ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்:
மாதங்கள் பற்றி ஒரு முஸ்லிம் அறிந்து வைக்க வேண்டியது!
மாதங்களை பன்னிரண்டாக வகுத்தவன் அல்லாஹ்வே. அவனிடம் நலவு, கெடுதி விடயத்தில் அனைத்தும் சமமானதே. எனவே ஒரு மாதத்தை நல்லது, இன்னொரு மாதத்தை கெட்டது என்று மனிதர்கள் யாருக்கும் தீர்மானிக்க முடியாது. ஒன்றில் அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்க வேண்டும், அல்லது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க வேண்டும்.
அப்படி அல்லாஹ்வோ, அவன் தூதரோ ஒரு மாதத்தை நல்ல, பரகத் பொருந்திய மாதம், அல்லது; ஒரு மாதத்தை கெட்டது, அபசகுணம் நிறைந்தது (சபர் மாதம் போன்று) என்று காட்டித் தந்துள்ளார்களா? என்றால், அப்படி காட்டித் தரவில்லை.
மாறாக மாதங்களில் சிலதை இஸ்லாம் யுத்தம் செய்யக் கூடாது என்ற அடிப்படையில் கண்ணியப்படுத்தியுள்ளது. அவற்றை இஸ்லாம் சொன்ன பிரகாரம் கண்ணியப்படுத்த வேண்டுமே அல்லாமல் நாம் நினைத்தது போன்று நல்லது நடக்கும் மாதம், கெட்டது நடக்கும் மாதம் என்ற அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. அப்படி இஸ்லாம் காட்டித் தரவுமில்லை.
அடுத்து; ஒரு மனிதனின் பிறப்போ, இறப்போ ஒரு மாதத்தில் நடந்து விட்டதனால் ஒரு மாதம் சிறந்தது, மோசமானது என்று தீர்மானிப்பதும் இறை அதிகாரத்தில் கை வைக்கும் குற்றமாகும். ஏனெனில் ஒரு மனிதன் பிறப்பதும், இறப்பதும் அல்லாஹ்வின் நாட்டப்படியே, அடுத்து ஒரே மாதத்தில் நாம் நல்லவர் என்று நினைக்கும் ஒரு மனிதர் பிறந்திருக்கலாம், அதே மாதத்தில் நல்லோர் பலர் இறந்திருக்கலாம். இந்த அடிப்படையை சரியாகப் புரிவதே மாதங்களை இஸ்லாம் சொன்ன அடிப்படையில் வரவேற்பதற்கு எம்மை இட்டுச் செல்லும். (அல்லாஹ் அதற்கு துணை நிற்பானாக!)
அவற்றிற்கான ஆதாரங்கள்;
அல்லாஹ் கூறுகின்றான்:
اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ ؕ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُۙ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ ؕ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; ….(9:36)
يَسْـــَٔلُوْنَكَ عَنِ الشَّهْرِ الْحَـرَامِ قِتَالٍ فِيْهِؕ قُلْ قِتَالٌ فِيْهِ كَبِيْرٌ
(நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்;….(2:217)
صحيح البخاري: عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” الزَّمَانُ قَدْ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثَةٌ مُتَوَالِيَاتٌ: ذُو القَعْدَةِ وَذُو الحِجَّةِ وَالمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ، الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ “
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்தது போன்றே காலம் சுழல்கின்றது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை – துல் கஃதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஃபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும். (புஹாரி: 3197)
இஸ்லாத்தில் ரபீஉல் அவ்வல் மாதம்!
அந்த அடிப்படையில் ரபீஉல் அவ்வல் மாதத்திற்கு சிறப்புகள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்த்தால் அப்படி சிறப்புகள் ஏதும் சஹீஹான ஹதீஸ்களில் பதியப்படவில்லை.
