سُورَةِ الضُّحَى
ஸூரதுள் ளுஹா
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!
பெயர்: ஸூரதுள் ளுஹா (முற்பகல்)
இறங்கிய காலப் பகுதி: மக்கீ
வசனங்கள்: 11
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
நபி ஸல் அவர்கள் இந்த ஸூரா தொடக்கம் ஒவ்வொரு ஸூராவின் கடைசியிலும் தக்பீர் சொல்லுமாறு ஏவியதாக உபையிப்னு கஃப் ரலி அவர்களும், அவர்கள் இப்னு அப்பாஸ் ரலி அவர்களுக்கு ஏவியதாகவும், அவர்கள் முஜாஹித் ரஹ் அவர்களுக்கு ஏவியதாகவும் இப்னு கஸீர் இமாமவர்கள் பதிவு செய்துள்ளார்கள். அவர்கள்; ‘இந்த செயலானது, அபுல் ஹஸன் அஹ்மத் அல்பஸ்ஸீ அவர்கள் தனிமைப்பட்டு அறிவிக்கும் ஒரு செயலாகும், அவர் குர்ஆன் ஓதலில் ஒரு இமாமாக இருந்தாலும், ஹதீஸ் துறையில் அபூ ஹாதிம் அவர்கள் அவரை பலவீனப்படுத்தியிருப்பதோடு, அவரைத் தொட்டு நான் அறிவிக்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார்கள், மேலும், அபூ ஜஃபருல் உகைலீ அவர்கள் ‘முன்கருல் ஹதீஸ்’ என்று விமர்சித்துள்ளார், அதேநேரம், இமாம் ஷாபிஈ அவர்கள், தொழுகையில் ஒருவர் இப்படி தக்பீர் சொல்வதைக் கேட்ட போது அவரை நோக்கி, ‘அழகாக செய்தீர், ஸுன்னாவுக்கு நேர்பட்டீர்’ என்று கூறினார்கள், எனவே இந்த செய்தி ஸஹீஹானது என்பதை வெளிப்படுத்துகின்றது’ என்று கூறியுள்ளார்கள்.
இந்த செய்தியை இமாம் தஹபீ அவர்கள் மீஸானுல் இஃதிதாலில் பதிவு செய்துவிட்டு, ‘இது கரீபான அபூர்வமான ஒரு செய்தி, அபூ ஹாதம் அவர்கள் இது முன்கரானது என்று கூறியுள்ளார்கள்’ என்று பதிவு செய்துள்ளார்கள்.
{இப்னு கஸீர் இமாமவர்கள் அப்படி கூறியிருந்தாலும், ஹதீஸ் ஸஹீஹாக வந்தால் அதுவே எனது போக்கு’ என இமாம் ஷாபிஈ ரஹ் அவர்கள் கூறியதற்கு இணங்க, இந்த செய்தி அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானது என்பதும் தெளிவு, ஷாபிஈ மத்ஹபாக இருக்க முடியாது என்பதும் தெளிவு.} அல்லாஹு அஃலம்.
அடுத்து தக்பீர் சொல்ல வேண்டிய இடத்திலும், சிலர் ‘வல்லைலி ஸூராவின் கடைசி’ என்றும், சிலர் ‘வள்ளுஹாவின் கடைசி’ என்றும் கூறி கருத்துவேற்றுமை பட்டுள்ளனர், மேலும் தக்பீர் சொல்லும் விதத்திலும், சிலர், ‘அல்லாஹு அக்பர் என்று சுறுக்குவர்’ என்றும், சிலர், அல்லாஹு அக்பர் லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்’ என்று கூறுவர் என்று கூறியும் கருத்துவேற்றுமைப்பட்டுள்ளனர்.
