ஸூரது அலம் நஷ்ரஹ் விளக்கவுரை !

أَلَمْ نَشْرَحْ

ஸூரது அலம் நஷ்ரஹ்

PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!

பெயர்: ஸூரதுஷ் ஷரஹ் (விரிவாக்கல்)\ அலம் நஷ்ரஹ்

இறங்கிய காலப் பகுதி: மக்கீ

வசனங்கள்: 8

இந்த ஸூராவும் ஸூரதுள் ளுஹாவைப் போன்று நபியவர்களுக்கு அல்லாஹ் செய்த அருள்களை நினைவூட்டி, ஒருசில வழிகாட்டல்களையும் எடுத்துரைக்கும் ஒரு ஸூராவாகும்.

இமாம் அதாஃ, உமர் பின் அப்தில் அஸீஸ் ஆகிய இருவரும் இந்த ஸூராவும் ஸூரா ழுஹாவும் ஒரே ஸூராதான், தொழுகையில் ஒரே ரக்அத்தில் இரண்டையும் ஓதுவார்கள், பிஸ்மில் சொல்லி பிரிக்கமாட்டார்கள், அவர்கள் இவ்வாறு நடக்க காரணமாக இருந்தது, ‘அலம் நஷ்ரஹ் என்று ஆரம்பிப்பது, அலம் யஜித்க  என்ற வாசகத்துடன் இணைக்கப்பட்டது போன்று இருப்பதே. என்று இமாம் அன்னைஸாபூரி அவர்கள் பதிந்துள்ளார். எப்படியிருந்தாலும் இந்த இணைப்பு அவ்விரண்டையும் ‘ஸூரா அன்பால், ஸூரா தவ்பா போன்று’ ஒரே ஸூராவாக ஆக்காவிட்டாலும், கருத்தில் தொடர்புள்ளதாகவே ஆக்கிவிடுகின்றது. (அல்வாஉல் பயான்)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

اَلَمْ نَشْرَحْ لَـكَ صَدْرَكَۙ‏

 

اَ      ஆ உருபு, கேள்வி கேட்பதற்கு பாவிக்கும் எழுத்து,     لَمْ      நிகழ்கால வினை சொல்லை இறந்தகால எதிர்வினை வாக்கியமாக மாறும்\ இல்லை என்ற அருத்தம் தரும்,     نَشْرَحْ     நாம் விரிவாக்குவோம் (விரிவாக்க வில்லை),     لَـكَ     உமக்கு,     صَدْرَكَ     உங்களது உள்ளம்

(நபியே!) உமது நெஞ்சை உமக்காக நாம் விரிவாக்கவில்லையா?    (94:1)

உமது உள்ளத்தை நாம் விரிவாக்கவில்லையா என்ற கேள்வியின் மூலம் நபியவர்களின் உள்ளத்தை சத்தியத்தை ஏற்கும் அளவிற்கு விரிவுபடுத்தினான் என்பதை உறுதிப்படுத்திக் கூறுகின்றான். இதுவே நேர்வழி பெறுகின்ற ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் புரிகின்ற அருளாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

فَمَنْ يُّرِدِ اللّٰهُ اَنْ يَّهْدِيَهٗ يَشْرَحْ صَدْرَهٗ لِلْاِسْلَامِ‌ۚ

ஆகவே, அல்லாஹ் எவருக்கு நேர்வழிகாட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை, இஸ்லாத்திற்காக (அதை ஏற்றுக் கொள்ள) அவன் விரிவாக்குகின்றான்,……  (6:125)

இந்த வசனத்தைக் கொண்டு குறிப்பாக ‘இஸ்ராஃ இரவின் போது நபியவர்களது நெஞ்சம் பிளக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்ட நிகழ்வு நினைவூட்டப்படுகின்றது’ என்று ஒரு கருத்தும் கூறப்பட்டுள்ளது.

இப்னு கஸீர் இமாமவர்கள் கூறும் போது, ‘அப்படி கூறப்பட்டாலும் அது தவறல்ல, ஏனெனில் நபிகளாரின் உள்ளம் விரிவாக்கப்பட்டது என்பதில் அது உள்ளடங்கும், அல்லாஹு அஃலம்” என்று கூறினார்கள்.