ஆனால் நபி (ஸல்) அவர்களது பிறப்பு, இறப்பு, மதீனாவை நோக்கிய ஹிஜ்ரத் பயணம் போன்றவை அந்த மாதத்தில்தான் நடைபெற்றது. அல்லாஹ்வோ, தூதரோ குறிப்பிட்டு சொல்லவில்லையெனில், ஒரு மனிதனின் பிறப்பும் இறப்பும், பயணமும் சிறப்பைத் தீர்மானிக்க மாட்டாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுள் ஒன்று என்பதை நாம் ஆரம்பத்தில் நோக்கினோம்.
ரபீஉல் அவ்வலும் நபிகளாரின் பிறப்பும்.
நபிகளாரின் பிறப்பைப் பொருத்தமட்டில்; அந்த மாதத்தின் எத்தனையாம் நாளில் பிறந்தார்கள் என்பதில் வரலாற்று ஆசிரியர்களிடையே ஆழமான கருத்துவேற்றுமை காணப்படுகின்றது.
சில அறிஞர்கள் அம்மாதத்தின் இரண்டாம் நாள் என்றும், சிலர் எட்டாம் நாள் என்றும், சிலர் பத்தாம் நாள் என்றும், சிலர் பன்னிரண்டாம் நாள் என்றும் கூறியுள்ளனர். இவற்றுள் எட்டாம் நாள் என்பது வரலாற்று ஆசிரியர்களால் சரி காணப்பட்டதாக இருப்பதோடு, பன்னிரண்டாம் நாள் என்பது பிரபல்யமான கருத்தாகவும் இருக்கின்றது. (பதிவு: இப்னுகஸீர் இமாமுக்குறிய அஸ்ஸீரதுன் நபவிய்யா)
மேலும் நபிகளாரின் மரணம் நிகழ்ந்த தினம் பற்றி தேடித் பார்க்கும் போது, சில வானவியலாளர்கள், நபிகளாரின் பிறப்பு நடந்த திங்கட்கிழமை ரபீஉல் அவ்வல் மாதத்தின் ஒன்பதாம் நாளுக்கே நேர்படுகின்றது என்று கூறுவதையும் பார்க்கலாம். இதை பிறப்பு நிகழ்ந்த தின கருத்துக்களில் ஒன்றாகவும் நோக்கலாம். இந்த கருத்தையே சமகால வரலாற்று ஆசிரியர்களான ‘முஹம்மதுள் ஹுல்ரீ, சபிய்யூர் ரஹ்மான் முபாரக்பூரி போன்றோர் முதன்மைப் படுத்தியுள்ளார்கள். (நூருல் யகீன், ரஹீகுல் மக்தூம், அர்ரவ்ளுள் உனுப்)
நபிகளாரின் பிறந்த தினத்தில் கருத்து வேற்றுமைக்கான காரணிகளாக பின்வருவன வற்றைக் குறிப்பிடலாம்.
1- நபிகளார் பிறக்கும் போது நபியாக பிறக்கவில்லை என்பதும், பிற்காலத்தில் அப்படி ஒரு சிறப்புக்குறிய மனிதராக இருப்பார் என்பது திரியாமல் இருந்ததும்.
2- அன்றைய ஜாஹிலிய்யா காலத்தில் பிறந்த தினத்தைக் கொண்டாடும் வழமை இல்லாதிருந்தமையும்.
3- நபிகளாருக்கு நபித்துவம் கிடைத்த பிறகு நபியவர்களோ, நபித் தோழர்களோ பிறந்த தினத்திற்கு முக்கியத்துவம் காட்டாததும் மிக முக்கிய காரணிகளாகும்.
ரபீஉல் அவ்வலும், (நபிகளார் பிறந்த தின கொண்டாட்டம்) மீலாத் விழாவும்!
இந்த மாதத்தில் முஸ்லிம்களால் அரங்கேற்றப்படும் மிக முக்கிய விடயங்களுள் ஒன்றாக, அம்மாதத்தின் பன்னிரண்டாவது நாளை முன்னிறுத்தி கொண்டாடப்படும் ‘மீலாத் விழா’ என்பது இருக்கின்றது.
