இஜ்மாஃ, கியாஸ்
விடியோவைப் பார்வையிட இங்கே click செய்யவும்!
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் குர்ஆனும் ஹதீசும்தான் என்பதை சென்ற வகுப்பில் படித்தோம். அடுத்து இஜ்மா கியாஸ் என்றால் என்னவென்று நோக்குவோம்.
பொதுவாக இஸ்லாமிய வரலாற்றை முன்னோக்கிப் பார்த்தால்; குர்ஆன், ஹதீஸ் அடிப்படை என்று ஏற்பதில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள். ஆனால் இஜ்மா கியாஸ் விடையத்தில் சிலர் அதனை மறுத்துள்ளனர், சிலர் அதனை அடிப்படை மூலாதாரம் என்றும், சிலர் துணை மூலாதாரம் என்றும் சிலர் அது குர்ஆன் ஹதீஸைப் பலப்படுத்தக்கூடியது என்றும் கூறுகின்றனர்.
அவ்விரண்டையும் தெளிவாக நோக்குவோம்.
இஜ்மாஃ, கியாஸ் என்ற வார்த்தைப் பிரயோகம் இமாம் மாலிக் அவர்களது காலம் தொட்டு (முதலாம் நுற்றாண்டு) குர்ஆன் சுன்னாவை பாதுகாத்த இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் பாவிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை மறுப்பதைவிட, சரியான புரிதலே அவசியமாகும்.
இஜ்மாஃ :-
அந்த சொல்லுக்கான அர்த்தம் ஒன்றுபடுதல், எகோபித்திருத்தல் என்று கூறலாம்.
பிக்ஹு சட்டக் கலையில் அதனை பின்வருமாறு வரைவிலக்கனப்படுத்துவர்.
اتفاق مجتهدي هذه الأمة على أمر ديني يعد وفاة الرسول في عصر من العصور
நபிகளாருடைய மரணத்தின் பின்னர், எதோ ஒரு காலத்தில் இஸ்லாமிய உம்மத்தில் இருக்கும் ஆய்வாளர்கள், ஒரு மார்க்க விடயத்தில் ஒன்று படுத்தல்.
வரைவிலக்கணத்தின் உள்ளடக்கம்;
1- ஆய்வாளர்கள் (சாதாரன மக்கள் ஒன்று படுவதல்ல)
2- மார்க்க விடயம் (உலக விடயங்கள் அல்ல)
3- நபிகளாரின் மரணத்தின் பின் (நபிகளார் உயிரோடிருக்கும் பொது அது நிகழ முடியாது)
4- ஒன்றுபட்ட கருத்து. (கருத்து முரண்பாடு இருக்கக் கூடாது)
உதாரணம்:- ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழுதல்.
அறிஞர்கள் தொழுகைக்கு ஆதாரம் காட்டும் போது, குர்ஆன், ஹதீஸ், இஜ்மா என்பார்கள்.
இப்போது தொழுகை என்பது நபிகளார் காலத்தில் இருந்த ஒன்று, அதில் எப்படி இஜ்மா சாத்தியமானது. வரைவிலக்கணத்தின் ( நபிகளாரின் மரணத்தின் பின் ) என்ற பகுதிக்கு முரண் படுகிறது.
ரமலான் மாதத்தில் நோன்பு கடமை என்பதற்கு ஆதாரம் கூறும் அறிஞர்கள்; குர்ஆன், ஹதீஸ் இஜ்மா என்பார்கள். நபிகளார் காலத்தில் இருந்த நோன்பிற்கு எப்படி இஜ்மா ஆதாரமானது?
* இந்த இடத்தை நன்றாக சிந்தித்தால் இஜ்மா என்றால் என்ன என்பதை அழகாக புரியலாம்.
இஜ்மாவை புரியும் விதம்; குர்ஆனிலும், ஹதீஸிலும், வந்த தொழுகை கடமை என்ற மார்க்க விடயத்தில் நபிகளாரின் மரணத்தின் பின்னர் ஆய்வாளர்கள் ஒன்று பட்டுள்ளனர்.
குர்ஆனிலும், ஹதீஸிலும், வந்த நோன்பு கடமை என்ற மார்க்க விடயத்தில் நபிகளாரின் மரணத்தின் பின்னர் ஆய்வாளர்கள் ஒன்று பட்டுள்ளனர்.
தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் விரல் அசைக்க வேண்டுமா? வாஇல் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் நபிகளார் விரல் அசைத்ததைக் கண்டதாககூறும் ஹதீஸ் இப்னு குசைமாவில் பதிவாகியுள்ளது.
