PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும்!!!
தலாக், ஓர் இஸ்லாமிய பார்வை!
தலாக் எதற்காக!
திருமணம் என்பது எதற்காக என்று சிந்தித்து, அதற்கு சரியான பதிலைக் கண்டால் தலாக் என்பதை புரிவது இலகுவாக இருக்கும்.
இன்றைய உலகில் திருமணம் என்பது சடங்காகவும் சம்பிரதாயமாகவும் மேற்கொள்ளப்படுவதனால் என்ன நெருக்கடி ஏற்பட்டாலும் அதனை கட்டிக்காக்க வேண்டும் என்றே நினைக்கின்றார்கள். அதனால் தான் ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ என்று கூறி கணவன் என்ன செய்தாலும் அதை ஒரு மனைவி மீறக்கூடாது என்று சில மதங்கள் சட்டம் விதித்தன.
அதன் விளைவு கணவனிடம் இருந்து ஒரு பெண் தன்னை கலட்டிக்கொள்ள முடியாது என்கின்ற நிலைக்கு சென்றது.
இஸ்லாமும் திருமணமும்;
இஸ்லாம் திருமணத்தை ஒரு வகையில் மனிதனின் இயல்பு வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தியிருந்தாலும் அதனை ஒரு வணக்கமாக கருதுகின்றது, அதன் மூலமே மனிதன் பரிபூரண முஸ்லிமாக முடியும் என்பதையும் எடுத்துரைக்கின்றது, பிரமச்சாரத்தை தேர்வுசெய்யமுடியாது என்றும் சொல்கின்றது.
நபிகளார் காலத்தில் ஒரு நபித்தோழர் நான் திருமணமே முடிக்காமல் (அல்லாஹ்வுக்காக) வாழப்போகிறேன் என்று சொன்ன போது, நபியவர்கள் ‘உங்களில் அதிகம் அல்லாஹ்வை பயப்படும் நானும் திருமணம் முடித்து வாழ்க்கை நடத்துகின்றேன், எனவே எனது வழிமுறையை யார் வெறுக்கின்றாரோ அவர் என்னை சார்ந்தவரல்ல’ என்று கூறினார்கள் (புஹாரி:5063,முஸ்லிம்)
இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதோருக்கும், அவ்வாறே ஸாலிஹான உங்கள் அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.24:33 விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் – அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை – அவர்கள் ஒழுக்கம் பேணட்டும்…. (24:32,33)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில், திருமணத்திற்கு சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்.’ (புஹாரி: 1905,5065, முஸ்லிம்)
அடுத்து, இஸ்லாம் திருமணத்தை மனித வாழ்க்கையின் சந்தோசத்திற்காகவும் மகிழ்சசிக்காகவும், நல்லதோர் குடும்பம் உருவாகவேண்டும் என்பதற்குமே வைத்திருக்கின்றது.
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறும் பொருட்டு, (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே நேசத்தையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக, அவளுடைய அழகிற்காக, அவளுடைய மார்க்கத்திற்காக. எனவே, மார்க்கப் பற்று உடையவளை தேர்வுசெய்துகொள், உன் கைகள் மண்ணைத்தோடும் (வாழ்வில் செழிப்படைவாய்.) (புஹாரி: 5090, முஸ்லிம்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பயணம், வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்.’ (புஹாரி: 1804,3001, முஸ்லிம்)
எனவே இஸ்லாத்தில் குடும்ப வாழ்க்கை என்பது, சந்தோசம் மகிழ்ச்சி மிக்கதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது (அதனை இஸ்லாமிய குடும்ப வாழ்வு என்ற பகுதியில் விரிவாக பார்க்க முடியும்), எப்போது அது இல்லாமல் போகுமோ அந்தநேரம் அதனை மீட்கும் முயற்சியில் இஸ்லாம் ஈடுபடும், முடியாத போது அவ்விருவரையும் பிரிந்து செல்லுமாறு இஸ்லாம் கூறும், அதற்கு பல வழிகளை இஸ்லாம் வைத்துமிருக்கின்றது ,அதற்கே சுருக்கமாக தலாக் என்கிறது இஸ்லாமிய சட்டக்கலை. அதில் ஆண்களுக்கு போன்றே பெண்களுக்கும் இஸ்லாம் உரிமையை கொடுத்திருக்கின்றது.
இங்கு விளங்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால்; எடுத்த எடுப்பில் தலாக் என்ற முடிவுக்கு இஸ்லாம் போக சொல்லவில்லை அதற்கு நல்ல அழகான வழிமுறைகளை காட்டியுள்ளது.
இப்படியொரு உரிமை, வாழ்க்கையில் ஈடுபடும் ஒருவருக்கு கொடுக்கப்படவில்லை என்றால் அங்கு அநியாயங்கள், உரிமை மீறல்கள், சண்டை சச்சரவு, கொலை, நீதிமன்றம் என்று குடும்ப வாழ்க்கை சீரழியும், அதனை உலகில் கண்கூடாக பார்க்கின்றோம், கேள்விப்படுகின்றோம்.
இன்று கணவன் மனைவியை, மனைவி கணவனை கொலை செய்யும் எத்தனை செய்திகளை கேள்விப்படுகின்றோம், இதற்கெல்லாம் கரணம் இந்த உரிமை சரியாக கொடுக்கப்படவில்லை என்பதே, அப்படித்தான் நீதிமன்றங்கள் ஊடாக கொடுக்கப்பட்டாலும் அதற்கு எடுக்கும் கால அளவும், கேட்கப்படும் கேள்விகளும் மனித சமூகத்தை அழிவை நோக்கியே கொண்டு செல்லும்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு பெண்மணி எவ்வளவு கெட்டவளாக இருந்தாலும் கண்ணெதிரே விபசாரம் செய்தாலும் அவளை கொலை செய்யும் உரிமையை கணவனுக்கு கொடுக்கவில்லை, மாறாக அவளை விட்டு ஒதுங்கலாம் என்பதே இஸ்லாமிய தீர்வு.
ஸஹ்ல் இப்னு ஸஃத்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனைக் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப் பழியாக) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டார். அப்போது அல்லாஹ் அந்தக் கணவன் மனைவி தொடர்பாகக் குர்ஆனில் தான் கூறியுள்ள ‘லிஆன்’ எனும் சாப அழைப்புப் பிரமாணச் சட்டத்தை அருளினான். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அம்மனிதரிடம், ‘உம்முடைய விஷயத்திலும், உம்முடைய மனைவி விஷயத்திலும் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள். பிறகு அந்த (கணவன், மனைவி) இருவரும் ‘லிஆன்’ செய்தார்கள். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதர் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார். (அன்றிலிருந்து) அந்த நிகழ்ச்சியே ‘லிஆன்’ செய்யும் கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பதற்கு முன்மாதிரியாகிவிட்டது…. (புஹாரி: 4746, 5259, முஸ்லிம்)
அல்லாஹ் கூறுகின்றான்:
….எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.4:35. (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் – நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான். (4:34,35)
இந்த வசனத்தில் குடும்பப் பிரச்சினைகளை எப்படி தீர்க்க வேண்டும் என்று அல்லாஹ் அழகான வழிகாட்டல்களை காட்டுகின்றான்;
கணவனுக்கு மனைவி கட்டுப்படுவதில்லை என்றால்;
முதல் கட்டம், புத்திமதி சொல்வது, அறிவுரை செய்வது, இரக்கமுள்ள கணவனின் அறிவுரை எடுபட வேண்டும் என்பது உலகம் அறிந்த உண்மை, இல்லையென்றால் அங்கு இரக்கம் இல்லை என்றாகிவிடும், அப்போது கூட விவாகரத்து அல்ல,
அடுத்த கட்டம், ஒரே படுக்கையில் அவளை ஒதுக்கி வைப்பது, இரக்கமுள்ள, பாசமுள்ள ஒரு மனைவி கணவன் மறுபக்கம் திரும்பி தூங்குவதை விரும்பமாட்டாள், நீ எப்படி தூங்கினால் எனக்கென்ன என்று மனைவி இருப்பாலாக இருந்தால் எந்த உள்ளம் இதனை ஏற்கும், நல்லதோர் கணவனை மதிக்கும் மனைவி இப்படி இருப்பாளா, அப்படி இருந்தால் கூட உடனே விவாகரத்து இல்லை, மாறாக
அடுத்த கட்டம், அவளுக்கு பாதிப்பு வராத அளவு அடித்து பார்க்கட்டுமாம், எதற்கு சகோதரர்களே இப்படி அடிக்க சொல்கின்றது இஸ்லாம், இதுவும் அவளது இரக்கத்தை பாசத்தை பரிசோதிக்கவே, கணவன் மனைவியாக வாழும் ஒவ்வொரு சாமானியனுக்கும் தெரியும், நல்லதோர் மனைவி இரக்கமுள்ள தன் கணவன் அடிப்பதை ஒரு போதும் விரும்பமாட்டாள், அப்படித்தான் அடித்துவிட்டாலும் அதனை அந்த நல்ல உள்ளம் தாங்காது, கணவன் அடிக்க மனைவியும் திருப்பி அடிப்பவளாக, அல்லது கண் களங்காதவளாக இருந்தால் அவள் எப்படி வாழ்வதற்கு தகுதியானவளாக இருப்பாள், சாதாரண சிந்திக்கும் ஆற்றல் உள்ளவனே சிந்தித்தால் புரிந்து கொள்வான். இப்பொழுது கூட தலாக் விவாகரத்து கிடையாது, மாறாக.
அடுத்த கட்டம், இவ்வளவு அணுகியும் அவளிடம் மாற்றம் இல்லை என்றால், இரு குடும்ப உறுப்பினர்களையும் நிறுத்தி சமாதானம் பேச வேண்டுமாம், நல்லிணக்கம் கண்டாலோ, அவளிடம் மாற்றம் கண்டாலோ வாழ்க்கையை தொடரலாம், இல்லை என்றால்தான் தலாக் என்ற விவாகரத்து இடத்திற்கு ஒரு ஆண் போக வேண்டுமே அல்லாமல் எடுத்தேன் பிடித்தேன் என்று முடிவு எடுப்பதல்ல.
இப்படி தலாக் சொல்லப்பட்டால் கூட, ஒரு தலாக் சொல்லப்பட்டவுடன் கட்டாய பிரிவு ஏற்படாது , மாறாக அந்த மனைவி அந்த கணவன் வீட்டில்தான் மூன்று மாதங்கள் (இத்தா காலம் பற்றிய விளக்கம் பின்னர் எழுதப்படும்) முடியும் வரை இருக்க வேண்டும், அவளுக்கு செலவு செய்வதே அந்த கணவனின் கடமைதான், ஏன், அந்த காலத்தில் மனைவியிடம் நல்ல மாற்றத்தைக் கண்டால் “உன்னை திருப்பி மனைவியாக எடுக்கின்றேன்” என்ற ஒரு வார்த்தை மூலம் மனைவியாக ஆக்கிக் கொள்ளலாம். அதற்காக சாட்சியையும் வைக்க சொல்கின்றது இஸ்லாம். அந்த காலம் முடிந்தால் கூட ,பிறகு நல்ல மாற்றத்தைக் கண்டால் அவளையே மறுமணம் முடித்து வாழலாம். இப்படி பார்த்தால் இஸ்லாமிய வழிகாட்டல் எத்தனை நன்மை பயக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.
