سُورَةِ اللَّيْلِ
ஸூரத்துல் லைல் விளக்கம் !
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!
பெயர்: ஸூரத்துல் லைல் (இரவு)
இறங்கிய காலப் பகுதி: மக்கீ
வசனங்கள்: 21
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்.
وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ
وَ சத்தியம் செய்வதற்காக பாவிக்கும் ஒரு எழுத்து, الَّيْلِ இரவு, اِذَا ஒன்றின் போது, நிபந்தனையிடுவதற்கு பாவிக்கப்படும், يَغْشٰىۙ அது மூடும்
(அனைத்தையும்) மூடிக்கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக! (92:1)
இருள், அது இருளால் மக்களையும் இந்த உலகையும் சூழ்ந்து கொள்கின்றது, அந்த நேரத்தை நினைவூட்டி அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ
وَالنَّهَارِ பகலின் மீது சத்தியமாக, اِذَا تَجَلّٰىۙ அது வெளிப்படும் போது
வெளிப்படும் போது பகலின் மீது சத்தியமாக! (92:2)
பகல் என்பது வெளிச்சமானதும், வெளிச்சம் தரக்கூடியதுமாகும் அதிலும் அல்லாஹ் சத்தியம் செய்து மனிதனுக்கு பகலின் பெறுமதியயை உணர்த்துகின்றான்.
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰٓىۙ
وَمَا ஒருவன், ஒன்று என்ற கருத்தில் பாவிக்கப்படும், இங்கு ஒருவன் மீது சத்தியமாக என்று கருத்தில் பாவிக்கப்பட்டுள்ளது, خَلَقَ அவன் படைத்தான், الذَّكَرَ ஆண், وَالْاُنْثٰٓىۙ இன்னும் பெண்
ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக! (92:3)
இந்த வசனத்தை சில நபித்தோழர்கள், “وَالذَّكَرِ وَالْأُنْثَى” என்று ஓதியுள்ளார்கள். ஆனாலும் அதிகமானவர்கள் இங்கு இருப்பது போன்றே ஓதியுள்ளார்கள். எனவே அது ஒரு கிராஅத் முறையாகும்.
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் ஷாம் நாட்டிற்குள் சென்று (பள்ளிவாசலில்) இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். அப்போது, ‘இறைவா! எனக்கு ஒரு நண்பரை ஏற்படுத்துவாயாக!’ என்று பிரார்த்தித்தேன். அப்போது (அபுத் தர்தாவாகிய) முதியவர் ஒருவர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அவர் அருகே வந்ததும், ‘அல்லாஹ் என் பிரார்த்தனைக்குப் பதிலளித்துவிட்டதாக நம்புகிறேன்’ என்று சொன்னேன். அந்த முதியவர், ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டார். ‘நான் கூபாவாசி’ என்று பதிலளித்தேன். அவர், ‘நபி(ஸல்) அவர்களின் காலணிகளையும் தலையணையையும், தண்ணீர்க் குவளையையும் (சுமந்து பணிவிடை புரிந்து) கொண்டிருந்தவர் (இப்னு மஸ்ஊத்) உங்களிடையே இல்லையா? ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப்பட்டவர் (அம்மார்) உங்களிடையே இல்லையா? நபி(ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் (ஹுதைபா) உங்களிடையே இல்லையா?’ என்று கேட்டார். ‘உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்) ‘வல்லய்லி’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் அத்தியாயம் 92ன்) இறை வசனங்களை எப்படி ஓதினார்கள்?’ என்று மேலும் கேட்டார். நான், ‘வல்லய்லி இதா யஃக்ஷா வந் நஹாரி இதா தஜல்லா வத் தகரி வல் உன்ஸா’ என்று (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஓதுவதைப் போன்று) ஓதிக் காட்டினேன். அம்முதியவர், ‘நபி(ஸல்) அவர்கள் தம் வாயால் (இவ்வாறே) எனக்கு அதை ஓதிக்காட்டினார்கள். ஆனால், (ஷாம் வாசிகளான) இவர்கள் (அதைவிட்டுவிட்டு புதிய முறையில் ஓதும்படி) என்னைத் திருப்ப முனைந்து கொண்டேயிருந்தனர்’ என்று கூறினார்கள்.(புகாரி: 3760,3742,முஸ்லிம்)
