سورة الْبَيِّنَةُ
ஸூரதுல் பய்யினா
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!
பெயர்: ஸூரதுல் பய்யினா(தெளிவான ஆதாரம்)
இறங்கிய காலப் பகுதி: மதனீ
வசனங்கள்: 8
அனஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள், உபைய்யுப்னு கஃப் ரலி அவர்களைப் பார்த்து; ‘நிச்சியமாக அல்லாஹ் உங்களுக்கு பய்யினா ஸூராவை ஓதிக்காட்டுமாறு ஏவினான்’ என்று கூறவே, உபை அவர்கள், ‘அல்லாஹ்வே எனது பெயரை உங்களுக்கு குறிப்பிட்டானா?’ என்று கேட்க, நபியவர்கள் ‘ஆம்’ என்றதும், உபை அவர்கள், ‘அகிலத்தாரின் இரட்சகனிடத்தில் நினைவூட்டப்பட்டுள்ளேனா?’ என்று மீண்டும் கேட்க, நபியவர்கள் ‘ஆம்’ என்று கூறவே, அவர்களது இரு கண்களிலிருந்தும் கண்ணீர் கொட்டியது. (புகாரி:3809,4961,முஸ்லிம்)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: நிச்சியமாக ‘லம் யகுனில்லதீ’ ஸூரா ஓதப்படுவதை செவிமடுக்கின்ற அல்லாஹ், கூறுகின்றான்: ‘எனது அடியானே! நட்செய்தி பெற்றுக்கொள், எனது கண்ணியத்தின் மீது ஆணையாக, நீ பொருந்திக் கொள்ளும் வரை சுவனத்தில் உனக்கு இடமளிப்போன்.’ (அபூ நுஐம்)
இப்படி ஒரு செய்தி பதியப்பட்டுள்ளது, இதன் அறிவிப்பாளரான ‘அப்துல்லாஹ் பின் ஸலமா’ என்பவர் மிகவும் பலவீனமானவர், இது அறிவிப்பாளர் தொடர் பரிபூரணமில்லாத மிகவும் பலவீனமான செய்தி)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
لَمْ يَكُنِ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِيْنَ مُنْفَكِّيْنَ حَتّٰى تَاْتِيَهُمُ الْبَيِّنَةُ ۙ , رَسُوْلٌ مِّنَ اللّٰهِ يَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةً ۙ
لَمْ يَكُنِ இருக்கவில்லை, இதற்கு ஒரு எழுவாய், பயனிலை வரும், الَّذِيْنَ சிலர்\எத்தகையவர்கள், كَفَرُوْا அவர்கள் நிராகரித்தார்கள், مِنْ நின்றும்\இருந்து, اَهْلِ உடையவர்\ குடும்பம், الْكِتٰبِ புத்தகம்\வேதம், وَالْمُشْرِكِيْنَ இன்னும் இணைவைப்போர், مُنْفَكِّيْنَ விலகியவர்கள்\நீங்கியவர்கள், حَتّٰى வரை, هُمُ அவர்கள், تَاْتِيَ வருகிறது\வரும், الْبَيِّنَةُ தெளிவான அத்தாட்சி\ஆதாரம், رَسُوْلٌ ஒரு தூதர், مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து, يَتْلُوْا அவர் ஓதுகின்றார்\வார், صُحُفًا ஏடுகள், مُّطَهَّرَةً பரிசுத்தமானது
வேதக்காரர்களிலிருந்தும், இணைவைப்பவர்களிலிருந்தும் நிராகரித்து விட்டார்களே அத்தகையோர், தெளிவான ஆதாரமான பரிசுத்த ஆகமங்களை ஓதிக்காண்பிக்கும் ஒரு தூதர் வரும்வரை (நிராகரிப்பதை விட்டும்) விலகுபவர்களாக இருக்கவில்லை. (98:1,2)
வேதக்காரர்கள் என்போர் யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஆவர். இணைவைப்பாளர்கள் என்போர் சிலைவணக்கத்தில் ஈடுபட்டோர், நெருப்பு வணங்கியோராவர். தெளிவான ஆதாரமான தூதர் முஹம்மத் ஸல் அவர்களாவார்கள், அவரால் போதிக்கப்படும் ஆகமங்கள், வேதம் அல்குர்ஆன் எனும் கடைசி வேதமாகும். அதன் சிறப்பம்சம் அது பாதுகாப்பட்ட ஏடுகளில் உள்ளதாகும். அல்லாஹ் கூறுகின்றான்
كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ , فَمَنْ شَآءَ ذَكَرَهٗۘ , فِىْ صُحُفٍ مُّكَرَّمَةٍ , مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍ , بِاَيْدِىْ كِرَامٍۢ بَرَرَةٍؕ سَفَرَةٍۙ
