سُورَةِ الْكَوْثَرِ
ஸூரதுல் கவ்ஸர்
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!
பெயர் : ஸூரதுல் கவ்ஸர் (அதிக நன்மைகள்)
இறங்கிய காலப்பகுதி : மதனீ, (மக்கீ என்ற ஒரு கருத்தும் இருக்கிறது)
வசனங்கள் : 3
சிறப்பு :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறிகள்: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘சற்று முன் ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது’ என்று கூறிவிட்டு அந்த அத்தியாயத்தை (பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்: “”பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இன்னா அஃதைனாகல் கவ்ஸர். பஸல்லி லி ரப்பிக வன்ஹர். இன்ன ஷானிஅக ஹுவல் அப்தர்.”” (குர்ஆனின் 108ஆவது அல்கவ்ஸர்) பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்கவ்ஸர் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று பதிலளித்தோம். அவர்கள், அது ஒரு நதி. என்னுடைய இறைவன் அதை எனக்கு வாக்களித்துள்ளான்; அதில் அதிக நலவு உள்ளது. அது ஒரு நீர் தடாகம்; மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தார் (தண்ணீர் அருந்துவதற்காக) அதை நோக்கி வருவார்கள். அதன் குவளைகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்று (அதிகமாகக்) காணப்படும். அப்போது அவர்களில் ஓர் அடியார் (தண்ணீர் அருந்தவிடாமல்) தடுக்கப்படுவார். உடனே நான், இறைவா! அவர் என் சமுதாயத்தாரில் ஒருவர். (அவர் ஏன் தடுக்கப்படுகிறார்?) என்று கேட்பேன். அதற்கு இறைவன், உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறுவான். (முஸ்லிம்: 670)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
இப்னு கஸீர் இமாம் கூறும் போது: ‘அதிகமான குர்ஆன் சார்ந்த (குர்ராக்கள்) அறிஞர்கள் முன்னால் பதியப்பட்ட நபிமொழியை வதைத்து இந்த ஸூரா மதனீ என்று ஆதாரம் பிடித்ததோடு, அதிகமான சட்டக்கலை அறிஞர்கள் பிஸ்மில் இந்த ஸூராவில் உள்ளது, அது அதனுடன் சேர்ந்தே இறக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர். (இப்னு கஸீர்)
اِنَّاۤ اَعْطَيْنٰكَ الْكَوْثَرَؕ
اِنَّا நிச்சயமாக நாம், كَ உனக்கு/உன்னை, اَعْطَيْنٰا நாம் கொடுத்தோம், الْكَوْثر ‘கவ்ஸர்’ அதிக நலவு
(நபியே!) நிச்சயமாக நாம் கவ்ஸரை (அதிக நன்மை) உமக்குக் தந்தோம். (108:1)
இந்த வசனத்தில் கவ்ஸர் என்பதைக்கொண்டு நாடப்படுவது, அந்த நபிமொழியில் (முஸ்லிம்: 670) இடம்பெற்றிருப்பது போன்று ‘அது சுவனத்தில் உள்ள ஒரு நதி’ என்பதாகும் (இப்னு கஸீர்)