இந்த வசனத்தில் மனித இனத்தை ஆண், பெண் என்று ஜோடியாக படைத்தவன் அல்லாஹ் என்பதை உணர்த்தி சத்தியம் செய்துள்ளான். பொதுவாகவே அல்லாஹ் அனைத்தையும் ஜோடியாகவே படைத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا ۙ ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கின்றோம். (78:8)
وَمِنْ كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ஒவ்வொரு வஸ்துக்களையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாகவே நாம் படைத்திருக்கின்றோம். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக! (51:49)
இப்படி படைப்பினங்களை ஜோடியாக (இரவு, பகல், போன்று ஆண், பெண் போன்று) படைத்த அல்லாஹ் மனித செயற்பாடுகளையும் நல்லது, கெட்டது என ஜோடியாக படைத்துள்ளான். அவற்றில் சத்தியம் செய்த அல்லாஹ் அதற்கான பதிலாக அடுத்த வசனம் கூறும் செய்தி,
اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰىؕ
اِنَّ நிச்சயமாக, இதற்கு ஒரு எழுவாய், பயனிலை வருவது அவசியம், سَعْيَكُمْ உங்கள் முயற்சி, لَ இதுவும் உறுதிப்படுத்துவதற்கும், சத்தியம் செய்ததற்கான பதில் என்பதற்கு அடையாளமாக மேலதிகமாகவும் வரும், شَتّٰىؕ பலதரப்பட்டதாகும்.பலவகை
(மனிதர்களே!) நிச்சயமாக உங்களுடைய முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன. (92:4)
அடுத்து ஜேடியாக படைக்கப்பட்ட மனித செயற்பாடுகளை செய்வோரும் மனிதர்களில் நல்லவர்கள் சுவனவாசிகள், என்றும் கெட்டவர்கள் நரகவாசிகள் என்றும் இரு அணியினராக இருப்பார்கள் என்பதற்கு அல்லாஹ் இரு வகையான உதாரணங்களை எடுத்துக்கூறி தெளிவுபடுத்துகின்றான்.
فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰىؕ
فَ ஆகவே, اَمَّا எழுவாயுடன் சேர்ந்து வரும் எழுத்து, مَنْ யார்\யாராவது, اَعْطٰى அவன் தர்மம் செய்தான், اتَّقٰىۙ அவன் அஞ்சினான், وَصَدَّقَ இன்னும் உண்மைப்படுத்தினான், الْحُسْنٰىۙ மிக அழகானது, سَنُيَسِّرُهٗ அவருக்கு நாம் இலகுவாக்குவோம், لِ க்கு,அளவில்,பக்கம், الْيُسْرٰىؕ இலகுவானது (சுவனம்)
ஆகவே, (உங்களில்) எவர் தானதர்மம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து, நல்ல காரியங்களையும் உண்மையாக்கி வைக்கின்றாரோ, அவருக்கு (இலகுவானதளவில், சுவனத்தளவில்) வழியை நாம் எளிதாக்குவோம். (92:5,6,7)
இந்த வசனங்களில் வரும் (الْحُسْنٰىۙ மிக அழகானது) என்பதைக்கொண்டு ‘கிடைக்கும் கூலி’ என்று கதாதா அவர்களும், பிரதியீடு என்று இப்னு அப்பாஸ், முஜாஹித், இக்ரிமா, ஸைத் பின் அஸ்லம், அபூ ஸாலிஹ் போன்றோரும், லாஇலாஹ இல்லல்லாஹ் என்று அபூ அப்திர் ரஹ்மானுஸ் ஸலமி, ளஹ்ஹாக் போன்றோரும், இபாதத்கள், அல்லாஹ் புரிந்த அருள்கள் என்று சிலரும் கூறினர்.
فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰىؕ
அவருக்கு (இலகுவானதளவில்,சுவனத்தளவில்) வழியை நாம் எளிதாக்குவோம்.
