بسم الله الرحمن الرحيم
سورة الشمس
ஸூரத்துஷ் ஷம்ஸ் விளக்கம்.
PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!
பெயர்: ஷம்ஸ் சூரியன்
இறங்கிய காலப் பகுதி: மக்கீ
வசனங்கள்: 15
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالشَّمْسِ وَضُحٰٮهَا
சொல் அருத்தம்;
وَ சத்தியம் செய்வதற்காக பாவிக்கும் ஓர் எழுத்து, الشَّمْسِ சூரியன், وَضُحٰٮهَا அதன் பிரகாசம்/பகல்
சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக, (91:1)
இந்த வசனத்தில் அல்லாஹ், அவனது இரு படைப்புகள் மீது சத்தியம் செய்துள்ளான், சூரியன், அதன் பிரகாசம், சூரியனின் பிரகாசம் என்பதும் அல்லாஹ்வின் தனி ஒரு அத்தாட்சியே, ஏனெனில் சூரியனின் அசைவினால் ஏற்படுவதே அந்த பிரகாசமும், அதன் வித்தியாசமும். எனவே அது ஒரு தனித்துவமான அத்தாட்சியாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
وَاٰيَةٌ لَّهُمُ الَّيْلُ ۖۚ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَاِذَا هُمْ مُّظْلِمُوْنَۙ இரவும் அவர்களுக்கோர் அத்தாட்சியாகும், அதிலிருந்து பகலை நாம் கழற்றுகின்றோம், அப்போது இவர்கள் இருளில் ஆகிவிடுகிறார்கள்.37, وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ؕ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِؕ சூரியனும் அதற்குரிய தங்குமிடத்தின்பால் அது சென்று கொண்டிருக்கிறது, இது (யாவரையும்) மிகைத்தவன், நன்கறிந்தவன் ஏற்படுத்தியதாகும். (36:38)
அந்த சூரியன், அதன் உதிப்பை முன்வைத்தே இப்ராஹீம் நபியவர்கள் அரசனுடன் வாதிட்டார்கள், அல்லாஹ் கூறுகின்றான்;
قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَۚ ……… (அதற்கு) இப்ராஹீம் “அப்படியாயின் நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து (உதிக்கச் செய்து) கொண்டு வருகின்றான். நீ அதை மேற்கிலிருந்து கொண்டு வா” எனக்கூறினார். ஆகவே, நிராகரித்த அவன் (பதில் கூற இயலாது) திகைப்பில் ஆழ்த்தப்பட்டான். மேலும், அல்லாஹ் அநியாயம் செய்து கொண்டிருக்கிற கூட்டத்தார்க்கு நேர்வழி காட்டமாட்டான்.(2:258)
சூரியனின் இந்த ஓட்டத்தில் வெளிப்படையான சக்தியும், வித்தியாசமான நுணுக்கமும் இருக்கின்றது, அதன் வெளிப்பாடே பிரகாசம் என்பது, அதனால் பூமியில் பயன்பாடும் ஏற்படுகின்றது.
ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்; ‘அந்த சூரியன் ஒரு படி உலகை நெருங்கிவிட்டாலோ, அல்லது உயர்ந்து விட்டாலோ அதன் மூலம் எவரும் பயன்பெற முடியாது, ஏனெனில் அது உலகை நெருங்கினாள் சுட்டெரித்துவிடும், தூரமாகிவிட்டால் உலகம் குளிரால் உறைந்துவிடும், இதுவே அல்லாஹ்வின் ஏற்பாடாகும்’. (அல்வாஉல் பயான்)
சூரியனின் பிரகாசம் என்பதும் தனியானதோர் அத்தாட்சியாகும், அல்லாஹ் கூறுகின்றான்:
وَاَنَّكَ لَا تَظْمَؤُا فِيْهَا وَلَا تَضْحٰى அன்றியும் இதில் நிச்சயமாக நீர் தாகிக்கவுமாட்டீர், (சூரியனின் சூட்டின் காரணமாக) வெயிலில் (கஷ்டப்படவுமாட்டீர்) என்று கூறினோம். (20:119)
மேலும் அல்லாஹ் அதன் மீது தனித்தும் சத்தியம் செய்திருக்கின்றான்;
وَالضُّحٰىۙ முற்பகல் மீது சத்தியமாக!, وَالَّيْلِ اِذَا سَجٰىۙ (இருண்ட) இரவின் மீதும் சத்தியமாக – அது ஒடுங்கிவிட்டால் – (93;1,2) (அல்வாஉல் பயான்)
وَالْقَمَرِ اِذَا تَلٰٮهَا
சொல் அருத்தம்;
الْقَمَرِ சந்திரன், اِذَا ஒன்றின் போது/நிபந்தனையிடுவது, تَلٰٮهَا அதைத் தொடர்ந்து வந்தது
சந்திரன் மீதும் சத்தியமாக-அது அச்சூரியனை- தொடர்ந்துவரும்போது- (91:2)
சந்திரன் என்பதும் அல்லாஹ்வின் அற்புத படைப்பாகும், அது சூரியனை தொடர்ந்து வருவதை அல்லாஹ் ஏற்பாடாக வைத்துள்ளான். அதில் எந்த மாற்றமும் நடக்காது, அல்லாஹ் கூறுகின்றான்:
لَا الشَّمْسُ يَنْۢبَغِىْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِؕ وَكُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ சூரியன்_அதற்குச் சந்திரனை (அணுகி)ப்பிடிக்கமுடியாது, இரவு, பகலை முந்தவும் முடியாது. (இவ்வாறே கிரகங்கள், நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் (தனது) வட்டத்துக்குள் நீந்திச் செல்கின்றன. (36:40)