உண்மையில் தலாக் என்பதும் இத்தா காலம் என்பதும் அது சரியாக நிறைவேற்றப்படும் போது அவ்விருவரிடையே புரிந்துணர்வு இருக்கின்றதா என்பதை பரிசோதிக்க வேண்டும் என்பதற்கும், கணவனுக்கு மனைவியின் பெறுமதியும், மனைவிக்கு கணவனின் பெறுமதியும் விளங்க வேண்டும் என்பதற்குமே இஸ்லாம் வைத்திருக்கின்றது என்பதை புரியலாம்.
இப்படி ஒரு பெண் திருந்தி மீண்டும் வாழ்க்கை போகிற நேரம் மீண்டும் அந்த மனைவியிடம் முரண்பாட்டைக் கண்டால் முன்னால் சொல்லப்பட்ட அதே அமைப்பில் அவளை திருத்த முயல வேண்டும் முடியாதபோது, மீண்டும் இரண்டாவது தலாக்கை பாவிக்கலாம், பிறகு கணவன், வீட்டிலேயே அவன் செலவிலேயே முன்னர் சொல்லப்பட்டது போன்று இத்தா இருக்கலாம், அந்த காலத்தில் மாற்றம் விளங்கினாள் மீண்டும் முன்னர் சொல்லப்பட்டது போன்று மனைவியாக எடுக்கலாம், அதற்காக சாட்சியையும் வைக்க சொல்கின்றது இஸ்லாம். காலம் முடிந்தால் மீண்டும் முறையாக திருமணம் செய்து வாழலாம்,
மீண்டும் வாழ்க்கையில் முறுகல் நீடிக்கின்றது என்றால் அப்போது கணவன் மூன்றாவது முறை தலாக்கை பாவிப்பார், இப்போது தான் இருவருக்கும் இடையில் கட்டாய, தொடர் பிரிவு ஏற்படும், உடனே அந்தப் பெண் தன் வீட்டுக்கு செல்ல வேண்டும், அவருக்கு கணவனின் செலவும் கிடைக்காது, இனி அந்த இத்தா காலத்தில் சேர விரும்பினாலோ, காலம் முடிந்த பின் மறுமணம் முடிக்க விரும்பினாலோ சாதாரணமாக அது முடியாது என்கிறது இஸ்லாம். அப்படி மூன்றாவது தலாக் பாவித்த பிறகும் சேர்ந்து வாழ விரும்பினால், அந்தப் பெண் வேறு ஒரு திருமணம் முடித்து, அவரோடு வாழ்ந்து விடுபட்டால் பிறகு விரும்பினால் முடிக்கலாம். அந்த திருமணம் என்பது வெறுமனே முந்தைய கணவனை ஆகுமாக்கிக் கொள்வதற்காக அல்ல, மாறாக அவரோடு இல்லற வாழ்க்கை நடத்தாத வரை மீண்டும் முதலாவது கணவனுக்கு ஆகுமாகாது.
மனித உள்ளங்களை புரிந்த அல்லாஹ் இவ்வளவு அழகானதொரு வாழ்க்கை நெறியைக் காட்டித்தந்தும் அந்த அல்லாஹ்வையும், அவனது வழிகாட்டலான இஸ்லாத்தையும் ஒருவன் குறை சொல்வானாக இருந்தால், ஒன்றில் அவனுக்கு இஸ்லாம் தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவனாக, அல்லது மனநோய் உள்ளவனாக இருக்க வேண்டும்.
தலாக் பற்றிய விளக்கத்திற்கான ஆதாரங்களை பாப்போம்;
தலாக் என்பது இரண்டு முறைகள் தாம் கூறலாம் – பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;;…. (2:230)
(மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை-இத்தா-முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்; அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்; ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்; அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்; இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்; எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்;… (2:231)
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள்; உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது; இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். (2:232)
நபியே! நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது; இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.65:2. ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள்; அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்; மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது – தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். (65:1,2)
உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் (“இத்தா”விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள்,… (65:6)
மீட்ட முடியாதபடி – (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து – அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் – மனைவி சேர்ந்து வாழ நாடினால் – அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (2:230)
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: ரிபாஅதல் குரழீ (ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் ரிபாஆவிடம் (அவரின் மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். எனவே, நான் அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்களை மணந்தேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானை முனைப் போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ ரிபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதையை உன் கணவரான) அவரின் இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உன்னுடைய இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது’ என்று கூறினார்கள். (புஹாரி: 2639, 5269, முஸ்லிம்)
வேறு எதற்காக இந்த தலாக்கை இஸ்லாம் வலியுறுத்துகின்றது;
- இன்று சில கணவன் மார்கள் பெயரளவில் கணவனாக இருக்கின்றார்கள், மனைவிக்கு செய்யவேண்டிய உடற் கடமையை நிறைவேற்றுவதில்லை, சில கணவன் மார் ‘உன்னோடு நான் சேர மாட்டேன்’ என்று சத்தியமும் செய்கின்றனர், (இதற்கு அரபியில் ஈலாஃ எனப்படும்) இன்னும் சிலர் வீட்டு பக்கமே வருவதில்லை இப்படியெல்லாம் மனைவி மார்களை கொடுமைப்படுத்துகின்றனர். இப்படி மனைவி மார்களை பிரிந்திருப்போருக்கு இஸ்லாம் விதிக்கும் கால எல்லை நான்கு மாதங்கள் தான், நான்கு மாதம் ஆகிவிட்டால் ஒன்றில் அவர்கள் மனைவியோடு வாழ வரவேண்டும், இல்லையென்றால் அவர் கட்டாயம் தலாக் சொல்ல வேண்டும். சீதனக் கொடுமை உள்ள நாட்டில் வேண்டுமானால் விதவைக்கு வாழ்க்கை இல்லாமலிருக்கலாம், பெண்களுக்கு மஹர் கொடுக்கப்படும் சமூகத்தில் பெண்களுக்கு தாராளமாக வாழ்க்கை இருக்கின்றது. அப்படி அவள் விடுவிக்கப்பட்டால் வேறு ஒரு ஆண் வாழ்க்கை கொடுக்கப்போகின்றான். தன்னை மதிக்காத ஆணோடு இப்படி வாழ்ந்து கஷ்டப்படுவதை விட வேறு வாழ்க்கையை அவள் தேடிக்கொள்ளலாம் என்பதற்கே இஸ்லாத்தின் அழகான வழிகாட்டல். அல்லாஹ் கூறுகின்றான்:
தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது; எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.2:227. ஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் – நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (2:226, 227)
ஈலாஃ எப்போது நிறைவேறும்;
இப்னு அப்பாஸ் (ரலி) இன்னும் சில அறிஞர்கள் கோபத்தின் போது சத்தியம் செய்தாலே ஈலாவாக அமையும் என்கின்றனர்,
இப்றாஹீமுன் நகஈ , இப்னுசீரீன் போன்ற அறிஞர்கள் கோபத்திலோ, திருப்தியான நிலையிலோ அப்படி சத்தியம் செய்து விட்டால் அது ஈலாவாக ஆகிவிடும் என்று கூறினார். அல்லாஹ் பொதுவாக சொல்லியிருப்பதனால் பொதுவாகவே அதனை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கருத்தே சரியாகும்.
ஈலாஃ செய்தவரின் நான்கு மாத காலம் முடிந்துவிட்டால் ஒன்றில் சேரவேண்டும், அல்லது தலாக் சொல்ல வேண்டும்.
நாபிஃ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ குறிப்பிட்டுள்ள ‘ஈலாஃ’ எனும் சத்திய விஷயத்தில் இப்னு உமர்(ரலி), ‘அந்த (நான்கு மாத கால) தவணை முடிந்துவிட்ட பின்னால் அல்லாஹ் உத்திரவிட்டிருப்பதைப் போன்று ஒருவர் நல்ல முறையில் (தம் மனைவியைத்) தம்மிடம் வைத்துக் கொள்ள வேண்டும்; அல்லது அவளை மணவிலக்குச் செய்ய உறுதியான முடிவு செய்திடவேண்டும். இதைத் தவிர வேறெதற்கும் அனுமதியில்லை’ என்று கூறுவார்கள்.
மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நான்கு மாதம் முடிந்துவிட்டால், கணவன் மணவிலக்குச் செய்யும் வரை (முடிவு) நிறுத்திவைக்கப்படும். கணவனாக மணவிலக்குச் செய்யும் வரை (ஈலாவின்) மணவிலக்கு நிகழாது.
இதே கருத்து நபித்தோழர்களில் உஸ்மான், அலீ, அபுத்தர்தர், ஆயிஷா(ரலி) மேலும் பன்னிரண்டு பேரிடமிருந்து அறிவிக்கப்ட்டுள்ளது. (புஹாரி: 5290,5291)
அதேநேரம், ஈலாஃ செய்தவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் மனைவியோடு சேரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அவர் சத்தியத்தை முறித்து, அதற்கு காப்பாராவும் கொடுக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு சத்தியம் செய்து விட்டு, அதல்லாத வேறொன்றை அதை விடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சத்தியத்தை முறித்து, பரிகாரம் செய்துவிட்டு, அந்தச் சிறந்ததையே அவர் செய்யட்டும். (முஸ்லிம்:3396,3397)
- இதே போன்று பல மனைவிமார்களை வைத்திருப்பவர் நீதமாக நடக்க முடியாத நிலையைக் கண்டால் அவரும் கட்டாயம் ஒருவரை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை விடவேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்;
ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)
(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்தல் சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.4:130. (சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (4:129,130)
குறிப்பு: சீதனக் கொடுமையில் தாண்டவமாடும் சமூகத்தில் விவாகரத்து என்பது ஒரு கஷ்டமான விடயமாகவே விளங்கும், ஏனெனில் விடுபட்டவள் எப்படி சீதனம் கொடுத்து இன்னொருவரை முடிப்பாள் என்பதே, ஆனால் இஸ்லாத்தில் அதற்கும் தீர்வு இருக்கின்றது, திருமணத்திற்கு முன்னரே பெண்களுக்கான மஹர் தீர்மானிக்கப்படவேண்டு, தீர்மானிக்கும் உரிமையும் அந்த பெண்ணுக்கே இருக்கின்றது, அது அவளுக்கே உரிய சொத்து, கணவன் விட்டுவிட்டாலும் பரவாயில்லை, பணம் உள்ள பெண்ணை தேடி எத்தனை மாப்பிள்ளை வரப்போகின்றார்கள். இஸ்லாத்தை நடைமுறைப் படுத்துவோருக்கே இஸ்லாமிய சட்டம். (இவ்வளவு அழகான வழிகாட்டலை காட்டித்தந்த அல்லாஹ் தூய்மையானவன்)
மனைவிக்கு உள்ள விவாக விலக்குரிமை;
கணவனுக்கு தலாக் எனும் விவாகரத்து உரிமை என்றால், பெண்ணுக்கு கணவனை பிடிக்காத போது என்ன சட்டம் என்பது இயல்பான கேள்வி, இதற்குத்தான் இஸ்லாம் “குல்உ” என்ற பெண் விவாகரத்து கேட்டு எடுக்கும் முறையை இஸ்லாம் வைத்திருக்கின்றது. ஒரு பெண்ணுக்கு கணவனை பிடிக்கவில்லை என்றால் அந்தப் பெண் நீதிவானிடம் சென்று முறைப்பட்டால், இஸ்லாமிய சட்டப்படி அந்த நீதவான் கணவனை அழைத்து ஒரு தலாக் சொல்லச் சொல்லி, மஹரையும் திருப்பி வங்கிக் கொடுத்து, அல்லது இருவரும் விரும்பும் ஒன்றை பகரமாக கொடுத்து இருவரையும் பிரித்து விடுவார். இங்கு யாருக்கும் பெண்ணை வாழுமாறு நிர்ப்பந்திக்க முடியாது இதுவே இஸ்லாமிய சட்டம்.