இது நபிகளார் செய்ததாக வந்திருந்தாலும் , நபிகளாரின் மரணத்தின் பின் ஆய்வாளர்கள் கருத்துவேறுபாடு கொண்டார்கள். எனவே விரல் அசைப்பதைக் கூறும் எந்த அறிஞராக இருந்தாலும் அதில் இஜ்மாவை பேசமாட்டார்கள். ஏனெனில் அதற்கு சஹீஹான ஹதீஸ் இருந்தாலும், நபிகளாரின் மரணத்தின் பின் இஸ்லாமிய அறிஞர்கள் கருத்துவேற்றுமை பட்டார்கள் என்பதே அர்த்தம்.
தொழுகைக்காக வுழு செய்வதற்கு ஆதாரம் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, ஆனால் வுளுவில் தலையை முழுக்க மஸ்ஹு செய்வதற்கு ஆதாரம் குர்ஆன் , ஹதீஸ், ஆனால் இஜ்மா இல்லை என்போம். இரண்டு மார்க்க விடயங்களும் குர்ஆன், ஹாதீசில் வந்துள்ளன, ஒன்றில் கருத்துவேறுபாடு வரவில்லை இஜ்மா என்றோம், ஒன்றில் கருத்துவேற்றுமை உள்ளது இஜ்மா இல்லை என்றோம்.
;- எனவே குர்ஆனிலும், ஹதீஸிலும் வந்த ஒன்றில் கருத்து வேற்றுமை இல்லையென்றால் இஜ்மா என்போம், கருத்து வேற்றுமை இருக்கும் விடையங்களுக்கு இஜ்மா இல்லை என்போம்.
எனவே குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்து, இஸ்லாமிய உம்மத் கருத்து வேற்றுமை கொள்ளாத ஒரு விடயத்தை ஒருவர் மறுத்தால் அவருக்கு தீர்ப்பு காபிர் என்பதாகும். இதுவே இஜ்மாவை மறுத்தவன் காபிர் என்பதன் அர்த்தமும் கூட. அதேநேரம் விரலசைப்பதை மறுப்பவனை, தலை முழுவதையும் மஸ்ஹு செய்வதை மறுப்பவனை காபிர் என்பதில்லை.
இதுவே இஜ்மா என்பது குர்ஆன், ஹதீசை பலப்படுத்தும் ஆதாரம் என்பதன் அர்த்தம்.
அடுத்து இஜ்மாவுக்கு காட்டப்படும் ஆதாரங்கள்.
அதற்கு காட்டப்படும் ஆதரங்களை எடுத்து நோக்கினாலும் இஜ்மாவை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;……(3:103)
وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَىٰ وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ ۖ وَسَاءَتْ مَصِيرًا
எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.(4:115)
இந்த இரண்டு வசனங்களையும் நோக்கினால்; முதல் வசனம் குர்ஆனில் ஒன்று படுவதையும், இரண்டாவது வசனம், நபிகளாரோடு ஒன்றுபட்ட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்துபோக வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
عَنِ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ يَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ»صحيح البخاري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் (உண்மைக்கு) ஆதரவாளர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். இறுதியாக, அவர்கள் மேலோங்கியவர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களிடம் இறைக் கட்டளை(யான மறுமைநாள்) வரும். (புகாரி:7311, முஸ்லிம்)
இந்த ஹதீஸை நோக்கினாலும் சத்திய சமூகம் எதில் ஒன்றுபட்டிருக்கும் என்பது தெளிவாக விளங்குகிறது.
கியாஸ்:
கியாஸ் என்ற சொல்லுக்கான அர்த்தம்;ஒப்பிடுதல், நேர்பிடித்த்ல்,
பிக்ஹு சட்டக்கலையில் கியாஸ் என்பதனை பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தலாம்;
إلحاق أمر غير منصوص على حكمه الشرعي بأمر منصوص على حكمه لاشتراكهما في علة الحكم
நேரடியாக குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் வராத ஒரு விடயத்தை, அதில் இருக்கும் காரண காரியங்களோடு ஒத்துப் போகும், ஆதரத்திட்குற்பட்ட ஒரு விடயத்தோடு நேர்பிடித்து, இதற்குள்ள சட்டத்தை அதற்கு கொடுத்தல்.
விளக்கம்; சமகாலத்தில் புதியதோர் பிரச்சினை ஏற்படுகிறது, அதற்கு குர்ஆன் ஹதீஸில் நேரடி ஆதாரம் இல்லை, ஆனால் அதுபோன்ற ஒரு பிரச்சினை வேறு வடிவத்தில் நபிகளார் காலத்தில் இருந்துள்ளது. இப்பொது காரண காரியங்களில் இரண்டு பிரச்சினையும் நேர்படுவதனால் (கியாஸ்) நபிகளார் காலத்தில் இருந்ததன் மார்க்க சட்டத்தை சமகால பிரச்சினைக்கு வழங்குவது.