அடுத்து இந்த வசனத்தில் வரும் ‘அதனை தொடர்ந்து வரும் போது’ என்பதில் பின்வருமாறு கருத்து கூறப்பட்டுள்ளது. என்றால் சூரியனை தொடர்ந்து வந்தபோது என்பது சூரியன் சந்திரன் ஆகிய அனைத்தும் ஓடிக்கொண்டிருக்கின்றன, அதில் சூரியன் முந்தியும், சந்திரன் பிந்தியும் தொடரும் என்றும், ‘மாதத்தின் துவக்கத்தில் சூரியன் மறையும், அதனை தொடர்ந்து அதன் மறைவிடத்திலிருந்து அது வெளிவரும்.’ என்றும் கூறப்பட்டுள்ளது, இந்த கருத்தை கதாதா என்ற அறிஞர் கூறியதாக இப்னு கஸீரில் பதியப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் (சந்திரனின் துவக்கம் தலைப்பிறையின் மீது சத்தியமாக என்று வரும்)
அடுத்து, சந்திரன் மூலம் படைப்பினங்களுக்கு பல பிரயோசனங்கள் இருப்பதும் வெளிப்பாடு, அதன் மூலம் இருள் குறைகின்றது, பயிர்களுக்கு தேவையான பல பயன்கள் கிடைப்பது, அதிலும் குறிப்பாக; வருடத்தை (மாதங்களைக் கொண்டு) பிரிப்பதற்கான தெளிவும், நோன்பு, ஹஜ், ஸகாத், பெண்களின் இத்தா காலம், நோன்பின் குற்றப்பரிகார காலம், கடனுக்கான கால எல்லை, போன்ற காலத்தை சம்பந்தப்படுத்தியிருக்கும் அனைத்தையும் தெளிவுபடுத்தும் ஒன்றாகும். அல்குர்ஆனில் இன்னும் பல இடங்களில் சந்திரன் மீது சத்தியம் செய்ப்பட்டுள்ளது.
كَلَّا وَالْقَمَرِۙ (நரகக்காவலர்கள் விஷயமாக நிராகரிப்போர் கூறுவது போன்று) அல்ல! சந்திரனின் மீதும் சத்தியமாக!32, وَالَّيْلِ اِذْ اَدْبَرَۙ இரவின் மீதும் சத்தியமாக-அது பின் செல்லும்போது! (74:33)
وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ சந்திரன் மீதும் அது பூரணமாகிவிட்டபோது(ம் சத்தியம் செய்கிறேன்.) (84:18) இவை அனைத்தும் அல்லாஹ்வின் நுணுக்கமான அத்தாட்ச்சியின் தன்மையை எடுத்துக் காட்டுகின்றது. (அல்வாஉல் பயான்)
وَالنَّهَارِ اِذَا جَلّٰٮهَا
சொல் அருத்தம்;
النَّهَارِ பகல், إِذَا நிபந்தையிடுவதற்கான சொல்,ஒன்று நடந்தபோது என்றும் அருத்தம் வரும், جَلَّا வெளிப்படுத்திவிட்டது, هَا அது
பகலின் மீதும் சத்தியமாக அதை வெளிப்படுத்திவிடும்போது (91:3)
பகல் என்பது சூரிய வெளிச்சத்தின் வெளிப்பாடே, என்பதில் ‘அதனை’ என்பதைக் கொண்டு சூரியனே நாடப்படுகிறது என்று இப்னு ஜரீர் போன்ற விரிவுரையாளர்கள் கூறுகின்றனர், (இப்னு கஸீர்) ஆனாலும் இப்னு கஸீர் இமாமவர்கள் ‘அதனை’ என்பதைக் கொண்டு பூமியே நாடப்படுகின்றது என்று கூறியுள்ளார்கள். (அல்வாஉல் பயான்) அதன் படி அந்த வசனத்தின் அருத்தம் ‘பகல் பூமியை தெளிவுபடுத்திவிட்டது’ என்று வரும். அதன் மூலம் வாழ்வாதாரத்தை தேடுவதும், பூமியில் உழைப்பதும் இலகுபடுத்தப்படுகின்றது. அல்குர்ஆன் கூறுகின்றது
;هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِتَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّسْمَعُوْنَ அவன் எத்தகையோனென்றால் இரவை உங்களுக்காக, அதில் நீங்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை பார்வைக்குரிய (பிரகாசமான)தாகவும் ஆக்கினான், (10:67)
وَهُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا இன்னும், அவன் எத்தகையவனென்றால் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கினான், பகலை (நீங்கள் தூக்கத்திலிருந்து) மீண்டெழு வதற்காகவும் ஆக்கினான். (25:47)
وَالسَّمَآءِ وَمَا بَنٰٮهَا
சொல் அருத்தம்;
وَالسَّمَآءِ வானத்தின் மீது சத்தியமாக, مَا ஒருவன், بَنٰٮهَا அதை அவன் கட்டினான், அமைத்தான்
வானத்தின்மீதும் அதை அமைத்தவன் மீதும் சத்தியமாக. (91:5)
இந்த வசனம் மூலம் வானத்தைப் படைத்த அல்லாஹ் அதனை ஆச்சர்யமான ஒரு படைப்பாக ஆக்கியுள்ளான் என்பதை உணர்த்தவே சத்தியம் செய்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
وَ السَّمَآءَ بَنَيْنٰهَا بِاَيْٮدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ மேலும், வானத்தை நம்முடைய சக்தியைக் கொண்டே அதை நாம் அமைத்தோம், நிச்சயமாக நாம் (படைக்கின்ற காரியத்தில்) மிக்க விசாலத்தை உடையோராக இருக்கிறோம் (யாவும் நம் சக்திக்குட்பட்டதே). (51:47)