ஸஈத் பின் ஜுபைர்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘ இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகையில், ‘அல்கவ்ஸர் என்பது, நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள நன்மைகளாகும்’ எனத் தெரிவித்தார்கள். (அறிவிப்பாளர்களில், ஒருவரான) அபூ பிஷ்ர்(ரஹ்) கூறினார்: நான் ஸஈத் பின் ஜுபைர்(ரஹ்) அவர்களிடம், ‘மக்கள் ‘அல்கவ்ஸர்’ என்பது சொர்க்கத்திலுள்ள நதி என்று கூறுகின்றனரே?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய நன்மைகளில் சொர்க்கத்திலுள்ள அந்த நதியும் அடங்கும்’ என்று கூறினார்கள்: (புகாரி: 4966, 6578)
இப்னு கஸீர் இமாமவர்கள் கூறும்போது: இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறிய இந்த விளக்கம் ‘நதி என்பதையும், ஏனைய நலவுகளையும் சேர்த்துக்கொள்ளும்’ ஏனெனில் அல்கவ்ஸர் என்ற அரபி சொல்லானது, அரபியில் கஸ்ரத் “அதிகம்‘ என்பதைக் குறிக்கும் அடிப்படை சொல்லிலிருந்து வந்ததாகும். அதுவே அதிக நலவு என்பதாகும், இப்னு அப்பாஸ், இக்ரிமா, ஸஈத் பின் ஜுபைர், முஜாஹித், முஹாரிப் பின் திசார் போன்றவர்கள் கூறியதுபோன்று ‘ அதிக நலவு என்பதில் உள்ளதே சுவனத்து நதி‘ என்பதும், முஜாஹித் ரஹ் கூறும் போது; ‘அது ஈருலகிலும் கிடைத்த அதிக நலவாகும்’ என்றும், இக்ரிமா ரஹ் கூறும்போது; ‘அது நபித்துவம், குர்ஆன், மறுமை நலவு‘ என்பதைக் குறிக்கும் என்கிறார்கள். அதாஃ அவர்கள் கூறும்போது; ‘அது சுவனத்தில் உள்ள நீர்த்தடாகம்’ என்று கூறினார்கள்.(இப்னு கஸீர்)
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறும் போது; ‘أَعْطَيْنَاكَ அஃதைனாக‘ என்பது ‘أَنْطَيْنَاكَ அன்தைனாக‘ என்று ஓதப்பட்டுள்ளது. அது அய்ன் (ع) என்ற எழுத்து நூனாக (ن) மாற்றப்பட்டதல்ல, மாறாக அன்தைனா என்பதும் (கொடுத்தான் என்ற அருத்தம் தரும்) அடிப்படை சொல்லாகும். அது தனித்துவமான ஒரு கிறாஅத் முறையாகும். இந்த கருத்தை அபூ ஹய்யான் இமாமவர்கள் கூறினார்கள்.
மேலும் ‘அல்கவ்ஸர்’ என்றால் கஸ்ரத் (அதிகம்) என்ற (அர்த்தம் கொண்ட) சொல்லின் ‘பவ்அல்‘ என்ற விதிப்படி வரும் சொல்லாகும். அதன் மூலம் நாடப்படுவதில் கருத்துவேற்றுமை காணப்படுகின்றது. அது ஒரு பெயர் சொல் என்றும், வர்ணனை சொல் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.
பெயர் சொல் என்ற அடிப்படையில் ‘அது சுவனத்து நதியின் பெயர்’ என்றும், வர்ணனை என்ற அடிப்படையில், ‘அதிக நலவுகள்’ என்றும் கூறப்பட்டுள்ளது. அது பெயர் என்பதற்கு புகாரி : 4964 என்ற இலக்க ஹதீஸ் ஆதாரமாக காட்டப்பட்டுள்ளது. அந்த ஹதீஸின் தொடரில்(முஸ்லிம்: 670) ‘அதில் அதிக நலவு இருக்கிறது’ என்ற வர்ணனை வாசகம் இடம்பெற்றிருப்பதை வைத்து சில அறிஞர்கள் கவ்ஸர் என்பதற்கு அப்படி பொருள் கூறினர். (அல்வாவுல் பயான்)
தொடர்ந்து இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறும் போது: ‘கவ்ஸர் என்றால் ‘அதிக நலவுகள்‘ என்பதும், ஹவ்ல் (தடாகம்), நதி என்பது நல்லவற்றில் சேர்ந்துவிடும் என்பதும் உள்ளத்துக்கு அமைதி அளிக்கிறது.‘ என்று கூறிவிட்டு, நபியவர்களுக்கு அல்லாஹ் அதிக நலவுகளை கொடுத்துள்ளான் என்பதற்கு பின்வருமாறு ஆதாரங்களை கூறினார்கள்.