அந்த மாதத்தில் பள்ளிகளை விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பதும், பள்ளி வளாகங்களையும், பாதை ஓரங்களையும் கொடிகளைக் கொண்டு அலங்கரிப்பதும்…………………………………..
குறிப்பாக அந்த மாதத்தின் பன்னிரண்டு நாட்களும் தொடர்ச்சியாக ‘சுப்ஹான மௌலித்’ என்று அறியப்பட்டிருக்கும் அரபு கவிதைகளைப் பாடி, பன்னிரண்டாவது நாளில் பெரிய அளவில் சாப்பாடு கொடுத்தும் மகிழ்வார்கள் முஸ்லிம்கள். குறிப்பாக இலங்கையில் அம்மாதத்தின் பன்னிரண்டாவது நாள் விடுமுறையாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் பார்வையில் ரபீஉல் அவ்வல் கொண்டாட்டம்!
முஸ்லிம்களால் அரங்கேற்றப்படும் இந்த கொண்டாட்டத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இருக்கின்றதா என்று பார்த்தால், எந்தத் தொடர்பும் இல்லை என்பதே சுருக்கம். ஏனெனில் நபி (ஸல்) அவர்களோ. நபித்தோழர்களோ, குர்ஆன், சுன்னாவை அடிப்படையாக ஏற்ற அறிஞர்களோ நடைமுறைப் படுத்தாத விடயமாகும்.
அப்படியானால் பிறந்த தின கொண்டாட்டம் (மீலாத் விழா) எந்த அடிப்படையைக் கொண்டது என்று நோக்கினால், அது யூத நஸாராக்களின் கலாச்சாரமாகும். எனவே இந்த கொண்டாட்டம் எங்களை இரண்டு வழிகேட்டை நோக்கி அலைத்துச் செல்லும்.
1- நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் இல்லாத பித்அத்.
2- நபி (ஸல்) அவர்களால் எச்சரிக்கப்பட்ட மாற்றுமத கலாச்சாரம்.
எனவே மீலாத் விழா கொண்டாடுவது பாவமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (3:31)
நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினால் பெரும்பாலும் ஆரமபத்தில்:
«أَمَّا بَعْدُ، فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ»
‘அம்மா பாத் என்று கூறிவிட்டு, வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடும் ஆகும்” (முஸ்லிம்)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
«لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ، وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ»، قُلْنَا يَا رَسُولَ اللَّهِ: اليَهُودَ، وَالنَّصَارَى قَالَ: «فَمَنْ»
அபூ ஸஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்தால் கூட நீங்களும் அதில் புகுவீர்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘வேறெவரை?’ என்று பதிலளித்தார்கள். (புஹாரி: 3456, முஸ்லிம்)
ரபீஉல் அவ்வளும், நபிகளாரைப் புகழும் சுப்ஹான மௌலிதும்!
அம்மாதத்தில் நபிகளாரின் பிறப்பைக் கொண்டாடுவதற்காக படிக்கப்படும் ஒரு காவியமாகவே சுப்ஹான மௌலிது காணப்படுகின்றது. சுருக்கமாக சொல்வதானால் இறை அதிகாரங்களை நபிகளாருக்கு வாரிவழங்கும் ஒரு செயலாகவே இக்காவியம் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக சில விடயங்கள்;
சுப்ஹான மௌலிது படிப்பவர்கள் அஷ்ரகல் பத்ரூ அலைனா என்ற பாடலை படிக்கும் போது எழுந்து கை கட்டி நிற்கின்றனர், காரணம் நபிகளார் அந்த மஜ்லிசுக்கு வருகின்றார்களாம். அப்படியென்றால் மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் நபி (ஸல் ) அவர்களுக்கு எங்கெல்லாம் சுப்ஹான மௌலித் படிக்கின்றார்கள், யாரெல்லாம் படிக்கின்றார்கள் என்ற அறிவு இருப்பதாக நினைக்கின்றனர். இதுவே அப்பட்டமான ஷிர்க்காக அமைந்துவிடும்.
