PDF வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்!
بسم الله الرحمن الرحيم
سورة الفجر
ஸூரதுல் பஜ்ர்
பெயர்: பஜ்ர் (விடியற்காலை)
வசனங்கள்: 30
இறங்கிய காலப் பகுதி: மக்கீ,
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالْفَجْرِۙ
و சத்தியம் செய்வதற்கு பாவிக்கும் ஒரு எழுத்து الْفَجْرِۙ விடியற்காலை
விடியற் காலையின் மீது சத்தியமாக, (89:1)
பஜ்ர் (விடியற்காலை) என்பதைக் கொண்டு என்ன நாட்டப்படுகின்றது என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது,
அது பொதுவாக காலைப்பொழுதைக் குறிக்கும் என்றும்,
‘ஸலாதுல் பஜ்ர்’ சுப்ஹு தொழுகையை குறிக்கும் என்றும் கூறுகின்றனர்.
அவ்விரண்டு கூற்றுக்களுக்கும் பின்வரும் வசனங்கள் ஆதாரங்களாக கொள்ளப்படுகின்றன.
وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَۙ உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக! (81:18)
وَقُرْاٰنَ الْـفَجْرِؕ اِنَّ قُرْاٰنَ الْـفَجْرِ كَانَ مَشْهُوْدًا ….. பஜ்ர் தொழுகையும் தொழுது வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாக பஜ்ர் தொழுகையானது சாட்சி சொல்லப்படக்கூடிய தொழுகையாகும்.(17:78)
ஆனாலும் பொதுவாக காலைப்பொழுது என்பது பொருத்தமாக இருக்கின்றது. ஏனெனில் இந்த வசன தொடர்கள் காலங்களை குறித்தே வந்திருக்கின்றன.
அதேநேரம், எந்த நாளின் காலைப்பொழுது என்பதிலும் கருத்துவேற்றுமை காணப்படுகின்றது,
சிலர் பொதுவாக ஒவ்வொரு நாளினதும் காலைப்பொழுது என்றும், இன்னும் சிலர், குறிப்பாக துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது நாளின் (யவ்முன் நஹ்ர்) காலைப்பொழுது என்றும், இன்னும் சிலர், முஹர்ரம் மாதத்தின் முதலாவது நாளின் காலைப்பொழுது என்றும் கூறுகின்றனர்.
ஆனால் இந்த கருத்துக்கள் எதற்கும் நேரடி ஆதாரங்கள் இல்லை, பின்னால் வரும் ‘பத்து இரவுகள் துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்து நாட்கள்’ என்ற கருத்தின்படி பத்தாவது நாளின் காலைப்பொழுது என்பது மிகவும் பொருத்தமாக இருக்கின்றது.
(இந்த கருத்துக்கள் அல்வாஉல் பயான் என்ற குர்ஆன் விளக்க நூலில் பதியப்பட்டுள்ளது.)
وَلَيَالٍ عَشْرٍۙ
لَيَالٍ இரவுகள், عَشْرٍۙ பத்து
பத்து இரவுகளின் மீது சத்தியமாக, (89:2)
பத்து இரவுகள் என்பதை கொண்டு அது துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்து நாட்கள் என்றும், ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் என்றும், முஹர்ரம் மாதத்தின் பத்து நாட்கள் என்றும் கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன, அந்தக் கருத்துக்களில் துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்து நாட்கள் என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறக்கூடிய கூற்று மிக முக்கியமானது. அந்த கூற்றின் அடிப்படையில்
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:’துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்து நாட்களில் செய்யப்படும் அமல்களை விட சிறந்ததாக வேறு எந்த நாட்களில் செய்யப்படும் அமல்களும் இல்லை.’ அப்போது நபித்தோழர்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! ஜிகாத் செய்வதை விடவுமா? அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஜிஹாத் செய்வதை விடவும் தான், ஆனால் ஒரு மனிதர் ஜிஹாதுக்கு சென்று திரும்பி வரவில்லை என்றால் அதை தவிர என்று கூறினார்கள்: (திர்மிதி:757 , அஹ்மத்: 1968)
அஷ்ர் என்றால் துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்து நாட்கள் என்றும் வத்ர் என்றால் அரபா நாள் என்றும் வஷ்ஷப்இ என்றால் நஹ்ர் உடைய தினம் என்றும் நபிகளார் கூறியதாக நாசாஇ போன்ற ஹதீஸ் கிதாபுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த நபிமொழி அறிவிப்பாளர் தொடரில் விமர்சனம் இருக்கின்றது, இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறும்போது அந்த செய்தியை நபிகளார் கூறியதாக சொல்வதில் உடன்பாடு இல்லை என்று கூறினார்கள் (இப்னு கஸீர்)
وَّالشَّفْعِ وَالْوَتْرِۙ
الشَّفْعِ இரட்டை الْوَتْرِۙ ஒற்றை
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக, (89:3)
ஷப்உ(இரட்டை), வத்ர் (ஒற்றை) என்ற அந்த சொற்களில் என்ன நாடப்படுகின்றது என்பதில் பல கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன; அந்த அடிப்படையில் சில விரிவுரையாளர்கள், அவற்றைக் கொண்டு நாடப்படுவது, அறபா தினமான ஒன்பதாவது நாள் வத்ர் என்றும், யவ்முன் நஹ்ர் ஆகிய பத்தாவது நாள் பெருநாள் ஷப்உ என்றும் கூறுகின்றார்கள். ஷப்உ என்றால் அரபா நாளும், வத்ர் என்றால் யவ்முன் நஹ்ரின் இரவு என்றும் சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர் ஷப்உ என்றால் துல்ஹிஜ்ஜா மாதத்தின் பதினொன்று, பன்னிரண்டாவது நாட்கள் என்றும், வத்ர் என்றால் துல்ஹிஜ்ஜா மாதத்தின் பதின்மூன்றாவது நாள் என்றும் கூறுகின்றனர். ‘குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை; யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை; ……(2:203) ‘ என்ற இந்த வசனத்திற்கு விளக்கமாக கூறினார்கள். மேலும் ஷப்உ என்றால் படைப்பினங்கள், வத்ர் என்றால் படைத்தவன் அல்லாஹ் என்ற கருத்தும் சில விரிவுரையாளர்களால் சொல்லப்பட்டிருக்கின்றது.
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:6410, முஸ்லிம்)
وَمِنْ كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். (51:49)
மேலும் ஷப்உ என்றால் சுபஹுத் தொழுகை, வத்ர் என்றால் மஃரிப் தொழுகை என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.
மேலும் ஷப்உ என்றால் எண்களில் வரக்கூடிய இரட்டை எண்கள், வத்ர் என்றால் ஒற்றை எண்கள் என்ற கருத்தும் சொல்லப்பட்டிருக்கின்றது.
