سُورَةُ الْعَصْر
ஸூரதுல் அஸ்ர் விளக்கம்
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CILICK செய்யவும்!
பெயர்: ஸூரதுல் அஸ்ர்
இறங்கிய காலப்பகுதி: மக்கீ
வசனங்கள்: 3
சிறப்புகள்:
அப்துல்லாஹ் பின் ஹிஸ்ன் (அபூ மதீனா) அவர்கள் கூறுகிறார்கள்: “நபித் தோழர்களில் இருவர் சந்தித்தால், ஒருவர் மற்றவருக்கு ஸூரா அஸ்ரை முழுவதுமாக ஓதிக்காட்டாமல் பிரியமாட்டார்கள், பின்னர் அவர்களுக்குள் ஸலாம் சொல்வார்கள்.” அல்முஃஜமுல் அவ்ஸத்: 5124) இந்த செய்தியை இமாம் அல்பானி ரஹ் அவர்கள் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.
இதனை பதிந்த தபராணி இமாமவர்கள் தொடர்ந்து கூறும் போது: ‘இந்த ஹதீஸ் அபூ மதீனா அவர்களின் வழியாக இந்த அறிவிப்பாளர் தொடரில் அன்றி அறிவிக்கப்படவில்லை, இது ஹம்மாத் பின் சலமா அவர்கள் வழியாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. (அல் முஃஜம்)
அபூ மதீனா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸாபிதுல் புனானி அவர்கள் அனஸ் ரலி, இப்னு உமர் ரலி போன்ற நபித்தோழர்களிடமிருந்து செவிமடுத்துள்ளார்கள், இங்கே அபூமதீனா அவர்களிடமிருந்து அறிவித்ததாக வந்துள்ளது, அவர் செவிமடுத்துள்ளாரா என்று உறுதிப்படுத்த வேண்டும், ஏனெனில் அல்இஸாபா என்ற நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று அவர் நபித் தோழர் என்ற கருத்தும் பதியப்பட்டுள்ளது.
மேலும் இமாம் பைஹகீ ரஹ் அவர்கள் கூறும் போது; ‘ஹம்மாத் வழியாக அறிவிக்கும் பலரும் ஸாபித் அவர்கள், உக்பதுப்னு அப்தில் காபிர் என்பவர் வழியாக அறிவித்துள்ளார்’ என்று கூறுகின்றார்கள்.
எனவே இது நபித்தோழர்களின் ஒரு செயலாக பதியப்பட்டிருப்பதோடு, அறிவிப்பாளர் தொடரிலும் ஏதோ ஒரு விமர்சனமும், அதனை பதிவு செய்த அறிஞர்களாலே முன்வைக்கப்பட்டுள்ளது, அத்தோடு நபி ஸல் அவர்கள் ஒரு மஜ்லிஸை நிறைவு செய்யும்போது சுபஹானகல்லாஹும்ம என்று ஆரம்பிக்கும் துஆவைக் கொண்டு முடித்ததாக பதியப்பட்டுள்ளது. (அபூதாவூத்:4859) அல்லாஹு அஃலம்
இமாம் தஹபீ ரஹ் அவர்கள் கூறும் போது ; ‘அறிவிப்பாளர்கள் பிரபல்யமானவர்களாக இருந்தாலும் மிகவும் அபூர்வமான ஒரு செய்தி’ என்று கூறினார்கள். (தாரீகுல் இஸ்லாம்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالْعَصْرِۙ
وَ சத்தியம் செய்வதற்காக பாவிக்கப்பட்டிருக்கிறது, الْعَصْرِۙ காலம்
காலத்தின் மீது சத்தியமாக! (103:1)
காலம் என்பது, மனிதன் கழிக்கும் நேரத்தை உள்ளடக்கியதாகும், காலம் கழிகிறது என்றால் மனிதனது வாழ்க்கை முடிகிறது என்பதுவே அருத்தம், எனவேதான் காலச்சக்கரத்தில் சுழலும் மனிதன் தன் வாழ்க்கையையே கழிக்கிறான் என்பதை உணர்த்துவதற்காக அதன் மீது சத்தியமிட்டு அதன் பெறுமதியை உணர்த்தியுள்ளான்.