***குறிப்பு: இதனை கூறும்போது நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறினால் அது நபிகளாருக்கு தெரியும் அல்லவா, அதுபோன்றே இதனையும் அறிகின்றனர் என்ற ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். இது உண்மையில் தவராகும், காரணம் நபி (ஸல்) அவர்கள் ஸலவாத் சொல்வதை சுயமாக அறிவதுமில்லை, பதில் சொல்வதற்கு அந்த மனிதரைத் தேடி வருவதுமில்லை. மாறாக அதனை எத்திவைப்பதற்காக சில மலக்குமார்களை வைத்து, அதன் மூலமே நபிகளாரின் கப்ருக்கு அதனை அல்லாஹ் எத்திவைக்கின்றான், நபிகளாராக சுயமாக மறைவு ஞானத்தால் அறியவில்லை.
நபி (ஸால்) அவர்கள் கூறினார்கள்: உங்களது நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும், எனவே அந்த நாளில் என் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள், ஏனெனில் உங்களது ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.’ என்று கூற நபித் தோழர்கள்: அல்லாஹ்வின் தூதரே நீங்கள் உக்கிப்போன பிறகு எப்படி எடுத்துக் காட்டப்படும்?. என்று கேட்க, ‘நபிமார்களின் உடல்களை அல்லாஹ் பூமிக்கு ஹராமாக்கி இருக்கின்றான்.’ என்று நபிகளார் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவுத், நஸாஇ)
நபி (ஸல்) கூறினார்கள்: உங்களது வீடுகளை கப்ருகளாக ஆக்காதீர்கள், மேலு எனது கப்ரை விழாக் கொண்டாடும் இடமாக ஆக்காதீர்கள், என்மீது நீங்கள் ஸலவாத் சொல்லுங்கள், ஏனெனில் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களது ஸலவாத் எனக்கு வந்து சேரும். (அபூதாவுத்)
ஒரு அறிவிப்பில் எடுத்த்க்காட்டப்படும் என்றும், அடுத்த அறிவிப்பில் என்னை வந்து சேரும் என்று வந்துள்ளதே அல்லாமல், நான் அறிவேன் என்றோ, எனக்குத் தெரியும் என்றோ கூறவில்லை நபிகளார். அப்படியென்றால் எப்படி நபிகளாருக்கு சென்றடையும்? மலக்கு மார்கள் மூலமே.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு பூமியில் சுத்திக் கொண்டிருக்கும் சில மலக்குமார்கள் இருக்கின்றனர், அவர்கள் என் உம்மத்திடமிருந்து ஸலாமை எனக்கு எத்திவைக்கின்றனர். (அஹ்மத், நஸாஇ)
எனவே நாம் எங்கிருந்து ஸலவாத் சொன்னாலும் அதனை அந்த மலக்குமார்கள் உடனே நபிகளாருக்கு எத்திவைக்கின்றனர், மேலும் நாம் எங்கிருந்தும் அதனை சொல்லலாம், மாறாக ஹஜ் உம்ராவுக்கு செல்பவர்களிடம் ‘எனது ஸலவாத்தை நபிகளாருக்க் சொல்லிவிடுங்கள்’ என்றெல்லாம் கூறத் தேவையில்லை, நபிகளார் அப்படி சொல்லவுமில்லை.மேலும் நபிகளார் அவர்களது கப்ரை விழாக் கொண்டாடும் இடமாக ஆக்கவேண்டாம் என்று கூறியிருபதனால் ஸலவாத் சொல்லவென கப்ரை நாடிச் செல்லவும் தேவையில்லை, அதற்காக பயணம் மேட்கொல்லவும் தேவையில்லை. இதனைப் புறிந்து நாம் செயற்பட முயற்சிக்கவேண்டும்.