وَلَـقَدْ اٰتَيْنٰكَ سَبْعًا مِّنَ الْمَـثَانِىْ وَالْـقُرْاٰنَ الْعَظِيْمَ
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதப்படக் கூடிய ஏழு வசனங்களை(யுடைய அல்பாதிஹா அத்தியாயத்தை)யும் இந்த மகத்தான குர் ஆனையும் தந்திருக்கிறோம். (15:87)
وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ
இன்னும், உமதிரட்சகன் பிறகு உமக்கு தருவான், அப்போது நீர் திருப்தியடைவீர். (93:5)
இப்படி கூறிவிட்டு, நபியவர்களின் உள்ளம் விரிவுபடுத்தப்பட்டது, பாவங்கள் மன்னிக்கப்பட்டன,(அல்லது பாவத்தைவிட்டும் தூரமாக்கப்பட்டது), அவர் நினைவூட்டப்படுவது உயர்த்தப்பட்டது, கஷ்டத்திற்கு பிறகு இலேசாக்கப்படும் என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டது, (இது சூரா நஷ்ரஹில்) அடுத்து ஸூரா தீனில், அவரது நகரம் மக்கா அபயமளிக்கப்பட்டதாக ஆக்கப்பட்டது, முஃமின்கள் செய்யும் செயல்களுக்கு தொடர் கூலி வழங்கப்படுவது, ஸூரா அலகில், அவர்களுக்கு குர்ஆன் கொடுக்கப்பட்டது, அவருக்கு தெரியாத விடயங்கள் எல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டன, ஸூரா கத்ரில், ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த இரவு கொடுக்கப்பட்டமை, ஸூரா பையினாவில், அவர்களது சமுதாயம் சிறந்த சமுதாயமாக ஆக்கப்பட்டு, அல்லாஹ்வின் திருப்தியையும் அவர்களுக்கு கொடுத்து, அவர்களையும் திருப்தியடைசெய்தமை, ஸூரா ஸில்ஸாலில், அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதுவும் பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டமை, ஸூரா ஆதியாத்தில், விரைந்தோடும் குதிரைகளில் சத்தியம் செய்து, இஸ்லாத்திற்காக போராடுவதை சிறந்த செயலாக ஆக்கியிருப்பதும் அதன் மூலம் விரோதிகளுக்கு எதிராக வெற்றி பெறுவதை விதித்ததும், ஸூரா தகாஸுரில், அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் பயிற்சியை கொடுத்து, அதன் மூலம் அவனது கொடையை அதிகப்படுத்த வழிகாட்டியதும், ஸூரா அஸ்ரில், அவர்களது சமுதாயத்தை ஈமான், நல்லமல், அழைப்புப் பணி, பொறுமை காத்தல் என்ற பண்புகளூடாக சிறந்த சமுதாயமாக ஆக்கியமை, (அடுத்து ஸூரா பீலில், மக்காவாசிகளுக்கு யானைப் படையை அழித்து உதவியமை, இது அல்வாஉல் பயானில் வந்ததல்ல) ஸூரா குறைஷில், அவர்களது கோத்திரத்தை கண்ணியப்படுத்தி, பயணம் செய்யும் வசதியையும் ஏற்படுத்தி, பாதுகாப்பு உத்தரவாதமும் அளித்தமை, இந்த ஸூராவுக்கு முன்னுள்ள ஸூரா மாஊனில், சுருக்கமாக சொல்வதானால்; செயல் அடிப்படையிலான ஒரு ஒப்பீட்டை வழங்கி; ‘நயவஞ்சகர்களை, அற்ப உதவி பொருட்களையும் கொடுத்துதவாத பண்பு கொண்டவர்களாய் எடுத்துக்காட்டிவிட்டு, அடுத்து ‘நபியே உமக்கு அதிக நலவை தந்தோம்’ என்று புகழ்ந்திருப்பதும் (அதிக நலவுகள்) கொடுக்கப்பட்டவர். என்று அல்லாஹ் எடுத்துக் காட்டுகின்றான்.
விரிவாக நோக்குவதாயின்; ‘பொய்ப்பிப்பவர்களும் நயவஞ்சகர்களும் அனாதைகளை விரட்டுவோர் என்று வர்ணித்த அல்லாஹ், ஸூரா ளுஹாவில் அநாதைகளின் உரிமையை தெளிவுபடுத்தி; ‘அநாதைகளை அடக்கவேண்டாம்.(93:9) என்று கூறி, நபியவர்கள் ஒரு சிறந்த பொறுப்பாளி என்பதை காட்டுகிறான், மேலும், நயவஞ்சகர்கள் ஏழைகளுக்கு உணவளிப்பதை தூண்டமாட்டார்கள் என்று வர்ணித்த அல்லாஹ், ஸூரா ளுஹாவில் ‘கேட்டுவருவோரை விரட்டவேண்டாம்’ என்று தெளிப்படுத்துகின்றான், எனவே நபியவர்கள் தன்னைவிடவும் கேட்டுவருபவரை முதன்மைப் படுத்தினார்கள், மேலும் அந்த பொய்யர்கள் தொழுகையில் பொடுபோக்கு செய்தார்கள், நல்லது செய்தாலும் அடுத்தவர்களுக்கு காட்டுவதற்காக செய்தார்கள், அல்லாஹ் இந்த ஸூராவிலே ‘நபியே உங்கள் இறைவனுக்காக தொழுது, அறுத்து பலியிடுவீராக’ என்று அல்லாஹ்வுக்காக இபாதத் செய்வதையும் அறுத்துப்பலியிட்டு ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பதையும் எடுத்துரைக்கின்றான். இதுவெல்லாம் அதிக நலவுகளாகும்.