இங்கு ஒரு கேள்வி எழலாம், ஒரு ஆண் அவனாக தலாக் விவாகரத்து செய்யலாம், ஆனால் ஒரு பெண் ஏன் நீதிபதியிடம் செல்ல வேண்டும், ஆண் வர்க்கம் எப்போதும் அதிகாரத்தையே பயன்படுத்துவார்கள், இது உலகில் நாம் பார்க்கும் உண்மை, அவன் பெண்ணின் நலவுக்காக தலாக் சொல்ல மறுக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம், எனவே எங்கு சென்றால் தனது உரிமை கிடைக்குமோ அங்கு சென்று உரிமையை கேட்க சொகில்றது இஸ்லாம். பெண்களின் உரிமையையே பறித்து, வெறும் ஆபாசக் காட்சியாக பெண்ணை பாவிக்கும் இந்த அநியாயக்கார உலக தலைமை, பெண்களுக்கு எங்கே நியாயம் வழங்கப் போகிறது.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்’ என்று கூறினார். அப்போது, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?’ என்று கேட்டார்கள் அவர், ‘ஆம் (தந்து விடுகிறேன்)’ என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), ‘தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!’ என்று கூறினார்கள். (புஹாரி: 3273,5276)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் செய்தி ‘இக்ரிமா’ அவர்கள் நேரடியாக அறிவிக்கும் முர்ஸல் செய்தியாக வந்திருக்கின்றது (புஹாரி:5274) இந்த ஹதீஸை நுணுக்கமாக ஆய்வு செய்த பலரும் இது முர்ஸல் என்பதற்கே நெருக்கமாக உள்ளது என்று கூறியுள்ளார்கள், இதனை புஹாரி இமாமவர்களும் புஹாரியின் 5273 வது இலக்க ஹதீஸின் கடைசியில் ‘இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் இந்த ஹதீஸில் ‘முதாபஆ’ (அறிவிப்பாளர் தொடரில் ஒற்றுமை இல்லை.)’ என்று கூறுவதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். இதே செய்தி முஅத்தா மாலிகில் ‘அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான்’ அவர்கள் வழியாக பலமாக முத்தஸிலாக வந்திருக்கின்றது. அபூதாவூதிலும் (2227) இதே தொடரில் பதியப்பட்டுள்ளது.
ஹபீபா பின்த் ஸஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் ஸாபித் பின் கைஸ் அவர்களுக்கு மனைவியாக இருந்தார்கள், (ஒரு நாள்) நபியவர்கள் சுப்ஹு தொழுகைக்கு வரும் போது, வாயில் ஓரத்தில் இருளில் அவர் நின்று கொண்டிருப்பதைக் காணவே, ‘இது யார்’ என நபியவர்கள் கேட்க, அல்லாஹ்வின் தூதரே நான் ஹபீபா என்று கூறவே, ‘என்ன விடயம்’ என்று நபியவர்கள் கேட்க, ‘நானும், ஸாபித் அவர்களும் கணவன் மனைவியாக (வாழ விரும்ப) வில்லை, என்று கூறினேன். அவளது கணவன் ஸாபித் அவர்கள் வந்த போது நபியவர்கள், அவரைப் பார்த்து, ‘இதோ ஹபீபா, அவர் அல்லாஹ் நாடிய அளவு சொல்லவேண்டியதை சொல்லிவிட்டார்கள்’ என்றதும், ஹபீபா அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே அவர் எனக்கு தந்த அனைத்தும் என்னிடம் இருக்கின்றது.’ என்று கூறினார்கள், எனவே நபியவர்கள், ஸாபித் அவர்களை பார்த்து,’ அவற்றை அவரிடமிருந்து எடுங்கள்’ என்றார்கள், அவர் அதனை எடுக்கவே, ஹபீபாவாகிய அவர்கள் தனது குடும்பத்தில் சேர்ந்துவிட்டார்.
கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா(ரலி) அவர்கள் கூறினார்கள்: கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள். (புஹாரி: 5138,6945)
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ‘அப்பாஸ் அவர்களே! முகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?’ என்று கேட்டார்கள். (முகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் (பரீராவிடம்) ‘முகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?’ என்று கேட்டார்கள். அதற்கு பரீரா ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு தாங்கள் கட்டளையிடுகிறீர்களா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘இல்லை’ நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்’ என்றார்கள. அப்போது பரீரா, ‘(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை’ என்று கூறிவிட்டார். (புஹாரி: 5283)
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். (2:229)
குறிப்பு: சிலவேளை பெண்ணாக விரும்பி பிரிந்தால் மஹரை திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பது சிலருக்கு அநியாயமாக தென்படலாம், கணவனாக தலாக் சொன்னால் இத்தா காலத்தில் அவன் செலவழிக்க வேண்டும், மஹரை திரும்ப எடுக்கக்கூடாது என்று சட்டம் விதித்த அல்லாஹ் ஒரு போதும் தன் தீர்ப்பில் அநியாயம் செய்ய மாட்டான். மஹரென்பது கணவன் மனைவிக்கு கொடுக்கும், மனைவியாக தொகை தீர்மானிக்கும் ஒரு சொத்து, எடுக்க வேண்டிய சொத்தை எடுத்துக் கொண்டு கணவனை கை கழுவி விடக்கூடாது என்பதற்கே மஹரை திருப்பி செலுத்த வேண்டும் என்று சொல்கிறது இஸ்லாம். (இவ்வளவு நேர்த்தியான வழியைக் காட்டித் தந்த அல்லாஹ் தூய்மையானவன்)
ளிஹார் எனும் விவாகரத்து;
அடுத்து கணவன் மனைவியின் வாழ்க்கையில் எந்த அளவு புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்றால் வாழ்க்கையில் வரும் சர்ச்சைகளின் போது ஒரு கணவன் தன் மனைவியை தாய்க்கு ஒப்பானவள் என்று கூறிவிடக்கூடாது. ஏனெனில் தாய் என்பவள் மகனால் திருமணம் முடிக்கப்படக்கூடாதவள், எனவே அப்படி திருமண வாழ்வில் தாய்க்கு ஒப்பிடுவதை கடுமையான குற்றமாக கருதுகிறது இஸ்லாம். அப்படி சொல்லிவிட்டால் அதற்கு தீர்வையும் இஸ்லாம் காட்டித் தருகின்றது. இதற்கு இஸ்லாமிய வழக்கில் ‘ளிஹார்’ என்று சொல்லப்படும்.
“உங்களில் தம் மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டு (நீ என் மீது என் தாயைப் போன்றவள் எனக்) கூறிவிடுகிறார்களே அத்தகையோர் (ஒப்பிட்டுக் கூறப்பட்ட மனைவியரான) அவர்கள் (ஒப்பிட்டுக் கூறிய) அவர்களுடைய தாய்மார்களல்லர், அவர்களைப் பெற்றெடுத்தார்களே அத்தகையோரைத் தவிர, (வேறு எவரும்) அவர்களுடைய தாய்மார்களல்லர், மேலும், நிச்சயமாக அவர்கள் சொல்லால் வெறுக்கத்தக்கதையும், பொய்யையும் கூறுகின்றனர், மேலும், நிச்சயமாக அல்லாஹ் (குற்றங்களை) மிகவும் பொறுப்பவன், மிக்க மன்னிப்பவன்.58:3. மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் – மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.58:4. ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் – வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (58:2,3,4)
இங்கு அல்லாஹ் சொல்வது; ஒருவர் தன் மனைவியை தன் தாய்க்கு ஒப்பாக்கிவிட்டால், அவ்விருவரும் மீண்டும் இல்லறத்தில் ஈடுபட முடியாது, அப்படி விரும்பினால் அவர்கள் அதற்கான காப்பாரா குற்றப் பரிகாரத்தை செய்ய வேண்டும்.
அவர்கள் சேர முன்னர் ஓர் அடிமையை உரிமை விடுதல், அடிமை கிடைக்காத போது தொடர்ச்சியாக அறுபது நோன்புகள் பிடிக்க வேண்டும், அதுவும் முடியாது என்றால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால், இன்று இது எம்மத்தியில் இல்லாவிட்டாலும் அன்றைய காலத்து அரபுகளிடத்தில், மனைவியை வெறுத்து தாய்க்கு ஒப்பாக்கும் நிலை இருந்தது. அதனால் இஸ்லாம் குடும்ப வாழ்வில் அந்த அளவு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் விரும்புகின்றது, சண்டை சச்சரவுகள் வாழ்க்கையில் வரலாம், அது ஒருவரை ஒருவர் வெறுக்கும் அளவுக்கு போக்காக கூடாது என்பதே.
லிஆன் எனும் விவாகரத்து;
குடும்பவாழ்க்கையில் சந்தோசம் மகிழ்ச்சியை கட்டாயப்படுத்தும் இஸ்லாம், அதனை இல்லாமல் செய்யும் செயல்களுக்கு எதிராக எப்போதும் நல்ல வழிகாட்டல்களை காட்டும், அப்படி குடும்ப வாழ்வில் குழப்பத்தை அதிகப்படுத்தும் ஒன்றே கணவன் மனைவியின் கற்பில் சந்தேகப்படுவது.
இதனால் பல உயிர் இழப்புக்களை உலகில் காணமுடிகின்றது. கணவன் மனைவியை கொலை செய்வதும், மனைவி தனது கல்லக் காதலுடன் சேர்ந்து கணவனை கொல்வதும், இப்படி பல பிரச்சினைகள் வருவதற்கு காரணம் தீர்வு இல்லாமல் இருப்பதே.
இஸ்லாத்தை பொறுத்தவரை ஒரு பெண்ணின் கற்பில் ஒருவருக்கு சந்தேகம் வந்தால் அதனை நான்கு சாட்சிகளை வைத்து நிரூபிக்க சொல்லும், இல்லையென்றால் சந்தேகப்பட்டவரே குற்றவாளி என கருதப்படுவார்.
அதேநேரம் ஒரு கணவன் தன் மனைவி மீது பலி சுமத்துவது சாதாரணமானதல்ல, ஒருவன் தன் மனைவியில் சந்தேகப்பட்டால், அல்லது தவறாக ஈடுபடுவதைக் கண்டால் கூட அவளுக்கு அநியாயம் செய்யவோ, அவளை கொலைசெய்யவோ, அல்லது சம்பந்தப்பட்டவனை கொலைசெய்யவோ கணவனுக்கு அதிகாரம் இல்லை. அவன் கண்ணால் கண்ட காட்சிக்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு நிறுவினால் இஸ்லாமிய தண்டனை மனைவிக்கு நிறைவேறும், சாட்சி இல்லையென்றால், அவர்களுக்கு இஸ்லாம் வைத்திருப்பதே “லிஆன்” எனும் சட்டம். இதுவும் அவர்களை பிரிப்பதற்காக இஸ்லாம் வைத்திருப்பதே. ஏன் காலம் முழுக்க சந்தேகக் கண்ணுடனும், சண்டை சச்சரவுகளுடனும் வாழ்வதை விட பிரிந்து சென்று வேறு வாழ்க்கையைத் தேடி சந்தோசமாக வாழ்வதே சிறந்தது.