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறும்போது; “அல்லாஹ் தான் நன்றாக அறிவான், இங்கே கூறப்படும் கருத்துக்களில் இரு கருத்துக்கள் தெளிவாக இருக்கின்றன:
1. “அல்-அஸ்ர்” என்றால் காலம் என்ற பொதுவான அர்த்தம்: இது ஏற்கப்பட்ட அனைத்து கருத்துக்களையும் உள்ளடக்கியது,
2. மனிதன் வாழும் காலம் (அதாவது, அவன் உழைத்து, இழந்து கழிக்கும் காலம் (வாழ்நாள்))
மேலும், இந்த கருத்து, இந்த ஸூராவின் முன்னால் உள்ள “ஸூரா அத்தகாஸுர்” மற்றும் பின்னால் உள்ள “ஸூரா அல்ஹுமஸா” ஆகியவற்றுடன் தொடர்புடையது.
“ஸூரா அத்தகாஸுர்” இந்த உலக வாழ்வின் செல்வச் சேகரிப்பு, மற்றும் பொருளில் அதிகரிப்பில் ஈடுபடுவதை கண்டிக்கிறது, இது மனிதனின் வாழ்க்கையில் நிகழும்.
“ஸூரா அல்ஹுமஸா” இதே பொருளை கூறுகிறது: ஒருவன் செல்வத்தைச் சேகரித்து அதனை எண்ணிக்கொண்டு, தனது செல்வம் அவனை நிலைக்கச் செய்கின்றது என்று எண்ணுகிறான்.
எனவே, செல்வம் சேர்ப்பது மற்றும் அதை எண்ணுவது அனைத்தும் மனித வாழ்க்கையில் மட்டுமே நடக்கிறது. அதேபோல், ஈமான் (நம்பிக்கை) மற்றும் நல்ல செயல்கள் செய்தல் மனித வாழ்க்கையுடன் தொடர்புடையது, எனவே இந்த உலகவாழ்க்கை நிரந்தரமாக இருப்பதில்லை. இதனையே இந்த சத்தியம் உணர்த்துகின்றது.
இந்த காலத்தை முறையாகவும் பயன்படுத்தலாம், முறைதவறியும் பயன்படுத்தலாம். இப்படி காலச்சக்கரத்தில் சூழல்பவர்களில் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி என்பதை பின்வருமாறு உணர்த்துகிறான்.
اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ
اِنَّ நிச்சயமாக, இதற்கு ஒரு எழுவாயும், பயணிலையும் அவசியம், الْاِنْسَانَ மனிதன், فِىْ ல், லே, خُسْرٍ நஷ்டம்
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். (103:2)
“இன்ஸான்” என்ற சொல் ஓர்மை சொல்லாக இருந்தபோதிலும், “அல்” என்று சேர்ந்து வந்திருப்பதால் அது மக்கள் எனும் இனத்தையே குறிக்கும் சொல்லாக இருக்கின்றது.
இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் “ஈஹாமுல் இல்திராப்” என்ற நூலில், “இந்த சொல் முஸ்லிம், காபிர் ஆகிய இருவருக்கும் பொதுவாக பொருந்துகிறது, அல்லாஹ் விதிவிலக்களித்தவர்களைத் தவிர.” என்று விளக்கியுள்ளார்கள்.
சிலர் இதை குறிப்பாக காபிருக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறியுள்ளனர், ஆனால், பொதுவாகப் பொருந்தும் என்ற முதல் கருத்தே மேலானதாகும். (அல்வாஉல் பயான்)
இழப்பு (الخسر): நஷ்டம், அல்லது குறைவு, அல்லது தண்டனை, அல்லது அழிவு போன்ற எல்லா கருத்துகளும் பொருந்தும்.