وَالْاَرْضِ وَمَا طَحٰٮهَا
சொல் அருத்தம்;
وَالْاَرْضِ பூமியின் மீது சத்தியமாக, مَا ஒருவன், طَحٰٮهَا அதை அவன் விரித்தான்
பூமியின் மீதும் – அதை விரித்தவன் மீதும் சத்தியமாக. (91:6)
இந்த வசனம் மூலம் பூமியை அல்லாஹ் மனிதன் வாழ்வதற்கு வசதியாக விரித்து வைத்திருக்கின்றான் என்பதை உணர்த்துகின்றது, அதன் பெறுமதியை உணர்த்தவே அல்லாஹ் சத்தியம் செய்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمٰهِدُوْنَ அன்றியும், பூமியை_அதனை நாம் (விசாலமாக) விரித்தோம், (அதனைச் சீர்படுத்தி செவ்வையாக்கி) விரிப்போரில் (நாம்) நல்லோராவோம். (51:48)
خَلَقَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَاَ لْقٰى فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِكُمْ وَبَثَّ فِيْهَا مِنْ كُلِّ دَآ بَّةٍ ؕ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்திருக்கிறான், அதனை நீங்கள் பார்க்கின்றீர்கள், பூமியில்_அது உங்களைக் கொண்டு அசைந்து விடாதிருக்கும் பொருட்டு, அசையாத மலைகளையும் அதில் ஆக்கிவைத்தான், இன்னும், ஒவ்வொரு (விதமான) பிராணியையும் அதில் அவன் பரவச்செய்தான், (மனிதர்களே! அல்லாஹ்வாகிய) நாமே வானத்திலிருந்து நீரை இறக்கிவைத்தோம், பின்னர், (புற்பூண்டுகளில்) அழகான ஒவ்வொரு வகையிலிருந்து அதில் நாம் முளைக்கச் செய்தோம்.
هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ (ஆகவே நபியே! நீர் அவர்களிடம் கூறுவீராக:) “இவை (யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும், ஆகவே அவனையன்றி (நீங்கள் வணக்கத்திற்குரியவர்களெனக் கூறுகின்ற) அவர்கள் எதனைப் படைத்திருகின்றனர் என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள், (அவ்வாறு ஒன்றும்) இல்லை (அல்லாஹ்வையன்றி மற்றவைகளை வணங்கும் இந்த) அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர். (31:10,11)
وَنَفْسٍ وَّمَا سَوّٰٮهَا
சொல் அருத்தம்;
وَنَفْسٍ ஆன்மாவின் (உள்ளம்) மீது சத்தியமாக, مَا ஒருவன், سَوّٰٮهَا அதை அவன் சீர்படுத்தினான் (சமப்படுத்தினான்)
ஆத்மாவின் மீதும்-அதனைச் சீர்படுத்தியவன் மீதும் சத்தியமாக. (91:7)
இந்த வசனம் மூலம் அல்லாஹ் மனிதனை உடல் கட்டமைப்பிலும், சத்தியத்தை ஏற்கும் சிந்தனைத்தெளிவிலும் நேர்த்தியாக படைத்துள்ளான் என்பதை புரியவேண்டும், அதனாலே ஆத்மாவின் பெறுமதியைக்காட்ட சத்தியம் செய்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ நிச்சயமாக நாம் மனிதனை மிக அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம். (95:4)
وَفِىْۤ اَنْفُسِكُمْؕ اَفَلَا تُبْصِرُوْنَ உங்களுக்குள்ளேயும்_(பல அத்தாட்சிகள் இருக்கின்றன, அவைகளை) நீங்கள் (கவனித்துப்) பார்க்கமாட்டீர்களா? (51:21)
فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًا ؕ فِطْرَتَ اللّٰهِ الَّتِىْ فَطَرَ النَّاسَ عَلَيْهَا ؕ لَا تَبْدِيْلَ لِخَـلْقِ اللّٰهِ ؕ (நபியே!) நீர் உம்முடைய முகத்தை மார்க்கத்தின்பால் திருப்பியவராக நிலைநிறுத்தி விடுவீராக! அல்லாஹ் மனிதர்களை எ(ந்த மார்க்கத்)தில் படைத்தானோ அத்தகைய இயற்கை மார்க்கத்தை (பற்றிப்பிடித்து நிலைத்திருப்பீராக) அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை,… (30:30)
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவே ஆக்கிவிடுகின்றனர். (புகாரி: 1385, முஸ்லிம்)