தொழுகையில் வரக்கூடிய இரண்டு எண்களைக் கொண்ட தொழுகைகள் ஷப்உ, ஒற்றை எண்களைக் கொண்ட தொழுகைகள் வத்ர் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. (இப்னு கஸீர்)
وَالَّيْلِ اِذَا يَسْرِۚ
الَّيْلِ இரவு, اِذَا ۚ நிபந்தனையிடுவதற்கு பாவிப்பது, يَسْرِ அது போகின்றது
இரவின் மீதும் சத்தியமாக, அது சென்றுவிடும் போது, (89:4)
இரவு போனால் என்ற அந்த வசனத்தை வைத்து இந்த சூறாவின் துவக்கத்துடன் விடியற்காலை காலைப்பொழுது வந்துவிடும் என்று பொருத்தப்பாடு சில அறிஞர்களால் சொல்லப்பட்டிருக்கின்றது பின்னால் வருகின்ற அல்குர்ஆன் வசனத்தை போன்று அது தொடர்புபட்டிருக்கிறது என்று கூறுகின்றனர்.
وَالَّيْلِ اِذَا عَسْعَسَۙ பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும், وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَۙ மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக. (81:17,18)
இந்த வசனத்தில் வரும் இரவு என்பதைக் கொண்டு எந்த இரவு நாடப்படுகின்றது என்பதிலும் கருத்துவேறுபாடு காணப்படுகின்றது, சிலர் அது முஸ்தலிபாவின் இரவு என்றும், சிலர் கத்ருடைய இரவு என்றும், சிலர் துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாள் நஹ்ருடைய இரவு என்றும் கூறுகின்றனர். அதேநேரம் இது எல்லா இரவுகளையும் குறிக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். (அல்வாஉல் பயான்)
هَلْ فِىْ ذٰلِكَ قَسَمٌ لِّذِىْ حِجْرٍؕ
هَلْ வினா எழுப்புதல், فِىْ ذٰلِكَ அதில் قَسَمٌ சத்தியம், لِّذِىْ உடையவருக்கு , حِجْرٍؕ புத்தி
இதில் புத்தியுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா? (89:5)
1 முதல் 4 வரையிலான வசனங்களில் அல்லாஹ் சிலவற்றின் மீது சத்தியம் செய்கின்றான், அந்த அடிப்படையில் காலைப்பொழுதின் மீதும் பத்து நாட்களின் இரவுகள் மீதும் ஒற்றைப்படையான இரட்டைப்படையானவற்றின் மீதும் சத்தியம் செய்து இருக்கின்றான், இப்படி பலவற்றின் மீதும் சத்தியம் செய்த அல்லாஹ் இந்த சத்தியத்தில் அறிவுள்ள சிந்திக்கும் ஆற்றலுள்ள புத்தியுள்ள மனிதர்களுக்கு படிப்பினை சத்தியம் இருக்கிறதா என்று கேள்வி கேட்கின்றான்.
இந்த வசனத்தில் புத்தி என்ற சொல்லுக்குரிய அரபுப் பதமாக ‘ஹிஜ்ர்’ என்ற சொல் பாவிக்கப்படுகின்றது, ஹிஜ்ர் என்றால் ‘தடுத்தல்’ என்று அர்த்தம் வரும், இந்த சொல்லை புத்தி என்பதற்கு பாவிப்பதற்கான காரணம் புத்தி ஒரு மனிதனை செய்யக்கூடாத காரியங்களிலிருந்து தடுக்கின்றது, எனவே ஒரு மனிதனுடைய புத்தி என்பது அந்த மனிதனை பாவச் செயல்களிலிருந்து பாதுகாக்கவேண்டும் மனிதனை சிந்திக்க தூண்டவேண்டும், எந்த மனிதனுடைய சிந்தனை முறையாக சிந்தித்து தனக்கு தகுதியற்ற வற்றிலிருந்து தூரமாக்கவில்லையோ அந்த மனிதனுடைய புத்தியில் கோளாறு இருக்கிறது என்பதுதான் இங்கிருந்து புரிய வேண்டிய விடயமாகும்.
பொதுவாகவே சத்தியம் என்று ஒன்று வந்துவிட்டால் அந்த சத்தியத்திற்கான பதில் ஒன்றும் வருவது அவசியம், அல்குர்ஆனை நாங்கள் எடுத்துக்கொண்டால் பல இடங்களிலும் அல்லாஹ் சத்தியம் செய்து அதற்கான பதில் ஒன்றையும் குறிப்பிடுவான்.
فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِۙ நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.75, وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِيْمٌۙ நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான சத்தியமாகும்.76, اِنَّهٗ لَـقُرْاٰنٌ كَرِيْمٌۙ நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும். (56:75-77)
وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக.1, وَطُوْرِ سِيْنِيْنَۙ “ஸினாய்” மலையின் மீதும் சத்தியமாக-2, وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-3, لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (95:1-5)
ஆனால் இந்த இடத்தில் அப்படி சத்தியத்திற்கான பதில் ஒன்றும் சொல்லப்படவில்லை, அப்படியானால் இந்த இடத்தில் முன்னால் சொல்லப்பட்ட சத்தியத்திற்கான பதில் எப்படி வரவேண்டும் என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமை இருப்பதைக் காண முடிகின்றது,
சில அறிஞர்கள் இந்த சத்தியத்திற்கான பதில் “அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்” என்று இருக்கும் என்று கூறுகின்றனர், காரணம்; பின்னால் சில கூட்டங்கள் தண்டிக்கப்பட்ட விதத்தை கூறுகின்றான்.