ஷரீக் பின் அப்துல்லாஹ் அவர்கள் , அனஸ் (ரலி) அவர்கள், நபியவர்கள் கஃபா மஸ்ஜிதிலிருந்து இஸ்ராஃ அழைத்து செல்லப்பட்ட இறவைப் பற்றி சொல்லும் போது  கூறினார்கள்: ‘நபியவர்களுக்கு வஹி வருவதற்கு (நபியாக தேர்வு செய்யப்படுவதற்கு) முன்னர், மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களிடம் மூன்று பேர் வந்தனர், அவர்களில் முதலாமவர் ‘அவர் யார்’ என்று கேட்க, நடுவில் இருந்தவர்,’அவர்தான் அவர்களில் சிறந்தவர்’ என்று கூற, கடைசியாக இருந்தவர், ‘அவர்களில் சிறந்தவரை எடுங்கள்’ என்று கூறினார், இந்த நிகழ்வு (வஹி இறங்க முன்னர்) அந்த இரவில் நடந்தது, பிறகு வேறு ஒரு இரவில், அவர்களது உள்ளம் தூங்காத நிலையில் கண்கள் தூங்கும் நிலையில் அவர்களிடம் அவர்கள் வரும் வரை அவர்களை நபியவர்கள் காணவில்லை, அப்படித்தான் நபிமார்களின் கண்கள் தூங்கும், உள்ளங்கள் தூங்கமாட்டாது, (வானவர்களான) அவர்கள் நபியவர்களுடன் பேசாமல் அவர்களை சுமந்து சென்று, ஸம்ஸம் கிணற்றுக்கு பக்கத்தில் வைத்தார்கள், அவர்களை ஜிப்ரீல் அலை அவர்கள் பொறுப்பெடுத்து, நபியவர்களது காரை எலும்பிலிருந்து நெஞ்சு பகுதி வரை பிளந்து, ஸம்ஸம் நீரால் அவரது கையால் நெஞ்சை கழுவி, சுத்தப்படுத்தினார்கள், பிறகு தங்கத்தினாலான ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது, அது ஈமானாலும் ஞானத்தாலும் நிரப்பப்பட்டிருந்தது. அதன் மூலம் நபிகளாரது உள்ளம் நிறப்பப்பட்டது, பின்னர் வானத்தை நோக்கி அழைத்து செல்லப்பட்டார்கள்…… (புகாரி:7517,முஸ்லிம்)

நபிகளாரின் நெஞ்சம் பிளந்து சுத்தமாக்கப்பட்ட இன்னுமொரு நிகழ்வு,

அனஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஜிப்ரீல் அலை அவர்கள் நபிகளாரிடம் வந்து, அவர்களை பிடித்து, கீழே வைத்து, அவர்களது நெஞ்சை பிளந்து, உள்ளத்தை வெளியில் எடுத்து, அதிலிருந்து ஒரு சதைத் துண்டை எடுத்து, ‘இதுதான் ஷைத்தானின் தூண்டுதலின் பங்கு’ என்று கூறி வெளியேற்றினார்கள், பிறகு அதனை தங்கத் தட்டில் வைத்து, ஸம்ஸம் நீரால் கழுவி, நெஞ்சத்துடன் சேர்த்து அந்த இடத்தில் திரும்ப வைத்தார்கள், அந்த சிறுவர்கள் வளர்ப்பு தாயிடம் வந்து, ‘நிச்சியமாக முஹம்மத் கொலை செய்யப்பட்டுவிட்டார்’ என்று கூறினர், பிறகு  அவரை முன்னோக்கி செல்லவே அவர்கள் நிறம் மாறியிருந்தார்கள். அனஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: ‘நபிகளாரின் நெஞ்சுப் பகுதியில் ஊசி தைத்த அடையாளத்தை நான் கண்டிருக்கின்றேன்’  (முஸ்லிம்)

அடுத்து, அபூஹுரைரா ரலி அவர்களிடம் ‘நபிகளார் நபித்துவத்தில் முதலாவதாக கண்டது பற்றி’ கேட்க, நபியவரக்ள்; ‘தனது பத்தாவது வயதின் சில மாதங்களை கடந்த நிலையில் இருக்கும் போது, சில மலக்குமார்கள் வந்து, நபியவர்களின் நெஞ்சத்தை பிழந்ததாகவும், அதிலிருந்து குரோதம், பொறாமை அகற்றப்பட்டு, அன்பும், பரிவும் நுழைவிக்கப்பட்டதாகவும், பிறகு சிறுவருக்கு அன்பு காட்டுபவராகவும், பெரியவருக்கு கருணை காட்டுபவராகவும் மீண்டுவந்தேன்.’ என்று ஒரு செய்தி இப்னு கஸீரில் பதியப்பட்டுள்ளது. அது ஸவாஇதுல் முஸ்னதில் பதியப்பட்டுள்ளது, இமாம் ஹைஸமீ அவர்கள் ‘அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள், இப்னு ஹிப்பான் அவர்கள் நமக்கப்படுத்தியுள்ளார்கள்’ என்று கூறியுள்ளார்கள். ஆனாலும் அதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ‘முஹம்மத் பின் முஆஸ்’ என்பவர் யார் என்று அறியப்படாத மஜ்ஹூல் ஆவார். (தஹ்தீபுத் தஹதீப்)

அறிஞர் ஷன்கீதி அவர்கள் கூறும் போது பின்வருமாறு பதிந்துள்ளார்; அறிஞர் ஸாதா அலிய்யினில் பைளாவி அவர்கள் கூறும் போது, ‘நபிகளாரின் உள்ளத்தை அல்லாஹ் விரிவுபடுத்தியதுபோன்று வேறு யாருடைய உள்ளத்தையும் விரிவுபடுத்தவில்லை, அவரது அறிவு ஆரம்பம் முதல் இறுதிவரையான மக்களின் அறிவையும் சேர்த்தது, ஏனெனில் நபியவர்கள் கூறினார்கள்:’சொற்சுருக்கமாக பேசும் ஜவாமிஉல் கலிம் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள். (புகாரி: 7013, முஸ்லிம்)

அதன் (ஆரம்பம் முதல் இறுதிவரையான மக்களின் அறிவு என்பது) அருத்தம்: அல்குர்ஆனில் அல்லாஹ் கற்றுக்கொடுத்த முன்னைய சமுதாயங்கள் பற்றிய தகவல்களும், பின்னர் நடக்கவுள்ள தகவல்களும் அதற்கு இடைப்பட்ட தகவல்களும் இருக்கின்றன என்பதே.