இழப்பு என்பதன் அர்த்தம்: மூலதனத்திலிருந்து நஷ்டம் அடைவதை குறிக்கிறது, இங்கு மனிதன் வாழ்நாளை வீணடிப்பதில் முழுமையாக மூழ்கி, அது அவனுக்கு எல்லைமீறி ஏற்படுகின்றது என்று அர்த்தமாகிறது.
அதேநேரம் நான்கு பண்புகளைத் தன்னிடம் கொண்டிருக்கும் மனிதன் வெற்றிபெறுவான் என்பதை அல்லாஹ் விதிவிலக்களித்து கூறுகின்றான்.
மனிதன் நஷ்டமடைவதற்கு பிரதான காரணிகளாக நான்கை குறிப்பிடலாம்;
ஈமான், இறைநம்பிக்கை இல்லாமை, இது குப்ர் ஆகும்.
நற்செயல்கள் இல்லாமல் பாவ செயல்களைச் செய்தல்.
உண்மை பற்றி ஒருவருக்கொருவர் அறிவுறுத்தாதது, உண்மையை முழுமையாக தவிர்ப்பது அல்லது பொய்யை பரப்புதல்.
பொறுமையைப் பற்றி ஒருவருக்கொருவர் அறிவுறுத்தாது, மனஅமைதியை இழத்தல். (உதாரணமாக, பயம் அல்லது சலனம்).
எனவே நஷ்டம் நான்கு வகைகளாக அமைகிறது:
- ஈமான் சார்ந்த நஷ்டம் – குப்ரால் ஏற்படுதல்; அல்லாஹ் கூறுகின்றான்:
لَٮِٕنْ اَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
(நபியே!) அல்லாஹ்வுக்கு) நீர் இணைவைத்தால், உமது நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர். (39:65)
قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِؕ
(ஆகவே,) எவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டனர். (6:31)
- இஸ்லாம் சார்ந்த நஷ்டம் – நல்ல செயல்களை விடுதல். அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَظْلِمُوْنَ
யாருடைய (நன்மையின்) எடை (கனம் குறைந்து) இலேசாக இருக்கிறதோ அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்து தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டவர்கள் ஆவர். (7:9)
وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ
எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான். (99:8)
- சத்தியத்தை உபதேசிக்கவிட்டால் ஏற்படும் நஷ்டம், சத்தியத்தை விடுவதன் மூலமோ, அசத்தியத்தை எடுத்துரைப்பதனாலோ பின்பற்றுவதானாலோ ஏற்படலாம். அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ
இஸ்லாம் அல்லாத (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கவே படமாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்த வராகவே இருப்பார். (3:85)
- பொறுமையை எடுத்துரைக்காவிட்டால் ஏற்படும் நஷ்டம் சலனத்தால் மன அமைதியை இழக்கும்போது ஏற்படலாம். அல்லாஹ் கூறுகின்றான்:
وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللّٰهَ عَلٰى حَرْفٍ ۚ فَاِنْ اَصَابَهٗ خَيْرٌ اۨطْمَاَنَّ بِهٖ ۚ وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْهِهٖۚ خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَ ؕ ذٰ لِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِيْنُ
மனிதரில் பலர் (உறுதியின்றி, சந்தேகத்தின்) விளிம்பின் மீதிருந்த நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்களை ஒரு நன்மை அடைந்தால் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும். (22:11)
மனிதன் நஷ்டம் அடைவதன் உண்மையான தத்துவம் என்னெவெனில்; “மனிதனின் வாழ்க்கையில் அவனது முதலீடு அவன் ஆயுளே ஆகும். எனவே அவன் வாழ்நாள் காலத்தில் நல்ல செயல்களை செய்து அதைச் செயல்படுத்த வேண்டும் அது அவனுக்கு சந்தை போன்றது.
• அவன் தனது காலத்தை நற்பயனுக்கு பயன்படுத்தினால், அவன் லாபம் அடைவான்.