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.24:5. எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ – நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:24:7. ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).24:8. இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:24:9. ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்). (24:4-9)
மனைவியின் கற்பில் பலி சுமத்தி நான்கு சாட்சி இல்லையென்றால், அவன் உண்மை சொல்வதாக அல்லாஹ்வின் மீது நான்கு சத்தியங்கள் செய்து, ஐந்தாவது தடவையாக, ‘நான் பொய் சொல்வதாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என் மீது உண்டாகட்டும்’ என்று தனக்குத் தானே சாபமிட்டுக் கொள்ள வேண்டும்.
இப்படி கணவன் செய்து விட்டால் அவன் மீதுள்ள தண்டனை விடுபட்டு, பெண் குற்றவாளியாக மாறுவாள், திருமணத்தின் பின் விபச்சாரம் செய்தால் அதற்கு கல்லடித்து கொள்வதே தண்டனை, ஆனால் இங்கு நான்கு சாட்சிகள் கொண்டு நிறுவப்படாததனால், மனைவியும் அந்த தண்டனையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள, ‘அவன் பொய்யனாக இருக்கின்றான்’ என்று நான்கு தடவைகள் சத்தியம் செய்து சொல்லிவிட்டு, ஐந்தாவது தடவையாக ‘கணவன் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் என் மீது உண்டாகட்டும்’ என்று கூற வேண்டும். இப்படி செய்துவிட்டால் அவ்விருவருக்கும் இடையில் நிரந்தர பிரிவு ஏற்பட்டுவிடும்.
இப்படி ஒரு ஒழுங்கு எதற்காக, கற்பில் சந்தேகம் வந்துவிட்டாலே நின்மதியாக வாழ முடியாது, அதற்கு தீர்வு வேண்டும், இல்லையென்றால் முன்னால் சொல்லப்பட்டது போன்று மனிதன் அழிவை நோக்கி செல்வான். அதேநேரம் தீர்ப்பு பக்கசார்பானதாகவும் அநியாயமானதாகவும் இருக்கக் கூடாது.
கணவன் என்பதற்காக அவனை நம்பினால் அவன் மனைவிக்கு துரோகம் செய்து விபச்சாரியாக காட்டி இஸ்லாமிய தண்டனையைக் கொண்டு அவளை தண்டிக்க முற்படலாம், அல்லாஹ்வை பயந்த ஒரு முஃமின் அல்லாஹ்வின் சாபத்தை ஆசைவைக்கமாட்டான், எனவே நீ சொல்லும் குற்றச்சாட்டுக்கு முடிந்தால் ‘அல்லாஹ்வை சாட்சியாக வை’ என்பதே இஸ்லாத்தின் முடிவு, ஒருவன் அதற்கு தயார் என்றால் அவன் பொய்யனாக இருக்கவும் முடியாது.
அதேநேரம் அவன் மனிதனல்லவா, பொய் சத்தியம் செய்யவும் வாய்ப்பிருக்கின்றது, எனவேதான் அதனைக் கொண்டு ‘கல்லடித்துக் கொல்லுதல்‘ என்ற தண்டனைக்கு நேரடியாக செல்லாமல், மனைவியின் இறையச்சம், ஈமானின் அடிப்படையில் தீர்வு கேட்க அவளுக்கும் இஸ்லாம் சந்தர்ப்பம் வழங்குகின்றது. அவளும் அவ்வாறே சாபத்தை தன்மீது வருவித்துக் கொள்ள தயார் என்றால் அவள் பக்கமும் நியாயம் இருக்கலாம் என்பதுவே அல்லாஹ் மனிதனுக்கு, குறிப்பாக கணவன் மனைவி உறவுக்கு காட்டும் வழிகாட்டல்.
ஸஹ்ல் இப்னு ஸஃத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்கள் கூறினார்கள்: அஜ்லான் குலத்தைச் சேர்ந்த உவைமிர்(ரலி) (தம் குலத்தின் தலைவரான) ஆஸிம் இப்னு அதீ அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் வந்து, ‘ஆஸிம் அவர்களே! தம் மனைவியுடன் மற்றோர் அந்நிய ஆடவன் (தகாத உறவு கொண்டபடி) இருக்கக் கண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் என்ன கூறுகிறீர்கள்? அவன் அந்த (அந்நிய) ஆடவனைக் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால் (பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? எனக்காக இந்த விவகாரம் குறித்து ஆஸிமே! நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்’ என்று கூறினார்.
எனவே, (ஆஸிம்(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் சென்று கேட்கத் தொடங்க) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அசிங்கமாகக் கருதலானார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (கண்டன) வார்த்தைகள் ஆஸிம்(ரலி) அவர்களுக்குக் கடினமாயிற்று. ஆஸிம்(ரலி) தம் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது உவைமிர் வந்து ‘ஆஸிம் அவர்களே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன கூறினார்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு ஆஸிம்(ரலி) ‘நீ எனக்கு நன்மை செய்யவில்லை. (சிக்கலில் என்னைச் சிக்க வைத்துவிட்டாய்;) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு நான் கேட்ட இந்தக் கேள்வி பிடிக்கவில்லை’ என்று பதிலளித்தார்கள்.
அதற்கு உவைமிர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (நேரடியாக) இது குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்’ என்று கூறியபடி மக்களிடையேயிருந்த அல்லாஹ்வின் துதர்(ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார். பிறகு, ‘அவர்களை நோக்கிச் சென்றார். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் அவன் அந்த ஆடவனைக் கொல்லலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால் பழிக்குப் பழியாக) நீங்கள் அம்மனிதனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்’ என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘அல்லாஹ் உம்முடைய விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் (குர்ஆன் வசனத்தை) அருளிவிட்டான். எனவே, நீர் சென்று, உம்முடைய மனைவியை அழைத்து வாரும்!’ என்று கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும் (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். அப்போது மக்களுடன் நானும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். (தம்பதியர்) இருவரும் (லிஆன் செய்து) முடித்தபோது (கணவரான) உவைமிர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே இனியும்) வைத்திருந்தால் இவள் மீது நான் பொய்(யான குற்றச்சாட்டு) கூறியவனாக ஆகிவிடுவேன்’ என்று கூறிவிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை முத்தலாக் சொல்லிவிட்டார். (புஹாரி: 5259, முஸ்லிம்)
லிஆன் மூலம் இருவரும் பிரிந்து விட்டால் குழந்தை அந்தப் பெண்ணையே சேரும்.
இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் (உவைமிர்) தம் மனைவியின் மீது (விபசாரக்) குற்றம்சாட்டி அவளுடைய குழந்தையை (தன்னுடையதாக) ஏற்க மறுத்தார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் (‘சாப அழைப்புப் பிரமாணம்’ செய்திடுமாறு) உத்தரவிட்டார்கள். அவர்களும் (குர்ஆனில்) அல்லாஹ் கூறியுள்ள முறைப்படி (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். பிறகு, நபி(ஸல்) அவர்கள் ‘குழந்தை அப்பெண்ணிற்குரியது’ என்று தீர்ப்பளித்து, ‘லிஆன்’ செய்த (கணவன், மனைவி) இருவரையும் (மண பந்தத்திலிருந்து) பிரித்துவைத்தார்கள். (புஹாரி: 4748….)
லிஆன் செய்பவர்களுக்கு அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவதை நினைவூட்டுவது அவசியம்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: ஹிலால் இப்னு உமய்யா(ரலி) அவர்கள் தம் மனைவியை ‘ஷரீக் இப்னு சஹ்மா’ என்பவருடன் இணைத்து (இருவருக்குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘(உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும்’ என்று கூறினார்கள். அதற்கு ஹிலால்(ரலி), ‘தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். என்னுடைய முதுகைக் கசையடிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான்’ என்று கூறினார்கள். உடனே (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி, நபி(ஸல்) அவர்களுக்கு ‘யார் தம் துணைவியர் மீது அவதூறு கூறி’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:6-9) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால்(ரலி) அவர்களின் மனைவிக்கு ஆளனுப்பினார்கள். (இதற்கிடையே) ஹிலால்(ரலி) அவர்களும் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை) சத்தியம் செய்து சாட்சியமளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக்கோரி (தவறு தன்னுடையதுதான் என்று ஒப்புக்கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகிறவர் யார்?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால்(ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார். ஐந்தாம் முறையாக (சாப அழைப்புப் பிரமாணம்) செய்யச் சென்றபோது மக்கள் அவரை நிறுத்தி ‘இது (பொய்யான சத்தியமாயிருந்தால் இறை தண்டனையை) உறுதிப்படுத்திவிடும். (எனவே, நன்கு யோசித்துச் செய்!)’ என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம் செய்யத் தயங்கினார். நாங்கள் அவர் தம் பிரமாணத்திலிருந்து பின்வாங்கிவிடுவார் என்றே எண்ணினோம். ஆனால், பிறகு அவர், ‘காலமெல்லாம் என் சமுதாயத்தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவதில்லை’ என்று கூறி (சாப அழைப்புப் பிரமாணத்தைச்) செய்துமுடித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இவளைக் கவனித்து வாருங்கள். இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால், அது ‘ஷரீக் இப்னு சஹ்மா’வுக்கே உரியதாகும்’ என்று கூறினார்கள். அப்பெண் நபியவர்கள் வர்ணித்தவாறே குழந்தை பெற்றெடுத்தார். இதையறிந்த நபி(ஸல்) அவர்கள், ‘இது பற்றிய இறைச்சட்டம் (‘லிஆன்’ விதி) மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அவளைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன்’ என்று கூறினார்கள். (புஹாரி:4747,5307, முஸ்லிம்)
லிஆன் நடந்துவிட்டால் கொடுக்கப்பட்ட மஹர் திருப்பி எடுக்கப்படமாட்டாது. இல்லறத்தில் ஈடுபட முன்னரே லிஆன் நடந்துவிட்டால் அவளுக்கு தலாக்கில் இருப்பது போன்று மஹரில் அரைவாசி திருப்பி எடுக்கப்படும் என்று அதிகமான அறிஞர்கள் கூறினார்.
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொள்ளும் தம்பதியரைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட தம்பதியரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர். (இனி) அவளின் மீது (கணவராகிய) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என்று கூறினார்கள். உடனே அவர், ‘இறைத்தூதர் அவர்களே! (நான் இவளுக்கு மஹ்ராக அளித்த) என்னுடைய பொருள் (என்னாவது? அதைத் திரும்பப் பெறலாமா?)’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உமக்கு (அந்தப்) பொருள் கிடைக்காது. நீர் அவள் விஷயத்தில் (சொன்ன குற்றச்சாட்டில்) உண்மையாளராய் இருந்தால், அவளுடைய கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாம் விடும். அவளின் மீது நீர் பொய் சொல்லியிருந்தால் (அவளை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகு தூரத்தில் உள்ளது’ என்று கூறினார்கள். (புஹாரி:5312,5350, முஸ்லிம்)
விபச்சாரம் நடந்திருக்குமோ என்று சந்தேகப்பட்டு கூறுவது விபச்சார குற்றச்சாட்டாக அமையாது. அதனை வைத்து கணவனுக்கு குழந்தையை மறுக்கவும் முடியாது.