சுருக்கம் நபிகளாருக்கு அல்லாஹ் செய்த அருள் இதையும்விட விசாலமான பொதுப்படையான உள விரிவாக்களாகும் என்பது வெளிப்படையானது. அல்லாஹு அஃலம். அதில் அவரது பொறுமை, விட்டுக்கொடுப்பு, விரோதிகளை மன்னிப்பது, நண்பனுக்கு செய்வது போன்று விரோதிக்கு நல்லதைக் கொண்டு பிரதியீடு செய்வது அடங்கும். தாஇபுக்கு சென்று திரும்பும் போது ஸகீப் கிளையாரோடு நடந்த நிகழ்வைப் போன்று, வானவர் மூலம் அவர்களை அளித்துவிடுவதற்கான அவகாசம் கிடைத்தும், அவர்கள்  எந்தத் தவறுமே செய்யாதவர்களைப்போன்று அவர்களை மன்னிக்கும் அளவுக்கு அவர்களது உள்ளம் விரிவாக்கப்பட்டிருந்தது, அவர்கள்  வார்த்தை என்ன? ‘அல்லாஹ்வே! னது கூட்டத்திற்கு மன்னிப்பளி, அவர்களுக்கு நேர்வழி காட்டு, அவர்கள் அறியாதவர்கள், அவர்களது சந்ததிகளில் ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர  யாருமில்லை, முஹம்மத் ஸல் அல்லாஹ்வின் தூதர்’ என்று கூறுபவர்கள் வருவதை ஆதரவு வைக்கிறேன் என்கிறார்கள். (புகாரி:3231,6929, முஸ்லிம்)

இந்தளவு உள்ளம் விரிவுபடுத்தப்படுவது அழைப்புப் பணிக்கு மிக அவசியமானதும், மிகப்பெரும் அருளுமாகும், இதனால்தான் பிர்அவனிடம் தூதராக அனுப்பப்பட்ட மூஸா நபியவர்கள் பிவருமாறு பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் கூறுகின்றான்:

اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى

“நீர் ஃபிர் அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் தன்  வரம்பை மீறி விட்டான்”  (20:24)

قَالَ رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ , وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ , وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ , يَفْقَهُوْا قَوْلِیْ , وَاجْعَلْ لِّىْ وَزِيْرًا مِّنْ اَهْلِىْ , هٰرُوْنَ اَخِى , اشْدُدْ بِهٖۤ اَزْرِىْ ۙ‏ ۙ‏

 (அதற்கு மூஸா நபியவர்கள்) “என் இரட்சகனே! என் நெஞ்சத்தை விரிவாக்கி,என்னுடைய காரியத்தை எனக்கு எளிதாக்கி, என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்ளும் அளவுக்கு  என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்து, என் சகோதரர் ஹாரூனை என் குடும்பத்திலிருந்து எனக்கு உதவியாளராக ஆக்கி, அவரைக் கொண்டு என் பலத்தை உறுதிப்படுத்தி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள். (20:25-31)

 (அல்வாஉல் பயான்)

وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ , ‏الَّذِىْۤ اَنْقَضَ ظَهْرَكَۙ‏

وَوَضَعْنَا     இன்னும் நாம் வைத்தோம்,     عَنْكَ    உம்மை விட்டு,     وِزْرَكَ‏     உம் சுமை\பாவம்,   الَّذِىْ     ஒன்று,    اَنْقَضَ    அது முறித்தது,    ظَهْرَكَ     உம் முதுகு

மேலும், உமது முதுகை முறித்துவிட்ட (கணமாக்கிவிட்ட) சுமையை (பாவத்தை) உம்மைவிட்டும் நாம் இறக்கிவிட்டோம்.  (94:2,3)

இந்த வசனம் மூலம் அல்லாஹ் நபியவர்களுக்கு செய்த இன்னுமொரு அருளை நினைவூட்டுகின்றான், அதுதான் அவர்களது பாவங்கள் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டதாகும். அல்லாஹ் கூறுகின்றான்:

لِّيَـغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَ مَا تَاَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيْمًا ۙ‏

(நபியே!) அல்லாஹ் உமக்கு, உமது தவறில் முந்தியதையும், பிந்தியதையும் மன்னித்து தனது அருட்கொடையையும் உம்மீது பூர்த்தியாக்கி வைத்து, உம்மை அவன் நேரான வழியில் நடத்துவதற்காக (வெற்றியைத் தந்தான்) (48:1,2)