• அவன் அதைத் தீமையின் வழியில் பயன்படுத்தினால், அவன் இழப்பைச் சந்திக்க வேண்டி வரும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
اِنَّ اللّٰهَ اشْتَرٰى مِنَ الْمُؤْمِنِيْنَ اَنْفُسَهُمْ وَاَمْوَالَهُمْ بِاَنَّ لَهُمُ الْجَــنَّةَ ؕ
அல்லாஹ், நம்பிக்கையாளர்களுடைய உயிர்களையும் பொருள்களையும் கண்டிப்பாக அவர்களுக்குச் சொர்க்கம் தருவதாக(க் கூறி,) நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டான். (9:111)
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰى تِجَارَةٍ تُنْجِيْكُمْ مِّنْ عَذَابٍ اَلِيْمٍ , تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ
நம்பிக்கையாளர்களே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.10, (அதாவது:) அல்லாஹ்வையும், அவனுடைய (இத்)தூதரையும் நம்பிக்கை கொண்டு, உங்கள் பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். (61:10, 11)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்……. மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.(முஸ்லிம்: 381)
رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُؕ
‘‘எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்” என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரை நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்.) என்று கூறுவான். (35:37)
இந்த அடிப்படை இலாபத்தையும், நஷ்டத்தையும் அல்லாஹ் விவரித்து வெற்றிபெறுவோரை பின்வரும் அடையாளங்கள் கொண்டு தெளிவுபடுத்துகின்றான்.
اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
اِلَّا தவிர/ விதிவிலக்களிப்பதற்கு பாவித்தல், الَّذِيْنَ சிலர், எத்தகையோர், (இதனை தெளிவுபடுத்த ஒரு வசனம் அவசியம்) اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள், وَ عَمِلُوا இன்னும் செய்தார்கள், الصّٰلِحٰتِ நற்செயல்கள், وَتَوَاصَوْا இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள், بِ மூலம்/கொண்டு, الْحَقِّ உண்மை, الصَّبْرِ பொறுமை
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு,நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).(103:3)
இங்கு மனிதன் மட்டும் கூறப்பட்டிருந்தாலும் இந்த விடயத்தில் ஜின்களும் அடங்குவார்கள் என்பது பின்வரும் வசனத்தின் மூலம் தெரியவருகின்றது.
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِىْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِؕ اِنَّهُمْ كَانُوْا خٰسِرِيْنَ
இத்தகையவர்களின் கதியோ, இவர்களுக்கு முன் சென்றுபோன (பாவிகளான) மனித, ஜின்களிலுள்ள கூட்டத்தார்களைப்போல் (இவர்களும் அழிந்து) இவர்களின் மீதும் (அல்லாஹ்வுடைய வேதனை வந்திறங்கியே தீருமென்ற) வாக்குறுதி உண்மையாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள். (46:18)
மனிதனை வெற்றி பெறச் செய்யும் நான்கு பண்புகள்:
- இறைநம்பிக்கை எனும் இணைவைப்பு கலக்காத ஈமான்.
- நபிகளாரின் வழியில் நல்லமல்கள் செய்தல்,
- சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசித்தல்,
- மார்க்கத்திற்காக பொறுமை காத்தல்,
ஈமான் என்றால் உண்மைப்படுத்தல் என்ற மொழி அருத்தத்துடனும், ஈமானின் ஆறு அடிப்படைகளை உள்ளத்தால் ஏற்றுக்கொள்ளுதல் என்ற மார்க்க விளக்கத்துடனும் சார்ந்த ஒரு சொல்லாகும்.
ஈமான் என்பதை; “உள்ளத்தினால் உறுதிகொண்டு, நாவினால் மொழிந்து, உறுப்புக்களால் நடைமுறைப்படுத்தல்” என்று வரைவிலக்கணப்படுத்துவர் பெரும்பான்மையான அறிஞர்கள். அதேநேரம், ‘ஈமானுக்குள் செயல் சேராது‘ என்றும் சிலர் கூறுவர். சேரும் என்பதே சரியானதாகும். அதனால்தான் (நற்செயல்கள் மூலம்) அது அதிகரிக்கும், (தீய செயல்கள் மூலம்) அது குறையும் தன்மை கொண்டது என்பர்.