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, ‘(வெள்ளை நிறுத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான மகனைப் பெற்றெடுத்தாள்; அவனை நான் (என் மனதில்) ஏற்க மறுத்துவிட்டேன்’ என்றார். அதற்கு அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?’ என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, ‘ஆம்’ என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘அவற்றின் நிறம் என்ன?’ என்று கேட்டார்கள். அவர், ‘சிவப்பு’ என்றார். ‘அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, அவர் ‘(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன’ என்று பதிலளித்தார். ‘(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எவ்வாறு வந்ததன என்று நீ கருதுகிறாய்?’ என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, ‘ஆண் ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம், இறைத்தூதர் அவர்களே!’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘(உன்னுடைய) இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக் கூடும்’ என்று கூறி, அவன் தன்னுடையவன் அல்லன் என்று மறுக்க அந்தக் கிராமவாசியை நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. (புஹாரி: 7314,6847, முஸ்லிம்)
இனி தலாக் பற்றிய சட்டங்களை நோக்குவோம்;
இஸ்லாம் தலாக் விவாகரத்து செய்வதில் ஆர்வமூட்டுகின்றதா என்றால் இல்லை என்பதே பதில், அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு, முன்னர் பதியப்பட்ட சூரத்துன் நிஸாவின் 34 வது வசனம். நல்லிணக்க முயற்சி சரிவராத போது விவாகரத்து நோக்கி செல்வதே இஸ்லாமிய வழிகாட்டல்.
- தலாக் எப்படி செல்லுபடியாகும்;
ஒரு கணவன் தன் மனைவியை விட்டு விட்டதாக குறிக்கும் ஒரு வார்த்தையை நேரடியாக (அரபியில் ஸரீஹ் என்பார்கள்) சொல்வது அந்த சட்டத்தைக் கொண்டுவந்துவிடும். அதேபோன்று பிரிவைக் குறிக்கும் ஒருவார்த்தையை மனைவியை பிரியும் நோக்கில் சொல்லிவிட்டாலும் (இதனை கினாயா என்று அரபியில் சொல்வார்கள்) அந்த சட்டம் நிறைவேறிவிடும். நீ உனது தாய் வீட்டுக்கு போய்விடு, உன்னைவிட்டும் நான் பாதுகாப்பு தேடுகின்றேன் போன்ற வார்த்தைகளை பாவிப்பது போன்று.
- தலாக் சொல்லும் எண்ணிக்கையை வைத்து தலாக் இரண்டு வகைப்படும்;
தலாகுர் ரஜ்ஈ; இத்தா காலத்தில் மீண்டும் மனைவியாக மீட்டுக்கொள்ள முடியுமான தலாக். இது, தலாக் சொல்லப்பட்டதற்காக இத்தா இருக்கும் காலத்துக்குள் கணவன் மனைவியைப் பார்த்து ‘உன்னை நான் மனைவியாக எடுத்துக் கொள்கிறேன்’ என்று சொல்வதை குறிக்கும். இத்தா காலம் முடிந்து விட்டால் தற்காலிக பிரிவு ஏற்படும், விரும்பினால் மீண்டும் திருமணம் முடிக்கலாம். இப்படி இரண்டு தடவைகள் பாவிக்கலாம்.
தலாகுல் பாஇனா ; கட்டாய பிரிவை உண்டாக்கும் தலாக், இது, ஒரு கணவன் முன்னர் சொல்லப்பட்ட அடிப்படையில் இரண்டு தலாக் சொன்ன பின்னர் சேர்ந்து வாழும் நிலை ஏற்பட்டு, அபோது மூன்றாவது முறை மனைவியைப் பார்த்து தலாக் சொல்லிவிட்டால் கட்டாயமான பிரிவு ஏற்படும், இத்தா காலத்தில் மனைவியாக மீட்டிக்கொள்ளவும் முடியாது, பிறகு சாதாரணமாக திருமணம் முடிக்கவும் முடியாது. அப்படி அவளையே முடிக்க விரும்பினால் அந்தப் பெண் வேறு ஒருவரை திருமணம் முடித்து வாழ்ந்து, அவனும் அவளை தலாக் சொல்லிவிட்டால் திருமணம் முடிக்கலாம். (ஆதாரங்கள் முன்னர் பதியப்பட்டன)
- தலாக் சொல்லும் காலத்தை வைத்து அதனை இரண்டு வகையாக நோக்கலாம்,
தலாக் அஸ்ஸுன்னீ; குர்ஆன் சுன்னாவுக்கு நேர்பாடான தலாக், இது மாதவிடாய் இல்லாத காலத்தில், உடலுறவில் ஈடுபடாத நிலையில் நிகழும் தலாக்கை குறிக்கும். இதுவே செல்லுபடியாகும்.
தலாக் அல்பிதஈ; நபிவழிக்கு மாற்றமாக நடக்கும் தலாக், குறிப்பாக மாதவிடாய் காலத்தில், அல்லது சுத்தமான பின்னார் உடலுறவில் ஈடுபட்ட நிலையில் சொல்லப்படும் தலாக்கை குறிக்கும், இது செல்லுபடியாகாது.
இரண்டுக்குமான ஆதாரங்கள்;
நபியே! நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; … (65:1)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபிகளார் காலத்தில் அவர்களது மனைவி மாதவிடாயில் இருக்கும் போது அவர்கள் தலாக் சொல்லிவிட்டார்களாம், உமர் (ரலி) அவர்கள் அதற்காக நபிகளாரிடம் விளக்கம் கேட்கவே, நபியவர்கள்; ‘மனைவியை திரும்ப மீட்டு எடுக்குமாறும், சுத்தமாகி, மீண்டும் மாதவிடாய் வந்து பிறகு சுத்தமானால் விரும்பினால் மனைவியாக வைத்துக் கொள்ளட்டும், இல்லையென்றால் உடலுறவில் ஈடுபட முன்னர் தலாக் சொல்லட்டும், அதுவே அல்லாஹ் பெண்களை தலாக் சொல்ல சொன்ன காலமாகும்’ என்று கூறினார்கள். (புஹாரி: 5251, முஸ்லிம்)
குறிப்பு; கர்ப்பிணியாக இருந்தாலும் தலாக் சொல்ல முடியம்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது மனைவியை மாதவிடாயில் தலாக் சொல்லிவிட்டார்கள் என்று வரும் ஹதீஸில் “சுத்தமடைந்த நிலையில் அல்லது கர்ப்பிணியாக உள்ள நிலையில் தலாக் சொல்’ என்று வந்துள்ளது. (முஸ்லிம்)
மாதவிடாயின் போது சொல்லப்பட்ட தலாக் கணக்கெடுக்கப்படுமா என்றால் அதில் கருத்து வேற்றுமை இருந்தாலும் கணக்கெடுக்கப்படும் என்பதே தெளிவான ஆதாரத்திற்குற்பட்டது.
அனஸ் பின் சீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மாதவிடாயிலிருந்த என் மனைவியை நான் மணவிலக்குச் செய்து விட்டேன். ஆகவே இதுகுறித்து (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (உஙகள் புதல்வர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! என்று கூறினார்கள். அறிவிப்பாளார் அனஸ்பின் சீரின் (ரஹ்) அவர்கள் தொடாந்து கூறுகின்றார்கள்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (மாதவிடாயின்போது சொல்லப்பட்ட இந்த தலாக்) ஒரு தலாக்காகக் கருதப்படுமா என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் (தலாக்காகக் கருதப்படாமல்) வேறென்ன என்று கேட்டார்கள். (புஹாரி: 5252)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (என் மனைவி மாதவிடாய்ப் பருவத்தில் இருந்த போது நான் அளித்த) அந்த மணவிலக்கை/ நான் சொன்ன ஒரு தலாக் என்றே கணிக்கப்பட்டது. (புஹாரி: 5253)
இந்த தலாக் கணக்கெடுக்கப் படமாட்டாது என்று அபூதாவூதில் பதிவாகியிருக்கும் செய்தி பலபேரின் அறிவிப்புக்கு முரண்பட்ட செய்தி என்று அபூதாவூத் இமாமவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். (அபூதாவூத்:2185)
தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கான இத்தா காலம்;
- மாதவிடாய் வரக்கூடிய பெண்ணாக இருந்தால் அவள் மூன்று மாதவிடாய்க் காலம் இத்தா இருக்க வேண்டும்.
தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்;… (2:228)
- மாதவிடாய் வராத பெண்கள், வருவதில் சந்தேகமுள்ள பெண்கள் மூன்று மாதங்கள் இத்தா இருக்க வேண்டும்.
மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயில் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாக இருக்கவேண்டும்….. (65:4)
- கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தால் குழந்தை கிடைக்கும் வரை இத்தா இருக்க வேண்டும், கர்ப்பிணி என்று தெரிந்து விட்டால் இத்தாவில் இருந்து வெளியாகுவதற்காக அதனை மறைக்கக் கூடாது.
கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்; மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். (65:4)
…அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்ப அறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது…. (2:228)
- தலாக் சொல்லப்பட்ட பெண் கணவனோடு இல்லறத்தில் ஈடுபடாதவளாக இருந்தால் எவ்வளவு காலம் வாழ்ந்திருந்தாலும் அவள் மீது இத்தா என்ற சட்டம் இல்லை.
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமே “தலாக்” செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை – ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (33:49)
குல்உம் அதன் சட்டமும்,
குல்உ என்பது மனைவி தன் கணவனை விரும்பாத போது, கணவன் தந்த மஹரை திருப்பிக் கொடுத்து, காலி நீதிபதியிடம் பிரித்து வைக்குமாறு வேண்டுவதாகும், எனவே நீதிபதி கணவனுக்கு ஒரு தலாக் சொல்லுமாறு பணித்து, தலாக் விட்ட பின்னர் பிரித்து வைப்பார்.
அதற்காக அந்தப் பெண் ஒரு மாதவிடாயில் இருந்து சுத்தமாகும் வரை இத்தா இருப்பார்.
ஸாபித் இப்னு கைஸ் அவர்களின் மனைவி நபிகளாரின் காலத்தில் அவரிடமிருந்து பிரிந்த போது, நபியவர்கள் அவருக்கு ஒரு மாதவிடாய்க் காலம் இத்தா இருக்குமாறு ஏவினார்கள். என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ: 1185)
திர்மிதீ இமாமவர்கள் கூறினார்கள்: ‘குல்உ செய்யப்பட பெண்மணியின் இத்தா விடயத்தில் அறிஞர்கள் கருத்துவேற்றுமைப் பட்டார்கள், நபித்தோழர்களில் அதிகமானவர்களும் மற்றவர்களும் ‘இத்தா காலம் தலாக் சொல்லப்பட்ட பெண்ணைப் போன்று மூன்று மாதவிடாய் காலமே‘ என்று கூறினார், அதுவே ஸுப்யானுஸ் ஸவ்ரி இமாம், கூபாவாசிகள், அஹ்மத் இமாம், இஸ்ஹாக் இமாம் ஆகியோரின் கூற்றாக இருந்தது, மேலும் சில நாபித் தோழர்களும், வேறு சிலரும் ‘அவளது இத்தா காலம் ஒரு மாதவிடாயாகும்‘ என்று கூறினார்கள். இமாம் இஸ்ஹாக் அவர்கள் கூறினார்கள்; இந்த கருத்தின் பக்கம் ஒருவர் போவாராக இருந்தால் அது பலமான கருத்தாக இருக்கும். (திர்மிதீ)
ருபைய்யிஃ பின்த் முஅவ்விஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் நபிகளார் காலத்தில் குல்உ செய்யப்பட்டார்கள், அவர்களுக்கு நபியவர்கள் ஒரு மாதவிடாய் காலம் இத்தா இருக்க சொன்னார்கள். (திர்மிதீ: 1185) (இதே இலக்கத்தில் தான் முந்தைய ஹதீஸும் பதியப்பட்டுள்ளது)
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: குல்உ செய்யப்பட்டவளின் இத்தா ஒரு மாதவிடாய் ஆகும். (அபூதாவூத்: 2230, மவ்கூப் ஸஹீஹ்)
தலாக் சொல்லப்பட்டவர்களுக்கான செலவீனமும் வசிப்பிடமும்;
- தலாக் சொல்லப்பட்ட பெண் முதலாவது, இரண்டாவது தலாக்காக இருந்தால் அவள் கணவனின் பொறுப்பில், அவனது செலவில், அவனது வீட்டிலேயே இருக்க வேண்டும், வெளிப்படையான மானக்கேடான விடயத்தில் ஈடுபட்டாலன்றி அவள் வீட்டை விட்டு போகவும் கூடாது, அவள் வெளியேற்றப்படவும் கூடாது.