இமாம் பார்ராஃ அவர்கள் கூறும் போது, ‘நபியவர்களுக்கு வஹீ இறங்க தாமதமாகி சிலகாலம் வராமல் இருந்தது, பிறகு வானவர் வருகைதந்து, வள்ளுஹா வல்லைலி ஸூராவை முழுக்கவும் அறிவித்தபோது, நபியவர்கள் கடும் சந்தோஷத்தால் தக்பீர் சொன்னார்கள்’ என்று கூறியுள்ளார்கள். ஆனால் இது ஆதாரப்பூர்வமானதா, பலவீனமானதா என்று கூறும் அளவுக்கு ஒரு அறிவிப்பாளர் தொடரை அவர்கள் கூறவில்லை அல்லாஹு அஃலம். (இப்னு கஸீர்)
{அறிவிப்பாளர் தொடர் இல்லாத இந்த செய்தியை அறிவிப்பு செய்வதோ, அதனை சிறப்பாக கூறுவதோ நபிகளார் மீது பொய் சொன்ன குற்றத்தில் எம்மை சேர்த்து விடும். அல்லாஹ் போதுமானவன்.}
இந்த ஸூரா இறங்க காரணமாக இருந்த நிகழ்வு, ஸபபுன் நுஸூல்:
ஜுன்துப்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) சில நாட்கள் வரவில்லை. அப்போது குறைஷிக் கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி ‘இவரின் ஷைத்தான் இவரை விட்டுவிட்டான்’ என்று கூறினாள். அப்போது ‘முற்பகல் மீதும் இரவின் மீதும் ஆணையாக உம்முடைய இறைவன் உம்மைவிட்டு விடவுமில்லை; வெறுக்கவுமில்லை’ (93:1,2,3) என்ற வசனம் அருளப்பட்டது. (புகாரி:1125,4983,4951,4950, முஸ்லிம்)
கதீஜா ரலி அவர்கள் நபியவர்களைப் பார்த்து, ‘உங்களது இறைவன் உங்களை வெறுத்துவிட்டான்’ என்று கூறியதாகவும், அப்போதே இந்த ஸூரா இறங்கியதாகவும் இரண்டு வழிகளில் இப்னு ஜரீர் இமாமவர்கள் பதிவு செய்திருக்கும் அறிவிப்பானது, முர்ஸலான செய்தியாகும், இதில் கதீஜா ரலி குறிப்பிடப்பட்டிருப்பது சரியான (மஹ்பூளான) செய்தியாக இல்லாதிருக்கலாம், அல்லது அவர்கள் கைசேதப்பட்டு, கவலைப்படும் நோக்கில் கூறியிருக்கலாம்.’என்று இப்னு கஸீர் இமாமவர்கள் கூறியுள்ளார்கள்.
{முர்ஸல்: இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நடந்த இந்த நிகழ்வை அறிவிக்கும் உர்வதுப்னுஸ் ஸுபைர், அப்துல்லாஹ் பின் ஷத்தாத் ஆகிய இருவரும் தாபிஈன்களாவர். எனவே இது பலவீனம் என்ற வகையை சார்ந்ததாகும்}
وَالضُّحٰىۙ
وَ சத்தியம் செய்வதற்காக பாவிக்கப்படும் ஒரு எழுத்து, சத்தியமாக, الضُّحٰىۙ முற்பகல்
முற்பகல் (பிரகாசம்) மீது சத்தியமாக! (93:1)
وَالَّيْلِ اِذَا سَجٰىۙ
الَّيْلِ இரவு, اِذَا நிபந்தனையிடுவதற்கு பாவிக்கப்படும்\ ஆல் உருபு\ ஒன்றின்போது, سَجٰىۙ அது நிசப்தமாகிவிட்டது\ அமைதியடைந்துவிட்டது
இரவின் மீதும் சத்தியமாக – அது அமைதியடையும்போது. (93:2)
ஸஜா என்றால் இருள் சூழ்ந்து அமைதி ஏட்படுவதை குறிக்கின்றது, அல்லாஹ் கூறுகின்றான்:
فَالِقُ الْاِصْبَاحِۚ وَ جَعَلَ الَّيْلَ سَكَنًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ؕ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ அவனே அதிகாலை நேர(வெளிச்ச)த்தை (இரவின் இருள்களிலிருந்து) வெடிக்கச் செய்கிறவன், அவனே இரவை அமைதியானதாகவும் காலக்கணக்கிற்காகச் சூரியனையும் சந்திரனையும் ஆக்கினான்,… (6:96)
முற்பகல், பிரகாசம், இரவு போன்ற மனிதனோடு சம்பந்தப்பட்ட இறை சக்தியின் வெளிப்பாடுகளில் சத்தியம் செய்த அல்லாஹ், இந்த ஸூராவில் நபிகளாருக்கு ஆறுதல் கூறுவதுடன், அவர்களுக்கு அவன் புரிந்த அருள்களையும் நினைவூட்டி, ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கு சில அறிவுரைகளையும் வழங்குகின்றான்.