இறைநம்பிக்கையில் இணைவைப்பு கலந்துவிட்டால் அது ஈமானை பாழாக்கிவிடும்.
اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ
எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையுடன் (இணைவைத்தல் என்னும்) அநியாயத்தை கலந்து விடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாக பாதுகாப்பு உண்டு. அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள். (6:82)
அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘நம்பிக்கை கொண்டு, பிறகு தம் நம்பிக்கையில் அநீதியைக் கலந்து விடாதவர்களுக்கே அபயமுண்டு. மேலும், அவர்களே நேர்வழி பெற்றவர்களாவர்’ என்ற (6:82ம்) இறைவசனம் அருளப்பட்டபோது, நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் தனக்கு அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர் தானிருக்கிறார்?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘(அதன் பொருள்) நீங்கள் சொல்வது போல் அல்ல. ‘தங்கள் இறை நம்பிக்கையில் இணைவைப்பு எனும் அநியாயத்தை கலக்காதவர், என்பது பொருளாகும், ஏன் லுக்மான் அவர்கள் தன் மகனுக்கு, ‘எனதருமை மகனே நீ அல்லாஹ்வுக்கு இணை கற்பித்துவிடாதே, ஏனெனில் இணைகற்பித்தல் என்பது மாபெரும் அநீதியாகும்’ என்று சொன்ன(தாக குர்ஆனில் 31:13-வது வசனத்தில் அல்லாஹ் கூறுவ)தை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று பதிலளித்தார்கள். (புகாரி: 3360, முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களைவிட்டும் இணை கற்பித்தலைவிட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன். (முஸ்லிம்: 5708)
நல்லமல்கள் என்றால் அது நபி ஸல் அவர்களின் வழிகாட்டலில் அமைந்திருக்க வேண்டும், எப்போது ஒரு செயல் நபி வழிகாட்டலை விட்டு விலகிவிடுகின்றதோ அப்போது அது ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாக மாறிவிடும்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: யாராவது எங்கள் ஏவல் இல்லாத ஒரு அமலை செயலை செய்தால் அது நிராகரிக்கப்படும். (முஸ்லிம்:3541)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: யாராவது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கினால் அது நிராகரிக்கப்படடதாகும். (புகாரி:2697, முஸ்லிம்:3540)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தைகளில் சிறந்தது முஹம்மத்(ஸல்) அவர்களின் நடத்தையாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாய் உண்டாக்கப்படுபவை ஆகும். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (மறுமை நாளான)து வந்தே தீரும். உங்களால் (இறைவனைத்) தோற்கடிக்க முடியாது. (புகாரி: 7277, முஸ்லிமின் (1573) அறிவிப்பில் நபிகளாரின் கூற்றாக,”நூதனமானவை பித்அத் அனைத்தும் வழிகேடு’ என்று பதியப்பட்டுள்ளது.)