இந்த வசனத்தில் ‘யுஸ்ரா’ என்பதற்கு, நல்லவற்றின் பக்கம் என்று இப்னு அபபாஸ் ரலி அவர்களும், சுவனத்தின் பக்கம் என்று ஸைத் பின் அஸ்லம் அவர்களும் கூறினார்,
இதனை வைத்தே (ஸலப்) முன்னைய அறிஞர்களில் சிலர், ‘நல்லவற்றுக்கு கூலியே அதன் பிறகு ஒரு நலவு செய்யும் வாய்ப்பு கிடைப்பதுதான், பாவத்திற்கு கிடைக்கும் கூலியே அதற்கு பிறகு ஒரு பாவம் செய்யும் நிலை ஏற்படுவதுதான்’ என்று கூறினார். (இப்னு கஸீர்)
இந்த வசனங்கள் மூலம் நல்ல மனிதர்களின் நல்ல செயற்பாடுகளும், அதற்கு கிடைக்கும் கூலிகளும் தெளிவுபடுத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் நல்ல செயற்பாடுகளைக் கொண்ட மனிதன் நல்லவற்றயே செய்ய இலகுபடுத்தப் படுகின்றான், என்பதோடு மறுமையில் சுவனமும் அவனுக்கு பரிசாக கிடை க்கும் என்பது நன்மாராயமுமாகும்.
மேலும் நல்லது செய்கிற மனிதன், அல்லாஹ் நல்ல கூலிகளை தருவான் என்றும் உறுதிகொள்ள வேண்டும், அதுவே பூரணமான நன்மையை பெற்றுத்தரும். நபி ஸல் அவர்களும் இதனை அடிப்படையாக பல இடங்களில் கூறியுள்ளார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவரின், முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!’ (புகாரி:2014, 1901, முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்று அதற்காக தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தவர் நிச்சயமாக நன்மையின் இரண்டு குவியலைப் பெற்றுத் திரும்புவார். ஒவ்வொரு குவியலும் உஹது மலை போன்றதாகும். அதற்காக தொழுகையை மட்டும் முடித்துவிட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பி விடுகிறவர் ஒரு குவியல் நன்மையை மட்டும் பெற்றுத் திரும்புவார்’ (புகாரி: 47)
وَاَمَّا مَنْۢ بَخِلَ وَاسْتَغْنٰىۙ وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ فَسَنُيَسِّرُهٗ لِلْعُسْرٰىؕ وَمَا يُغْنِىْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰىؕ
وَ இன்னும்,மேலும், اَمَّا எழுவாயுடன் சேர்ந்து வரும், அதற்கு பதில் வசனம் ஒன்றும் வரும், அதில் ப சேர்ந்து வரும், مَنْ யார், ஒருவன், بَخِلَ கஞ்சத்தனம் காட்டினான். وَاسْتَغْنٰىۙ இன்னும் தேவையற்றவனாக இருந்தான், كَذَّبَ பொய்ப்பித்தான், الْحُسْنٰىۙ மிக அழகியது, فَسَنُيَسِّرُهٗ அவனுக்கு இலகுவாக்குவோம், لْعُسْرٰىؕ நரகம், கஷ்டம், وَمَا يُغْنِىْ இன்னும் பலனளிக்கமாட்டாது, தேவையற்று வைக்காது, عَنْهُ அவனை விட்டு, مَالُهٗۤ அவனுடைய செல்வம், اِذَا போது, ஆல் உருபு, நிபந்தனையிடுதல், تَرَدّٰىؕ அவன் விழுந்தான்
ஆகவே, எவர் உலோபத்தனமும் செய்து (அல்லாஹ்விடமிருக்கும் நற்பேறுகளை விட்டும் தன்னை) தேவையற்றவரா(கக் கருது)கிறாரோ-9, இம்மார்க்கத்திலுள்ள) நல்லவற்றை (கூலியை) பொய்ப்படுத்தியும் வைத்தாரோ அவர்,10, அப்போது அவருக்கு கஷ்டத்திற்கு (நரகவழிக்கு) நாம் எளிதாக்கி வைப்போம்.11, மேலும், அவர் (நரகத்தில்) வீழ்ந்து விட்டால், அவருடைய செல்வம் அவருக்கு பயனளிக்காது. (92:8-12)
إذا تردى என்றால் மரணித்தால் என்று முஜாஹித் அவர்களும், நரகில் நுழைந்தால் என்று ஸைத் பின் அஸ்லம் அவர்களும் கூறினார்கள்.