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ
مَا وَدَّعَكَ உம்மை அவன் கைவிடவில்லை, رَبُّكَ உம் இறைவன், وَمَا قَلٰىؕ இன்னும் அவன் வெறுக்கவில்லை
(நபியே!) உமதிரட்சகன் உம்மைக் கைவிடவுமில்லை, (அவன் வெறுக்கவுமில்லை. (93:3)
وَلَـلْاٰخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْاُوْلٰىؕ
الْاٰخِرَةُ மறுமை\கடைசி, خَيْرٌ மிகச் சிறந்தது, لَّكَ உனக்கு, مِنَ விட\ இருந்து, الْاُوْلٰىؕ இம்மை\ முதலாவது
மேலும், மறுமை இம்மையை விட உமக்கு மிகச் சிறந்ததாகும்.
وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ
لَ உறுதிப்படுத்துவதற்காக سَوْفَ உடன் சேர்ந்து வரும், سَوْفَ எதிர் காலத்தை காட்டுவதற்காக வினை சொல்லுடன் வரும், يُعْطِيْكَ அவன் உமக்குக் கொடுப்பான், رَبُّكَ உம் இறைவன், فَ எனவே\ ஆகவே, تَرْضٰىؕ நீ திருப்தியடைவாய்\கிறாய்
இன்னும், உமதிரட்சகன் உமக்கு பிறகு தருவான், நீர் திருப்தியடைவீர். (93:5)
மக்கா இணைவைப்பாளர்களால் நோவினைப்பட்ட நபிகளாருக்கு அல்லாஹ் சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் இவைகள், அல்லாஹ் நபியவர்களை கைவிடவில்லை, (13 வருட காலம் வாழ்ந்து எத்தனையோ வெற்றிகளை அடைந்தார்கள்) அல்லாஹ் வெறுக்கவில்லை, (மாறாக நபிகளாரை அல்லாஹ் நேசித்தான் என்பதற்கு ஏகப்பட்ட சான்றுகள் அண்ணலாரின் வாழ்க்கையில்) உலகில் விரோதிகளால் பல இன்னல்களை சந்தித்த நபியவர்களுக்கு இந்த உலகை விடவும் மறுமை சிறந்தது, இதனை நபியவர்கள் நன்றாகவே விளங்கியிருந்தார்கள். ஒருசில எடுத்துக்காட்டுக்கள்:
நபி(ஸல்) அவர்கள் ‘அபூ தர்ரே! உஹது மலையை நீர் பார்த்திருக்கிறீரா?’ எனக் கேட்டார்கள். தம் வேலை ஏதோ ஒன்றுக்காக நபி(ஸல்) அவர்கள் என்னை அங்கு அனுப்பப் போகிறார்கள் என எண்ணி பகல் முடிய இன்னம் எவ்வளவு நேரம் உள்ளது என அறிந்து கொள்வதற்காக சூரியனைப் பார்த்துவிட்டு. ‘ஆம்’ என்றேன். ‘உஹது மலையளவுக்குத் தங்கம் என்னிடம் இருந்து அதில் மூன்று தீனார்களைத் தவிர வேறு எதையும் செலவிடாமலிருப்பதை நான் விரும்பவிலலை’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். (புகாரி:1408)
உமர் ரலி அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் தம் மனைவியரை விட்டு பிரிந்து தனித்திருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களின் துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு ஸலமாவின் பேச்சு வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களின் தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஏன் அழுகிறீர்கள்?’ என்றார்கள். அதற்கு நான், ‘இறைத்தூதர் அவர்களே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!’ என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?’ என்று கேட்டார்கள். (புகாரி:4913, முஸ்லிம்)
அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் ‘அல்லாஹ், தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா? எனத் தேர்ந்ததெடுக்க ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடம் உள்ளதையே தேர்ந்தெடுத்தார்’ என்றார்கள். (இதைக் கேட்ட) அபூ பக்ரு(ரலி) அழலானார்கள். ‘இந்த வயோதிபர் ஏன் அழகிறார்? தன்னிடம் உள்ளது வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா என்று ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தபோது அந்த அடியார் இறைவனிடம் உள்ளதைத் தேர்ந்தெடுத்தால் அதற்காக அழ வேண்டுமா என்ன?’ என்று நான் மனதிற்குள் கூறிக் கொண்டேன். அந்த அடியார் நபி(ஸல்) அவர்கள் தாம். (தங்களின் மரணத்தையே அவ்வாறு குறிப்பிட்டார்கள் என்பதைப் பிறகு அறிந்து கொண்டேன்) அபூ பக்ர் (ரலி) எங்களை விட அறிவில் சிறந்தவராக இருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி:466,3904, முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உஹுது மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என் மீது மூன்று நாள்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர. (புகாரி:2389, முஸ்லிம்)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “நம்மை உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்துவந்ததைப் போன்று நாமும் சந்தித்துவருவோம்” என்று கூறினார்கள். அவ்வாறே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், “ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?” என்று கேட்டார்கள்.அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள், “அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)” என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச்செய்துவிட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர். (முஸ்லிம்: 4849)