அதேபோன்றுதான் ஸுன்னாவில் வந்திருக்கும் அதிக நலவுகளை பின்வருமாறு பட்டியலிடலாம்;
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: “எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத, ஐந்து விடயங்கள் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளன, ஒரு மாத கால அளவு பயம் உள்ளத்தில் போடப்பட்டு உதவிசெய்யப்பட்டேன், பரிந்துரைக்கும் பாக்கியம் கொடுக்கப்படும், யுத்த களத்தில் வெற்றி பெற்ற பொருட்கள் (கனீமத்) எனக்கு அனுமதிக்கப்பட்டது, நான் முழு மனித சமூகத்திற்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன், பூமி எனக்கு தொழுமிடமாகவும், சுத்தம் செய்யும் சாதனமாகவும் ஆக்கப்பட்டுள்ளது, எனவே எங்கிருக்கும் நிலையில் தொழுகை நேரம் வந்தாலும் அந்த இடத்தில் தொழலாம். (புகாரி: 335,438, முஸ்லிம்)
இப்படி நபியவர்களுக்கு கொடுக்கப்பட்ட நலவுகளை கவ்ஸர் என்பதற்கு விளக்கமாக கூறலாம். (அல்வாஉல் பயான்)
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ؕ
فَ எனவே/ஆகவே, صَلِّ நீ தொழு/பிரார்த்தி, لِ க்கு, كَ உனது/உன்னை, رَبِّ இறைவன், وَ மேலும்/இன்னும், انْحَرْ அறுத்து பலியிடு
ஆகவே, நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் அறுத்து பலியிடுவீராக. (108:2)
இந்த வசனம் மூலம் சுவனத்து நதியுடன் அதிக நலவுகளை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக நபியவர்களுக்கு ‘அல்லாஹ்வுக்கா மட்டும் தொழுமாறும், அவனது இணை துணையற்ற பெயரை கூறி அறுத்து பலியிடுமாறும் அவன் ஏவுகிறான். இது ஸூரா அன்ஆம் அத்தியாயத்தின்: 162,163 வசனங்களில் அவன்,
قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ ,لَا شَرِيْكَ لَهٗۚ وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا اَوَّلُ الْمُسْلِمِيْنَ
நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பும் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்” என்று (நபியே) நீர் கூறுவீராக! “அவனுக்கு யாதோர் இணையுமில்லை, இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன், இன்னும், (அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களில் நான் முதன்மையானவன்” (என்றும் கூறுவீராக!) (6: 162,163)
என்று கூறியது போன்றதாகும்.
இப்னு அப்பாஸ் ரலி அதாஃ, முஜாஹித், இக்ரிமா, ஹஸன் ரஹ் ஆகியோர் ; ‘வன்ஹர் என்பதைக்கொண்டு ‘ஒட்டகம் போன்றவைகளை அறுத்து பலியிடுவது நாடப்பட்டுள்ளது.’ என்று கூறினர். இந்த கட்டளையே, அல்லாஹ் அல்லாதவர்களுக்கு சிரம்பணித்து, அறுத்து பலியிட்ட இணைவைப்பாளர்களுக்கு மாற்றமான வழிகாட்டலாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ
அல்லாஹ் அல்லாதவர்கள் நினைவுகூர்ந்து அறுக்கப்பவற்றிலிருந்து நீங்கள் சாப்பிடவேண்டாம், அது பாவமாகும். (6:121)
வன்ஹர் என்பதைக் கொண்டு : ‘தொழுகையில் இடது கைக்கு மேல் வலதை வைத்து காரை எலும்புக்கு மேலால் வைப்பதைக் குறிக்கும்‘ என்ற ஒரு கருத்து அலி ரலி அவர்களைத் தொட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அது பலவீனமாகும்.