இந்த வசனங்கள் மூலம் மனிதர்களிடம் காணப்படும் சில மோசமான செயல்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன, கஞ்சத்தனம், நான் தேவையற்றவன் என்ற பெருமை, நல்ல காரியங்களுக்கு அல்லாஹ் வழங்கும் கூலியை பொய்ப்பித்தல் மிக மோசமான பாவங்களாகும். இந்த பாவங்களை தன்னிடம் வைத்திருக்கும் மனிதனின் அனைத்து செயற்பாடுகளும் மோசமானதாக ஆகிவிடுவதற்கு அது வழிவகுக்கும்.
பொதுவாக நல்லறங்கள் நல்லவற்றுக்கு வழிகாட்டும் (முன்னால் குறிப்பிடப்பட்டது போன்று) என்பதும், தீயவை தீயவற்றையே ஒரு மனிதனிடம் உருவாக்கும் என்பதும் நாம் புரிந்து வைக்கவேண்டிய ஒரு விடயமாகும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக்) என்று எழுதப்படுவார், பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். (புகாரி:6094, முஸ்லிம்)
اُتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ؕ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِؕ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ (நபியே! குர்ஆனாகிய) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் ஓதுவீராக, தொழுகையும் (அல்லாஹ் விதியாக்கியவாறு) நிறைவேற்றுவீராக, நிச்சயமாக தொழுகை, (அதை நிறைவேற்றுபவரை) மானக்கேடான செயலிலிருந்தும், (மார்க்கத்தில்) மறுக்கப்பட்டதிலிருந்தும் தடுக்கும். நிச்சயமாக (தொழுகையின் மூலம்) அல்லாஹ்வை நினைவு கூருவது (எல்லாவற்றையும் விட) மிகவும் பெரியதாகும், இன்னும், நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கு அறிகிறான். (29:45)
اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِىَ اَشَدُّ وَطْـاً وَّاَقْوَمُ قِيْلًا ؕ நிச்சயமாக இரவில் (வணக்கத்தை நிறைவேற்ற) எழுவதானது, அதுவே (மனமும் நாவும்) ஒன்றிணைந்திருக்க மிக்க உறுதியானதும், மேலும் கூற்றால் மிக்க உறுதியானதுமாகும். (73:6)
அடுத்து உலகத்தில் கஞ்சத்தனம் காட்டி சேமிக்கும் சொத்தும், தான் தேவையற்றவன் என்ற பெருமையும் மனிதனை மறுமை தண்டனையிலிருந்து எந்த விதத்திலும் பாதுகாக்கப்போவதில்லை. அதனையே அல்லாஹ் இங்கு எச்சரிக்கிறான்.
وَنُقَلِّبُ اَفْـــِٕدَتَهُمْ وَاَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوْا بِهٖۤ اَوَّلَ مَرَّةٍ وَّنَذَرُهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ மேலும், முதல் தடவை அவர்கள் இவ்வேதத்தை விசுவாசிக்காது இருந்த பிரகாரமே நாம் அவர்களுடைய இதயங்களையும், பார்வைகளையும் புரட்டிவிடுவோம், அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களைத் தட்டழிந்து திரியுமாறு விட்டுவிடுவோம். (6:110)
அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (‘பகீஉல் கர்கத்’ எனும் பொது மையவாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது அவர்கள் ஒரு தடியால் தரையைக் கீறிய வண்ணம் (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், ‘தம் இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா எனத் தீர்மானிக்கப்படாத ஒருவரும் உங்களில் இல்லை’ என்று கூறினார்கள். அப்போது மக்கள் (சிலர்), ‘நாங்கள் (இதையே) நம்பி (நல்லறங்கள் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார் பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று கூறிவிட்டு ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்’ எனும் (திருக்குர்ஆன் 92:5-7 ஆகிய) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். (புகாரி:4946, 6217, முஸ்லிம்)
இந்த வசனங்கள் இறங்கியமைக்கான ஸபபுன் நுஸூல்
இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதனுக்கு ஒரு ஈத்தமரத் தோட்டம் இருந்தது, அதன் ஒரு மரம் இன்னுமொரு ஏழை மனிதரின் தோட்டத்தில் சாய்ந்திருக்க, அதிலிருந்து விழும் ஈத்தம் பழங்களை அந்த வீட்டுப் பிள்ளைகள் எடுப்பதை தோட்ட உரிமையாளர் கண்டிக்க, அதனை அந்த மனிதர் நபிகளாரிடம் முறைப்பாடு செய்யவே, நபியவர்கள் தோட்டக் காரரிடம், ‘ஏழையின் தோட்டத்தின் பக்கம் சாய்ந்திருக்கும் மரத்தைத் தந்துவிடு, உனக்கு சுவனத்தில் ஒரு ஈத்தமரம் கிடைக்கும்’ என்று கூறவே, அதனை அவர் மறுக்கின்றார், நபிகளாரின் இந்த கூற்றை கேட்டுக்கொண்டிருந்த ஒருவர், சாய்ந்திருக்கும் அந்த ஈத்தமரத்தை 40 ஈத்தமரங்களை பகரமாக கொடுத்து வாங்கி, அல்லாஹ்வின் தூதரே! அந்த ஈத்தமரம் எனக்கு சொந்தமாகிவிட்டது, அதனை நான் உங்களுக்கு தந்து விட்டேன், என்று கூறவே, நபியவர்கள், அந்த ஏழை மனிதரை அழைத்து, ‘இந்த மரம் உனக்கும் உனது குடும்பத்தாருக்கும் சொந்தமானது’ என்று கூறினார்கள். அப்போது இந்த சூரா இறங்கியது என்று இப்னு அப்பாஸ் ரலி கூறியதாக இக்ரிமா ரஹ் அவர்கள் கூறினார்கள். (இப்னு கஸீர், இப்னு அபீ ஹாதிம்) இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது. இதில் ‘ஹப்ஸ் பின் உமர் அல் அதானி’ எனும் பலவீனர் இடம்பெற்றுள்ளார். (அல்லாஹு அஃலம்)
அடுத்து இந்த ஸூறாவின் ஆரம்ப வசனங்கள் அபூ பக்ர் ரலி அவர்கள் விடயத்தில் இறங்கியதாக சில செய்திகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. (இப்னு ஜரீர் அத்தபரீ) இது பற்றிய அறிவிப்பும் விமர்சனத்திற்குரியதே, அதன் அறிவிப்பாளர் தொடரில் ‘முஹம்மத் பின் இஸ்ஹாக்’ எனும் முதல்லிஸ் இடம்பெற்றுள்ளார். (அல்லாஹு அஃலம்)
அடுத்து மனிதர்களின் செயற்பாடுகள் பற்றி பேசிய அல்லாஹ், அவனது அதிகாரத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி மனிதர்களை எச்சரிக்கின்றான்.