இயாள் பின் ஹிமார் அல்முஜாஷிஈ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:அறிந்துகொள்ளுங்கள்: என் இறைவன் இன்றைய தினம் எனக்குக் கற்றுத் தந்தவற்றிலிருந்து நீங்கள் அறியாதவற்றை உங்களுக்குக் கற்றுத்தருமாறு எனக்குக் கட்டளையிட்டான். (இறைவன் கூறினான்:) நான் ஓர் அடியானுக்கு வெகுமதியாக வழங்கியுள்ள அனைத்துப் பொருட்களும் அவனுக்கு அனுமதிக்கப்பட்டவையே ஆகும். நான் என் அடியார்கள் அனைவரையும் (இயற்கையிலேயே) உண்மை வழி நின்றவர்களாகவே படைத்தேன். (ஆயினும்) அவர்களிடம் ஷைத்தான் வந்து அவர்களது இயற்கை நெறியிலிருந்து அவர்களைப் பிறழச்செய்துவிட்டான். நான் அவர்களுக்கு அனுமதித்துள்ளவற்றைத் தடைசெய்யப் பட்டவையாக ஆக்கிவிட்டான்; நான் எனக்கு இணை கற்பிப்பதற்கு எந்தச் சான்றையும் இறக்காத நிலையில் எனக்கு இணை கற்பிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டான்.அல்லாஹ் பூமியில் வசித்துக்கொண்டிருப்போரைப் பார்த்து, அவர்களில் அரபியர், அரபியரல்லாதோர் அனைவர்மீதும் (அவர்கள் இணை கற்பித்துக்கொண்டிருந்ததால்) கடுங்கோபம் கொண்டான்; வேதக்காரர்களில் (இணைவைக்காமல்) எஞ்சியிருந்தோரைத் தவிர! ……(முஸ்லிம்: 5498)
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰٮهَا
சொல் அருத்தம்;
فَ இன்னும், மேலும், அடுத்து, اَلْهَمَهَا அதற்கு அறிவித்தான், உதிப்பாக்கினான், فُجُوْرَهَا அதன் தீமைகள், கெடுதிகள், وَتَقْوٰٮهَا இன்னும் அதன் நன்மைகள்
மேலும் அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! (91:8)
இந்த வசனம் மூலம் மனிதனைப் படைத்த அல்லாஹ் அவனுக்கு நல்ல வழிகளை காட்டியிருப்பதோடு, தீய வலிகளையும் காட்டியுள்ளான், ஏனெனில் உலக வாழ்க்கை என்பதே சேதனைக்கானதே. எனவே இரண்டு வழிகளை வைத்து மனிதனை சோதிக்கின்றான்.
அடுத்து இரண்டு வழிகளை அல்லாஹ்வே வைத்துவிட்டு, சுவர்க்கம் நரகம் என்று தீர்மானிப்பது நியாயமா என்றால், அதற்குத்தான் சிந்திக்கும் ஆற்றலையும் அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்து, நபிமார்களை அனுப்பி வேதங்களையும் கொடுத்து நெறிப்படுத்தியுள்ளான். வெற்றிபெறுபவர் யார் என்றும் அல்லாஹ் பின்னால் கூறுகின்றான்.
நபி ஸல் அவர்களின் பின்வரும் செய்தியை சிந்தித்தால் அதனை சரியாக புரியலாம்.
அபுல் அஸ்வத் அத்துவலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் இம்ரானிப்னுல் ஹுஸைன் (ரலி) அவர்கள், “மனிதர்கள் இன்று நற்செயல் புரிவதும் அதற்காக முனைந்து செயலாற்றுவதும் ஏற்கெனவே அவர்கள் மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட, முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்ட விதியின் அடிப்படையிலா? அல்லது அவர்களுக்கெதிரான ஆதாரத்தை நிலைநிறுத்தும் வகையில், அவர்களுடைய இறைத்தூதர்கள் அவர்களிடம் கொண்டுவந்துள்ளவற்றை ஏற்றுச் செயல்படுத்துவதைப் பொறுத்தா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “இல்லை; ஏற்கெனவே அவர்கள் மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட, நடந்துமுடிந்த (விதியின்) அடிப்படையில் தான்” என்று சொன்னேன். அதற்கு இம்ரான் (ரலி) அவர்கள், “இது அநீதியாகாதா?” என்று கேட்டார்கள். அதைக் கேட்டு நான் கடுமையாக அதிர்ந்துவிட்டேன். மேலும், “அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பே; அவனது அதிகாரத்துக்குட்பட்டவையே. அவன் செய்வது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், மனிதர்கள் விசாரிக்கப்படுவார்கள்” என்று சொன்னேன். அப்போது இம்ரான் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு அருள்புரியட்டும். உங்கள் அறிவைப் பரிசோதிப்பதற்காகவே நான் கேள்வி கேட்டேனே தவிர, வேறெதற்கும் நான் கேள்வி கேட்கவில்லை” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:”முஸைனா” குலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மனிதர்கள் இன்று நற்செயல் புரிவதும் அதற்காக முனைந்து செயல்படுவதும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட, முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்ட விதியின் அடிப்படையிலா? அல்லது அவர்களுக்கெதிரான ஆதாரத்தை நிலைநிறுத்தும் வகையில், அவர்களுடைய இறைத்தூதர்கள் அவர்களிடம் கொண்டுவந்துள்ளவற்றை ஏற்றுச் செயல்படுத்துவதைப் பொறுத்தா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை; ஏற்கெனவே அவர்கள் மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட, அவர்கள் விஷயத்தில் முடிவாகிவிட்ட (விதியின்) அடிப்படையில் தான்” என்று கூறிவிட்டு இதை உண்மைப்படுத்தும் சான்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது என்று கூறி, பின்வரும் வசனங்களை ஓதிக் காட்டினார்கள்: ஆத்மாவின் மீதும், அதை வடிவமைத்து, அதன் நன்மையையும் தீமையையும் அதற்கு அறிவித்தவன்மீதும் சத்தியமாக! (91:7,8) (முஸ்லிம்: 5154)