நபி ஸல் அவர்களைப் பார்த்து உலகில் நபித்தோழர்கள் பலதடவைகள்; ‘நபியே உங்களது முன்பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டானே’ என்று விழித்துள்ளார்கள், அதனை நபியவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். (புகாரி:20,4836, முஸ்லிம்) மேலும் மறுமையிலும் ஒட்டுமொத்த மனிதர்களும் நபிகளாரைப் பார்த்து அல்லாஹ்விடம் சிபாரிசு செய்ய வேண்டும் போதும் ‘நபியே உங்களது முன்பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டானே’ என்றுதான் புகழுவார்கள். (புகாரி:4712,  முஸ்லிம்)

இந்த வசனத்தில் வரும் ‘விஸ்ரக், பாவம், சுமை’ என்பதைக்கொண்டு என்ன நாட்டப்படுகின்றது என்பதிலும்  பலவாறான கருத்துக்களை இமாம் ஷன்கீதி அவர்கள் பதிந்துள்ளார்; ‘ஜாஹிலிய்ய காலத்தில் அவர்களிடமிருந்த விடயங்கள், அதிலிருந்து நபியவர்களை அல்லாஹ் பாதுகாத்தான், அவர்களில் அவை எதிலும் பங்குகொள்ளவில்லை’ என்றும், ‘தனது சமூகத்தில் மாற்ற முடியாமல் கஷ்டப்பட்ட விடயங்களும், அதற்காக நபியவர்கள் வருந்திய விடயங்களும், அல்லாஹ் கூறுவது போன்று: 

فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا‏ 

   (நபியே!) இவ்வேதத்தை அவர்கள் விசுவாசங்கொள்ளாவிட்டால், (புறக்கணித்து விட்ட) அவர்களின் அடிச்சுவடுகள் மீது நீர் (அதே)துக்கத்தால் உம்மையே அழித்துக் கொள்ளக் கூடியவராக இருக்கிறீர்,(18:6)

என்று சிலரும், ‘நபியவர்கள் பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள், அசுத்தமானவற்றிலிருந்து சுத்தமாக்கப்பட்டார்கள்’ என்று அபூ ஹய்யான் அவர்களும், ‘உமது முந்தய பாவங்கள், ஜாஹிலிய்ய காலத்தில் நீங்கள் கடந்துவந்த சுமைகள்’ என்று இப்னு ஜரீர் அவர்களும், ‘நபிகளாரின் முந்திய பிந்திய பாவங்கள்’ என்று இப்னு கஸீர் அவர்களும் கூறியுள்ளனர்.  (அல்வாஉல் பயான்)

இப்படி பல கருத்துக்கள் கூறப்பட்டிருந்தாலும் இதற்கான பதில் எஞ்சியிருக்கின்றது. இப்படி பதில் கூறலாம்;

இப்படி கூறப்பட்டிருப்பது நபிகளாரை சங்கைப்படுத்துவதாகும் (தவறு செய்து மன்னிக்கப்பட்டார்கள் என்பதல்ல). பத்ரில் கலந்துகொண்ட நபித்தோழர்கள் விடயத்தில் “அல்லாஹ் பத்ர் வாசிகளைப் பார்த்து,’நீங்கள் விரும்பியதை செய்யுங்கள், உங்களுக்காக நான் மன்னித்துவிட்டேன்’என்று நபிகளார் கூறியது (புகாரி:3007,3081, முஸ்லிம்) போன்று, உண்மையில் அவர்கள் தவறு செய்யவில்லை, என்றாலும் அவர்களை கண்ணியப்படுத்தி, அந்தஸ்த்தை உயர்த்துவதற்காக இப்படியொரு கட்டளை.

மேலும் நபியவர்கள் கால் வீங்கும் அளவு நின்று வணங்கி, பாவ மன்னிப்பு தேடிவிட்டு, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவனாக நான் இருக்கக்கூடாதா என்று கூறுவது போன்று, இதுவும் நபிகளாரின் நன்றி உணர்வின் வெளிப்பாடும், அவர்களது அந்தஸ்துகள் உயர்வதுமாகும்.

மேலும் ‘ஸுஹைப் அவர்கள் நல்ல அடியானாவார், அவர் அல்லாஹ்வைப் பயப்பட வில்லையென்றால் அவனுக்கு மாறுசெய்திருப்பார்’ என்று வந்திருப்பது போன்று,

மேலும் இது நபியவர்களது நல்லவற்றில் ஒன்றாகும். அல்லது தான் பொடுபோக்கு செய்துவிட்டதாக எண்ணி, பாவமாக நினைத்து, வருந்தி மன்னிப்பு கேட்டது போன்றாகும். மலசல கூடத்திலிருந்து வெளியேறி ‘குப்ரானக், உன்னிடம் மன்னிப்பு கேட்கின்றேன்’ என்று கூறியதுபோன்று, உண்மையில் மலசலம் கழிப்பது மன்னிப்பு தேடுவதை கட்டாயப்படுத்தாது, மாறாக அந்த நேரத்தில் அல்லாஹ்வை மறந்திருந்து விட்டோமோ என்ற குற்ற உணர்வாகும்.அதனால் ஒரு மன்னிப்பு கேட்டாகிவிட்டது.