اِنَّ عَلَيْنَا لَـلْهُدٰى
اِنَّ நிச்சயமாக, عَلَيْنَا நம்மீது, لَـ اِنَّ சேர்ந்து வரும் வசனத்தை இன்னும் உறுதிப்படுத்த இது வரும், الْهُدٰى நேர்வழி காட்டுதல்
நிச்சயமாக நேர்வழி காட்டுதல் (அதிகாரம்) நம்மீது இருக்கிறது. (92:12)
இந்த வசனம் மூலம் மனிதனுக்கு நேர்வழியை காட்டுபவன் அல்லாஹ் என்பதை எடுத்துரைக்கின்றான்,
அல்லாஹ் கூறுகின்றான்;
وَعَلَى اللّٰهِ قَصْدُ السَّبِيْلِ وَمِنْهَا جَآٮِٕرٌؕ وَلَوْ شَآءَ لَهَدٰٮكُمْ اَجْمَعِيْنَ (கோணலில்லாத) நேரான வழியைத்தெளிவு செய்வது அல்லாஹ்வின் மீதே இருக்கிறது, அதில் கோணல் வழியும் உண்டு, இன்னும் அவன் நாடினால், உங்கள் அனைவரையும், நேர் வழியில் செலுத்திவிடுவான். (16:9)
وَاِنَّ لَـنَا لَـلْاٰخِرَةَ وَالْاُوْلٰى
وَاِنَّ இன்னும் நிச்சயமாக, لَـنَا எங்களுக்கு, لَـلْاٰخِرَةَ மறுமை\கடைசி, وَالْاُوْلٰى முதலாவது\இம்மை
நிச்சயமாக பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நமக்கே உரியவையாகும். (92:13)
இதன் மூலம் மனிதர்கள் மீது முழு அதிகாரம் கொண்டவன் அல்லாஹ்தான் என்பது தெளிவாகின்றது. அது உலகிலும் சரி, மறுமையிலும் சரி. இதனை நிதானமாக சிந்தித்தால் புரிந்து கொள்ளலாம். மனிதன் நினைக்கும், ஆசைவைக்கும் எத்தனையோ விடயங்களை அவனால் நிறைவேற்றிக்கொள்ள முடிவதில்லை, மரணமோ, நோய் ஏற்படுவதோ செல்வம் கிடைப்பதோ, ஏழ்மையில் வீழ்வது எதுவுமே மனிதனது கையில் இல்லை என்பது உலகில் வாழும் ஒவ்வொருவரும் கண்கூடாக காணும் ஒரு விடயமாகும். உலகமே மனித அதிகாரத்திற்கு அப்பால் இருக்கும்போது மறுமையின் அதிகாரம் அந்த அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதை புரியலாம்.
அல்லாஹ் கூறுகின்றான்:
وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ இன்னும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாடமாட்டீர்கள். (81:29)
فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰىۚ
فَ எனவே\ஆகவே, اَنْذَرْتُكُمْ உங்களை அச்சமூட்டி எச்சரித்தேன், نَارًا நெருப்பு, تَلَظّٰىۚ கொழுந்துவிட்டெரிகின்றது
ஆகவே, (மனிதர்களே!) கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்து விட்டேன். (92:14)
இந்த வசனம் மூலம் நரகை அல்லாஹ் எச்சரிக்கின்றான், உண்மையில் நரகம் பயங்கரமானது,
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: நிச்சியமாக நரக வாசிகளில் தண்டனையில் மிகவும் குறைந்தவர், சட்டி கொதிப்பது போன்று மூலை கொதிக்கும் அளவுக்கு இரண்டு நெருப்பு கங்குகள் காலுக்கு கீழால் வைக்கப்படும் ஒரு மனிதனாவான். அவனை விடவும் தண்டனை குறைந்த ஒருவனை காணமுடியாது, அவனே தண்டனையில் மிக இலகுவான தண்டனைக்குரியவன். (புகாரி: 6562, முஸ்லிம், முஸ்லிமின் அறிவிப்பு.)
அடுத்து நரகில் நுழைபவன் யார், அவனின் பண்புகள் என்ன, சுவனத்தில் நுழைபவன் யார் அவனது பண்புகள் எப்படியிருக்கும் என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.
لَا يَصْلٰٮهَاۤ اِلَّا الْاَشْقَىۙ
لَا يَصْلٰٮهَاۤ அதில் அவன் நுழையமாட்டான், اِلَّا விதிவிலக்கு செய்வதற்காக பாவிக்கும் ஒரு சொல்\தவிர, الْاَشْقَىۙ துர்பாக்கியன்
மிக்க துர்பாக்கியமுடையவரைத்தவிர (மற்றெவரும்) அதில் புகமாட்டார். (92:15)
الَّذِىْ كَذَّبَ وَتَوَلّٰىؕ
الَّذِىْ ஒருவன்\ எவன், كَذَّبَ அவன் பொய்ப்பித்தான், وَتَوَلّٰىؕ இன்னும் அவன் புறக்கணித்தான்
அவன் எத்தகையவன் என்றால் (நம் தூதர்கள் கொண்டுவந்த சத்தியத்தை பொய்யாக்கி) புறக்கணித்தும் விட்டனர். (92:16)
நரகில் நுழைபவன் துர்ப்பாக்கியமானவனே, அவனின் பண்பு, அல்லாஹ்வையும், அவன் தூதரையும் பொய்ப்பிப்பதும், அவர்களது போதனைகள், வழிகாட்டல்களை பொய்ப்பித்து, தனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தாமல் புறக்கணிப்பதுமாகும்.