குறிப்பு; தன் மீது எழுதப்பட்டிருக்கும் தலைவிதி என்னவென்று தெரியாத மனிதன் நல்லவற்றை நோக்கியே செல்லவேண்டும், மாறாக நான் மோசமானவன் என்று தீர்மானித்து மோசமானதை செய்வது மடத்தனமே, ஒன்று நடக்கும் வரையில் கத்ரில் நம்பிக்கைவைத்து நல்லதை நோக்கி சொல்வதும், ஒன்று நடந்துவிட்டால் கத்ரில் சுமத்திவிட்டு பொறுமைக்காப்பதுமே புத்திசாலிக்கு அடையாளமாகும். (அல்லாஹு அஃலம்)
முன்னால் கூறப்பட்ட ஏழு வசனங்களிலும் ஏழு படைப்புகள் (அவைகள்; சூரியன், சந்திரன், இரவு, பகல், வானம், பூமி, மனித ஆத்மா ஆகியவை) மீது சத்தியம் செய்த அல்லாஹ், மனித சமூகத்தின் வெற்றி தோல்வி பற்றி குறிப்பிடுகின்றான்.
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰٮهَا
சொல் அருத்தம்;
قَدْ உறுதிப்படுத்துவதற்காக பாவிக்கப்படும் சொல், நிச்சியமாக, திடமாக, اَفْلَحَ அவன் வெற்றி பெற்றான், مَنْ ஒருவன்\யார், زَكّٰٮهَا அதை தூய்மைசெய்தான்
எவன் ஆத்மாவைப் பரிசுத்த மாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான். (91:9)
وَقَدْ خَابَ مَنْ دَسّٰٮهَا ؕ
சொல் அருத்தம்;
وَقَدْ மேலும் திட்டமாக, خَابَ நஷ்டமடைந்தான், مَنْ எவன், دَسّٰٮهَا அதை மறைத்தான்
எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். (91:10)
இந்த இரண்டு வசனங்களுமே முன்னால் செய்யப்பட்ட சத்தியங்களுக்கு பதிலாகும், தனது ஆத்மாவை சுத்தப்படுத்துதல் எனும் போது முதல் கட்டம் குப்ர் எனும் இறைமறுப்பு, ஷிர்க் எனும் இணைவைப்பு ஆகியவற்றிலிருந்து ஈமானைக் கொண்டும், பாவங்களில் இருந்து இறையச்சத்தைக் கொண்டும், அடுத்து நல்லமல்களைக் கொண்டும் சுத்தப்படுத்துவதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்கள் அசுத்தமானவர்களே…… (9:28)
فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ ؕ هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰى ….. ஆகவே, உங்களை தூய்மையானவர்கள் என நீங்களே தற்புகழ்ச்சி செய்துகொள்ளாதீர்கள். உங்களில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் யாரென்பதை அவன் நன்கறிவான். (53:32)
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார். وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰى ؕ அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார். (87:15)
அடுத்து ஒரு மனிதன், ஈமான், நல்லமல்கள், தீமையை விடுதல் போன்றவற்றைக் கொண்டு தன்னை சுத்தப்படுத்தல் என்பது அல்லாஹ்வின் அருளாலும், கொடையாலும் கிடைக்கும் ஒன்றாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ ….. அல்லாஹ்வுடைய அருளும், கிருபையும் உங்கள்மீது இல்லா திருப்பின் உங்களில் ஒருவருமே எக்காலத்திலும் பரிசுத்தவானாக இருக்க முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடியவனைப் பரிசுத்தவானாக ஆக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவனும் (அனைத்தையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (24:21)
بَلِ اللّٰهُ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ وَلَا يُظْلَمُوْنَ فَتِيْلًا …..அல்லாஹ், தான் விரும்பியவர்களைப் பரிசுத்தமாக்கி வைப்பான். (இவ்விஷயத்தில் எவரும்) ஓர் அணுஅளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள். (4:49)
அதே நேரம் மனிதன் அவனாக தன்னை சுத்தப்படுத்திக் கொள்கின்றான் என்று வரும் அல்குர்ஆன் வசனங்களையும் அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே அவன் முயற்சி செய்கின்றான் என்று புரிய வேண்டும். அதனால்தான் அவனிடம் அதற்காக துஆவும் செய்யவேண்டி இருக்கின்றது.