அல்லது இந்த வசனத்தில் கூறப்பட்டிருப்பது; ‘அல்குர்ஆன் கூறுவது போன்ற நபிகளாரின் சில ஆய்வுமுடிவுகளோடும், தஃவாப் பணிகளோடும் சம்பந்தப்பட்டதாகும், அவர்களது ஆய்வு முடிவுகள் மறுக்கப்படும், அது அவர்களுக்கு பெரிதாக இருப்பது. இப்னு உம்மி மக்தூம் ரலி அவர்களோடு நடந்த நிகழ்வு அல்லாஹ்

‘عَبَسَ وَتَوَلّٰٓىۙ اَنْ جَآءَهُ الْاَعْمٰىؕ‏‏‏

(நமது நபியாகிய) அவர், தன்னிடம் பார்வையிழந்தவர் வந்ததற்காக கடுகடுத்தார்; மேலும், புறக்கணித்தார்.  (80:1,2)

இதற்கு நிகரானதுதான் பின்வரும் வசனம் கூறும் செய்தியும், அவை இந்த வசனத்திற்கு பிறகு இறங்கியிருந்தாலும் சரியே,

عَفَا اللّٰهُ عَنْكَ‌ۚ لِمَ اَذِنْتَ لَهُمْ حَتّٰى يَتَبَيَّنَ لَكَ الَّذِيْنَ صَدَقُوْا وَتَعْلَمَ الْـكٰذِبِيْنَ‏

(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித்தருள்வானாக! (போருக்கு வராது தங்கிவிட்ட) அவர்களில் உண்மை சொல்பவர்கள் (யார் என்பது) உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியும் வரை ஏன் அவர்களுக்கு நீர் அனுமதியளித்தீர்.  (9:43)

அதே போன்று பத்ர் கைதிகள் விடயம்;

مَا كَانَ لِنَبِىٍّ اَنْ يَّكُوْنَ لَهٗۤ اَسْرٰى حَتّٰى يُثْخِنَ فِى الْاَرْضِ‌ؕ

எந்த நபிக்கும் இரத்தத்தைப் பூமியில் ஓட்டாத வரையில் போர்க்கைதிகள் அவருக்கு இருப்பது தகுமானதல்ல;….  (8:67)

அதே போன்று உஹதில் நபியவர்களுக்கு அல்லாஹ் கூறியது போன்று;

لَيْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَىْءٌ

(நபியே!) இக்காரியத்தில் (நாம் கட்டளையிட்டதைத் தவிர) உமக்கு யாதோர் அதிகாரமுமில்லை,….  (3:128)

தனது பெரிய தந்தை அபூதாலிப் விடயத்தில் நபியவர்கள் நடந்தது போன்று;

اِنَّكَ لَا تَهْدِىْ مَنْ اَحْبَبْتَ وَلٰـكِنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ؕ

(நபியே!) நிச்சயமாக நீர் விரும்பியோரை நேர் வழியில் செலுத்தி விடமாட்டீர், எனினும் அல்லாஹ், தான் நாடியோரையே நேர் வழியில் செலுத்துகின்றான்,….  (28:56)

இது போன்ற செய்திகளைக் கொண்டு இந்த வசனத்தை தெளிவுபடுத்தலாம்.

அல்லது விஸ்ர் என்பது அரபு மொழி அடிப்படையில் அழைப்பு பணியை மேட்கொள்வதில் அவர்கள் சுமந்த சுமை என்று நோக்கலாம்.

உதாரணமாக; இஸ்ரா எனும் (பைதுல் மக்திஸ் வரையிலான பயணத்தையும், மிஃராஜ் எனும் ஏழு வானங்களையும் கடந்துவிட்டு வந்த) பயணத்தை முடித்துவிட்டு மக்கா வந்த நபிகளார், உள்ளத்தளவில்  பார்த்தை சுமந்திருந்தார்கள், மக்கள் நபியவர்களை பொய்ப்பிப்பார்கள் என்றும் அறிந்திருந்தார்கள், நபியவர்கள்  கவலையோடு ஒதுங்கி இருந்தபோது, அபூஜஹ்ல் நபிகளாரிடம் வந்து இழிவுபடுத்தும் நோக்கில் ‘ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்க, ஆம் என்று கூறிய நபியவர்கள் இஸ்ராஃ பயணத்தைப் பற்றி அப்படியே கூறினார்கள்.

இது ஒரு சுமை, மக்கள் என்னை பொய்ப்பித்துவிடுவார்கள் என்பது உள்ளத்திற்கு மிகவும் பாரமானதே. அல்லாஹு அஃலம் (அல்வாஉல் பயான்)

وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ‏

وَرَفَعْنَا    இன்னும் நாங்கள் உயர்த்தினோம்,     لَـكَ     உங்களுக்கு,     ذِكْرَكَ‏    உம்மை நினைவூட்டுதல்,

உம்மை நினைவூட்டுவதை உமக்காக நாமே உயர்த்தினோம்.  (94:4)

இதுவும் அல்லாஹ் நபிகளாருக்கு செய்த அருளே, பல சந்தர்ப்பங்களில் நபிகளாரை நினைவூட்டுவதை மனிதர்கள் மீது அல்லாஹ் கட்டாயமாகியுள்ளான். அதிகமான சந்தர்ப்பங்களில் அல்லாஹ் நினைவுபடுத்தப்படும் இடங்களில் நபியவர்கள் நினைவுபடுத்தப்படுகின்றார்கள்.