இன்னு சில கருத்துக்களை பதிந்த இமாம் இப்னு கஸீர் ரஹ் அவர்கள்; ‘வன்ஹர் என்றால் அறுத்து பலியிடல்’ என்ற கருத்தே சரியானது. ஏனெனில்
நபி ஸல் அவர்கள் பெருநாளில் தொழுதுவிட்டு, அறுத்து பலியிட்ட பின்னர் பின்வருமாறு கூறினார்கள்.’ ‘நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போல் குர்பானி கொடுக்கிறவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். ஒருவர் தொழுகைக்கு முன்பே அறுப்பது மாமிசத்திற்காக அறுக்கப்பட்டதாகும்’ என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூ புர்தா இப்னு நியார்(ரலி) எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். அப்போது நபி(ஸல்) ‘அது மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்’ என்று கூறினார்கள். அப்போது அவர் ‘இறைத்தூதர் அவர்களே! என்னிடம் சதைப்பற்றுள்ள இரண்டு ஆடுகளை விடச் சிறந்த, ஆறுமாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா?’ என்று கேட்டார். ‘ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது’ (புகாரி: 983) ‘
இப்னு ஜரீர் இமாமவர்கள் கூறும் போது : “சரியான கூற்று, ‘அல்லாஹ் உங்களுக்கு மட்டும் வழங்கிய நிகரற்ற நலவுக்கா, கண்ணியத்திற்காக நன்றி செலுத்தும் முகமாக அவனல்லாமல் வணங்கப்படும் கடவுல்கள், சிலைகளை விட்டும் தூய்மையான நிலையில் உமது இறைவனுக்காக தொழுது, அவ்வாறே அவனுக்காக உமது அறுப்பையும் ஆக்கிவிடுங்கள்.’ என்பதாகும்.” என்று கூறினார்கள். (தப்ஸீருத் தபரீ (ஜாமிஉல் பயான்))
اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ
اِنَّ நிச்சயமாக (ஒரு எழுவாயும் பயணிலையும் அவசியம்), كَ உன்னை/உனது, هُوَ அவன், شَانِئَ கோபமூட்டியவன், الْاَبْتَرُ சந்ததியற்றவன்
நிச்சயமாக உம் பகைவன் எவனோ அவன்தான் சந்ததியற்றவன். (108:3)
இதன் அருத்தம் ; ‘முஹம்மத் ஸல் அவர்களே! நிச்சியமாக உங்களை கோபமூட்டும், நீங்கள் எடுத்துவந்த சத்தியத்தை, தெளிவான சான்றை மறுக்கின்ற அவனே நினைவூட்ட படாமல் இருக்கின்ற, செல்வாக்கு குறைந்த சந்ததியற்றவனாவான்.’ என்பதாகும்.
இப்னு அப்பாஸ் ரலி, முஜாஹித், ஸஈத் பின் ஜுபைர், கதாதா ரஹ் போன்றோர்; ‘இந்த வசனம் ‘அல்ஆஸ் பின் வாஇல்‘ விடயத்தில் இறங்கியது, என்று கூறினர். யஸீத் பின் ரூமான் வழியாக முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்கள் கூறினார்கள்: அல்ஆஸ் பின் வாஇல் என்பவன் நபியவர்களை நினைவூட்டினால், ‘அவரை விடுங்கள், அவர் சந்ததிகளற்றவர், மரணித்துவிட்டால் அவர் நினைவூட்டப்படுவது நின்றுபோய்விடும்.’ என்று கூறுவானாம், அதனை கண்டித்தே இந்த ஸூராவை அல்லாஹ் இறக்கினான்.
ஷமிர் பின் அதிய்யா அவர்கள்; இது ‘உக்பதுப்னு அபீ முஐத்‘ விடயத்தில் இறக்கப்பட்டது என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ், இக்ரிமா போன்றவர்கள்; ‘இது கஃபிப்னுல் அஷ்ரப், மறறும் சில குறைஷி இறைமறுப்பாளர்கள் விடயத்தில் இறங்கியது’ என்றும் கூறினர்.
