் சாத்தியம் எங்கே போனது?
அடுத்து, அது மண்ணினாலானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மண்ணுக்கும் நோய்க் கிருமிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
அடுத்து அறிவியல் சார்ந்து சிந்தித்தால், எங்கிருந்து திடீரென நோய்க்கிருமிகள் வந்தன, அப்பறவைகள் வருவதற்கு முன்னர் எங்கிருந்தன? அந்த கிருமிகள் எப்படி குறைஷிகளையும் எத்தியோப்பியர்களையும் வேறுபடுத்தின? அது ஒரு கூட்டத்தை இவ்வளவு வேகமாக, மென்று துப்பப்பட்ட வைக்கோல் போன்று ஆகிவிடும் அளவுக்கு அழிக்கவல்லது என நிரூபிக்கப்பட்டதா? குர்ஆன் கூறும் ‘பஜஅலஹும்’ என்ற வாசகம் அவர்கள் வேகமாக அழிக்கப்பட்டார்கள் என்பதை உணர்த்துகின்றது, மட்டுமல்ல, ‘அஸ்ப்’ என்பது காற்று தூக்கி செல்லும் அளவுக்கு பாரம் குறைந்த சருகு நிலையை குறிக்கும்.
அடுத்து, நோய் கிருமி எப்போது காரணமின்றி ஒரேயடியாக திடீரென்று தோன்றியது, நவீன அறிவியல் அடிப்படையிலும் புத்திக்கு ஏற்றது என்ற வகையிலும் அது சில சந்தர்ப்பங்ககளில் வெளிப்பட்டு, பிறகு பரவும் என்பதே அடிப்படை, ஆனால் யானை அழிப்பு நிகழ்வு அப்படி சிந்திப்பதை தடுக்கின்றது, ஏனெனில் அந்த பகுதியில் இருந்தவர்களுக்கு அது பரவவில்லை, இந்த அளவுக்கு அதன் தாக்கம் இருக்காது, இவ்வளவு வேகமாக அது வராது என்பது போன்ற காரணங்களால் இந்த வாதம் ஏற்புடையதல்ல என்பதை உள்ளத்துக்கு புத்தி உணர்த்துகின்றது.
இன்னொரு புறத்தில், புத்திக்கு ஏற்புடையதல்ல என்று வழமைக்கு மாற்றமான அற்புத நிகழ்வுகளை மறுத்தால், எப்படி இஸ்லாம் கூறும் (ஈத்த மரக்குற்றி முனங்கியது, நபியவர்களின் விரல்களுக்கிடையில் நீர் வெளிப்பட்டது, கற்கள் அல்லாஹ்வை துதித்ததன போன்ற) அற்புதங்களை ஏற்பது?
புத்தியோ இதனைவிட ஆச்சர்யமான நிகழ்வுகளை ஏற்றிருக்கின்றன, அவை ஸாலிஹ் நபியின் கூட்டத்திற்காக மலையிலிருந்து ஒட்டகம் வெளிப்பட்டது, ஆனாலும் நாங்கள் உணர்வின் மூலமும், புத்தியின் மூலமும் தொலைத்தொடர்பு சாதனங்களால் ஏற்கமுடியாதவைகளை ஏற்கிறோம். திண்மம் பேசுகிறது, ஒலிநாடாவில் குரலை பதிவுசெய்து கேற்கிறோமல்லவா!
மற்றுமுள்ளவைகளை மறுக்கின்றோமா? கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் அற்புத நிகழ்வான தொழு நோயை குணப்படுத்தினார், மரணித்தவரை உயிர்ப்பித்தார், களிமண்ணால் பறவையை செய்து பறக்கவிட்டார் என்பதை எப்படி ஏற்றனர்?
யூதர்கள் மூஸா நபியின் அற்புதமான தடி பாம்பாக மாறியது, கடல் பிளந்தது போன்றதை எப்படி ஏற்றனர்? அவைகளுக்கு முன்னால் புத்தி எங்கே போனது?