மேலும் ஸுப்ஹான மௌலிதின் அஷ்ரகல் பத்ரூ அலைனா என்ற பாடலில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து
عالم سر وأخفى & مستجيب الدعوات
‘நீர் ரகஸியத்தையும், அதைவிடவும் மறைவான (உள்ளத்தில் ஊசலாடுவ) தையும் அறியக்குடியவர். பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்பவர் என்று வந்துள்ளது.
மேலும் அல்லாஹு காலிகுனா என்ற பாடலில்,
اقت بي الأسباب & فجئت هذا الباب
أقبل الأعتاب & أبغي را الأحباب
‘எனக்கு காரண காரியங்கள் கைகூடவில்லை, எனவே இந்த வாசலை நோக்கிவந்தேன், அதன் படிகளை முத்தமிடுகின்றேன், நேசர்களின் பொறுத்தத்தை தேடுகின்றேன்.’ என்று வந்துள்ளது. ஏன் நபிகளாரின் கப்ரு தேடிச் சென்று, அதன் படியை முத்தமிட்டு, முறைப்படு செய்யவேண்டும். இப்படி ஸுப்ஹான மௌலிது இறை அதிகாரத்தை நபிகளாருக்கு வளங்குகின்றது.
சுப்ஹான மௌலித் மூமின்களின் ஈமானைப் பறிக்கின்றது என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகளை எடுத்து நோக்கலாம்.
புர்தா என்ற காவியத்தை எடுத்து நோக்கின், அதில் நபிகளாரைப் பார்த்து,
وإن من جودك الدنيا ورتها & ومن علومك علم اللوح والقلم
‘நபியே உம்மிடம் லௌஹுல் மஹ்பூலில் எழுதுகோள் எழுதிய அறிவு இருக்கின்றது.’ என்று தெட்டத் தெளிவாக அந்த அதிகார்மம் நபிகளாருக்கு வளங்கப்படுகின்றது.
இப்படி நபிகளாரையே இறைவன் இடத்தில் வைக்கும் அளவிற்கு இட்டுச் செல்லும் இந்த மௌலித் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே எமது ஈமானையும், அமல்களையும் பாதுகாக்கப்போகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்:
لَـقَدْ اُوْحِىَ اِلَيْكَ وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَۚ لَٮِٕنْ اَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், “நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்” (என்பதுவேயாகும்). (39:65)
மேலும் கூறுகின்றான்:
اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (4:48)
நபி (ஸல்) அவர்களின் மரணம்;
நபி (ஸல்) அவர்களின் மரணத்தைப் பொருத்தமட்டில், திங்கட்கிழமையில் நிகழ்ந்தது என்பதில் கருத்துவேற்றுமை இல்லை, ஆனாலும் இமாம் இப்னு குதைபா அவர்கள் புதன் கிழமை என்று கூறியிருப்பது தவறாகும், சிலநேரம் அடக்கம் செய்யப்பட்ட தினத்தை அவர் நாடியிருக்கலாம். அதுவே சரியானதும்கூட.
மரணித்த ஆண்டைப் பொருத்தமட்டில், அது ஹிஜ்ரத்திலிருந்து பதினோராம் ஆண்டில் நிகழ்ந்தது என்பதிலும் கருத்துவேற்றுமை இல்லை. மரணித்த மாதம் ரபீஉல் அவ்வல் என்பதிலும் கருத்துவேற்றுமை காணப்படவில்லை.
அதேநேரம் மரணித்த தினத்தைப் பொருத்தவரை, பெரும்பான்மையான அறிஞர்கள், அது ரபீஉல் அவ்வல் மாதத்தின் பன்னிரண்டாம் நாள் என்றும், கவாசிமீ என்ற அறிஞர் அம்மாதத்தின் முதல் நாள் என்றும், இப்னுல் கல்பீ, அபூ மிக்னப் போன்ற அறிஞர்கள் அம்மாதத்தின் இரண்டாம் நாள் என்றும் கூறியுள்ளனர். அக்கருத்தின் பக்கமே இமாம் சுஹைலீ அவர்கள் சென்றிருப்பதோடு, அறிஞர் இப்னு ஹஜர் அவர்கள் முதன்மைப் படுத்தியுள்ளார்கள். (அர்ரவ்ளுள் உனுப், அச்சீரா அன்னபவிய்யா, பத்ஹுல் பாரீ)
இந்த கருத்துக்களை பார்க்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடிந்தவை!