அவ்வாறன்று! நிச்சயமாக (குர்ஆனாகிய) இது, விரும்பியவர் உபதேசம் பெறும் ஒரு உபதேசமாகும்,, (இவ்வேதமானது) சங்கையாக்கப்பட்ட , உயர்வாக்கப்பட்ட, (வானவர்களான)நல்லோர்களான சங்கை மிக்கவர்களான, எழுதுவோரின் கரங்கள் கொண்டு பரிசுத்தமாக்கப்பட்ட ஏடுகளில் (இருக்கிறது). (80:11-16)
فِيْهَا كُتُبٌ قَيِّمَةٌ
فِيْهَا அவற்றில் இருக்கின்றது, كُتُبٌ சட்டங்கள்\வேதங்கள்\புத்தகங்கள், قَيِّمَةٌ நேரான\நேர்த்தியான
அவற்றில் தீர்க்கமான சட்டதிட்டங்கள் இருக்கின்றன. (98:3)
இந்த வசனம் மூலம் இறைவேதம் அல்குர்ஆனை அல்லாஹ் புகழுகின்றான். அது நேர்த்தியானது, அதில் எந்த தவறுகளும், முரண்பாடுகளும் இல்லை. அல்லாஹ் கூறுகின்றான்:
الٓرٰ كِتٰبٌ اُحْكِمَتْ اٰيٰـتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِيْمٍ خَبِيْرٍۙ
அலிப் லாம் றா. (இது அல்லாஹ்வின்) வேதம், இதன் வசனங்கள் உறுதியாக்கப்பட்டு, அதன்பின்னர் அவை தீர்க்கமான அறிவுடையவன், நன்கறிந்தவனிடமிருந்து தெளிவு செய்யப்பட்டுள்ளன. (11:1)
وَمَا تَفَرَّقَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنَةُ
وَمَا تَفَرَّقَ அவன் பிரியவில்லை, الَّذِيْنَ சிலர்\ எத்தகையோர், اُوْتُوا அவர்கள் கொடுக்கப்பட்டார்கள், الْكِتٰبَ வேதம்\புத்தகம், اِلَّا தவிர\விதிவிலக்கு செய்வதற்கு பாவிக்கப்படும், مِنْ இருந்து, بَعْدِ பின்னர், مَا ஒன்று, جَآءَتْ அது வந்தது, هُمُ அவர்கள், ا لْبَيِّنَةُ தெளிவான சான்று\ஆதாரம்
இன்னும், வேதம் கொடுக்கப்பட்டோர், தெளிவான ஆதாரம் (நபியும் அவர் மூலமாக வேதமும்) தங்களுக்கு வந்த பின்னரே தவிர அவர்கள் பிளவுபடவில்லை. (98:4)
இந்த வசனம் மூலம் வேதக்காரர்களான யூத, கிறிஸ்தவர்களின் முக்கிய பண்பு எடுத்துரைக்கப்படுகின்றது, எப்போதும் சத்தியத்தை, உண்மையை மறுப்பவர்கள், அதுவும் தெளிவான சான்று வந்த பிறகு மறுப்பார்கள். அதுவே நபி முஹம்மத் ஸல் அவர்கள் விடயத்திலும் நடந்தது. அதனால் தான் அந்த பண்பு நல்லவர்களிடம் இருக்கக்கூடாது என்பதற்காக எம்மையும் தடுக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:
وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْبَيِّنٰتُؕ وَاُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ
மேலும், தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்ததன் பின்னர் தங்களுக்குள் பிரிவை உண்டாக்கிக்கொண்டு, (கருத்து) வேறுபட்டுப் போனார்களே, அத்தகையோரைப்போல நீங்களும் ஆகிவிட வேண்டாம், அத்தகையோருக்குத்தான் மறுமையில் மகத்தான வேதனையுமுண்டு. (3:105)
இதற்கு சிறந்த உதாரணமாக ‘மதீனத்து யூதர்கள், மதீனத்து இணைவைப்பாளர்களான அவ்ஸ்,கஸ்ரஜ் போன்றோரை அச்சுறுத்திய வரலாற்றை குறிப்பிடலாம். ‘எங்களுக்கு ஒரு நபி வருவார் அவரை தலைவராக ஏற்று, உங்களை விரட்டுவோம்’ என்று கூறி அச்சுறுத்தினர், ஆனாலும் நபியவர்கள் மதீனா வந்த பிறகு பெரும்பான்மையானவர்கள் மறுத்தனர். அவர்களது இந்த முரண்பாடே இன்று வரை அவர்கள் இஸ்லாத்தை எதிர்க்கக் காரணம், அதேநேரம் இந்த எச்சரிக்கை செய்தியை கேட்டுப் பழகியவர்களான மதீனத்து முஷ்ரிக்குகளான அவ்ஸ் கஸ்ரஜ் போன்றோர் மக்காவில் பிரச்சாரத்தை கேட்டவுடனே இஸ்லாத்தை ஏற்றார்கள், மதீனாவுக்கு வந்த பிறகு பாதுகாப்பு கொடுத்து, உதவியும் புரிந்தார்கள்.