நபி ஸல் அவர்கள் பராஃ பின் ஆஸிப் ரலி அவர்களுக்கு ‘நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் வுழூ செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்’ என்று கூறினார்கள், நான் நபி(ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய “வபி நபிய்யிக“உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக “வபி ரஸூலிக“உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘இல்லை,நீ அனுப்பிய “வபி நபிய்யிக“உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்’ (புகாரி: 247, முஸ்லிம் )
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். பதில் கூறிய நபி(ஸல்) அவர்கள் ‘நீ தொழவில்லை, திரும்ப தொழு’ என்று கூறினார்கள். அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். ‘திரும்பவும் தொழுவீராக! நீர் தொழவே இல்லை’ என்று நபியவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் ‘சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை! எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார். நபியவர்கள் தொழும் முறையைக் கற்றுக்கொடுத்தார்கள். (புகாரி: 757, முஸ்லிம்)
குறிப்பு:
வபி நபிய்யிக என்று வந்த இடத்தில் வபி ரஸூலிக என்று மாற்றுவதை நபியவர்கள் தடுத்தார்கள், என்றால், மூன்று முறை தொழுதவரை மீண்டும் தொழுமாறு நபியவர்கள் ஏவினார்கள் என்றால், நபி வழியைப் பின்பற்றுவது எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துவதோடு, அப்போதே அது ஏற்கப்படும் என்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சத்தியத்தை ஒருவருக்கொருவர் எடுத்துரைத்தல் எனும்போது, அது நன்மையை ஏவி, தீமையை தடுத்தல் என்ற உயர்ந்த பணியாகும், அதனை முறையாக செய்வதும் மறுமையில் எம்மை வெற்றிபெற செய்யும் ஒரு அடிப்படையே. அல்லாஹ் கூறுகின்றான்:
وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍۘ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَيُطِيْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗؕ اُولٰۤٮِٕكَ سَيَرْحَمُهُمُ اللّٰهُؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ
நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பார்கள். இவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான். (9:71)
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் ஒருவன்” என்றும் கூறுகிறாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்? (41:33)
كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِؕ
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை நன்மையான) காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கிறீர்கள்…. (3:110)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் தடுக்கட்டும், அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இதுவே இறைநம்பிக்கையின் பலகீனமானதாகும். (முஸ்லிம்: 78)
இந்த கடமையை முறையாக செய்யாமலிருப்பது ஈருலகிலும் தோல்வியடைய செய்யும், அல்லாஹ் கூறுகின்றான்:
لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ ؕ ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ , كَانُوْا لَا يَتَـنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ؕ لَبِئْسَ مَا كَانُوْا يَفْعَلُوْنَ
இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் வரம்புமீறினர், பாவம் செய்து வந்தனர்.78, அவர்கள் செய்து வந்த பாவத்தை விட்டும் விலக்கிக் கொள்ளாதவர்களாக(வும், ஒருவர் மற்றவரை அதிலிருந்து தடுக்காதவர்களாகவும்) இருந்து வந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் மிகத் தீயவையே! (5:78,79)
ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் திடுக்கத்துடன் வந்து, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது’ என்று தம் கட்டை விரலையும் அதற்கடுததுள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் ‘இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்; தீமை பெருகிவிட்டால்..’ என்று பதிலளித்தார்கள். (புகாரி: 3346, முஸ்லிம்)
இப்படி பரிபூரணமான இறை நம்பிக்கையோடும், நல்ல செயல்களோடும் ஈடுபட்டு, நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் பணியிலும் ஒருவர் முறையாக ஈடுபடும்போது பலவிதமான சோதனைகளுக்கு முகம் கொடுக்கலாம். அந்த நேரத்தில் சத்தியத்தில் உறுதியாக இருப்பதும், பொறுமைக் காப்பதுமே அவரை ஈருலகிலும் வெற்றிப்பாதையில் இட்டுசெல்லும். இது நான்காவது பண்பாக குறித்துக்காட்டப்பட்டுள்ளது.
பொறுமையை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளல்,
பொறுமை காத்தல் என்று சொல்லும் போது அதனை மூன்று வகையாக நோக்கலாம்.
- அல்லாஹ்வுக்கு வழிபடும் விடயத்தில் பொறுமை காத்தல், ஒரு வணக்கத்தை செய்வதற்கு நேரம் ஒதுக்குவதற்கும், பணம் செலவு செய்வதற்கும் பல வழிகளில் அவன் கஷ்டப்படவேண்டி இருக்கின்றது. முறையாக பொறுமை காத்தாலே முறையாக வணக்கத்தில் ஈடுபடலாம்.
- பாவங்களை விடுவதில் பொறுமை காத்தல், ஒரு பாவத்தை விடுவதற்கு அவன் உள்ளத்தையும், ஆசைகளையும் கட்டுப்படுத்தி போராடவேண்டியுள்ளது அதற்கும் பொறுமை அவசியமே.