முஜாஹித் ரஹ் அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் கூறும் போது, ‘நபியே என்னுடன் உம்மை நினைவூட்டப்படாமல் நான் நினைவூட்டப்படுவதில்லை’ என்று அருத்தம் கூறினார்கள்: வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வன் தூதர் என்று சாட்சி கூறுவது போன்று. (இப்னு கஸீர்)

கதாதா ரஹ் அவர்கள் கூறினார்கள்: ‘நபிகளாரை நினைவூட்டுவதை அல்லாஹ் ஈருலகிலும் ஊயர்த்திவிட்டான், எந்த உபதேசம் செய்ப்பவராக இருந்தாலும், இஸ்லாத்தை ஏற்பவராக இருந்தாலும், தொழுகைக்கு அழைப்பவராக இருந்தாலும்

‘ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ’   வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வன் தூதர் என்று சாட்சி கூறுகின்றேன்.’

என்று அழைக்காமலில்லை.(இப்னு கஸீர்)

இப்னு  அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: நான் எனது இறைவனிடம் ஒரு விடயத்தைக் கேட்டேன், அதனை கேட்காமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகின்றேன், ‘எனக்கு முன்னிருந்த நபிமார்களில் சிலருக்கு காற்று வசமாக்கப்பட்டிருந்தது, இன்னும் சிலருக்கு மரணித்தவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டனரே, ‘ என்று கேட்டேன், அதற்கு அல்லாஹ் முஹம்மதே! உம்மை அனாதையாக கண்டு உனக்கு நான் ஒதுங்குமிடம் தரவில்லையா?, ‘தந்தாய்’ என்றேன், உன்னை வழிதவறியவராக கண்டு நேர்வழிகாட்டவில்லையா? ‘காட்டினாய் இறைவா’ என்றேன், உம்மை ஏழையாக கண்டு தேவையற்றவராக ஆக்கவில்லையா? ‘ஆக்கினாய்’ என்றேன், உனது உள்ளத்தை நான் விரிவாக்கவில்லையா?  உம்மை நினைவூட்டுவதை உயர்த்தவில்லையா? ‘அப்படி செய்தாய்’ என்றேன்.  (அல்ஹாகிம், இப்னு அபீ ஹாதிம், நம்பகமான அறிவிப்பாளர் தொடர்)

அபூ நுஐம் அவர்கள் ‘தலாஇலுன் நுபுவ்வா’ என்ற நூலில், ‘இப்ராஹீமை கலீலாகவும், மூஸாவை கலீமாகவும், ஆக்கினாய், தாவூதுக்கு மலைகளை வசப்படுத்திக் கொடுத்தாய், ஸுலைமானுக்கு காற்றை வசப்படுத்தினாய், ஈஸாவுக்கு மரணித்தவரை உயிர்ப்பித்துக் கொடுத்தாய், எனக்கு என்ன செய்தாய் என்று கேட்க, அதனைவிட சிறந்தவைகளை நான் உனக்கு தரவில்லையா, என்னோடு நீ நினைவூட்டப்படாமல் நான் நினைவூட்டப்படுவதில்லை, னது சமுதாயத்தவர்களின் உள்ளத்தை குர்ஆனை வெளிப்படையாக ஓதும் அளவுக்கு விசாலப்படுத்தவில்லையா, வேறு சமுதாயத்துக்கு அதனை நான் கொடுக்கவில்லையே, எனது அர்ஷின் சிம்மாசனத்தின் பொக்கிஷமான ‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம்’ என்பதை உமக்கு  பொக்கிஷமாக ஆக்வில்லையா என்று அல்லாஹ் கேட்டதாக பதியப்பட்டுள்ளது, (அதன் அறிவிப்பாளர் தொடரில் ‘உஸ்மான் பின் அதாஃ’ என்ற பலவீனர் இடம்பெற்றுள்ளார், எனவே இது பலவீனமாகும், மேலும் பிதாயா வன்னிஹாயாவில் வேறு ஒரு அறிவிப்பாளர் தொடரையும் பதிந்துள்ளார்கள், அது நம்பகமான அறிவிப்பாளர் தொடராகும், அதேநேரம் பிதாயாவில் ‘அல் அலிய்யில் அழீம்’ என்று வரவில்லை. 

இப்னு அப்பாஸ் ரலி, முஜாஹித் ரஹ் போன்றவர்கள் ‘நினைவூட்டல்’ என்பதைக்கொண்டு ‘அதான் தொழுகைக்கான அழைப்பே’ நாடப்படுகின்றது என்று கூறினார்கள். ஏனைய அறிஞர்கள்: அல்லாஹ் முன்னோர்களிலும், பின்னால் வருவோரிலும் அவர்களை நினைவூட்டுவதை உயர்த்தியுள்ளான், எல்லா நபிமார்களிடமும் நபியவர்களை நம்பிக்கை கொள்ளுமாறு, அவர்களது உம்மத்தவர்களுக்கு ஏவுமாறும்  ஏவியுள்ளான், பிறகு நபியவர்களின் சமுதாயத்திலும் அது பிரபல்யமாகிவிட்டது, நபியவர்களை அல்லாஹ்வுடன் நினைவூட்டாமல் அல்லாஹ் நினைவூட்டப்படுவதில்லை’ என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)