யூதர்களின் வரலாறு படிக்கும் ஒவ்வொருவரும் அதனை தெளிவாக புரிந்து கொள்ளலாம். இந்த முரண்பாடே அவர்களை வழிகெடுத்தது, அது எம்மிடம் இருந்தாலும் வழிகெட்டுப் போகவேண்டி வரும் அல்லாஹ் பாதுகாப்பானாக. படிப்பதற்காக சில அல்குர்ஆனின் செய்திகள்: (5:20-26), (2:67-74) (2:246-252)
وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ؕ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْؕ قَالُوْۤا اَقْرَرْنَا ؕ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ
மேலும், அல்லாஹ் நபிமார்களிடம்: வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களிடம்,) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்து, (இதற்குப்) பின்னர், உங்களிடமுள்ளதை உண்மைப் படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் உண்மையாக விசுவாசித்து, நிச்சயமாக அவருக்கு உதவி செய்வீர்கள் (என்று கூறி, “இதனை) நீங்களும் உறுதிப்படுத்தினீர்களா?” இதன்மீது என்னுடைய வாக்குறுதியை எடுத்துக் கொண்டீர்களா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “நாங்கள் (அதனை) உறுதிப்படுத்துகிறோம்” என்றே கூறினார்கள். (“இதற்கு) நீங்கள் சாட்சியாக இருங்கள், நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினான். (3:81)
وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَمُبَشِّرًۢا بِرَسُوْلٍ يَّاْتِىْ مِنْۢ بَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ
மேலும், மர்யமின் புதல்வர் ஈஸா, “இஸ்ராயீலின் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தியவனாகவும், எனக்குப் பின்னர் அஹ்மது எனும் பெயருள்ள ஒரு தூதர் வருவார் என நன்மாராயம் கூறுபவனாகவும் நிச்சயமாக உங்கள்பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராக நான் இருக்கிறேன்” என்று கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக) பின்னர், (அவர் கூறியவாறு) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் (அத்தூதராகிய) அவர் வந்தபொழுது, இது தெளிவான சூனியம்” என்று அவர்கள் கூறினர். (61:6)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: வேதக்காரர்களில் முஃமினானவருக்கு இரண்டு கூலிகள் இருக்கின்றன, அவர் அவர்களது நபியை விசுவாசித்திருந்தார், பிறகு முஹம்மத் நபியவர்களையும் விசுவாசித்தார். (புகாரி:3011,முஸ்லிம்)
நபி ஸல் அவர்கள் பிரிவினை பற்றி எச்சரிக்கும் போது,: ‘நிச்சியமாக யூதர்கள் எழுபத்தொரு கூட்டமாக பிரிந்தார்கள், கிறிஸ்தவர்கள் எழுபத்திரண்டாக பிரிந்தார்கள், எனது சமுதாயம் எழுபத்து மூன்றாக பிரியும், ஒன்றைத் தவிர்த்து ஏனைய அனைத்தும் நரகில் நுழையும்,’ என்று கூறவே, ‘வெற்றி பெறும் அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!’ என்று தோழர்கள் கேட்க, ‘நானும் எனது தோழர்களும் எதன் மீது இருக்கின்றோமோ அதில் இருப்பவர்கள்’ என்று கூறினார்கள். (திர்மிதி:2640, அபூதாவூத்:4596, இப்னு மாஜாஹ்:3991) இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘முஹம்மத் பின் அம்ர்‘ என்பவர் இடம் பெற்றுள்ளார். அவர் விமர்சனத்திற்குரியவரே.
இதே கருத்தில் அவ்ப் பின் மாலிக் அவர்களின் செய்தியாக பதியப்பட்டுள்ளது. (இப்னு மாஜாஹ்:3992, அதன் அறிவிப்பாளர் தொடரில் ‘அப்பாத் பின் யூஸுப்‘ என்பவர் இடம்பெற்றுள்ளார், இவரும் இலேசான விமர்சனத்திற்குரியவரே.