- அல்லாஹ்வின் முடிவுகளை, சோதனைகளை ஏற்பதில் பொறுமை காத்தல், அல்லாஹ்வின் நாட்டத்தில் நோய், நொம்பலங்கள், வறுமை, கவலை, இழப்பு போன்ற சோதனை ஒரு பக்கம், மனிதனால் ஏற்படும் பாதிப்புக்கள் நஷ்டங்கள் அவற்றுக்கும் இஸ்லாத்தின் வரம்புக்குள் பொறுமை காக்கவேண்டும்.
وَاتَّبِعْ مَا يُوْحٰۤى اِلَيْكَ وَاصْبِرْ حَتّٰى يَحْكُمَ اللّٰهُ
(நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றி வருவீராக. அல்லாஹ் தீர்ப்பளிக்கின்ற வரை (எதிரிகளால் ஏற்படும் கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக்கொண்டிருப்பீராக. (10:109.)
وَاصْبِرْ نَـفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ وَلَا تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْ ۚ
(நபியே!) எவர்கள் சிரமங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திரு முகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உம்மையும் நீர் ஆக்கிக் கொள்வீராக. (18:28)
وَالَّذِيْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் முகத்தை நாடி (எத்தகைய சிரமத்தையும்) பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்தவற்றை ரகசியமாகவும் வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவு செய்வார்கள்; (13:22)
وَاصْبِرْ عَلٰى مَاۤ اَصَابَكَؕ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِۚ
என்னருமை மகனே! ‘‘ தொழுகையை நிலைநிறுத்து, நன்மையான காரியங்களைக் கொண்டு ஏவி, பாவமான காரியங்களில் இருந்து (மனிதர்களை) விலக்கி வா. உனக்கேற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் நீ சகித்துக்கொள். (31:17)
وَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيْلًا
(நபியே!) அவர்கள் (உம்மைப்பற்றிக் குற்றங்குறைகள்) கூறுவதைச் சகித்துக் கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி வெறுத்திருப்பீராக. (73:10) (50:39)
இமாம் ஸஃதீ அவர்கள் இந்த ஸூரா பற்றி கூறும் போது, ‘இந்த ஸூராவில் இருக்கும் முதல் இரு கட்டளைகள் (இறைநம்பிக்கை, நல்லமல்) மூலம் மனிதன் தன்னை பூரணப்படுத்துகின்றான், கடைசி இரு கட்டளைகள் (சத்தியத்தை எடுத்துரைத்து, பொறுமையை ஒருவருக்கொருவர் எடுத்துரைப்பதன்) மூலம் மற்றவர்களை பூரணப்படுத்துகின்றான். இந்த நான்கு கட்டளைகளை பூரணப்படுத்துவதன் மூலம் நஷ்டம் அடைவதிலிருந்து பாதுகாப்படைகின்றான், இலாபமடைந்து வெற்றிபெறுகின்றான். (தைஸீருல் கரீமிர் ரஹ்மான்)
இமாம் ஷாபிஈ ரஹ் அவர்கள் கூறும் போது: “அல்லாஹ் மனிதர்களுக்கு இந்த ஸூராவைத் தவிர்த்து வேறு எந்த ஆதாரத்தையும் இறக்காமல் இருந்திருந்தாலும் மனிதர்களுக்கு இதுவே போதுமானது.” என்று கூறினார்கள். (தப்ஸீருல் இமாம் அஷ்ஷாபிஈ)
இமாம் ஷாபிஈ ரஹ் கூறினார்கள்:”மனிதர்கள் ஸூரா அஸ்ரை சிந்திப்பதை விட்டும் மறந்திருக்கிறாரார்களே!” (தப்ஸீருல் இமாம் அஷ்ஷாபிஈ)
ஸூரா அஸ்ர் விளக்கம் முடிவுற்றது.
وَآخِرُ دَعْوَانا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