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: ‘கஃப் மக்காவுக்கு வந்தபோது குறைஷிகளின் சிலர் அவரிடம்; ‘நீங்களோ அவர்களின் தலைவராக இருக்கிறீர்கள், பாருங்கள், இந்த சந்ததியற்றவர் ‘அவரே எங்களில் சிறந்தவர்’ என்று கருதுகின்றார், நாங்களோ ஹஜ் கடமையை வழிநடாத்துபவர்கள், கஃபாவையும், ஸம்ஸம் நீருற்றையும் நிர்வகிப்பவர்கள்.’ என்று கூற, கஃப் ‘நீங்களே அவரைவிட சிறந்தவர்கள்’ என்று கூற, இந்த ஸூரா இறங்கியது.’ (பஸ்ஸார்,கஷ்புல் அஸ்தார்:2293, இதில் யஹ்யா என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். தபரீ :9786, நம்பகமான அறிவிப்பாளர்கள்)
இக்ரிமா ரஹ் அவர்கள் கூறினார்கள்: அப்தர் என்றால் தனிப்பட்டவன் என்று அருத்தம், இமாம் ஸுத்தீ அவர்கள் கூறும்போது; ‘ஒரு மனிதனின் ஆண் பிள்ளைகள் மரணித்தால் அவனைப் பார்த்து, ‘புதிர, சந்ததியை இழந்தான்’ என்ற சொல்லை பாவிப்பார்கள், நபிகளாரின் ஆண்பிள்ளைகள் அனைவரும் மரணித்தபோது ‘முஹம்மத் சந்ததியை இழந்துவிட்டார்’ என்றார்கள், அப்போது அல்லாஹ், ‘நபியே உங்களை கோபமூட்டியவனே சந்ததியை இழந்தவன்’ என்ற வசனத்தை இறக்கினான்.’ என்றார்கள். (இப்னு கஸீர்)
இந்த கருத்துக்களை பதிந்த இமாம் இப்னு கஸீர் அவர்கள்; ‘இந்த கருத்து, நாங்கள் ‘அப்தர் என்றால் மரணித்தவுடன் அவரை நினைவு கூர்வது நின்றுவிடும்’ என்று கூறிய கருத்தளவில் மீளுகின்றது, எனவே அவர்கள் ‘நபியவர்களின் ஆண் பிள்ளைகள் மரணித்தவுடன் அவரின் நினைவுகூரலும் நின்றுவிடும்’ என்று மடத்தனத்தின் காரணமாக நினைத்தனர், அவர்கள் நினைத்தவாரல்ல, மாறாக மனிதர்களுக்கு மத்தியில் நபிகளாரின் நினைவூட்டலை அல்லாஹ் தொடர்ந்திருக்க செய்தான், நபியவர்கள் கொண்டுவந்த மார்க்கத்தை அடியார்கள் மீது சுமத்தி, உலகம் இருக்கும் காலமெல்லாம் தொடர்ந்திருக்க செய்ததோடு, மறுமையிலும் அவர்களது பெயர் கூறப்படும் நிலையில் அல்லாஹ் வைத்தான்.’ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள்; ‘ஷானிஅக‘ என்றால் ‘உனது விரோதி‘ என்று கூறினார்கள். (புகாரி: குறிப்பு செய்தி)
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமாக பின்வருமாறு கூறினார்கள்:
இந்த ஸூரா அல்ஆஸ் பின் வாஇலை கண்டித்து இறக்கப்பட்டது, ஏனெனில் அவனே குறைஷிகளைப் பார்த்து, ‘அவரை விடுங்கள், அவர் சந்ததி அற்ற தனிமைப்பட்டவர், அவர் மரணித்தால் நீங்கள் அமைதி அடைவீர்கள்.’ என்றான். என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸூராவைப் போன்று செயல் ரீதியாகவே அல்லாஹ்வின் முடிவு வந்துள்ளது. பத்ர் யுத்த விடயத்தில் அல்லாஹ் கூறினான்;
وَيُرِيْدُ اللّٰهُ اَنْ يُّحِقَّ الْحَـقَّ بِكَلِمٰتِهٖ وَيَقْطَعَ دَابِرَ الْـكٰفِرِيْنَۙ
இன்னும் அல்லாஹ்வோ, தன் வாக்குகளின் மூலம் உண்மையை நிலைநாட்டவும், நிராகரிப்போரை வேரறுத்துவிடவும் நாடுகிறான். (8:7)
இந்த வசனத்திற்கு அமைவாக குறைஷி தலைவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.