இதே கருத்தில் ‘எனது சமுதாயம் எழுபத்திரண்டாக பிரியும்’ என்று அனஸ் ரலி வழியாக பதியப்பட்டுள்ளது. (இப்னு மாஜாஹ்: 3993,அஹ்மத்:12208,12479) இதன் அறிவிப்பில் ‘அபூ அம்ர் குலைத்‘ என்பவர் இடம் பெற்றுள்ளார், இவரும் பலவீனர் என விமர்சிக்கப்பட்டவரே. அஹ்மதின் அறிவிப்பில் ‘ஸியாதுன் நுமைரி‘ என்ற பலவீனர் என விமர்சிக்கப்பட்டவர் இடம்பெற்றுள்ளார். அடுத்த அறிவிப்பில் ‘இப்னு லஹீஆ‘ எனும் பலவீனர் இடம் பெற்றுள்ளார்.
சுருக்கம் இந்த செய்தி சாதாரணமாக விமர்சிக்கப்பட்டு, பல நபித்தோழர்கள் வழியாகவும் வந்திருப்பதனால் இதற்கு ஒரு அடிப்படை இருப்பதை அறியலாம். பலவீனம் சாதாரணம் என்பதனால் இது ஹஸன் தரத்தில் உள்ளது என்று தீர்ப்பளிக்கலாம், பல அறிஞர்கள் ஸஹீஹ் என்று தீர்ப்பளித்துள்ளனர். (அல்லாஹு அஃலம்)
وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ حُنَفَآءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ ؕ
وَمَاۤ اُمِرُوْۤا அவர்கள் ஏவப்படவில்லை, اِلَّا தவிர\ விதிவிலக்கு செய்வதற்காக பாவிக்கப்படும் ஒரு சொல், لِ க்கு, يَعْبُدُوا வணங்குவார்கள்\கிறார்கள், اللّٰهَ அல்லாஹ், مُخْلِصِيْنَ தூய்மைப்படுத்தியவர்கள், لَـهُ அவனுக்கு, الدِّيْنَ வழிபாடு\மார்க்கம், حُنَفَآءَ விலகியவர்கள்\சாய்ந்தவர்கள், وَيُقِيْمُوا இன்னும் அவர்கள் நிலைநிறுத்துவார்கள், الصَّلٰوةَ தொழுகை, وَيُؤْتُوا இன்னும் அவர்கள் கொடுப்பார்கள், الزَّكٰوةَ ஸகாத், وَذٰلِكَ இன்னும் அது, دِيْنُ மார்க்கம், الْقَيِّمَةِ நேரான
இன்னும், மார்க்கத்தை (வணக்கத்தை) அவனுக்காக தூய்மையாக் கியவர்களாக,(அவன் பக்கம்) சாய்ந்தவர்களாக அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், தொழுகையை நிறைவேற்றுவதற்காகவும், ஸகாத்தை கொடுப்பதற்காகவுமே தவிர (வேறெதையும்) அவர்கள் (அதில்) கட்டளையிடப்படவில்லை; இன்னும், இதுதான் நேரான மார்க்கமாகும். (98:5)
இந்த வசனம் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டவைகளை சொல்கின்றான், அந்த அடிப்படையில் மனத்தூய்மையோடு, இணைவைப்பு, இறைமறுப்பு போன்றவற்றிலிருந்து) சத்தியத்தின் பக்கம் சாய்ந்த நிலையில் வணங்கவேண்டும் என்பது பிரதானமாகும், இது அல்லாஹ் அனைத்து மனிதர்களுக்கும் ஏவியதாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِىْۤ اِلَيْهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدُوْنِ
மேலும், நிச்சயமாக என்னைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் இல்லை, எனவே, என்னையே நீங்கள் வணங்க வேண்டும் என்று நாம் வஹீ அறிவிக்காமல் (நபியே!) உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை. (21:25)
وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ
அல்லாஹ்வையே வணங்குங்கள், (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் அனைத்து ஷைத்தான்களாகிய) தாகூதிலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்று கூறுவதற்காக ஓவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பினோம்,(16:36)
அடுத்து தொழுகையை நிலைநாட்டுமாறு அவர்கள் ஏவப்பட்டுள்ளார்கள், என்பதும் ஒரு அடிப்படை. அடுத்து ஸகாத் எனும் கடமை, அது ஏழை, எளியோருக்கு செய்யப்பட வேண்டியது.