1- முஸ்லிம் சமூகம் இம்மாதத்தில் நபிகளாருக்கு பிறந்த தினம் கொண்டாடுவதானது, நபிகளாரின் மரணத்தையும் சந்தோசத்தோடு கொண்டாடும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்பது மிகவும் தெளிவு.
2- நபிகளாரின் பிறப்பின் மூலம் இம்மாதத்திற்கு சிறப்பு என்று விளங்கினால், அதே மாதத்தில் நபிகளார் மரணித்திருப்பது எதனைக் காட்டுகின்றது???
பிறப்பை, இறப்பை முன்வைத்து சிறப்பு தீர்மானிக்க முடியாது என்பது மிகத் தெளிவு.
صحيح مسلم : عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ، بَعْدَ وَفَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ: ” انْطَلِقْ بِنَا إِلَى أُمِّ أَيْمَنَ نَزُورُهَا، كَمَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزُورُهَا، فَلَمَّا انْتَهَيْنَا إِلَيْهَا بَكَتْ، فَقَالَا لَهَا: مَا يُبْكِيكِ؟ مَا عِنْدَ اللهِ خَيْرٌ لِرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَتْ: مَا أَبْكِي أَنْ لَا أَكُونَ أَعْلَمُ أَنَّ مَا عِنْدَ اللهِ خَيْرٌ لِرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَكِنْ أَبْكِي أَنَّ الْوَحْيَ قَدِ انْقَطَعَ مِنَ السَّمَاءِ، فَهَيَّجَتْهُمَا عَلَى الْبُكَاءِ. فَجَعَلَا يَبْكِيَانِ مَعَهَا “
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூ பக்ர் (ரழி) அவர்கள், உமர் (ரழி) அவர்களிடம், ‘எங்களுடன் வாருங்கள், நபிகளார் உம்மு அய்மன் (ரழி) அவர்களை சந்தித்தது போன்று நாமும் சந்தித்துவிட்டு வருவோம்.’ என்று கூற, இருவரும் அவர்களிடம் போகவே, உம்மு அய்மன் அவர்கள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது அவ்விருவரும், ‘ஏன் அழுகின்றீர்!, அல்லாஹ்விடம் நபிகளாருக்கு நல்லதே இருக்கின்றது.’ என்று கூற, உம்மு அய்மன் அவர்கள், ‘அல்லாஹ்விடம் அவருக்கு நல்லதுதான் இருக்கின்றது என்று தெரியாததனால் நான் அழவில்லை, மாறாக (நபிகளாரின் மரணத்துடன்) வானிலிருந்து இறங்கும் வஹீ நின்றுவிட்டதே என்றுதான் அழுகின்றேன்.’ என்று பதில் கூறினார்கள். உடனே அவ்விருவரும் அழ ஆரம்பித்துவிட்டார்கள். (முஸ்லிம்)
மீலாத் கொண்டாட்டம் ஒரு வழிகேடே!!!
எனவே நபிகளாரின் பிறப்பையும், இறப்பையும் தன்னகத்தே அடக்கியிருக்கும் மாதமும், நாளும் எப்படி சந்தோஷ தினமாக மாறியது என்று நாம் நன்றாக சிந்தித்தால் ‘மீலாத் விழா’ இஸ்லாத்திற்கும், நபிகளாருக்கும் எதிரான ஒரு சதித்திட்டம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஏனெனில் நபித் தோழர்களைப் பொருத்தவரை அவர்கள், நபிகளாரின் பிறப்பை பார்க்கவே இல்லை, அதேநேரம் மரணத்தை தம் வாழ் நாளில் சந்தித்த துக்கரமாகவே கண்டார்கள்.