நபியே! நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது; இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர். (65:1)
- தலாக் சொல்லப்பட்ட பெண் மூன்றாவது தாலாக்காக இருந்தால் அவளுக்கு செலவீனமும் இல்லை வசிப்பிடமும் இல்லை, அவள் அவளது வீட்டுக்கு செல்ல வேண்டும். கர்ப்பிணியாக அல்லது பாலூட்டும் நிலையில் இருந்தால் கணவன் செலவு கொடுக்க வேண்டும்.
பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் கணவர்) அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் (ரலி) அவர்கள் என்னை (மூன்றாவதாக) ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி, தொலி நீக்கப்படாத சிறிதளவு கோதுமையை எனக்கு அனுப்பி வைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன். அதற்கு அந்தப் பிரதிநிதி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை (இது ஒரு உதவியாகத் தரப்பட்டதுதான்)” என்று கூறிவினார். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், “அவர் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை” என்று கூறிவிட்டு, உம்மு ஷரீக் என்ற பெண்ணின் இல்லத்தில் என்னை “இத்தா” இருக்குமாறு பணித்தார்கள். பிறகு (யோசித்துவிட்டு), “அவர் (உம்மு ஷரீக்) என் தோழர்கள் (அடிக்கடி) சந்திக்கும் பெண்மணி ஆவார். நீ (உன் தந்தையின் சகோதரர் புதல்வர்) இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) “இத்தா” இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்ற மனிதர் ஆவார். நீ உன் (துப்பட்டா) துணியை கழற்றிக்கொள்ளலாம். நீ “இத்தா”வை முழுமையாக்கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக!” என்று கூறினார்கள். (முஸ்லிம்:2953, 2954)
(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்;… (2:233)
…அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்; ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம். (65:6)
குல்உ செய்யப்பட பெண்ணாக இருந்தால் அவள் கணவனை விட்டு உடனே பிரிந்து விடுவாள், அவளுக்கு செலவு கொடுப்பதோ வீடு கொடுப்பதோ கணவனுக்கு பொறுப்பல்ல. கர்ப்பிணியாக, அல்லது பாலூட்டும் நிலையில் இருந்தால் அவனது பிள்ளை என்பதற்காக பாலூட்டும் செலவு கடமையாகும், பிள்ளையை பராமரித்தால் அந்த செலவு கடமையாகும். (அல்லாஹு அஃலம்)
இதனையே இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் உம்மு என்ற அவர்களது புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்கள். ‘எந்த தலாகில் கணவனுக்கு மனைவியை மீட்டி எடுக்கும் உரிமை இல்லையோ அதில் அவர் மீது செலவோ, குடி அமர்த்துவதோ கடமை இல்லை.’ (அல் உம்மு: 5\253) மேலும் குல்அய்யும் மீட்டி எடுக்க முடியாதது என்ற வகையிலேயே சேர்த்துள்ளார். (5\129)
மனைவி முன்னிலையில் இல்லாமலும் தலாக் சொல்லலாம்.
பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் கணவர்) அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் (ரலி) அவர்கள் என்னை (மூன்றாவதாக) ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார்…… (முஸ்லிம்,2953, முன்னர் முழுவதுமாக பதியப்பட்டது)
முத்தலாக் ஓர் பார்வை;
ஒரே தடவையில் மூன்று தலாக்கையும் சொன்னால் அது ஒன்றாகவே கணிக்கப்படும். லிஆனுக்கு மாத்திரம் தனி சட்டம் இருக்கின்றது. (முத்தலாக் என்றால்; உன்னை தலாக் சொல்லிவிட்டேன், உன்னை தலாக் சொல்லிவிட்டேன், உன்னை தலாக் சொல்லிவிட்டேன் என்று ஒரே மஜ்லிஸில் இடத்தில் சொல்வது)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. பின்னர் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள், “நிதானமாகச் செயல்பட்டு (மீட்டுக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்று) வந்த ஒரு விஷயத்தில் மக்கள் (இப்போது) அவசரம் காட்டுகிறார்கள். எனவே, அதை (முத்தலாக்கை) அவர்களுக்கெதிராக (மீட்டுக்கொள்ள இயலாதவாறு) நாம் செயல்படுத்தினால் என்ன?” என்று கூறி, அவ்வாறே அதைச் செயல்படுத்தினார்கள். (முஸ்லிம்: 2932)
அல்குர்ஆன் மிகத் தெளிவாகவே ‘தலாக் இரண்டு தடவைகள்தான்’ என்று சொல்கின்றது. (2:229)
ருகானா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் நபிகளாரிடம் வந்து, நான் எனது மனைவியை ஒரேயடியாக (அல்பத்தா) தலாக் சொல்லிவிட்டேன் என்று கூறவே, நபியவர்கள், எத்தனை தடவையை நாடினீர், என்று கேட்க, நான் ஒரு விடுத்தம் என்று கூறினேன், அப்படியானால் நீ நினைத்ததுதான் என்று கூறினார்கள். (திர்மிதீ: 1117)
இந்த ஹதீஸை புஹாரி இமாம் போன்றவர்கள் ‘முள்தரிப்’ என்று கூறுகின்றார்கள். இப்னு அப்தில் பர் அவர்கள் பலவீனப்படுத்தியுள்ளார்கள்.
உமர் (ரலி) அவர்கள் அப்படி செய்பவர்களை கண்டிப்பதற்கே அப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தார்கள் என்பது அந்த செய்தி மூலமே தெரிய வருகின்றது. எனவே அவர்கள் ஒரு காரணத்தோடு செய்தார்கள் என்பது அவர்களைப் பொறுத்தது. (அல்லாஹு அஃலம்)
எனவே தலாக் என்பது மூன்று வாழ்க்கை கட்டங்களில் நிகழ வேண்டும், ஒருவர் மனைவியோடு வாழ்ந்து அவளோடு முரண்பட்ட நிலையில் தலாக் சொல்லி விட்டால் அது எத்தனை தடவையாக இருந்தாலும் சரியே அது ஒன்றாக கணிக்கப்படும், பிறகு மீண்டும் அவளோடு வாழும் சந்தர்ப்பம் கிடைத்து மீண்டும் வாழ்க்கையில் முரண்பட்டு, தலாக் சொன்னால் இப்போது இரண்டாவது தலாக் நிகழும், பிறகு மீண்டும் அவளை மனைவியாக எடுத்து, மீண்டும் வாழ்க்கையில் முரண்பட்டு தலாக் சொன்னால் அது மூன்றாவதாக கணிக்கப்படும். இதுவே தலாக். (முன்னர் விரிவாக வந்தது)
குறிப்பு; இதில் அதிகமான அறிஞர்கள் மூன்றாக அமையும் என்று சொல்லியிருக்கின்றார்கள், அதற்கு பலமான ஆதாரங்களை பார்க்க முடியவில்லை.
கணவன், மனைவியிடத்தில் விவாகரத்து உரிமையை கொடுத்தல்.
ஒரு கணவர் தன் மனைவியைப் பார்த்து ‘நீ விரும்பினால் உன்னை தலாக் சொல்லி விடுகின்றேன்’ என்று சொன்னால் அது மார்க்கத்தில் குற்றமுமில்லை, அதனால் வாழ்க்கையில் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் துணைவியர்களான) எங்களுக்கு (விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்தார்கள். அப்போது நாங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் தேர்ந்தெடுத்தோம். இ(வ்வாறு உரிமை அளித்த)தை அவர்கள் தலாக் எனக் கருதவில்லை. (புஹாரி: 5262, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்திடுமாறு தன் தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது, நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். என்னிடம் தான் முதன் முதலாக விடயத்தைக் கூறினார்கள்: ‘(ஆயிஷாவே)! நான் உனக்கு ஒரு விடயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும் வரை அவசரப்பட வேண்டாம்’ என்று கூறினார்கள். என்னுடைய பெற்றோர் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிடப்போவதில்லை என்று நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், ‘நபியே! உம்முடைய மனைவிகளிடம்: “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன். (திருக்குர்ஆன் 33:28, 29) இரண்டு வசனங்களை முழுமையாகக் கூறினார்கள். அப்போது நான், ‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்’ என்று நபியவர்களிடம் சொன்னேன். (புஹாரி: 4785, முஸ்லிம்)
மனைவியை சகோதரியே என்று அழைத்தல்;
ஒரு கணவன் தன் மனைவியை வெறுத்து தாய்க்கு ஒப்பாக்கினால் (ளிஹார்) அது கூடாது பாவம் என்று பார்த்தோம், ஒருவன் தன் மனைவியை தன் சகோதரிக்கு ஒப்பாக்கினால் அது தடையா என்றால் அதனையும் வெறுத்து சொல்வதை தவிர்ந்து கொள்ள வேண்டும், மாறாக சாதாரண நிலையில் அப்படி சொன்னால் அது குற்றம் இல்லை. சிலர் அதுவும் ளிஹாராக கணிக்கப்படும் என்று கூறியிருந்தாலும் அது ஆதாரத்திற்கு அப்பாற்பட்டதே.
இதற்கு ஆதாரமாக அபூதாவூத்: 2210, பைஹகீ: 2211 போன்ற கிதாப்களில் பதியப்பட்ட, “நபியவர்கள், ஒருவர் தம் மனைவியை சகோதரியே என்று அழைப்பதைக் கேட்டபோது, அதனை தடுத்தார்கள்’ என்று ‘அபூ தமீம்’ வழியாக வரும் செய்தி முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் அபூதமீம் என்பவர் தாபிஈ, அவர் நபிகளாரிடம் அறிவித்ததாக வந்தால் அது முர்ஸல் வகையை சேர்ந்த பலவீனமாகவே கருதப்படும். பைஹகியின் அறிவிப்பில் அறியப்படாத நபித்தோழர் வழியாக வந்திருந்தாலும் முர்ஸல் என்பதே நம்பகமான பலமான பலர் வழியாக வந்துள்ளது.