உலகில் இன்பங்களையெல்லாம் விட்டுக்கொடுத்த நபியவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கும் சந்தோஷங்களும், மகிழ்ச்சிகளும், அந்தஸ்த்துக்களும் சொல்லமுடியாதவை. அவற்றை நபிகளார் திருப்தியோடு ஏற்பார்கள் என்பதே அடிப்படை. அதற்கான எடுத்துக்காட்டுக்கள் சில,
அபூ உபைதா ஆமிர் இப்னு அப்தில்லாஹ் இப்னி மஸ்வூத்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘(நபியே!) நாம் உங்களுக்கு அல்கவ்ஸரை அருளினோம்’ எனும் (108:1 வது) இறை வசனம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘அது ஒரு நதியாகும். அது உங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துகள் உள்ளன. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்று இருக்கும்’ என்று கூறினார்கள். (புகாரி:4965)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்(ஆதி முதல் அந்தம்வரை வாழ்ந்த) இறைநம்பிக்கையாளர்கள் அனைவரையும்அப்படியே மறுமை நாளில் அல்லாஹ் ஒன்று திரட்டுவான். அப்போது அவர்கள் (நமக்கு ஏற்பட்டுள்ள) இந்த(ச் சோதனையான)க் கட்டத்திலிருந்து நம்மை விடுவிக்க நாம் (யார் மூலமாவது) நம் இறைவனிடம் மன்றாடினால் (மிகவும் நன்றாயிரக்கும்) என்று பேசிக்கொள்வார்கள். பிறகு அவர்கள், ஒவ்வொரு நபியிடமாக சென்று, கடைசியாக என்னிடம் வருவார்கள். அப்போது நான் என்னுடைய இறைவனிடத்தில் (பரிந்துரை செய்ய) அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அதற்கான அனுமதி எனக்கு வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது அவனுக்கு (சிரம்பணிந்து) சஜ்தாவில் விழுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் (அப்படியே) என்னை (சிரவணக்கத்தில்) விட்டுவிடுவான். பிறகு (இறைவனின் தரப்பிலிருந்து) முஹம்மதே! தலையை உயர்த்துஙகள்! சொல்லுங்கள், செவியேற்கப்படும். கேளுங்கள், உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள் உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று என்னிடம் சொல்லப்படும். அப்போது நான் என் இறைவனை அவன் எனக்குக் கற்றுத்தந்த புகழ் மொழிகளைக் கூறி போற்றுவேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு நான் அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். பின்னர் மீண்டும் நான் (இறைவனிடம்) செல்வேன் என் இறைவனைக் காணும்போது நான் (முன்போலவே, சிரம் பணிந்து) சஜ்தாவில் விழுவேன். அப்போது அல்லாஹ் தான் நாடிய வரை என்னை (அப்படியே சிர வணக்கத்தில்) விட்டுவிடுவான். பிறகு (இறைவனின் தரப்பிலிருந்து), முஹம்மதே! தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள், செவியேற்கப்படும். கேளுங்கள், அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று சொல்லப்படும். அப்போது நான் என் இறைவனை அவன் எனக்குக் கற்றுத்தந்த புகழ்மொழிகளைக் கூறிபோற்றுவேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு (அவர்களுக்காகப் பரிந்துபேசி) அவர்களை நான் பசார்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். பிறகு )மூன்றாம் முறையாக) நான் (இறைவனிடம்) செல்வேன். அப்போது நான், என் இறைவா! குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறை மறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை என்று சொல்வேன். ………. (புகாரி:7410,7440, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (முஸ்லிம்: 628)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான் ‘இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!’ என்பேன். அப்போது ‘இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது’ எனக் கூறப்படும். (புகாரி:6576,7049, முஸ்லிம்)
அடுத்து, மறுமையில் நபிகளாருக்கு கொடுக்கும் இன்பங்கள் ஏராளம், உலகில் நபிகளாருக்கு அல்லாஹ் செய்த அருட்கொடைகளை நினைவூட்டுகின்றான்.
اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى
اَ ஆ உருபு\ கேள்வி கேட்பதற்கு பாவிக்கப்படும் எழுத்து, لَمْ يَجِدْكَ உம்மை அவன் பெற்றுக்கொள்ளவில்லை, يَتِيْمًا அநாதை, فَاٰوٰى ஆகவே அரவணைத்தான்\ புகலிடமளித்தான்
உம்மை அவன் அநாதையாகக் கண்டு, அவன் புகலிடம் அளிக்கவில்லையா?. (93:6)
நபிகளாரை பொறுத்தவரை அவர்கள் பிறப்பதற்கு முன்னரே தந்தையை இழந்துவிட்டார்கள், பிறந்து ஆறாவது வயதில் தாயை இழந்தார்கள், பிறகு பாட்டனின் அரவணைப்பில் அல்லாஹ் கண்ணியமாகவே வைத்தான், அவர் நபிகளாரின் எட்டாவது வயதில் மரணித்தாலும் அவரது தந்தையின் சகோதரர்கள் நபியவர்களை அரவணைத்தனர், குறிப்பாக அபூ தாலிப் அவர்கள் கடுமையாகவே தனது பிள்ளையைப் போன்று கவனித்தார்கள், நபியவர்கள் தனது நாற்பதாவது வயதில் நபியாக தேர்வு செய்யப்பட பிறகு தனது சமூகத்தவர்களால் எதிர்க்கப்படும் போதும் பாதுகாத்தார்கள், உதவி புரிந்தார்கள். ஆச்சர்யம் அபூ தாலிப் ஒரு இணைவைப்பாளராக இருந்து நபிகளாரை பாதுகாத்ததே, அதுவே அல்லாஹ் செய்த அருள், பிறகு அபூதாலிப் மரணிக்கவே அல்லாஹ் ஹிஜ்ரத் என்ற (மார்க்கத்தை நிலைநாட்ட சொந்த ஊரை, நாட்டை துறத்தல்) என்ற அடிப்படையில் மதீனாவை புகலிடமாக ஆக்கி, அன்சாரிகளை (மதீனத்து நபித்தோழர்களை) அல்லாஹ் பாதுகாவலர்களாக கொடுத்தான். இப்படி நபிகளார் மரணித்த பிறகும் இன்று வரை அவர்களது உம்மத்தை வைத்து அவர்களது வாழ்க்கை வழிமுறைக்கு பாதுகாப்பு கொடுத்துக்கொண்டிருக்கின்றான். அல்ஹம்து லில்லாஹ்!
وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى
وَوَجَدَكَ இன்னும் உம்மை கண்டு கொண்டான், ضَآ لًّا வழிதவறியவன், هَدٰى அவன் நேர்வழி காட்டினான்
மேலும், வழிதவறியவராக உம்மைக் கண்டு, அவன் வழி காட்டவில்லையா? (93:7)
உண்மையில் நபிகளாரைப் பொறுத்தவரை நபியாக தெரிவு செய்யப்பட முன்னர் எது சத்தியம், எது அசத்தியம் என்று சரியாக தெரியாத நிலையிலேயே இருந்தார்கள், அல்லாஹ் அவர்களை தேர்வு செய்து உலக மக்களுக்கே நேர்வழி எதுவென்று காட்டிக்கொடுக்கும் ஒரு தூதராக அல்லாஹ் ஆக்கினான். அல்லாஹ் கூறுகின்றான்:
وَكَذٰلِكَ اَوْحَيْنَاۤ اِلَيْكَ رُوْحًا مِّنْ اَمْرِنَا ؕ مَا كُنْتَ تَدْرِىْ مَا الْكِتٰبُ وَلَا الْاِيْمَانُ وَلٰـكِنْ جَعَلْنٰهُ نُوْرًا نَّهْدِىْ بِهٖ مَنْ نَّشَآءُ مِنْ عِبَادِنَا ؕ وَاِنَّكَ لَتَهْدِىْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۙ (நபியே!) இவ்வாறே உமக்கு நம்முடைய கட்டளையின் (குர்ஆனாகிய) உயிரானதை வஹீ மூலமாக அறிவித்தோம், (இதற்கு முன்னர்) நீர் வேதம் என்றால் என்ன, இன்னும் விசுவாசம் என்றால் என்ன என்பதை அறிந்தவராக இருக்கவில்லை, ஆயினும், (இவ்வேதத்தை) இதனைப் பிரகாசமாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாடியவர்களுக்கு இதனைக்கொண்டு நாம் நேர் வழி செலுத்துகின்றோம், (நபியே!) நிச்சயமாக நீர், (மனிதர்களுக்கு) நேரான வழியின்பால் வழிகாட்டுவீராக!. (42:52)