இன்னும் சிலர், இதற்கான பதில் இந்த சூராவில் இருக்கின்றது அதுதான் இந்த சூராவின் “14 வது வசனம் இன்ன றப்பக லபில் மிர்ஸாத்” என்ற வசனம் ஆகும் என்று கூறுகின்றனர்,
இன்னும் சிலர் அல்லாஹ் இங்கே செய்த சத்தியத்திற்கான பதில் இந்த சூராவுடைய கடைசிப் பகுதியில் வருகின்றது என்று கூறுகின்றனர் அதுதான் “கல்லா இதா துக்கதில் அருளு என்ற வசனத்துக்கு பின்னால் உள்ள பகுதியாகும்” என்று கூறுகின்றனர். அல்லாஹு அஃலம் (அல்வாஉல் பயான்)
அடுத்து அல்லாஹ், தனக்கு புத்தி இருந்தும் சிந்திக்காமல் அல்லாஹ்வை மறுத்த ஒரு சில கூட்டங்களுக்கு அவன் கொடுத்த தண்டனைகளை சுருக்கமாக கூறுகின்றான்;
اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
اَ கேள்வி கேட்பதற்கு பாவிக்கும் எழுத்து, لَمْ تَرَ நீர் கவனிக்கவில்லை, كَيْفَ எவ்வாறு, فَعَلَ செய்தான், رَبُّكَ உம் இறைவன், بِعَادٍ ஆது சமுதாயத்தை
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (89:6)
اِرَمَ ذَاتِ الْعِمَادِ
اِرَمَ இரம் என்ற கூட்டம், ذَاتِ ஒன்றினுடையது என்று அருத்தம், الْعِمَادِ தூண்கள்
என்றால் தூண்களையுடைய “இரம்”வாசிகளை (என்ன செய்தான் என்று நீர் பார்க்கவில்லையா?,) (89:7)
الَّتِىْ لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى الْبِلَادِ
الَّتِىْ எத்தகையது என்றால், لَمْ يُخْلَقْ படைக்கப்படவில்லை, مِثْلُهَا, அதுபோன்று, فِى الْبِلَادِ நகரங்களில்
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. (89:8)
இந்த வசனத்தில் ஆத் சமூகம் எப்படிப்பட்டவர்கள் என்பதை பற்றி சுருக்கமாக அல்லாஹ் சொல்கிறான் . உலகத்தில் அவர்களைப் போன்று பலசாலியான ஒரு சமூகம் படைக்கப்படவில்லை, அவர்களுக்கு ‘ஹுத்’ என்பவர் நபியாக அனுப்பப்பட்டார்கள், அவர்கள் பெரிய தூண்களை கொண்ட கட்டிடங்களை எழுப்பிய ஒரு சமூகமாகவும் ஒரு பலசாலியான, உயர்ந்த உடற் கட்டமைப்பைக் கொண்ட கூட்டமாகவும் இருந்தார்கள், அவர்களைப் போன்ற ஒரு சமுதாயம் இந்த உலகத்தில் படைக்கப்படவில்லை என்று அல்லாஹ் சொல்லுகின்ற அளவுக்கு இந்த உலகத்தில் வாழ்ந்தவர்கள், ஆனாலும் அவர்கள் அந்த நபியை மறுக்கின்றார்கள், அவர்களை அல்லாஹ் அளித்தான். எப்படி அளித்தான் என்பதைப் பற்றி அல்குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது, அதிலே சூரத்துல் ‘ஹாக்கா’ என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்;
وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِيْحٍ صَرْصَرٍ عَاتِيَةٍۙ இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.6, سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙ حُسُوْمًا ۙ فَتَرَى الْقَوْمَ فِيْهَا صَرْعٰىۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ ۚ அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.7, فَهَلْ تَرٰى لَهُمْ مِّنْۢ بَاقِيَةٍ ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? (69:6-8)
وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَـكُمْ ۚ خُلَفَآءَ مِنْۢ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِى الْخَـلْقِ بَصْۜطَةً فَاذْكُرُوْۤا اٰ لَۤاءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ “ஆத் சமூகமே!உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவு கூறுங்கள் – எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (என்றும் கூறினார்) (7:69)
இந்த வசனத்தில் வரக்கூடிய ‘இரம்’ என்று சொல்லப்படுகின்ற அந்த வார்த்தைக்கு ஒரு சில விரிவுரையாளர்கள், இரம் என்றால் குறிப்பிட்ட ஒரு ஊர் என்று சொல்லுகின்றார்கள். அதேநேரம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் சொல்லுகின்ற பொழுது ‘இந்த இடத்தில் எந்த ஊர் என்று அடையாளப்படுத்துவது முக்கியமல்ல, மாறாக இந்த ஊரில் வாழ்ந்த சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டார்கள் என்பதைச் சொல்வதுதான் நோக்கம்’ என்று கூறிவிட்டு, இப்படி கூறுவதற்கு காரணம் என்வென்றால், ‘ஒரு சில விரிவுரையாளர்கள் அந்த இரம் என்ற ஊரைப் பற்றி ஒரு சில பொய்யான செய்திகளை எழுதி வைத்திருக்கிறார்கள், அங்கே தங்கத்தால் கட்டப்பட்ட, வெள்ளிக் கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் இருந்தன, அதனுடைய கட்டிடங்களும் தோட்டங்களும் முத்துக்களாக, மரகதங்களாக இருந்தன என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள், இப்படிப்பட்ட பொய்யான இஸ்ராஈலியத்தான செய்திகளை நம்பி விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த செய்தியை நான் பதிவு செய்கிறேன்’ என்று அவர்கள் பதிவு செய்கிறார்கள். (இப்னு கஸீர்)
மேலும் தொடர்ந்து அவர்கள் கூறும்போது ‘ஸஃலபி’ அவர்கள், ஒரு காட்டரபி ‘அப்துல்லாஹ் பின் கிலாபா’ என்பவர் ஒரு கிராமத்தை கண்டதாகவும், அந்த கிராமம் தங்கத்தில் இருந்ததாகவும், அது தான் இந்த இரம் என்ற ஊர் என்றும் பதிவு செய்திருக்கிறார்கள், இப்படி பதிவு செய்யப்பட்ட இந்த செய்தி நம்பமுடியாதது பொய்யானது, என்று இப்னு கஸீர் ரஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள், அது மட்டுமல்ல அந்த அரபி அப்படி ஒன்றை சொல்லி இருந்தாலும் அது அவருடைய மடமையின் காரணமாக, அவருக்கு ஏற்பட்ட சிந்தனை கோளாறின் காரணமாக ஏற்பட்டது, அது உண்மையானது அல்ல. என்று உறுதியாக சொல்ல முடியும் என்று மறுக்கிறார்கள், இப்படி பல பொய்யான செய்திகள் இந்த இரம் என்ற கிராமம் சம்பந்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. என்று அனைத்தையும் இப்னு கஸீர் ரஹ் அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மறுக்கின்றார்கள். (இப்னு கஸீர்)
وَثَمُوْدَ الَّذِيْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ
وَثَمُوْدَ இன்னும் ஸமூது சமுதாயம், الَّذِيْنَ எத்தகையவர்கள் என்றால், جَابُوا குடைந்தனர், الصَّخْرَ பாறை, الْوَادِ பள்ளத்தாக்கு
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?) (89:9)
அடுத்து அல்லாஹ் சமூத் கூட்டத்தைப் பற்றி கூறுகின்றான், இந்த கூட்டத்திற்கு அல்லாஹ் ஸாலிஹ் என்ற நபியை அனுப்பினான், அவர்களும் இந்த உலகத்தில் பலசாலிகளாக வாழ்ந்தவர்கள், பள்ளத்தாக்குகளில் இருக்கின்ற கற்களில் தனது கைகளினால் குடைந்து வீடுகளை அமைக்கின்ற அளவுக்கு பலசாலிகளாக இருந்தார்கள், அவர்களுக்கு அல்லாஹ் ஒரு ஒட்டகத்தை அற்புதமாக கொடுத்து இருந்தான், அவர்கள் அதனை அல்லாஹ் சொன்ன அடிப்படையில் கையாளாமல், கொலைசெய்தார்கள், இப்படி அல்லாஹ்வுக்கு மாறுசெய்ததால் அழிக்கப்பட்டார்கள், அவர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:
وَتَـنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا فٰرِهِيْنَۚ “மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (26:149)
وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَـكُمْ خُلَفَآءَ مِنْۢ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِى الْاَرْضِ تَـتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَـنْحِتُوْنَ الْجِبَالَ بُيُوْتًا ۚ فَاذْكُرُوْۤا اٰ لَۤاءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ இன்னும் நினைவு கூறுங்கள்: “ஆது” கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்” (என்றும் கூறினார்).74, قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖؕ قَالُـوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி: “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?” எனக் கேட்டார்கள் – அதற்கு அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்” என்று (பதில்) கூறினார்கள்.75, قَالَ الَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا بِالَّذِىْۤ اٰمَنْتُمْ بِهٖ كٰفِرُوْنَ அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்: “நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்” என்று கூறினார்கள்.76, فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَ قَالُوْا يٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِيْنَ பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); “ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.77, فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِىْ دَارِهِمْ جٰثِمِيْنَ எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர். ((7:74-78)
وَفِرْعَوْنَ ذِى الْاَوْتَادِ
وَفِرْعَوْنَ இன்னும் பிர்அவ்ன், ذِى உடையவன் , الْاَوْتَادِ முலைக்காம்புகள்
மேலும், பெரும் படைகளைக் கொண்ட பிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?) (89:10)
الَّذِيْنَ طَغَوْا فِى الْبِلَادِ
الَّذِيْنَ எத்தகையவர்கள் என்றால், طَغَوْا வரம்பு மீறினார்கள், فِى الْبِلَادِ நகரங்களில்
அவர்கள் நகரங்களில் வரம்பு மீறி நடந்தனர். (89:11)
فَاَكْثَرُوْا فِيْهَا الْفَسَادَ
فَاَكْثَرُوْا இன்னும் அதிகப்படுத்தினர், فِيْهَا அவற்றில், الْفَسَادَ குழப்பத்தை
அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர். (89:12)
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
فَصَبَّ எனவே போட்டான், இறக்கினான், عَلَيْهِمْ அவர்கள் மீது, رَبُّكَ உம் இறைவன், سَوْطَ சாட்டை, عَذَابٍ வேதனை
எனவே, உங்களது இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையை இறக்கினான். (89:13)
அடுத்து அல்லாஹ், பிர்அவ்னையும், அவனுடைய ஆற்றலையும், அவனுடைய கூட்டம் செய்த அநியாயங்களையும், அவர்கள் அழிக்கப்பட்ட விதத்தையும் சுருக்கமாகச் சொல்கிறான்,
இந்த வசனத்தில் ‘தில் அவ்தாத்’ என்பதை கொண்டு என்ன நாடப்படுகிறது? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமை இருக்கின்றது,
ஒரு சில அறிஞர்கள் ‘வத்த்’ என்றால் கைதிகளை தண்டிப்பதற்காக அவர்கள் செய்கின்ற கூடாரங்களில் அடிக்கின்ற முலைக்காம்புகள் என்று சொல்கிறார்கள்,
இன்னும் சிலர் அவ்தாத் என்றால் பிர்அவ்னுடைய கட்டளையை நிறைவேற்றுகின்ற படைகள் என்றும்
இன்னும் சிலர் கைதிகளுடைய கைகளையும் கால்களையும் கட்டுகின்ற சங்கிலிகள் என்றும் கூறுகின்றனர்,
இன்னும் சிலர் ‘வத்த்’ என்பதை கொண்டு முக்கோண வடிவத்தில் கட்டப்பட்ட பிரமிட்கள் தான் நாடப்படுகின்றது என்று கூறுகின்றனர்.
இந்த கருத்தையே ‘அல்வாஉல் பயான்’ என்ற விரிவுரை புத்தகத்தில் இமாம் ஷங்கீதி அவர்கள் தேர்வு செய்கிறார்கள். அதற்கான சில காரணிகளையும் குறிப்பிடுகின்றார்கள்.
அந்தப் பிரமிட்டுகள், தோற்றத்தில் முலைக்காம்புகளை போன்று அதனுடைய உச்சிப் பகுதி ஊசி போன்ற தாகவும் கீழ்ப் பகுதி அகலமாகவும் இருப்பதை வைத்தும் புரிந்து கொள்ளலாம், மேலும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சந்ததியினருக்கும் அந்த கூட்டத்தின் பலத்தை பார்க்க முடியுமான ஒன்றாக இருக்கும், அதேபோன்று முன்னைய சமூகங்களைப் பற்றி கூறப்பட்ட ஆது சமூகத்தின் கட்டிட முறைகள், சமூத் சமூகத்தின் கட்டிட முறைகள் கூறப்பட்டது போன்று பிர்அவ்னுடைய கட்டிட முறைகளையும் அல்லாஹ் இந்த இடத்தில் சொல்லிக் காட்டுகிறான் என்று புரிந்து கொள்ளலாம், அதே போன்று இப்படி நாங்கள் புரிந்து கொண்டால் அந்த சமூகம் இப்படி பலமானவர்களாக பலசாலியாக இருந்தும் அழிக்கப்பட்டார்கள் என்றால் இன்றைய சமூகத்தை அழிப்பது அல்லாஹ்வுக்கு ஒரு பெரிய காரியம் அல்ல என்று புரிந்து கொள்வதற்கும், அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கும் காரணமாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார்கள். (அல்வாஉல் பயான்)
اِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِؕ
اِنَّ நிச்சயமாக, رَبَّكَ உம் இறைவன், الْمِرْصَادِؕ கண்காணிக்கும் தளம்
நிச்சயமாக, உமதிரட்சகன் (அடியார்களின் ஒவ்வொரு செயலையும்) கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (89:14)
முன்னைய சமூகங்கள் அழிக்கப்பட்ட விதத்தை கூறிய அல்லாஹ், இந்த வசனத்தின் மூலம் மனித சமூகம் செய்கின்ற நல்ல காரியங்கள், தப்புகள் தவறுகள் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உறுதிப் படுத்துகின்றான். அல்லாஹ் முன்னைய சமூகங்களை அழித்தது போன்று இந்த சமூகத்தையும் அழிப்பதற்கு சக்தியுள்ளவன் என்பதை நிரூபித்து, இந்த சமூகங்களை அழிக்காவிட்டாலும் ஒருநாள் மறுமையில் அவர்களைப் பிடித்துக் கொள்வான், நல்லது செய்பவர்களுக்கு நல்ல கூலி வழங்குவான், தீங்கு செய்பவர்களுக்கு மறுமையில் தண்டனை வழங்குவான் என்பதை இந்த வசனத்தின் மூலம் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபடுகின்ற மனிதன், முன்னைய சமூகங்களை அழித்த அல்லாஹ் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற சிந்தனையோடு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான் என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.
فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰٮهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَكْرَمَنِؕ
فَاَمَّا ஆகவே, الْاِنْسَانُ மனிதன், اِذَا நிபந்தனை இடுவதற்கும், ஒரு செயலின் போது என்ற கருத்திலும் பாவிக்கப்படும், مَا இந்த இடத்தில் அர்த்தமில்லை, உறுதிப்படுத்தலை அதிகப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ளது, ابْتَلٰٮهُ அவனை சோதித்தான், رَبُّهٗ அவனுடைய இறைவன், فَاَكْرَمَهٗ இன்னும் அவனைக் கண்ணியப்படுத்தினான், وَنَعَّمَهٗ இன்னும் அவனுக்கு அருட்கொடை புரிந்தான், فَيَقُوْلُ கூறுகிறான். رَبِّىْۤ என் இறைவன், اَكْرَمَنِؕ என்னைக் கண்ணியப்படுத்தினான்
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தினான் என்று கூறுகின்றான். (89:15)
وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰٮهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَهَانَنِۚ
فَاَمَّا ஆகவே, الْاِنْسَانُ மனிதன், اِذَا நிபந்தனை இடுவதற்கும், ஒரு செயலின் போது என்ற கருத்திலும் பாவிக்கப்படும், مَا இந்த இடத்தில் அர்த்தமில்லை, உறுதிப்படுத்தலை அதிகப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ளது, ابْتَلٰٮهُ சோதித்தான், فَقَدَرَ அளந்து கொடுத்தான், عَلَيْهِ அவன் மீது, رِزْقَهٗ அவனுடைய வாழ்வாதாரம், فَيَقُوْلُ கூறுகிறான், رَبِّىْۤ என் இறைவன், اَهَانَنِۚ என்னை இழிவுபடுத்திவிட்டான்
ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரத்தை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகின்றான். (89:16)
இந்த இரண்டு வசனங்கள் மூலமும் அல்லாஹ் மனிதனுடைய இயல்பான குணத்தை தெளிவுபடுத்துகின்றான்,
ஒன்று, மனிதனுக்கு அல்லாஹ், செல்வச் செழிப்பை கொடுத்து, அருட்கொடைகளை செய்து, இந்த உலகத்தில் வாழச் செய்தால் அந்த மனிதன் நினைக்கிறான், ‘அல்லாஹ் என்னை கண்ணியப்படுத்தி விட்டான்’ என்று,
அடுத்து, ஒரு மனிதனை அல்லாஹ் இந்த உலகத்தில் சோதிக்கின்றான், அவனுக்கு பொருளாதாரத்தை அளந்து கொடுக்கின்றான், இன்பங்களையும் கட்டுப்படுத்திவிடுகிறான், இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்த மனிதன் என்ன யோசிக்கிறான் ‘என்னை அல்லாஹ் கேவலப்படுத்திவிட்டான் இழிவுபடுத்திவிட்டான்’ என்று
இது மனிதனுடைய இயல்பாக இருக்கிறது, நாங்கள் பெறவேண்டிய பாடம் என்ன? ஒரு மனிதனுக்கு பொருளாதாரம் கிடைப்பதோ, அல்லது பொருளாதாரம் இல்லாமல் இருப்பதோ ஒரு மனிதனை அல்லாஹ் கண்ணியப்படுத்திவிட்டான், அல்லது இழிவுபடுத்திவிட்டான், என்பதற்கு அடையாளம் அல்ல, மாறாக பொருளாதாரம் கிடைப்பதும் சரி பொருளாதாரம் இல்லாமல் இருப்பதும் சரி அது ஒரு மனிதனை அல்லாஹ் சோதிப்பதற்கு அடையாளம் என்பதுதான் இந்த வசனம் சொல்லுகின்ற ஒரு செய்தி, அதனால்தான் இந்த இரண்டு வசனங்களிலும் அல்லாஹ். ‘ஒரு மனிதனை அல்லாஹ் சோதித்து விட்டால்’ என்று சொல்லுகின்றான் அல்லாஹ் கூறுகின்றான்;
اَيَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّبَنِيْنَۙ நாம் அவர்களுக்கு ஆண் சந்ததிகளையும் பொருள்களையும் கொடுத்து வருவதைப் பற்றி அவர்கள் என்ன நினைத்துக் கொண்டனர்?55, نُسَارِعُ لَهُمْ فِى الْخَيْـرٰتِ ؕ بَلْ لَّا يَشْعُرُوْنَ இதனால் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில் தீவிரமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றனரா? அவ்வாறன்று! (அது எதற்காக என்பதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. (23:55,56
وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً ؕ وَاِلَيْنَا تُرْجَعُوْنَ ….. தீமையை (துன்பங்களை)க் கொண்டும், நன்மையை (இன்பங்களை)க் கொண்டும் பரீட்சிப்பதற்காக உங்களை நாம் சோதிக்கிறோம்,. பின்னர் நீங்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள். (21:35)
وَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ۙ وَّاَنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِيْمٌ அன்றி, உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (8:28)
அதனால்தான் அடுத்த வசனத்தில் அல்லாஹ் ‘கல்லா’ என்ற வார்த்தையின் மூலம் மனிதனது இந்த சிந்தனைப் போக்கு தவறானது பிழையானது , அவன் நினைப்பது போன்று அல்ல, மாறாக ‘ஒரு மனிதனிடத்தில் ஒரு முஃமினிடத்தில் இஸ்லாம் சொன்ன நல்ல பண்புகள் நல்ல விடயங்கள் இருப்பது’ ஒரு மனிதனை அல்லாஹ் கண்ணியப்படுத்தி விட்டான், என்பதற்கு அடையாளம். ஒரு மனிதனை அல்லாஹ் கேவலப்படுத்தி விட்டான் என்பதற்கு அடையாளம் ‘ஒரு மனிதனிடத்தில் இருக்கின்ற மோசமான நடத்தைகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற தன்மை தான்’ என்பதை தெளிவுபடுத்துகின்றான்.