உண்மை என்னவெனில் எந்த காலத்திலும், எந்த விடயமானாலும் நேர்த்தியான போக்கை கடைபிடிப்பது காட்டாயம், என்றால் இஸ்ரேலிய தகவல் என்பதற்காக அனைத்து விடயங்களுக்கு முன்னாலும் கண்மூடி போகவேண்டுமென்பதுமல்ல, குர்ஆனின் கூற்று என்பதற்காக மறுப்பதென்பதுமல்ல, மாறாக ஸய்யித் குதுப் அவர்கள் கூறியது போன்று, ‘அதாவது, குர்ஆனிலிருந்தே எமது சிந்தனையை எடுக்கவேண்டும், அது கூறியதை ஏற்க வேண்டும், அதனையே சொல்லவும்வேண்டும்.’ என்று இருக்கவேண்டும்.
தொடர்ந்து இமாம் ஷன்கீதி அவர்கள் கூறும்போது; இந்த வாதங்களோடு இன்னொன்றையும் நாம் சேர்த்து நோக்குவோம், அதுதான், இப்படி மாற்று அருத்தம் கூறியவர்கள், கதாதா ரஹ் அவர்களைத் தொட்டு பதிவு செய்யப்பட்ட ‘அரேபிய பூமியில் அந்த ஆண்டு போன்று கிருமிகள் காணப்படவில்லை’ என்ற கூற்றை பின்பற்றி கூறியிருக்கலாம். அறிவு ஏற்க மறுக்காத ஒரு விடயம் என்னவெனில், ‘இப்படி ஒரு பள்ளத்தாக்கில் ஒரே இடத்தில் அந்த பெரிய படை கற்கலால் அழிக்கப்பட்டதும், அதன் காரணமாக அங்கு சிதறிக்கிடந்த உடல்களிலிருந்து கிருமிகள் வரலாம்’ என்பதே. இப்படி சிந்திப்பதில் தவறில்லை. அல்லாஹ்விடமே அறிவு இருக்கின்றது. அல்லாஹு அஃலம்.
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் இந்த ஸூராவை வைத்து வரும் ஒரு சில சந்தேகங்களுக்கு பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள்.
அவர்கள் கேட்டார்கள் : “அப்ரஹாவின் படையோ கிறிஸ்தவர்கள், அவர்கள் மார்க்கமும் வேதமும் உடையவர்கள், மக்கா வாசிகளோ இணைவைப்பாளர்கள், அவர்களுக்கு சரியான மார்க்கம் இருக்கவில்லை, மேலும் கஃபா விக்கிரகங்களால் நிறைந்திருந்தது. அப்படியிருக்க, இறைவேதத்தை வைத்திருந்த கிறிஸ்தவர்களை அழித்த அல்லாஹ், ஏன் இணைவைப்பாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை?”
இதற்கு பல பதில்கள் சொல்லப்பட்டுள்ளன:
1.அந்த படை அநியாயம் இழைத்து அத்துமீறியதாகும், அநியாயம் இழைக்கப்பட்டவன் அநியாயம் இழைத்தவனைவிட நல்வில் குறைந்திருந்தாலும் அடக்குமுறை எப்போதும் கெட்டதே, இதற்கு ஆதாரமாக: “இறை மறுப்பாளனாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவனுக்கு உதவி செய்வதும் அவனது பிரார்த்தனையை ஏற்பதும் அடிப்படையாகும்” என்ற நபிமொழியை கூறலாம்.
2.இணைவைத்தல் என்பது அல்லாஹ்வின் கடமையில் அத்துமீறலாகும், ஆனால் அந்த படையின் ஆக்கிரமிப்பு அடியார்கள் மீதான அத்துமீறலாகும்.
3.இது நபி முகம்மது (ஸல்) பிறந்த ஆண்டு என்பதனால், அவர் பிறப்புக்கான இறைவனின் ஒருவித அறிகுறியாக இருக்கலாம்.