நபி ஸல் அவர்கள், எனது சமுதாயத்தவர் அனைவரும் சுவனம் நுழைவர், மறுத்தவனைத் தவிர, என்று கூறவே, மறுத்தவன் யார் அல்லாஹ்வின் தூதரே! என்று நபித் தோழர்கள் கேட்க, ‘யார் எனக்கு கட்டுப்பட்டாரோ அவர் சுவனம் நுழைவார், யார் எனக்கு மாறுசெய்தாரோ அவனே மறுத்தவனாவான்.’ என்று கூறினார்கள். (புகாரி: 7280, அஹ்மத்)
وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ
وَسَيُجَنَّبُهَا இன்னும் அதிலிருந்து தூரமாக்கப்படுவார், الْاَتْقَىۙ அதிகம் அஞ்சக்கூடியவர்
மேலும், மிகுந்த பயபக்தியுடையவர் அதிலிருந்து தூரமாக்கப்படுவார். (92:17)
الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰىۚ
الَّذِىْ ஒருவன்\எவர், يُؤْتِىْ அவன் கொடுக்கிறான்,கொடுப்பான், مَالَهٗ தனது செல்வம், يَتَزَكّٰىۚ அவன் மனத்தூய்மை அடைவான்
அவர் எத்தகையவரென்றால், பரிசுத்தமாக்கிக் கொண்டவராக தன்னுடைய செல்வத்தை தர்மமாகக் கொடுப்பார். (92:18)
وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰٓىۙ
مَا இல்லை எனும் கருத்து தரும் வசனத்தை உருவாக்க பாவிக்கும் சொல், لَ க்கு, احَدٍ ஒருவன், عِنْدَهٗ அவரிடம், نِّعْمَةٍ உபகாரம், تُجْزٰٓىۙ கூலிகொடுக்கப்படும்
(மனிதர்களில்) எவருக்கும் (தன் தர்மத்தின் மூலம் பிரதிபலனைக் கருதிக்) கொடுக்கப்படும் எந்த உபகாரமும் தம்மிடம் இல்லை. (92:19)
اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰىۚ
اِلَّا தவிர, ابْتِغَآءَ தேடுதல், وَجْهِ முகம், رَبِّهِ தன் இறைவன், الْاَعْلٰىۚ மிக உயர்ந்தவன்
மிக்க மேலான தம் இரட்சகனின் முகத்தைத் தேடியே தவிர (வேறு எந்த நோக்கத்துடனும் அவர் செலவு செய்யவில்லை). (92:20)
وَلَسَوْفَ يَرْضٰى
لَ உறுதிப்படுத்துவதற்காக வரும், سَوْفَ எதிர்கால வினை சொல்லுடன் சேர்ந்து வரும், يَرْضٰى திருப்தியடைகின்றான்\திருப்தியடைவான்
மேலும், (தம் இரட்சகனின் நற்கூலியைக் கொண்டு வெகுவிரைவில்) அவர் திருப்தியடைவார். (92:21)
இந்த வசனங்கள் எமக்கு உணர்த்தும் பாடங்கள்;
நரகிலிருந்து பாதுகாக்கப்படுபவன் அதிகம் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவன்தான். உண்மையில் இறையச்சம்தான் இந்த உலகில் எம்மை நல்லவனாக வாழச் செய்யும்.
நபி ஸல் அவர்களிடம் ஜிப்ரீல் அலை அவர்கள் ‘இஹ்ஸான்’ (நல்லவனாக வாழ்வதற்கான அடிப்படை) பற்றி கேட்டபோது ‘நீ அல்லாஹ்வை பார்ப்பது போன்று (அவனுக்கு அடிமைப்பட்டு வாழ்வதும்) வணங்குவதும், நீ அவனை பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கின்றான் என்ற உணர்வோடு வாழ்வதுமாகும்.’ என்று கூறினார்கள். (புகாரி: 50,4777, முஸ்லிம்)
இறையச்சமுள்ளவன் தனது சொத்தை அல்லாஹ்வின் பாதையில் கொடுப்பான் செலவுசெய்வான், அதன் மூலம் தனது உள்ளத்தையும் சுத்தப்படுத்தி, தனது சொத்துக்களையும் ஏழைகளின் சொத்துக்களிலிருந்து சுத்தப்படுத்திக் கொள்வான்.