உதாரணமாக;அரிசிக்கு சகாத் – இன்று நாம் பாவிக்கும் அரிசி வகை தானியம் நபிகளார் பாவித்ததில்லை. ஆனால் நபிகளார் காலத்தில் கோதுமை என்ற தானியம் பாவனையில் இருந்தது. அதற்கு நபிகளார் சகாத் கொடுத்தார்கள் என்பதற்கு அதிக சான்றுகள் இருக்கின்றன. கோதுமை என்பது எப்படிசேமிக்க முடியுமான தானியமாக இருக்கிறதோ, அதேபோன்று அரிசியும் சேமிக்க முடிந்த தானியம் என்ற அடிப்படையில் கோதுமைக்குள்ள சகாத் கடமையை அரிசிக்கும் கொடுப்பது போன்று.
இன்னொரு உதாரணம்; பணத்திற்கு சகாத்- இன்று நாம் பாவிக்கும்நோட்டு, காசு நபிகளார் காலத்தில் இருக்கவில்லை. மாறாக தங்க, வெள்ளி நாணயங்களே பாவிக்கப்பட்டன். அதற்கு நபிகளார் சகாத்தும் கொடுத்தார்கள். எனவே அன்றைக்கு தங்க வெள்ளி நாணயம் என்ன நோக்கத்தில் பாவிக்கப்பட்டதோ, அந்த (பெறுமதி) என்ற காரணி இன்றைக்குள்ள நோட்டுக்கு இருக்கிறது என்றால், தங்க வெள்ளியின் இடத்தில் வைத்து இன்றைய நாணயத்திற்கும் சகாத் கடமையாவது போன்று.
ஆதாரம் என்பது நபிகளார் கொடுத்தார்கள் என்பது தான். இன்றைக்குள்ள விடையத்தை நேர்பிடித்து நோக்கினோம் பாருங்கள், அதுதான் கியாஸ் என்பது. சுருக்கம் ஒட்டுமொத்தமாக கியாசை மறுத்தால் பல இஸ்லாமிய சட்டங்களை மறுக்கவேண்டி ஏற்படும். அதனால் கியாஸ் இருக்கிறது, அதனை புரியவேண்டிய விதத்தில் புரிந்தால் பிரச்சினையை சுலபமாக முடிக்கலாம்.
கியாஸ் பிடிப்பதற்கான ஆதாரம்; இதையும் ஆழமாக சிந்தித்தால் கியாஸ் என்பது என்னவென்பது தெளிவாகும்.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، أَفَأَقْضِيهِ عَنْهَا؟ قَالَ: ” نَعَمْ، قَالَ: فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى “صحيح البخاري 1953
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது” என்றார்கள்.
முஸ்லிமின் அறிவிப்பில்; உன் தாயாருக்கு கடன் இருந்தால் நிறைவேற்றுவீரா? என்று கேட்கவே, ஆம், என்றார். அப்போது நபியவர்கள்;அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது. என்றார்கள். என்று வந்துள்ளது.
இங்கே நபியவர்கள் மனிதனது கடனை நிறைவேற்றுவது கடமை என்பதை உணர்த்தி, அல்லாஹ்வின் மீதுள்ள கடனை நிறைவேற்ற சொல்கிறார்கள். இதுவே கியாசுக்கு காட்டப்படும் பலமான ஆதாரமாகும்.
இவற்றை நன்றாக சிந்தித்து பார்க்கும் போது கியாசை தெளிவாக விளங்கலாம், ஒரு சட்டத்திகு எந்தவகையிலும் ஒத்துப் போகாத ஒன்றை எவ்வகையிலும் கியாஸ் என்று கூறி சமாளிக்க முடியாது. எனவே யாராவது ஒரு விடையத்திற்கு கியாஸ்தான் ஆதாரம் என்றால் அவரிடம் அதற்கு நேர்படும் நபிகளார் காலத்து ஆதாரத்தைக் கேட்பது கடமை. அதனால் தான் கியாஸ் வருவதாக இருந்தால் அதற்கு குறிப்பாக நான்கு நிபந்தனைகளை பார்க்க முடியும்.
1- நபிகளார் காலத்து நிகழ்வு.
2- அதற்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரம்.
3-நபிகளார் காலத்து நிகழ்வு போன்ற நவீன புதிய விடயம்.
4- நபிகளார் காலத்து விடயத்திற்கும், புதிய விடயத்தித்க்ய்ம் பொதுக்காரணி இருக்கவேண்டும்.
இவற்றில் ஒன்றை இழந்தாலும் அந்த கியாஸ் தவறானதாகும்.
எனவே இந்த தெளிவை சரியாக பெற்றுக் கொண்டு, இஸ்லாத்தை தூய்மையான வடிவில் புரிந்து, தூய்மையான முறையில் பின்பற்றி நடக்க முயல்வோம்.
அல்லாஹு அஃலம்!
இது மிகவும் பயனுள்ள தகவல்
so dont miss peaples
கியாஸ் பற்றிய நவீன இஸ்லாமிய நோக்கு
மேற்படி தலைப்புக்கு ஏதாவது சொல்லித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்