ذٰ لِكَ مِنْ اَنْۢـبَآءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَؕ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يَخْتَصِمُوْنَ (நபியே!) இவை (யாவும் நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளவையாகும். இவைகளை நாம் உமக்கு வஹீயின் மூலம் அறிவிக்கின்றோம். இன்னும், மர்யமுக்கு (அவரை வளர்க்க) அவர்களில் எவர் பொறுப்பேற்றுக் கொள்வதென்று (முடிவுசெய்ய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை எறிந்தபோதும் நீர் அவர்களிடத்தில் இருக்கவில்லை, (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்துக் கொண்டபோதும் அவர்களிடத்தில் நீர் இருக்கவில்லை. (3:44)
இந்த வசனத்தில் ‘வழிதவறியவர்’ என்பதற்கு சிலர், ‘இதன் மூலம் நாடப்படுவது, ‘நபியவர்கள் சிறுவனாக இருக்கும்போது மக்காவின் பள்ளத்தாக்கில் காணாமல் போய் திரும்பி வந்த நிகழ்வு’ என்றும், சிலர் ‘நபியவர்கள் அபூதாலிப் அவர்களோடு ஷாமுக்கு சென்ற போது இப்லீஸ் அவர்களை வழிதவற செய்ததாகவும், அதன் மூலம் ஹபஷாவுக்கே சென்றதாகவும், பிறகு நபியவர்கள் பாதையைக் கண்டுகொண்டதாகவும்’ கூறுகின்றனர். இந்த இரண்டு கருத்துக்களையும் இமாம் பகவி அவர்கள் பதிந்துள்ளார்கள். (இப்னு கஸீர்) {இது ஆதாரமற்ற செய்தியாகும். அல்லாஹு அஃலம்}
وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغْنٰىؕ
وَوَجَدَكَ இன்னும் அவன் உம்மைக் கண்டு கொண்டான்\பெற்றுக் கொண்டான், عَآٮِٕلًا வறியவர், اَغْنٰىؕ அவன் செல்வந்தராக்கினான்
மேலும், ஏழையாக அவன் உம்மைக் கண்டு, தேவையற்றவராக ஆக்கவில்லையா? (93:8)
உண்மையில் நபியவர்கள் உலகின் பொருளாதாரத்தைவிட்டு ஒதுங்கியே வாழ்ந்தார்கள், அதேநேரம் அல்லாஹ் அவர்களை தன்னிறைவோடு, படைப்பினங்களின் தேவையற்றவராக ஆக்கிவைத்தான், எந்த சந்தர்ப்பத்திலும் படைப்பினங்களில் தேவையுள்ளவராக வைக்கவில்லை.
உண்மையில் ஸீமாட்டித்தனம் என்பது அதிகம் சொத்து, செல்வம் வைத்திருப்பதல்ல, மாறாக தன்னிறைவோடு வாழ்வதே.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; ‘வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே செல்வமாகும். (புகாரி: 6446,6447, முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் வெற்றி பெற்றுவிட்டார். (முஸ்லிம்: 1903)
இந்த வசனங்கள் மூலம் நபிகளாருக்கு அல்லாஹ் செய்த நலவுகளை நினைவூட்டியிருந்தாலும் மனித சமூகம், முஸ்லிம்கள் நாங்கள் பெறவேண்டிய பாடமே இங்கு முக்கியமானது.
அல்லாஹ்வின் மார்க்கத்தை சரியாக எடுத்து நடக்கும் போது உலகில் எங்களுக்கும் சோதனைகள் வரலாம், அப்போதெல்லாம் இந்த உலக வாழ்க்கையைவிட மறுமை வாழ்க்கையே சிறந்தது என்று உள்ளத்தில் உறுதிகொள்ள வேண்டும்,
அடுத்து உலகில் சிலநேரம் நாம் விரும்பும் பலவிடயங்களை இழக்கலாம், அல்லாஹ் நம்மை முஸ்லிமாக வாழச் செய்து, இன்னுமுள்ள பல அருள்களை நமக்கு செய்திருப்பான் அவைகளை நினைவூட்டி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோராக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் சில வழிகளையே அல்லாஹ் தொடர்ந்து சொல்லித் தருகின்றான்.