كَلَّا بَلْ لَّا تُكْرِمُوْنَ الْيَتِيْمَۙ
كَلَّا அவ்வாறல்ல بَلْ மாறாக, لَّا تُكْرِمُوْنَ நீங்கள் கண்ணியப்படுத்தமாட்டீர்கள், الْيَتِيْمَۙ அநாதை
(விஷயம்) அவ்வாறன்று. நீங்கள் அநாதைகளை கண்ணியப்படுத்துவதில்லை. (89:17)
وَلَا تَحٰٓضُّوْنَ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۙ
وَلَا تَحٰٓضُّوْنَ இன்னும் நீங்கள் தூண்டமாட்டீர்கள், عَلٰى மீது, பேரில் طَعَامِ உணவு, الْمِسْكِيْنِۙ ஏழை
ஏழைகளுக்கு உணவு அளிக்கும்படி தூண்டுவதில்லை. (89:18)
وَتَاْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّـمًّا ۙ
وَتَاْكُلُوْنَ இன்னும் நீங்கள் புசிக்கிறீர்கள், التُّرَاثَ அனந்தர சொத்து, اَكْلًا புசித்தல் لَّـمًّا மொத்தமாக சேர்த்து
அனந்தரச் சொத்தை மொத்தமாக புசித்து விடுகின்றீர்கள். (89:19)
وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ؕ
وَّتُحِبُّوْنَ இன்னும் நேசிக்கிறீர்கள், الْمَالَ செல்வம், حُبًّا நேசித்தல், جَمًّا ؕ கடுமையாக
மிக்க அளவு கடந்து சொத்து, செல்வத்தை நேசிக்கின்றீர்கள். (89:20)
மனிதர்கள் கொண்ட தப்பான அந்த சிந்தனைப் போக்கை தவறு என்று கண்டித்த அல்லாஹ், ஒரு மனிதனுக்கு அல்லாஹ் அருள் புரிந்து விட்டான் என்பதற்கு அடையாளமாக அவர் இடத்தில் இருக்க வேண்டிய நல்ல பண்பு, அல்லது ஒரு மனிதன் அல்லாஹ்வுடைய வெறுப்பை சம்பாதிக்கிறான் என்பதற்கு அடையாளமாக இருக்கின்ற மோசமான பண்புகளை அல்லாஹ் இந்த வசனங்கள் மூலம் சொல்லுகின்றான். அந்த அடிப்படையில் இந்த வசனங்களில் 4 பண்புகளை அல்லாஹ் சொல்கின்றான். ‘நீங்கள் அனாதைகளை கண்ணியப்படுத்துவது இல்லை, அனந்தரச் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுகிறீர்கள், ஏழை எளியவர்களுக்கு உணவு அளிப்பதை தூண்டுவதில்லை, பொருளாதாரம் என்று வந்துவிட்டால் அதனை எல்லை மீறி நேசிக்க ஆரம்பித்து விடுகிறீர்கள், அதற்காக எந்த அநியாயத்தையும் செய்யத் தயாராகிவிடுகிறீர்கள்.
இந்த குணங்கள் ஒரு மனிதனிடத்தில் இருக்குமாக இருந்தால் அவனே அல்லாஹ்வின் பார்வையில் கேவலப்பட்ட அசிங்கப்பட்டவன், என்பதை புரிந்து கொள்வதோடு, இந்த வசனங்கள் மூலம் ஒரு மனிதனிடத்தில் இருக்க வேண்டிய உயர்ந்த நல்ல பண்புகளை அல்லாஹ் சொல்கிறான், அவைதான் ‘அனாதைகளை மதிக்க வேண்டும், அனாதைகளை கண்ணியப்படுத்த வேண்டும், அவர்களுடைய சொத்துக்களை பாதுகாக்க வேண்டும், அனாதைகளை அரவணைத்துக்கொள்ள வேண்டும் என்கிற உயர்ந்த பண்புகள், அடுத்து, ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அவர்களை அனுசரித்துக் கொள்ள வேண்டும்,அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும். அடுத்து அனந்தரச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும், தகுதியானவர்களுக்கு அவர்களுடைய சொத்துக்களை உரிய முறையில் ஒப்படைக்க வேண்டும். அடுத்து பொருளாதாரம் என்று வந்துவிட்டால் அதை இஸ்லாம் சொன்ன பிரகாரம் கையாள வேண்டும், அந்த பொருளாதாரத்தை இஸ்லாம் சொன்ன பிரகாரம் சேமித்து சம்பாதித்து இஸ்லாம் சொன்ன பிரகாரம் செலவழிக்க வேண்டும்.
இந்த நல்ல பண்புகள் யாரிடத்தில் இருக்குமோ அவன் அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் சொந்தக்காரன் இவைகளுக்கான ஆதாரங்களை பின்வருமாறு நோக்கலாம்;
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ எனினும், (இதுவரையில்) அவன் “அகபா”வை (கணவாயை)க் கடக்கவில்லை.11, وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْعَقَبَةُ ؕ ,(நபியே!) “அகபா” என்னவென்று நீங்கள் அறிவீரா?12, فَكُّ رَقَبَةٍ ۙ அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.13, اَوْ اِطْعٰمٌ فِىْ يَوْمٍ ذِىْ مَسْغَبَةٍ ۙ அல்லது, கடும் பசியான நாளில் உணவளிப்பது.14, يَّتِيْمًا ذَا مَقْرَبَةٍ ۙ உறவு முறையிலுள்ள அனாதைக்கு,15, اَوْ مِسْكِيْنًا ذَا مَتْرَبَةٍ ؕ அல்லது (வறுமையில்) மண்ணைக் கவ்விக் கிடக்கும் ஓர் ஏழைக்கு (உணவளிப்பது அகபாவாகும்.) (90:11-16)
ஸஹ்ல் இப்னு ஸஃத்(ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி நபி(ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நடு விரலாலும் (சற்றே இடைவெளி விட்டு) சைகை செய்தார்கள். (புஹாரி:6005)
اَرَءَيْتَ الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِؕ (நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா? (107:1), فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ (திக்கற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்.2, وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும் படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை. (107:1-3)
كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا ۙ
كَلَّاۤ உண்மையாகவே, اِذَا ஒன்றின் போது, நிபந்தனையிடுவது, دُكَّتِ தூள் தூளாகத் தகர்க்கப்பட்டது, الْاَرْضُ பூமி, دَكًّا دَكًّا ۙ தூள் தூளாகத் தகர்க்கப்படுதல்
உண்மையாகவே, பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில், (89:21)
முன்னைய வசனங்களில் மனிதனுடைய இயல்பு குணங்களையும், மனிதர்களிடத்தில் இருக்க வேண்டிய நல்ல பண்புகளையும் எடுத்துச் சொல்லி, அதேபோன்று இந்த உலகத்தில் வாழ்ந்து அழிக்கப்பட்ட சமுதாயங்கள் பற்றியும் சொல்லித் தந்த அல்லாஹ், இந்த வசனத்தில் மறுமை நிகழ்கின்ற பொழுது நடக்கக்கூடிய ஒரு நிகழ்வை எங்களுக்கு சொல்லிக் காட்டுகின்றான். அதுதான் மறுமை நிகழ்வதற்காக அல்லாஹ் இந்த பூமியை கடுமையாக உசுப்பி இந்த பூமியை தூள்தூளாக ஆக்கிவிடுவான், இந்த எச்சரிக்கை செய்தியின் மூலம் அல்லாஹ் மனித சமூகத்திற்கு மறுமையை பயந்து வாழவேண்டும் என்கிற ஒரு அறிவுரையை சொல்ல வருகின்றான். தொடர்ந்து அல்லாஹ் மறுமையில் நடக்க இருக்கின்ற ஒரு சில நிகழ்வுகளை பின்வருமாறு சொல்லிக் காட்டுகின்றான்.
وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ۚ
وَّجَآءَ இன்னும் வருவான், رَبُّكَ உம் இறைவன், وَالْمَلَكُ இன்னும் மலக்கு, صَفًّا صَفًّا ۚ அணி அணியாக
உங்களது இறைவனும் வருவான். மலக்குகளும் அணி அணியாக வருவார்கள். (89:22)
இந்த வசனம் மூலம், ‘மறுமை நாளில் மனிதர்களை விசாரித்து தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ் வருவான்’ என்கிற செய்தியும், மலக்குமார்கள் அணிவகுத்த நிலையில் வருவார்கள் என்பதும், மறுமையில் நடக்கின்ற முக்கிய நிகழ்வாகும் என்பது தெளிவாகின்றது. அல்லாஹ்வினதும், மலக்குமார்களினதும் வருகை பற்றி ஸூரதுல் ‘ஹாக்காவில்’ கூறும்போது அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான்;
وَّالْمَلَكُ عَلٰٓى اَرْجَآٮِٕهَا ؕ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَٮِٕذٍ ثَمٰنِيَةٌ ؕ (நபியே!) மலக்குகள் அதன் ஓரங்களில் இருப்பார்கள், அந்நாளில் உங்கள் இறைவனின் அர்ஷை, எட்டு மலக்குகள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள். (69:17)
அடுத்து இந்த வசனத்தின் மூலம், அல்லாஹ்வுக்கு ‘வருதல்’ என்ற பண்பு இருக்கிறது என்பதையும் புரியலாம். பொதுவாகவே குர்ஆனிலும் நபிவழியிலும் வரக்கூடிய அல்லாஹ்வுடைய பண்புகளை ஒரு முஃமின் வந்ததை வந்தது போன்று ஏற்றுக் கொள்ளுகின்ற கடமை இருக்கின்றது. அல்லாஹ்வின் பண்புகளை மறுப்பதோ மாற்றருத்தம் கொடுப்பதோ படைப்புகளுக்க ஒப்பாக்குவதோ மார்க்கத்தில் தடுக்கப்பட்ட அம்சமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ۚ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ அவனைப் போன்று எதுவுமில்லை அவன் பார்ப்பவனாகவும் கேட்பவனாகவும் இருக்கின்றான். (42:11)
எனவே இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் பார்க்கிறான் கேட்கிறான் என்று ஏற்றுக் கொள்வது போன்றே அவனுக்கு ஒப்பாக அவனுக்கு நிகராக எதுவுமில்லை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வை நம்புமாறு நாம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம், எனவே அல்லாஹ்வுடைய பண்புகளை அவனுக்கு பொருத்தமான விதத்தில் அவனுடைய நாட்டத்திற்கு அமைய ஏற்றுக்கொள்வது எம்மீதுள்ள கடமையாகும், அதற்கு வடிவம் கற்பிப்பது எங்களுக்குறிய கடமையல்ல, மாறாக அல்லாஹ்வின் பண்புகளுக்கு வடிவம் கற்பிப்பது தடுக்கப்பட்ட ஒரு அம்சமாகும். (அல்வாஉல் பயான்)
وَجِاىْٓءَ يَوْمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ ۙ يَوْمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكْرٰىؕ
وَجِاىْٓءَ இன்னும் கொண்டுவரப்பட்டது, يَوْمَٮِٕذٍۢ அந்நாளில், جَهَنَّمَ நரகம், يَوْمَٮِٕذٍ அந்நாளில், يَّتَذَكَّرُ அறிவுரை பெறுவான், الْاِنْسَانُ மனிதன், وَاَنّٰى இன்னும் எவ்வாறு?, لَـهُ அவனுக்கு, الذِّكْرٰىؕ அறிவுரை
அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் மனிதன் அறிவுரை பெறுவான், எனினும், (அச்சமயம்) அறிவுரை பெறுவதால் அவனுக்கு (என்ன பயன்)? (89:23)
இந்த வசனத்தின் மூலம் மறுமைநாளில் மனிதர்களுக்கு தீர்ப்பளிக்கும் முகமாக நரகம் இழுத்துக் கொண்டுவரப்படும் என்கிற அந்த செய்தியை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான், உண்மையில் மறுமையில் நரகத்தை காணுகின்ற அந்த மனிதன், உலக வாழ்க்கையில் அவன் விட்ட தவறுகளை எல்லாம் உணர்ந்து, அச்சப்பட்டு, ‘நல்லவனாக வாழ்ந்து இருக்கலாமே’ என்று கைசேதப்படுகின்ற ஒரு நிலை அந்த மனிதனுக்கு வரும் என்றும் அல்லாஹ் சொல்லுகிறான், ஆனாலும் அந்த நேரத்தில் அப்படி கைசேதப்படுவதில் என்னதான் பயன் இருக்கிறது! என்றும் உலகில் வாழுகின்ற மனிதனுக்கு அல்லாஹ் அறிவுரை சொல்லுகின்றான்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமையில் நரகம் கொண்டுவரப்படும், அதற்கு எழுபதுனாயிரம் கடிவாளங்கள் இருக்கும், ஒவ்வொரு கடிவாளங்களிலும் எழுபதுனாயிரம் மலக்குமார்கள் இருந்து அதை இழுத்து வருவார்கள். (முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காணமாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்புதான் வரவேற்கும். எனவே, முடிந்தால் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். (புஹாரி: 6539)
يَقُوْلُ يٰلَيْتَنِىْ قَدَّمْتُ لِحَـيَاتِىۚ
يَقُوْلُ கூறுவான், يٰلَيْتَنِىْ ‘நான் இருந்திருக்கக் கூடாதா!’ என்று கைசேதப்படுவது قَدَّمْتُ நான் முற்படுத்தி விட்டேன், لِحَـيَاتِىۚ என் வாழ்க்கைக்கு
“என்னுடைய (இந்த) வாழ்க்கைக்காக (நன்மையைச் செய்து) நான் முற்படுத்தி (அனுப்பி) இருக்க வேண்டுமே என்று அப்போது மனிதன் கைசேதப்படுவான். (89:24)
இந்த வசனத்தின் மூலம் மனிதன் மறுமை நாளில் எப்படி கைசேதப்படுவான் என்பதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான், உலக வாழ்க்கையில் மறுமைக்காக எந்த நலவையும் முற்படுத்தி வைக்காத மனிதன் ‘எனக்கு ஏற்பட்ட கை சேதமே, மறுமை வாழ்வுக்காக நன்மைகளை முற்படுத்தியிருக்கலாமே’ என்று கவலைப்படுகிற நிலையைத் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான், உண்மையில் மறுமையில் மனிதன் புலம்புவதில் என்னதான் பயன் இருக்கப் போகின்றது அல்லாஹ் கூறுகின்றான்:
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلٰى يَدَيْهِ يَقُوْلُ يٰلَيْتَنِى اتَّخَذْتُ مَعَ الرَّسُوْلِ سَبِيْلًا அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு “நம் தூதருடன் நானும் நேரான வழியைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டாமா?” என்று கூறுவான்.27, يٰوَيْلَتٰى لَيْتَنِىْ لَمْ اَتَّخِذْ فُلَانًا خَلِيْلًا (அன்றி) “என்னுடைய துக்கமே! (பாவம் செய்யும்படித் தூண்டிய) இன்னவனை நான் என்னுடைய நண்பனாக ஆக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா?28, لَقَدْ اَضَلَّنِىْ عَنِ الذِّكْرِ بَعْدَ اِذْ جَآءَنِىْ ؕ وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا நல்லுபதேசம் என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழிகெடுத்து விட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தானே!” (என்றும் புலம்புவான்.) (25:27-29)
அதேநேரம் நல்ல மனிதனாக இருந்தால் கூட அவன் அந்த மறுமை நாளில் ‘இன்னும் அதிகம் நல்லமல் செய்திருக்கலாமே’ என்று கைசேதப்படுகின்ற ஒரு நிலை இருக்கத்தான் செய்கிறது, அதைப்பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு அடியான் பிறந்த நாளிலிருந்து மரணிக்கும் வரையில் அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் விதத்தில் சுஜூதில் இருந்தாலும்கூட, மறுமை நாளில் அந்த நற்காரியத்தை அவன் சிறியதாகவே பார்ப்பான், மாறாக இன்னும் நல்லமல்களை அதிகம் செய்து இருக்க வேண்டுமே! என்று ஆசைப்படுவான். (அஹ்மத்:1756 ஸஹீஹ் தரத்தில் உள்ளது)
فَيَوْمَٮِٕذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۙ
فَيَوْمَٮِٕذٍ ஆகவே அந்நாளில், لَّا يُعَذِّبُ வேதனை செய்யமாட்டான், عَذَابَهٗۤ அவனுடைய வேதனை, اَحَدٌ ۙ ஒருவன்
அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் வேதனை செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.) (89:25)
وَّلَا يُوْثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ ؕ
وَّلَا يُوْثِقُ இன்னும் கட்டமாட்டான், وَثَاقَهٗۤ அவனுடைய கட்டுதல், اَحَدٌ ؕ ஒருவன்
(பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.) (89:26)
இந்த வசனம் மூலம், உலகத்தில் பாவங்களைச் செய்து, அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டு, மறுமையில் அவனை சந்திக்கின்ற மனிதனை அல்லாஹ், கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும், அவனை இறுக கட்டிவைப்பவன் என்பதையும் சொல்வதோடு, அவனைப் போன்று யாராலும் தண்டிக்க முடியாது, அவனைப் போன்று யாராலும் இறுகக்கட்டி வேதனை செய்ய முடியாது என்பதையும் அல்லாஹ் எச்சரிக்கையாக மனித சமூகத்திற்கு பதிவு செய்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:
وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ எவனுடைய செயல்கள் எழுதப்பட்ட ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ۙ فَيَقُوْلُ يٰلَيْتَنِىْ لَمْ اُوْتَ كِتٰبِيَه “என்னுடைய ஏடு எனக்குக் கொடுக்கப்படாதிருக்க வேண்டாமா? 25, என்னுடைய கணக்கையே இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டாமா?26, يٰلَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ (நான் இறந்தபொழுதே) என்னுடைய காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டாமா?27, مَاۤ اَغْنٰى عَنِّىْ مَالِيَهْۚ என்னுடைய பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்க வில்லையே!28, هَلَكَ عَنِّىْ سُلْطٰنِيَهْۚ என்னுடைய அரசாட்சியும் அழிந்துவிட்டதே!” என்று புலம்புவான்.29, خُذُوْهُ فَغُلُّوْهُ ۙ (பின்னர் நாம்) “அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்;30, ثُمَّ الْجَحِيْمَ صَلُّوْهُ ۙ அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும்,31, ثُمَّ فِىْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ؕ எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” என்றும் (கூறுவோம்). (69:25-32)
يٰۤاَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَٮِٕنَّةۖ
يٰۤاَيَّتُهَا ஒருவரை விழிப்பதற்காக பாவிப்பது, النَّفْسُ ஆன்மா, الْمُطْمَٮِٕنَّةُ நிம்மதியடைந்தது,
(எனினும், அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) “திருப்தியடைந்த ஆத்மாவே! (89:27)
ارْجِعِىْۤ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً ۚ
ارْجِعِىْۤ திரும்பி செல், اِلٰى பக்கம், رَبِّكِ உன் இறைவன், رَاضِيَةً திருப்தி அடைந்தது., مَّرْضِيَّةً திருப்தி கிடைத்தது
நீ உன் இரட்சகன் பக்கம் (அவனைத்) திருப்தியடைந்த நிலையிலும், (அவனிடம்) பொருந்திக் கொள்ளப்பட்ட நிலையிலும் மீள்வாயாக! (என்றும்) (89:28)
فَادْخُلِىْ فِىْ عِبٰدِىۙ
فَادْخُلِىْ இன்னும் நுழைந்துவிடு, فِىْ عِبٰدِىۙ என் அடியார்களில்
“நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, (89:29)
وَادْخُلِىْ جَنَّتِى
وَادْخُلِىْ இன்னும் நுழைந்து விடு, جَنَّتِى என் சொர்க்கத்தில்
என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு” (என்றும் கூறுவான்). (89:30)
இந்த வசனங்கள் மூலம் உலக வாழ்க்கையில் நல்லறங்கள் புரிந்து, அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த அந்த நல்ல மனிதர்களுக்கு அல்லாஹ் சொல்லுகின்ற நற்செய்திகளை குறிப்பிடுகின்றான், அந்த நல்ல உள்ளங்கள் அல்லாஹ் கொடுத்தவற்றில் திருப்தி அடையக் கூடிய நிலையிலும், அல்லாஹ்வுடைய திருப்தி அவர்களுக்கு கிடைத்த நிலையிலும், நல்லடியார்களோடு சேர்ந்து சுவனத்தில் நுழைவார்கள் என்பதுதான் அந்த நல்ல செய்தி. அல்லாஹ் இந்த பாக்கியத்தை எழுத்தாளனாகிய எனக்கும், வசிக்கும் உங்களுக்கும் வழங்குவானாக!
சூரா பஜ்ரின் விளக்கம் முற்றும். அல்ஹம்து லில்லாஹ்