وَمَنْ تَزَكّٰى فَاِنَّمَا يَتَزَكّٰى لِنَفْسِهٖ ؕ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ …… எவர் பரிசுத்தமாக இருக்கின்றாரோ அவர் தன்னுடைய நன்மைக்காகவே பரிசுத்தமாய் இருக்கின்றார். அல்லாஹ்விடமே அனைத்தும் செல்ல வேண்டியதிருக்கின்றது. (35:18)
فَقُلْ هَلْ لَّكَ اِلٰٓى اَنْ تَزَكّٰى ۙ, وَاَهْدِيَكَ اِلٰى رَبِّكَ فَتَخْشٰىۚ (அவனை நோக்கிப்) (பாவங்களை விட்டும்) நீ பரிசுத்தவானாக ஆக உனக்கு விருப்பம்தானா? 18, (அவ்வாறாயின்) உன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய வழியை நான் உனக்கறிவிக்கின்றேன். அவனுக்கு நீ பயந்துகொள்” என்று கூறுங்கள் (என, மூஸாவுக்கு இறைவன் கட்டளையிட்டான்). (79:18,19)
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள்கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக மினல் அஜ்ஸி, வல்கசல், வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரம், வ அதாபில் கப்ர். அல்லாஹும்ம! ஆதி நப்ஸீ தக்வாஹா, வஸக்கிஹா, அன்த கைரு மன் ஸக்காஹா. அன்த வலிய்யுஹா வமவ்லாஹா. அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக மின் இல்மின் லா யன்பஃ, வ மின் கல்பின் லா யக்ஷஃ, வ மின் நப்ஸின் லா தஷ்பஃ, வ மின் தஃவதின் லா யுஸ்தஜாபு லஹா.(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன். இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும் திருப்தியடையாத மனதிலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.) (முஸ்லிம்: 5266)
நபி ஸல் அவர்கள் உஹத் யுத்தகளத்தில் பின்வருமாறு துஆ கேட்டார்கள் என உபைதுல்லாஹ் பின் ரிபாஆ ரலி அவர்கள் கூறினார்கள்: ‘ اللهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْإِيمَانَ وَزَيِّنْهُ فِي قُلُوبِنَا، وَكَرِّهْ إِلَيْنَا الْكُفْرَ، وَالْفُسُوقَ، وَالْعِصْيَانَ، وَاجْعَلْنَا مِنَ الرَّاشِدِينَ، ” அல்லாஹ்வே! எங்களுக்கு இறைநம்பிக்கையை விருப்பத்திற்குரியதாக ஆக்கிவிடு, அதனை எம் உள்ளத்திற்கு அழகாக்கிவிடு, மேலும் எங்களுக்கு இறைமறுப்பையும், பாவம் செய்வதையும், மாறுசெய்வதையும் வெறுப்பாக்கிவிடு, மேலும் எங்களை நேர்வழி பெற்றோரில் ஆக்கிவிடு. (அஹ்மத்:15492, அபுல் முப்ரத்)
كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰٮهَآ
சொல் அருத்தம்;
كَذَّبَتْ அது அவள் பொய்பித்தது\ தாள், ثَمُوْدُ ஸமூது சமுதாயம், بِطَغْوٰٮهَآ தன் அழிச்சாட்டியம்\வரம்புமீறல்
ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள். (91:11)
இந்த வசனத்தில் வரும் ஸமூத் என்பது ஒரு கூட்டத்தின் பெயர், உலகில் சக்திவாய்ந்த ஒரு சமூகம், அவர்களுக்கு நபியாக ஸாலிஹ் அலை அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
اِذِ انْۢبَعَثَ اَشْقٰٮهَا
சொல் அருத்தம்;
إِذِ போது, நேரம் (இறந்த கால சொல்லுடன் சேர்ந்து வரும்), انْۢبَعَثَ முன்வந்தான், اَشْقٰٮهَا அதன் தீயவன்\துர்பாக்கியன்
அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது, (91:12)
இந்த வசனத்தில் துர்ப்பாக்கியம், மோசமானவன் என்பதைக் கொண்டு ஸமூத் கூட்டத்தில் ஒருவனான ‘குதார் பின் சாலிப்’ என்ற செல்வாக்குள்ள ஒருவனே நாடப்படுகின்றான் என்று விரிவுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் செய்தியை நோக்கலாம்.
அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) அவர்கள் கூறினார்கள்: (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்கள் உரையாற்றியதை செவியுற்றேன். அப்போது அவர்கள், ‘(இறைத்தூதர் ஸாலிஹ்(அலை) அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அவர்களிலுள்ள துர்பாக்கியசாலி ஒருவன் முன்வந்தபோது…’ எனும் (திருக்குர்ஆன் 91:12 வது) இறைவசனத்தைக் கூறிவிட்டு, ‘அபூ ஸம்ஆவைப் போன்று ஸாலிஹ்(அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்புமிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத் (தைக் கொல்வதற்)திற்காக முன் வந்தான்’ என்று கூறினார்கள்.(புகாரி: 4942, முஸ்லிம்)
அல்லாஹ் கூறுகின்றான்:
فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطٰى فَعَقَرَ எனினும், அவர்கள் தங்களுடைய தோழனை அழைத்தனர், அவன் பிடித்தான்,பின்னர் அறுத்து விட்டான். (54:29)
فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْيٰهَا
சொல் அருத்தம்;
فَقَالَ எனவே அவர் கூறினார், لَهُمْ அவர்களுக்கு, رَسُوْلُ தூதர், اللّٰهِ அல்லாஹ், نَاقَةَ பெண் ஒட்டகம், اللّٰهِ அல்லாஹ், وَسُقْيٰهَا இன்னும் அது நீர் பருகுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி “இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாதும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாதும்) விட்டு விடுங்கள்” என்று கூறினார். (91:13)
இந்த வசனத்தில் வரும் ஒட்டகம் என்பது அல்லாஹ் அந்த கூட்டத்திற்கு கொடுத்த ஒரு அற்புதமாகும், அதற்கு தீங்கு செய்யாமல் அதனை பாதுகாக்குமாறே அல்லாஹ் கட்டளையிட்டான்.
அடுத்து ஒரு கிணற்றையும் அல்லாஹ் அடையாளப்படுத்தி அதில் ஒரு நாளைக்கு மனிதர்களுக்கும், ஒரு நாள் அந்த ஒட்டகத்திற்கும் என்று அல்லாஹ் நாளையும் வகுத்தான், அதனை பேணுமாறும் அல்லாஹ் கட்டளையிட்டான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
اِنَّا مُرْسِلُوا النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ (ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக “ஒரு பெண் ஒட்டகத்தை நிச்சயமாக நாம் அனுப்பிவைப்போராக உள்ளோம், ஆகவே (ஸாலிஹ் நபியே!) நீர் அவர்களைக் கண்காணித்துக்கொண்டு, பொறுமையுடனும் இருப்பீராக! وَنَبِّئْهُمْ اَنَّ الْمَآءَ قِسْمَةٌ ۢ بَيْنَهُمْۚ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ நிச்சயமாக, (கிணற்றின்) “தண்ணீர் அவர்களுக்கும் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, ஒவ்வோரு தண்ணீர் முறை பாகமும் (முறைப்படி அவரவர் நாளில் குடிப்பதற்கு) என்றும், அவர்களுக்கு அறிவித்து விடுவீராக!” (என்றும் நாம் கூறினோம்). (54:28)
قَالَ هٰذِهٖ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَّلَـكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُوْمٍۚ அ(தற்க)வர் (அத்தாட்சியாக) “இதோ ஒரு பெண் ஒட்டகம் (குறிப்பிட்ட நாளில் கிணற்றிலிருந்து) இதற்கு தண்ணீர் அருந்தும் பங்கும், (அதுபோன்று) உங்களுக்கு குறிப்பிட்ட ஒருநாள் தண்ணீர் அருந்தும் பங்கும் உண்டு” என்று கூறினார். (26:155)
وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَيَاْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيْمٍ அன்றியும், “நீங்கள் எந்தத் தீங்கைக் கொண்டும் அதனைத் தீண்டாதீர்கள் (அவ்வாறு தீண்டினால்) மகத்தான நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்) (26:156)
فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِيْنَۙ இவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும் அதன் குதிகால் நரம்பினைத்தறித்து அவர்கள் அதை அறுத்துவிட்டார்கள், பின்னர் கைசேதப்பட்டோராய் ஆகிவிட்டனர். (26:157)
فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰٮهَا
சொல் அருத்தம்;
فَكَذَّبُوْهُ எனவே அவரை அவர்கள் பொய்ப்பித்தார்கள், فَعَقَرُوْهَا மேலும் அதைக் கொன்றார்கள், فَدَمْدَمَ ஆகவே, கடுமையான வேதனையை இறக்கினான், عَلَيْهِمْ அவர்களின் மீது, رَبُّهُمْ அவர்களுடைய இறைவன், بِذَنْۢبِهِمْ அவர்களின் பாவத்தினால், فَسَوّٰٮهَا அதை சமமாக்கினான்
எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான். (91:14)
பொதுவாகவே அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறுசெய்த பல சமூகங்களை அல்லாஹ் அழித்தான், அவைகளுள் ஸமூது கூட்டமும் ஒன்றாகும். அவர்களது அழிவு பற்றி அல்லாஹ் பல இடங்களில் கூறியுள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِيَةِ ஆகவே, (ஸாலிஹ் நபியின் கூட்டத்தாராகிய) ஸமூது ஒரு பெரிய சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர். (69:5)
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِيْمِ الْمُحْتَظِرِ நிச்சயமாக நாம் அவர்கள் மீது, ஒரே ஒரு (பேரிடிச்) சப்தத்தை அனுப்பி வைத்தோம், அதனால் வேலி கட்டுபவரின் பிடுங்கி எறியப்பட்ட குப்பை கூளங்களைப் போல் அவர்கள் ஆகிவிட்டார்கள். (54:31)
இந்த வசனங்களில் ஒட்டகத்தை அறுத்தவன் ஒருவன் என்றிருந்தாலும் அந்த சமூகமே அவனை அதற்குத் தூண்டியது என்ற அடிப்படையில் ‘அவர்கள் பொய்ப்பித்தார்கள், அதனால் அல்லாஹ் தண்டனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் அளித்தான்’ என்று கூறுகின்றான். எனவே குற்றம் செய்ய யாரெல்லாம் காரணமாக இருப்பார்களோ அவர்களும், அதற்கு தூண்டியவர்களும் குற்றவாளிகளே என்பது பொது விதியே. அந்த அடிப்படையிலேயே தண்டையும் பொதுவாக இறங்கும்.