فَاَمَّا الْيَتِيْمَ فَلَا تَقْهَرْؕ
فَ எனவே\ஆகவே, اَمَّا எழுவாயுடன் சேர்ந்து வரும், பயனிலையில் فَ சேர்ந்து வரும், الْيَتِيْمَ அநாதை, لَا تَقْهَرْؕ நீ அநீதி செய்யவேண்டாம்
ஆகவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்! (93:9)
அநாதை என்றால்; தந்தையை இழந்து, பருவ வயதை அடையாதவர்களைக் குறிக்கும்.
இந்த வசனம் மூலம் அனாதைகளுடன் கண்ணியமாக, இறக்கமாக, பண்பாக நடக்குமாறு அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான், மாறாக அவர்களை இழிவுபடுத்தல், அவர்களது செயல்களை பார்த்து கடிந்து கொள்ளல், கேவலப்படுத்தல் கூடாது என்று தடுக்கின்றான், உண்மையில் அனாதைகளை பொறுத்தவரையில் தந்தை பாசத்தை இழந்தவர்கள், தன்னை அரவணைக்கும் கரங்களை இழந்தவர்கள், இந்தப் பாதிப்புகள் அவர்களது வாழ்க்கையில் சில வழிபிறழ்வுகளை, கட்டுப்படாத தன்மைகளை, மனம் ஏற்றுக்கொள்ளாத செயற்பாடுகளை கொண்டுவரலாம். அதனால் அவர்களது செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டு வெறுக்காமல், இறக்கத்தாலும், பாசத்தாலும் அவர்களை வெல்லுங்கள் என்று வழிகாட்டுகின்றது இஸ்லாம்.
நபி ஸல் அவர்கள், ; நானும் அனாதைகளை பராமரிப்போரும் மறுமையில் இப்படி இருப்போம், என்று தன் ஆள்காட்டி விரலுடன் நடு விரலை, சிறு இடைவெளி விட்ட நிலையில் சேர்த்துக்காட்டி, கூறினார்கள். (புகாரி: 5304, முஸ்லிம்)
وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنْهَرْؕ
وَاَمَّا இன்னும், السَّآٮِٕلَ யாசகர், لَا تَنْهَرْؕ நீ விரட்டவேண்டாம்
இன்னும், (தர்மம்) கேட்பவரை விரட்டாதீர்! (93:10)
இந்த வசனம் மூலம் கேட்டுவருபவரை (அறிவைத் தேடுபவராகவோ, உலகை தேடுபவராகவோ இருக்கலாம்) அவரை விரட்டாமல் அவருக்கு கற்றுக்கொடுப்பவராகவும், அள்ளிக்கொடுப்பவராகவும் இருக்கவேண்டும் என்று அல்லாஹ் அறிவுரைக் கூறுகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
عَبَسَ وَتَوَلّٰٓىۙ اَنْ جَآءَهُ الْاَعْمٰىؕ وَمَا يُدْرِيْكَ لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ اَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰىؕ (நமது நபியாகிய) அவர், தன்னிடம் பார்வையிழந்தவர் வந்ததற்காக கடுகடுத்தார், புறக்கணித்தார்.1,2, (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக ஆகிவிடக் கூடும்,அல்லது அவர் (உம்முடைய உபதேசத்தை) நினைவுபடுத்தி, அவ்வுபதேசம் அவருக்குப் பயனளிக்கும். என்பதை உமக்கு எது அறிவித்தது?(80:1-4) اَمَّا مَنِ اسْتَغْنٰىۙ فَاَنْتَ لَهٗ تَصَدّٰىؕ وَمَا عَلَيْكَ اَلَّا يَزَّكّٰٓىؕ ஆகவே, எவன் பொருளாதாரத்தோடு தேவையற்றிருக்கின்றானோ, அவனுக்கு நீர் செவிமடுக்கிறீர். அவனோ, (இஸ்லாத்தை ஏற்காது) பரிசுத்தம் அடையாவிட்டால் உம்மீது குற்றமில்லை. (80:5-7) وَاَمَّا مَنْ جَآءَكَ يَسْعٰىۙ وَهُوَ يَخْشٰىۙ فَاَنْتَ عَنْهُ تَلَهّٰىۚ இன்னும், எவர் (அல்லாஹ்வைப்) பயந்த நிலையில் உம்மிடம் விரைந்தவராக வந்தாரோ, அவரை நீர் புறக்கணிக்கின்றீர். (80:8-10)
وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
وَاَمَّا மேலும், نِعْمَةِ அருள், رَبِّكَ உம் இறைவன், حَدِّثْ நீ அறிவித்துக்கொடு\ செல்லிக்கொடுங்கள்
மேலும், உமதிரட்சகனின் அருட்கொடையைப்பற்றி அறிவித்துக் கொண்டிருப்பீராக! (93:11)
இந்த உலகில் வசதியற்றிருந்த நபியவர்களுக்கு அல்லாஹ் வசதிவாய்ப்பைக் கொடுத்தான் என்றால் அந்த அருள்களுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமாறு அல்லாஹ் இந்த வசனம் மூலம் அறிவுரை செய்கின்றான்.
அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துவதன் வெளிப்பாடே ‘அல்லாஹ் எனக்கு இப்படி இப்படியெல்லாம் தந்துள்ளான்’ என்று பேசுவதுதான். மாறாக பல அருட்கொடைகளை எதோ ஓரு அடிப்படையில் அனுபவிக்கும் ஒரு மனிதன் ஒன்றுமே கிடைக்காதது போன்று பேசுவது நன்றிமறுப்பதாகிவிடும். (அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்.)
அபூ நழ்றா என்ற தாபிஈ அவர்கள், ‘ அருட்கொடைகளைப் பற்றி பேசுவதே நன்றி செலுத்துவதன் அடையாளம். என்று முஸ்லிம்கள் கருதினார்கள்’ என்று கூறியதாக இப்னு ஜரீர் ரஹ் அவர்கள் கூறியதாக இப்னு கஸீர் இமாமவர்கள் பதிந்துள்ளார்கள். (இப்னு கஸீர்)
அடுத்து, அருட்கொடைகள் பற்றி பேசுவதே நன்றி செலுத்துவதுதான் என்று வரும் சில ஹதீஸ்களும் அதற்கான தீர்ப்புக்களும்;
நபி அவர்கள் கூறினார்கள்: யார் சிறிதளவு நலவுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவர் பெரியதற்கும் நன்றி செலுத்தமாட்டார், மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தமாட்டான், அல்லாஹ்வின் அருளைப் பற்றி பேசுவதே நன்றி செலுத்துவதாகும், அதனை விடுவது இறைமறுப்பாகும், கூட்டமைப்பு அருளாகும், பிரிவினை தண்டனையாகும். (அஹ்மத்:18449,19351, அதன் அறிவிப்பாளர் தொடரில் அபூ அப்திர் ரஹ்மான் என்பவர் இடம்பெற்றுள்ளார், அவர் அறியப்படாதவர், அவரைத் தொட்டு அபூ வகீஃ என்பவர் தனிமைப்பட்டு அறிவித்துள்ளார். எனவே இது பலவீனமானதாகும்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தமாட்டான். (அபூதாவூத்:4811, திர்மிதி: 1954, ஸஹீஹ்)
அனஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் தூதரே! அன்சாரி தோழர்கள் கூலி முழுவதையும் எடுத்துக்கொண்டார்கள்’ என்று அன்சாரிகளின் உதவி, உபகாரங்களைப் பார்த்து முஹாஜிர்கள் கூறவே, நபி ஸல் அவர்கள்: ‘அவ்வாறல்ல, அவர்களுக்காக நீங்கள் பிரார்த்தித்து, நன்றி செலுத்தும் காலமெல்லாம் (நன்மை கிடைக்கும்)’ என்று கூறினார்கள். (அபூதாவூத்:4812, திர்மிதி:2487)
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: யாருக்காவது ஒரு நலவு செய்யப்பட்டு, அவர் அவரை நினைவூட்டி (புகழ்ந்து) பேசினால் அவர் அவருக்கு நன்றி செலுத்தியவராவார், அதனை மறைத்தால் அவர் நன்றிமறுத்தவராவார். (அபூதாவூத்:4814, ஹஸன்)
‘உமது இறைவன் செய்த அருள்’ என்பதற்கு ‘அல்லாஹ் உமக்களித்த நபித்துவம்‘ என்று முஜாஹித் அவர்கள் கூறினார்கள். ‘நீஙகள் செய்த நல்ல காரியங்களை உமது தோழர்களுக்கு சொல்லுங்கள்‘ என்று ஹஸன் பின் அலி ரலி அவர்கள் கூறினார்கள். (இதன் அறிவிப்பில் ஒருவர் என்று அறியப்படாத ஒருவர் அறிவித்ததாக வந்துள்ளது.)
ஸூரதுல் ளுஹா விளக்கம் முடிவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.