அப்படி சகோதரி என்றால் அது குற்றமில்லை என்பதற்கு ஆதாரமாக கொண்டுவரப்பட்ட முக்கிய செய்தி இப்ராஹீம் நபியவர்கள் தன் மனைவியை சகோதரி என்று கூறிய ஹதீஸ்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ….ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள் என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார் என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள் என் சகோதரி என்று பதிலளித்தார்கள். பிறகு சாரா (அலை) அவர்களிடம் சென்று சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான் நீ என் சகோதரி என்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கி விடாதே என்று கூறினார்கள். ….. (புஹாரி: 3357, முஸ்லிம்)
உள்ளத்தால் ஒருவர் தலாக் என்று நினைத்தல்;
அப்படி ஒருவர் நினைத்தால் அது தலாக்காக கணிக்கப்பட்ட மாட்டாது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன் படி செயல்படாத வரை அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் மனதுக்குள்ளேயே தலாக் சொல்லிக் கொண்டால் அதனால் (தலாக்) எதுவும் நிகழப்போவதில்லை. (புஹாரி:2528,5269, முஸ்லிம்)
காரணமின்றி கணவனிடம் தலாக் சொல்லுமாறு கேட்டல்;
அப்படி ஒரு பெண் எந்த காரணமும் இல்லாமல் கணவனிடம் தன்னை தலாக் சொல்லுமாறு கேட்பது எச்சரிக்கப்பட்ட ஒரு விடயமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: எந்த ஒரு பெண்ணாவது எந்த காரணமுமின்றி கணவனிடம் தலாக் செய்யுமாறு கேட்பாளாக இருந்தால், அவளுக்கு சுவன வாடையே ஹராமாகிவிடும். (அபூதாவூத்: 2226, இப்னு மாஜாஹ்:2055)
அதே நேரம் காரணத்தோடு தாராளமாக கேட்கலாம், அதற்கு சில ஹதீஸ்களை முன்னர் பார்த்தோம், அதேநேரம் ‘குல்உ செய்யும் பெண்கள் நயவஞ்சகர்கள்’ என்று சில ஹதீஸ்கள் வரும் அவை அனைத்தும் பலவீனமானவையே.
தலாக் பற்றிய சில பலவீனமான ஹதீஸ்கள்:
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டதில் அல்லாஹ்வுக்கு வெறுப்பானது தலாக்’ (திர்மிதி:2178)
இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருந்தாலும் சில அறிஞர்கள் இந்த ஹதீஸை பலவீனம் என்று சொல்லியிருக்கின்றார்கள், மேலும் இதே செய்தி அபூதாவூதில் (2177) இப்னு அபீ ஷைபா (19194) முஹாரிப் அவர்கள் முர்ஸலாக ‘அவர் தாபிஈ நபிகளாரைத் தொட்டு’ அறிவித்துள்ளார். எனவே இதுவும் ளஈபாகும். ஆனால் இந்த அறிவிப்பாளர் தொடரே பலமாக இருக்கின்றது, எனவே இதனை வைத்து அபூதாவூதின் அடுத்த ஹதீஸை பலவீனப்படுத்தியிருக்கலாம். (அல்லாஹு அஃலம்) இமாம் பைஹகீ அவர்கள் இந்த செய்தியை பதிந்துவிட்டு, (14895) நபிகளாரின் செய்தியாக அறிவித்த; முஹம்மத் பின் உஸ்மானை’ சரியாக மனனமிட்டவராக கருத மாட்டேன் என்று கூறினார்கள். இதே செய்தி இப்னு மாஜாவில் (2018) ‘உபைதுல்லாஹ் இப்னுல் வலீத் அல் வஸ்ஸாபீ’ என்பவர் இடம் பெற்றுள்ளார், அவர் மிகவும் பலவீனமானவர் குறிப்பாக இவர் முஹாரிப் அவர்களை தொட்டு இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பு செய்ப்பவர் என்று ஹாகிம் இமாம் அவர்கள் கூறினார்கள். (தஹ்தீப்), ஹாகிமில் (2794) ‘முஹம்மத் பின் உஸ்மான்’ இதே கருத்தில் அவர் வழியாக பதியப்பட்டுள்ளது. அவர் பலவீனமானவராவார்.
எனவே இந்த செய்திகளை பார்க்கும் போது; இந்த ஹதீஸ் முஹாரிப் பின் திசார் அவர்கள் வழியாக இருவர் அறிவித்துள்ளார்கள், முஅர்ரிப் பின் வாஸில், உபைதுல்லாஹ் அல்வஸ்ஸாபீ, இதில் வஸ்ஸாபீ மிகவும் பலவீனமானவர் என்று பார்த்தோம்.
முஅர்ரிப் அவர்களிடமிருந்து ‘முஹம்மத் பின் காலித், ‘வகீஇப்னுல் ஜர்ராஹ்‘ ‘அஹ்மத் பின் யூசுப்‘ ஆகியோர் அறிவித்துள்ளார்கள். இம்மூவரில் முஹம்மத் அவர்கள் இப்னு உமர் அவர்கள் வழியாக நபிகளாரின் செய்தியாக பதிந்துள்ளார், மற்ற இருவரும் முஹாரிப் அவர்களின் முர்ஸலான செய்தியாக பதிந்துள்ளார்கள், அவ்விருவரும் மிக பலமானவர்கள், எனவே முர்ஸல் என்பதே மிக நெருக்கமாக உள்ளது. (அல்லாஹு அஃலம்)
முர்ஸல் என்பதையே அறிஞர்களான அபூ ஹாதம், அல்கத்தாபீ, பைஹகீ போன்றவர்கள் முடிவாக எடுத்துள்ளார்கள்.
அதேநேரம் இமாம் தாரகுத்னீ அவர்கள் (3986) முஆத் (ரலி) அவர்கள் நபிகளாரிடமிருந்து இதே கருத்தில் அறிவித்ததாக பதிந்துள்ளார். அதுவும் பலவீனமானதாகும். ஏனெனில் ஹுமைத் பின் மாலிக் என்பவர் அதில் இடம்பெற்றுள்ளார், அவர் பலவீனமானவராவார், (மீஸானுல் இஃதிதால்)
- நபிகளார் கூறியதாக அலி ரழி அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தலாக் (மனைவியை விவாகரத்து) செய்ய வேண்டாம், ஏனெனில் தலாக்கின் காரணமாக அர்ஷ் (அல்லாஹ்வின் சிம்மாசனம்) நடுங்குகின்றது. (ஆதாரம்: இப்னு அதிய் அவர்களின் காமில், 5/112, கதீப் அவர்களின் தாரீகுல் பாக்தாத், 12/191, இப்னுல் ஜவ்ஸி அவர்களின் மவ்லூஆத் 2/277.
இதனை அலி ரழி அவர்களிடமிருதிந்து நஸ்ஸால் பின் ஸபுரா என்பவரும், அவரிடமிருந்து ளஹ்ஹாக் அவர்களும், அவரிடமிருந்து ஜுவைபிர் என்பவரும், அவரிடமிருந்து அம்ர் பின் ஜுமைஃ வழியாக பதியப்பட்டுள்ளது.
இப்னு ஜவ்ஸி அவர்கள் கூறினார்கள்; ‘இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும், அம்ர் என்பவர் அவர்களது ஆசான்களிடமிருந்து பல முரண்பாடான செய்திகளையும், நம்பகமானவர்களிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டவைகளையும் அறிவித்துள்ளார்,’
இந்த செய்திக்கு அதிகமான அறிஞர்கள் பலவீனமானது, இட்டுக்கட்டப்பட்டது என்று தீர்ப்பளித்துள்ளனர்.
அல் கதீபுல் பக்தாதி அவர்கள் தாரீகுல் பக்தாதிலும் 12/187, இப்னுல் கைஸரானி அவர்கள் தகீறதுல் ஹுப்பாலிலும் 2/1147, ஸகாவி அவர்கள் அல்மகாஸிதுல் ஹஸனாவிலும், ஷவ்கானி அவர்கள் அல்பவாஇதுல் மஜ்மூஆவிலும், இஜ்லூனி அவர்கள் கஷ்புல் கபாஃவிலும் 1/361, அல்பானி அவர்கள் ஸில்ஸிலதுல் லஈபாவிலும்1/278 பலவீனப்படுத்தியள்ளனர்.
கன்சுல் உம்மால் என்ற நூலின் ஆசிரியர் இந்த செய்தி பற்றி கூறும்போது; ‘அல்மனாவி அவர்கள் பைலுல் கதீரிலும், சகாவி அவர்களும் இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது என்று கூறியுள்ளதாக’ கூறியுள்ளார்.
- அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று விடயங்கள் இருக்கின்றன, அவைகளில் உறுதியாக சொல்வதும், தமாஷாக சொல்வதும் உண்மையாக கணிக்கப்படும், திருமணம் முடித்து வைத்தல், தலாக் சொல்லுதல், இத்தாவின் பொழுது மனைவியை மீட்டெடுத்தல். (அபூதாவூத்: 2194, திர்மிதி: 1184) இது பலவீனமான செய்தியாகும், ‘அப்துர் ரஹ்மான் பின் அர்தக்’ என்ற பலவீனர் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை இமாம் நஸாஈ ‘முன்கருல் ஹதீஸ்’ என்கிறார்கள். (தஹ்தீப், மீஸான்)
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனக்கு சொந்தமில்லாத (பெண்ணில்) ஒன்றில் தலாக் செல்லாது. (திர்மிதி:1181,அஹ்மத்) இதில் ‘ஆமிருள் அஹ்வல்’ என்ற பலவீனர் இடம் பெற்றுள்ளார்.(அபூதாவூத்: 2190, அஹ்மத், தாரகுத்னீ) இதில் ‘மதருள் வர்ராக்’ என்ற அதிகம் தவறிவிடும் பலவீனர் இடம் பெற்றுள்ளார். (இப்னு மாஜாஹ்:2047) இதில் ‘அப்துர் ரஹ்மான் இப்னுல் ஹாரிஸ்’ எனும் மத்ரூக் என்று விமர்சிக்கப்பட்ட பலவீனரும், ஹாதம் பின் இஸ்மாயில் என்ற பலவீனரும் வந்துள்ளனர், மற்றோரு வழியில் அமீர் வந்துள்ளார். (அஹ்மத்:6932) முஹம்மத் பின் இஸ்ஹாக் எனும் முதல்லிஸ் வந்து இருக்கின்றார், (அபூதாவூத் அத்தயாலிஸ்:2379) இதில் ஹபீபுல் முஅல்லிம் என்ற பலவீனர் இடம்பெற்றுள்ளார், (ஹாகிம்: 2820) ஹுஸைனுல் முஅல்லிம் என்ற முள்தரப் நிலையில் உள்ள பலவீனர் இடம் பெற்றுள்ளார், இப்படி பலவீனர்கள் பலரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒன்றால் ஒன்று பலம் பெரும் என்ற அடிப்படையில் பல அறிஞர்கள் ஹசன் என்று கூறியுள்ளார்கள்.
மேலும் இதே செய்தி ஆயிஷா (ரலி அவர்களைத் தொட்டு அவர்கள் கூற்றாகவும், நபிகளாரின் செய்தியாகவும், முர்சலாகவும் பதியப்பட்டுள்ளது, அனைத்திலும் ஹிஷாம் பின் ஸஃத் என்ற பலவீனர் இடம்பெற்றுள்ளார்.