அடுத்து இஸ்லாத்தைக் கட்டிக்காத்த எந்த அறிஞர்களும் மீலாத் விழாவுக்கு சம்பந்தப்பட்டிருக்கவில்லை. மாறாக இஸ்லாமிய வரலாற்றை கறைபடிந்த வரலாறாக மாற்றிய ‘ஷீஆக்களே’ அவர்களது ஆட்சி அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்த சிந்தனையை அரங்கேற்றினார்கள்.
அதிலும் குறிப்பாக ‘முஇஸ்ஸுத்தீன்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ‘பாதிமிய்யா’ ஆட்சியாளரால்தான் இது ஆரம்பிக்கப்பட்டது. இவரே அதிகம் நபித் தோழர்களை கேவலப்படுத்தியவர், ஒரு கட்டத்தில், ‘ஹாகிமு பில்லாஹ்’ என பெயர் சூட்டிக் கொண்டு இறைமையை வாதாடியவர்.
இவர்தான் பாதிமீய்யா ஆட்சி காலத்தில் இந்த வழிகேட்டை உருவாக்கினார் என்ற செய்தியை ‘மிஸ்ரின் சட்டவல்லுநர் முஹம்மத் பின் புகைத் அல் முதீஇ’ என்ற அறிஞர் பதிவு செய்துள்ளார்.((أحسن الكلام فيما يتعلق بالسنة والبدعة من الأحكام (ص:44) ).
(المواعظ والاعتبار بذكر الخطط والآثار (1/ 490) என்ற புத்தகத்தில் ‘தகிய்யுத்தீன் அல் மக்ரீஸீ’ என்ற அறிஞரும், பாதிமயா ஆட்சியாளர்கள் நபியவர்களுக்கு பிறந்த தின விழா கொண்டாடி வந்தனர் என்று பதிவு செய்துள்ளார்.
(الإبداع في مضار الابتداع (ص:251) என்ற புத்தகத்தில் அறிஞர் ‘அலீ மஹ்பூல்’ என்ற மிஸ்ர் அறிஞர் கூறும் போது, ‘நான்காம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாதிமிய்யாக்கள் ஆறு வகையான விழாக்களைக் கொண்டாடி வந்தனர், அதில் ஒன்றாக மீலாதுன் நபியும் இருந்தது’ என்று பதிந்துள்ளார்.
இப்படியே ஷீஆக்கள் தான் அதனை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றினார்கள் என்பதை நிறுவலாம்.
நபிகளாரும், நபித் தோழர்களும், இஸ்லாத்தை பாதுகாத்த அறிஞர்களும், நான்கு இமாம்களும் செய்யாத இத்தீய செயலை நபிகளாரின் நேசத்தில்தான் அவர்கள் உருவாக்கியிருப்பார்களா, அல்லது நபிகளாரையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்த உருவாக்கியிருப்பார்களா!!!!
சிந்தித்தால் சீர்திருத்தம் கிடைக்கும் நம் இஸ்லாமிய உறவுகளுக்கு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இந்த மார்க்கத்தில் இல்லாததை புதிதாக உருவாக்குகின்றோ அது ஏற்கப்படமாட்டாது. (முஸ்லிம்)
எனவே ரபீஉல் அவ்வல் மாதத்தில் அரங்கேறும் இந்த பித்அததுக்கு முற்றுப் புள்ளி வைக்க நாம் கைகோர்த்து முயற்சிப்போம், அதற்கு அல்லாஹ் நமக்கு துணை நிற்பானாக!!!
ரபீஉல் அவ்வல் மாதமும் நபிகளாரின் ஹிஜ்ரத்தும்!