அடுத்து மக்கள் செய்த உபகாரங்களுக்கு பிரதியீடாக இல்லாமல், அல்லாஹ்வுக்காக, அவனிடத்தில் நன்மையை எதிர்பார்த்து செலவுசெய்வான். பொதுவாகவே பிரதியீட்டுக்காக நல்ல காரியம் செய்வது என்பது இக்லாஸ் எனும் மனைத்தூய்மைக்கு மாற்றமானதாகும்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: பிரதியீட்டுக்காக குடும்பங்களை சேர்ந்து நடப்பவன் உண்மையாக சேர்ந்து நடப்பவனல்ல, மாறாக உண்மையில் சேர்ந்து நடப்பவன் அடுத்தவர்கள் தன்னை துண்டித்து நடந்தாலும் சேர்ந்து நடப்பவனே. (புகாரி: 5991)
அடுத்து இப்படிப்படட நல்ல பண்பு கொண்டவர்கள் மறுமையில் அல்லாஹ் கொடுப்பதை திருப்தியுடன் ஏற்றுக்கொள்வார்கள். உலகில் நல்லது செய்தவர்களுக்கு மறுமையில் திருப்தியான வாழ்க்கை இருக்கிறது என்று கூறி இந்த ஸூராவை முடிக்கின்றான் அல்லாஹ்.
அடுத்து இந்த வசனங்கள் மூலம் அபூ பக்ர் ரலி அவர்களே நாடப்படுகின்றார்கள் என்று பல குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்,
இப்னு கஸீர் இமாமவர்கள் கூறும் போது, ‘உண்மையில் அபூ பக்ர் ரலி அவர்கள் இந்த அனைத்து பண்புகளையும் தன்னிடத்தில் கொண்டிருந்தார்கள் என்ற வகையில் அவர்களே முதன்மையானவர்கள்.’ என்று கூறினார்கள்.
உண்மையில் அபூ பக்ர் ரலி அவர்கள் யாருக்கும் பிரதியீடு கொடுக்கும் அளவுக்கு உதவிகளை பெற்றவரல்ல, மாறாக பலபேருக்கு நன்மையை எதிர்பார்த்து உதவிசெய்துள்ளார்கள் என்பதே வரலாற்று உண்மை. எடுத்துக்காட்டுக்கா சில செய்திகள்;
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ‘இறைவழியில் (ஏதேனும் ஒரு பொருளின்) இரண்டு ஜோடிகளைச் செலவிட்டவரை சொர்க்க வாசல்களின் காவலர்கள் ஒவ்வொருவரும், ‘இன்னாரே! இங்கே வாரும்’ என்று அழைப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாது (எந்த வாசல் வழியாகவும் அவர் சொர்க்கத்தினுள் நுழையலாம்)’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களில் நீங்களும் ஒருவர் தாம் என்று நம்புகிறேன்’ என்றார்கள். (புகாரி: 2841,3216, முஸ்லிம்)
அபுத் தர்தா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார்’ என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (நபி – ஸல் – அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருககும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்’ என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அபூ பக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!’ என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (அபூ பக்ர் – ரலி – அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, ‘அங்கே அபூ பக்ர்(ரலி) இருக்கிறார்களா?’ என்று கேட்க வீட்டார், ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூ பக்ர்(ரலி) பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன்.’ என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். ‘பொய் சொல்கிறீர்’ என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, ‘நீங்கள் உண்மையே சொன்னீர்கள்’ என்று கூறினார்; மேலும் தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?’ என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி) மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை. (புகாரி: 3661)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். “இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள்.(முஸ்லிம்: 1865)
ஸூரதுல் லைல் விளக்கம் முடிவுற்றது அல்ஹம்து லில்லாஹ்!