எனவே இப்படி படைத்தவனுக்கு செய்யவேண்டியதும், படைப்பினங்களுக்கு செய்யப்பட்ட வேண்டியதும் எடுத்துக் கூறப்பட்ட மார்க்கமே நேர்த்தியானது, உறுதியானது.
எனவேதான் எங்களது மார்க்கமான இஸ்லாத்திலும் இவை அடிப்படையாக கூறப்பட்டுள்ளன.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: இஸ்லாமிய மார்க்கம் ஐந்து தூண்கள் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது, வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மத் ஸல் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்று சாட்சி சொல்லுதல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் கொடுத்தல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு பிடித்தல். (புகாரி:8,4514, முஸ்லிம்)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மத் ஸல் அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்று சாட்சி சொல்லி, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத் கொடுக்கும் வரை மனிதர்களோடு யுத்தம் செய்யுமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன், அதனை அவர்கள் செய்தால் என்னிடமிருந்து அவர்களது இரத்தங்களையும், சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்வார்கள், அவர்களை விசாரிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். (புகாரி: 25,முஸ்லிம்)
இந்த வசனத்தில் ஈமானோடு வணக்கங்களும் சேர்த்து சொல்லப்பட்டிருப்பதை வைத்து, இமாம்களான ஸுஹ்ரீ, ஷாபிஈ போன்றவர்கள் ‘வணக்கங்கள் ஈமானில் சேர்ந்தது’ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)
இப்படி நேர்த்தியான மார்க்கத்தின் அடிப்படையை எடுத்துக் கூறிய அல்லாஹ், தொடர்ந்து நல்லவர்களையும், கெட்டவர்களையும் எடுத்துரைக்கின்றான்.
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَ الْمُشْرِكِيْنَ فِىْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ؕ اُولٰٓٮِٕكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ ؕ
اِنَّ நிச்சயமாக\ஒரு எழுவாயும், பயணிலையும் வரும், الَّذِيْنَ சிலர்\எத்தகையோர், كَفَرُوْا அவர்கள் நிராகரித்தார்கள், مِنْ இருந்து\நின்றும், اَهْلِ உடையவர்\குடும்பம், الْكِتٰبِ வேதம்\புத்தகம், وَ الْمُشْرِكِيْنَ இன்னும் இணைவைப்போர், فِىْ ல்,லே, نَارِ நெருப்பு, جَهَنَّمَ நரகத்தின் பெயர், خٰلِدِيْنَ நிரந்தரமாக இருப்பவர்கள், فِيْهَا அதில், اُولٰٓٮِٕكَ \ هُمْ அவர்கள், شَرُّ மிகவும் தீயோர்\ கெட்டவர், الْبَرِيَّةِ படைப்புகள்
(இந்த நபியின் வரவை எதிர்பார்த்தவர்களில்) வேதத்தையுடையோர்களிலும், இணைவைத்துக் கொண்டிருப்போரிலும், நிச்சயமாக (இவரை) நிராகரிக்கின்றார்களே அத்தகையோர், நரக நெருப்பில்தான் இருப்பார்கள்; அதில் (அவர்கள்) நிரந்தரமாக இருப்பவர்கள்; அத்தகையோர்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள். (98:6)
சத்தியம் தெளிவாக வந்த பிறகும் அதனை மறுத்து இறைமறுப்பில் ஈடுபடுபவர்கள் அதே நிலையில் மரணித்துவிட்டால் அவர்கள் நிரந்தரமாக நரகில் இருப்பார்கள், அவர்களே மனிதர்களில் மிக மோசமானவர்கள்.
உம்மு ஹபீபா, உம்மு ஸலமா (ஹபஷாவுக்கு ஹிஜ்ரத் சென்று திரும்ப மதீனாவுக்கு வந்தவர்கள்) ஆகியோர் நபியவர்களிடம், அவர்கள் அங்கு கண்ட உருவப்படங்கள் வைக்கப்பட்ட வணக்கஸ்தலத்தை எடுத்துக் கூறினார்கள், அதற்கு நபியவர்கள்; ‘அந்த மக்கள், அவர்களில் ஒரு நல்ல மனிதர் மரணித்துவிட்டால் அவரது மண்ணறைக்கு மேலால் கட்டிடம் எழுப்புவார்கள், அந்த உருவப்படங்களை அதில் காட்சிப்படுத்துவார்கள், அவர்கள்தான் மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் படைப்பிணங்ககளில் மிகவும் மோசமானவர்கள்.’ என்று கூறினார்கள். (புகாரி: 427, 434,1341, முஸ்லிம்)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் சாபம் யூத. கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும், அவர்களது நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கினார்கள். (புகாரி:435,3453, முஸ்லிம்)
அதில் வேதக்காரர்களாக இருந்தாலும் சரியே, ஏனெனில் அவர்கள் மீதுள்ள கடமை முஹம்மத் நபியவர்கள் வந்தவுடன் அவர்களது மார்க்கத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டு, நபியவர்களை பின்பற்ற வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்:
اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ مِنْ قَبْلِهٖ هُمْ بِهٖ يُؤْمِنُوْنَ , وَاِذَا يُتْلٰى عَلَيْهِمْ قَالُوْۤا اٰمَنَّا بِهٖۤ اِنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّنَاۤ اِنَّا كُنَّا مِنْ قَبْلِهٖ مُسْلِمِيْنَ , اُولٰٓٮِٕكَ يُؤْتَوْنَ اَجْرَهُمْ مَّرَّتَيْنِ بِمَا صَبَرُوْا وَيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ
(ஆகவே, குர்ஆனாகிய) இதற்கு முன்னர் நாம் வேதத்தைக் கொடுத்திருந்தோமே அத்தகையோர், அவர்களே இதனை விசுவாசிக்கின்றனர். 52, இன்னும் அவர்கள் மீது (இவ்வேதம்) ஓதிக்காண்பிக்கப்பட்டால், அ(தற்க)வர்கள், “இதனை கொண்டு விசுவாசங்கொண்டோம்; நிச்சயமாக இதுவும் எங்கள் இரட்சகனிடமிருந்து வந்த உண்மை(யான வேதம்) தான்; இதற்கு முன்னதாகவே, நிச்சயமாக நாங்கள் (முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லீம்களாகவே இருந்தோம்” என்று கூறுகிறார்கள்.53, அவர்கள் பொறுமையாக இருந்ததனால், அவர்களது (நற்) கூலி இரண்டு தடவை கொடுக்கப்படும், இவர்கள் நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து அவர்கள் (தர்மமாகச்) செலவும் செய்வார்கள். (28:52-54)
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۙ اُولٰٓٮِٕكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ , جَزَآؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ؕ رَضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ ذٰلِكَ لِمَنْ خَشِىَ رَبَّهٗ
اِنَّ நிச்சயமாக\எழுவாய், பயனிலை அவசியம், الَّذِيْنَ சிலர்\எத்தகையோர், اٰمَنُوْا அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள், وَعَمِلُوا இன்னும் அவர்கள் செய்தார்கள், الصّٰلِحٰتِۙ நற்செயல்ள், اُولٰٓٮِٕكَ هُمْ அவர்கள்தான், خَيْرُ மிகச் சிறந்தோர், الْبَرِيَّةِ படைப்புகள், هُمْ அவர்கள், جَزَآؤُ கூலி, عِنْدَ இடத்தில், هِمْ அவர்கள், رَبِّ இறைவன், جَنّٰتُ சொர்க்கங்கள்\தோப்புக்கள், عَدْنٍ அத்ன்(சுவனப் பெயர்), تَجْرِىْ அது\அவை ஓடுகின்றது\ன, مِنْ இருந்து\நின்றும், هَا அது\அவை, تَحْتِ கீழே, الْاَنْهٰرُ நதிகள், خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள், فِيْهَاۤ அவற்றில், اَبَدًا எப்போதும், رَضِىَ அவன் திருப்தி அடைந்தான், اللّٰهُ அல்லாஹ், عَنْهُمْ அவர்களைப் பற்றி, وَرَضُوْا இன்னும் அவர்கள் திருப்தி அடைந்தார்கள், عَنْهُ அவனைப் பற்றி, ذٰلِكَ அது, لِ க்கு, مَنْ சிலர்\ஒருவன்\யார், خَشِىَ அவன் பயந்தான், رَبَّه தன் இறைவன்
நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்செயல்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்தாம் படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.7, அவர்களுடைய (நற்)கூலி அவர்களின் இரட்சகனிடம் (அத்னு எனும்) நிலையான சுவனங்களாகும்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; என்றென்றும் (அவர்கள்) அவற்றில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக்கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள். அது, எவர் தன் இரட்சகனுக்குப் பயப்படுகிறாரோ, அவருக்குரியதாகும். ( 98:8)
இந்த வசனம் மூலம் நல்லவர்கள் யார், அவர்களுக்கு கிடைக்கும் கூலி என்ன, சிறப்பு என்ன, அவர்களது பண்பு என்ன என்பதை தெளிவுபடுத்துகின்றான் அல்லாஹ்.