மேலும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) வழியாக முன்கதிஆன நிலையில் ஹாகிமில் பதியப்பட்டுள்ளது. முஆஸ் பின் ஜபல் (ரலி) வழியாகவும் முன்கதிஆன ஒரு செய்தி பைஹகீ, தரகுத்னி போன்ற கிதாப்களில் பதியப்பட்டுள்ளது
கணவன் மனைவியாக இஸ்லாத்தை ஏற்றால் என்ன சட்டம்;
இருவரும் இஸ்லாத்தை ஏற்றுவிட்டால் அவ்விருவரும் வாழ்க்கையை தொடர்வார்கள். அல்லாஹ்வின் தூதர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்ததாக எந்த ஸஹீஹான ஹதீஸ்களும் வரவில்லை.
இருவரில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் கட்டாயம் பிரித்துவைக்க வேண்டும்.
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள்; (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் – இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் – மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். (60:10)
அப்படி இஸ்லாத்திற்கு வரும் பெண்கள் இத்தா இருக்க வேண்டுமா என்றால், அதில் அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை இருக்கின்றது. அதிகமான அறிஞர்கள் இத்தா இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர், இப்னு ஹஸ்ம், இப்னுல் கையிம் போன்ற இன்னும் சில அறிஞர்கள் இத்தா தேவையில்லை என்றனர்.
இத்தா எவ்வளவு காலம் என்பதிலும் கருத்துவேற்றுமை பட்டனர். அதிகமான அறிஞர்கள் மூன்று மாதவிடாய் காலம் என்றனர், ஏனெனில் அவள் இஸ்லாத்தை ஏற்றவுடன் அவளுக்கு அந்த சட்டமே அமுலாகும் என்றனர். அபூஹனீபா இமாமவர்கள் ஒரு மாதவிடாய் காலம் என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் கூற்றை வைத்து கூறினார்கள்.
உண்மை என்னவென்றால்; இஸ்லாத்தை ஏற்ற பெண்ணுக்கு இத்தாவை கட்டாயப்படுத்த எந்த ஆதாரங்களும் இல்லை என்பதே. (அல்லாஹு அஃலம்)
அடுத்து மனைவி இஸ்லாத்தை ஏற்ற பிறகு தாமதித்து கணவன் இஸ்லாத்தை ஏற்றால் என்ன செய்வது என்பதிலும் கருத்துவேற்றுமை இருக்கின்றது.
இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் ஸாதுல் மஆத் என்ற அவர்களது நூலில் கூறும் போது பின்வருமாறு கூறினார்கள்: ‘இஸ்லாத்தை ஏற்ற யாரையும் புதிதாக திருமணம் முடித்துவைத்ததாக நாம் அறியவில்லை, மாறாக இரண்டில் ஒரு நிலை இருந்திருக்கலாம், ஒன்றில் இருவரையும் பிரித்து, வேறு திருமணம் செய்து வைத்திருக்கலாம், அல்லது அவ்விருவரையம் அதே திருமணத்தில் நீடிக்க செய்திருக்கலாம் கணவனோ மனைவியோ பிந்தி இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும் சரியே. மாறாக அவ்விருவரையும் உடனே பிரித்து, இத்தா இருக்க சொல்வது நபிகளார் காலத்தில் அதிகமாக இஸ்லாத்திற்கு வந்தும், அப்படி தீர்பளித்தாக நாம் அறியவில்லை‘…. மேலும் கூறினார்கள்;
‘இஸ்லாத்திற்கு வந்தவர்களை மீண்டும் திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்பது, தவறான வாதமாகும், அது நபிகளாரின் மீது அறிவின்றி சொல்வதாகும், கணவன் மனைவி இருவருமாக ஒரேயடியாக இஸ்லாத்தை மொழிவதென்பது அதுவே பயனுள்ளதாகும்….’ என்று தொடர்ந்து கூறினார்கள். (5\125,126)
இந்த கருத்தை நியாயப்படுத்திய இமாம் ஷவ்கானி அவர்கள் இத்தாவும் தேவையில்லை என்ற கருத்தையே சரிக்கண்டும் இருக்கின்றார்கள். (6\194)
இந்த கருத்தையே இமாம் ஸன்ஆனி அவர்களும் சுபுலஸ் ஸலாம் என்ற நூலில் ஆதரித்துள்ளார்கள். (2\195)
கணவன் காணாமல் போன மனைவி;
கணவன் திடீரென்று இல்லாமல் சென்று விடுகின்றார், அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லையென்றால் மனைவி என்ன செய்வது, என்றால் அதற்கு நபிகளாரைத் தொட்டு எந்த ஸஹீஹான செய்திகளும் வரவில்லை, பைஹகீ: 2834, தாரகுத்னீ 3849, போன்ற ஹதீஸ் கிதாப்களில் ஒரு ஹதீஸ் பதியப்பட்டுள்ளது அது பலவீனமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘கணவன் இல்லாது போன பெண்மணி அவன் பற்றிய தகவல் வரும்வரை அவளது மனைவியே’ இதனை அறிவிக்கும் ‘ஸவ்வார் பின் முஸ்அப்’ என்பவர் ‘முன்கர், மத்ரூக்’ போன்ற கடும் விமர்சனத்திற்குரிய மிகவும் பலவீனமானவர். பைஹகீ இமாம் அவர்களே அந்த ஹதீஸுக்கு கீழால் தெளிவுபடுத்தியுள்ளார்.
அது பற்றி சில நபித்தோழர்களின் தீர்ப்புகள் வந்திருக்கின்றன.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்; ‘எந்த பெண்ணாவது கணவன் இல்லாதுபோய், எங்கிருக்கின்றார் என்று அறியவில்லையானால் அவள் நான்கு வருடங்கள் எதிர் பார்த்திருந்துவிட்டு, பிறகு நான்கு மாதங்கள் பத்து நாட்கள் இருப்பாள், பிறகு அவள் வேறு திருமணம் முடிக்கலாம்.’ இதனை அவர்களிடமிருந்து அறிவிக்கும் ‘சஈதுப்னுல் முஸய்யப்’ அவர்கள் உமரவர்கள் காலத்தை அடையாதவர்கள் (தஹ்தீப்). எனவே இந்த செய்தி முன்கதிஆனா செய்தியாகும்.
மேலும் உமர் ரலி அவர்கள் நான்கு வருடங்கள் அவகாசம் கொடுத்தார்கள் என்ற செய்தி மாத்திரம் சுனனுல் குப்ரா, பைஹகீ :15568, யில் அபூ அம்ர் அஷ்ஷைபானி அவர்கள் வழியாக முறையாக பதியப்பட்டுள்ளது. மேலும் 15569 தில் அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா அவர்கள் வழியாகவும் “நான்கு மாதங்கள் எதிர்பார்த்திருந்துவிட்டு, பிறகு கணவனின் பொறுப்பாளி தலாக் சொல்ல, நான்கு மாதங்கள் பத்து நாள் இத்தா இருந்து, பிறகு திருமணம் முடிப்பார்கள்.” என்று வந்துள்ளது, ‘அப்துர் ரஹ்மான்’ அவர்கள் உமர் ரலி மரணிக்கும் போது ஆறு வயதில் இருந்திருக்கின்றார்கள், அவர் அவரை சந்திக்க வில்லை என்பதே அதிகமான ஹதீஸ் கலை அறிஞர்களின் கூற்றாகும். (தஹ்தீப்)
இன்னும் பலர் வழியாக பதியப்பட்டிருந்தாலும் அனைத்தும் விமர்சனத்திற்குரியதே.
உஸ்மான் (ரலி) அவர்கள் கணவன் இல்லாது போன மனைவிக்கு நான்கு மாதங்கள் எதிர்பார்த்திருப்பதையும், பிறகு நான்கு மாதங்கள் இத்தா இருப்பதையும், பிறகு திருமணம் முடிப்பதையும், முதலாவது கணவர் வந்தால் மஹரை கொடுப்பதில், மனைவியாக ஏற்பதில் அவர் தேர்வுக்கு விருப்பம் கொடுக்கப்படுவதையும் தீர்ப்பாக அளித்தார்கள். (முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்: 12317 ஸஹீஹ்)
இப்னு உமர், இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் ‘அந்த பெண் நான்கு வருடங்கள் எதிர்பார்த்திருப்பதை (இருவரும்), (கணவன் விட்டு சென்ற சொத்தில் அவளுக்காக செலவழிக்கப்படும் என்று இப்னு உமரும்), (கணவன் பெயரில் கடன் எடுப்பாள், திரும்பி வந்தால் அவர் சொத்தில் கடனை கொடுப்பது, இல்லையென்றால் அனந்தர சொத்தில் கடனை அடைப்பாள் என்று இப்னு அப்பாஸ் அவர்களும்), பிறகு நான்கு மாதங்கள் பத்து நாட்களுக்கு அவரது அனைத்து சொத்தில் இருந்தும் செலவழிக்கப்படும் என்று (இருவரும்) தீர்ப்பளித்தார்கள். (ஸுனன் சயீத் பின் மன்சூர்:1756 சஹீஹ்)
அலி (ரலி) அவர்கள், ‘அந்தப் பெண் கணவர் உயிரோடிருக்கின்றாரா, அல்லது மரணித்து விட்டாரா என்று உறுதியாகும் வரையில் காத்திருப்பார்.’ என்று கூறியதாக முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்:12331 ல் பதியப்பட்டுள்ளது, அதுவும் முன்கதிஆக இருக்கின்றது, ஹகம் என்பவர்கள் அலி ரலி அவர்களை சந்தித்ததாக இல்லை. அவர்கள் பிறப்பே ஹிஜ்ரி நாட்பத்தேழுக்கு பிறகுதான் (தஹ்தீப்).
இப்படி நபித்தோழர்கள் தீர்ப்பு இருக்க, இமாம் ஸன்ஆனி அவர்கள் இமாம் யஹ்யா அவர்களது நல்லதோர் கருத்தை பதிகின்றார்கள்; ‘எதிர்பார்த்திருக்க சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, ஆனாலும் மறைந்து சென்றவர் அவளுக்கான செலவுக்கு விட்டு சென்றிருந்தால், இந்த நிலை அவர் இல்லறத்தில் ஈடுபடாவிட்டாலும் இருப்பது போன்றதே, இல்லறத்தில் ஈடுபடுவதென்பது அவருக்கு உள்ள உரிமை அவளுக்கு உள்ளதல்ல, அப்படி சொத்து இல்லையென்றால் அவள் விவாகரத்தை வேண்டும் சந்தர்ப்பத்தில் நீதிவான் அந்த திருமணத்தை தள்ளுபடி செய்வார், அல்லாஹ் சொல்கிறான் ;’அவர்களுக்கு தீங்கு ஏற்படும் நிலையில் அவர்களை தடுத்து வைக்கவேண்டாம் (2:231), நபி (ஸல்) கூறினார்கள்: இஸ்லாத்தில் தீங்கு செய்தல் இல்லை’ நீதவான் என்பவர் ஈலாவிலும் ளிஹாரிலும் தீங்கு செய்வதை தடுப்பதற்கே இருக்கின்றார், இருக்கும் குறைகள் போன்றவற்றிக்கே திருமணத்தை தள்ளுபடி செய்யமுடியும் எனும் போது இது மிக தகுதியானதாகும்.’ இதனை ஸுபுலஸ் ஸலாம் எனும் அவர்களது நூலில் பதிந்த இமாமவர்கள் ‘இது கருத்துக்களில் மிக அழகானதாக இருக்கின்றது, அலி உமர் (ரலி) போன்றோர்களது செய்திகள் அவர்களது (மவ்கூப்பான) செய்திகளாகவே இருக்கின்றது என்று கூறுகின்றார்கள். (அல்லாஹு அஃலம்)