இதே போன்று தான் பொதுவாக அல்லாஹ் கூறியதும். அல்லாஹ் கூறினான்:
فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِيْنَ ظَلَمُوْا ؕ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ
ஆகவே, அநியாயம் செய்துகொண்டிருந்த அச்சமூகத்தாரின் வேர் துண்டிக்கப்பட்டுவிட்டது, (அவர்கள் அடியோடு அழிக்கப்பட்டனர்) இன்னும், எல்லாப் புகழும் அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ்வுக்கே உரியதாகும். (6:45)
அபூ லஹப் பற்றிய வசனமும் அப்படிப்பட்டதே.
تَبَّتْ يَدَاۤ اَبِىْ لَهَبٍ وَّتَبَّؕ
அபூலஹபின் இரு கைகள் நாசமடைக! அவனும் நாசமாவானாக! (111:1)
எனவே (இறைமறுப்பாளர்களே, விரோதிகளே மரணித்தவுடன், கொலைசெய்யப்பட்டவுடன் அடையாளமின்றி போனார்கள்) ஆனால் நபியவர்களின் நாமம், அவர்களுக்கு பிறகும் அவர்களது குடும்பத்திலும், அவர்களது சமுதாயத்திலும் நினைவூட்டப்படுவதால் உயர்ந்தது. அல்லாஹ் கூறினான்:
وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ
உமது நினைவை (கீர்த்தியை) உமக்காக நாமே உயர்த்தினோம். (94:4)
(அல்வாஉல் பயான்)
கவ்ஸர் நீர் தடாகமும், அதன் சிறப்புகளும், தன்மைகளும்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவனத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர், என்னுடைய ஹவ்லுல் கவ்ஸர் மீது இருக்கும்.‘. (புகாரி: 1196, முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணத்தின் போது நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், ‘ஜிப்ரீலே, இது என்ன?’ என்று கேட்டேன். ‘இது அல்கவ்ஸர்’ என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி: 4964, 6581,)
அபூ உபைதா ஆமிர் இப்னு அப்தில்லாஹ் இப்னி மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘(நபியே!) நாம் உங்களுக்கு அல்கவ்ஸரை அருளினோம்’ எனும் (திருக்குர்ஆன் 108:1 வது) இறை வசனம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘(அது சொர்க்க) நதியாகும். அது உங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துகள் உள்ளன. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்று (எண்ணற்றதாய்) இருக்கும்‘ என்று கூறினார்கள். (புகாரி: 4965)
அனஸ் பின் மாலிக் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் மிஃராஜ் பயணம் பற்றி கூறும்போது: ‘அந்த முதல் வானத்தில் பாய்ந்தோடும் இரண்டு நதிகளைக் கண்டார்கள். உடனே ‘ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?’ என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இவையிரண்டும் நைல் மற்றம் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்’ என்று பதிலளித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அந்த வானத்தில் சென்று கொண்டிருந்தபோது இன்னொரு நதியையும் கண்டார்கள். அதன் மீது முத்துகளாலும் பச்சை மரகத்தாலும் ஆன மாளிகை ஒன்று இருந்தது. (அந்த நதியில்) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையால் அடித்தார்கள். அ(தன் மண்ணான)து உயர்ந்த நறுமணமிக்க கஸ்தூரியாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இது என்ன நதி ஜிப்ரீலே?’ என்று கேட்டார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இது உங்களுக்காக உங்களுடைய இறைவன் ஒதுக்கி வைத்துள்ள கவ்ஸர் (எனும் நதி) ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.. (புகாரி: 7517)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: கவ்ஸர் என்பது எனது இறைவன் எனக்கு கொடுத்த ஒரு நதியாகும், அது பாலை விடவும் கடும் வெண்மையாகும், தேனைவிட இனிமையானதாகும், அதில் ஒட்டகங்களின் கழுத்துகள் போன்ற பார்வைகள் இருக்கும்.’ அப்போது உமர் ரலி அவர்கள்; அல்லாஹ்வின் தூதரே! ‘அங்கே இனிமைதரும் பறவைகளும் இருக்கின்றனவா’ என்று கேட்க, நபியவர்கள்: ‘உமரே அதனை சாப்பிடுவது அதை விடவும் இனிமையாக இருக்கும்.’ என்று கூறினார்கள். (அஹ்மத்: 13306, ஸஹீஹ்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (“அல்கவ்ஸர்”) எனும் எனது தடாகம் (பரப்பளவில்) ஒரு மாத காலப் பயணத் தொலைவு கொண்டதாகும். அதன் அனைத்து மூலைகளும் சமஅளவு கொண்டவையாகும். அதன் நீர் வெள்ளியைவிட வெண்மையானதாகும். அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்ததாகும். அதன் (விளிம்பிலிருக்கும்) கூஜாக்கள், (எண்ணிக்கையில்) விண்மீன்கள் போன்றவையாகும். யார் அதன் நீரை அருந்துகிறாரோ அவர் அதன்பின் ஒருபோதும் தாகமடையமாட்டார்… (புகாரி: 6579 முஸ்லிம்: 4599)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில் என்னுடைய ‘அல்கவ்ஸர்’ எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) ‘ஜர்பா‘ மற்றும் ‘அத்ருஹ்‘ ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும். (புகாரி: 6577. , முஸ்லிம்: 4606)