இறை நம்பிக்கையுடன், நல்லறம் புரிபவர்கள் அவர்களே உலகில் நல்ல மனிதர்கள், அவர்களுக்கு கூலியாக அத்ன் எனும், நிரந்தரமாக இருக்கும், கீழால் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், சுவனத் தோப்புக்கள் கொடுக்கப்படும், அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை அடைந்து கொள்வதோடு, அல்லாஹ் கொடுப்பவற்றை அவர்கள் பொருந்திக்கொள்வார்கள், இவ்வளவு பாக்கியமும் இறைவனை அஞ்சி நடப்பவர்களுக்கே கிடக்கும், அதுமட்டுமல்ல, இறை அச்சத்தோடு வாள்பவரே நல்லவராக வாழமுடியம் என்பதும் அல்குர்ஆன் கற்றுத்தரும் ஒரு அடிப்படையாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ
விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை-அவனைப் பயப்பட வேண்டிய முறைப்படி பயப்படுங்கள், மேலும், நிச்சயமாக (முற்றிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (3:102)
طٰهٰ , مَاۤ اَنْزَلْـنَا عَلَيْكَ الْـقُرْاٰنَ لِتَشْقٰٓى , اِلَّا تَذْكِرَةً لِّمَنْ يَّخْشٰى
தா ஹா.1, நீர் சங்கடப்படுவதற்காக (இந்தக்) குர்ஆனை உம்மீது நாம் இறக்கி வைக்கவில்லை. (அல்லாஹ்வாகிய அவனை) பயந்தோருக்கு உபதேசமாகவே அன்றி (இதனை நாம் இறக்கவில்லை). (20:1-3)
அடுத்து இந்த வசத்தில் வரும் ‘அத்தகையோர்தாம் படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்’ என்ற இந்த வாசகத்தை வைத்து அபூ ஹுரைரா ரலி அவர்களும், இன்னும் சில அறிஞர்களும் ‘இப்படிப்பட்ட மனிதர்கள் வானவர்களை விடவும் சிறந்தவர்கள்’ என்று கூறினர். (இப்னு கஸீர்)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் சிறந்த வாழ்க்கை வாழக்கூடியவர்,யுத்த கலத்தில் விரோதியின் சத்தம், அல்லது உதவிகோரல் கேட்கும் போதெல்லாம் மரணத்தை, அல்லது கொலைசெய்யப்படுவதை எதிர்பார்த்து விரைந்து செல்கின்ற. தனது ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு, அதன் முதுகில் வேகமாக பயணிக்கும் ஒரு மனிதராவார், அல்லது,தொழுகையை நிலைநாட்டி, ஸகாதும் கொடுத்து, மரணம் வரும்வரை தனது ரட்சகனை வணங்குகின்ற, மனிதர்களோடு நல்லவற்றிலேயன்றி தொடர்பும் இல்லையே அத்தகைய, மலை மேடுகளில் ஒரு மேட்டில் அல்லது பள்ளத்தாக்குகளில் ஒரு பள்ளத்தாக்கில் ஆட்டு மந்தைகளுடன் இருக்கும் ஒரு மனிதராவார். (முஸ்லிம்)
இந்த நபி மொழி, மனிதர்களில் சிறந்த வாழ்க்கை வாழக்கூடியவர் யார் என்பதற்கு இரண்டு உதாரணங்கள் மூலம் பாடம் நடத்துகின்றது, இருவருமே அல்லாஹ்வுக்காக வாழ்வதையும், அவனுக்காக நல்லறம் புரிவதையும் அவனுக்காகவே மரணிப்பதையும் ஆசைவைக்கும் மனிதர்களாவர். எனவே இறை நம்பிகை, நல்லறம் செய்தல், அல்லாஹ்வின் திருப்திக்காக வாழுதல் இதுவே வெற்றிக்கான வழியாகும். (அல்லாஹு அஃலம்)
அல்லாஹ்வின் பொருத்தம் கிடைப்பதென்பது சுவன இன்பங்களை விடவும் சிறந்ததாகும்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: நிச்சியமாக உயர்த்தியான அருள் பொருந்திய அல்லாஹ் சுவனவாசிகளை நோக்கி, ‘சுவன வாசிகளே!’ என்பான், ‘எங்கள் இறைவா பதிலளித்து, வந்துவிட்டோம்’ என்று அவர்கள் கூற, ‘நீங்கள் திருப்தி அடைந்தீர்களா?’ என்று கேட்க, ‘நீ உனது படைப்புகளில் யாருக்கும் கொடுக்காததை எங்களுக்கு தந்திருக்கும் போது ஏன் நாங்கள் பொருந்திக் கொள்ளமாட்டோம்’ என்று பதிலளிக்கவே, ‘அதனைவிட சிறந்ததை உங்களுக்கு நான் தருவேன்’ என்று கூற, ‘இறைவா! அதனைவிட சிறந்தது எது இருக்கின்றது?’ என்று அங்கலாய்க்கவே, ‘எனது திருப்தியை உங்களுக்கு நான் தந்துவிட்டேன், இதன் பிறகு எப்போதும் உங்களை வெறுக்கவே மாட்டேன்’ என்று கூறுவான். (புகாரி:6549,7518, முஸ்லிம்)
இந்த ஸூராவை நிதானமாக நாம் சிந்தித்தால் ‘வேதக்காரர்களுக்கு எதனை அல்லாஹ் அடிப்படையாக கொடுத்தானோ அதனையே முஹம்மத் நபி ஸல் அவர்களின் உம்மத்தாகிய எங்களுக்கும் அடிப்படையாக தந்திருக்கின்றான்’ எனப்தை புரிந்துகொள்ளலாம்.