இந்த விளக்கங்கள் அனைத்துக்கும் பொருத்தமிருந்தாலும், எனக்குத் தோன்றுவது இன்னொரு முக்கியமான கோணமாகும்:
கஃபாவின் உருவாக்கமும் அதன் நிலைநிறுத்தமும் அல்லாஹ்வால் ஏற்பட்டது. அவனே அதன் அத்திவாரத்தை உயர்த்தி, அதில் தொழுகையை நிலைநிறுத்தவைத்தான், அது தரித்திருப்போருக்கு, சிரம் பணிப்போருக்கு தூய்மையான இடமாக இருந்தது. ஆனால் விக்கிரகாராதனை தற்காலிகமாக உருவாக்கப்பட்டது மட்டுமே, புதியதோர் மார்க்கத்தின் வருகையால் அதன் அவகாச காலம் குறுகியதாகவும் முடிவு நெருங்கியதாகவும் இருந்தது.
கிறிஸ்தவ மதம் கூட இந்த புது மார்க்க வரவை அறிந்திருந்தது, அதைப் பற்றி வேதத்தில் சொல்லப்பட்டு, நன்மாராயமும் கூறியிருந்தது, எனவே அந்தப் படை “இறைவனின் புனித ஆலயத்தின் மீதும், அதனைச் சுற்றி இருந்த மக்களின் உரிமையிலும் அத்துமீறியது. எனவே அழிக்கப்பட தகுதியாகிவிட்டது.
அல்லாஹ் தனது வீட்டின் அடிப்படை நோக்கத்தைப் பாதுகாக்கவும், அதன் புனித தன்மையை உறுதி செய்யவும் அதை பாதுகாத்தான். இதை அப்துல் முத்தலிப் (அபூதாலிப் என்று புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது) புரிந்துகொண்டு, அவர் அப்ரஹாவிடம் “நான் என்னுடைய ஒட்டகங்களுக்கு உரிமையாளன், இந்த ஆலயத்திற்கு அதன் உரிமையாளன் இருக்கிறான், அவன் அதைப் பாதுகாப்பான்.” என்று கூறினார். மேலும் அவர் கஃபா கதவிடம் சென்று அதனைப் பற்றிக் கொண்டு பிரார்த்தனை செய்தார்:
لَاهُمَّ إِنَّ الْعَبْدَ يَمْـ … نَعُ رَحْلَهُ فَامْنَعْ حِلَالَكْ
لَا يَغْلِبَنَّ صَلِيبُهُمْ … وَمِحَالُهُمْ عَدَدًا يُوَالِكْ
إِنْ يَدْخُلُوا الْبَلَدَ الْحَرَا … مَ فَأْمُرْ مَا بَدَا لَكْ
இறைவா மனிதன் அவனது இருப்பை பாதுகாக்கிறான், நீயோ உன் இடத்தை பாதுகாறு!
அவர்களது சிலுவையும் சூழ்ச்சியும் உன்னை சார்ந்தவர்களை மிகைக்காமலிருக்கட்டும், அவர்கள் சங்கையான ஊருக்குள் நுழைந்தால் உனக்கு பட்டத்தை நீ ஏவுவாயாக!
இப்படியும் பிரார்த்தித்ததாக கூறப்பட்டுள்ளது:
يَا رَبِّ لَا أَرْجُو لَهُمْ سِوَاكَا … يَا رَبِّ فَامْنَعْ مِنْهُمْ حِمَاكَا
إِنَّ عَدُوَّ الْبَيْتِ مَنْ عَادَاكَا … إِنَّهُمْ لَنْ يَقْهَرُوا قُوَاكَاُ
இறைவா அவர்களுக்காக உன்னைத் தவிர யாரையும் ஆதரவு வைக்கவில்லை, இறைவா உனது ஆலயத்தை நீயே காப்பாயாக!
இந்த ஆலயத்தின் விரோதியானவன் உனது விரோதியே, உனது சக்தியை அவர்களால் அடக்கமுடியாது.
இத்தோடு ஸூரா பீல் விளக்கம் முடிவுற்றது.
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