இதனை புரிந்துகொள்வதற்காக இமாம் ஷன்கீதி அவர்கள் அல்வாஉல் பயானில் பின்வரும் ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள்.
அபூ கதாதா(ரலி) அவர்கள் கூறினார்கள்: . நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் என்னையும் சேர்த்து ஒரு சிறு கூட்டத்தை நபி(ஸல்) அவர்கள் வேறு வழியாக அனுப்பிவைத்தார்கள். ‘கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்; நாம் சந்திப்போம்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். கடலோரமாகச் சென்று திரும்பியபோது என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் அணிந்தனர்; நான் மட்டும் இஹ்ராம் அணியவில்லை. இவ்வாறு நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது என் தோழர்கள் காட்டுக் கழுதைகளைக் கண்டனர். நான் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி, ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன். அனைவரும் ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை சாப்பிட்டோம். ‘நாம் இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியை உண்ணலாமா?’ என்றும் தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டனர். எஞ்சிய இறைச்சியை எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். என் தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் இஹ்ராம் அணிந்திருந்தோம்; அபூ கதாதா இஹ்ராம் அணியவில்லை; அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம். அபூ கதாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்; ‘நாம் இஹ்ராம் அணிந்திருக்கும்போது வேட்டையாடப்பட்ட மாமிசத்தை உண்ணலாமா?’ என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம்; பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக்கிறோம்!’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதை சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?’ என்று கேட்டார்கள். நபித் தோழர்கள் ‘இல்லை!’ என்றனர். ‘அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 1824 முஸ்லிம்)
எனவே ‘யாரும் வேட்டையாட தூண்டினீர்களா, அல்லது செய்கை செய்தீர்களா’ என்ற கேள்விக்கு பின்னால் இல்லை எனும்போது சாப்பிட அனுமதித்ததிலிருந்து, தூண்டியவரும், செய்கை செய்தவரும் வேட்டையாடியவரும் ஒன்று என்ற சட்டம் வருகிறதல்லவா. இது போன்றே குற்றம் செய்ய காரணமாக இருந்தவரும் குற்றவாளியே. அல்லாஹு அஃலம் (அல்வா உல் பயான்)
وَلَا يَخَافُ عُقْبٰهَا
சொல் அருத்தம்;
وَلَا يَخَافُ இன்னும் பயப்பட மாட்டான், عُقْبٰهَا அதன் இறுதி முடிவு
இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை. (91:15)
இந்த வசனத்தில் அல்லாஹ், பாவிகளை தண்டிப்பவன், பல கூட்டங்களை அளித்தவன், அவன் எவரது பழிதீர்த்தலுக்கும் அஞ்சாதவன், எனவே பயப்படாதவன் என்பதை உணர்த்துகின்றான்.
இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ்வுக்கு மாறு செய்த ஒரு கூட்டம் அழிக்கப்பட்ட வரலாற்றை சுருக்கமாக அல்லாஹ் எடுத்துரைத்து, மனிதன் உலகில் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறுசெய்வதே உலகில் அவன் உள்ளம் கெட்டு, நாசமாகுவதற்கும் மறுமையில் அவன் தோல்வி அடைவதற்கும் காரணமாகும் என்பதை உணர்த்துகின்றான்.
(வலா யகாபு, அவன் பயப்படமாட்டான்) என்பதில் அவன் என்பதைக் கொண்டு நாடப்படுவது யார் என்று தெளிவுபடுத்தும்போது, அல்லாஹ் என்று இப்னு அப்பாஸ் ரலி, முஜாஹித், ஹஸனுல் பஸரீ ரஹ் போன்றவர்கள் கூறினர்.
அதேநேரம் பாவம் செய்கிற பலரும் அதன் விளைவுகளை அஞ்சுவதில்லை, அது போன்றே ஸமூது கூட்டத்தில் அல்லாஹ்வின் அற்புதமான ஒட்டகத்தை அறுத்துக் கொன்றவன் அதன் விளைவை பயப்படவில்லை. என்ற அடிப்படையில் ளஹ்ஹாக், சுத்தீ போன்ற விரிவுரையாளர்கள், ஒட்டகத்தை அறுத்தவன் அதன் விளைவை பயப்படவில்லை என்று கூறினார்கள். (இப்னு கஸீர்)
ஸூரதுஷ் ஷம்ஸ் விளக்க முடிவு!
واّخر دعوانا أن الحمد لله رب العالمين