நபிகளாரின் வரலாற்றைப் பதிந்த அறிஞர்கள் நபிகளாரின் ஹிஜ்ரத் ரபீஉல் அவ்வல் மாதத்தில் நடந்தது என்பதில் ஒன்றுபட்டுள்ளனர். இதுவும் மாதங்களை முன்னிறுத்தியோ, நாளை முன்னிறுத்தியோ நபிகளார் மேற்கொண்ட ஒரு அம்சமல்ல, மாறாக நபிகளாருக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு அல்லாஹ்வின் கட்டளை வரவே நபிகளார் ஹிஜ்ரத் செய்தார்கள். நபிகளார் எதிர்பார்த்திருந்தது அலாஹ்வின் அனுமதியையே.
ஹிஜ்ரத்தும், ஹிஜ்ரி ஆண்டு கணக்கீடும்!
நபிகளாரின் ஹிஜ்ரத் பயணம் ரபீஉல் அவ்வலில் நடந்திருக்கும் போது ஹிஜ்ரி ஆண்டு எப்படி முஹர்ரம் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது?
.உண்மையில் அப்படி ஒரு சந்தேகம் முஸ்லிம்கள் வட்டாரத்தில் இருக்கலாம், குறிப்பாக ஷீஆக்களோடு தொடர்புள்ளவர்களுக்கு இருக்கலாம்.
ஷீஆக்களை பொருத்தமட்டில் உமர் (ரழி) அவர்கள் இதனையும் மாற்றிவிட்டார்கள் என்று விமர்சனம் செய்கின்றனர். எனவே ரபீஉல் அவ்வல் பற்றி எழுதும் தொடரில் அது பற்றியும் சிறு தெளிவு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் எழுதுகின்றேன்!
உமர் (ரழி) அவர்கள் காலத்தில் நாட்களை குறிப்பதற்கு இஸ்லாமிய முறை ஒன்று தேவை என்ற நிலை ஏற்பட்டபோது நபித்தோழர்களிடையே ஆலோசனை செய்தார்கள், அந்த நேரம் சிலர் முன்வைத்த ஆலோசனைக்கு அமைய ஹிஜரத் நிகழ்ந்த ஆண்டை முதல் ஆண்டாக எடுத்து, வருடத்தை கணக்கிட ஆரம்பித்தார்கள்.
இங்கே நாம் தெளிவாக பதியவைக்க வேண்டிய விடயம்; “அன்னறைய சமூகத்தில் நிலையான வருடக் பணிப்பீட்டு முறை ஒன்று இருக்கவில்லை, ஒவ்வொரு நிகழ்வை முன்னிறுத்தி கணக்கிடுவார்கள். கணக்கிடும் போது முஹர்ரம் மாதத்தை முன்னிறுத்தியே கணக்கிடுவார்கள். எனவே உமர் (ரழி) அவர்களும் ஹிஜ்ரத் நடந்த ஆண்டை, அக்கால வழமை படியே முஹர்ரம் மாதத்தைக் கொண்டு ஆரம்பித்து கணக்கிட்டார்கள். மாறாக, அவர்கள், ஹிஜ்ரத் நிகழ்ந்த மாதத்தையோ, நாளையோ முன்வைத்து வருடத்தை ஆரம்பிக்கவில்லை” என்பதே.
صحيح البخاري ٣٩٣٤ – عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: «مَا عَدُّوا مِنْ مَبْعَثِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ مِنْ وَفَاتِهِ، مَا عَدُّوا إِلَّا مِنْ مَقْدَمِهِ المَدِينَةَ»
ஸஹ்ல் இப்னு ஸஃத்(ரழி) அவர்கள் கூறினார்கள்: மக்கள் (ஆண்டுக்கணக்கை) நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களின் 40-ம் வய)திலிருந்தோ அவர்களின் மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை; மதீனாவுக்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி: 3934)
எனவே ரபீஉல் அவ்வல் சம்பந்தப்பட்ட விடயங்களைப் சரிவர அறிந்து, இஸ்லாம் காட்டித் தந்த அடிப்படையில் அதை அனுகவேண்டும். அதற்கு அல்லாஹ் எம் அனைவருக்கும் துனை நிற்கட்டும் என்று வேண்டி முற்றுப்புள்ளி வைக்கின்றேன்.
வஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்!!!