அவர்களுக்கு ஏவப்பட்டது தூய்மையானவர்களாக அல்லாஹ்வை வணங்குவது, எங்களுக்கு சொல்லப்பட்டதும் ‘இறை விசுவாசம் கொண்டு நல்லமல் புரிவது’ என்றால் இரண்டு வேதங்களும் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதல்லவா எனவே அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை. அல்லாஹ் எப்படி விழிக்கின்றான் என்று பாருங்கள்! அல்லாஹ் கூறுகின்றான்:
قُلْ يٰۤـاَهْلَ الْكِتٰبِ تَعَالَوْا اِلٰى كَلِمَةٍ سَوَآءٍۢ بَيْنَـنَا وَبَيْنَكُمْ اَلَّا نَـعْبُدَ اِلَّا اللّٰهَ وَلَا نُشْرِكَ بِهٖ شَيْئًا وَّلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِؕ فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ
(நபியே! பின்னும் அவர்களிடம்) நீர் கூறுவீராக: “வேதத்தையுடையவர்களே! எங்களுக்கும், இன்னும் உங்களுக்குமிடையே, நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்ககூடாது; நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கவும் கூடாது; நம்மில் சிலர், சிலரை அல்லாஹ்வையன்றி தெய்வங்களாக எடுத்துக் கொள்ளவும் கூடாது என்ற சமமானதொரு வார்த்தையின் பால் வாருங்கள்; (இதை ஏற்காது) அவர்கள் புறக்கணித்தால், (அவர்களிடம்,) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்கள் என நீங்கள் சாட்சியம் கூறுவீர்களாக!” என்று நீங்கள் கூறி(விட்டு) விடுங்கள். (3:64)
எனவே இவ்வளவு தெளிவாக இஸ்லாத்தின் வழிகாட்டல் இருக்கும் போது ஏன் வேதக்காரர்களான யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் எதிர்க்க வேண்டும், இப்போது சிந்தித்து பாருங்கள் இதுவே ‘தெளிவான ஆதாரம் வந்த பிறகே அவர்கள் பிரிந்து போனார்கள்’ என்பதற்கு சிறந்த ஆதாரமாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
وَدَّ کَثِيْرٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يَرُدُّوْنَكُمْ مِّنْۢ بَعْدِ اِيْمَانِكُمْ كُفَّارًا ۖۚ حَسَدًا مِّنْ عِنْدِ اَنْفُسِهِمْ مِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَـقُّ ۚ فَاعْفُوْا وَاصْفَحُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى کُلِّ شَىْءٍ قَدِيْرٌ
வேதத்தையுடையோரில் அநேகர், உண்மை அவர்களுக்கு இன்னதெனத் தெளிவாகத் தெரிந்த பின்னும் அவர்களுக்கு உங்கள் மீதுள்ள பொறாமையின் காரணமாக நீங்கள் ஈமான் கொண்ட பிறகும் உங்களை நிராகரிப்போராக திருப்பிவிட வேண்டுமென்று ஆசை வைக்கிறார்கள், ஆகவே, அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டுவரும் வரை (அவர்களை) நீங்கள் மன்னித்து விடுங்கள்; பொருட்படுத்தாது விட்டுவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். (2:109)
இந்த விளக்கத்துடன் ஸூரதுல் பையினாவின் விளக்கம் முடிவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்.