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (அல்கவ்ஸர் எனும்) அத்தடாகத்தின் கோப்பைகள் என்ன?”என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அதன் கோப்பைகள் (எண்ணிக்கையானது), மேகமோ நிலவோ இல்லாத இரவில் காட்சியளிக்கும் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானதாகும். அவையே சொர்க்கத்தின் கோப்பைகளாகும். யார் அ(த்தடாகத்)தில் அருந்துகிறாரோ அவருக்கு இறுதிவரை தாகமே ஏற்படாது. அதில் சொர்க்கத்திலிருந்து இரு வடிகுழாய்கள் வழியாக நீர் வந்துசேருகிறது. அதில் அருந்துபவருக்குத் தாகமே ஏற்படாது. அத்தடாகத்தின் அகலம் அதன் நீளத்தைப் போன்று (சமஅளவில்) இருக்கும். அதன் தொலைதூரம் (அன்றைய ஷாம் நாட்டிலிருந்த) “அம்மானு”க்கும் “அய்லா”வுக்கும் இடையேயுள்ள தொலைதூரத்தைக் கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது; தேனைவிட மதுரமானது” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 4608)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் அல்கவ்ஸர் எனும்) எனது நீர்த்தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) அதன் நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) அய்லா நகர(ம் வரையிலான தூர)த்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த்தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன்)என்று கூறினார்கள்.(முஸ்லிம்: 416)
தடாகத்தை விட்டும் தடுக்கப்படுவோர்!
இப்னு அபீமுலைகா (ரஹ்) அவர்கள் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாகப் பின்வருமாறு சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (எனது “அல்கவ்ஸர்” எனும்) தடாகத்தினருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்கவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்” என்பேன். அதற்கு “உமக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீர் அறிவீரா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தம் குதிகால்கள்மீது (தமது பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்றுகொண்டேயிருந்தார்கள்” என்று கூறப்படும். இதனால்தான் இப்னு அபீமுலைகா (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்கள்மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் எங்கள் மார்க்கம் தொடர்பாகக் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று பிரார்த்திப்பார்கள். (புகாரி: 6593, முஸ்லிம்: 4600)
உக்பா இப்னு ஆமிர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒருநாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுகை நடத்துவதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழவைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து ‘உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்‘ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்‘ வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்‘ என்றார்கள். (புகாரி: 6426. முஸ்லிமின்: 4603 அறிவிப்பில்: ‘ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டு, சண்டையிட்டுக்கொண்டு, உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்ததைப் போன்று நீங்களும் அழிந்துவிடுவீர்களோ என்றே நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.’ என்று பதியப்பட்டுள்ளது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான், ‘என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்’ என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், ‘இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது‘ என்று கூறுவான். (புகாரி: 7049. , முஸ்லிம்: 4604) புகாரியின் 6584 ம் இலக்க நபி மொழியில்; ‘எனக்கு பின் மார்க்கத்தை மாற்றியவர்களே தூர போய்விடுங்கள், தூர போய்விடுங்கள்‘ என்று கூறுவேன்’. என்று பதியப்பட்டுள்ளது.
இத்தோடு ஸூரா கவ்ஸர் விளக்கம் முற்றுப் பெறுகின்றது.
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