இந்த கருத்து அதிகம் குர்ஆனுக்கு ஒன்றுபட்டிருக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:

وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ‌ؕ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْ‌ؕ قَالُوْۤا اَقْرَرْنَا ‌ؕ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏

மேலும், அல்லாஹ் நபிமார்களிடம்: வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களிடம்,) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்து, (இதற்குப்) பின்னர், உங்களிடமுள்ளதை உண்மைப் படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் உண்மையாக விசுவாசித்து, நிச்சயமாக அவருக்கு உதவி செய்வீர்கள் (என்று கூறி, “இதனை) நீங்களும் உறுதிப்படுத்தினீர்களா?” இதன்மீது என்னுடைய வாக்குறுதியை எடுத்துக் கொண்டீர்களா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “நாங்கள் (அதனை) உறுதிப்படுத்துகிறோம்” என்றே கூறினார்கள். (“இதற்கு) நீங்கள் சாட்சியாக இருங்கள், நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினான். (3:81)

وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَمُبَشِّرًۢا بِرَسُوْلٍ يَّاْتِىْ مِنْۢ بَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُ‌ؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ‏

மேலும், மர்யமின் புதல்வர் ஈஸா, “இஸ்ராயீலின் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தியவனாகவும், எனக்குப் பின்னர் அஹ்மது எனும் பெயருள்ள ஒரு தூதர் வருவார் என நன்மாராயம் கூறுபவனாகவும் நிச்சயமாக உங்கள்பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராக நான் இருக்கிறேன்” என்று கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக) பின்னர், (அவர் கூறியவாறு) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் (அத்தூதராகிய) அவர் வந்தபொழுது, இது தெளிவான சூனியம்” என்று அவர்கள் கூறினர்.  (61:6)

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறினார்கள்: வஹி எனும் இறை செய்தியை அல்லாஹ் நபியவர்களுக்கு அவர்களது சமுதாயத்திற்கும் நினைவூட்டலாக அறிவுரையாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்:

فَاسْتَمْسِكْ بِالَّذِىْۤ اُوْحِىَ اِلَيْكَ‌ ۚ اِنَّكَ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏

ஆகவே, (நபியே!) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டதே அத்தகையதைப் பலமாகப் பிடித்துகொள்வீராக! நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீது இருக்கின்றீர். (43:43)

وَاِنَّهٗ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ‌ ۚ وَسَوْفَ تُسْأَلُوْنَ

மேலும், நிச்சயமாக (குர்ஆனாகிய) இது உமக்கும், உம்முடைய சமூகத்தாருக்கும் ஒரு நல்லுபதேசமாகும், (மறுமையில்) நீங்கள் கேட்கப்படுவீர்கள்.(43:44)

‘தனது கூட்டத்திற்கு அது அறிவுரையாக இருப்பதென்பது நபிகளாகிய அவர்களை நினைவூட்டுவதாகும்’ என்பது அறியப்பட்ட ஒன்றாகும்.

மேலும் கூறினார்கள்: நபிகளாரை நினைவூட்டுதல் என்பது வஹி எனும் இறை செய்தியினூடாகவே இருக்கின்றது என்பது தெளிவானது, அது நபிகளாரை ‘யா அய்யுஹர் ரஸூல், யா அய்யுஹன் நபி, யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்’ என்று விழிப்பதாக இருந்தாலும் சரியே, அல்லது பெயரைக் குறிப்பிட்டு,’முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்’ என்று வந்தாலும் சரியே, அல்லது மார்க்க அனுஷ்டானங்களில் ‘அதான் (தொழுகைக்கான அழைப்பு), இகாமத் (தொழுகையை நிறைவேற்றுவதற்கான அழைப்பு), இஸ்லாத்தை ஏற்கும் போது மொழிவது, நபிகளார் மீது பிரார்த்தனை (ஸலவாத்) சொல்வது போன்றவைகளாக இருந்தாலும் சரியே அனைத்தும் நினைவூட்டலாக நோக்கப்படும். அல்லாஹு அஃலம். (அல்வாஉல் பயான்)

فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا , اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

فَاِنَّ     ஆகவே,நிச்சயமாக,     مَعَ     உடன்,     الْعُسْرِ     சிரமம்\கஷ்டம்,    يُسْرًا ‏    இலேசு

ஆகவே, நிச்சயமாக கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது.  நிச்சயமாகவே கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது.  (94:5)

இந்த வசனங்கள் மூலம் நபியவர்களுக்கு அல்லாஹ் ஆறுதல் கூறுகின்றான், தனது சமுதாயத்திற்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் பணியில் பல சுமைகளை சுமந்த நபியவர்களுக்கு கஷ்டத்துடனேயே இலேசு இருக்கின்றது என்று உறுதிப்படுத்தி கூறுகின்றான்.

فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ , ‏وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ

فَ       ஆகவே     اِذَا    ஆல் உருபு, நிபந்தனையிடுவதற்கு பாவிக்கப்படும்,    فَرَغْتَ‏     நீ ஓய்வுபெற்றால்,     فَ  நிபந்தனையின் பதிலில் சேர்ந்து வரும்,    انْصَبْ     நீ களைப்படை\ கஷ்டப்படு,     وَ     இன்னும்,     اِلٰى     பக்கம்\அளவில்,     رَبِّكَ     உம் இறைவன்,    فَ      இன்னும்\மேலும்,     ارْغَبْ     ஆர்வம் கொள்\ஆசைவை

ஆகவே, நீர் (உலகக் காரியங்களிலிருந்து)ஓய்வுபெற்றால்  (அல்லாஹ்வுக்காக) நீர் சிரத்தை எடுத்துக் கொள்வீராக!, மேலும், உமதிரட்சகன் பக்கம் நீர் விருப்பம் கொள்வீராக!  (94:7,8)

முந்தைய வசனத்தில் ஆறுதல் கூறிய அல்லாஹ் நபியவர்களுக்கு வழிகாட்டுகின்றான், உலக விடயங்களில் ஈடுபட்டு ஓய்வு பெற்றால் அல்லாஹ்வை வணங்குவதில் கவனம் செலுத்தவேண்டும், அதற்காக கஷ்டப்படவேண்டும்.

இந்த வசனத்திற்கு சிலர்,(இப்னு அப்பாஸ்) ‘தொழுகையை முடித்துவிட்டால் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் என்று அருத்தம்’ கூறினர்.

இன்னும் சிலர், கடமையை முடித்தால் உபரியான, ஸுன்னத்தான தொழுகையில் ஈடுபடவேண்டும்’ என்றனர்,

இமாம் ஷன்கீதி ரஹ் அவர்கள் கூறும்போது பின்வருமாறு கூறினார்கள்;  அல்குர்ஆனின் வசனங்களை பார்க்கும் போது, ‘உலகவிவாகரங்களில் ஈடுபட்டு முடிந்துவிட்டால் மறுமைக்கான விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும்’ என்ற பொதுவான வழிகாட்டல் இருப்பது தெரிகின்றது.

وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ ‌ۖ عَسٰۤى اَنْ يَّبْعَـثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا‏

நீங்கள், நஃபிலாக இரவில் எழுந்து ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வாருங்கள்! (இதன் அருளால் “மகாமே மஹ்மூத்” என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உங்கள் இறைவன் உங்களை அமர்த்தலாம்.  (17:79)

اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِىَ اَشَدُّ وَطْـاً وَّاَقْوَمُ قِيْلًا ؕ‏

நிச்சயமாக இரவில் (வணக்கத்தை நிறைவேற்ற) எழுவதானது_ அதுவே மிக்க உறுதியானதும், மேலும் கூற்றால் மிக்க உறுதியானதுமாகும்.  (73:6)

என்றால் பகல் நேர வேளையில் இருந்து விடுபட்டுவிட்டால் இரவின் அமைதியில் வணக்கத்தில் ஈடுபடுதல்.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ , ‏وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًا , فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا

(நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவி மற்றும் வெற்றி கிடைத்து, மனிதர்களை – அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டங்கூட்டமாக பிரவேசிப்பவர்களாக (நபியே) நீர் காணும்போது- உமதிரட்சகனின் புகழைக் கொண்டு துதி செய்வீராக! மேலும், அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோருதலை மிகவும் ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான்.  (110:1-3)

எனவே ஒரு மனிதனின் நேரம் ஒன்றில் உலக விவகாரங்களில், அல்லது மறுமை விவகாரங்களில் ஈடுபடுவதில் இருக்கும். ஒரு முஸ்லிமின் நேரகாலம் வீணாக கழியாது. (அல்வாஉல் பயான்)

இப்னு கஸீர் இமாம் அவர்கள் கூறும்போது, இந்த அடிப்படையிலேயே பின்வரும் நபிமொழி நோக்கப்படும்; ‘இரவு உணவு தயாரான நிலையில் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால், உணவைக் கொண்டு ஆரம்பியுங்கள்.  (புகாரி:5465 , முஸ்லிம்)

உணவு தயாரான நிலையில் எந்த தொழுகையும் இல்லை, மலசலத்தை அடக்கிய நிலையிலும் எந்தத் தொழுகையும் இல்லை.  (முஸ்லிம்) (இப்னு கஸீர்)

நபிகளாரின் செயல் இந்த வசனத்தை பின்வருமாறு தெளிவுபடுத்தும்;

ஆஇஷா ரலி அவர்களிடம் ‘நபியவர்கள் வீட்டில் என்ன செய்பவர்களாக இருந்தார்கள்? என்று கேட்கப்பட்ட போது, ‘அவர்களது குடும்பத்தவர்களின் வேளைகளில் ஈடுபடுவார்கள், தொழுகை நேரம் வந்துவிட்டால் தொழுகைக்காக வெளியேறி செல்வார்கள்.’ என்று கூறினார்கள்.  (புகாரி:676, 5363)

அடுத்து எப்போதும் அல்லாஹ்வின் பக்கம் ஆசை வைத்த நிலையிலும், ஆதரவுகொண்ட நிலையிலும் வாழவேண்டும் என்ற வழிகாட்டலுடன் இந்த ஸூராவின் விளக்கம் முற்றுப்பெறுகின்றது.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *